சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 10, 2020

இல்லுமினாட்டி 80



ர்னெஸ்டோ திடீர் என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அக்ஷயிடம் கேட்டார். “அக்ஷய் நீ சொல்கிறாய். விஸ்வம் குறைந்த அளவு சக்தி தான் செலவு செய்கிறான் என்று. ஆனால் அவன் உன்னைப் பற்றியும், உன்னை நாங்கள் அழைத்தது பற்றியும், நீ இங்கே வருவதைப் பற்றியுமெல்லாம் அவன் தெரிந்து கொண்டதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்? அவன் எங்களில் யாரையாவது ஆக்கிரமிக்காமல் எப்படித் தெரிந்து கொண்டிருப்பான்? அதற்கெல்லாம் அவனுக்கு நிறைய சக்தி செலவாகி இருக்காதா?”

அக்ஷய் சொன்னான். “நீங்கள் காண்பித்த ரிப்போர்ட்கள் உண்மையாக இருந்தால் இதையெல்லாம் கூடத் தெரிந்து கொள்ளும் அளவு சக்தியை இத்தனை சீக்கிரம் விஸ்வத்தால் அந்த உடம்பில் கண்டிப்பாக மீட்டிருக்க முடியாது. ஏனென்றால் சக்தியால் அறிந்து கொள்ள அவன் முன்பே சந்தித்துப் பழகியிருக்கிற உங்களில் யார் மூலமாவது தான் தெரிந்து கொள்ள முடியும். உங்களில் யாரும் அவனை வரவேற்கிற மனநிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருந்தால் ஒழிய உங்களை ஆக்கிரமித்து அறிய அவன் பல மடங்கு சக்தி பிரயோகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி ஆக்கிரமித்தால் உங்களுக்கும் தெரியாமல் போகாது. அதைக் கண்டிப்பாக பலமாகவே உணர்வீர்கள். அதனால் அவன் யார் மூலமாவது என்னைப் பற்றியும் நான் வருவது பற்றியும் தெரிந்து வைத்திருக்கலாம்...”

அவன் சொன்னதைக் கேட்டு அவர்கள் மூவரும் யோசித்தார்கள். மூவரில் எர்னெஸ்டோ மட்டுமே விஸ்வத்தை நெருக்கமாகப் பார்த்திருப்பவர். அவரிடம் தான் அவன் பேசியும் இருக்கிறான். இம்மானுவல் தூரத்திலிருந்தே அவனைக் கவனித்திருப்பதோடு சரி. அவனை நெருங்கவே இல்லை. ஜான் ஸ்மித்தும் கிட்டத்தட்ட அப்படியே தான். எர்னெஸ்டோவுக்கு தன்னை ஆக்கிரமித்து விஸ்வம் எதையும் அறியவில்லை என்பதில் சந்தேகமேயில்லை.

எர்னெஸ்டோ இம்மானுவலிடம் கேட்டார். “நம் ஆட்கள் யார் மூலமாக தகவல் கசிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

இம்மானுவல் உடனடியாகச் சொன்னான். “இல்லவே இல்லை

எர்னெஸ்டோ கேட்டார். “அப்படியானால் அக்ஷய் வரும் தகவல் அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?”

அக்‌ஷய் இம்மானுவலைப் பார்த்துக் கொண்டே சொன்னான். “அவன் கூட்டாளி மூலமாக இருக்கலாம்....”

எர்னெஸ்டோ சொன்னார். “ஏலியனோ, இல்லை அசாதாரண மனிதனோ ம்யூனிக் விமான நிலையத்தில் நமக்குப் பார்க்கக் கிடைத்தும் அவனை நழுவ விட்டு விட்டோமே. அந்த விமான நிலையத்தில் அவன் உள்ளே நுழைவதிலிருந்து கேமிராக்களில் விழுந்திருக்கிறான். அதற்கு முன் அவனை எப்படி யாரும் பார்க்கவில்லை, அவன் எந்தக் கேமிராவிலும் விழவில்லை?”

இம்மானுவல் சொன்னான். “அதுவும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. கார் பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் கேமிராக்களில் எதிலுமே அவன் ஏதாவது காரில் வந்திறங்கியதோ, அங்கு இருந்து மறுபடி ஏறிப் போனதோ பதிவாகவில்லை. ஏதாவது டாக்சியில் வந்திறங்கியிருக்கிறானா என்று விமானநிலையம் வந்து போன டாக்சிக்காரர்களிடம் எல்லாம் விசாரித்து விட்டோம்.   யாரும் அவனை அழைத்து வரவோ, அங்கிருந்து அழைத்துப் போகவோ இல்லை.”

அக்ஷய் சொன்னான். “இதற்கெல்லாம் பதில் அவன் என்னைப் போட்டோ பிடிப்பதற்கு முன்னால் ஏன் அந்தக் கேமிராவைச் செயலிழக்கச் செய்தான் என்பதில் இருக்கும் என்று தோன்றுகிறது. அவன் விமான நிலையத்தில் நிமிர்ந்து பார்த்த ஒரே சமயம் அது தான். மற்ற எல்லா கேமிராக்களிலும் அவன் தலை குனிந்தே இருந்திருக்கிறான். நாம் எதையோ தெரிந்து கொள்வதை அவன் விரும்பவில்லை. அது அந்தக் கேமிராவில் பதிந்து விடும், அதன் மூலம் தெரிந்து கொள்வோம் என்று தான் முன்னெச்சரிக்கையாக அவன் அந்தக் கேமிராவை நிறுத்தியிருக்க வேண்டும். அது என்ன என்று தெரிந்து கொண்டால் அதன் மூலம் அவனைப் பற்றிய முக்கியத் தகவல் தெரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்

அவர்களுக்கும் அவன் சொல்வது சரி என்று தோன்றியது. உடனே அவர்கள் பரபரப்பாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.


சாலமன் முன் ஒரு தடித்த ஃபைல் இருந்தது. அதில் அவர் படித்துப் பார்த்து முக்கியம், முக்கியமில்லாதவை, மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியவை, வேறெதிலாவது சம்பந்தம் இருக்கக்கூடும் என்று அதோடு இணைத்து வைக்க வேண்டியவை என்றெல்லாம் தீர்மானித்து பிரித்து வைக்க வேண்டும். அதில் 90 சதவீதம் முக்கியமில்லாதவையாகவே இருக்கும் என்றாலும் அதைத் தீர்மானிக்கும் முன் அவர் அத்தனையும் படிக்க வேண்டும். அது அவருக்குச் சலிப்பை ஊட்டியது.

முறையாக அவருக்குப் பதவி உயர்வு கிடைத்திருந்தால் இப்போது அவர் இல்லுமினாட்டி உளவுத்துறையின் தலைவராக ஆகியிருப்பார். அவருடைய அதிகாரமும் ஆதிக்கமும் உச்சத்தில் இருந்திருக்கும். பல வருடங்களாக உபதலைவராக இருக்கும் அவரை அப்படியே தொடர்ந்து இருக்க வைத்து விட்டு எர்னெஸ்டோ பின்னால் இருந்த இம்மானுவலைத் தலைவனாக்கி விட்டார். அதை இப்போது நினைத்தாலும் அவருக்கு ஆத்திரமாக வந்தது.

இப்போது நடக்கும் நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, ஏதாவது நல்ல வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது சிறிதளவாவது நம்பிக்கை ஊட்டி வருகிறது. அவருக்கு வாங் வே மீது நம்பிக்கை இருக்கிறது. தலைமைக்குழு உறுப்பினரான வாங் வே இல்லுமினாட்டியின் தலைமைப் பதவிக்குப் பல காலமாகக் குறி வைத்திருக்கிறார். இப்போதிருக்கும் மற்றவர்களை விட அவருக்குத் தலைவராகும் வாய்ப்பும் அதிகம். அப்படி அவர் தலைவரானால் கண்டிப்பாக சாலமன் நிலைமையும் உயரும். ஒரு வேளை விஸ்வம் ஜெயித்து அவன் கை இல்லுமினாட்டியில் ஓங்கினாலும் அவன் இம்மானுவலைச் சகிக்க மாட்டான். இப்போது அவனுக்கு எதிராக இயங்கும் மனிதர்களில் எர்னெஸ்டோவுக்கு அடுத்தபடியாக இருப்பவன் இம்மானுவல் தான். அதனால் அப்படி விஸ்வம் இம்மானுவலை அப்புறப்படுத்தினாலும் அவருக்கு மறுபடி உயர வாய்ப்பு இருக்கிறது....

அதை எல்லாம் எண்ணி சலிப்பை ஒதுக்கித் தள்ளிய சாலமன் அந்த ஃபைலில் இருக்கும் தகவல்களைப் படிக்க ஆரம்பித்தார். அத்தனையும் இல்லுமினாட்டி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள். இவை தினந்தோறும் சேகரிக்கப்பட்டு அலசப்பட்டு உளவுத்துறையின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முக்கியமாக இருந்தால் மேலிடத்திற்கும் தெரிவிக்கப்படும்...

சில உறுப்பினர்களின் சில அந்தரங்க அத்துமீறல்கள், அவர்கள் சந்தித்த அல்லது அவர்களைச் சந்தித்த சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்த தகவல்கள் இதெல்லாம் பல நாடுகளிலிருந்தும் உளவுத்துறை நபர்கள் அனுப்பி இருந்தார்கள். அவற்றில் பெரும்பாலனவைகளைச் சிவப்புப் பேனாவால் குறுக்கில் கோடிட்டார். அவை முக்கியமல்ல என்று அர்த்தம். மற்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களின் ஃபைல்களில் தகவலை ஃபைல் செய்யும்படி எழுதினார். சிலவற்றைத் தலைமைக்குழுவின் பார்வைக்கு அனுப்பக் குறித்தார். நேரடியாக இல்லுமினாட்டியின் தலைமைக்கு அனுப்பும் அளவுக்கு முக்கிய விஷயம் எதுவுமிருக்கவில்லை. இருந்திருந்தால் அதை எர்னெஸ்டோ பார்வைக்கு அனுப்பக் குறித்திருப்பார். ஆனால் அதன் ஒரு நகலை ரகசியமாக வாங் வேக்கும் அனுப்பி இருப்பார் என்பது வேறு விஷயம்.

கடைசியாக அவர் படித்த தகவல் அவருக்கு எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்று குழப்பியது. வாஷிங்டனில் இல்லுமினாட்டியின் முதிய உறுப்பினர் கர்னீலியஸின் கார் ஒரு சிக்னலில் தானாக நின்று விட்டது. எதனால் என்று தெரியவில்லை. உடனடியாக அதைச் சரிசெய்ய போலீஸ் உட்பட சிலர் முயற்சி செய்தனர் என்றும் ஆனால் காரைக் கிளப்ப முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  பின் கர்னீலியஸ் வேறு வாகனத்தில் வீடு திரும்பினார் என்றும் அவர் அப்படிப் போன பிறகு அவர் காரை உடனடியாக எடுக்க முடிந்தது என்பதையும் படித்த போது சாலமனின் புருவங்கள் உயர்ந்தன. இப்படி அமானுஷ்யமாகவும், அசாதாரணமாகவும் நடக்கும் போதெல்லாம் அவரால் விஸ்வத்தை நினைவுபடுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவனை இணைக்க முடிந்த சம்பவங்களில் அலட்சியமாகவும் சாலமானால் இருக்க முடியவில்லை.

சாலமன் சிறிது நேர யோசனைக்குப் பின் அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லும் போது கர்னீலியஸைச் சந்தித்துப் பேசிவிட்டு வரலாம் என்று முடிவு செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. Tension is building up. Will Solomon reach Viswam through Cornelius?

    ReplyDelete
  2. அக்ஷய் இல்லுமினாட்டியுடன் இருப்பது இலுமினாட்டியை புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வைக்கிறான்...

    ReplyDelete
  3. Super sir akjay pesura vishayam vidham mikavum arumai rembo uyairva thaniya katturenga. Mikauvm arpudhma sedukkapattavai.

    ReplyDelete