சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 14, 2020

யாரோ ஒருவன்? 10

ஞ்சய் ஷர்மா வழக்கம் போல மாலை ஆறரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான். புதுடெல்லி நகர வீதிகளில் காரில் பயணிப்பதே களைப்பை ஏற்படுத்தும் அனுபவம் தான். இரண்டு வருடங்களாக இதே காரில் பயணம் போய் அவனுக்குச் சலித்து விட்டது. ஆனால் உடனடியாகக் காரை மாற்ற வழி இல்லை. அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன. அவனுடைய மாமனின் கட்சி நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறதே ஒழிய அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்கும் வலிமையில் இல்லை. மாமனுக்கு வயது எண்பதாகிறது. எப்போது போய்ச் சேர்வாரோ தெரியவில்லை. அவருடைய கட்சியின் வேட்பாளராக நேரடியாக சஞ்சய் தேர்தலில் நின்றாலும் ஜெயிக்கும் வாய்ப்பு இல்லாததால் தான்  அவன் ராஜ்யசபா எம்.பி ஆக்கி விடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான். நாளை அவரை நேரில் சந்தித்து நரேந்திரன் வந்து விசாரித்ததையும் தெரிவித்து இந்த எம்.பி விஷயத்தையும் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். பார்க்கலாம் என்றால் உடனே பாருங்கள் என்று சொல்ல வேண்டும். அவர் சம்மதிக்கும் வரை காலைப் பிடித்துக் கொண்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டபடியே நெரிசல் பகுதிகளைத் தாண்டி அவன் வீடிருக்கும் புறநகர்ப்பகுதிக்குள் சஞ்சய் நுழைந்தான். அந்தப் பகுதி மிகவும் அமைதியான பகுதி. ஆள்நடமாட்டம் அதிகம் இருக்காது.


அவன் கார் ஒரு வீதியில் நுழைந்த போது எதிரே ஒரு பெரிய டேங்கர் லாரி தெருவை மறைத்துக் கொண்டு நின்றது. சஞ்சய் எரிச்சலுடன் ஹாரனை விடாமல் அழுத்தினான். டேங்கர் லாரியிலிருந்து டிரைவர் எட்டிப் பார்த்துபொறுஎன்பது போல கையைக் காட்டினான். சஞ்சய் ஒரு நிமிடம் பொறுத்தான். டேங்கர் லாரி நகர்வதாய் இல்லை. என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றும் தெரியவில்லை. சஞ்சயின் பின்னால் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் கார் டிரைவரும் ஹாரனை அழுத்தினான். இப்போது டேங்கர் லாரியிலிருந்து எந்த அசைவும் இல்லை. பின்னால் வந்து நின்ற கார் டிரைவர் கோபத்தோடு காரிலிருந்து இறங்கி முன்னால் வர அவனுடன் அவன் ஆட்கள் வேறிரண்டு பேரும் இறங்கி வந்தார்கள். சஞ்சயும் இறங்கினான். கூட்டாகப் போய் திட்டினால் நன்றாய் இருக்கும்... லாரிக்காரன்களைத் தனியாகச் சமாளிக்க முடியாது.

சஞ்சய் காரிலிருந்து இறங்கி கார்க்கதவைச் சாத்துவதற்குள் பின் காரிலிருந்து வந்த ஆட்கள் மூவரும் அவன் மீது பாய்ந்து அவனை அவன் காரின் உள்ளேயே தள்ளினார்கள். என்ன நடக்கிறது என்று சஞ்சய் உணர்வதற்குள் மயக்கமருந்து தடவிய கைக்குட்டை அவன் மூக்கை அடைத்தது. அவன் மயக்கமடைந்தான்.


றுநாள் மாலை ஆறரை மணிக்கு சஞ்சய் ஷர்மாவின் மாமன் ஜனார்தன் த்ரிவேதி ரா தலைவரின் அறைக்குள் ஆவேசமாக உள்ளே நுழைந்தார். “எங்கே சஞ்சய்?”

ரா தலைவர் திகைப்புடன் கேட்டார். “எந்த சஞ்சய்?”

சஞ்சய் ஷர்மாஎன்று ஜனார்தன் த்ரிவேதி உறுமினார்.

யார் சஞ்சய் ஷர்மா?” ரா தலைவர் பழைய திகைப்புடனே கேட்டார்.

என் மருமகன். நான் யார் என்றும் சொல்ல வேண்டுமா?” ஜனார்தன் த்ரிவேதி காட்டமாகக் கேட்டார்.

உங்கள் மருமகன் இங்கே வருவதாகச் சொல்லி விட்டு வந்தாரா? இப்போது அவரைக் காணவில்லையா? எதற்கு இங்கே வந்து அவரைக் கேட்கிறீர்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே

நேற்று உங்கள் அதிகாரி ஒருவர் வந்து சஞ்சய் ஷர்மாவிடம் பேசி இருக்கிறார். அதன் பின் சஞ்சய் ஷர்மா வீடு போய்ச் சேரவில்லை....” ஜனார்தன் த்ரிவேதி கொந்தளிப்புடன் தொடரப் போன போது ரா தலைவர் குறுக்கிட்டார். “எந்த அதிகாரி?”

ஜனார்தன் த்ரிவேதி நரேந்திரன் சஞ்சய் ஷர்மாவிடம் தந்திருந்த விசிட்டிங் கார்டைத் தூக்கி மேசையில் வீசினார். ரா தலைவர் அந்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்க்கவில்லை. ஜனார்தன் த்ரிவேதியையே பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.  ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நாய் இப்படி சாவகாசமாக அமர்ந்து என்னைப் பார்க்க விட்டிருப்பேனாஎன்று கறுவிக்கொண்டே அந்த விசிட்டிங் கார்டை எடுத்து அவரே தலைவரிடம் நீட்டினார்.

ரா தலைவர் அதை வாங்கிப் பார்த்து விட்டு அமைதியாக இண்டர்காமில் நரேந்திரனை அழைத்தார். “நரேந்திரன் என் அறைக்கு வர முடியுமா?’

அடுத்த நிமிடம் நரேந்திரன் அங்கிருந்தான். “என்ன சார்?”

ரா தலைவர் ஜனார்தன் த்ரிவேதியைக் காட்டிச் சொன்னார். “இவர் மருமகன் சஞ்சய் ஷர்மாவை நேற்று நீங்கள் விசாரிக்கப் போனீர்களாம். அதன் பிறகு அவர் காணவில்லை என்று சொல்லி இங்கே வந்திருக்கிறார்

நரேந்திரன் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினான். ”அவரிடம் சில விஷயங்களைக் கேட்க வேண்டியிருந்தது. கேட்டதற்கு அவரும் பதில் சொன்னார். எல்லாம் முடிந்து  நான் காலை பதினோரு மணிக்கு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அவர் என்னோடு வரவில்லையே...”

ரா தலைவர் ஜனார்தன் த்ரிவேதியைப் பார்த்தார். இனி இந்த ஆளிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த ஜனார்தன் த்ரிவேதி நரேந்திரன் பக்கம் திரும்பினார். “அவன் நேற்று வீடு திரும்பவில்லை. நீங்கள் விசாரிக்க அவனை அழைத்துப் போயிருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன்

ரா தலைவர் நரேந்திரனிடம் சொன்னார். “உட்கார்ந்து பேசுங்கள் நரேந்திரன்

நன்றி சார்என்று அவரிடம் சொல்லியபடி ஜனார்தன் த்ரிவேதியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்த நரேந்திரன் முகத்தில் ஆச்சரியம் காட்டி ஜனார்தன் த்ரிவேதியிடம் சொன்னான். “அவரிடம் விசாரித்த போது அவருக்கு எதுவுமே பெரிதாய் ஞாபகம் இருக்கவில்லை என்றார். இருபத்தியிரண்டு வருடம் முடிந்த பிறகு கேட்டால் அவர் தான் எத்தனையை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டு நான் அவர் ஞாபகம் இருந்து சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன். நான் அங்கிருந்து கிளம்பினதிலிருந்து அவரையும் காணவில்லையா?”

ஜனார்தன் த்ரிவேதி நரேந்திரனைச் சந்தேகப்பார்வை பார்த்தபடியே  சொன்னார். “சாயங்காலம் ஆறரை மணி வரை ஆபிசில் தான் இருந்திருக்கிறான். அதன் பிறகு வீட்டுக்குக் கிளம்பியவன் வீடு போய்ச் சேரவில்லை...”

நரேந்திரன் ஏளனமாகக் கேட்டான். “அதாவது என்னுடனே வெளியே வராமல் நான் போய் ஏழரை மணி நேரம் கழிந்து அவருடைய வீட்டுக்குக் கிளம்பிய அவர் ஏன் வீடு போய்ச் சேரவில்லை என்று என்னிடம் கேட்கிறீர்கள். அப்படித் தானே?”

ஆட்சியிலிருந்தால் இந்த ஏளன தொனிக்கே உன்னை பிரச்னையான இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்திருப்பேன் தம்பி, உன் அதிர்ஷ்டம் நாங்கள் ஆட்சியில் இல்லாததுஎன்று மனதில் கறுவிக் கொண்ட ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “அது தான் சொன்னேனே. எதையோ விசாரிக்க வந்தீர்களே அதற்காக மறுபடி அவனைக் கஸ்டடியில் எடுத்திருக்கிறீர்கள் என்று சந்தேகப்படுகிறேன்.”

நரேந்திரன் பொறுமையாகச் சொன்னான். “இது சட்டபூர்வமான அமைப்பு. எங்களுக்குக் கூடுதலாக விசாரிக்க ஏதாவது இருந்தால் சட்டபூர்வமாக வெளிப்படையாகவே அழைத்துச் சென்று விசாரித்திருப்போம். அதனால் அவரை யாராவது கடத்தியிருக்கலாம் அல்லது அவரே எங்கேயாவது சொல்லிக் கொள்ளாமல் போயிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர் கடைசியாக யாரிடம் எல்லாம் போனில் பேசியிருக்கிறார் என்று பார்த்தீர்களா? அவர் காரில் போயிருந்தால் காரைக் கண்டுபிடித்தீர்களா? எதற்கும் போலீஸில் புகார் கொடுத்து வைப்பது நல்லது...”

அதை நான் பார்த்துக் கொள்கிறேன். சஞ்சய் ஷர்மா உங்கள் கஸ்டடியில் இல்லை என்று நீங்கள் சொல்வது நிஜம் தானே?” ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் கேட்டார்.

நிஜம் தான்

அவர் எழுந்து ஒன்றும் சொல்லாமல் வெளியேறினார். அவரது மருமகனின் காரை போலீஸார் இன்று மதியம் ஒரு மேல்மட்ட விபசாரி வீட்டு வாசலில் கண்டுபிடித்திருந்தார்கள். அவர் மருமகன் நேற்று பேசிய அலைபேசி அழைப்புகளில் ஒரு பிரச்னைக்குரிய போன் எண்ணும் இருக்கிறது.  அதனால் அவர் எங்கேயும் புகார் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தார். அவருக்கு இப்போதும் ரா மீது தான் சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக நரேந்திரன் மீது…. இவனும் இவன் அப்பனைப் போலவே ராங்கி பிடித்தவனாய் தான் தெரிகிறான்

(தொடரும்)
என்.கணேசன்

விரைவில் வெளியீடு!




 


6 comments:

  1. கதை முழுவதும் படிக்க ஆர்வமாக உள்ளேன் நன்றி

    ReplyDelete
  2. செம த்ரில்லிங். சார் நாவலை முழுவதும் படிக்க நானும் வெய்ட்டிங். சீக்கிரம் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  3. Great going. Super suspense.

    ReplyDelete
  4. Nichyam yaridam sanjay pesinsno avan than kadathi irupan

    ReplyDelete
  5. ஷர்மா கடத்தப்பட்ட விதமும் திட்டமும் சூப்பர்...யார் கடத்தினார்கள்? என்று தான் புரியவில்லை....

    ReplyDelete
  6. அட்டை படத்தில்.... அதிகாரி,தீவிரவாதி,ஆயுதம்,பாம்பு,வைரம்உள்ளன...இதில் ஐயாவின் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விசயங்கள் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்...

    ReplyDelete