சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, September 9, 2020

அற்புதங்களில் மாயையும், நிஜமும்!



ரு நாள் கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் மாயையின் தன்மையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். வேதாந்தத்தின் ஆழங்களைப் பற்றி அவர்கள் பேசும் போது பல முறை மாயையைப் பற்றியும் பேசி இருக்கிறார்கள் என்ற போதும் மாயையின் சுவாரசியத் தன்மை குறித்த பேச்சாய் அன்றைய தினத்தின் பேச்சு அமைந்தது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அப்போது தன்னையே ஒரு மந்திரவாதி மாயை மூலம் ஏமாற்றி இருப்பதாகச் சொன்னார். உடனே கர்னல் ஓல்காட்டுக்குச் சுவாரசியம் தாங்க முடியவில்லை. அது குறித்து விவரமாகச் சொல்லும்படி அவர் அம்மையாரைக் கேட்டுக் கொண்டார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தச் சம்பவத்தைச் சொன்னார். அவர் ஒரு பாலைவனப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு வெள்ளை மந்திரவாதியின் கூடாரத்தில் தங்கினார். அந்த மந்திரவாதியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அந்த நேரத்தில் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் பிரான்சில் ஒரு புகழ்பெற்ற ஓட்டலில் கிடைக்கும் காபியைப் பற்றிச் சொல்லி அந்தக் காபி இந்த நேரத்தில் குடிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

அந்த மந்திரவாதிஅதற்கென்ன இப்போதே நீங்கள் அந்தக் காபியைக் குடிக்கலாம்என்று சொல்லி ஒட்டகத்தின் மீது கட்டியிருந்த குவளையை எடுத்து ஒரு கோப்பையில் காபியை ஊற்றினார். பின் சுடச் சுட அந்தக் காபியைக் கொண்டுவந்து அம்மையாரிடம் குடிக்கக் கொடுத்தார். அது அம்மையார் அந்த பிரான்சு ஓட்டலில் குடித்த அதே தனித்துவ மணத்தில் இருக்கவே அவர்இந்த மந்திரவாதி தன் அபூர்வசக்தியால் அந்தக் காபியையே தருவித்திருக்கிறார்என்று எண்ணியபடி ருசித்துக் குடித்தார்.

அருமையான சுவை. இப்படி ஒரு காபியை நான் இதுவரை குடித்ததில்லைஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிலாகித்துச் சொல்லவே அந்த மந்திரவாதி தலைதாழ்த்தி வணங்கி அவர் கோப்பையைத் தரக் காத்திருந்தார்.

கடைசி மடக்கு காபி குடிக்கப் போகும் போது தான் அம்மையார் அந்தக் கோப்பையில் வெறும் தண்ணீர் மட்டும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதுவரை அவர் காபி குடித்ததாக உணர்ந்ததும் அந்தத் தண்ணீரையே என்று அவர் தாமதமாகத் தான் தெரிந்து கொண்டதை நினைவுபடுத்திக் கொண்டு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிரித்த போது மாயையால் செய்ய முடிந்த வித்தைகள் குறித்து கர்னல் ஓல்காட்டுக்குப் பிரமிப்பு தான் மேலோங்கியது.

இந்த வகை மாயை ஹிப்னாடிசம், மெஸ்மெரிஸம் வகையைச் சேர்ந்தது. இல்லாத ஒன்றை இருப்பதாக மனிதனை நம்ப வைப்பது மட்டுமல்லாமல் உணரவும் வைக்க முடிந்த வித்தை இது. இந்த வித்தையை ஒரு முறை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் செய்து காட்டியிருக்கிறார். ஒரு முறை கர்னல் ஓல்காட் ஒரு ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தாளைக் கொண்டு வந்து அம்மையாரிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். (இப்போது  அமெரிக்காவில் அதிகபட்சமாக நூறு டாலர் நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்கின்றன என்றாலும் சம்பவம் நடந்த 19ஆம் நூற்றாண்டு இறுதிப்பகுதியில் ஐநூறு,  ஆயிரம் டாலர் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.)

அப்போது அவர்களைச் சந்தித்துப் பேச வந்திருந்த சல்லிவன் என்ற கனவானிடம் அந்த ஆயிரம் டாலர் நோட்டைத் தந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதைக் கையில் வைத்து மடிக்கச் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். பின் அம்மையார் அந்த நோட்டைப் பிரிக்கச் சொன்னார். பிரித்த போது அதே போல் இன்னொரு ஆயிரம் டாலர் நோட்டு உடன் இருந்தது. ஆச்சரியப்பட்ட சல்லிவன்இது பணக்காரராகச் சுலபமான வழி போல் தெரிகிறதேஎன்று வியக்க அம்மையார் சிரித்துக் கொண்டே சொன்னார். “இது மாயையால் ஏற்படுத்திய தோற்றம் மட்டுமே. இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தையோ அடுத்தவர்களையோ ஏமாற்றுவது குற்றம்

சல்லிவன் தன் கண்களை நம்ப முடியாமல் இரண்டு நோட்டுகளையும் ஆராய்ந்தார். நோட்டில் அச்சிட்டிருந்த எண் உட்பட எல்லாம் ஒரே போல் இருந்தன. கண்முன்னால் இரண்டாகத் தெளிவாகத் தோன்றுகிற ஒன்றை மாயையாக நம்புவது எப்படி என்று புரியாமல் அவர் திகைத்தார். அவரிடம் வாங்கி அந்த இரண்டு நோட்டுகளையும் மேசை டிராயரில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போட்டு விட்டார். சல்லிவன் சென்ற பிறகு மேசை டிராயரைத் திறந்து கர்னல் ஓல்காட் பார்த்த போது ஒரே ஒரு நோட்டு மட்டும் தான் இருந்தது. அந்த இரண்டாவது நோட்டு மாயமாக மறைந்திருந்தது.  

ஆனால் இது போன்ற மாயை வழியில் அல்லாமல் நிஜமாகவே பணத்தை வரவழைக்கிற சக்தி ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும், மகாத்மாக்களுக்கும் இருந்ததையும் சில முறை கர்னல் ஓல்காட் கண்டிருக்கிறார். அது மிக அவசியமான சமயங்களில் தேவையான அளவு மட்டும் அவர்கள் உபயோகித்த சக்தியாக இருந்தது. இந்தியாவிற்குக் கிளம்புவதற்குச் சில காலம் முன்பு நியூயார்க் நகரத்தில் இருவரும் இருந்த போது சில பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தார்கள். அம்மையாரிடம் பணம் சிறிதும் இருக்கவில்லை. பொருட்கள் வாங்க ஐம்பது டாலர்கள் ஆயின. அந்தப் பணத்தை கர்னல் ஓல்காட்டே தந்தார். பொருட்கள் வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அம்மையார் ஐம்பது டாலர்களை வரவழைத்து கர்னல் ஓல்காட்டின் கையில் திணித்தார். முந்தைய சம்பவம் நினைவிருந்ததால் கர்னல் ஓல்காட் அதை பீரோவில் வைத்துப் பூட்டினாலும் மறுநாள் பீரோவைத் திறந்து பணம் இருக்கிறதா என்று பார்த்தார். பணம் மாயமாகி விட்டிருக்கவில்லை. அம்மையார் தந்த நோட்டுக்கள் அப்படியே இருந்தன.

ஒரு முறை ஒரு மகாத்மா ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மூலமாக ஒரு ஆன்மிகச் சேவை புரிய வெளியூர் ஒன்றுக்குச் சென்று வருமாறு கர்னல் ஓல்காட்டைப் பணித்தார். அந்த வேலை செய்து முடிக்க அந்த வெளியூரில் அவர் இரண்டு மாதகாலம் தங்க வேண்டி இருந்தது. கர்னல் ஓல்காட்டிடம் அந்த இரண்டு மாதகாலம் அங்கு தங்கிச் செலவு செய்யக் கையில் போதுமான பணம் இல்லை. அதை வருத்தத்துடன் அம்மையாரிடம் அவர் தெரிவித்தார். அம்மையார் அவர் நிலைமையைப் புரிந்து கொண்டுசரி போக வேண்டாம் விடுங்கள்என்று கூறிவிட்டார்.

ஆனால் மகாத்மா ஒருவர் ஒரு வேலையை ஒப்படைத்து அதைச் செய்ய முடியாமல் போவது கர்னல் ஓல்காட்டின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. மகாத்மாக்கள் தனிப்பட்ட வேலையை அடுத்தவர்களிடம் என்றும் ஒப்படைப்பதில்லை. உலகநன்மைக்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் அவர்கள் ஒப்படைக்கும் வேலையைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று எண்ணிய கர்னல் ஓல்காட்பரவாயில்லை, அவர் சொன்னபடியே போகிறேன். எப்படியாவது பணக்கஷ்டத்தைச் சமாளித்துக் கொள்கிறேன்என்றார்

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரைக் கேட்டார். “எவ்வளவு செலவாகும் உங்களுக்கு?”

கணக்குப் போட்டு விட்டு கர்னல் ஓல்காட்மாதம் ஐநூறு டாலர் ஆகும்என்றார். அம்மையார் எதுவும் சொல்லவில்லை.

கர்னல் ஓல்காட் அந்த வெளியூருக்குச் சென்று சிக்கனமாக இரண்டு மாதங்கள் சமாளித்து அந்த மகாத்மா கொடுத்திருந்த வேலையை முடித்து விட்டு வந்தார். வங்கிக்கு சென்று அவர் கணக்கைச் சோதித்த போது அவர் கணக்கில் இரண்டு மாதங்களில் இரண்டு முறை ஐநூறு டாலர்கள் வரவாகி இருந்தது.

திகைத்துப் போன  கர்னல் ஓல்காட் வங்கி ஊழியரிடம்இந்த இரண்டு ஐநூறு டாலர்களையும் வங்கிக் கணக்கில் நான் கட்டவில்லை. தவறாக எதுவும் வரவாகி விடவில்லையேஎன்று கேட்டார்.

அந்த வங்கி ஊழியர் சொன்னார். “உங்கள் கணக்கில் போடும்படி சொல்லி இரண்டு முறையும் ஒரு ஆசியாக்காரர் தான் வந்து பணம் தந்தார். ஆங்கிலம் தெரியாதென்று சொல்லி என்னையே பணம் கட்டும் தாளில் எழுதச் சொன்னார்என்று சொல்லி அந்த நபரின் தோற்றத்தை வர்ணிக்கவும் செய்தார். அந்த வர்ணனை கர்னல் ஓல்காட்டிடம் அந்த வேலையை ஒப்படைத்த மகாத்மாவின் தோற்றத்திற்கு முழுவதுமாகப் பொருந்தியது. கர்னல் ஓல்காட் நெகிழ்ச்சியையும், வியப்பையும் ஒருங்கே உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 30.7.2019



1 comment:

  1. அனைத்து அற்புதங்களும் ஆச்சரியம் அளிக்கிறது...

    ReplyDelete