சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 3, 2020

இல்லுமினாட்டி 65


க்ரிஷ் ஏதோ ஒரு எச்சரிக்கையை உணர்ந்தான். வார்த்தைகள் இல்லாத அந்த எச்சரிக்கை உணர்வுக்கு அவனுக்கு அர்த்தம் விளங்கவில்லை. மாஸ்டர் போன பின்னும் அவன் அவர் சொல்லிக் கொடுத்த தியானப்பயிற்சிகளையும், உணர்வுப் பயிற்சிகளைச் செய்யத் தவறியதில்லை. தினமும் குளிப்பது போல், சாப்பிட்டுச் சக்தி பெறுவது போல அவனுடைய தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக அந்தப் பயிற்சிகள் ஆகியிருந்தன. இந்த விஷயத்தில் அவனுக்கு மாஸ்டருக்கு இணையாக விஸ்வமும் ஒரு ஆதர்ச புருஷனாக இருந்தான். ஒவ்வொன்றையும் அவன் கற்றுக் கொண்ட விதம், மரணத்தையும் வென்ற விதம் எல்லாம் ஒரு சாதாரண மனிதனால் முடிந்த விஷயமல்ல. போதை மனிதனின் உடல் தான் அவனுக்குக் கிடைத்தது என்ற போதிலும் அதை வைத்துக் கொண்டு அவன் சமாளிக்கும் விதம், இல்லுமினாட்டிக்கு ஒரு கடிதம் அனுப்பிய துணிச்சல் அதை எல்லாம் க்ரிஷால் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. அத்தனையையும் அவன் நன்மைக்காகப் பயன்படுத்தி இருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் இப்போதும் க்ரிஷ் மனதில் நிலைத்து நின்றது.

க்ரிஷ் அந்த எச்சரிக்கையை எங்காவது பொருத்திப் பார்க்க முயற்சி செய்தான். ஆனால் அந்த உணர்வு அவன் அறிந்த எதிலும் பொருந்துவதாய் இல்லை. இனி பலவந்தப்படுத்தினால் அது இயல்பானதாக இருக்காமல் நாமே எதன் மீதாவது திணிப்பது போலாகி விடும் என்று அவனுக்குத் தோன்ற அவன் முயற்சியைக் கை விட்டான்.

அம்மா அறைக்குள் எட்டிப் பார்த்தாள். மகன் கண்களை விழித்திருப்பதும் கையில் புத்தகமோ, மடியில் லேப்டாப்போ இல்லாமல் இருப்பதைப் பார்த்த பிறகு தைரியமாக உள்ளே வந்தாள். “சாப்பாடு சாப்பிடறயாடா?”

அண்ணா வரலையா?”

இல்லை. அந்தப் பொண்ணு கிட்ட அவனுக்குப் பேசி முடிஞ்சிருக்காது. இந்த மாதிரி விஷயத்துல அவன் உன்னை மாதிரி இல்லை. வாழ்க்கையை ரசிக்கத் தெரிஞ்சவன்

க்ரிஷ் வாய்விட்டுச் சிரித்தான். இதுவே உதயைக் கிண்டல் பண்ணியிருந்தால் நன்றாகப் பதிலடி கொடுத்திருப்பான். இளைய மகன் உண்மை என்று நினைப்பதை என்றுமே சமாளிக்கப் பார்தத்தில்லை.

பத்மாவதி சொன்னாள். “நான் உதய் ஆபிஸ் அசிஸ்டெண்டுக்கு மூன்று தடவை போன் பண்ணிட்டேன். இன்னும் பேசிட்டே இருக்காங்களாம். ரகசியமா அந்தப் பொண்ணை மட்டும் போட்டோ பிடிச்சு அனுப்பறியான்னு கேட்டேன். அவன் அண்ணன் திட்டுவாரும்மாங்கறான். ரொம்பப் பயந்தவனா இருக்கான்

க்ரிஷுக்குத் தாயின் பொறுமையின்மை சிரிப்பை வரவழைத்தது. ”உதயே கொஞ்ச நேரத்துல வந்துடப் போறான். அவன் கிட்டயே வாங்கிப் பார்க்கலாமே. உனக்கு அப்படி என்ன அவசரம்?”

அதுக்குள்ளே பார்த்துடலாம்னு ஒரு நப்பாசை தான். நீ ஹரிணி கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டியா?”

உதயே நிச்சயமாய் சொல்லலை. அப்படி இருக்கறப்ப அதை ஹரிணி கிட்ட சொல்ல என்ன இருக்கு

என்னடா இப்படி எதுலயுமே ஒரு ஆர்வம், துடிப்பு இல்லாமல் இருக்கே. உன்னைக் கட்டிகிட்டு அந்தப் பொண்ணு என்ன பாடுபடப் போகுதோ

க்ரிஷ் மறுபடி சிரித்தான். அம்மாவுக்குப் பொழுது போக மாட்டேன்கிறது. பத்மாவதியின் அலைபேசி அலறியது. “உதயோட அசிஸ்டெண்ட் தான்என்று இளைய மகனுக்குத் தெரிவித்து விட்டுபடம் ஏதாவது அனுப்பிச்சிருக்கானோ என்னவோ?” என்று சொல்லி விட்டுப் பேசினாள். “என்னப்பா. உதய் கிளம்பிட்டானா. இப்ப தானா. சரி தேங்க்ஸ்என்று போனைக் கீழே வைத்து விட்டுக் கடிகாரத்தைப்  பார்த்தாள். “ட்ராஃபிக் இல்லாட்டி அரை மணி நேரத்துல இங்கே இருப்பான். வந்தவுடனே அவனை உன் அறைக்குக் கூட்டிகிட்டு வந்துடறேன். அவன் தனித்தனியா எதையும் சொல்ல வேண்டாம் பாரு. பின்னே உன் கிட்டேன்னா மனசுவிட்டு எல்லாத்தையும் சொல்வான். என் கிட்டேன்னா பாதி தான் சொல்வான். என்ன அண்ணன் தம்பிகளோ. அம்மான்னா தான் உங்களுக்கு இளக்காரம்

க்ரிஷ் சிரித்துக் கொண்டே கேட்டான். “காதலிக்கிறது அவன் தானே. நீ ஏன் இப்ப பரபரப்பா இருக்கே?”

உன்னை மாதிரி அசராமல் இருக்க ஒரு அம்மாவுக்கு முடியுமாடா? சீக்கிரம் அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்க வேண்டாமாடா. அவனுக்கு வயசாய்கிட்டே போகுது. அதுக்குப் பின்னால நீயும் இருக்காய். அந்த ஹரிணி அம்மாவுக்கும் பொண்ணைச் சீக்கிரம் கட்டிக் கொடுத்தா நிம்மதின்னு தோணாதாடா. அதுவும் நீ சாமியார் மாதிரி அடிக்கடி என்னென்னவோ பண்றே. அந்தப் பொண்ணு வெகுளி பாவம். உன் மேல நம்பிக்கை வச்சுக் காத்திருக்கு. ரெண்டு கல்யாணம் முடிஞ்சா அப்புறம் நான் எதைப் பத்தியும் யோசிக்க மாட்டேன்.” சொல்லி விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள். கடிகாரம் அநியாயத்துக்கு மெல்ல நகர்கிற மாதிரி ஒரு பிரமை அவளுக்கு. அந்தப் பெண் எப்படி இருப்பாள் என்று தெரிந்தால் தேவலை என்று நினைத்தாள்.

உதய் வருவதற்கு முன் மூன்று தடவை வாசலுக்குப் போய் பார்த்தாள். இடையிடையே வந்து இளைய மகன் எதாவது புத்தகத்தையோ, லேப் டாப்பையோ எடுக்காமல் பார்த்துக் கொண்டாள். “கொஞ்சம் அண்ணன் வர்ற வரைக்கும் பொறுடா. எப்பப்பாரு படிச்சுகிட்டு. அம்மா கிட்ட தான் அது வரைக்கும் பேசிட்டு இரேன்.”

க்ரிஷ் தாயைக் கிண்டல் அடித்தான். “அப்பா உன்னை எப்படித் தான் சமாளிக்கிறாரோ?”

பத்மாவதி சொன்னாள். “அவரை நான் எப்படிச் சமாளிக்கிறேன்னு கேளுடா. அவரும் உன்னை மாதிரி தான். அவர் வேலைன்னு எதை நினைக்கிறாரோ அதைத்தான் செய்வார். நாம எதாவது சொன்னா காதுலயே போட்டுக்க மாட்டார். .... உன் அண்ணன் வந்துட்டான். இரு இங்கேயே அவனைக் கூட்டிகிட்டு வர்றேன்.....”

பரபரப்புடன் குழந்தையைப் போல் ஓடிப் போகும் அம்மாவைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது. உண்மையிலேயே அவள் ஒரு குழந்தை தான்.....

பத்மாவதி மூத்த மகனை வரவேற்றாள். “வாடா உனக்காக தான் நானும் உன் தம்பியும் காத்துகிட்டிருக்கோம். அவன் அறைக்கே வா. அவனை நீ வர்ற வரைக்கும் வேற வேலை எதுலயும் போயிடாதபடி பார்த்துக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்

உதயைக் கையைப் பிடித்துக் கொண்டு பத்மாவதி கூட்டிக் கொண்டு போய் சோபாவில் உட்கார வைத்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். “முதல்ல அந்தப் பொண்ணோட போட்டோவைக் காண்பி. அப்புறம் சொல்லு

உதய் முகம் மலர்ந்திருந்தான். அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தில் அவனைச் சமீபத்தில் பார்த்ததாய் க்ரிஷுக்கு நினைவில்லை. உதய் அலைபேசியில் எடுத்திருந்த சிந்துவின் போட்டோவைக் காண்பித்தான். பேரார்வத்துடன் அதை வாங்கிப் பார்த்த பத்மாவதி திருப்தியுடன்பொண்ணு லட்சுமிகரமாய் இருக்காஎன்று சொல்லி விட்டு க்ரிஷ் கையில் கொடுத்தாள். க்ரிஷுக்கும் அந்தப் பெண் அழகாகவும் உதய்க்குப் பொருத்தமாகவும் இருப்பதாய்ப் பட்டது. ஆனால் அவன் சற்று முன்பு உணர்ந்திருந்த எச்சரிக்கை உணர்வு இப்போது அந்தப் பெண் மீது குவிய ஆரம்பித்தது.  அந்த உணர்வு அவளைக் கைகாட்டுவது போல அவன் உணர ஆரம்பித்தான்.

க்ரிஷ் திர்ந்து போனான். ஆனால் அவன் அதிர்ச்சியை உதயும் பத்மாவதியும் கவனிக்கவில்லை. உதய் அவர்களிடம் சிந்து பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். உதய் அந்தப் பெண் மிகவும் நல்ல, புத்திசாலித்தனமான, பாவப்பட்ட நடுத்தர வர்க்கத்துப் பெண் ஆரம்பத்தில் தான் ஆழ்மனதில் உணர்ந்ததைச் சொல்லிப் பின் அவள் சொன்னதையெல்லாம் உணர்வு பூர்வமாக அவன் சொல்ல ஆரம்பிக்க க்ரிஷ் கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

சிந்துவின் சோகக்கதை கேட்டு பத்மாவதி இரண்டு மூன்று முறை கண்கலங்கி,  கண்களைத் துடைத்துக் கொண்டாள். ”ஏண்டா இன்னொரு வீட்டுக் குழந்தையையே கூட இப்படி நாம் நடத்த மாட்டோம். பெத்த அப்பா இப்படியா மகளை நடத்துவார். பாவம் என்னவொரு நரக வாழ்க்கை.

க்ரிஷ் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான். அவள் சொன்னதெல்லாம் உண்மையா, இல்லையா என்று அவனுக்குத் தெரியாது. அதனால் அதுகுறித்து அவசரமாக எந்த முடிவுக்கும் வர அவன் விரும்பவில்லை. அவன் மனமும், அறிவும் உதய் சொன்ன தகவல்களில் இருந்தன. மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண், பத்திரிக்கைத் துறை அனுபவம் இல்லாதவள், திடீரென்று தமிழ்நாட்டுக்கு வருகிறாள், இங்கே பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்கிறாள், அவளுடைய முதல் வேலை உதயைப் பேட்டி எடுப்பது, அவள் அவன் மனதைக் கவர்கிறாள், அவன் காதலிக்கிற அளவுக்குக் கவர்கிறாள். இத்தனையும் ஒரு வாரத்திற்குள்.... இது எதுவும் இயல்பாய் இல்லை. உதய் சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் அப்போதே க்ரிஷ் அதையெல்லாம் சுட்டிக் காட்டியிருப்பான். ஆனால் உதய் அவளிடம் தன்னை முழுமையாக இழந்திருந்தான் என்பது அவனைப் பார்க்கையில் நிச்சயமாகவே தெரிந்தது. க்ரிஷ் சொல்வது அவனை எப்படிப் பாதிக்கும், அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று அவனுக்குத் தெரியவில்லை. நிச்சயமாய் தம்பியைக் குற்றம் சொல்ல மாட்டான். ஆனால் உதயின் மனதில் தற்போது ஒளியின் வேகத்தில் கட்டப்பட்டு வரும் எத்தனையோ கோட்டைகள் உருக்குலைந்து போகும். இப்போது தெரியும் அந்த பேரின்ப மலர்ச்சி கண்டிப்பாய்  காணாமல் போகும்... அதைக் காண முடிந்த மன திடம் க்ரிஷிடம் இல்லை.

ஒரு மனிதன் தன் மனதில் உணரும் முதல் காதல் எவ்வளவு அழகானது, இனிமையானது என்பதை க்ரிஷ் அறிவான். அந்தக் காதல் ஒரு ஏமாற்று முயற்சியாக இருக்கலாம் என்கிற சந்தேகம் கூட எப்படி அந்த மனதை ரணமாக்கும் என்பதையும் க்ரிஷ் அறிவான். எதையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் க்ரிஷ் தவித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்



5 comments:

  1. Very tense moment. How is Krish going to deal this?

    ReplyDelete
  2. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணுனா Sir?

    ReplyDelete
  3. இன்றைய epi கொஞ்சம் சிறிது
    சிந்து பற்றி கிரிஷ் கணித்த உண்மையை உதய்க்கு எவ்வாறு எடுத்து சொல்லுவான்??
    பத்மாவதி அம்மா மருமகள் என்றே முடிவு பண்ணியாச்சா??

    ReplyDelete
  4. May be Krish will take Sindu matter with Senthilnathan to track her background. Lets see.

    ReplyDelete
  5. பத்மாவதி அம்மாவின் ஆர்வமும் நடவடிக்கைகளும் குழந்தைத் தனமாக இருந்தது.... கிரிஷ் கிட்ட சிந்து வேலை எடுபடாது போல...

    ReplyDelete