சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 17, 2020

இல்லுமினாட்டி 67



சிந்துவை மறுநாள் இரவுச் சாப்பாட்டுக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அவளைப் பார்த்துப் பேச உதய் வீட்டில் எல்லோருமே ஆர்வமாய் இருந்தார்கள். மறுநாள் இரவுச் சாப்பாட்டுக்கு ஹரிணிக்கும் அழைப்பு போய் இருந்தது. சிந்து அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அவர்கள் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று உதய் நினைத்தான்.

அன்றிரவு அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போதே பத்மாவதி கணவரிடம் கறாராய் சொல்லி விட்டாள். “பாருங்க நாட்டு நிர்வாகம் நீங்க முதலமைச்சர் ஆகறதுக்கு முன்னாடியும் நடந்துகிட்டு தான் இருந்தது. நீங்க இல்லாட்டியும் நடக்கத் தான் போகுது. அதனால நம்ம வீட்டுல ரெண்டு கல்யாணம் நடந்து முடியற வரைக்கும் வீட்டைப்பத்தி மட்டும் யோசியிங்க. புரியிதா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணங்களை முடிச்சுடுவோம். அடுத்த முகூர்த்தம் எப்போன்னு காலண்டரைப் பார்த்தேன். இந்த மாசக் கடைசிலயே ஒரு முகூர்த்தம் இருக்கு. என்ன சொல்றீங்க?”

கமலக்கண்ணன் தலையசைத்து விட்டுச் சொன்னார். “பார்க்கறேன்

பத்மாவதிக்குக் கோபம் வந்து விட்டது. ”மக்கள் கிட்ட பேசறது, நிருபர்கள் கிட்ட பேசறது மாதிரியெல்லாம் என் கிட்டயும் பேசினா எனக்குக் கோபம் வந்துடும் சொல்லிட்டேன். பார்க்கறதுக்கு என்ன இருக்கு. முழுமூச்சா இறங்கணும்கிறேன்

சரிஎன்று கமலக்கண்ணன் அழுத்தமாய்ச் சொல்ல க்ரிஷும், உதயும் தந்தையைப் புன்னகையுடன் பார்த்தார்கள்.

க்ரிஷ் நீண்ட நேரம் யோசித்தான். உதயிடம் உண்மையைச் சொல்லவும் அவனால் முடியவில்லை. அதே நேரம் பத்மாவதி படும் அவசரப்படி வேகமாகத் திருமணம் நடந்து விடுவதிலும் அவனுக்குச் சம்மதமில்லை. யோசனையின் முடிவில் தந்தையிடம் தனியாகப் பேசத் தீர்மானித்தான். அன்றிரவு உதய் சிந்துவிடம் மறுபடி அலைபேசியில் பேச ஆரம்பித்த பின், பத்மாவதி பூஜையறைக்குத் தன் பணப்பையுடன் உள்ளே போகும் வரைக் காத்திருந்தான். உதய் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பேசுவான். பத்மாவதி தன் வீட்டில் நடக்க இருக்கும் இரண்டு திருமணங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை செய்யக் கிளம்பியிருக்கிறாள். சில தொகைகளைச் சில கடவுள்களுக்குத் தனி உண்டியல்களில் போட்டு சில மஞ்சள் சிவப்புத் துணிகளில் சில தொகைகளைச் சில தெய்வங்களைப் பிரார்த்தித்து வைத்து முடிச்சுப் போட்டு அவள் மனமுருகப் பிரார்த்தித்து விட்டு வெளியே வர குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும். இரண்டு பேரும் இப்போதைக்கு வர வழியில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் க்ரிஷ் தந்தையின் அறைக்குச் சென்றான்.

கமலக்கண்ணன் இளையமகன் வரவில் ஆச்சரியப்பட்டார். அவருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவனாக அவரைச் சந்தித்துப் பேச வந்ததேயில்லை. ஓரிரு முறை அவர் உடல்நலமில்லாமல் இருந்த போது எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க வந்து ஐந்தைந்து நிமிடங்கள் இருந்திருக்கிறான். மற்றபடி அவன் எது குறித்தும் அவரிடம் பேச வந்ததில்லை. என்ன விஷயமானாலும் அண்ணன் தம்பி இருவர் தான் மணிக்கணக்கில் பேசிக் கொள்வார்கள். அடிக்கடி போய் தாயும் சேர்ந்து கொள்வாள். பேசுவது மிகமுக்கியமான விஷயமாக இருக்கையில் அவர்கள் இருவரும் அவளைத் துரத்திவிடுவது உண்டு. ”சாப்பிட வருவீங்க தானே, அப்ப பார்த்துக்கறேன்” என்று பத்மாவதி மிரட்டி விட்டு வந்தாலும் நேரம் வருகையில் அவளே பிள்ளைகளிடம் சாப்பிட வரச் சொல்லி வருந்தி நிற்பாள்...

“என்னடா?” கமலக்கண்ணன் கவலையுடன் கேட்டார்.

க்ரிஷ் கவனமாகச் சொன்னான். “அம்மா சொல்றபடி இந்தக் கல்யாணத்துல ரொம்ப அவசரப்படறது வேண்டாம்னு தோணுதுப்பா”

“ஏண்டா?”

“அந்தப் பொண்ணு கிட்ட நம்ம குடும்பம் நெருங்கிப் பழகி நல்லாத் தெரிஞ்சுகிட்டதற்கப்புறம் கல்யாணம் பத்தி பேசறது தான் நல்லதுன்னு தோணுதுப்பா. அவசரத்துல நாம தப்பு செய்துடக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதை அம்மா கிட்ட லேசா சொல்லிப் பார்த்தேன். சொன்னதுக்கு என்னைத் திட்டறாங்க. உதய் கிட்ட சொல்லி, அவன் கிட்ட சொல்லச் சொன்னாலும் அவனுக்கும் திட்டு தான் விழும்...”

கமலக்கண்ணன் சிரித்துக் கொண்டே சொன்னார். “எனக்கும் அது தாண்டா நிலைமை”

“இல்லை நீங்க உங்க கருத்தா சொல்லாமல் வேற விதமா சொன்னா அம்மா மறுக்க மாட்டாங்க. ஆனா அதை நாங்க சொன்னால் எடுபடாது...” என்று சொல்லி விட்டு மெல்ல க்ரிஷ் தன் யோசனையைச் சொன்னான். சொல்லி விட்டு ”விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளயே இருக்கட்டும்” என்றும் சொல்லி நின்ற இளைய மகனை கமலக்கண்ணன் புன்னகையோடு பார்த்துத் தலையசைத்தார்.

அவருக்கும் திருமண விஷயங்களில் தேவையில்லாத அவசரம் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சரி என்றால் எனக்கும் சரி என்ற மனோபாவத்திலேயே மனைவி சொன்னதற்குத் தலை அசைத்திருந்தார். ஆனால் அனாவசியமாக எந்த விஷயத்திலும் தலையிடாத இளையமகன், நியாயமாகவும், யோசனையுடனும், பொறுப்புடனும் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் இளைய மகன் எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறான் என்பதோடு பத்மாவதியைச் சமாளிக்க வழியும் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அப்படியே செய்வது நல்லதென்று அவருக்குத் தோன்றியது.


ர்னெஸ்டோ வாங் வேயிடம் பேச ஆரம்பிப்பதற்குச் சற்று முன் தான் அவரைக் காண இம்மானுவல் வந்திருந்தான். உளவுத்துறை தலைவனான இம்மானுவல் பெரும்பாலும் தன் வழக்கமான தோற்றத்தில் அவரைச் சந்திப்பதில்லை. ஏதாவது வேடத்தில் அவரைச் சந்தித்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான். இல்லுமினாட்டியின் உளவுத்துறைத் தலைவன் முக்கியமான தகவல்களுடன் இல்லுமினாட்டி தலைவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்ற தகவல் கூட உதவியாளன், மற்ற பணியாட்கள் மூலமாக வெளியே கசிவதை அவன் விரும்பவில்லை. அன்று அவன் எர்னெஸ்டொவின் வயதான நண்பர் ஒருவர் வேடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தான்.

வாங் வேயிடம் பேசி முடித்து விட்டு எர்னெஸ்டோ இம்மானுவலிடம் கேட்டார். “வாங் வே பற்றிய உன் அபிப்பிராயம் என்ன?”

இம்மானுவல் உடனடியாகச் சொன்னான். “மதில் மேல் பூனை. எப்போதும் எப்படியும் தாவலாம்.”

இது வரை எந்த அபிப்பிராயத்தைச் சொல்லவும் இம்மானுவல் சிறிது நேரமாவது யோசித்ததாய் எர்னெஸ்டோவுக்கு நினைவில்லை. கேட்டவுடன் பதில் உடனடியாக வரும். அந்தப் பதில் மிகச்சரியாகவும், தெளிவாகவும் இருக்கும். 

எர்னெஸ்டோ ஒன்றும் சொல்லவில்லை. வாங் வே மட்டுமல்ல. பெரும்பாலான மனிதர்கள் சந்தர்ப்பவாதிகளே. அவரவர் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டே அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வார்கள். நிலையான கொள்கைகள், மதிப்பீடுகளின்படி நடப்பவர்கள் மிக அபூர்வமே!

“புதிதாக என்ன செய்தி இம்மானுவல்”

“க்ரிஷின் அண்ணன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், அவளை அவன் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்ற தகவல் வந்தது. மும்பையிலிருந்து வந்த புதிய பெண் என்று சொன்னதால் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்துச் சொல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்.”

எர்னெஸ்டோ தலையசைத்தார். “அப்புறம்?”

இம்மானுவல் சொன்னான். “எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் ஆரகிள் சொன்னது, சொல்லாதது எல்லாமே இமயமலையின் தெற்குப் பக்கத்திலிருந்து தான் அமைகிறது கவனித்தீர்களா?”

எர்னெஸ்டோ கேட்டார். “என்ன சொல்கிறாய்?”

இம்மானுவல் சொன்னான். “நமக்குப் பிரச்சினையான விஸ்வம் இமயமலையின் தெற்கில் இருக்கும் இந்தியாவிலிருந்து வந்தான். அடுத்தது தீர்வு என்று நாம் நினைத்த க்ரிஷும் இந்தியாவிலிருந்து தான் வந்திருக்கிறான். விஸ்வம் இறந்து இன்னொரு உடலுக்குப் போன போதை மனிதன் டேனியலும் இந்தியாக்காரன் தான். இந்தியாவில் கேரளாக்காரன். அவன் ஐந்து வருடங்களுக்கு முன் தான் வேலை விஷயமாக ஜெர்மனி வந்து சேர்ந்தவன். ஆக விஸ்வம் போய்ச் சேர்ந்த உடம்பும் இந்தியனுடையது தான். இப்போது ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நாம் வரவழைத்திருக்கும் அமானுஷ்யன் அக்‌ஷயும் இந்தியா தான். எல்லாமே எப்படி இந்தியாவையே கைகாட்டுகிறது என்று இன்று காலை தான் வியந்தேன்...”

எர்னெஸ்டோவும் அப்போது தான் அந்த ஒருமைப்பாட்டைக் கவனித்தார். சுவாரசியத்துடன் தலையசைத்து விட்டுக் கேட்டார். “அப்படியானால் விஸ்வத்தின் கூட்டாளி? அவன் பற்றி எதாவது புதிய தகவல் கண்டுபிடித்திருக்கிறாயா?”

(தொடரும்)
என்.கணேசன்   

4 comments:

  1. நல்லதொரு தொடர்கதை - அருமை - சுருக்கெழுத்தில் சுருக்கம் போல வாரம் முழுதும் காத்திருந்து - 4 நிமிட இளைப்பாறல் - நன்றி

    ReplyDelete
  2. உதய் திருமணத்தை தள்ளிப் போட ...கிரிஷ் போட்ட திட்டம் 'ஜோதிடம் அல்லது சாமி குத்தம்' போன்றவற்றை மையப் படுத்தியதாக தான் இருக்கும்....

    டேனியலும் இந்தியாக்காரன் தானா?

    ReplyDelete
  3. Very Interesting. Waiting for next Thursday.

    ReplyDelete
  4. விஸ்வத்தின் கூட்டாளியும் இந்தியனோ

    ReplyDelete