சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 28, 2020

சத்ரபதி 144

சிவாஜி சத்ரபதியாக முடிசூடும் நாளைக் குறித்து விட்டார்கள். காசியில் சிறந்த வேத பண்டிதராக இருந்த காக பட்டா முடிசூட்டு விழாவை முறைப்படி நடத்தித்தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சிவாஜி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே துறவி இராமதாசரைச் சந்தித்து ஆசி பெற்றுவரச் சென்றான்.

பராலி மலைக்குன்றில் கட்டப்பட்டிருந்த அனுமான் கோயில் வாசலில் இராமதாசர் அமர்ந்திருந்தார். சிவாஜி விஷயத்தைச் சொல்லி, காலில் விழுந்து வணங்கி, அவரிடம் ஆசிகள் கேட்டான். ஆசிகள் வழங்கிய இராமதாசர் அன்புடன் சொன்னார். “தாதாஜி கொண்டதேவின் மாணவனுக்கு ராஜதர்மம் பற்றிச் சொல்லித்தர வேண்டியதில்லை. நீ முடிசூடிக் கொண்டாலும், முடிசூடிக் கொள்ளா விட்டாலும் உன் ஆட்சி மக்களுக்கு நன்மையாகவே இருக்கும்….”

சிவாஜி தன் ஆசிரியரின் பெயரை அந்த நேரத்தில் அவர் வாயிலிருந்து கேட்டதில் நெகிழ்ந்து போனான். உணர்ச்சிவசப்பட்டவனாய் அவரிடம் சொன்னான். “அவரது மாணவனுக்கு இன்று அவரிடம் ஆசி வாங்கும் பாக்கியமோஅவருக்குக் குருதட்சிணை தந்து வணங்கும் பாக்கியமோ இல்லை. ஆனால் அவர் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் ஆசி வழங்கி இருக்கிறீர்கள். அதை என் பாக்கியமாகவே நான் நினைக்கிறேன். குருதட்சிணையாக நீங்கள் எதாவது என்னிடம் வாங்கிக் கொண்டால் அது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் சுவாமி

இராமதாசர் சொன்னார். “துறவிக்கு எங்கிருந்தும் பெற வேண்டியது என்ன இருக்கிறது சிவாஜி? அப்படிப் பெற வேண்டி இருந்தால் அவனை எப்படி யாரும் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியும்?”.

சிவாஜியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்த இராமதாசர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நீ தந்தே ஆக வேண்டும் என்று நினைத்தாயானால் அது ஒரு முறை தந்து முடிக்கும் தட்சிணையாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் இறைவனையே அடைக்கலமாய் நினைத்து வாழும் ஏழை ஆன்மீக அன்பர்களுக்கு கை நிறைய தட்சிணை கொடு. வயிறு நிறைய அன்ன தானமும் செய், சிவாஜி

சிவாஜி மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். ”அப்படியே செய்கிறேன் சுவாமி

சுவாமி இராமதாசர் இன்னொன்றையும் சொன்னார். “முறைப்படி முடிசூட்டி நீ படித்து வளர்ந்த தர்மத்தின்படி ஆட்சியும் செய்ய முனைந்துள்ளாய். முடிந்தால் உன் ராஜ்ஜியத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் முகமன் வார்த்தைகள்ராம் ராம்என்ற ராம நாமமாக இருக்கட்டும் சிவாஜி. அந்த ஸ்ரீராமனின் நற்பண்புகள் ஆசிர்வாதமாய் உன் மக்களிடமும் பரவட்டும்

தனக்கு மட்டுமல்லாமல் தன் மக்களுக்கும் சேர்த்து அவர் ஆசிகள் வழங்கியதாக சிவாஜிக்குத் தோன்றியது. நன்றியுணர்வு மேலிட்டவனாய் தலைதாழ்த்தி வணங்கி அவன் சொன்னான். அப்படியே ஆகட்டும் சுவாமி


முடிசூட்டு விழாவன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கையிலிருந்து பிரத்தியேகமாகத் தருவிக்கப்பட்டிருந்த புனிதநீரில் நீராடி வந்து மனமுருக சிவாஜி பவானியைப் பிரார்த்தனை செய்தான். அன்னை பவானி அவனுக்குள் பிரதிஷ்டை ஆனவள். எத்தனையோ ஆபத்துக் காலங்களில் அவனைக் காத்துக் கருணை புரிந்தவள். அவளில்லாமல் அவன் இல்லை. அவளைத் தனக்குள் உணராமல் அவன் எந்த முக்கியமான முடிவையும் எடுத்ததில்லை. அவன் கனவுகளை உண்மையாக்கியவள். இனியும் தொடர்ந்து அவள் அருள் வேண்டிப் பிரார்த்தித்தான்.

பின் மானசீகமாய் தாதாஜி கொண்டதேவை வணங்கினான். இறப்பதற்கு நான்கு நாட்கள் முன் ஒரு இரவு வேளையில் அவர் அவனிடம் மகாபாரதத்தின் சாந்தி பர்வ சுலோகங்களை அர்த்தத்துடன் சொல்லி விளக்கியது நினைவுக்கு வந்தது. பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன ராஜ தர்மங்களை மிகவும் கஷ்டப்பட்டு அவர் சொன்னதும், களைப்பின் காரணமாக இடையே சிறிது ஓய்வும் எடுத்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தது.   

அன்று அவர் படும் கஷ்டத்தைக் கண்டு அவன் கேட்டிருந்தான். “ஆசிரியரே இவ்வளவு கஷ்டப்பட்டு ராஜதர்மத்தை எனக்கு ஏன் விளக்குகிறீர்கள். நான் ஒன்றும் அரசன் அல்லவே

பேரன்புடன் அவர் சொல்லியிருந்தார். “நீ ஒரு நாள் பேரரசனாவாய். அந்தச் சமயத்தில் நான் இருக்க மாட்டேன். அதற்காக இப்போதே சொல்கிறேன்….”

அந்த வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்க்கையில் சிவாஜியின் கண்கள் நிறைந்தன. அன்றே அவனை நம்பி அறிவுரை சொல்லி ஆசிர்வதித்துப் போன புண்ணியாத்மா அவர். அவரையும் அவன் பிரார்த்தித்தான்.

பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவன் ஜீஜாபாயின் கால்களில் விழுந்து வணங்கினான். மாதா, பிதா, குரு என்ற மூவரில் இவள் ஒருத்தி தான் உயிரோடு இப்போது ஆசி வழங்க இருக்கிறாள். இவள் இருப்பதே என் பாக்கியம் என்று சிவாஜி கண்கள் ஈரமாக நினைத்தான். ஜீஜாபாய் நிறைந்த மனதுடன் மகனை ஆசிர்வதித்தாள். எந்தவொரு தாயும் இப்படி ஒரு மகனைப் பெற்றிருக்க முடியாது என்று அவள் ஆழமாக நம்பினாள். அப்படியும் தனக்குச்  சமமான ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீராமனைப் பெற்ற கோசலையைச் சொல்லலாம் என்று அது மிகையே ஆனாலும் பல சமயங்களில் அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

சிவாஜியைப் பிரசவிப்பதற்குச் சற்று முன்பு அவள் ஷிவாய் தேவியை மனமுருகப் பிரார்த்தித்தது நனவாகி விட்டது. தேவி எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அவன் வீரபுருஷனாய் இருக்க வேண்டும். குணத்திலும் மிக உயர்வாய் இருக்க வேண்டும். அவன் அரசனாக வேண்டும். பேரரசனாக வேண்டும். இந்த தேசமே தலை வணங்கும் நிலைக்கு உயர வேண்டும். தாயே அவனுக்கு அருள் புரிவாயாக!” என்று அவள் அன்று வேண்டியிருந்தாள். இன்று அது நனவாகி விட்டது. இந்த ஒரு நாள் எல்லாம் நலமாகப் பார்த்து முடிந்து பின் எந்த நேரம் மரணம் வந்தாலும் அவள் நிறைந்த மனதுடன் இவ்வுலகில் இருந்து விடைபெறத் தயாராக இருந்தாள்.  
  
அடுத்ததாகத் தங்கள் குலப் புரோகிதரை சிவாஜி வணங்கினான். பிறகு எங்கே மாமா?என்று கேட்டான்.

அவனுடைய சிறுவயதில் அயூப்கான் என்பவனின் சூழ்ச்சியால் ஜீஜாபாய் முகலாயர்களின் கொண்டானா கோட்டையில் அடைபட்டிருந்த போது சிவாஜியை சகாயாத்ரி மலைத்தொடருக்கு எடுத்துக் கொண்டு போய் மூன்று வருடம் பத்திரமாய் பாதுகாத்த  சத்யஜித்தை அவன் இன்றைக்கும் மாமா என்றே அழைக்கிறான். ஒரு மூலையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சத்யஜித் இப்போது வயோதிகனாகி இருந்தான். முடிசூடப் போகும் நேரத்திலும் தன்னை மாமன் என்று சிவாஜி அழைத்து விசாரித்தது அவனுக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது.

யேசாஜி கங்க் சத்யஜித்தை முன்னால் இழுத்து வந்தான். சத்யஜித் காலிலும் சிவாஜி விழுந்து வணங்கினான். உறவுகள் எதுவுமில்லாமல் ஊழியம் செய்து வந்த இடத்தில் கிடைத்த மகனாகவே சத்யஜித் சிவாஜியை நினைத்து நேசித்தான். சிவாஜியும் என்றுமே ஊழியனாக அவனை நினைத்ததில்லை. சிறுவனாக இருந்த போது நீ வா போ என்று நட்புடன் சத்யஜித்தை ஒருமையிலேயே அழைத்துப் பழக்கப்பட்டு இருந்தாலும் ஒரு தாய்மாமனாகவே மரியாதை காட்டி வந்த சிவாஜி இன்று அந்த ஸ்தானத்திலேயே அவனை நிறுத்தி வணங்கி எழுந்தான். கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த முதியவன் திணறியதைப் பார்க்கையில் அங்கிருந்த அனைவருமே நெகிழ்ந்து போனார்கள்.   

பின் சிவாஜி யேசாஜியைக் கட்டித்தழுவினான். அவன் இளவயது மிக நெருங்கிய நண்பர்களில் இன்று யேசாஜி மட்டுமே உயிரோடு இருக்கிறான். அவனுடைய வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, சபைக்கு சிவாஜி சென்றான்.   

வேத மந்திரங்களுடன் முடிசூட்டு விழா ஆரம்பமாகியது. தங்க சிம்மாசனத்தில் சொர்யாபாயுடன் அவன் அமர்ந்து, அவன் மகன்கள் சாம்பாஜி, ராஜாராம் இருவரும் சற்றுக் கீழ் இருக்கைகளில் அமர்ந்து புனிதநீர் அவர்கள் மேல் தெளிக்கப்பட்ட அந்த நேரத்தில் சிவாஜி அந்தச் சபையில் இப்போது இருக்கும் மனிதர்கள் மட்டுமல்லாமல் வேறுபல மனிதர்களின் ஆத்மாக்களும் அலைகளாக நிறைந்திருப்பதாய் உணர்ந்தான். அவனுடைய அன்பு மனைவி சாய்பாய், நெருங்கிய நண்பர்கள் தானாஜி மலுசரே, பாஜி பசல்கர், பன்ஹாலா கோட்டையிலிருந்து தப்பிச் செல்லும் போது சிவாஜியை விஷால்கட் கோட்டைக்குத் தப்ப வைத்து விட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட பாஜி தேஷ்பாண்டே என்ற மாவீரன், சுயராஜ்ஜியக் கனவை அவனுடன் சேர்ந்து கண்டு அதற்காகவே உயிரையும் விட்ட எத்தனையோ ஆத்மாக்கள் அங்கு வந்திருந்து அவனை வாழ்த்துவதாக சிவாஜி உணர்ந்தான்.

இது வரை சாதித்தது எதுவும் தனியொரு மனிதனாக அவன் சாதித்தது அல்ல என்பதை சிவாஜி இந்தக் கணத்திலும் நினைவு வைத்திருக்கிறான். அன்னை பவானியின் ஆசிர்வாதம், எத்தனையோ நல்ல உள்ளங்களின் நெஞ்சார்ந்த பணிகள், எத்தனையோ வீரர்களின் தன்னலமில்லாத் தியாகங்கள் எல்லாம் சேர்ந்து தான் தன்னை இந்த நிலைக்குக் கொண்டு  வந்துள்ளதாக அவன் உறுதியாக நினைக்கிறான். இனியும் அவனை நடத்திச் செல்வதும் இவையாகவே இருக்கும். ஒரு நாள் அவனும் மாண்டு போகலாம். ஆனால் அவனும் எண்ணற்றவர்களும் சேர்ந்து கண்ட அந்த சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் வரை இன்னும் பல கோடி மக்கள் மனங்களில் தேடி இடம் பிடித்து சிரஞ்சீவியாக இந்த மண்ணில் கண்டிப்பாகத் தங்கி இருக்கும்!

(அடுத்த வாரம் முடியும்)
என்.கணேசன்





7 comments:

  1. Double Thanks sir. For giving us Chatrapathi novel and for announcing the new novel

    ReplyDelete
  2. சிவாஜி முடிசூடியது மகிழ்ச்சி....

    ஆனால், நாவல் அடுத்த வாரத்தோடு முடியப்போவது... வருத்தமளிக்கிறது...

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் அந்த சூழ்நிலையை கண்முன்னே கொண்டுவந்து கண்ணில் நீர் ததும்ப வைக்கிறது அருமையான நாவல் அடுத்த வாரம் முடியும் என்ற தகவல் புதிய நாவலின் தொடக்கம் மிக சந்தோசம்

    ReplyDelete