ஒன்றன்பின் ஒன்றாகச் சிவாஜியை வந்தடைந்த செய்திகள் எல்லாமே
மோசமானதாகவும் அவனுக்குப் பாதகமானதாகவுமே இருந்தன. முதல் செய்தி மராட்டியர்கள் இரண்டு
சிறு கோட்டைகளை பகதூர்கானிடம் இழந்து விட்டதாகத் தெரிவித்தது. இரண்டாவது செய்தி சித்திகள்,
முகலாயர் கப்பல்களின் உதவியும் கிடைத்ததால் கடலில் சில இடங்களில் மராட்டியரை வென்று
துறைமுகங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிவித்தது.
சாலேர்
கோட்டையின் முன்புறம் பகதூர்கானும், பின்புறம் தில்லர்கானும் படைகளுடன் முற்றுகை இட்டிருக்கும்
செய்தி அடுத்ததாக வந்தது. சாலேர் கோட்டைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப சிவாஜி சகல ஏற்பாடுகளையும்
செய்து முடித்திருந்த வேளையில் அந்தச் செய்தி வந்ததால் உணவுப் பொருட்களை அனுப்ப வழியில்லை.
சாலேர் கோட்டை போன்ற வலிமையான கோட்டை உணவுப் பொருள்களின் இருப்பு சரிவர இருந்தால் ஆறு
மாதங்கள் வரை வெளி உதவி இல்லாமலே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் உணவுப் பொருள் தீர்ந்து
வரும் நிலையில் அந்தக் கோட்டை இருப்பதால் இனி நாள்கணக்கில் அது தாக்குப் பிடிப்பதே
கூடக் கஷ்டம். இந்தச் செய்தி கிடைத்ததும் யோசித்து விட்டு பகதூர்கான் எதிர்பார்த்தது
போலவே சிவாஜி மோரோபந்த் படையையும், ப்ரதாப்ராவ் படையையும் சாலேர் கோட்டையை நோக்கிச்
செல்லும்படி உத்தரவிட்டு ஆளனுப்பினான்.
அடுத்த
செய்தி சிவாஜிக்குப் பின்னிரவில் வந்து சேர்ந்தது. இக்லஸ்கான் தலைமையில் ஒரு படை கிளம்பி
வந்து கொண்டிருப்பதாகவும், அந்தப் படை வரும் பாதை வழியாகத் தான் ப்ரதாப்ராவ் படையும்,
மோரோபந்த் படையும் சாலேர் செல்ல முடியும் என்றும் ஒரு ஒற்றன் வந்து தகவல் தெரிவித்தான்.
இப்போது பகதூர்கானின் திட்டம் சிவாஜிக்குப் புரிந்தது. பிரச்னை பூதாகரமாக எழுந்து நிற்க
சிவாஜி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.
யேசாஜி
கங்க் பதற்றத்துடன் சொன்னான். “சிவாஜி இந்த ஒற்றன் சொல்வதைப் பார்த்தால் சாலேர் கோட்டையின்
கிழக்கிலிருந்து மோரோபந்தும், மேற்கில் இருந்து ப்ரதாப்ராவும் வந்து சேரும் இடத்தை
நோக்கி அல்லவா இக்லஸ்கான் படை போய்க் கொண்டிருக்கிறது. இக்லஸ்கான் நம் இருபடைகளையும்
வழிமறித்துப் போரிட்டு அவர்கள் சாலேர் கோட்டையை நோக்கி நகராமல் தடுத்து விடுவான் போல்
இருக்கிறதே….”
சிவாஜி
அமைதியாகச் சொன்னான். “சாலேர் கோட்டையை நோக்கி நம் படைகள் செல்வதை இக்லஸ்கான் தடுத்து
நிறுத்துவது மட்டுமல்ல யேசாஜி நம் இரு படைகளையும் தனித்தனியாகப் போரிட்டு வென்றும்
விடுவான். இது தான் பகதூர்கானின் திட்டமாக இருக்கிறது. சாலேர் கோட்டையை மட்டுமல்ல,
நம் இரு படைகளையும் வென்று விடும் அருமையான திட்டத்தைத் தான் பகதூர்கான் அரங்கேற்றி
இருக்கிறான்.…”
யேசாஜி
கங்க் திகைப்புடன் சொன்னான். “என்ன சிவாஜி அருமையான திட்டம் என்று நீயே சொல்கிறாய்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?”
சிவாஜி
அமைதி மாறாமல் சொன்னான். “அது தான் யோசிக்கிறேன்…..”
சிவாஜி
யோசிக்க யோசிக்க யேசாஜி கங்க் பதற்றத்தைக் குறைக்க முடியாமல் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான்.
நடக்க நடக்க அடிக்கடி சிவாஜியைப் பார்த்தான். அவன் பதற்றத்தைப் பார்த்து சிவாஜி வேடிக்கையாகச்
சிரித்தான். யேசாஜி கங்க் கேட்டான். “உன்னால் எப்படி இந்த நிலையிலும் சிரிக்க முடிகிறது
சிவாஜி? யோசித்துப் பார். சாலேர் கோட்டையை முற்றுகை இட்டிருப்பதால் நாம் அதற்கு அத்தியாவசிய
உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் ஏற்கெனவே தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதோ நம்
இரு படைகளையும் கூட முகலாயர்கள் வென்று விடும் அபாயம் வேறு உருவாகி இருக்கிறது. திட்டத்தில்
ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை. அதை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நீயே அது
அருமையான திட்டம் என்று வேறு சொல்கிறாய். நான் பதற்றமடைந்தால் என்னைப் பார்த்துச் சிரிக்கவும்
செய்கிறாய்….”
சிவாஜி
நண்பனை இழுத்து அருகில் அமர வைத்து அமைதியாகச் சொன்னான். “யேசாஜி எதிரியின் திட்டம்
என்ன என்று விளங்கினாலே, அது எத்தனை அருமையான திட்டமாக இருந்தாலும் நாம் பாதி ஜெயித்த
மாதிரி தான். மேலும் எந்த அருமையான திட்டமும் அந்தத் திட்டப்படி நடக்க முடிந்தால் மட்டுமே
வெற்றி பெற முடியும். நாம் அந்தத் திட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்த முடியும். அவர்கள்
எண்ணியபடியே நடக்கவிடாமல் எத்தனையோ செய்ய முடியும். அப்படி இருக்கையில் நீ ஏன் பதறுகிறாய்?
நான் அறிந்த வரையில் பதற்றத்தில் இது வரை எந்த நல்லதும் நடந்ததாய் இல்லை…”
பாதகமான
தகவல்களே தொடர்ந்து வந்த போதும் அசராமல் அமைதியாகத் தத்துவம் பேச முடிந்த நண்பனை யேசாஜி
திகைப்புடன் பார்த்தான். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவன் தான்
உதாரணம் என்று தோன்றியது. தொடர்ந்து பிரச்னைகள் வந்த போதும் இந்த அசராத தன்மையும்,
அடுத்தது என்ன என்ற யோசிக்கும் அமைதியும் எத்தனை பேருக்கு வரும்.
சிவாஜி
நண்பனிடம் தொடர்ந்து சொன்னான். “இப்படி யோசித்துப் பார் யேசாஜி. இரண்டு சிறிய கோட்டைகளை
இழந்திருக்கிறோம். இரண்டுமே பெரிய முக்கியத்துவம் இல்லாத கோட்டைகள். யாரிடம் இருந்து
பிடுங்கினோமோ அவர்களே நம்மிடமிருந்து திரும்பப் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். இதில்
நஷ்டம் எதுவும் இல்லை. சித்திகள் முகலாயர்கள் உதவியுடன் நம் கடல் ஆதிக்கத்தைத் தடுத்திருக்கிறார்கள்
என்பது உண்மையிலேயே நஷ்டம் தான். ஆனால் இதில் நம் ஆளுமைக்கு அவசர ஆபத்து எதுவும் இல்லை.
இப்போது சாலேர் கோட்டைப் பிரச்னையும், இரு படைகளும் தோல்வியடையும் சாத்தியக்கூறும்
மட்டும் தான் நம் முன் இருக்கின்றன. இது குறித்து நமக்கு முன்பே தகவல் தெரிந்து விட்டிருப்பதால்,
கஷ்டமாக இருந்தாலும், இது இரண்டும் நம்மால் சரி செய்ய முடிந்த பிரச்னைகள் தான்…”
யேசாஜி
அவன் பிரச்னைகளைச் சொன்ன விதத்திலேயே சற்று பாரம் குறைந்தவனாய் கேட்டான். “சரி என்ன
செய்யப் போகிறாய் சிவாஜி?”
சிறிது
நேரத்தில் மின்னல் வேகத்தில் இரண்டு வீரர்கள் குதிரைகளில் ப்ரதாப்ராவ் குசாரையும்,
மோரோபந்த் பிங்க்ளேயையும் சந்திக்கப் பறந்தார்கள். அடுத்ததாக ஒரு பெரும்படையை சிவாஜி
திரட்டிக் கொண்டு சிவாஜி சாலேர் கோட்டையை நோக்கிச் சென்றான். சிறிது நேரம் கழித்து
உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிறிய மராட்டியக் குழு சென்றது.
பகதூர்கானிடம் ஒற்றன் வந்து சொன்னான். “தலைவரே. சிவாஜி பெரும்படை
ஒன்றைத் திரட்டிக் கொண்டு சாலேர் கோட்டையை நோக்கி கிளம்பியிருக்கிறார்….”
பகதூர்கானுக்குத்
தன் காதுகளை நம்ப முடியவில்லை. சிவாஜி அருகில் இருக்கும் படைகளை இங்கு அனுப்புவான்
என்று பகதூர்கான் எதிர்பார்த்தானே ஒழிய அவனே ஒரு பெரும்படையுடன் கிளம்பி இங்கே வருவான்
என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சிவாஜியைப் போன்ற புத்திசாலி செய்யக்கூடிய காரியமாகவும்
அவன் அதை நினைத்திருக்கவில்லை. ஏனென்றால் நீண்ட தொலைவில் இருந்து வரும் சிவாஜிக்கு
இங்கு ஆபத்துகள் அதிகம். இவ்வளவு தூரம் வந்து நேரடியாக முகலாயப்படை கூட மோதி அவன் வெல்லும்
வாய்ப்புகள் குறைவு. அந்த அளவு ஆபத்துகளை எதிர்கொண்டு வெல்ல சாலேர் கோட்டை அவன் தலைநகரக்
கோட்டை அல்ல. இழப்புகளே அதிகம், பெறுவதும் பெரியதாக எதுவுமில்லை என்ற நிலைமையில் எந்தப்
புத்திசாலியும் வர மாட்டானே சிவாஜிக்குப் புத்தி பேதலித்து விட்டதா என்ன என்று பகதூர்கான்
குழம்பினான்.
ராஜ்கட்
கோட்டைக்கு அருகே ஏதாவது முகலாயப்படை இருக்குமானால் அதன் மீது படையெடுக்கக் கூட உத்தரவிட்டிருக்கலாம்
என்று பகதூர்கான் நினைத்தான். ஆனால் கிட்டத்தட்ட முகலாயப் படை மொத்தமும் இந்தப் பக்கங்களில்
அல்லவா இருக்கிறது!
பகதூர்கான்
மெல்ல ஒற்றனிடம் கேட்டான். “அப்படியானால் மோரோபந்த் படையும் ப்ரதாவ்ராவ் படையும் என்ன
செய்து கொண்டிருக்கின்றன?”
ஒற்றன்
சொன்னான். “அந்தப் படைகளும் நாம் எதிர்பார்த்தபடியே இங்கே தான் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன
தலைவா.”
பகதூர்கானின்
குழப்பம் அதிகரித்தது. ’அப்படியானால் சிவாஜியும் ஏன் கிளம்பி வருகிறான். ஒருவேளை அவனுடைய
இரண்டு படைகளும் இக்லஸ்கானிடம் தோற்றுப் போகும் என்று பயம் வந்து விட்டதோ? அப்படித்
தோற்றுப் போனால் கூட சிவாஜி போய் அவர்களுக்கு உதவும் வாய்ப்போ, இக்லஸ்கானை எதிர்க்கும்
வாய்ப்போ இல்லையே. ஏன் என்றால் சிவாஜியால் கண்டிப்பாக சரியான நேரத்தில் அங்கு போய்ச்
சேரும் வாய்ப்பு சிறிதும் இல்லையே….’
தலை
வெடிப்பது போல் உணர்ந்த பகதூர்கான் தில்லர்கானை உடனடியாக அழைத்து வரத் தன் வீரன் ஒருவனிடம்
கட்டளையிட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்