சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 10, 2020

சத்ரபதி 137


ரங்கசீப் உறக்கம் வராமல் தன் அறையில் பல சிந்தனைகளில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தான். பின்னிரவு நேரமானதால் அரண்மனையில் எல்லா இடங்களிலும் சத்தங்கள் ஓய்ந்து அமானுஷ்ய அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. அந்த அமைதியை லேசாகக் கலைத்தபடி யாரோ நெருங்கும் காலடி ஓசை கேட்டது. ஔரங்கசீப் சாய்ந்திருந்த மெத்தைக்கு அடியில் இருந்து தன் கூரிய குறுவாளை எடுத்துத் தயாராகப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, வருவது யார் என்று பார்த்தான். அவன் மகள்  ஜெப் உன்னிசா தான் மெல்ல எட்டிப் பார்த்தாள். ஔரங்கசீப் மகளைக் கண்டதும் நிம்மதியடைந்தான். இதுவே இவ்வேளையில் வந்தது அவன் மகன்களில் ஒருவராய் இருந்திருந்தால் கூட, குறுவாளில் இருந்து அவன் கையை எடுத்திருக்க மாட்டான். மகளைக் கண்டதும் இறுக்கம் தளர்ந்தவனாய் “நீ இன்னும் உறங்கச் செல்லவில்லையா மகளே?” என்று கேட்டான்.

“உறக்கம் வரவில்லை தந்தையே. நீங்களும் இன்னும் உறங்கவில்லையா தந்தையே…” என்று கேட்டபடி ஜெப் உன்னிசா ஔரங்கசீப்பின் அருகில் அமர்ந்தாள்.

ஔரங்கசீப் கடைசியாய் எப்போது முழு உறக்கம் உறங்கினான் என்பது அவனுக்கே சரியாக நினைவில்லை. “உறக்கம் என்பது சக்கரவர்த்திகளுக்கு விதிக்கப்படாத ஆடம்பரம் மகளே. நாலா பக்கங்களிலும் பிரச்னைகள், சிக்கல்கள், எதிரிகள், சூழ்ச்சிகள் இருக்கும் போது உறக்கம் சுலபமாய் வருவதில்லை. அதனால் தான் அரசர்கள் பலரும் மது, போதைப் பழக்கங்களை நாடி சிறிது நேரமாவது எல்லாம் மறந்து உறங்குகிறார்கள். உன் தந்தை மதுவின் உதவியை என்றுமே நாடியதில்லை என்பதால் உறக்கத்தைத் தழுவுவது இன்னும் சிரமமாக இருக்கிறது”

ஜெப் உன்னிசா ஹீராபாய் பேச்சை எடுக்க ஔரங்கசீப் வழி ஏற்படுத்திக் கொடுத்ததால் உடனே பயன்படுத்திக் கொண்டாள். “ஆனால் ஒரு காலத்தில் ஒரு பெண்ணுக்காக நீங்கள் மதுவை ருசி பார்க்கவும் தயாராக இருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேனே தந்தையே”

ஔரங்கசீப் திடுக்கிட்டான். என்றோ அவன் வாழ்வில் வந்து போன வசந்தத்தை இவள் ஏன் வந்து நினைவுபடுத்துகிறாள்…. அவன் முகத்தில் கடுமை குடியேறியது. “யார் இது போன்ற அவதூறுகளைப் பரப்பிக் கொண்டு இருப்பது?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்.

ஔரங்கசீப்பின் கோபத்தால் அசராத ஜெப் உன்னிசா “இது அவதூறு இல்லை தந்தையே. என் தந்தையும் ஒரு காலத்தில் காதலில் வீழ்ந்திருக்கிறார், தன் காதலிக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்திருக்கிறார் என்பதை ஒரு பெருமையாகவே நான் நினைக்கிறேன்….” என்று குழந்தைத்தனமான முகமலர்ச்சியுடன் சொன்னாள்.

மகளின் முகமலர்ச்சியும், அவள் உற்சாகம் கொப்பளிக்கச் சொன்ன விதமும் அவன் முகக்கடுமையைக் குறைத்து மென்மையாக்கியது. இதே உற்சாகத்தை அவளிடம் இதற்கு முன் சிவாஜியைப் பற்றிப் பேசுகையில் ஔரங்கசீப் பார்த்திருக்கிறான். இந்தப் பெண்களின் மனதை அவனால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. உப்புசப்பில்லாத விஷயங்களுக்காக எல்லாம் மகிழ்கிறார்கள் அல்லது வாடுகிறார்கள். மிகப்பெரிய விஷயங்களோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்லாமலும் போகிறது…

ஜெப் உன்னிசா மிக மென்மையான குரலில் கேட்டாள். “ஹீராபாய் மிகவும் அழகாக இருந்தாளா தந்தையே?”

ஔரங்கசீப் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு சொன்னான். “ஒரு மகள் தந்தையிடம் பேசும் விஷயமா இது? உன் தாய் உன்னைக் கட்டுப்பாடுடன் வளர்த்தத் தவறி விட்டிருக்கிறாள்….. அவளையும் சேர்த்துக் கண்டிக்க வேண்டும்…”

ஜெப் உன்னிசா தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். “என்னை உங்கள் தோழியாக நினைத்துக் கொள்ளுங்கள் தந்தையே. இல்லா விட்டால் கவிஞராகவே பாருங்கள். நான் ஹீராபாயைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம் என்றிருக்கிறேன். அதுவும் நீங்கள் பாடுவது போல்….”

மகள் உற்சாகம் குறையாமல் பேசிக் கொண்டே போனதும், ஹீராபாயின் நினைவும் சேர்ந்து ஔரங்கசீப்பை மிக மென்மையாக்கியது. முதன்முதலில் ஹீராபாயை மாமரத்தின் அடியில் பார்த்தது கனவு போல் இப்போதும்  அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு கணம் அவன் மீண்டும் இளைஞனானான்.  ஹீராபாய் அவனைப் பார்த்துப் புன்னகைப்பதாய்த் தோன்றியது. இப்போதும் அவன் இதயம் சில கணங்கள் துடிக்க மறந்தது. அவளோடு வாழ்ந்த சில நாட்கள், அவன் வாழ்வின் மிக அழகான தருணங்கள் எல்லாம்  அவன் மனக்கண்ணில் உயிர்பெற்று வந்தன. ஹீராபாய் பேசினாள். பாடினாள். ஆடினாள். அவனையும் மீறி அவன் புன்னகைத்தான்….

தந்தையின் மௌனத்தில், அவன் முகத்தில் படர்ந்த மென்மையான புன்னகையில், அவன் வயது குறைந்து போனதாய்த் தெரிந்த பாவனையில் ஜெப் உன்னிசா நிறைய படித்தாள், நிறைய உணர்ந்தாள். ஒரு கவிஞரான அவள் மனதில் தந்தை கதாநாயகனாகவும், அந்த ஹீராபாய் கதாநாயகியாகவும் தோன்றினார்கள். ஔரங்கசீப் நினைவுகளிலும், ஜெப் உன்னிசா கற்பனையிலும் சிறிது நேரம் தங்கினார்கள்.

கடைசியில் ஹீராபாயின் சடலத்தைப் பார்த்த நினைவு ஆறாத ரணமாய் ஔரங்கசீப் மனதை அழுத்த அவன் கொடுங்கனவில் இருந்து விழித்துக் கொண்டது போல் உடல் அதிர நிகழ்காலத்திற்கு வந்தான். ஜெப் உன்னிசா தந்தையின் முகத்தில் தெரிந்து மறைந்த அந்த ரண வலியைப் பார்த்துக் கற்பனையில் இருந்து மீண்டாள். தந்தையைப் புரிந்து கொண்டவளாய் அவன் வலக்கரத்தை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்ட அவள் கண்கள் ஈரமாயின.

மகள் கண்களில் தெரிந்த ஈரமும், அவள் கைகள் அழுத்தியதில் தெரிந்த பாசமும் ஔரங்கசீப்பை வார்த்தைகள் இல்லாமலேயே நெகிழ வைத்தன. எல்லோரும் அவனைச் சக்கரவர்த்தியாகவே பார்த்தார்கள். அவனிடம் வந்தவர்களுக்கெல்லாம் கேட்க ஏதோ ஒரு கோரிக்கை இருந்தது. அவனிடம் பெற வேண்டிய ஏதோ ஒரு லாபம் ஒவ்வொருவர் வரவிலும் இருப்பதை அவன் கண்டுபிடித்துச் சலித்திருக்கிறான். அவனிடம் பெற எதுவும் இல்லா விட்டால் அவனைச் சந்திக்க யாரும் வருவதேயில்லை. அவன் சகோதரி ரோஷனாரா கூட ஒரு லாபநஷ்டக்கணக்கைப் பார்த்துத் தான் அவனிடம் பாசம் காட்டுவதாக அவனுக்குச் சில காலமாகவே தோன்றி வருகிறது….

முதல் முறையாக அவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், எதையும்  வேண்டாமல், அவனுக்காகவும், அவன் உணர்வுகளுக்காகவும் உருகியபடி அவன் மகள் அங்கு அமர்ந்திருப்பது அவன் இது வரை உணராத பெரிய ஆசுவாசமாய் இருந்தது. எல்லையில்லாத பாசத்துடன் ஔரங்கசீப் மகள் கைகளை உயர்த்தி கைகளுக்கு முத்தமிட்டான்.

தந்தையையே பார்த்துக் கொண்டிருந்த ஜெப் உன்னிசா நினைத்தாள். ‘அந்தப் பெண் ஹீராபாய் சாகாமல் இருந்திருந்தால் இவர் இப்படி இருந்திருக்க மாட்டார். இவர் மனம் இப்படி வரண்டும், கடுமையாகவும் மாறியிருக்காது. கண்டிப்பாக இவர் வாழ்க்கையின் அழகான விஷயங்களை ரசிக்கவும், விரும்பவும் ஆரம்பித்திருப்பார்…..”

அவளுடைய எண்ணங்களை அவள் முகபாவனையை வைத்தே யூகித்த ஔரங்கசீப்  மென்மையான குரலில் மகளிடம் சொன்னான். ”மகளே! ஹீராபாய் இறந்த போது உலகம் அவளோடு சேர்ந்து இருண்டு விட்டது என்று நான் நினைத்தது உண்மை. ஆனால் யாரோடும் சேர்ந்து நம் வாழ்க்கையும் முடிவுக்கு வருவதில்லை என்பதே யதார்த்தம். வாழ்க்கை நீ எழுதும் கவிதை போன்றதல்ல. சில நேரங்களில் காதலால் தோன்றும் அழகு நீர்க்குமிழியின் வர்ண ஜாலம் போல் அற்ப நேரத்திற்கு மட்டுமே நீடிக்கக்கூடியது. அது நிலைத்து நிற்பதில்லை. கற்பனையால் காணும் உலகத்தை நிஜத்திலும் காண முற்பட்டால் நாம் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாவது நிச்சயம். இதை நான் சீக்கிரமே உணர்ந்து கொண்டதால் தப்பித்தேன் மகளே. ஒரு விதத்தில் ஹீராபாயை இறைவன் விரைவில் அழைத்துக் கொண்டது நல்லதாகவே போய் விட்டது. அவள் இருந்திருந்தால் கண்டிப்பாக உன் தந்தை சக்கரவர்த்தியாகி இருக்க முடிந்திருக்காது….”

ஜெப் உன்னிசா உடனே சொல்ல நினைத்தாள். “அவள் இருந்திருந்தால் நீங்கள் சக்கரவர்த்தியாக ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனால் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள் தந்தையே. இப்படி உறக்கம் கூட வராத மனிதராய், யாரும் நேசிக்காத, யாரையும் நேசிக்காத மனிதராய் மாறி இருந்திருக்க மாட்டீர்கள்…..”

ஆனால் சற்று முன் ஹீராபாய் நினைவுகளில் தங்கி மிக மென்மையாகி, பின் மிகுந்த வேதனையுடன் உடல் அதிர ஔரங்கசீப் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஏதேதோ சமாதானங்கள் செய்து கொண்டு ஹீராபாயின் மரணத்தை ஜீரணித்து வாழ்ந்து வரும் தந்தையிடம், தான் உண்மையாக உணர்ந்ததைச் சொல்லி அந்த வேதனையைப் புதுப்பிக்க வேண்டாம் என்று தோன்ற ஜெப் உன்னிசா மௌனமாகத் தலையசைத்தாள்.

மகள் எதையோ சொல்ல வந்து சொல்லாமல் தவிர்த்தது புரிந்தாலும் ஔரங்கசீப் அது என்னவென்று கேட்கவில்லை.

ஜெப் உன்னிசா பாசத்துடன் தந்தையிடம் சொன்னாள். “நீங்கள் உறங்குங்கள் தந்தையே. நள்ளிரவாகி விட்டது”

தந்தை படுக்கையில் படுக்கும் வரை காத்திருந்து அவன் மீது போர்வையைப் போர்த்தி விட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு ஜெப் உன்னிசா கனத்த இதயத்துடன் அங்கிருந்து சென்றாள்.

மகளின் திடீர்ப் பாசத்தில் மனம் நெகிழ்ந்த ஔரங்கசீப் நீண்ட காலத்திற்குப் பின் அன்று ஆழ்ந்த உறக்கம் உறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Super episode. Very touching dialogues. Feel pity for Aurangazeb. Zeb unnisa character shows such empathy and understanding. First time in your novel only I am hearing about her. You immortalized her. Hats off to you sir.

    ReplyDelete
  2. அற்புதம், வரலாற்று வில்லனின் கனிவான பக்கங்கள்... மிக்க நெகிழ்ச்சியான பதிப்பு...

    ReplyDelete
  3. ஔரங்கசீப்பின் மென்மையான நடவடிக்கைகள் அற்புதமாக இருந்தது...

    ReplyDelete