சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 24, 2020

சத்ரபதி 139

ரங்கசீப் கட்டளையிட்டபடியே ஒற்றர் தலைவனும், தக்காண ஆலோசகர்களும் அவனைச் சந்தித்தனர். தற்போதைய தக்காண நிலவரமும், செயல்பாடுகளும் அவனுக்கு விரிவாக விளக்கப்பட்டன. எல்லாவற்றையும் கேட்டு உள்வாங்கிக் கொண்டு யோசித்த ஔரங்கசீப் தன் ஒற்றர் தலைவனைக் கேட்டான்.

“ஒவ்வொரு முறையும் சிவாஜி எங்காவது சென்று அவன் வேலையைத் தொடங்கிய பின் தான் நம் ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறதே. சிவாஜி சென்று சேர்வதற்கு முன்பே அல்லவா நமக்குத் தெரிய வர வேண்டும். இது நம் ஒற்றர்கள் தக்காணத்தில் செயல் அற்றவர்களாக இருப்பது போலல்லவா தோன்றுகிறது?”

ஒற்றர் தலைவன் சொன்னான். “இல்லை சக்கரவர்த்தி. சிவாஜியின் எல்லாத் திட்டங்களும் பெரும்பாலான சமயங்களில் அவன் மட்டுமே அறிந்த ரகசியமாகத் தான் இருக்கின்றன. ஒரு திட்டத்தை அவன் போட்டான் என்றால் அது பற்றி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறவர்களுக்கே ஒரு  நாள் முன்பு அவன் விளக்கும் போது தான் தெரிய வருகிறது. படைவீரர்களுக்குக் கடைசி வரை செல்லும் இடங்கள் பற்றிச் சொல்லப்படுவதில்லை. போர் யுக்திகள் கூடப் போர்க்களத்தில் செயல்படுத்தப்படுவதற்குச் சற்று முன் தான் அவர்களுக்கு விளக்கப்படுகின்றன. படைவீரர்களுக்கே அந்தச் செயல்பாடுகள் குறித்து முன்பே தெரியாமல் இருப்பதால் நம் ஒற்றர்களுக்கும் அது தெரிய வருவதில்லை…..”

ஔரங்கசீப் சிவாஜியின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தான். அந்த மாயாவியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். கண்களை மூடிச் சிறிது யோசித்தவன் பின் உறுதியான தொனியில் சொல்ல ஆரம்பித்தான்.

“எந்த விதத்திலும் தக்காணத்தில் சிறப்பாக இயங்காத இளவரசன் முவாசிம்மை தக்காணக் கவர்னர் பதவியிலிருந்து விலக்கித் தலைநகருக்குத் திரும்ப உத்தரவிடுகிறேன். ராஜா ஜஸ்வந்த்சிங் தக்காணத்தில் சரியான சமயத்தில் உண்டு உறங்கிக் கொண்டிருப்பதைத் தவிர உருப்படியாக எதையும் அங்கு செய்வதாய் நமக்குச் செய்தியில்லை. அவர் அந்த வேலையை இங்கு வந்து தொடரட்டும். தக்காணத்தின் தலைமைத் தளபதியாக நான் பகதூர்கானை நியமிக்கிறேன். தில்லர்கானை பகதூர்கானுக்குப் பக்கபலமாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

“நான் கவனித்த வரை நாம் சும்மா இருந்தாலும் சிவாஜி அப்படிச் சும்மா இருப்பவன் அல்ல. ஏதாவது வம்பு செய்து கொண்டேயிருக்கிறான். அவனாக எதையாவது செய்தால் அது மிக ரகசியமாக இருக்கிறது. செயல் ஆரம்பித்த பிறகு தான் நமக்குத் தெரிய வருகிறது. இந்த நிலை தொடரக்கூடாது. எதையும் அவனாகச் செய்தால் தானே ரகசியம் காக்க முடிகிறது. சும்மா இருக்க விட்டால் தானே நம்மைப் பாதிக்கும் தந்திரங்களை அவனால் செய்ய முடிகிறது. அவனைச் சமாளிக்க ஒரே வழி அவனைச் சும்மா இருக்க விடாமல் அவன் படைகள் மீதும், அவன் இடங்கள் மீதும் தாக்குதல் ஆரம்பிப்பது தான். நாம் தாக்குதலை ஆரம்பித்து விட்டால் அதைச் சந்திக்க அவன் அந்த இடத்துக்கு வந்தே தீர வேண்டும் அல்லவா? நாம் அதைச் செய்வோம். நாம் விரும்பித் தீர்மானிக்கும் இடங்களுக்கு அவனையும் அவன் படைகளையும் வர வைத்துப் போராடுவோம்.”

“சிவாஜி கப்பல்களைக் கட்டுவதிலும், நீரில் ஆதிக்கம் செலுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்பது தெரிய வருகிறது. இப்போதைக்கு நமக்குக் கடலில் வேறு பெரிய வேலைகள் இல்லை என்பதால் நம் கப்பல்களை ஜஞ்சீரா சித்திகளுக்கு உதவ அனுப்பவும் உத்தரவிடுகிறேன். அவர்களும், நாமும் இணைந்து பணியாற்றினால் சிவாஜியின் கடல் கனவுகளையும் நிறுத்தி வைத்து அந்த விதத்திலும் அடக்கி வைக்க முடியும்…”

“இப்போதைக்குப் பெரும்படைகளைத் தக்காணத்திற்கு அனுப்ப முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம். ஆனாலும் அங்கு நிலவும் மிக மோசமான சூழ்நிலைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறு படைகளை அனுப்பி வைக்க உத்தரவிடுகிறேன். இளவரசன் முவாசிம் படைகள் போதவில்லை என்று சொல்லி வந்தது போல் எதிர்காலத்தில் தோல்விக்கும் செயலின்மைக்கும் காரணங்கள் சொல்லிப் பொறுப்புகளை இனி வரும் தலைமை தட்டிக் கழிக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறேன். உறுதியான நோக்கமும், தெளிவான திட்டமும், தளர்வில்லாத வீரமும் தான் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய படையின் அளவு அவற்றைத் தீர்மானிப்பதில்லை. இதை உறுதியாக மனதில் வைத்துத் தொடர்ந்து போராடி சிவாஜியைத் திணறடிக்க வேண்டும் என்றும், வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்றும் நம் தக்காணப் படைத்தலைவர்களுக்கும், வீரர்களுக்கும் நான் உத்தரவிடுகிறேன்…..”


கதூர்கான் ஔரங்கசீப்பின் உத்தரவை இம்மியும் பிசகாமல் பின்பற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு தக்காணத்திற்கு வந்தான். சிறந்த அறிவாளியும், போராளியுமான அவன் தக்காணத்துக்கு வந்தவுடன் சிவாஜியின் படை சமீப காலங்களில் பிடித்திருந்த சிறு கோட்டைகள் இரண்டைத் திரும்பக் கைப்பற்றி முகலாயப்படையில் ஒரு உற்சாக மனநிலையை ஏற்படுத்தினான். சித்திகளுக்கு கப்பல்களை உதவிக்கு அனுப்பி சிவாஜியின் சில கப்பல்களைச் சேதப்படுத்தி சில துறைமுகங்களில் சிவாஜிக்கு இருந்த ஆதிக்கத்தைக் குறைத்தான்.

ஔரங்கசீப்பின் அதிருப்தியால் முடுக்கப்பட்டிருந்த முகலாய ஒற்றர்களும் அவ்வப்போது முக்கியமானதும், முக்கியமல்லாததுமான புதுப்புதுத் தகவல்களுடன் பகதூர்கானிடம் வந்து கொண்டிருந்தார்கள். இரண்டு கோட்டைகளைக் கைப்பற்றி விட்டு அடுத்த தாக்குதலை எங்கே ஆரம்பிப்பது என்று பகதூர்கான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஒற்றன் வந்தான்.

“தலைவரே. சாலேர் கோட்டையில் உணவுப் பொருட்கள் குறைந்து வருகின்றன என்றும் உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்பித்தர வேண்டும் என்று சாலேர் கோட்டைத்தலைவன் சிவாஜிக்குச் செய்தி அனுப்பி உள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.”



சாலேர் கோட்டை வலிமையான கோட்டை. சில காலம் முன்பு தான் சிவாஜியின் படை அதைக் கைப்பற்றி இருக்கிறது. ஔரங்கசீப்புக்கு அந்த வலிமையான கோட்டையை இழந்ததில் இளவரசன் முவாசிம் மீது கடும் அதிருப்தி இருந்தது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இருக்கும் கோட்டையை முற்றுகை இட்டால் அந்தக் கோட்டை நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமல் சரணாகதி அடையத் தான் வேண்டும் என்றுச் சரியாகக் கணக்குப் போட்ட பகதூர்கான் உடனே ஆழ்ந்து யோசித்து ஒரு திட்டம் தீட்டினான். பின் தில்லர்கானை அழைத்து சாலேர் கோட்டை பற்றிக் கிடைத்தத் தகவலைச் சொல்லி விட்டுத் தன் திட்டத்தைச் சொன்னான்.

”தில்லர்கான் அவர்களே. நானும் நீங்களும் படைகளுடன் சென்று நாம் உணவுப் பொருட்களை உள்ளே செல்ல விடாமல் சாலேர் கோட்டையை  இரு பக்கங்களிலும் முற்றுகை இடுவோம். சாலேர் கோட்டை கண்டிப்பாக நம்மிடம் சரணடையத்தான் வேண்டி வரும்….”

தில்லர்கான் யோசனையுடன் சொன்னான். “நல்ல திட்டம் தான். ஆனால் மோரோபந்த் பிங்க்ளே தலைமையிலும், ப்ரதாப்ராவ் குசார் தலைமையிலும் உள்ள சிவாஜியின் இரு படைப்பிரிவுகள் இன்னும்  சாலேர் கோட்டையை இரண்டு மூன்று நாட்களில் நெருங்கி விடும் தொலைவில் தான் இருக்கின்றன. சிவாஜி கண்டிப்பாக அவற்றை சாலேர் கோட்டைக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பு இருக்கிறது….”

பகதூர்கான் தில்லர்கானின் அறிவை மனதில் மெச்சியபடி சொன்னான். “உண்மை. நானும் அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டேன். அந்தப் படைகள் இரண்டையும் வர விடாமல் தடுக்கும் பொறுப்பை இக்லஸ்கானிடம் தரலாம் என்று நினைக்கிறேன். அவனிடம் பெரும்படையுடன் வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறேன்….”

இக்லஸ்கான் ஔரங்கசீப்பால் அனுப்பப்பட்ட இன்னொரு படைத்தலைவன். திறமையும், வீரமும், அனுபவமும் கொண்டவன். தில்லர்கான் பகதூர்கான் தேர்வில் திருப்தி அடைந்தாலும் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “அவர்களுடைய இரண்டு படைகளையும் ஒன்றாகச் சந்திக்க வேண்டி வந்தால்  அது நம் படைக்கு இணையான பலமாகத் தான் இருக்கும். இக்லஸ்கான் சிரமப்பட்டுத்தான் வெல்ல வேண்டியிருக்கும்.”

பகதூர் கான் சொன்னான். “இக்லஸ்கான் ஒரே நேரத்தில் ப்ரதாப்ராவ் குசார் படையையும் மோரோபந்த் படையையும் சமாளிக்க வேண்டியதில்லை. இப்போது இருபடையினர் இருக்கும் தொலைவுகளையும் இக்லஸ்கான் படையுடன் வரும் தொலைவையும் கணக்கிட்டுப் பார்த்தால் முதலில் ப்ரதாப்ராவ் படையைத் தான் அவன் முதலில் சந்திக்க வேண்டி வரும். மோரோபந்த் படையை விட அது சிறிய படை தான். ப்ரதாப்ராவ் படையை வென்று விடுவது இக்லஸ்கானுக்கு மிகவும் எளிது. அப்படி வென்று விட்ட பிறகு அவன் மோரோபந்த் படையை நோக்கிச் சென்று அவர்களையும் சிரமமில்லாமல் வென்று விட முடியும். நாம் இங்கு சாலேர் கோட்டையைக் கைப்பற்றி வெற்றி பெறுவதும், இக்லஸ்கான் சிவாஜியின் இரண்டு படைகளை வென்று முடிவதும் தக்காணத்தின் மிகப்பெரிய வெற்றியாக நமக்கு அமையும்.”

தில்லர்கான் யோசித்துப் பார்த்தான். அருமையான, குறைகளே இல்லாத, முழுவதுமாய் சிந்திக்கப்பட்ட, வெல்ல முடியும் திட்டமாக அவனுக்கும் பட்டது. திருப்தியுடன் அவன் சொன்னான். “நமக்கு வெற்றி நிச்சயம் தான் தலைவரே. சாலேர் கோட்டைக்கு நாளையே புறப்படுவோம்”

பகதூர்கானும், தில்லர்கானும் இரு படைகளுடன் மறுநாளே சாலேர் கோட்டையை நோக்கிப் புறப்பட்டன.

(தொடரும்)
என்.கணேசன்


2 comments:

  1. Their plan seems to be perfect. How Sivaji is going to handle that? I am eager to know and waiting for next Monday.

    ReplyDelete
  2. சிவாஜிக்கு இணையான திட்டம் தீட்டுகிறார்களே? சிவாஜி இதற்கு எப்படி பதிலடி கொடுப்பான்??

    ReplyDelete