சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 3, 2020

சத்ரபதி 136



சிவாஜி அறிந்த வரை அப்பகுதியில் அவர்களை வழிமறித்துப் போர் புரியும் படியான படைகள் எதுவுமில்லை. அதனால் வீரன் ஓடி வந்து அப்படித் தகவல் தெரிவித்ததும் அவன் திகைத்துக் கேட்டான். “எந்தப் படை? யார் தலைமையில்?”

”அரசே மாஹர் பகுதியின் தலைவி ராய் பஹின் தலைமையில் சிறுபடை ஒன்று போராடுகிறது”

மாஹர் பகுதி முகலாயர் வசம் இருக்கும் ஒரு வளமில்லாத சிறுபகுதி. அதன் தலைவன் உதா ராம் என்பவன் சில மாதங்களுக்கு முன் பீஜாப்பூர் சுல்தானின் கீழ் இருந்த இன்னொரு சிறுபகுதியின் வீரர்களுடன் நடந்த போரில் உயிரை விட்டான். அவன் மனைவி இறந்த கணவனுக்குப் பதிலாகப் போர் புரிந்து அந்தப் போரில் வெற்றி அடைய ஔரங்கசீப் அவளுடைய வீரத்தை மெச்சிப் பரிசுகள் அளித்ததோடு ராய் பஹின் என்ற பட்டத்தையும் தந்தான். அந்தப் பரிசுகளிலும், பட்டத்திலும் மனம் மகிழ்ந்து போன ராய் பஹின் முகலாயச் சக்கரவர்த்திக்குத் தன் விசுவாசத்தைக் காட்டக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிவாஜியின் படையை எதிர்த்துப் போரிடுகிறாள்.

ராய் பஹின் ஒரு வீர மராட்டியப் பெண்மணி. சிவாஜியின் படையை வெல்லும் அளவு அவள் படைபலம் போதாது என்பதால் அவள் இப்போது காட்டும் வீரம் பைத்தியக்காரத்தனமானது என்பதை சிவாஜி அறிவான். சிவாஜி அவசரமில்லாமல் முன்னேறினான். அவன் செல்வதற்குள் அவன் படைகள் ராய் பஹினை வென்றிருந்தன. அவளைக் கைது செய்து வைத்திருந்தார்கள். ராய் பஹின் கண்களைத் தாழ்த்தியபடி நின்றிருந்தாள்.

சிவாஜி ஒன்றும் பேசாமல் ஒரு வெள்ளித்தட்டில் பட்டாடைகளும், சில ஆபரணங்களும் தந்து அவள் கையில் கொடுத்து “இது உன் வீரத்தை மெச்சி உன் சகோதரன் தரும் பரிசு. பெற்றுக் கொண்டு போய்வா அம்மணி” என்று சொன்னான்.

ராய் பஹின் அவனை வியப்புடன் பார்த்தாள். அவன் முகத்தில் தோற்றவள் என்ற ஏளனமில்லை. எதிர்த்தவள் என்ற வெறுப்பில்லை. அவன் முகத்தில் சிறு புன்னகை மட்டுமே அரும்பி இருந்தது. சிவாஜி அவளையும் அவளுடைய சிறு படையையும் அவள் பகுதிக்கே திருப்பி அனுப்பி விட்டு ராஜ்கட் நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.


ரங்கசீப் சிவாஜியின் சூரத் கொள்ளையையும், நாசிக் அருகே முகலாயப் பெரும்படை தோற்கடிக்கப்பட்டதையும் கேள்விப்பட்ட போது சில நாட்கள் தூக்கத்தைத் தொலைத்தான். தௌத்கான் போன்ற மாவீரனே சிவாஜி மனிதனே அல்ல மாயாவி என்று சொல்லி வியந்ததும் அவனுக்கு வேம்பாய் கசந்தது. ஜஞ்சீரா கோட்டை வசமானதில் கிடைத்த மகிழ்ச்சியை விடப் பலமடங்கு அதிகமாய் சூரத், நாசிக் நிகழ்வுகள் அவனுக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தின. அவனுக்கு சிவாஜியை வெற்றி கொள்ள முடியாத எல்லோர் மீதும் கோபம் வந்தது. வசமாய் வந்து மாட்டிய சிவாஜியைத் தப்பிக்க விட்டதற்காகத் தன்னையும் அவன் கடுமையாக நொந்து கொண்டான்.

சக்கரவர்த்தி உறக்கமில்லாமல் தவிப்பது பற்றி அந்தப்புரத்திலும் அவன் குடும்பத்துப் பெண்கள் பேசிக் கொண்டார்கள். அவன் மகள் ஜெப் உன்னிசா பெரியத்தை ஜஹானாராவிடம் சொன்னாள். “தந்தையின் பிரச்னையே அவர் மனப்போக்கு தான் அத்தை. அவர் வாய் விட்டுச் சிரித்துப் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. அனைவருமே கேட்டு மயங்கும் இசை இவருக்குக் காதில் நாராசமாய் விழுகிறது. எல்லோருடைய மனதையும் நெகிழ வைக்க முடிந்த கவிதைகள் இவருக்குக் கசக்கிறது. இவர் இப்போது மட்டும் தான் இப்படியா? இல்லை சிறுவயதில் இருந்தே இப்படித்தானா?”

ஜஹானாரா உடனடியாக எதையும் சொல்லவில்லை. பழைய சில நினைவுகளில் அவள் தங்கி மீண்டதை உணர்ந்த ஜெப் உன்னிசா பெரியத்தை ஏதோ சொல்ல இருந்தும் சொல்லாமல் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். “அத்தை நீங்கள் எதையோ சொல்லாமல் மறைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது”

ஜஹானாரா மென்மையாகச் சொன்னாள். “உன் தந்தையும் இசையையும், இயற்கையையும் ரசித்த காலம் ஒன்று இருந்தது ஜெப் உன்னிசா. ஆனால் அது மிகக்குறுகிய காலம்….”

ஜெப் உன்னிசா ஆச்சரியத்துடன் கேட்டாள். “உண்மையாகவா சொல்கிறீர்கள்? அது எப்போது? பின் எப்படி இப்படி மாறினார்?”

ஜஹானாரா சுற்றிலும் பார்த்து விட்டுச் சொன்னாள். “அதை எல்லாம் உன்னிடம் சொன்னேன் என்று தெரிந்தால் உன் தந்தை என்னைக் கோபித்துக் கொள்வான். ரோஷனாராவுக்குத் தெரிந்தால் அவள் போய் ஒன்றுக்குப் பத்தாய் அவனிடம் சொல்லிப் பற்ற வைத்து விடுவாள். ஆளை விடு...”

ஜெப் உன்னிசா அப்படி ஆளை விடுகிற ரகமல்ல. அவள் பெரியத்தையை விடவில்லை. “அத்தை எனக்குத் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும். தயவு செய்து சொல்லுங்கள். நான் கண்டிப்பாக நீங்கள் சொன்னதாய் யாரிடமும் சொல்ல மாட்டேன்….” என்று ஜஹானாராவை வற்புறுத்தினாள்.  அவளுடன் இருந்த அவள் தங்கை ஜீனத் உன்னிசாவும் வாய்விட்டுக் கேட்கா விட்டாலும் அத்தையை ஆர்வத்துடன் பார்த்தாள்.

மருமகளின் தொந்தரவு தாங்க முடியாமல், தாங்கள் பேசுவது மற்றவர்கள் காதுகளில் விழுந்து விடாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் ஜஹானாரா தன் சகோதரனின் வாழ்வில் சில காலம் வந்து தங்கிய வசந்தத்தைப் பற்றித் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.


ரங்கசீப் தன் இளமைக்காலத்தில் கூட மதுவிலும், கேளிக்கைகளிலும், ஆடம்பரங்களிலும் அதிக ஈடுபாடு காட்டியவன் அல்ல. உடல் வலிமை, போர், திட்டமிடுதல், குரான் படித்தல் என்றே அவன் வாழ்க்கை அதிகார இலக்கை நோக்கியும், இறைவனைக் குறித்த சிந்தனைகளை நோக்கியுமே நகர்ந்தது. ஆனால் அவன் தாயின் இளைய சகோதரியைச் சந்திக்க தெற்கில் பர்ஹான்பூர் சென்ற போது ஒரு நாள் ஒரு கணத்தில் எல்லாமே மாறிப் போனது.

அந்த நாள் சிற்றன்னையின் அந்தப்புரத்தில் அவன் நுழைந்த போது மிக அழகான குரலில் பாடியபடியே ஒரு மாமரத்தின் கிளைகளை வளைத்து மாங்கனிகளைப் பறித்துக் கொண்டிருந்த ஒரு பேரழகியை ஔரங்கசீப் பார்த்தான். பார்த்த முதல் கணத்திலேயே தன் மனதை அவளிடம் பறி கொடுத்து விட்டான். மயங்கி நின்ற அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்ள நிறைய நேரம் தேவைப்பட்டது. சுதாரித்துக் கொண்டாலும் மனதை அந்தப் பெண்ணிடமிருந்து அவனால் இழுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெண்ணிடமே அவன் இதயம் தங்கி விட்டது. அவள் பெயர் ஹீராபாய். ஜைனாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவளாகையால் சிலர் அவளை  ஜைனாபதி என்றும் அழைத்தார்கள்.

சிற்றன்னையைப் பார்த்துப் பேசி விட்டு உடனே கிளம்புவதென்று பர்ஹான்பூர் சென்றிருந்த ஔரங்கசீப் வாழ்க்கையில் முதல் முறையாக ஹீராபாய் என்ற அந்தப் பெண்ணுக்காக, தான் முடிவு செய்திருந்ததை மாற்றிக் கொண்டு, அங்கேயே தங்கினான். அவளுடனே இருந்தான். எல்லாவற்றையும் மறந்து அவளுடன் பொழுதைக் கழித்தான். அவள் இசையிலும், அவள் அருகாமையிலும் காலம் மறந்து திளைத்தான்.

மதுவை என்றுமே சுவைக்காத அவனை ஹீராபாய் ஒருநாள் மது குடிக்க வற்புறுத்தினாள். அவள் சொன்னது எதையும் மறுக்க முடியாத அவன் மது குடிக்கவும் தயாரான போது அவள் தடுத்து அந்த மதுக் கோப்பையைப் பிடுங்கித் தூக்கி எறிந்தாள். “உங்களுக்கு என் மேல் உள்ள அன்பைச் சோதித்துப் பார்ப்பதற்காகத் தான் அப்படிக் கேட்டுக் கொண்டேன். மதுவென்ற அரக்கன் உங்களுக்குள் செல்ல வேண்டாம்” என்றாள்.

இசையில் மட்டுமல்லாமல் ஹீராபாய் நாட்டியத்திலும் மிகச் சிறந்து விளங்கினாள். அவளைச் சந்திப்பதற்கு முன்பு என்றுமே இசையையும், நாட்டியத்தையும் ரசித்திருக்காத ஔரங்கசீப் இரண்டையும் காலம் மறந்து ரசித்து மகிழ்ந்தான்.

திடீரென்று ஒருநாள் ஹீராபாய் உடல்நலக் குறைவால் இறந்து போனாள்.  ஔரங்கசீப்பின் உலகம் அந்தக் கணம் இருண்டு போனது. அவன் இதயம் ரணமாகி வேதனை கொடுத்து மெல்ல மெல்ல மரத்துப் போனது. அன்றிலிருந்து அவனுக்கு இசை பிடிக்கவில்லை. நாட்டியம் பிடிக்கவில்லை. வாழ்க்கையின் மென்மையான உன்னதங்கள் எதுவுமே பிடிக்கவில்லை. அவன் வாழ்க்கையில் வசந்தம் மின்னலாகி வந்தது போலவே ஒளிவெள்ளமாய் வாழ்க்கையை மிகக் குறுகிய காலம் பிரகாசிக்க வைத்து, வந்த வேகத்திலேயே மறைந்தும் போனது.

அவளை மறக்க ஔரங்கசீப் நாள் கணக்கில் வேட்டையாடப் போனான். காலப் போக்கில் அவன் அவள் நினைவுகளில் இருந்து மீண்டு வந்த போதிலும் அவன் வாழ்க்கையின் இனிமைகள் அனைத்தும் நிரந்தரமாய் தொலைந்திருந்தன.

ஜஹானாரா சொல்லி முடித்த போது ஜெப் உன்னிசாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.   

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. First time Aurangazeb's other side is shown beautifully. Perfect writing style which gives justice to each and every character. We are proud of you sir!

    ReplyDelete
  2. மதுவென்ற அரக்கன்
    Aurangazeb

    மதுவன்ற அரக்கன்
    இரண்டும் சரிதான்

    ReplyDelete
  3. ராய் பஹினை சிவாஜி நான் நினைத்தது போல தண்டிக்கவில்லை....

    ஔரங்கசீப்பின் வசந்தகாலம் அருமை...

    ReplyDelete