சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 23, 2020

இல்லுமினாட்டி 59



ர்ச்சிலிருந்து சிறிது தூரத்திலேயே காரை நிறுத்தி விட்டு இல்லுமினாட்டியின் உளவுத் துறை ஆட்கள் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டே சத்தமில்லாமல் சர்ச்சை நெருங்கினார்கள். அவர்களைப் பொருத்த வரை ஒவ்வொரு இடத்திற்குப் போகும் முன்னும் அங்கே எதிரிகள் இருக்கக்கூடும் என்ற முழு நம்பிக்கையுடனேயே செல்வார்கள். வெளியேயிருந்து ஒரு புகைப்படம் இளையவன் எடுத்துக் கொண்டான். பின் இருவரும் அமைதியாக சர்ச்சுக்குள் நுழைந்தார்கள். சர்ச்சுக்குள் யாரும் இல்லை. ஆனாலும் சர்ச்சுக்குள் ஒரு முறை வலம் வந்தார்கள்.

சர்ச்சில் குப்பையும், தூசியும் மண்டியிருந்த போதிலும் ஒரு மூலையில் மட்டும் தரை சுத்தமாக இருந்தது. இருவரில் மூத்தவர் சொன்னார். ‘இந்த மூலையில் மட்டும் குப்பையும் தூசியும் இல்லை, கவனித்தாயா?”

இளையவன் கவனித்ததாகத் தலையசைத்தான்.  சர்ச்சின் ஒரு மூலையில் இருந்த கழிவறை சுத்தமாக இருந்தது. அவன் அந்த இடத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான். “ஒருவேளை அவர்கள் இங்கே சில நாட்கள் தங்கி இருந்திருக்கக்கூடும். பிறகு இடம் மாறியிருக்கக்கூடும்”

அந்தச் சர்ச்சில் ஏதாவது மறைவிடம் இருக்கிறதா என்று இருவரும் சந்தேகப்பட்டு தேடிப் பார்த்தார்கள். இல்லை... மூத்தவர் சொன்னார். ”.எதற்கும் வெளியேயும் பார்த்து விடுவது நல்லது. அந்தப் பக்கம் ஒரு பார்க் பார்த்த மாதிரி ஞாபகம்”

வெளியே பார்க்கிலும் போய்ப் பார்த்தார்கள். அங்கே யாரும் இல்லை. அங்கே ஆட்கள் சமீபத்தில் இருந்ததற்கான அறிகுறியும் இல்லை.

பார்க்கையும் இளையவன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். மறுபடியும் சர்ச்சுக்குள் போனார்கள். இளையவன் சொன்னான். “யாராவது பிச்சைக்காரர்கள் கூட இங்கே தங்கிப் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது”

மூத்தவர் தலையசைத்தார். மறுபடிச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.


பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை முதலில் கவனிப்பவள் தாய் தான். பத்மாவதி உதய் கண்ணாடி முன் அதிக நேரம் கழிப்பதையும், உறக்கம் வராமல் தவிப்பதையும் கவனித்த அவள் மகனிடம் நேரடியாகவே கேட்டாள். “என்னடா ஆளே ஒரு தினுசா இருக்கே? என்ன ஆச்சு?”

’ஆஹா.... கிழவி கண்கள் கூர்மை தான்’ என்று உதய் மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சொன்னான். “ஒரு தினுசும் இல்லை. எப்பவும் மாதிரி தான் இருக்கேன்”

“எப்பவும் இப்படிக் கண்ணாடி முன்னாடி இவ்வளவு நேரம் நின்னதில்லையேடா” என்று பத்மாவதி கேட்டாள்.

“அப்படில்லாம் இல்லை” என்று சொன்ன உதய் அவசர அவசரமாகக் கண்ணாடி முன்னாலிருந்து நகர்ந்தான். ஆனால் பத்மாவதி மகனை விடுவதாயில்லை. “என்னடா காதலா?” என்று வெளிப்படையாகவே கேட்டாள்.

“சும்மா கற்பனைக் குதிரையை பறக்க விடாதே. உன் சின்னப் பையன் கூட காதலிக்கிறான். அவன் கண்ணாடி முன்னாடியா நிற்கிறான்?”

“அவன் எல்லாத்துலயுமே ஒரு விதிவிலக்கு. ஏதோ அந்தப் பொண்ணு ஹரிணியானதால அவனைக் காதலிக்குது. வேற யாராயிருந்தாலும் அவன் நடந்துக்கறதுக்கு சரி தான் போடான்னு போயிடுவா. அவனை விடு. உன்னைப் பத்திச் சொல்லு.... நான் ஜாதகக்கட்டை எடுத்துகிட்டு அலையறதை நிறுத்திடவா?”

“அவசரப்படாதே கிழவி. அப்படி ஏதாவது இருந்தால் நானே உன் கிட்ட சொல்றேன்” என்று உதய் சொன்னான். மகனைக் கூர்மையாக ஒரு முறை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடம் சின்ன மகன் அறையில் இருந்தாள். க்ரிஷ் தீவிரமாக எதையோ கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தாள். மகன் அருகே அமர்ந்து ஒரு டவலை எடுத்துக் கம்ப்யூட்டரை மூடினாள்.

க்ரிஷ் எரிச்சலுடன் “ஏம்மா இப்படி எல்லாம் பண்றே? என்று கேட்டான்.

“சொந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாமல் உலகத்தில் என்னவெல்லாம் நடக்குதுன்னு என்னடா ஆராய்ச்சி?”

“இங்கே என்ன நடக்குது சொல்லு தெரிஞ்சுக்கறேன்”

“உங்கண்ணன் யாரையோ காதலிக்கிற மாதிரி இருக்கு. ஆனால் கேட்டால் சரியா சொல்ல மாட்டேன்கிறான். உன் கிட்ட தான் எதையும் மறைக்காமல் சொல்வானே. ஏதாவது சொன்னானாடா?”

“ஒன்னும் சொல்லலையே”

“நீ சதா எதாவது செய்துகிட்டே இருந்தால் உன் கிட்ட எவன்டா வந்து எதாவது சொல்வான்? குடும்பத்துக்குன்னு எதாவது நேரம் ஒதுக்குடா. அப்புறம் உலகத்தை நல்லதாக்கலாம்….”

“அவனுக்கே ஏதாவது சந்தேகம் இருக்கும்மா. அதனால தான் ஒன்னும் சொல்லலை. கொஞ்சம் பொறு. அவனுக்குத் தீர்மானமா எதாவது தெரிஞ்சுதுன்னா அவன் கண்டிப்பாய் சொல்வான்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் கிட்ட பேசித் தெரிஞ்சுகிட்டு என் கிட்ட நீ சொல்லணும். இல்லைன்னா நான் உன்னைப் படிக்க விட மாட்டேன். சொல்லிட்டேன்” என்று கறாராய் சொல்லி விட்டு பத்மாவதி எழுந்தாள்.

தாய் போவதையே பார்த்துக் கொண்டிருந்த க்ரிஷ் மெலிதாகப் புன்னகைத்தான். உலகத்தில் என்ன நடக்கிறது என்ற கவலை அவளுக்கில்லை. அவள் வீட்டில் என்ன நடக்கிறது என்பது மட்டும் தான் அவளுக்குக் கவலை. உதயிடம் ஏதோ மாற்றத்தைக் கவனித்திருப்பதால் தான் இப்படிச் சொல்கிறாள். யாரந்தப் பெண்ணாக இருக்கும் என்று தனக்குள் அவன் கேட்டுக் கொண்டான்.

அவள் சொன்னது போல அவன் இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதை நிறுத்தி சில காலமாகிறது.  இல்லுமினாட்டியில் நடந்து கொண்டிருந்த பரபரப்பு நிகழ்வுகளின் மத்தியில் வேறெதற்கும் கவனம் தர அவனால் முடியவில்லை.

அக்‌ஷய் வருவதாக ஒப்புக் கொண்டு தான் திரும்பி வரும் வரை அவன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு இல்லுமினாட்டி முழுப் பொறுப்பு  எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தான். முதலிலேயே அவர்கள் அவன் சொல்லாமலேயே அந்தக் கோரிக்கையை எதிர்பார்த்து அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்கள். அது நியாயமான கோரிக்கை என்று எர்னெஸ்டோவும் சொல்லி இருந்தார். அதனால் எல்லாம் வேகமாக நடக்க ஆரம்பித்தன. அக்‌ஷய் ஜெர்மனி செல்ல விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தக் கட்டத்தில்  மனோகரும் சிறையில் இருந்து தப்பித்தது பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. செந்தில்நாதன் மிகவும் சுறுசுறுப்பாகி விட்டார்….


செந்தில்நாதன் ஒரு தேக்க நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு மனோகரின் சிறையிலிருந்து தப்பும் நிகழ்வு ஒரு நல்ல காரணமாகி விட்டது. அவனை ரகசியக் காமிரா வழியாக சிறையில் கண்காணித்துக் கொண்டே வந்த அவர்கள் அவனாக விஸ்வத்தைக் காட்டிக் கொடுக்கும் வாய்ப்போ, அவனுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லும் வாய்ப்போ இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதனால் அடுத்த காயை நகர்த்தும் விதமாக ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரியை ஒரு கைதியாக அவன் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.  மெல்ல மெல்ல ராஜேஷ் மனோகருக்கு நெருக்கமானான். ஆனாலும் கூட மனோகர் ராஜேஷிடம் எதையும் சொல்லி விடவில்லை. விஸ்வத்தை அவன் ஒரு முறை உணர்ந்தது போலிருந்தது. ஆனால் பின் அதுவும் ஒரு நிச்சயமில்லாத நிலையாக அவர்கள் உணர்ந்தார்கள்.

பின் ராஜேஷ் மெல்ல தப்பிக்கும் ஆசையை மனோகருக்குக் காட்டினான். அவனும் ஒரு கைதி, அவனுக்கு எல்லா நிலையிலும் வேண்டிய ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்த பின் மனோகர் தப்பிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். அவன் ஆஸ்பத்திரியில் சேர்ந்த பிறகு அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து அவன் உடலில் ஒரு ‘சிப்’ உள்ளே வைத்து விட்டார்கள். அவன் எங்கே போனாலும் அந்தச் சிப் மூலம் அவன் இருப்பிடத்தை அவர்கள் கம்ப்யூட்டரில் அறிய முடியும், கண்காணிக்க முடியும். அவரும் ராஜேஷும் அவன் இயக்கத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள்…

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. I want that Krish know about Sindhu quickly so that he can warn Uday. Good move from Senthilnathan. Fast phase started.

    ReplyDelete
  2. ஒன்றிற்கும் மேற்பட்ட திருப்பங்களை உள்ளடக்கியதாக இந்தவார பதிவு உள்ளது. சிப் மூலமாக மனோகரனை கண்காணிப்பது போன்றவை துப்பறியும் நாவலில் வருவது போல் உள்ளது. அருமை

    ReplyDelete
  3. ராஜேஷ் வந்தது ... செந்தில்நாதன் திட்டம் என்று சந்தேகம் எனக்கு ஏற்கனவே இருந்தது.... ஆனால் சிப் வைத்து கண்காணிப்பது ...எதிர்பார்க்காத ஒன்று...

    ReplyDelete
  4. வாசுகிJuly 24, 2020 at 5:09 AM

    விஸ்வத்தின் ஆளாக சிந்து வருகிறாளே என யோசிக்கும் போது, மனோகரின் உடலில் சிப் வைத்து அனுப்புவது நல்ல திருப்பம். கதை இன்னும் த்ரில்லிங்!

    ReplyDelete
  5. நல்ல திரில்லிங்காக கதை நகர்கிறது......
    அக்ஷய் ஜெர்மனி கிளம்பியாச்சு.....
    பத்மாவதி -உதய், பத்மாவதி -க்ரிஷ் convos புன்னைகையை வரவழைக்கிறது

    ReplyDelete