சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 9, 2020

இல்லுமினட்டி 57


ல்லுமினாட்டியின் சகவாசமே வேண்டாம்என்று அக்ஷயிடன் அவன் சகோதரன் ஆனந்த் சொல்லி இருந்தான். இல்லுமினாட்டியின் சகவாசம் வைத்துக் கொள்வதில் அக்ஷய்க்கும் விருப்பம் இருக்கவில்லை. இல்லுமினாட்டி பற்றி இதுவரை அவன் கேள்விப்பட்டது எதுவுமே நல்லதாக  இருக்கவில்லை. அதனால் சுருக்கமாகமுடியாது, மன்னித்து விடுங்கள்என்று சொல்லி விலகி விடுவது தான் ஆரம்பத்தில் அக்‌ஷய்க்கு எளிமையான வழியாகத் தெரிந்தது. ஆனால் ஆழமாக யோசிக்க யோசிக்க அந்த நிலைப்பாட்டிலேயே அவனால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. அந்தச் சக்தி வாய்ந்த இல்லுமினாட்டியை விஸ்வம் போன்ற ஒரு மனிதன் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்பது இரட்டிப்பு ஆபத்தாக அவனுக்குத் தோன்றியது. வேற்றுக்கிரகவாசி உலகத்தின் அழிவு பற்றிச் சொன்னதையும், விஸ்வம் பற்றி க்ரிஷ் சொன்னதையும் அக்ஷய் யோசித்துப் பார்த்தான். வேற்றுக்கிரகவாசி சொன்னதில் பரிபூரண உண்மை மட்டுமே தெரிந்தது. விஸ்வம் என்ற மனிதன் வென்றால் எதிர்கால உலகம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதும் நிச்சயம் தான். இப்படிப்பட்ட ஒரு மனிதன் மனித ஆளுமையின் உச்சம், சக்தியின் அதி உச்சம். அவன் அழிக்கக் கிளம்பினால், அவனைத் தடுத்து நிறுத்த மற்றவர்கள் தயங்கினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தாலே பகீரென்றது.

நன்மை என்றுமே தானாக ஜெயிக்காது என்பது அவன் அனுபவமாக இருந்திருக்கிறது. அதற்காக மனிதர்கள் போராட வேண்டும். மனிதர்களுக்கும் முடியாத போது தெய்வம் அவதாரமாவது எடுத்து வர வேண்டும். அப்படித் தான் பெருந்தீமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எங்கேயோ எதுவோ நடக்கிறது, எனக்கென்ன என்று யாரும் இருந்து விட முடியாது. அடுத்தவர்களைத் தீண்டிய தீமை நம்மையும் தாக்காமல் விடாது. தீமையின் இயல்பே அது தான்.

அவன் வளர்ப்புத் தந்தை மும்பையில் ஒரு தாதாவாக இருந்தவர். அவர் பெயரைச் சொன்னால் பலரும் பயந்து நடுங்கினார்கள். ஆனால் அக்ஷய்க்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை அறிந்து அவனுக்காக அவர் திருந்தி வாழ நினைத்த போது அதை அவருடன் இருந்தவர்கள் சகிக்கவில்லை. அவர் திருந்த முயன்ற போது தான் கொல்லப்பட்டார். அவர் மட்டுமல்ல, அவன் வளர்ப்புத் தாயும் சேர்ந்து இறந்து போனாள். நினைத்துப் பார்த்த போது அக்ஷய்க்கு இப்போதும் வலித்தது.

அதிகார உச்சத்தில் இருக்கும் இல்லுமினாட்டியும் அதிசயமாக திருந்தப் பார்ப்பது போல் தான் இருக்கிறது. ஆரகிள் சொன்ன அழிவுகாலம் என்பதால் தான் அந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது மட்டுமில்லா விட்டால் அவர்கள் கண்டிப்பாகக் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். க்ரிஷ் சொல்வதை எல்லாம் பார்த்தால் தன் சக்திகளை விஸ்வம் திரும்பப் பெற்றால் இல்லுமினாட்டியின் தலைவரைத் தீர்த்துக்கட்டுவது அவனுக்குப் பெரிய விஷயமல்ல.  சில வினாடிகள் போதும் அவனுக்கு. நன்மை ஜெயிக்க அக்ஷயால் உதவ முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அவன் ஆழ்மனதிலும் அந்த நம்பிக்கை இருக்கிறது. அவன் இது நாள் வரை நன்மையின் பக்கமே இருந்திருக்கிறான். இப்போது அவன் விலகி நிற்பதாக முடிவெடுத்தால் அது ஒரு விதத்தில் தீமைக்கே உதவுவதாக இருக்கும். தானுண்டு தன் அறிவுபூர்வமான கல்வி உண்டு என்று வாழ்ந்த க்ரிஷ் என்ற இளைஞன் இதில் அழிவுக்கு வாய்ப்பு அதிகம் என்று அறிந்த பின் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து உள்ளே வந்திருக்கிற போது இது நாள் வரை நன்மையின் பக்கமே இருந்த அவன் விலகி நிற்பது நியாயமல்ல என்று மனசாட்சி உரக்கச் சொன்னது.


இந்த உலகம் க்ரிஷுடையதோ, இல்லுமினாட்டியினுடையதோ, விஸ்வத்துடையதோ மட்டும் அல்ல. அழிவு வந்தால் அது அவர்களை மட்டும் பாதித்து நின்றுவிடாது. இந்த உலகம் அக்ஷயுடையதும், அவன் மனைவி பிள்ளைகளுடையதும் தான்... அக்ஷய் தீவிரமாக பல விதங்களில் யோசித்து முடிவில் க்ரிஷுக்குப் போன் செய்து வரத் தயார் என்றும்,  அதற்கான நிபந்தனைகளையும் சொன்னான்.


ன்றிரவெல்லாம்  மனோகர் உறங்கவில்லை. மறுநாள் தப்பித்துப் போகும் ஏற்பாட்டில் ஏதாவது எதிர்பார்க்காத பிரச்சினை வந்து விடுமோ என்று அவன் பயந்தான். அவன் புரண்டு புரண்டு படுப்பதைப் பார்த்து விட்டு ராஜேஷ் சொன்னான். “கவலைப்படாதே. நாளை இன்னேரம் கண்டிப்பாக நீ ஒரு சுதந்திரப்பறவையாக இருப்பாய்”

மனோகர் புன்னகைக்க முயன்றான். முடியவில்லை. ராஜேஷ் அவனிடம் கேட்டான். “உனக்கு ஏதாவது செல்போனோ, சிறிது பணமோ வேண்டி இருந்தாலும் சொல். கூச்சப்படாதே”

“பணம் மட்டும் ஆயிரம் வரையில் இருந்தால் உதவியாக இருக்கும்” என்றான் மனோகர். ராஜேஷிடமிருந்து வாங்கும் செல்போன் ஆபத்தானது. அவன் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கவும் செய்யலாம். மனோகர் அந்தப் பிரச்சினைக்கு இடம் தர விரும்பவில்லை.

ராஜேஷ் சொன்னான். “சரி. ஆஸ்பத்திரியில் உன் தலையணைக்கு அடியில் ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருக்கும் கவலைப்படாதே”

மனோகர் நன்றி சொன்னான். கோடிக்கணக்கில் அவன் கையில் விளையாடி இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு ஆயிரம் ரூபாய்க்கு அவன் கையேந்த வேண்டியிருக்கிறது என்று மனம் புலம்பியது.

மறுநாள் மிக மெல்லமாக விடிந்தது.  மதியம் மூன்றரை மணி வரை காலம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. மூன்றரை ஆனதும் ராஜேஷ் அவனைப் பார்த்துத் தலையசைத்தான். மனோகர் கடுமையான வயிற்று வலியில் துடிப்பது போல் நடிக்க ஆரம்பித்தான். ராஜேஷ் சத்தம் போட்டு அழைக்க ஒரு காவலாளி அலட்டாத நிதானத்துடன் வந்தான். “ஏன் கத்துகிறாய்?”

“இவன் வயிற்று வலியால் துடிக்கிறான்...” என்று பதற்றத்துடன் சொன்னபடியே ராஜேஷ் மனோகரைக் காண்பித்தான்.

“வயிற்று வலி வருகிற அளவு இவன் வித்தியாசமாய் எதுவும் சாப்பிடவில்லையே. நடிக்கிறானோ” என்று அந்தக் காவலாளி கேட்டான்.

ராஜேஷ் கோபத்துடன் சொன்னான். “நடிப்பதில் இவனுக்கு என்ன லாபம்? போய் டாக்டரைக் கூப்பிடப்பா”

சிறைக்காவலாளி மெல்லத் தான் போனான். டாக்டர் வர கால்மணி நேரம் ஆகியது. வந்து மனோகரைப் பரிசோதித்து விட்டுச் சொன்னார். “ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்வது நல்லது என்று தோன்றுகிறது....”

அடுத்த அரைமணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. மனோகரை அறையில் இருந்து தூக்கிச் செல்லும் போது ராஜேஷ் தைரியம் சொன்னான். “கவலைப்படாதே நண்பா. எல்லாம் சரியாகி விடும்.”

ஆஸ்பத்திரியில் நர்ஸ்கள் ஏதேதோ பரிசோதனைகள் செய்தார்கள். அந்தச் சமயங்களில் எல்லாம் வயிற்று வலி போல் விடாமல் மனோகர் நடித்தபடியே இருந்தான்.   ஆஸ்பத்திரி டாக்டர் வயதானவராக இருந்தார். அவர்  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து சொன்னார். “இங்கே வந்தபிறகும் ஏன் கத்துகிறாய். அமைதியாய் இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்....”

மனோகர் அதன் பின் அடக்கி வாசித்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு மயக்க மருந்து தந்தார்கள். அவன் சுயநினைவை இழந்தான். அவனுக்கு நினைவு திரும்பிய போது ஆஸ்பத்திரியே அமைதியில் மூழ்கிக் கிடந்தது. மனோகர் தொண்டையில் ஒரு கடும் கசப்பை உணர்ந்தான். கண்களைத் திறந்து இருக்கும் இடத்தின் நிலவரத்தைக் கவனிக்க அவனுக்கு ஐந்து நிமிடம் தேவைப்பட்டது. அவன் அருகே யாரும் இல்லை. அவன் ஒரு தனியறையில் இருந்தான். உடல் சிறிது பலவீனமாக இருப்பதாக அவன் உணர்ந்தான். இந்தப் பலவீனம் ஆபத்து என்று எண்ணித் தன்னையே கடிந்து கொண்டான். சுவர்க் கடிகாரத்தில் இரவு மணி 11.55 காட்டியது. மெல்ல தலையணையை உயர்த்திப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும், ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. ராஜேஷ் சொன்னபடியே வைக்க ஏற்பாடு செய்திருக்கிறான். நல்லது.

மனோகர் மெல்ல எழுந்து படுக்கையிலேயே அமர்ந்தான். இப்போதும் அவனை யாரும் வந்து பார்க்கவில்லை. தூரத்தில் நர்ஸ்கள் பேசிச் சிரித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து ,மெல்லக் கதவைத் திறந்து பார்த்தான். வராந்தா கடைசியில் பேசிக் கொண்டிருந்த நர்ஸ்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. இப்போது அவன் ஆஸ்பத்திரி உடையில் தான் இருந்தான். இதைப் போட்டுக் கொண்டு தப்பிப்பது கஷ்டம் என்று தோன்றியது. சுவரில் ஆணியில் அவனுடைய சிறை உடை தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் போட்டுக் கொண்டு போவதும் பிரச்சினை தான்...   

ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே சத்தம் நின்ற பின் அவன் மெல்ல வெளியே வந்தான். இப்போது அந்த நர்ஸ்களில் ஒருத்தி மட்டுமே வராந்தா கோடியில் இருந்தாள். அவள் மேசையில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள். மனோகர் மெல்ல வராந்தாவில் நடந்தான். அவன் இருந்த அறைக்கு மூன்றாவது அறையில் ஒருவன் குறட்டை விட்டுப் படுத்துக் கொண்டிருந்தான். தரையில் படுத்திருந்த ஒரு பெண்மணியும் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பது தெரிந்தது. அந்த ஆளின் உடைகள் சுவற்று ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட அவன் உடையளவு தான் அவையும்.

மனோகர் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தான். படுத்திருந்த இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார்கள். மனோகர் தன் உடைகளைக் கழற்றி அந்த உடைகளைப் போட்டுக் கொண்டான். பின் வெளியே வந்த போதும் வராந்தாவில் ஆட்கள் யாரும். இருக்கவில்லை. மனோகர் சத்தமில்லாமல் நடந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் ஆஸ்பத்திரியிலிருந்து மிடுக்குடன் வெளியேறி விட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்
      

5 comments:

  1. Amaananushyan's thought process is superb and true. Great thoughts well explained.

    ReplyDelete
  2. Sir I like to read your novels. Illuminati n sathirapathi. Let me know the link of the same to read as e book. Thanks sir

    ReplyDelete
    Replies
    1. You can purchase the book from the publisher. Currently ebook or Kindle version not available.

      Delete
  3. நிக்கோலோ டெஸ்லா கருத்துக்கள் மூலம் அக்சய் சம்மதிப்பான் என்று நினைத்தேன்.... அவனே சொந்தமாக சிந்தித்து சம்மதித்து விட்டான்... நன்று...

    ReplyDelete
  4. அக்ஷய் இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை....
    ஏனென்றால் அக்ஷயால் என்றும் சுயநலமாக சிந்திக்க முடியாது.

    மனோகர் தப்பித்ததும் ஆபத்தின் அறிகுறி தான்.

    ReplyDelete