சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 27, 2020

சத்ரபதி 135


முவாசிம் அனுப்பிய தௌத்கான் அறிவுக்கூர்மையும், விரைந்து செயலாற்றும் தன்மையும் படைத்த மாவீரன். அவன் தக்காணத்தின் பாதைகளை மிக நன்றாக அறிந்திருந்தவர்களுடன் உடனே கலந்தாலோசித்தான். அந்தப் பாதைகளை ஒரு கருநீலப்பட்டுத் துணியில் சுண்ணாம்புக் கட்டியால் முதலில் அவர்களை வரைய வைத்து விட்டுக் கேட்டான். “சிவாஜி எந்த வழியில் கொள்ளையடித்த செல்வத்துடன் செல்வான்?”

அவர்கள் சிவாஜி சூரத்திலிருந்து ராஜ்கட்டிற்குப் போகும் பாதையைச் சுட்டிக் காட்டினார்கள்.

தௌத்கான் கேட்டான். “நாம் படையுடன் வருவது சிவாஜிக்கு வேகமாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிய வந்தால் அது எப்போது தெரிய வாய்ப்பு இருக்கிறது?”

அதற்கு இரண்டு பேர் இரண்டு பதில்களைச் சொன்னார்கள். இரண்டுக்கும் சில நாழிகைகள் தான் வித்தியாசம் இருந்தது. தௌத்கான் அந்த இரண்டில் முன்னதான நேரத்தை எடுத்துக் கொண்டான். பின் கேட்டான். “அந்த நேரத்தில் சிவாஜி அங்கிருந்து கிளம்பி அதிகபட்ச வேகத்தில் போகிறான் என்றே வைத்துக் கொள்வோம். நாமும் அதிகபட்ச வேகத்தில் இங்கிருந்து போவோமானால் அவர்களை எங்கே எந்த நேரத்தில் சென்று இடைமறிக்க முடியும்?”

“நாளை மதியம் நாசிக் அருகே நாம் அவர்களை இடைமறிக்க முடியும் தலைவரே”

தௌத்கான் சொன்னான். “நல்லது. அப்படியானால் நாம் அதிகபட்ச வேகத்தில் செல்வோம். சிவாஜி நாசிக் அருகே வருவதற்கு முன் நாம் அங்கே சென்று காத்து இருப்போம்.”

முகலாயப்படை அதிகபட்ச வேகத்தில் நாசிக்கை நோக்கிப் புறப்பட்டது.


தௌத்கான் பெரும்படையுடன் கிளம்பி வருவதை ஒற்றர்கள் மூலமாக அறிந்தவுடன் சூரத்திலிருந்து தன் படையுடனும், கொள்ளை அடித்த செல்வத்துடனும் சிவாஜி உடனே கிளம்பினான். அரை நாள் அவர்கள் பயணித்திருப்பார்கள். அப்போது தௌத்கான் படையுடன் அவர்களை நாசிக் அருகே இடைமறிக்கவும் திட்டமிட்டிருக்கிறான் என்பதையும் சிவாஜியின் ஒற்றர் தலைவன் வந்து தெரிவித்தான்.

சிவாஜி தனது ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “நாம் அவர்கள் வருவதற்குள் நாசிக்கைத் தாண்டி விட வாய்ப்பு இருக்கிறதா?”

ஒற்றர் தலைவன் சொன்னான். “அவர்கள் வந்து கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் நாம் எத்தனை அதிகபட்ச வேகத்தில் போனாலும் அவர்களைத் தவிர்க்க வாய்ப்பு இல்லை அரசே”

சிவாஜி புன்னகைத்தான். “தவிர்க்க முடியா விட்டால் அவர்களைச் சந்திப்போம்”

சிவாஜியின் படைத்தலைவர்களும் புன்னகைத்தார்கள். சிவாஜி எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து அவர்கள் பார்த்ததில்லை. எத்தனை பெரிய சிக்கலான சூழ்நிலை வந்தாலும் கூட அதைச் சந்திக்க அவன் தயாராகவே இருப்பான். முதலில் அவன் மனம் தயாராகும். பின் அவன் திட்டம் தயாராகும். அந்தத் தயார் நிலைக்கு அவன் வராமல் இருந்த சந்தர்ப்பங்களை அவர்கள் சந்தித்ததேயில்லை. அவனுடைய அந்தப் பதறாத அமைதி, சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு அவன் போடும் திட்டம் இரண்டுமே அவர்களிடம் உற்சாகத்தையும், வென்றே தீர்வோம் என்ற மன உறுதியையும் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை.

சிவாஜி வேகமாக ஆலோசித்து விட்டு தன் படையை ஐந்து பிரிவுகளாகப் பிரித்தான். முதல் படை மிகப்பெரியது. இரண்டாவது படை அதில் பாதி. அடுத்த மூன்று படைகள் சரிசமமாகப் பிரிக்கப்ட்ட சிறிய படைகள். முதல் பிரிவுக்கு அவன் தலைமை தாங்கினான். இரண்டாவது பிரிவுக்கு ப்ரதாவ்ராவை தலைமை தாங்கச் சொன்னான். பின் சிவாஜி தன் திட்டத்தை விளக்கினான். அனைவரும் உற்சாகமானார்கள்.

பின் சிறிது நேரம் சிவாஜி பவானி தேவியை மனமாரப் பிரார்த்திக்க ஆரம்பித்தான். எந்த அவசர நிலைமையும் சிவாஜியின் பிரார்த்தனையை நிறுத்தியதில்லை. இறைவனை அணுக நேரமில்லாத அளவுக்கு அவனுக்கு எதுவுமே அதிமுக்கிய அவசரப் பிரச்னை அல்ல. ஆனால் அவன் படைத்தலைவர்கள் இந்த விஷயத்தில் அவனளவு அமைதியான மனதுடன் இருக்க முடிந்ததில்லை. இந்தச் சமயத்தில் அவர்களுக்கு அவன் பிரார்த்தனை நேரம் மிக நீண்டதாய்த் தோன்றியது. உள்ளூர அவர்கள் பதறிக் கொண்டே இருந்த நேரத்தில் சிவாஜி மிக அமைதியாகப் பிரார்த்தித்து விட்டு குதிரை ஏறினான். அப்போது சிவாஜி தேஜஸுடன் தெரிந்தான். அவன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அளவில்லாத சக்தி குடிகொண்டிருப்பதாய் அவர்களுக்குத் தோன்றியது. அந்தச் சக்தி அவர்களுக்கும் பரவியது போல் அவர்கள் உணர்ந்தார்கள். மிக விரைவாக அவர்கள் படைகளும் பறந்தன.

சிவாஜியின் படை நாசிக்கை அடைந்த போது மதியமாகி இருந்தது. தௌத்கானின் முகலாயப்படை ஒரு முச்சந்திப்பில் அவனுக்காக அங்கே காத்திருந்தது. தௌத்கானுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சிவாஜி நெருங்கி வந்து கொண்டிருக்கும் செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது.

தௌத்கான் தன் படையினரிடம் சொன்னான். “நம்முடைய இலக்கு சிவாஜியும், அவன் கொள்ளை அடித்த செல்வமும். இரண்டையுமே கைப்பற்ற முடிந்தால் அது நமக்கு முழு வெற்றி. ஒருவேளை சிவாஜி நமக்கு அகப்படாமல் தப்பித்து விட்டால் நாம் அவன் கொள்ளை அடித்தச் செல்வத்தையாவது கைப்பற்ற வேண்டும். இந்த இலக்கு போரிடும் நேரத்தில் உங்கள் மனதில் இருக்க வேண்டும்…..”

சிவாஜி அவர்களை நெருங்கி விட்ட பின் மின்னல் வேகத்தில் இயங்கினான். ஒரு கணம் ஒரு இடத்தில் தெரிந்தான். இன்னொரு கணம் இன்னொரு இடத்தில் தெரிந்தான். அவன் தெரிந்த இடங்களில் எல்லாம் முகலாயப் படைவீரர்களின் சடலங்கள் விழுந்தன. தௌத்கான் மாவீரன் என்றாலும் அவனால் சிவாஜியை நெருங்கவும் முடியவில்லை. “என்ன இவன் மனிதனா, மாயாவியா, அசுரபலத்துடன் அங்குமிங்குமாய் பறக்கிறானே” என்று திகைப்பு தௌத்கானுக்கு மேலிட்டது.

சிவாஜியின் போர் யுக்தி முகலாயர்களை அவர்கள் வந்த பாதையிலேயே பின்னுக்குத் தள்ளுவதாய் இருந்தது. அவர்கள் தானாக பின்னுக்குப் போனவுடன் சிவாஜி மறுபடியும் தன் படையுடன் முன்னேறினான். அதனால் பின்னால் வரும் சிவாஜியின் மற்ற படைகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய பாதை காலியாகக் கிடைத்தது. ப்ரதாப்ராவ் தலைமையில் வந்த இரண்டாவது படை முச்சந்திப்பில் வழியை அடைத்துக் கொண்டு முகலாயர் படை சிவாஜியின் முதல்படையை மீறி ஊடுருவி வந்து விடாதபடி பார்த்துக் கொண்டது. மூன்றாவது படை தங்கள் பாதையில் முன்னேறி வேகமாகச் சென்றது. நாலாவது படையினரிடம் தான் கொள்ளையடித்த செல்வம் இருந்தது. அவர்கள் மூன்றாவது படையைத் தொடர்ந்து செல்ல அவர்களுக்கும் பின்னால் ஐந்தாவது படை சென்றது.  முதலிரண்டு படைகள் முகலாயப்படையைத் தடுத்து மறித்து போராடிக் கொண்டிருக்க கொள்ளை அடித்த செல்வத்துடன் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பாய் சிறு படைகள் தங்கு தடையில்லாமல் செல்ல ஆரம்பித்தன.

தௌத்கான் தொலைவிலிருந்து இந்த ஏற்பாட்டைக் கவனித்துத் திகைத்தான். சிவாஜி களைப்பே இல்லாமல் இரண்டு கைகளிலும் வாள் பிடித்துக் கொண்டு சுழன்று சுழன்று எதிரிகளைத் தாக்கினான். சிவாஜியின் கோர தாண்டவத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் முகலாயப் படை திணறியது. சிவாஜியின் படையினரிடம் இருந்து தப்பித்து அந்தச் செல்வத்தைத் துரத்திச் சென்று கைப்பற்றலாம் என்றாலோ ப்ரதாப்ராவின் படை உறுதியாகத் தடுத்துத் துரத்தியது.   தௌத்கான் சிவாஜியைப் பார்த்து இவன் மனிதனே அல்ல சைத்தானால் ஏவி விடப்பட்ட பயங்கரமான துஷ்டசக்தி என்றே நம்பி பின்வாங்க ஆரம்பித்தான். மாலைக்குள் ஆயிரக்கணக்கான முகலாய வீரர்கள் மடிந்து வீழ்ந்திருக்க அவர்கள் ஓடித் தப்பிக்க ஆரம்பித்தார்கள்.

சிவாஜி அப்போதும் அவர்களை விடுவதாய் இல்லை. துரத்திக் கொண்டு சென்றான். முகலாயப்படை நிறைய குதிரைகள், வாட்கள், கேடயங்கள், மற்ற ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் ஆயுதங்களைக் கூடுதலாகவும் கொண்டு வந்து ஒரு இடத்தில் குவித்து வைத்திருந்தார்கள். அவசியம் வந்தால் அவற்றைப் பயன்படுத்த எண்ணி இருந்தார்கள். அந்தப் பகுதியையும் தாண்டி அவர்கள் ஓடிச் சென்ற பின் சிவாஜி அவர்களைத் துரத்திச் செல்லவில்லை. நின்று அந்த ஆயுதங்களையும், முகலாயர்கள் வழி நெடுக விட்டு ஓடிய தேவையான அனைத்தையும் சேகரித்துக் கொண்டு அவன் படை திரும்பியது.

சிவாஜி வேடிக்கையாக தன் வீரர்களிடம் சொன்னான். “முகலாயர்கள் நல்லவர்கள். சூரத்தில் இதெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இதை எல்லாம் நம்மிடம் சேர்ப்பதற்கென்றே அவர்கள் இங்கு வரை வந்திருக்கிறார்கள் பாவம்..”

வீரர்கள் சிரித்தார்கள். அப்போது ஐந்தாவது படைப்பிரிவிலிருந்த ஒரு வீரன் ஓடி வந்து சொன்னான். “அரசே! முன்னே செல்லும் வழியில் ஒரு படை நம்மை இடைமறித்துப் போராடுகிறது”

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. My admiration to Sivaji Maharaj is growing while reading this novel. Thanks for this great novel sir.

    ReplyDelete
  2. இந்த பகுதி செம்ம ஆக்ஷன் பகுதி.... சிவாஜி எதிரிகளை துவம்சம் செய்யும் விதம் அபாரம்... இறுதியில் வந்த திருப்பம் தான் சந்தோஷத்தை கெடுத்து விட்டது....

    ReplyDelete