சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 16, 2020

இல்லுமினாட்டி 58


னோகருக்கு இப்போதும் எல்லாம் கனவு போலவே இருந்தது. ஆஸ்பத்திரிக்கு வெளியே வீசிய இரவுப் பனிக்காற்று அவனுக்கு மிக இதமாக இருந்தது.   மெல்லத் திரும்பிப் பார்த்தான். யாரும் அவனைத் தேடி ஓடி வரவில்லை. ராஜேஷ் சொன்னது போல காசு வாங்கியவர்கள் விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

அந்தப் பக்கம் வந்த ஆட்டோவை மனோகர் நிறுத்தி முதலில் ஏறிக் கொண்டான். சில மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு இரவு உணவகத்தின் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொன்னான். ஆட்டோக்காரன் அவனைத் திரும்பி ஒரு தரம் பார்த்து விட்டுச் சொன்னான். “முன்னூறு ரூபா ஆகும் சார்

மீட்டர் சார்ஜ் நூற்றி இருபது ரூபாயைத் தாண்டாது. இரவு இரட்டிப்பு வாடகை என்றாலும் 240 தான் ஆகும். முன்னூறு மிக அதிகம். பணத்தைப் பற்றிக் கவலைப்படாத மனோகர் அதற்கும் சரி என்று தலையசைத்தான். ஆட்டோ வேகமெடுத்தது.

மனோகர் ஆட்டோக்காரனிடம் சொன்னான். “மொபைல் எடுத்து வர மறந்து விட்டேன். ஒரு நம்பருக்குக் கால் செய்து பேச வேண்டுமே

ஆட்டோக்காரன் யோசிக்காமல் தன் மொபைல் போனை பின்னால் நீட்டினான். “தேங்க்ஸ்என்று சொல்லி வாங்கிக் கொண்ட மனோகர் தனக்கு மனப்பாடமாக இருந்த ஒரு அலைபேசி எண்ணை அழுத்தினான். ஏழெட்டு முறை அடித்த பிறகு தான் தூக்கக்கலக்கத்துடன் ஒரு குரல் கேட்டது. ”ஹலோ

மனோகர் தன் பெயரை மட்டும் சொல்லி விட்டு கால்மணி நேரத்திற்குள் அந்த இரவு நேர உணவகத்திற்கு வந்து சேரச் சொன்னான். பின் இணைப்பைத் துண்டித்து விட்டு ஆட்டோக்காரனுக்கே அந்த மொபைல் போனைத் திருப்பித் தந்தான்.   

பத்து நிமிடத்தில் ஆட்டோ அந்த இரவு உணவகத்தை அடைந்தது. ஆட்டோக்காரனிடம் முன்னூறு ரூபாயைக் கொடுத்து விட்டு மனோகர் உணவகத்திற்குள் நுழைந்தான். உள்ளே ஆட்கள் அதிகம் இல்லை. மனோகர் கடைசி டேபிளில் அனைவருக்கும் முதுகைக் காட்டியபடி உட்கார்ந்தான். ஆனாலும் அவனுடைய ஆள் வரும் வரை அவனுக்கு என்னேரமும் போலீஸ் வரலாம் என்று உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. இரண்டு நிமிடம் கழித்து அவன் ஆள் வந்தான். குண்டாக வழுக்கைத் தலையுடன் இருந்த அவன் ஆள் வந்து சேர்ந்ததைப் பார்த்தவுடன் மனோகர் மனம் நிம்மதி அடைந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டு வந்த சர்வரிடம் மனோகர் தனக்கு மசால் தோசை ஆர்டர் செய்தான். வந்த நபரும் அதையே தனக்கும் சொன்னான். மனோகர் மெல்லக் கேட்டான். “வெளியே சந்தேகப்படும்படி யாராவது இருக்கிறார்களா?”

அந்த நபர்இல்லைஎன்றான். மனோகர் நிம்மதி அடைந்தான். இருவரும் மசால் தோசை சாப்பிட்டு விட்டு காபியும் குடித்து விட்டுக் கிளம்பினார்கள். வெளியே அந்த நபரின் இன்னோவா கார் நின்றிருந்தது. அந்த நபர் முதலில் மனோகர் ஏறக் கார்க்கதவைத் திறந்து மரியாதையாக நின்றான். மனோகர் ஏறியவுடன் கார்க்கதவைச் சாத்தி விட்டுப் பின் டிரைவர் சீட்டில் ஏறிக் கொண்டான். கார் மிதமான வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது. கார் தூரமாகச் செல்லச் செல்ல மனோகர் நிம்மதியடைய ஆரம்பித்தான். அவன் வெற்றிகரமாகத் தப்பித்து விட்டான்...


சிந்து விஸ்வம் அனுப்பியது தவிரத் தானாகவே க்ரிஷ் மற்றும் ஹரிணி இருவரது கூடுதல் தகவல்களைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தாள். யாரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமோ, அவர்களைப் பற்றிக் கூடுதல் தகவல்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பு என்று அவள் திடமாக நம்புபவள். அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டதில் இரண்டு பேருமே அதிபுத்திசாலிகள் என்பது தெரிந்ததே ஒழிய மற்றபடி பயப்பட எதுவும் அவர்களிடம் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. அவர்கள் அவளைப் போன்ற ஒருத்தி உலகில் இருக்கக்கூடும் என்ற சந்தேகப்படக்கூட முடியாத அளவுக்கு மிக நல்லவர்களாக இருந்ததால் சாதாரண எச்சரிக்கையே போதும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் அவள் தன் கருத்தை விட விஸ்வத்தின் கருத்தை அதிகம் நம்பினாள். அவன் அவளை விடப் பல மடங்கு புத்திசாலி மட்டுமல்ல அவன் காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டான். அதனால் அவர்கள் இருவரிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது தான்...

உதயின் உதவியாளன் இரண்டு தடவை போன் செய்து விட்டான். கேள்விகளை அனுப்பச் சொல்லியிருந்தான். அவளே கொண்டு வந்து கொடுத்தால் நல்லது என்று சொன்னான். உதய் பேட்டிக்கு முன் அவளை இடையில் ஒரு முறை பார்க்க ஆசைப்படுகிறான் என்று தெரிந்தது.  அவனைக் கையாள்வது கஷ்டமாக இருக்காது என்று சிந்து நினைத்துக் கொண்டாள். ஆனால் நடிப்பதற்குக் கூட அவளுக்குக் காதல் கசந்தது. அந்த உணர்வோடு அவளுக்கு தன் தாயை இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாதது தான் காரணமாகத் தோன்றியது. சிறு குழந்தையாக இருந்த அவளைப் பற்றிச் சிறிதும் நினைக்காமல் தன் காதலனுடன் ஓடிப் போன அந்தத் தாயை அவளால் மன்னிக்க முடிந்ததில்லை. அந்த வெறுப்பு தாய் மீது வந்து, அதைத் தாண்டி காதல் மீதும் வந்து நிறைந்திருந்தது. அவள் எத்தனையோ குற்றங்கள் செய்திருக்கிறாள். தேவைப்பட்ட போது தன் அழகால் மனிதர்களை மயக்கியும் இருக்கிறாள். ஆனால் இது வரை எந்த ஆணையும் அவளை அத்து மீறித் தொட அவள் அனுமதித்ததில்லை.   

சிந்து உதய் உதவியாளனுக்குப் போன் செய்து கேள்விகளை முன்கூட்டியே மெயிலில் அனுப்பி வைப்பதாகச் சொன்னாள். பத்திரிக்கைக்குப் புதியவள் ஆனதால் வேலைகள் நிறைய இருப்பதாகச் சொன்னாள். நாளை மறு நாள் பேட்டிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுவதாகவும் சொல்லி கேள்விகளை நேரில் கொண்டு வந்து தர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். அவன் பரவாயில்லை என்று சொன்ன பின் நன்றி தெரிவித்து விட்டுப் போனை வைத்தாள்.

அவள் முன் இருந்த தினசரிப் பத்திரிக்கையை மேலோட்டமாகப் படிக்க ஆரம்பித்த போது மனோகர் என்ற சிறைக்கைதி தப்பிய செய்தி கண்ணில் தட்டுப்பட்டது. அவன் படத்தையும் போட்டிருந்தார்கள். மேலோட்டமாக அந்தச் செய்தியைப் படித்து நகர்வதற்கு முன் ஹரிணி பெயரைப் பார்க்க நேர்ந்தது. மனோகர் ஹரிணியைக் கடத்தியவன் என்ற தகவலையும் படித்த உடனே நிதானமாக முழுச் செய்தியையும் படித்தாள். அவன் தப்பித்ததில் கவனக்குறைவாக இருந்த இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்த செய்தியும் தரப்பட்டிருந்தது. ஹரிணியைப் பற்றி விஸ்வம் அனுப்பியிருந்த தகவல்களில் அந்தக் கடத்தல் பற்றியும் ஒரு வரி இருந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக யார் அந்தக் கடத்தலைச் செய்தார்கள் என்ற விவரம் மட்டும் இருக்கவில்லை. மற்ற எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொல்லியிருந்த விஸ்வம் அந்த விஷயத்தை மட்டும் ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டான். ஒருவேளை அந்தக் கடத்தலுக்கு விஸ்வம் காரணமாக இருக்கக்கூடுமோ? மனோகர் தப்பவும் விஸ்வம் உதவி இருக்கக்கூடுமோ?


ல்லுமினாட்டியின் உளவுத்துறை ஆட்கள் அந்தக் காலி அபார்ட்மெண்டில் விஸ்வமும் அவன் கூட்டாளியும் ஒளிந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் முழுவதுமாகத் தேடினார்கள். இது இன்றைய நாளில் மூன்றாவது அபார்ட்மெண்ட். தேடிய ஆட்கள் அந்த மூன்று அபார்ட்மெண்ட்களிலும் வந்ததற்கான அறிகுறியே இல்லை. அந்த அபார்ட்மெண்டுக்கு உள்ளே ஒரு புகைப்படமும் வெளியே இருந்து ஒரு புகைப்படமும், எடுத்து வைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.

மறுபடி வந்து கார் ஏறியவுடன் இருவரில் இளையவன் மூத்தவனிடம் கேட்டான். “அடுத்தது எங்கே?”

“எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சர்ச் இருக்கிறது. அங்கே வழிபாடு எதுவும் நடப்பதில்லை. அங்கே அவர்கள் ஒளிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அங்கேயும் போய்ப் பார்த்து விடுவோம்...”

“ஏன் அங்கே வழிபாடு நடப்பதில்லை?”

“முன்பே அங்கே பெரிய கூட்டம் வந்ததில்லை. சிறிது காலத்திற்கு முன் அந்தச் சர்ச்சில் யேசுவின் பிரதான சிலை உடைந்து போயிருக்கிறது. அதன் பிறகு எல்லாமே நின்று போயிருக்கிறது...”

சர்ச்சை நோக்கி அவர்கள் கார் செல்ல ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. sema thrilling in all three angles.

    ReplyDelete
  2. செம விறுவிறுப்பு

    ReplyDelete
  3. மனோகர் ஒரு வேளை சிந்துவுடன் கூட்டு சேர்ந்துவிடுவானோ??

    சர்ச்-ல் இருந்து விஸ்வம் எப்படி தப்பிப்பான்...

    ReplyDelete