இல்லுமினாட்டியின் உளவுத்துறை விஸ்வம் குறித்துச் சேர்த்திருக்கும் தகவல்களில்
அதிகம் இருந்தது அவன் இந்தியாவின் ரகசிய ஆன்மீக இயக்கத்தில் சேர்ந்த பிறகானவையே. அதற்கு
முந்தைய அவனுடைய நாடோடி வாழ்க்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்தனவே
தவிர மற்றபடி அவன் ஒரு மறைவு வாழ்க்கையைத் தான் முன்பு வாழ்ந்திருந்தான். அனைத்தையும்
பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படும் இல்லுமினாட்டியின்
குறிப்புகளில் கூட அவன் எங்கேயும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றுக் கொண்டதாகவோ,
அது குறித்தப் பயிற்சிகளில் ஆர்வம் காட்டி இருந்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் தகவல் இல்லாததாலேயே
அவன் கற்றிருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் தன் ஒவ்வொரு சக்தியைப்
பெற்றதையும் ரகசியமாய் தான் செய்திருந்தான். ஒன்றிரண்டு வெளிப்பட்டிருக்கின்றனவே ஒழிய
மற்றதை ரகசியமாகவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றிய பழைய ரகசியங்களை
அவன் காப்பாற்றிக் கொள்வதில் வெற்றி கண்டதற்குக் காரணம் அவன் தனியனாகவே ஒவ்வொரு பயிற்சிகளில்
ஈடுபட்டதும், வேலை முடிந்த பின் பழையவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளாததும்
தான் என்று தோன்றியது. அவன் வாழ்க்கையில் எல்லாம் தனித் தனி அத்தியாயங்கள். ஒன்றுக்கொன்று
எந்த விதத்திலும் தொடர்பு இல்லை…
எர்னெஸ்டோ
இப்போதைய நிகழ்வுகளை க்ரிஷுக்கோ, மற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கோ தெரிவிப்பதற்கு
முன் என்ன நடந்திருக்கலாம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கலாம் என்பது பற்றி தோராயமாகவாவது
ஒரு அபிப்பிராயத்திற்கு வருவது முக்கியம் என்று நினைத்தார். அதற்குத் தேவையானதைச் செய்ய
வேண்டிய பொறுப்பு ஜான் ஸ்மித்திடமே தரப்பட்டது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற ஜான் ஸ்மித்
உடனே திபெத்தியத் தலைநகரான லாசாவுக்குக் கிளம்பினார்.
ஜான் ஸ்மித் லாசாவுக்குச் சென்று சந்தித்த அந்த ஆவிகள் மற்றும்
அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியாளர் சுமார் ஐம்பத்தைந்து வயதை எட்டியவர். ஆனால் அவர்
தோற்றம் எழுபதை எட்டியது போல இருந்தது. அவர் வீடு முழுவதும் பல விசித்திரமான சின்னங்களாலும்,
பழங்காலப் பொருள்களாலும் நிறைந்திருந்தன. ஏதோ ஒரு விசித்திர உலகில் வாழும் பழங்கால
மனிதர் போல அவர் தோன்றினார். வாழ்க்கை முழுவதும் ஆவிகள் அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியிலேயே
கழித்திருந்த அவர் தன் ஆராய்ச்சிகளைக் குறித்து எழுதியிருந்த நூலொன்று சர்வதேசப் புகழ்
பெற்றிருந்தது. எகிப்தியரான அவர் தன் நாற்பது வயது வரை தன் ஆராய்ச்சிகளைத் தாய்நாட்டிலேயே
செய்து வந்தவர். பின் லாசாவுக்குக் குடி பெயர்ந்தவர். திபெத்தில் வெளிநாட்டவர் குடியேறுவது
அவ்வளவு சுலபமான செயல் அல்ல. அவர் விண்ணப்பித்து மூன்று வருடங்கள் காத்திருந்த பின்பு,
அரசியலில் சிறிதும் ஆர்வமில்லாத அந்த ஆராய்ச்சியாளரால் பிரச்சினை எதுவும் வராது என்று
உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் சீனா அவரை அங்கு குடியேற அனுமதித்திருந்தது.
அவரைச்
சந்திக்க அனுமதி கேட்ட போது ஜான் ஸ்மித் அவரைச் சந்திக்கவென்றே லாசா வருவதாகச் சொல்லவில்லை.
நேபாளிற்கு ஒரு வேலையாகச் செல்வதாகவும், அது முடிந்த பின் தனதொரு ஆராய்ச்சி குறித்து
அவரிடம் விவாதிக்க விரும்புவதாகவும் சொல்லித் தான் அனுமதி வாங்கி இருந்தார்.
அந்த
ஆராய்ச்சியாளர் அவரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார். உலகப்புகழ் பெற்ற மூளை விஞ்ஞானியைச்
சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொன்னார். சம்பிரதாயப் பரஸ்பர விசாரிப்புகளின்
முடிவில் ஜான் ஸ்மித்திடம் அவர் கேட்டார். “நீங்கள் எந்த ஆராய்ச்சி பற்றி விவாதிக்க
விருப்பப்படுகிறீர்கள்?”
ஜான்
ஸ்மித் கவனமாகச் சொன்னார். “ஆவிகள், அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்படும் நபர்களின்
மூளைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆவிகள்,
அமானுஷ்ய சக்திகள் எல்லாம் உங்கள் சப்ஜெக்ட் ஆனதால் உங்களிடம் பேசினால் அது உதவியாக
இருக்கும் என்று தோன்றியது….”
ஆராய்ச்சியாளர்
தலையசைத்தார். ஜான் ஸ்மித் மெல்லக் கேட்டார். “முதலாவதாக ஆவிகள் இருப்பதும், அந்த ஆவிகள்
இன்னொருவர் உடலில் நுழைய முடிவதும் உண்மை தானா? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் சில நேரங்களில்
மனிதனுடைய அதீத மனநிலைகளே கூட ஆவிகளால் ஆட்கொள்ளப்படுவது போன்ற பிரமையை ஒருவருக்கு
ஏற்படுத்தி விட முடியுமல்லவா?”
“உங்கள்
சந்தேகம் நியாயமானது தான். ஆனால் ஆவிகளும், மனிதன் சாதாரணமாக உணர முடியாத சூட்சும சக்திகளும்
இருப்பது நீங்களும் நானும் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை”
ஜான்
ஸ்மித் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினார். அந்த ஆராய்ச்சியாளர் தொடர்ந்தார். “இதைப்
பழங்காலத்திலேயே எகிப்தியர்களும், இந்தியர்களும், திபெத்தியர்களும் உணர்ந்திருந்தார்கள்.
நீங்கள் எப்படி மூளை விஞ்ஞானியோ அப்படியே ஆவிகள், அமானுஷ்ய சக்திகள் விஷயங்களில் இந்த
மூன்று நாடுகளின் யோகிகள் விஞ்ஞானிகளாக இருந்தார்கள்…..”
ஜான்
ஸ்மித் சொன்னார். “அந்த யோகிகள் தங்கள் உடலை விட்டு வெளியேற முடிந்தவர்கள் என்று கூடக்
கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை”
“அதுவும்
உண்மையே. எகிப்திலும், இமாலயத்திலும் பல நூறு வருடங்களாக வாழும் யோகிகள் சிலர் இருக்கிறார்கள்.
சிலர் ஆயிரம் ஆண்டுகளைக்கூடக் கடந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது கேட்பவர்களுக்கு
அதீதக் கற்பனை போல் தோன்றலாம். ஆனால் அது உண்மை தான். சில எகிப்திய யோகிகள் உடல் சமாதிகளில்
இருந்தாலும் ஆவியாக அவர்கள் உலகமெங்கும் செல்லக் கூடியவர்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள்….”
பேச்சு
தான் எதிர்பார்க்கும் திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்ததில் ஜான் ஸ்மித் திருப்தி அடைந்தாலும்
உடனடியாக கேட்க வந்த கேள்விகளுக்குக் குதிக்க விரும்பாமல் “உண்மையாகவா?” என்று கேட்டு
வைத்தார்.
“ஆமாம்.
நான் சிறுவனாக இருந்த போது என் தாத்தா அப்படி ஒரு எகிப்திய யோகியைப் பற்றிச் சொல்லி
அவர் சமாதியையும் எனக்குக் காட்டி இருக்கிறார். மறுநாள் அதை மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டு
நான் போன போது அந்தச் சமாதி அங்கே இல்லை…. ஆச்சரியப்பட்டு தாத்தாவிடம் போய் சொன்னேன்.
அவர் ஆச்சரியப்படவில்லை. யோகிகள் மந்திரங்களால் எதையும் மறைக்க வல்லவர்கள் என்றும்
விருப்பமில்லா விட்டால் தாங்கள் எந்த விதத்திலும் சாதாரண மக்களின் கவனத்திற்கு வர விரும்ப
மாட்டார்கள் என்றும் சொன்னார். ஆனாலும் அவர் வந்தால் கண்டுபிடித்துக் காட்டுவாரோ என்ற
ஆசையில் அவரை அழைத்துக் கொண்டு மறுபடியும் அங்கே போனேன். அவரும் நானும் சுற்றிச் சுற்றி
அதே இடத்திற்கு பல தடவை வந்து பார்த்தும் அந்தச் சமாதி தெரியவில்லை. இந்த ஆவிகள், அமானுஷ்ய
சக்திகள் விஷயத்தில் நான் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததே அந்த நிகழ்ச்சிக்குப் பின் தான்…..”
ஜான்
ஸ்மித் கேட்டார். “அந்த யோகி அந்தச் சமாதியை ஏன் மறைத்து வைக்க வேண்டும்?”
“அவர்
திரும்பவும் அந்த உடலுக்குத் திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் வரை அவருடைய உடல்
எந்தச் சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.
மனிதர்களின் ஆர்வம் சமாதியின் மேல்பகுதியோடு நின்று விடாமல் தோண்டும் அளவுக்கும் போகலாம்
என்ற எச்சரிக்கை உணர்வு தான் அதற்குக் காரணம்”
“அவர்கள்
எப்படி அந்த உடலுக்குத் திரும்புவார்கள்?”
“அதற்குச்
சில மந்திரங்கள், சடங்குகள் இருக்கின்றன. அவர்கள் உடலோடு இருக்கும் யோகிகளை மானசீகமாகத்
தொடர்பு கொண்டு அந்தச் சடங்குகள் செய்ய வைத்து அந்த உடலுக்குத் திரும்புவார்கள். அந்த
சடங்குகளுக்கு முன் தான் அந்த சமாதியிலிருந்து அந்த உடல் வெளியே எடுக்கப்படும்”
“அந்த
யோகிகள் உடலை விட்டுப் போவதும், பல காலம் கழித்துத் திரும்பவும் வருவதும் எதற்காக?”
“யோகிகளுக்கு
சில காரியங்களுக்கு மனித உடல் வேண்டியிருக்கிறது. பல காரியங்களுக்கு மனித உடல் தேவையில்லை.
சில விஷயங்களுக்கு உடல் சிறை தான். ஒரு தொந்தரவு தான். அவர்கள் உலகமெல்லாம் சுற்றிச்
சில வேலைகளை ஆவி நிலையிலேயே செய்து முடித்து விட்டுத் திரும்பும் போது அந்த உடல் அவர்களுக்கு
வேண்டும்”
“ஒருவேளை
அவர்கள் திரும்பி வரும் போது அந்த உடம்பு இல்லா விட்டால்?”
“அப்படி
நடக்க வாய்ப்பே இல்லை. அதைத் தான் அவர்கள் பத்திரப்படுத்தி ரகசியமாய் மறைத்து வைக்கிறார்களே”
“ஒரு
பேச்சுக்குக் கேட்கிறேன். ஒருவேளை அவர்கள் திரும்பி வரும் போது அந்த உடல் அழிந்திருந்தால்
வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்வார்களா?”
ஜான்
ஸ்மித்தின் இந்தக் கேள்விக்கு ஆராய்ச்சியாளரால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
அவர் யோசிக்க ஆரம்பித்தார். இதற்குப் பதில் வந்தால் தான் அடுத்த முக்கியமான கேள்விகளைக்
கேட்க முடியும் என்பதால் ஜான் ஸ்மித் பொறுமையிழந்து அவரைப் பார்த்தார்.
(தொடரும்)
என்.கணேசன்