சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 7, 2019

சத்ரபதி 54


சிலருக்கு வெறுப்பை உமிழப் பெரிய காரணங்கள் தேவையில்லை. சிறிய காரணங்களே போதும். வெறுப்பு அவர்களுக்கு உயிர்மூச்சு போன்றது. வெறுக்க முடியாத போது அவர்களால் வாழவும் முடியாது. அப்சல்கான் அந்த வகையைச் சேர்ந்தவன். ஆஜானுபாகுவான அவன் தன் யானை பலத்தால் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தியவன். அந்த அச்சம் அவனால் எந்தப் பாதகமும் இல்லை என்ற நம்பிக்கையூட்டலுக்குப் பின் தான் பார்ப்பவர்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகும். மற்றவர்களின் அந்த முதல் அச்சமே அவனுக்குப் பெருமையாக இருக்கும். ஆனால் அவனைப் பார்த்த முதல் கணத்திலிருந்தே அச்சப்படாத வெகுசிலரில் ஷாஹாஜியும் ஒருவர்.  அவர் அச்சப்படாதது மட்டுமல்ல அவர் பார்வையில் அலட்சியமும் தெரிவதாக அவன் எப்போதுமே உணர்ந்து வந்தான். அப்படிப்பட்ட ஷாஹாஜி அவனைப் பொருட்படுத்தாமலேயே உயர்ந்து போக முடிவதும், பாதிக்கப்படாமல் இருப்பதும் அவனால் சகிக்க முடியாததாக இருந்தது.  இப்போது அவர் கர்னாடகத்திற்குச் செல்வதிலும் அவன் சில பிரச்னைகளை உணர்ந்ததால் அவர் கதையை நிரந்தரமாக முடித்து விட்டால் என்ன என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. உடனே அவன் மூளை வேகமாக சூழ்ச்சியான திட்டம் ஒன்றைத் தீட்ட ஆரம்பித்தது.


ஷாஹாஜி பெங்களூர் சென்று சேர்ந்த போது கர்னாடக நிலவரம் மோசமாக இருப்பதை உணர்ந்தார். முடிந்த வரை சாம்பாஜி சமாளித்து இருக்கிறான் என்ற போதும் ஷாஹாஜியின் அதிகாரமோ அனுபவமோ அவனிடம் இல்லாததால் அவனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. ஆனால் எந்தெந்த இடங்களில் என்னென்ன நிலவரங்கள் என்பதைத் துல்லியமாக அவன் தகவல்கள் தெரிந்து வைத்திருந்தான். அதைப் பட்டியலிட்டு தந்தையிடம் அவன் தந்தான். ஷாஹாஜி சாம்பாஜியைப் பாராட்டினார்.

சாம்பாஜிக்கு அவர் பாராட்டியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “என்ன இருந்தாலும் நான் தம்பியளவு திறமையானவன் கிடையாது. இல்லையா தந்தையே”

ஷாஹாஜிக்கு உடனடியாக என்ன சொல்வதென்று தெரியவில்லை. சாம்பாஜியும் திறமையானவன் தான். அதில் அவருக்குச் சந்தேகமில்லை. ஆனால் சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சில போதாமைகள் இருக்கலாம். சொல்லப் போனால் சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எல்லோருமே மங்கித் தான் தெரிவார்கள்…..

அதைச் சொல்லாமல் மூத்த மகனிடம் ஷாஹாஜி சொன்னார். “நீ ஒன்றும் குறைந்தவன் அல்ல”

சாம்பாஜிக்குத் தன் தம்பியின் உயர்வு பொறாமையைத் தரவில்லை. மாறாக அவன் பெருமையாகவே உணர்ந்தான். தந்தையிடம் சொன்னான். “ஆனால் சிவாஜிக்கு இணை யாருமேயில்லை தந்தையே. பெரிதாக எதையும் இழக்காமல் உங்களையும் காப்பாற்ற அவனால் முடியும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை….”

ஷாஹாஜி மூத்த மகனிடம் தெரிந்த பெருமையில் பெருமிதம் அடைந்தார். சகோதரன் வளர்ச்சியிலும், திறமையிலும் பொறாமை இல்லாமல் உண்மையாகப் பெருமை கொள்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கோஜி சொன்னான். “சின்ன அண்ணனால் தான் தந்தை சிறைப்படுத்தப்பட்டார். அவரே தந்தையை ஆபத்துக்கு உள்ளாக்கி அவரே விடுவிப்பதில் என்ன பெருமை இருக்கிறது?”

சாம்பாஜி கடைசி சகோதரனிடம் அன்பாகவும்  பொறுமையாகவும் சொன்னான். “ஆபத்தில்லாமல் எந்த வெற்றியையும் யாரும் அடைய முடியாது வெங்கோஜி. ஒவ்வொரு வீரனும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இது. சிவாஜி அந்த ஆபத்தினூடே பயணம் செய்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறான் என்பதும், வந்த ஆபத்துகளைத் தவிர்க்கவும் செய்கிறான் என்பதும் நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்”

வெங்கோஜி பெரிய அண்ணனை மறுத்து எதுவும் பேசவில்லை. பின் ஷாஹாஜியும் சாம்பாஜியும் கர்னாடக நிலைமையைச் சமாளிப்பது பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். சாம்பாஜி சொன்னான். “முதலில் நாம் சரிசெய்ய வேண்டியிருப்பது கனககிரியை. முஸ்தபாகான் கனககிரிக்குத் தானே தலைவன் என்று சொல்ல ஆரம்பித்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன் தந்தையே. அவனை அடக்கா விட்டால் நாம் கனககிரியை இழக்க வேண்டி வரும்.”

ஷாஹாஜிக்கு முஸ்தபாகான் அப்சல்கானின் ஆள் என்பது நன்றாகத் தெரியும். அப்சல்கானின் தூண்டுதலின் பேரிலேயே முஸ்தபாகான் தைரியம் பெற்று இருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார். அப்சல்கானுக்கு அவரை என்றைக்குமே ஆகாது. அதனாலேயே அவன் தூண்டி விட்டிருக்கலாம்…..

ஷாஹாஜி சொன்னார். “உடனே அவனை அடக்க வேண்டும்….. நான் நாளையே கிளம்புகிறேன்.”

“நீங்கள் இப்போது தான் வந்திருக்கிறீர்கள். அதனால் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் தந்தையே. முஸ்தபாகானை அடக்க நான் போதும். நான் படையுடன் போகிறேன்” என்று சாம்பாஜி சொன்னான்.

ஷாஹாஜி சற்றுத் தயங்கி விட்டுச் சொன்னார். “முஸ்தபாகானை அடக்க நீ தாராளமாகப் போதும் என்பது உண்மையே. ஆனால் ஆக்கிரமிப்புக்கு முன் பேசிப் பார்ப்பது நல்லது. போர் எப்போதும் கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும் சாம்பாஜி”

“ஆனால் தூதுவர்களை அனுப்பிப் பயனில்லை தந்தையே. தயார்நிலையில் படையைக் கொண்டு போய் நிறுத்தி விட்டுப் பேசினால் தான் முஸ்தபா கான் போன்ற மூடர்களுக்குத் தங்கள் நிலை விளங்கும். யதார்த்தம் புரியும்….”

சாம்பாஜி சொல்வதும் சரியென்றே ஷாஹாஜிக்குத் தோன்றியது. அவர் சம்மதித்தார். மறுநாளே சாம்பாஜி படையுடன் கனககிரிக்குக் கிளம்பினான்.


னககிரியில் முஸ்தபாகானுக்கு அன்றிரவே அப்சல்கானிடமிருந்து இரண்டாவது மடல் அவசரமாக வந்து சேர்ந்தது.

“முஸ்தபாகான். ஷாஹாஜி கண்டிப்பாக கனககிரியைக் கைப்பற்ற என்னேரமும் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். அவருடன் நீ போரிட்டு கண்டிப்பாக வெல்ல முடியாது.  வஞ்சகமாகத் தான் நீ ஜெயிக்க முடியும். அதனால் அவரிடம் நீ போருக்குப் போகாதே. பேசு. அவரைப் பேச்சு வார்த்தைக்கு அழை. பேசிக் கொண்டிருக்கும் போது அவரைக் கொல்ல ஏற்பாடு செய்…. அது விபத்து போலத் தெரியும்படி பார்த்துக் கொள். காரியம் முடிந்த பின் அது குறித்து சுல்தான் நடவடிக்கை எடுக்காமல் நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன். இந்த மடலைப் படித்தவுடன் எரித்து விடு”

முஸ்தபாகான் அப்சல்கான் சொன்னபடியே படித்து முடித்த பின் அந்த மடலை எரித்துச் சாம்பலாக்கினான்.

அந்த மடல் எரிந்து சாம்பலான இரண்டு மணி நேரத்தில் நடுநிசியில் பெங்களூரிலிருந்து வந்த ஒற்றன் ஒருவன் முஸ்தபாகானிடம் சாம்பாஜி படையோடு நாளை வரப்போவதைத் தெரிவித்தான்.

ஷாஹாஜியை எதிர்பார்த்திருக்கையில் சாம்பாஜி வந்து கொண்டிருப்பது முஸ்தபாகானைச் சிறிது யோசிக்க வைத்தது. ஆனால் அப்சல்கானிடம் தொடர்பு கொள்ளும் அளவுக்கு அவனுக்கு நேரமில்லை என்பதால் சாம்பாஜியையும் தீர்த்துக் கட்டுவதில் தவறில்லை என்று முஸ்தபாகான் நினைத்தான். ஷாஹாஜியைச் சமாளிப்பதை விட சாம்பாஜியைச் சமாளிப்பது சுலபமும் கூட. அப்சல்கான் சொன்னது போல விபத்து போலக் காட்டப்போவதால் பிரச்னை எதுவும் இருக்காது. அவன் வேகமாக யோசித்து  வஞ்சகத் திட்டம் ஒன்றுடன் தயாரானான்.


சாம்பாஜி கனககிரியைக் கச்சிதமாகக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்திருந்தான். பேச்சு வார்த்தையிலேயே அது முடிந்தாலும் சரி, இல்லை போரில் மட்டுமே சாத்தியமானாலும் சரி வெற்றி பெற்றே அவன் தந்தையைச் சந்திக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான். சிவாஜியின் அண்ணன் அதைக் கூடச் செய்து காட்டாவிட்டால் எப்படி?

தம்பியின் நினைவே அவனுக்குள் இருந்த வீரத்தை இரட்டிப்பாக்கியது. வீரமாவது இயல்பாகவே தனக்கு இருப்பதாக சாம்பாஜிக்குத் தோன்றியது. ஆனால் தம்பியின் உணர்வுகளின் ஆழம், தந்திரம், சமயோசிதம் எல்லாம் தனக்குப் போதாது என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் அவன் அளவுக்கு இல்லாவிட்டாலும் போகப் போக அவனும் ஓரளவாவது அதைப் பெற்று விட வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டான்.

அவன் படையுடன் கனககிரியை அடைந்த போது முஸ்தபாகானும். அவனுடைய வீரர்களும்  தீவிரப் போருக்குத் தயாராகவே இருந்தார்கள். அவர்களுடைய பீரங்கியும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் சாம்பாஜி நெருங்கியவுடன் போர் தொடுக்காமல் அவனுக்கு முஸ்தபாகான் ஒரு ஓலை அனுப்பினான். போரை அவன் விரும்பவில்லை என்றும் அவனுக்கு முக்கியமான தகவல் ஒன்றைத் தெரிவிக்க இருப்பதாகவும் அதை அறிந்த பின் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை சாம்பாஜி தீர்மானிக்கும்படியும், அதற்கு முன் அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்றும் அவன் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சாம்பாஜி முஸ்தபாகானை நேரில் சந்தித்து அவன் சொல்வதைக் கேட்க ஒப்புக் கொண்டான். சாம்பாஜி நான்கு பாதுகாவலர்களுடனும், முஸ்தபாகான் நான்கு பாதுகாவலர்களுடனும் கோட்டைக்கு வெளியே சந்தித்துக் கொண்டார்கள்.

முஸ்தபாகானின் சூழ்ச்சியை அறியாமல் அவன் சொல்லப் போகும் முக்கிய விஷயம் என்ன என்பதை அறிய சாம்பாஜி ஆவலாக இருந்தான்.


(தொடரும்)
என்.கணேசன்



4 comments:

  1. Chareacterization of even small characters like Sambhaji is beautifully done. We can understand the feelings of him.

    ReplyDelete
  2. சாம்பாஜிக்கு நேர இருக்கும் ஆபத்தை அவன் எப்படி சமாளிப்பான்? திக் திக் என்கிறதே.

    ReplyDelete
  3. சாம்பாஜியின் நிலை என்னவாகும்...? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. மிகவும் அருமையான நடை_ ஓர் சரித்திர நிகழ்வை கதையின் நிகழ்விடத்திலே நகர்வது போல் உணர்கிறேன் - நன்றிகள் - ர-ராஜன்

    ReplyDelete