சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 3, 2019

இருவேறு உலகம் – 117


விஸ்வத்தை வரவேற்க ம்யூனிக் நகர விமானநிலையத்தில் நவீன்சந்திர ஷா காத்திருந்தான். அவனுக்குத் தன் நண்பன் இல்லுமினாட்டியில் இணையப் போவது பெருமையாக இருந்தது. விஸ்வத்தை ஹோட்டலுக்கு அழைத்துப் போனவன் அவனிடம் அன்று மாலை நடக்கவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் இருபது நிமிடங்களுக்குள் சுய அறிமுகத்தை முடித்துக் கொள்ளச் சொன்னான்.

“இல்லுமினாட்டியில் பெரிய பிரசங்கங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கறப்ப மட்டும் தான் நடக்கும். போட்டி இடறவங்க ஏன் அவங்களைத் தலைவனா தேர்ந்தெடுக்கணும்னு பேசுவாங்க. அவங்களுக்கு எதிரா பேசறவங்களுக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும். ஏன் அவங்கள தேர்ந்தெடுக்கக்கூடாதுன்னு எதிராளிகள் பேசுவாங்க. கடைசில ஓட்டெடுப்பு நடக்கும். மத்த சமயங்கள்ல எல்லாம் இல்லுமினாட்டில  அதிகப் பேச்சை யாரும் ரசிக்கறது இல்லை. இங்கே செயல் தான் முக்கியம். செயல் மூலமா நிரூபிக்கறது தான் வெற்றி. எப்பவுமே என்ன செய்யப் போகிறேன்னு சொல்றதை விட என்ன செய்தேன்னு சொல்றதுக்கு தான் வரவேற்பு அதிகம். அதே மாதிரி இங்கே செண்டிமெண்ட்ஸுக்கும், பலவீனத்துக்கும் மதிப்பில்லை. அதனால நீ உன் சுய அறிமுகத்துல உன் சக்திகளைப் பத்தியும் சாதனைகள் பத்தியும் சொல்லி இல்லுமினாட்டில ஏன் இணைய ஆசைப்படறேன்னும் சொல்லி முடிச்சுடு. நீ உறுப்பினராகறது நிச்சயம். இது சம்பிரதாயம் மட்டும் தான். முதல்லயே உன்னைச் சேர்த்துக்கறதா அவங்க தீர்மானிச்சுட்டாங்க. நீ அனுப்பின பெரிய தொகையும் உன் சக்திகளும் முக்கியமானவங்களை ரொம்பவே கவர்ந்துடுச்சு…..”

விஸ்வம் கேட்டான். “இல்லுமினாட்டில தலைவரைத் தேர்ந்தெடுக்கறது எத்தனை வருஷத்துக்கு ஒரு தடவை?”

“ஒரு தலைவன் தானாக ராஜினாமா செய்தாலோ அல்லது இருக்கற தலைவர் மேல உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனாலோ தான் தேர்தல் நடக்கும். இன்னும் பதினாறு நாள்ல தேர்தல் நடக்க இருக்கு. இப்போதைய தலைவர் எர்னெஸ்டோ வயசாயிட்டதால ராஜினாமா செய்யப் போறார்….”

“இல்லுமினாட்டில தலைவரா நிக்க என்ன தகுதி இருக்கணும்?”

“உறுப்பினரா இருந்தா போதும். இன்னைக்கு நீ உறுப்பினராயிட்டா பதினாறு நாள் கழிச்சு நடக்கற தேர்தல்ல நீ கூட தலைவர் பதவிக்கு போட்டி போடலாம்…..”

விஸ்வத்திற்கு அந்தத் தகவல் பெரும் திருப்தியை அளித்தது.


ணீஷ் ஹரிணி வீட்டுக்குப் போன போது க்ரிஷ் குடும்பமே அங்கிருந்தது அவன் இதயத்தை அமிலத்தில் அழுத்தியது. ‘இப்பவே கல்யாணம் ஆகி, ஒரே குடும்பம் ஆன மாதிரி அல்ல ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டாங்க’. ஹரிணி முகம் மலர நண்பனை வரவேற்றாள். கிரிஜாவுக்கு ஹரிணி கடத்தப்பட்டபின் அவன் வராததில் வருத்தம் இருந்ததால் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. பத்மாவதியும் அன்பாக வரவேற்றாள். க்ரிஷும் உதயும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். உதய் புன்னகைத்தான். க்ரிஷ் “வாடா” என்றான். பின் இருவரும் போய் விட்டார்கள்.

ஹரிணியிடம் கடத்தல் அனுபவம் பற்றி மணீஷ் கவலையோடு கேட்டான். “உன்னை எதுவும் கொடுமைப்படுத்திடலையே?”

“இல்லை. இனியும் அங்கேயே இருந்திருந்தா கொடுமைப் படுத்தியிருப்பாங்களோ என்னவோ. ஆனா பயமுறுத்தி வெச்சிருந்தான். கற்பழிச்சிருப்போம்கிற மாதிரி கூடச் சொன்னான்….”

மணீஷ் முகத்தில் வேதனை தெரிந்தது. அவள் தொடர்ந்து சொன்னாள். ”நான் சொன்னேன் கற்புங்கறது உடம்பு சம்பந்தப்பட்டதில்லை. மனசு சம்பந்தப்பட்டது. என் மனச க்ரிஷ் தவிர வேற எவனுமே தொட முடியாதுடான்னு.”

மணீஷ் வேதனை அதிகமாகியது. இதைக் கேட்டிருந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது….


ம்யூனிக் நகரின் மிகப் பழமையானதும், அழகானதுமான ஒரு கட்டிடத்தில் இல்லுமினாட்டியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. மேடைச் சுவரில் ஒரு பெரிய பிரமிடும் அதன் நடுவே ஒரு கண்ணும் செதுக்குப்பட்டிருந்தது. அந்தக் கண் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு அமானுஷ்ய உணர்வை அங்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மேடையில் பதினோரு முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் மூவர் பெண்கள். நடுநாயகமாக இல்லுமினாட்டியின் தலைவர் எர்னெஸ்டோ அமர்ந்திருந்தார். முதியவரான அவர் முகத்தில் சிரிப்பில்லாதவராகவும் இருந்தார். அமர்ந்திருந்த தோரணை ராஜ தோரணையாக இருந்தது. அவருடைய அதிகாரம் கிட்டத்தட்ட உலக ஜனாதிபதி ஒருவர் இருந்திருந்தால் அவருடைய அதிகாரத்துக்கு மறைமுகமாய் இணையானது என்று நவீன்சந்திர ஷா சொல்லி இருந்தான். விஸ்வம் அந்த இருக்கையில் இருக்க ஆசைப்பட்டான். பதினாறு நாட்களில் தேர்தல் நடக்கும் என்று தெரிந்த கணம் முதல் அவன் எண்ணமெல்லாம் அந்தப் பதவியாக இருந்தது. எல்லாமே அவனுக்குச் சாதகமாக நடப்பது போல் தோன்றியது. விதி அவனுக்கு முடிசூட வழி அமைத்துக் கொடுப்பது போல் இருந்தது. நவீன்சந்திர ஷாவை மூன்று மாதங்கள் கழித்து அவன் சந்தித்திருந்தால் அவன் உறுப்பினராகி இருக்கலாமே ஒழிய தலைவராகும் உடனடி வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது அந்த அனுகூலமும் இருக்கிறது. எல்லாமே கனவில் நடப்பது போல் இருக்கிறது. கனவுகள் நிஜமாகி வருகிறது…

மேடையில் இருப்பவர்கள் தவிர மற்ற செயற்குழு உறுப்பினர்கள் 28 பேர் இருந்தார்கள். விஸ்வத்தை அறிமுகப்படுத்தி நவீன்சந்திர ஷா பேசினான். விதி எப்படி இருவரையும் ஓஷோ தியான மையத்தில் ஒருங்கிணைத்தது என்றும் அவன் மனதில் உள்ளதை உடனடியாகச் சொன்ன விஸ்வம் இன்னொரு சமயம் பேச எழுந்த பேச்சாளரை பேச்சிழக்க வைத்ததையும், தியானம் பற்றிப் பேச எழுந்த ஒரு இளைஞனைக் காதலைப் பற்றியே முழுவதும் பேசி அமர வைத்ததையும் சொன்ன போது எல்லோருமே பிரமித்துப் போய்க் கேட்டார்கள். லண்டனில் இந்த இயக்கத்தின் வேறு இரண்டு உறுப்பினர் எண்ணியதையும் விஸ்வம் சரியாகச் சொன்னதைத் அவன் தெரிவித்து விட்டு இப்படிப்பட்ட சக்தியாளனனை இந்த இயக்கத்தில் அறிமுகப்படுத்துவதற்குப் பெருமைப்படுவதாகச் சொல்லி விஸ்வத்தை அழைத்தான். 

விஸ்வம் அவர்கள் முன் பேச எழுந்தான். மிக அமைதியாக உறுதியாகவும் பேசினான். “அனைவருக்கும் என் வணக்கம். மனிதன் எங்கேயும், எந்த சூழ்நிலையிலும் பிறக்கலாம். ஆனால் அவன் சிந்திக்கத் தெரிந்த பிறகு அங்கேயே அப்படியே தங்கி விடுவது அவமானகரமான விஷயம் என்று நினைப்பவன் நான். இந்தியாவில் சராசரிக்கும் குறைவான சூழலில் பிறந்தவன் நான். சொல்லப் போனால் அந்தச் சூழல் சேறும் சகதியும் தான். ஆனால் என் பார்வையை நான் அங்கே நிறுத்தாமல் ஆகாயத்தில் மின்னிய நட்சத்திரத்தில் வைத்தே வாழ்ந்தேன். என் சக்திகளைப் பற்றி என் நண்பன் சொன்னான். அவை நான் சேகரித்த சக்திகளில் சொற்பமே. எல்லாவற்றையும் காட்சிப் பொருளாக்குவதில் எனக்கு ஆர்வமும் இல்லை, அவசியமும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒவ்வொன்றையும் விலை கொடுத்தே பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு இலக்கை எடுத்துக் கொள்ளும் போதும் நான்  ஒரு நாளுக்கு மூன்று மணிகளுக்கு மேல் தூங்கியதில்லை. விளையாடியதில்லை. வேடிக்கை பார்த்ததில்லை. வீண் பொழுது போக்கியதில்லை. அந்த இலக்கை அடையும் வரை வேறொரு எதிர்மாறான சிந்தனையை எனக்குள் புக நான் அனுமதித்ததில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை நான் நூறு சதவீதம் செய்திருக்கிறேன். இதில் எந்தக் கட்டத்திலும் ஒரு சதவீதம் கூடக் குறைய நான் அனுமதித்ததில்லை.”

“இல்லுமினாட்டி என்ற இந்த மாபெரும் இயக்கமும் ஒரு உறுதியான உயர்ந்த இலக்கையே எடுத்துக் கொண்டு ஆரம்பித்த இயக்கம் என்பதை அறிவேன். பலவீனங்களை அனுமதிக்காத, பலங்களைக் கூட்டிக் கொண்டே செல்கிற இயக்கம் என்பதை அறிவேன். என் இயல்பும் இந்த இயக்கத்தின் இயல்பும் முழுமையாகவே ஒத்துப் போவதால் இதில் இணைய ஆசைப்படுகிறேன். இதற்கு வலிமையும், பெருமையும் சேர்ப்பேன் என்பதை உறுதிகூறுகிறேன். நன்றி,”

இரண்டு நிமிடங்கள் முழு அமைதி அங்கே நிலவியது. அத்தனை பேரையும் அவனுடைய கச்சிதமான பேச்சு வசீகரித்ததாகவே தோன்றியது. ஆனால் ஒருவரும் பேசவில்லை. கடைசியில் தலைவரான எர்னெஸ்டோவின் வலது புறம் அமர்ந்திருந்த வழுக்கைத் தலையர் சொன்னார். “உங்களை உறுப்பினராக ஏற்றுக் கொள்வதில் இல்லுமினாட்டி பெருமை கொள்கிறது நண்பரே,…”

சில சம்பிரதாய ரகசிய உறுதிமொழி எடுத்தல், கையொப்பம் இடுதல், கைகுலுக்கி வாழ்த்து சொல்லல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தன. கடைசியில் வெளியே வந்த போது ஒரு மாபெரும் கனவுக்குச் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முதல் அடி எடுத்து வைத்த உணர்வை விஸ்வம் உணர்ந்தான். ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.

அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து ஒரு போன்கால் வந்தது. ஹரிணி கடத்தி வைக்கப்பட்டிருந்த குடோனின் கம்பெனி முதலாளி. “ஹரிணியை அவர்கள் காப்பாற்றி விட்டனர். மனோகரையும், அவளைக் காவல் காத்த இன்னொரு சகாவையும் காணோம். தொடர்பு கொள்ளவும் முடியவில்லை” என்ற தகவலை பயத்தோடும் வருத்தத்தோடும் சொன்னான். விஸ்வம் தரைக்கு வந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்


8 comments:

  1. Novel is in fast and gripping stage. Now Visvam became more powerful after joing illuminati. What will he do? Will he accept his failure in Harini case? dhik dhik moments.

    ReplyDelete
  2. விஸ்வம் எதிரியாக இருந்தாலும் அவனுடைய சொற்பொழிவு அனைத்தும் உண்மையே....விஸ்வம் கூறியதை பின்பற்றாத காரணத்தினாலே நாம் சறுக்கி விழுகிறோம்....

    இந்தத் தொடரில் ஹீரோவை விட வில்லனே அதிக பாடத்தை நமக்கு கற்றுத்தருகிறான்.

    ReplyDelete
  3. விஸ்வம் தரைக்கு வந்தான்.... மிக நன்று....

    ReplyDelete
  4. விஸ்வம் தரைக்கு வந்தான்......
    அவனுடைய தன்னம்பிக்கைக்கும, கர்வதிற்கும் பலத்த அடி....

    ReplyDelete
  5. உங்கள் நூல்களை மதுரை‌யி‌ல் வாங்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. பதிப்பாளரை 9600123146 எண்ணில் விசாரிக்கவும்!

      Delete