சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 6, 2018

இருவேறு உலகம் 99

மாஸ்டர் ஹரித்வாருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கிருஷ்ணவேணியிடம் கேட்க சென்ற விஷயமே வேறு, கிருஷ்ணவேணி சந்தேகப்பட்ட விஷயமே வேறாக இருந்தது.  மாஸ்டர் கேட்கப்போன நோக்கம் எதிரியின் கைப்பாவையாக தற்போது இருக்கக்கூடிய ஆள் யார் என்று அறிந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கிருஷ்ணவேணியோ கேள்வியின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆன்மிக இயக்கத்தின் கணக்கில் கையாடல் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதிலேயே நின்று விட்டார். விஸ்வம் மேல் மாஸ்டருக்கு இப்போதும் பெருத்த சந்தேகம் வந்து விடவில்லை. அப்படியே ஒரு வேளை கணக்கில் சில்லறைத் தவறுகள் இருந்தாலும் கூட ”அன்னிய சக்தி பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது’ என்ற பிரம்மாண்டப் பிரச்னைக்கு முன் இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனாலும் மேலான ஒருவரிடம் ஆலோசனை கேட்டபின் அந்த ஆலோசனையைப் பின்பற்றாமல் இருப்பது அவருக்கு ஏற்படுத்தும் கௌரவக் குறைவாகத் தோன்றியதால் தான் மாஸ்டர் விஸ்வத்திடம் தெரிவிக்காமலேயே தற்போது ஹரித்வார் போய்க் கொண்டிருக்கிறார்.  எல்லாக்கணக்கும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டுத் திரும்பிய பிறகு மறுபடி உண்மையான பிரச்னையான எதிரி பற்றி யோசிக்க வேண்டும்….

ஹரித்வாரில் விஸ்வம் தங்கியிருந்த வீடு பூட்டி இருந்தது. விஸ்வம் எங்கோ வெளியே போயிருக்க வேண்டும். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் வெளியே செல்லும் போது பூட்டின் சாவியை வெளியே மின்சார மீட்டரை மூடி வைத்திருக்கும் மரக்கட்டைத் தடுப்பின் உள்ளே ஒரு ஓரமாக சாவியை விஸ்வம் வைத்து விட்டுப் போவது வழக்கம். மாஸ்டர் அந்தத் தடுப்பின் உள்ளே வைத்திருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். நேராக விஸ்வம் எப்போதும் அக்கவுண்ட்ஸ் ஃபைல் வைத்திருக்கும் அலமாரியை நோக்கிச் சென்றார். அலமாரியில் அந்த இடத்தில் அக்கவுண்ட்ஸ் ஃபைல் இல்லை. அலமாரியில் இடம் மாறி வைத்திருக்கிறாரா என்றும் மாஸ்டர் பார்த்தார். இல்லை.

அத்தனை உறுதியாக கிருஷ்ணவேணியிடம் சொல்லி சொன்னபடி இப்போது அந்த ஃபைல் அங்கு இல்லாமல் போனது மாஸ்டருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. மாஸ்டர் கம்ப்யூட்டரை ஆன் செய்து விஸ்வம் சொல்லியிருந்த இடத்தில் அக்கவுண்ட்ஸ் ஃபோல்டரைத் தேடினார். அங்கும் அது இல்லை.  மாஸ்டரின் நெற்றி சுருங்கியது. என்ன ஆயிற்று விஸ்வத்துக்கு?

செல்போனை எடுத்து விஸ்வத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார். செல்போன் ஸ்விட்ச்டு ஆஃப் ஆகியிருந்தது. நம்பக் கஷ்டமாய் இருந்தாலும் விஸ்வம் பணத்தில் ஏதாவது கையாடல் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் லேசாக எழ ஆரம்பித்தது. மாஸ்டர் வீட்டுக்குள் ஒரு வலம் வந்தார். வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் பல நாட்கள் ஆனது போல் இருந்தது. எதிரி விஸ்வத்தையும் கடத்தி விட்டானோ என்ற சந்தேகம் மெல்ல எழ ஆரம்பித்தது. அதற்கு வாய்ப்பு இருப்பதாக மனம் சொன்னது. உடனே விஸ்வத்தின் ஆடைகளும், மற்ற உடைமைகளும் இருக்கும் பீரோவைத் திறந்து பார்த்தார். பீரோ காலியாக இருந்தது. விஸ்வத்தை எதிரி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் காற்றில் கரைந்தது. சிறிது யோசித்து விட்டு அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்த மாஸ்டர் தியானத்தில் மூழ்கி விஸ்வத்தின் அலைகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அவரால் விஸ்வத்தின் அலைகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பெரியதொரு தடுப்பரணில் மோதி அவர் அனுப்பிய அலைகள் திரும்பிய உணர்வு ஏற்பட்டது.

மனதினுள் பல உணர்ச்சிகள் போராட வெளியே வந்த மாஸ்டர் அந்த வீட்டின் எதிரில் உள்ள மளிகைக் கடைக்காரனிடம் விசாரித்தார். “இப்பவெல்லாம் அவர் இங்கே வர்றதே அபூர்வம். மாசத்துல ஒரு நாள் இங்கே இருந்தால் அதுவே பெருசு.” என்றான் அந்தக் கடைக்காரன். கடைசியாக எப்போது விஸ்வத்தைப் பார்த்தோம் என்பது கூட அந்தக் கடைக்காரனுக்கு நினைவிருக்கவில்லை. மாஸ்டர் மனதின் ஆழத்தில் சின்னதாய் ஒரு அபாய அறிவிப்பை உணர ஆரம்பித்தார்.

அதற்கு மேல் மாஸ்டர் அதிகம் தாமதிக்காமல் ஹரித்வாரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குப் போனார். அங்கிருந்த மேனேஜரை அவர் மிக நன்றாக அறிவார். அவர் மாஸ்டரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். வந்த காரணத்தைக் கேட்ட அவர் உடனே ஒருவருட வங்கிக்கணக்கை ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்தார். அங்கு கணக்கை  ஆராய ஆரம்பித்த மாஸ்டருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒன்பது மாதங்களில் அதிகமாய் வரவுகள் மட்டும் இருந்தன. அவற்றில் அதிகம் வெளிநாட்டிலிருந்து உறுப்பினர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனுப்பியிருந்த பெருந்தொகைகள். கடந்த மூன்று மாதங்களாக கணக்கில் வேறுபல பரிவர்த்தனைகளும் ஆகியிருந்தன. அவர்கள் ஆன்மிக இயக்கத்தின் பல சொத்துக்கள் விற்கப்பட்டு பணம் வரவாகி அவையெல்லாம் உடனடியாக பல பெயர்களில் இருந்த வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. உள்நாட்டு வெளிநாட்டு ஆன்மிக ஆதரவாளர்கள் அனுப்பியிருந்த கோடிக்கணக்கான பணமும் பெரிய பெரிய தொகைகளாக அதே போல் வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. எல்லாம் போய் கணக்கில் தற்போது ரூ.36123.57 கணக்கில் மீதம் இருந்தது.

மாஸ்டர் சாதாரணமாக எதற்கும் அதிரும் ரகம் அல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அவரைச் சுற்றியுள்ள உலகம் இருண்டு போனது…..

அவர் முகமாற்றத்தில் இருந்தே ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மேனேஜர் புரிந்து கொண்டார். “என்ன சார்?”

தன்னைச் சுதாரித்துக் கொள்ள மாஸ்டருக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. சுதாரித்துக் கொண்டு பணக் கையாடல் நடந்து விட்டது என்று சுருக்கமாகத் தெரிவித்தார். மேனேஜர் முகத்திலும் திகைப்பும் அதிர்ச்சியும் தெரிந்தது. இனி எடுக்க கணக்கில் பெரிதாக எதுவுமில்லை என்ற போதும் விஸ்வத்திற்கு முன்பு கொடுத்திருந்த எல்லா அதிகாரங்களையும் ரத்து செய்யும் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு நடைப்பிணமாய் மாஸ்டர் வெளியே வந்தார். மதிய வெயில் மண்டையைப் பிளந்தது. அதை விட அதிகமாய் மனசாட்சி அவரைப் பிளந்து கொண்டிருந்தது.

தன்னுடைய சொத்துக்கள், உடைமைகள் முழுவதுமே போயிருந்தால் கூட அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால் போனது அவர் பணம் அல்ல மற்றவர்கள் பணம். அவரை நம்பி ஒரு மாபெரும் இயக்கம் ஒப்படைத்த செல்வம். எல்லாவற்றையும் மிக நன்றாக நடத்திச் செல்வார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் குரு தன் பிரிய சிஷ்யனிடம் அந்த இயக்கத்தை ஒப்படைத்துச் சென்றார். அந்தக் குருவின் நம்பிக்கையையும், மற்றவர்கள் நம்பிக்கையையும் தகர்த்து விட்டிருக்கிறோம் என்கிற உறுத்தல் மாஸ்டருக்குத் தாங்க முடியாததாய் இருந்தது.

சுடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் கங்கைக் கரைக்குச் சென்று அமர்ந்தார். சென்ற முறை வந்த போது கங்கை அவருக்குப் பாடம் நடத்தியதாக உணர்ந்தது நினைவுக்கு வந்தது. எப்போதும் புத்துணர்ச்சியுடன் இலக்கு நோக்கிய பயணமாக வாழ்க்கை இருக்க வேண்டும் என்று கங்கை சொல்லி இருந்தது.  இலக்கு தகர்ந்து, நம்பிக்கை தகர்ந்து, எல்லாமுமே தகர்ந்து போன வாழ்க்கையை நீட்ட வேண்டுமா என்ற கேள்வி மாஸ்டருக்குள் பெரிதாக எழுந்தது. ’நான் தகர்ந்திருந்தால் பரவாயில்லை. என் முட்டாள்தனத்தால் இந்தப் புனித இயக்கத்தையே ஓட்டாண்டி ஆக்கி விட்டேனே! இதற்கு மன்னிப்பு உண்டா?” மனம் கதறியது. கங்கையில் மாஸ்டர் இறங்கினார். ’குருவே என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மனதிற்குள் கூவியபடி கங்கையின் ஆழத்தை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில் அவருடைய செல் போன் இசைத்தது. எடுத்துப் பார்த்தார். அழைப்பது க்ரிஷ்…. பேசினார். “ஹலோ”

“மாஸ்டர் க்ரிஷ் பேசறேன்”

“என்ன விஷயம் க்ரிஷ்?”

“திடீர்னு உங்க கிட்ட பேசணும், உங்க குரலைக் கேட்கணும்னு தோணுச்சு மாஸ்டர். அதனால தான் கூப்பிட்டேன்……..”

அவனுடைய அன்பான வார்த்தைகள் அவர் கண்களை ஈரமாக்கின. தொடர்ந்து அவன் செந்தில்நாதன் வந்து விட்டதையும், ஹரிணியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையும் சொன்னான். இப்போது ஓரளவு மனோபலம் பெற்று விட்டிருப்பதையும் சொன்னான். “….நீங்க சொன்ன வார்த்தைகளை ஒரு பெரிய பேப்பர்ல எழுதி எதிர் சுவத்துல ஒட்ட வெச்சிருக்கேன் மாஸ்டர். ’பிரச்சினைகளைத் தர்ற விதி அதை சமாளிக்கற வழியையும் தராமப் போயிடறதில்ல. நம்பிக்கையோட இரு. சக்திகளை கவலையில் விரயம் பண்ணாம தீர்வுகள் பக்கம் திருப்பு. நல்லதே நடக்கும்’. ...”

அதற்கப்புறமும் க்ரிஷ் என்னென்னவோ சொன்னான். அதெல்லாம் அவர் மனதில் பதியவில்லை. அவர் சொல்லி அவன் நினைவுபடுத்திய வார்த்தைகளிலேயே அவர் மனம் நின்றது..... அவன் கால் மணி நேரம் கழித்து போன் செய்திருந்தால் அவர் வாழ்க்கை முடிந்து போயிருந்திருக்கும். அவர் குருவே அவனை அவருக்குப் போன் செய்ய வைத்திருக்கிறார் என்று நம்பினார். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் மாஸ்டர் கரைக்குத் திரும்பினார்.

(தொடரும்)

என்.கணேசன்

8 comments:

 1. so viswam thaan marma manithan???

  ReplyDelete
 2. I was always in Master's mind state. Those words about how to face Problems gave me temporary relief. I have to mug-up or by-heart them...
  when one person is in that frustrated state, those words should be either (heard from another person) or (read by the frustrated person), than remembering those words...
  Because, in that situation, mind won't work to remember those words...Heart will work to cry
  So, No words to say....other than thank you (master / krish / n. ganeshan)

  ReplyDelete
 3. Master's state of mind is beautifully written.

  ReplyDelete
 4. மாஸ்டரின் மனநிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் ... அருமை... படித்த என்னையும் பாதித்து விட்டது...அதுபோன்ற சூழல் நம் அனைவருக்கும் எப்போதாவது ஏற்பட்டிருக்கும்...

  இறுதியில் ஏற்ப்பட்ட திருப்பம் அருமை... மாஸ்டர் மற்றும் கிரிஷ் இருவருக்கும் இருப்பது பெரிய சிக்கல்... இதை விதி எவ்வாறு தீர்க்கும்? என்பதை அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. விஸ்வம் மர்ம மனிதனின் கை ஆளா....? இல்லை, அவரை தன் சக்தியின் கட்டுபாட்டில்
  கொண்டு வந்து விட்டானா....?

  ReplyDelete
 6. It is unbelivable that Intellectualperson like master got cheated like an ordinary person.
  Crores of funds and properties of a trust handled by a single person is not fitting into logic.

  ReplyDelete
 7. so krish ethiriyin kai paavai alla
  master thaan kai paavai
  krish guessed correctly here
  waiting

  ReplyDelete