சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 13, 2018

இருவேறு உலகம் – 100

ரைக்கு மீண்டும் வந்தமர்ந்த மாஸ்டர் ஒரு கணத்தில் தான் செய்ய இருந்த கோழைத்தனமான செய்கைக்காக வெட்கப்பட்டார். இப்போதும் மனம் ரணமாகத் தான் இருக்கிறது என்றாலும், அவரையே அவரால் மன்னிக்க முடியவில்லை தான் என்றாலும், தற்கொலை தீர்வல்ல, எல்லாவற்றையும் சந்தித்தே தீர்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். ஆன்மிக இயக்க உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி நடந்ததை எல்லாம் விவரித்து தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு தன் தவறுக்குத் தண்டனை நரகமே ஆனாலும் அதை எதிர்ப்பில்லாமல் ஏற்று அனுபவிக்கத் தயாராக இருந்தார். சற்று முன் குருவே என்னை மன்னித்து விடுங்கள் என்று கூவியது சொர்க்கத்தில் இருந்த அவரது குருவுக்குக் கேட்டிருக்க வேண்டும். அவர் தான் க்ரிஷ் மூலம் தற்கொலையைத் தடுத்திருக்கிறார். குருவைப் பற்றி எண்ணிய போது மனம் லேசானது. அவர் இருந்திருந்தால் அவர் மடியில் தலை வைத்து மனபாரம் குறையும் வரை அழுதிருக்கலாம் என்று தோன்றியது.

மாஸ்டர் அமைதியாக அமர்ந்து விஸ்வத்தைப் பற்றி யோசித்தார். என்ன நடந்தது, எப்படி ஏமாந்தோம் என்று புரிய சற்று நேரமானது. விஸ்வம் சுமார் பத்து வருடங்களுக்கு முன் தான் அவர்களுடைய இயக்கத்தில் வந்து சேர்ந்தார். அவர் ஈடுபாடெல்லாம் ஹதயோகமும், கணிதமுமாக இருந்தது. ஆன்மிகத்தில் மிக நல்ல ஈடுபாட்டைக் காட்டினார். ஆனால் அதையே ஆழமாக யாராவது பேசினால் அதைப் புரிந்து கொள்ளும் சிரமத்தை வெளிப்படையாகவே காட்டினார். ஒரு வேலை தந்தால் அதைச் செய்து முடிக்கும் வரை ஓய்வெடுக்காத ஒரு சிறந்த தன்மை அவருக்கிருந்தது. அது குருவையும், மாஸ்டரையும் வெகுவாகக் கவர்ந்தது. மொத்தத்தில் எளிமை, சராசரி அறிவு, வேலையில் மிக நேர்த்தியான ஒழுங்கு, ஹதயோகம் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் என்கிற முகத்தையே விஸ்வம் அவர்களுக்குக் காட்டினார். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் இயக்கத்தின் கணக்கு எழுதும் போது விஸ்வம் ஆர்வத்துடன் உதவ முன் வருவார். மாஸ்டர் கால்குலேட்டர் அழுத்தி ஒரு விடையை எட்டுவதற்கு முன் விஸ்வம் மனதிலேயே கணக்குப் போட்டு அதை எட்டியிருப்பார். அவர் சொல்கிற எண்ணும் மாஸ்டர் கால்குலேட்டரில் பார்க்கும் எண்ணும் ஒன்றாக இருக்கும். விஸ்வத்தின் ஞாபக சக்தியும் அபாரம். வரவு செலவுகளையும், தொகைகளையும் தவறில்லாமல் ஞாபகம் வைத்திருப்பார். ”அந்த டிராவல் ஏஜென்சி பில்லுக்கு போன பதினைந்தாம் தேதி 12500 ரூபாய் அனுப்பினோம். மீதி தரவேண்டியது 7856 ரூபாய்” “அந்த ப்ரிண்டிங் ப்ரஸ் இது வரை மூன்று பில்கள் அனுப்பியிருக்கிறார்கள். 17568 ரூபாய், 11375 ரூபாய், 28577 ரூபாய். நாம்  அதற்கு 35000 ரூபாய் இந்த மாதம் 15 ஆம் தேதி அனுப்பி இருக்கிறோம். இனி தரவேண்டியது 22520 ரூபாய்”

இதெல்லாம் அவர்கள் நினைவு வரும் போது திடீரெனக் கேட்கும் பழைய கணக்குகளுக்குப் பதில்களாய் இருக்கும். எந்தக் குறிப்பையும் பார்க்காமல் விஸ்வம் தெளிவாகப் பதில் சொல்வதில் இது வரை ஒரு தொகை கூடத் தவறாக இருந்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு ஞாபகசக்தியும், கணக்கிடும் திறமையும் இருக்கும் ஆள் இருக்கையில் இந்தக் கணக்குகளை அவரிடமே பார்க்க விடுவது தான் உத்தமம் என்று நாளாவட்டத்தில் அவர்களுக்குத் தோன்றியது. ஆரம்ப காலங்களில் எப்போது சரிபார்க்க வந்தாலும் நடப்பு தேதி வரை கணக்கு எழுதப்பட்டிருக்கும். பண இருப்பும் பைசா வித்தியாசம் இல்லாமல் இருக்கும். வங்கிக் கணக்குகளை விஸ்வம் பார்க்க ஆரம்பித்த பின் ஒவ்வொரு செக்கிலும், முக்கியமான காகிதங்களிலும் கையெழுத்திட்டு அனுப்பும் பிரச்னை வந்தது. ஒரு பிரச்னையும் இல்லாமல், கச்சிதமாக எல்லாவற்றிலும் இருக்கும் விஸ்வத்தை எந்த விதத்திலும் சந்தேகிக்க மாஸ்டருக்குக் காரணம் இருக்கவில்லை. அதனால் எல்லாவற்றிற்கும் கையெழுத்திடும் அதிகாரத்தையும் அவரிடம் மாஸ்டர் தந்து விட்டார்.

இயக்கத்தின் எல்லாச் செலவினங்களுக்குமான தொகை அந்தந்த நபர்களுக்கு அந்தந்த காலத்தில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. இதுவரை ஒருவர் கூட பண விஷயமாக மாஸ்டரிடம் புகார் சொன்னதில்லை. விஸ்வம் எழுதும் கணக்கில் ஆடிட்டர் கூட எந்த சந்தேகத்தையும் எழுப்பியதில்லை. மிகவும் கச்சிதமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் மாஸ்டர் சந்தேகம் கொள்ள இதுவரை காரணம் இருந்ததில்லை. அதனால் தான் கிருஷ்ணவேணி சொல்லும் போது கூட மாஸ்டருக்கு சந்தேகம் ஏற்படவில்லை……

இவ்வளவு திறமையான மனிதர் முயன்றால் பல விஷயங்களில் சிறக்க முடியும் என்று அபிப்பிராயப்பட்ட மாஸ்டர் விஸ்வத்திடம் அமானுஷ்ய சக்திகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யச் சொன்னார். “மாஸ்டர் உங்க உயரத்துக்கு நீங்க யோசிக்கிறீங்க. எனக்கு என் உயரம் நல்லாத் தெரியும். என் மூளைக்கு கணக்கு மட்டும் தான் சரியா வரும். மத்ததெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது…” என்று சங்கோஜமில்லாமல் உண்மை சொல்வது போல் சொல்லி விஸ்வம் மறுத்திருக்கிறார்.

இப்போது யோசிக்கையில் கணக்கில் மட்டுமல்லாமல் எல்லா விஷயங்களிலும் விஸ்வம் கச்சிதமாகவே இருந்திருப்பது புரிந்தது. கணக்கு தவிர மற்ற விஷயங்களில் தனக்கு சராசரி அறிவு தான் என்று காட்டிக் கொண்டது, ஆன்மிகத்தின் ஆழம் புரியாதது போல நடித்தது, அமானுஷ்ய சக்திகளைத் தனக்கு எட்டாத விஷயம் என்று சொன்னது,  கூச்ச சுபாவமாகக் காட்டிக் கொண்டு எல்லோரிடமிருந்தும் சற்று எட்டியே இருந்தது எல்லாம் மற்றவர்களுக்கு அவர் மீது சிறிதும் சந்தேகத்தை ஏற்படுத்தாமலிருக்க உதவியிருக்கின்றன.

எதிரி ஸ்டீபன் தாம்சனிடம் சொன்னதாய் க்ரிஷ் தெரிவித்தது மாஸ்டருக்கு நினைவுக்கு வந்தது. “நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை….. அடுத்தவர் மனத்தைப் படிக்கிற சக்தியெல்லாம் என்னைப் போன்ற எளியவனுக்கு எப்படி வரும்…..”

யோசிக்க யோசிக்க பல விஷயங்கள் தெளிவடைய ஆரம்பித்தன. ஆனாலும் விஸ்வம் தான் அந்த சக்தி வாய்ந்த எதிரி என்று நம்ப மாஸ்டரால் முடியவில்லை. விஸ்வம் பணம் மட்டுமே பிரதானம் என்று தான் இங்கே செயல்பட்டிருக்கிறார். மற்ற இடங்களில் கேள்விப்பட்டதிலோ எதிரிக்கு அமானுஷ்ய சக்திகளே பிரதானமாக இருந்திருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியோ பிரம்மாண்டமாய் இருக்கிறது….. மதியம் முடிந்து, மாலையும் முடிந்து இருட்டிய பின்னும் மாஸ்டர் கங்கைக் கரையில் பல சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தார்….


செந்தில்நாதனை ஹரிணியைத் தேடுவதற்காக ஈடுபடுத்த வேண்டும் என்று உதய் மாணிக்கத்திடம் சொன்ன போது அவருக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் சொன்னது கோரிக்கையாக இல்லை, செய்தே ஆக வேண்டும் என்ற தொனியில் இருந்தது. அவனிடம் மறுப்பது போர்க்கொடியை உயர்த்துவது போலத்தான். கமலக்கண்ணனிடம் பசப்பு வார்த்தைகள் செல்லுபடியாகும். ஆனால் உதயிடம் அது செல்லுபடியாகாது. அவனிடம் சண்டை போட்டு இந்த நேரத்தில் கட்சியை இரண்டு அணிகளாகப் பிரிப்பது புத்திசாலித்தனமல்ல என்பதாலும், ஹரிணி கடத்தல் பற்றிய விசாரணை குறித்து எந்த ஆணையும், ஆட்சேபணையும், ஆலோசனையும் மனோகரிடம் இருந்து வந்து சேரவில்லை என்பதாலும் மாணிக்கம் இனிய வார்த்தைகளோடு சம்மதித்தார். “நீ சொன்னா நான் மறுக்கவா போறேன். தாராளமா அவர் அந்த வழக்கை விசாரிக்கட்டும். எனக்கு ஹரிணி நலமா திரும்பி வந்தா போதும். அவ காணாம போனதுல இருந்து  மணீஷ் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. இப்பவே ஆர்டரை அனுப்பறேன் உதய்”

உதய் இந்தத் தகவலை செந்தில்நாதனுக்கும் தெரிவித்தான். செந்தில்நாதன் தன் பழைய கேள்வியை மறுபடியும் கேட்டார். “கடத்தினவங்க கிட்ட இருந்து போன் கால் எதுவும் வரலையே?”

“வரலை சார்” என்றான் உதய். உதய்க்கு கடத்தியவர்கள் இன்னும் தொடர்பு கொள்ளாதது நெருடலாகவே இருந்தது. மனதின் அடித்தளத்தில் இனம் புரியாத பயம் தொடர்ந்து வந்தது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் க்ரிஷ் அமைதியாகவும், தன்னிலை இழக்காமலும் இருந்தான். அமெரிக்காவில் இருந்து வந்து ஹரிணி கடத்தல் பற்றித் தெரிந்தவுடன் உடைந்தவன் மாஸ்டரிடம் போய் வந்த பிறகு ஓரளவு அமைதியாகவே இருந்தான். பழைய கலகலப்பு இல்லை என்றாலும் கலக்கமும் தெரியவில்லை. ஒரு நாள் அதிகாலை அவன் அறையில் விளக்கு எரிவது பார்த்து எட்டிப் பார்க்கையில் க்ரிஷ் தியானத்தில் அமர்ந்திருந்தது தெரிந்தது.

இவனால் எப்படி இந்தச் சூழ்நிலையில் தியானத்தில் ஆழ முடிகிறது என்று உதய் திகைத்தான். ’எதிரி மிக மிக சக்தி வாய்ந்தவனாக இருக்கலாம். ஆனால் என் தம்பியும் சளைத்தவனல்ல’ என்று உதய்க்குப் பெருமையாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

4 comments:

  1. Master's thoughts and his flashback are superb. Slowly the truth is coming out. I am very eager to know how Senthilnathan finds out Harini.

    ReplyDelete
  2. மாஸ்டர் விஸ்வம் பற்றி சிந்திக்கும் விதமும்..மர்ம மனிதனை பற்றி தெரிந்து கொள்வதும் அருமை... ஆனால்,ஆனால் மர்ம மனிதன் முழுமையாக வெளிவராதது...ஏமாற்றமாக உள்ளது...

    செந்தில்நாதன் மீண்டும் களமிறங்குவது சூப்பர்...

    கிரிஷின் செயல் அடுத்து என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  3. கணேஷ்ஜி, எனக்கு ஒரு சந்தேகம்......
    மர்ம மனிதனும், குருவிடம் பயிற்சி பெற்றவன் தானே....?

    ReplyDelete