சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 3, 2018

சத்ரபதி – 36



சிவாஜியிடம் தெரிய ஆரம்பித்த மாற்றங்களை ஜீஜாபாய் கூர்ந்து கவனித்து வந்தாள். வலிமையான ஆண்மகனாக அவன் உருமாறி வருவது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவன் நடை உடை பாவனைகளில் கம்பீரம் மெருகேற ஆரம்பித்ததைப் பெருமிதத்தோடு கவனித்தாள். அவன் மனைவிகள் இருவரும் தான் பூப்படையாமல் இன்னும் சிறுமிகளாகவே இருந்தார்கள். இப்போதும் கூட அவர்கள் இருவரும் ஒரு அறையில் சத்தமாகச் சிரித்து விளையாடுவது கேட்டது. அந்தக் காலத்தில் புகுந்த வீடுகளில் பெண்கள் சத்தமிட்டுச் சிரிப்பது அடக்கமின்மைக்கு அடையாளமாகக் கருதப்பட்டாலும் ஜீஜாபாய் அப்படி நினைத்ததும் இல்லை. அவர்களைத் தடுத்ததும் இல்லை. அவள் வாழ்வில் அனுபவித்த சோதனைகள் அக்காலப் பெண்களின் வாழ்க்கையில் சிரிப்பு நீடிப்பது அபூர்வம் என்று சுட்டிக் காட்டியிருந்தன. எனவே அவள் மருமகள்களாவது காலம் அனுமதிக்கும் வரை சிரித்து சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தாள்….

சிவாஜி ஏதோ முக்கியமான நிகழ்வுகள் குறித்து சிலரிடம் பேசிக் கொண்டிருந்த காட்சியை சாளரத்தின் வழியே ஜீஜாபாய் பார்த்தாள். தான் அதிகம் பேசாமல் மற்றவர்களை அதிகம் பேசவிட்டு அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். இடையிடையே அவன் சில கேள்விகள் கேட்டான். மறுபடி அவர்கள் சொல்வதைக் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்டான். ஆனால் அவர்கள் சொன்னதை வைத்து அவன் நினைக்கிறான் என்பது வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. குணாதிசயங்களில் அவள் மகன் பல சமயங்களில் அவளைப் பிரமிக்க வைத்தான். சில சமயங்களில் அவளைத் திகைக்க வைத்தான். சில சமயங்களில் அவளை அதிரவும் வைத்தான். மகனின் எண்ண ஓட்டங்களை அவளுக்குச் சில சமயங்களில் யூகிக்க முடிந்தது. சில சமயங்களில் அவன் என்ன நினைக்கிறான், எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்பதைக் கணிக்க அவளால் முடியவில்லை….

உதாரணத்திற்கு தாதாஜி கொண்டதேவின் மரணத்திற்குப் பிறகு அவனிடம் வசூல் தொகையை வாங்கிச் செல்ல வந்த ஷாஹாஜியின் ஆட்களிடம் தாதாஜி கொண்டதேவைப் போல் முழுமையாக அவன் தந்து விட மாட்டான் என்று எதிர்பார்த்தேயிருந்தாள்.  ஆனால் ஒரேயடியாக சிவாஜி மறுத்து அனுப்பி விடுவான் என்று ஜீஜாபாய் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் கணவரிடமிருந்து மகனுக்குக் கோபமாக ஒரு கடிதமாவது வந்து சேரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவரும் அப்படித் தன் கோபத்தைத் தெரிவிக்கவில்லை. தந்தையும் மகனும் தங்களுக்குள் பேச்சில்லா ஒப்பந்தம் ஒன்றை மானசீகமாகப் போட்டுக் கொண்டிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

அவர் பீஜாப்பூரில் அவளிடம் சொன்ன வாசகங்கள் இப்போதும் அவள் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்திருக்கின்றன. “நம் வம்சத்தில் சிவாஜியாவது உயரங்களை அடைய வேண்டும் என்று இரகசியமாய் நானும் ஆசைப்படுகிறேன். அவன் அப்படி உயரங்களை எட்டினால் உனக்கு இணையாகப் பேரானந்தம் அடையும் இன்னொரு ஜீவன் நானாகத் தான் இருப்பேன்…..” அந்த வார்த்தைகளை நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்த்தாள். ‘இவன் வசூல் பணத்தைத் தர மறுத்ததையும் அவர் மகனின் வளர்ச்சியாக எடுத்துக் கொண்டாரோ? அதனால் தான் மகனை அவர் கோபித்துக் கொள்ளவில்லையோ?......” ஆனால் தன்னால் அவனுக்கு உதவவும் முடியாது என்பதை அவர் வெளிப்படையாகவே அன்று தெரிவித்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவர் உதவியை சிவாஜியும் எந்த விதத்திலும் எதிர்பார்க்கவில்லை. தன்னையே நம்பி அல்லது தனக்குள் உள்ள இறைவனையே நம்பி மட்டுமே சிவாஜி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். பீஜாப்பூர் சுல்தான் என்றைக்கு சினம் கொண்டு செயல்படுவார் என்று தெரியவில்லை. அப்போது சிவாஜி என்ன செய்வான் என்றும் தெரியவில்லை. மனதில் நுழைய ஆரம்பித்த கவலையை ’அந்த நேரத்தில் கடவுள் ஏதாவது வழிகாட்டுவார்’ என்று நினைத்தவளாய் தூர நிறுத்தினாள்.

அவள் மகன் இப்போது சிறுவனல்ல. நிதானமாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்கிறான்…. இப்போதெல்லாம் கட்டுப்படுத்த முடியாத கடுங்கோபத்தை அவனிடம் அவள் கண்டதில்லை. அவர்களிடம் பீஜாப்பூரில் சத்தியம் செய்து கொடுத்ததை பின் எப்போதும் சிவாஜி மீறவில்லை என்பதையும் ஜீஜாபாய் எண்ணிப் பார்த்தாள். மக்களின் பேராதரவு அவனுக்கு இருப்பதையும் அவளால் கண்கூடாகவே காண முடிந்தது. எல்லோரும் அவனை அவர்களுடைய பெருந்தலைவனாகவே பேரன்புடன் பார்த்தார்கள். வீரர்களும், அதிகாரிகளும் கூட அவனை அப்படியே கண்டார்கள். அவனுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்கள் நலனில் அவனும் உண்மையான அக்கறையைக் காட்டினான். அது தன்னுடைய தர்மம் என்று அவன் ஆசிரியர் அவனுக்குச் சொல்லியிருந்தது அவன் ஆழ்மனதில் வேரூன்றியிருந்தது…..

இப்படி எல்லாம் நம்பிக்கையூட்டும்படியும் திருப்திகரமாகவும் அமைந்த போதும் ஒரே ஒரு விஷயம் அவளை மிகவும் பயமுறுத்தியது. அது அவள் மகனிடம் சில அபூர்வ சமயங்களில் தெரிய வந்த துறவு மனப்பான்மை. இதை அவனிடம் சிறுவயதிலேயே கண்டு கவலைப்பட்டிருக்கிறாள். அது அவனிடமிருந்து இன்னும் விலகவில்லை. அந்த நேரங்களில் அவன் அதிகம் தனிமையையே நாடினான். மணிக்கணக்கில் ஞானதேவரின் சமாதியிலோ, சகாயாத்ரி மலையில் சில ரகசிய இடங்களிலோ தனிமையில் அமர்ந்திருப்பான். அப்படிப் போக முடியாத சமயங்களில் எல்லோரும் இருக்கையிலும் சற்றுத் தள்ளியே அமர்ந்து தூர இருக்கும் கண்ணுக்கு அறியாப் புள்ளிகளில் ஏதோ ஒன்றில் வெறித்த பார்வையை நிலைக்க விட்டிருப்பான். அப்போது அவனிடம் பேசப் போகிறவர்கள் ஒரு வார்த்தையையும் அவனிடமிருந்து பெற்று விட முடியாது. அப்போது அவன் வேற்றுலகவாசி போல் அவர்களுக்குத் தோன்றுவான். அந்த சமயங்களில் எதிலுமே அவன் ஈடுபாடு காட்ட மாட்டான்…. சில மணி நேரங்களில் அல்லது ஒரு நாளில் அவன் அதிலிருந்து மீண்டு வரும் வரை  ஜீஜாபாய்  அடிவயிற்றில் கலக்கத்தை உணர்வாள்.

காலம் வேகமாக நகர்ந்து அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அவள் நம்பினாள். ஆனால் காலத்தை வேகமாக நகர்த்த யாருக்குத் தான் முடியும்….! பெருமூச்சு விட்டவளாக நினைவுகளிலிருந்து மீண்டு அவள் சாளரம் வழியாகப் பார்த்த போது சிவாஜி தனியாக ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

ஜீஜாபாய் அவசரமாக வெளியே வந்து மகன் எதிரில் அமர்ந்தாள். ”என்ன யோசிக்கிறாய் சிவாஜி?”

“குறிப்பாக எதுவும் இல்லை தாயே. எங்கிருந்து ஆரம்பித்தோம். இப்போது எது வரை வந்திருக்கிறோம் என்ற யோசனை தான் தாங்கள் கேட்ட போது மனதில் ஓடிக் கொண்டிருந்தது” என்றான் சிவாஜி.

ஜீஜாபாய் நிம்மதியை உணர்ந்தாள். அவள் பயந்தது போல அவள் மகன் துறவு சிந்தனைகளை ஆரம்பித்து விடவில்லை. மகனைக் கூர்ந்து பார்த்தபடியே ஜீஜாபாய் சொன்னாள். “அடுத்து போக வேண்டிய இடம் பற்றி யோசித்துக் கொண்டிருப்பாயோ என்று நினைத்தேன்….”

சிவாஜி புன்னகைத்தான். அவன் தாய் எதையோ சொல்ல வருகிறாள். அவள் இது வரை அவனிடம் வெளிப்படையாகச் சொன்னதை விட குறிப்பால் அவனுக்கு உணர்த்தியது அதிகம். அவளாகச் சொன்னது போல் இருக்காது. அவனாக முடிவுக்கு வந்தது போல் தான் பார்ப்பவர்களுக்குக்  கடைசியில் தோன்றும்…..

சிவாஜி சொன்னான். “அடுத்ததாய் அதுபற்றியும் யோசிக்க வேண்டும். என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் போன பிறகு திரும்பிப் பார்த்தேன். நீங்களும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது சாளரம் வழியாகத் தெரிந்தது. நீங்கள் என்ன யோசித்துக் கொண்டிருந்தீர்கள் தாயே?”

ஜீஜாபாய் தன் சிந்தனைகளையும் கவலைகளையும் மகனிடம் தெரிவிக்க விரும்பவில்லை. மாறாக மகனின் சிந்தனை எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும் என்று உணர்த்த விரும்பினாள். மெல்லச் சொன்னாள். “உன்னைப் பிரிந்திருந்த நாட்களில் கொண்டானா கோட்டையில்  நான் இருந்த மூன்று வருடங்கள் நினைவில் ஊசலாடின சிவாஜி…”

தாயைக் கூர்ந்து பார்த்தான் சிவாஜி.

ஜீஜாபாய் சொன்னாள். “மிக வலிமையான கோட்டை அது. இந்தப் பிராந்தியத்தின் வலிமையைத் தீர்மானிக்க முடிந்த கோட்டை அது என்பதை நான் அபங்கிருக்கும் போதே உணர முடிந்தது…..”

சிவாஜியின் உதடுகளில் புன்னகை மீண்டும் அரும்பியது.  அவள் சொன்னது உண்மை என்பதை அவனும் உணர்ந்திருந்தான். உண்மையில் அவன் அடுத்த குறியும் அதுவாகவே இருந்தது. மற்ற கோட்டைகளில் இல்லாத ஒரு உணர்வு நெருக்கம் அந்தக் கோட்டையில் அவனுக்கு இருந்தது. அது அவன் தாய் சிறையிருந்த கோட்டை. அதைக் கைப்பற்றுவதில் கூடுதல் ஆர்வம் இருந்தது. மிக நெருக்கத்தில் இருக்கும் அந்தக் கோட்டையை அவன் கைப்பற்றினால் அது அவன் வலிமையைப் பலமடங்கு கூட்டும். ஆனால் அந்தக் கோட்டை பீஜாப்பூர் சுல்தான் வசம் இருந்தது. வலிமையான அந்தக் கோட்டையை நிர்வகித்து வந்த கோட்டைத் தலைவனும் வலிமையானவன் தான். அவன் மிகவும் திறமையுடன் கோட்டையைப் பராமரித்து வந்தான். அவனுடைய படை பலமும் வலிமையாகவே இருந்தது. அதனால் தந்திரமோ, வலிமையோ அவனிடம் செல்லுபடியாகாது….

அந்த உண்மையை ஜீஜாபாயும் உணர்ந்திருந்ததால் மகன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தொடர்ந்து சொன்னாள். “ஆனால் அந்தக் கோட்டை இப்போதும் வலிமையான தலைமையிலேயே இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்…..”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “எல்லா வலிமைகளிலும் ஏதோ ஒரு பலவீனம் உள்ளடங்கியே இருக்கிறது தாயே”

ஜீஜாபாயும் புன்னகைத்தாள். இனி அவள் மகன் கவனம் முழுமையாக கொண்டானா கோட்டை மீதே இருக்கும். இலக்குகளை அடைய இறைவனை நாடுவதில் அவளுக்குப் பூரண உடன்பாடுண்டு. ஆனால் இறைவனே இலக்காவதில் அந்தத் தாய்க்கு உடன்பாடில்லை. இறைவனிடம் கூட மகனை இழப்பதற்கு அந்தத் தாய் தயாராயில்லை…..!

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. I feel as if Sivaji is growing in front of me. That is the magic of your writings Ganeshan sir.

    ReplyDelete
  2. ஜீஜாபாயின் எண்ண ஓட்டங்கள் அருமை. அவள் மகனைத் தள்ளி இருந்து கவனிப்பதும் சாமர்த்தியமாக அவனை அடுத்த இலக்கு நோக்கிப் போக வைப்பதும் அருமை.

    ReplyDelete
  3. Yes. we are able to feel evolution of shivaji in your writings and the conduct of jijabhai shows how a woman can mould her children.

    ReplyDelete
  4. Really Jijabai is much more cleverer than Sivaji.

    ReplyDelete
  5. சிவாஜியின் வளர்ச்சி சூப்பர்... ஜீஜாவின் எண்ண ஓட்டங்களும் ... மகனை துறவு பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுய் விதமும் அருமை...

    ReplyDelete
  6. சிவாஜியின் வளர்ச்சி சூப்பர்... ஜீஜாவின் எண்ண ஓட்டங்களும் ... மகனை துறவு பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ளும் விதமும் அருமை...

    ReplyDelete