சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 30, 2018

சத்ரபதி – 18


தாதாஜி கொண்டதேவ் பீஜாப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் அவர் நினைவுகள் பூனாவில் இருக்கும் சிவாஜியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ” நம் பூமியை நாமே ஆள்கின்ற நிலை - இதையே கௌரவமான நிலை என்று நினைக்கிறேன் ஆசிரியரே” என்று அவன் சொன்ன கணத்திலிருந்து இப்போது வரை ஏதோ ஒருவித மனக்கலக்கம் அவரை அலைக்கழித்து வருகிறது. இன்னும் அவன் இளைஞனாகி விடவில்லை. இன்னும் அவன் பிள்ளைப் பிராயத்தை முழுவதுமாகக் கடந்து விடவில்லை என்றாலும் அவனிடம் வயதுக்கு மீறிய பக்குவத்தையும், ஆழத்தையும் பார்க்க முடிந்ததால் இதை ஒரு சிறுவனின் நிலைமை புரியாத பேச்சு, சில வருடங்களில் யதார்த்தத்தை அவன் புரிந்து கொள்வான் என்று அவரால் விட்டு விட முடியவில்லை….

சிவாஜி மிகத் தெளிவாக இருந்தான். அந்த நாளுக்குப் பின்னும் சில நாட்களில் அவரிடம் அவன் அது குறித்து விவாதித்திருக்கிறான். அவர்களுடைய இப்போதைய நிலையை அவர் அவனுக்குப் புரிய வைக்க முயன்ற போது, அவன் அவர்களுடைய தற்போதைய நிலையை அவருக்குப் புரிய வைக்க முயன்றான்….

தாதாஜி கொண்டதேவ் அவனிடம் சொன்னார். “சிவாஜி. நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். மலைவாழ் மக்களை நம்முடன் வரவழைத்தோம். வீண் வாழ்க்கை வாழ்ந்தவர்களை உழைப்பிற்குத் திருப்பி நம் பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். இதெல்லாம் நமக்குப் பெருமை தான். ஆனால் இதெல்லாம் பீஜாப்பூர் ராஜ்யத்தை எதிர்க்கப் போதாது. இந்தப் பூமி பீஜாப்பூர் சுல்தான் உன் தந்தைக்குத் தந்தது. இதை முறையாகப் பயன்படுத்தி உயர ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் இந்தப் பூமியை நமக்குத் தந்தவரையே எதிர்ப்பது தர்மம் அல்ல. அப்படி எதிர்த்து வெற்றி பெறும் அளவு நம்மிடம் பலமும் இல்லை. இதை நீ மறந்து விடக்கூடாது”

சிவாஜி அமைதி மாறாமல் கேட்டான். “இந்தப் பூமி பீஜாப்பூர் சுல்தான் நமக்குத் தந்தது என்றீர்கள். சரி தான். அவருக்கு இதை யார் கொடுத்தது…? இது ஆரம்பத்தில் யாருடையதாக இருந்தது? பீஜாப்பூர் சுல்தானும், முகலாயப் பேரரசரும் வந்து நம்முடையதைப் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொள்ளும் வரை இது எம்முடையதாகவே அல்லவா இருந்தது. எங்கள் பரந்த பூமியை எடுத்துக் கொண்டு அதிலிரண்டு மூன்று துண்டுகள் எங்களுக்குப் பிச்சை போடுவது போல் போட்டால் அதைப் பெற்றுக் கொண்டு நாய் போல் நன்றியுடன் வாலாட்ட நினைப்பது அடிமைத்தனத்தின் அடிமட்ட நிலை அல்லவா ஆசிரியரே?”

தாதாஜி கொண்டதேவ் பேச்சிழந்து போய் அவனைப் பார்த்தார். அவன் சொன்ன கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவன் சொன்னதில் எந்தப் பிழையும் இல்லை. அவர் வரலாறும் தர்மமும் சொல்லித் தந்த மாணவன் எது வரலாறு எது தர்மம் என்று வேறு ஒரு விளக்கம் தருகிறான். குறுகிய வட்டத்திலிருந்து பார்க்காமல் சற்றுப் பின்னுக்குப் போய் முழுவதுமாகப் பாருங்கள் என்கிறான். அப்படிப் பார்த்தால் அவன் சொல்வது சரியாகவும் தான் தோன்றுகிறது.

தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “நீ சொல்வதை என்னால் மறுக்க முடியவில்லை சிவாஜி. ஆனால் இந்த எண்ணத்தை நீ செயல்படுத்த முயன்றால் சக்தி வாய்ந்த பீஜாப்பூர் சுல்தானை வெல்ல முடியுமா?....அவர் படைப்பலத்திற்கு முன் நாம் எந்த மூலை…..”

“இன்று முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆசிரியரே. ஆனால் என்றும் முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கிறேன்…” அவன் ஆணித்தரமாகச் சொன்னான்.

தாதாஜி கொண்டதேவுக்கு ஒரு விதத்தில் பெருமையாக இருந்தது. ”என்னமாய் சிந்திக்கிறான். இவன் என் மாணவன்...”. இன்னொரு விதத்தில் அச்சமாய் இருந்தது. “இளங்கன்று பயமறியாது. இவன் ஒரு சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும். இவன் தந்தை பெரிய படைகளை வைத்து முயன்றும் முடியாமல் போனதே. இந்த எண்ணம் இவனைப் பேராபத்தில் அல்லவா கொண்டு போய் விடும். அப்போது காப்பாற்றக் கூட யாரும் வர மாட்டார்களே…… ஐயோ இவன் என் மாணவன் அல்லவா, எனக்கு மகன் போன்றவனல்லவா?” என்று மனம் கதறியது.

இந்த எண்ணங்களுடன் பீஜாப்பூர் போன தாதாஜி கொண்டதேவ் ஷாஹாஜியைச் சந்தித்த போது அவர் தனக்கு மகன் பிறந்திருப்பதையும், அவன் பெயர் வெங்கோஜி என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு தாதாஜி கொண்டதேவ் கணக்குகளைக் கொடுத்த போது அவர் அந்தச் சுவடிகளை வாங்கி ஓரமாய் வைத்தார். ஷாஹாஜியிடம் தங்கள் பிரதேசத்தின் முன்னேற்றத்தையும், கட்டிக் கொண்டிருக்கும் மாளிகை தற்போது எந்த நிலை வரை எட்டியிருக்கிறது என்பதையும் தாதாஜி கொண்டதேவ் விவரிக்க ஷாஹாஜி மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார். பின் ஆர்வத்துடன் கேட்டார். “சிவாஜி எப்படியிருக்கிறான்? அவன் முன்னேற்றம் எப்படியிருக்கிறது”

தாதாஜி கொண்டதேவ் முதலில் தன் மாணவனின் சிறப்புகளை எல்லாம் பெருமிதத்துடன் சொன்னார். எல்லாப் பயிற்சிகளிலும் எல்லாரையும் விட பல படிகள் முன்னேறியே அவனிருப்பதைச் சொன்னார். மக்கள் எல்லோரும் அவனை நேசிப்பதைச் சொன்னார். அவன் வயதுக்கு மீறி ஆழமாய் சிந்திப்பதையும், அவன் அறிவு கூர்மையையும், வீரத்தையும் சொன்னார். கடைசியில் “ஆனால்…” என்று அவர் சொன்ன போது ஷாஹாஜி சிறு பதற்றத்துடன் என்னவென்று கேட்டார்.

தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை முழுவதுமாக தாதாஜி கொண்டதேவ் சொன்னார். அவர் எல்லாம் சொல்லி முடித்த பின்னர் ஷாஹாஜி நீண்ட நேரம் பேசவில்லை. அவர் மனதினுள் ஏராளமான எண்ணங்களும், பழைய நிகழ்வுகளும் அலைமோதின…..

ஷாஹாஜியும் நீண்ட நிலப்பரப்பை அரசாளக் கனவு கண்டவர் தான். தற்போதைய எத்தனையோ அரசர்களை விடத் திறமையும், வீரமும் கொண்டவர் அவர் என்பதை கர்வமில்லாமலேயே அவரால் சொல்ல முடியும். வீரம், திறமை கூட்டணி மட்டும் போதாது. இந்தக்கூட்டணியில் விதியும் சேர்ந்தால் தான் வெல்ல முடியும் என்பதைப் பல அனுபவங்களுக்குப் பின்னால் உணர்ந்தவர் அவர். இன்று அவர் மகனும் ஆசைப்படுகிறான். அவனும் அடிபட்டுத்தான் உணர வேண்டியிருக்குமா என்று இரக்கத்துடன் நினைத்தார்.

மேலும் ஆழமாக யோசிக்கையில் அவர் மகன் அவரை விட நிறைய வித்தியாசப்படுவதை அவர் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. ”இது என் பூமி, இதை ஆளும் உரிமை எனக்கிருக்கிறது ஆதில்ஷாவும், ஷாஜஹானும் அன்னியர்கள். என் பூமியை அபகரித்துக் கொண்டவர்கள்” என்ற ரீதியில் இதுவரை அவர் சிந்தித்ததில்லை. ஆனால் அவர் மகன் சிந்திக்கிறான். அவன் பேசியதையெல்லாம் யோசிக்கும் போது அவன் வயதில் இந்த ஆழம், இந்த அறிவு, இந்தத் தெளிவு அவரிடம் இருந்ததில்லை என்பதும் நினைவில் வந்தது. அவரிடம் மட்டுமல்ல, சிவாஜியை விடச் சில வருடங்கள் மூத்தவனான சாம்பாஜிக்கு இப்போதும் இல்லை என்பதே உண்மை. வீரத்தில் அவனும் சிறந்தவன் தான். ஆனால் தம்பியின் இந்தச் சிந்தனை, இந்த ஆழம் அவனிடமும் இல்லை.

“ஜீஜாபாய் என்ன சொல்கிறாள்…?” ஷாஹாஜி யோசனையுடன் கேட்டார்.

“அவர் ஒன்றும் சொல்லவில்லை பிரபு. அவனைத் தடுக்கவும் இல்லை.”

ஜீஜாபாய் குணம் அறிந்த ஷாஹாஜி அவளுக்கு இந்தச் சிந்தனையில் பரிபூரண உடன்பாடு இருக்கிறது, அதனால் தான் மௌனம் சாதிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். ஜீஜாபாய் இதுநாள் வரை அவரை எதிர்த்து எதுவும் சொல்லாதவள். ஆனால் கணவருக்கு எதிராகப் பேசக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு தான் அதற்குக் காரணமாய் இருந்தது. வாய் திறந்து பேசா விட்டாலும் அவள் முகத்தில் அவருடைய எத்தனையோ செயல்களுக்கு அதிருப்தி பரவுவதை அவர் கண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டுப்பாடு அவளுக்கு மகன் விஷயத்தில் இருக்க வழியில்லை. தவறென்றால்  மகனிடம் வாய் விட்டே கண்டித்துச் சொல்லக்கூடியவள் அவள்…. மகனிடம் கனவுகளை விதைத்தவளே அவளாகக்கூட இருக்கலாம்….. ஒரு அரசனுக்கு மனைவியாக வேண்டியவள் என் மகள் என்று அவருடைய மாமியார் அடிக்கடிச் சொன்னது நினைவுக்கு வந்தது. அரசனுக்கு மனைவியாகத் தான் முடியவில்லை. ஒரு அரசனின் தாயாகவாவது ஆவோம் என்று ஜீஜாபாய் ஆசைப்படுகிறாளோ?..

ஆனால் திடீரென்று சிவாஜி கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் அவரால் கூட அவனுக்கு உதவ முடியாது என்ற யதார்த்தம் ஷாஹாஜியைப் பயமுறுத்தியது. ஷாஹாஜி மெல்லக் கேட்டார். “சிவாஜி உடனடியாக ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவான் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?”

“உடனடியாக எதுவும் செய்வான் என்று தோன்றவில்லை பிரபு. ஆனால் எதிர்காலத்தில் அவன் செய்யாமல் இருக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி”

எப்போது அவன் அப்படிச் செயல்பட்டாலும் ஆபத்து தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமில்லாமல் உணர்ந்திருந்த ஷாஹாஜி ”சிவாஜியையும், ஜீஜாபாயையும் பீஜாப்பூருக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டார்.

(தொடரும்)

என்.கணேசன் 

4 comments:

  1. சுஜாதாApril 30, 2018 at 8:05 PM

    சுதந்திரக் கனவுகள் காணக்கூட பயப்படும் நிலைமை இருக்கிறதே பாவம் சிவாஜி. ஷாஹாஜி கண்டிப்பாரா?

    ReplyDelete
  2. How the father, mother, and the teacher take views of Sivaji. Whether they could control Sivaji? Eager to know.

    ReplyDelete
  3. சிவாஜியின் சிந்தனை...அருமை..
    தாதாஜி கொணடதேவ் தன் மாணவனை எண்ணி பெருமைபடுவதும்.... வருத்தப்படுவதும்... அருமையா சொல்லியிருக்கிங்க சார்...

    ReplyDelete
  4. “இன்று முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆசிரியரே. ஆனால் என்றும் முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கிறேன்…”

    அருமை ! அருமை !

    ReplyDelete