சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 16, 2018

சத்ரபதி – 16


ங்களைச் சுற்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஜீஜாபாய் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சகாயாத்ரி மலைத்தொடரிலிருந்து இறங்கி சமவெளி வாழ்க்கைக்கு வந்திருக்கும் மக்களால் பூனாவைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளாகி விட்டன. வறண்டு காணப்பட்ட பகுதிகள் பசுமையாக மாறின. தினமும் சிவாஜியுடன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட்டம் பல மடங்காய் பெருகியிருந்தன. வாட்போரும், விற்பயிற்சியும், குதிரையேற்றமும், யானையேற்றமும் சாதாரணப் பயிற்சிகளாய் இல்லாமல் விளையாட்டும், ஆனந்தமும், உயிரோட்டமும் நிறைந்த தினசரி நடவடிக்கைகளாய் மாறின. கலந்து கொள்ளும் அத்தனை முகங்களிலும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஜீஜாபாய் பார்த்தாள். ஷாஹாஜி ஏற்படுத்திக் கொடுத்திருந்த சிறுபடை பலமடங்கு பெரிதாய் ஆனது. எல்லாவற்றிற்கும் சிவாஜியும், தாதாஜி கொண்டதேவும் தான் காரணம்….

விவசாயம் மிகச்செழிப்பாக நடந்தது. அக்கம்பக்கத்து ஊடுருவலையும், கொள்ளையர்களின் ஊடுருவலையும் கூட்டமாக அவர்கள் அருமையாகச் சமாளித்தார்கள். அறுவடை அமோகமாயிருந்தது. திருடர்களுக்குப் பதிலாக வணிகர்கள் வர ஆரம்பித்தார்கள். அங்கு வணிகம் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் நிதி நிலைமையும், நிர்வாகத்தின் நிதிநிலைமையும் முன்னேற ஆரம்பித்தது.

விவசாயிகளையும், சகாயாத்ரியை அடுத்து சிறுகுடிசைகளில் வாழும் மக்களையும் கொடிய வனவிலங்குகள் வந்து தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்ததால் தாதாஜி கொண்டதேவ் வனவிலங்குகளை வேட்டையாடுவோருக்கு இத்தனை தங்கக் காசுகள் என்று அறிவிப்பு செய்தார். ஆர்வத்துடன் ஒரு கூட்டம் சுறுசுறுப்பாக வன விலங்குகளை வேட்டையாடக் கிளம்பியது. போட்டியில் வென்று பதக்கம் வாங்குவது போல் பலர் தங்கக்காசுகளைப் பெற்று வெற்றிக்களிப்பில் மிதந்தார்கள். குறுகிய காலத்தில் சமவெளிக்கு வந்து சாதாரண மக்களைத் தாக்கும் கொடிய விலங்குகளின் வரவு நின்றது.

சிவாஜி அனைத்து தரப்பு மக்களிடமும் நெருக்கமாக இருந்தான். வயதானவர்கள், நடுத்தர வயதினர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் எல்லோருக்கும் அவன் மிக வேண்டியவனாய் இருந்தான். ஒவ்வொருவரிடமும் அவன் அவர்களுக்கேற்றாற் போல் பழகியதை ஜீஜாபாய் கவனித்தாள். எல்லோருடனும் உணர்வுநிலையில் அவனால் சுலபமாகக் கலந்து கொள்ள முடிந்தது. பேரனாய், மகனாய், தோழனாய், சகோதரனாய் அவனை அவர்கள் கண்டார்கள். அன்பு காட்டினார்கள். அவனிடம் இயல்பாகவே நல்ல தலைமைப் பண்புகள் இருப்பதை ஜீஜாபாயும், தாதாஜி கொண்டதேவும் கவனித்தார்கள்.

சிவாஜியின் நண்பர்கள் கூட்டம் பெரிதாகியது. அவனும், நண்பர்களும், மூதா நதிக்கரையோரம் பயணித்து அது கலக்கும் பீமாநதி வரையும் சுற்றி வந்தார்கள். அதே போல சகாயாத்ரி மலைத்தொடரிலும் அவர்கள் நெடுந்தொலைவு செல்வதுண்டு. குறிப்பில்லாத பயணங்களாய் அவை இருக்கவில்லை. போய்வரும் வழிகளில் அவர்கள் எதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசித்து மனக்குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். அங்குள்ள மக்களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்களது மாலைநேரக் கூட்டங்கள் பெரிதாக ஆரம்பித்தன. அந்தக் கூட்டங்களில் சமகாலத்து வரலாறுகள் அலசப்பட்டன. அக்கம் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி விவரமறிந்தவர்கள் பேசினார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் விவரமறிந்தவர்களானார்கள். முன்பு வீண்கதை பேசியும், குடியில் ஆழ்ந்தும் பொழுதைப் போக்கி வந்த மக்கள் வித்தியாசமாக மாறி உயர ஆரம்பித்தார்கள்.  பிறைநிலவு நாளுக்கு நாள் வளர்ந்து பௌர்ணமியாகப் பிரகாசிப்பது போல ஒரு ஜீவனும் அறிவுமுள்ள ஒரு சமுதாயம் அங்கே உருவாகியது.

சிவாஜி தன் தேசத்தின் வேர்களைத் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தான். இந்த தேசத்தில் இப்போது ஆள்பவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அவர்கள் ஆதிக்கம் வலுவாகக் காரணம் என்ன என்பதையெல்லாம் அவன் கேட்ட போது தாதாஜி கொண்டதேவ் அவர் அறிந்த வரை வரலாற்றைச் சொன்னார். பின் வருத்தம் கலந்த குரலில் சொன்னார். “இந்த தேசத்தில் பிரிவினையை வளர்த்தே மற்றவர்கள் வென்றார்கள். ஆதிக்கத்தைப் பெருக்கினார்கள். நம்மவர்கள் அடுத்தவனைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் தங்களுக்குள் இருக்கும் இன்னொரு பிரிவின் உயர்வைக் காணச் சகிக்க மாட்டார்கள். இதைப் பயன்படுத்தியே அன்னியர்கள் வென்றார்கள். ஆள்கிறார்கள்……”

நீண்டதொரு மௌனம் அந்தக்கூட்டத்தில் நிலவியது. மறுபடியும் தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கும் மூன்று ராஜ்ஜியங்களில் இரண்டு நம் ஆட்களாலேயே ஆளப்படுகின்றன. அகமதுநகர் அரசின் முதல் அரசரின் தந்தையும், கோல்கொண்டா அரசின் முதல் அரசரும் நம்மவர்களே. கடத்தப்பட்டு பின் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் இன்று அன்னியர்களாகவே மாறிவிட்டார்கள். இன்றைய முகலாயப்பேரரசர் ஷாஜஹானின் தாயும் ராஜபுதனத்து இளவரசியே. அவரும் தாய்வழி இருக்கும் பந்தத்தை அங்கீகரிப்பதில்லை…”

இது போன்ற கூட்டங்களால் அங்குள்ளவர்கள் பல விஷயங்கள் அறிந்தவர்களாக இருந்தார்கள். சமகாலத்தின் சுவாரசிய நிகழ்வுகள் கூட அங்கு பகிரப்பட்டன. முகலாயப் பேரரசரின் ஒரு மகனான முஹி உத்தின் முகமது சில வருடங்களுக்கு முன் தங்கள் படைத்தளத்தினுள் புகுந்த மதங்கொண்ட யானையருகே வேகமாக குதிரை மேல் சென்று  அதன் தந்தத்தில் ஈட்டியால் தாக்கி அடக்கிய தகவலை ஒருவர் சொன்னார். 

எல்லோரையும் போல் வியந்து சிவாஜி கேட்டான். அவன் முதல் முறையாகக் கேள்விப்படும் முஹி உத்தின் முகமது வருங்கால முகலாயச் சக்கரவர்த்தியாகப் போகும் ஔரங்கசீப் என்றும் அவனது பரம வைரியாக ஆகப் போகிறவர் என்றும் அப்போது சிவாஜி அறியவில்லை.

இந்தக் கூட்டங்களில் தகவல்களைப் பெற்றது போலவே தனியாக இருக்கையில் தாயிடமிருந்தும் தங்கள் வரலாற்றைக் கேட்டு சிவாஜி ஆர்வமாக அறிந்து கொண்டான். அவன் தந்தை வழி ராணாக்களின் வீரக்கதைகளையும் தாய்வழி யாதவர்களின் வீரக்கதைகளையும் மிகுந்த ஆர்வத்துடன் சிவாஜி கேட்க ஜீஜாபாயும் பெருமையாக சொல்வாள். ஷாஹாஜியின் வீர முயற்சிகளைப் பற்றியும் ஜீஜாபாய் சொல்வாள். விதி அனுகூலமாக இல்லாததால் தான் அவர் சோபிக்கவில்லை என்று விளக்குவாள். இரவுகள் நீளும்….

பல சமயங்களில் ஜீஜாபாய் சிவாஜியை ஆச்சரியப்படுத்தினாள். ஷாஹாஜி அழைத்தும் அவள் பீஜாப்பூருக்கு சிவாஜியையும் அழைத்துச் செல்லாததற்குக் காரணம் ஷாஹாஜிக்கும் அவளுக்கும் ஏற்பட்டிருந்த இடைவெளியே என்பதை அவன் நன்றாக அறிவான். அதற்கு முன்பே கூட ஷாஹாஜி மனைவியை வேறு கோட்டைக்கு மாற்றினாரேயொழிய அவளைத் தன்னுடன் வரவழைத்து இருத்திக் கொள்ளவில்லை. அதுவும் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியையே சொன்னது. அப்படி இருந்த போதும் ஜீஜாபாய் கணவரை மரியாதைக் குறைவாகவோ, குற்றம் சாட்டியோ ஒருபோதும் சிவாஜியிடம் பேசியதில்லை….

இப்போதும் ஷாஹாஜி சாம்பாஜியை அழைத்துக் கொண்டு அங்கு வந்த நாள் சிவாஜிக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. சாம்பாஜி சற்று விலகியே இருந்த விதத்தில் ஜீஜாபாய் வருத்தப்பட்டதைப் பிறகு வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் முதலில் வாடிய காட்சியை சிவாஜியால் மறக்க முடியவில்லை. மூத்த மகன் இருப்பிடத்தில் மட்டுமல்லாமல் மனதளவிலும் தொலைதூரத்திற்குப் போய் விட்டதில் அந்தத் தாய்மனம் படாதபாடு பட்டிருக்க வேண்டும்….. ஆனாலும் அதை ஒருபோதும் இளைய மகனிடம் கூட மனம் விட்டுச் சொன்னதில்லை. இப்படி எத்தனையோ துயரங்களிலும் தகர்ந்து விடாமல் இருக்கும் தாய் மீது பாசத்துடன் சேர்ந்து அவனுக்குப் பல மடங்கு பெருமையும் இருந்தது.

மகன் அவள் சொல்லாமலேயே அவளுடைய ஆழமான உணர்வுகளைப் புரிந்து கொண்டது போல ஜீஜாபாயும் மகன் சொல்லாத பல விஷயங்களைப் புரிந்து கொண்டு பெருமிதம் கொண்டாள். அவளை விட்டு அவன் சகாயாத்ரி மலையில் மூன்று வருடங்கள் வாழ்ந்த போது இருந்த கரடுமுரடான சௌகரியமற்ற நிலைமைகள் பற்றி அவன் அவளிடம் சொல்லாவிட்டாலும் சத்யஜித் ஜீஜாபாயிடம் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் அவற்றை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறான். ”ஒருபோதும் சிவாஜி முகம் கூடச் சுளித்ததில்லை தாயே” என்று குரல் கரகரக்க சத்யஜித் சொன்ன போது ஜீஜாபாயின் கண்கள் குளமாயின.

அவளுடைய மகன் வீரன், வித்தியாசமானவன், வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உள்ளவன், எல்லா சந்தர்ப்பங்களிலும் சூழல்களை விட மேலே இருந்து இயங்கக்கூடியவன் என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. அவன் வயதுப் பிள்ளைகள் போல அவன் குடியிலும் கேளிக்கைகளிலும் அதிகக் காலம் கழிப்பதில்லை. அவனிடம் சுயக்கட்டுப்பாடும், சாதிக்கத் துடிக்கும் அக்னியும் தெளிவாகவே தெரிகிறது. ”ஷிவாய் தேவி அருளைப் பெற்றவன் அவன். கண்டிப்பாக ஒரு நாள் சரித்திரம் படைப்பான்!” என்ற நம்பிக்கை ஜீஜாபாய் மனதில் இருந்தது. ஆனால் அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் அதற்கான சூழ்நிலைகள் தான் தென்படவில்லை….

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Informative and interesting. It is apt time to know chatrapathi Sivaji's story. Thank you sir.

    ReplyDelete
  2. சுஜாதாApril 16, 2018 at 5:27 PM

    சிவாஜி சூப்பர். பிரிவினை பற்றி தாதாஜி சொன்னது 100% சரி.ஷாஜஹானின் தாய் ராஜபுதனத்து இளவரசி என்பது இப்போது தான் தெரிகிறது. சிவாஜியின் வளர்ச்சியை நேரில் பார்ப்பது போல் உணர்கிறோம்.

    ReplyDelete
  3. இந்த வார தொடரும் அருமை...சார்...
    சிவாஜியின் வளர்ச்சியை படிபடியாக கூறியது அருமை...

    ReplyDelete
  4. அருமையான நடையில் சிவாஜியின் சரித்திரம் திகட்டாத தேன். வரும் வார எதிர்பார்ப்புடன்

    சீதாலட்சுமி

    ReplyDelete