என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, April 9, 2018

சத்ரபதி 15


ங்கள் வாழ்க்கையில் அமைதி திரும்பியது இறைவனின் ஒரு வரப்பிரசாதம் என்றால் எல்லாவற்றையும் நிர்வகிக்க தாதாஜி கொண்டதேவ் வந்தது இன்னொரு வரப்பிரசாதம் என்று ஜீஜாபாய் நம்பினாள். அவரிடம் அப்பழுக்கில்லாத நேர்மை இருந்தது, தொலைநோக்குடன் கூடிய நிர்வாகத் திறமை இருந்தது. ஆன்மீக ஞானம் ஆழமாக இருந்தது. புராணங்களையும், வேதங்களையும், பகவத் கீதையையும் ஆழமாகப் படித்திருந்தார். தற்காப்புக்கலைகளிலும் அவர் வல்லவராக இருந்தார். அத்தனையும் தன் மகன் சிவாஜியின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் என்று ஜீஜாபாய் நம்பினாள். அப்படியே பயன்பட்டது.

அதிகாலையில் அவர் எழும் போதே சிவாஜியும் எழுந்து விடுவான். இருவரும் மூதா நதியில் குளிக்க செல்வார்கள். தாதாஜி கொண்டதேவ் அங்கேயே சூரியோதயம் வரை ஜபம் செய்து கொண்டிருப்பார். சிவாஜி நதியில் நீந்தி விளையாடிக் கொண்டிருப்பான். பின் இருவரும் அங்கேயே சூரிய நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்புவார்கள். பின் விற்பயிற்சி, வாட்பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகள் சிவாஜிக்குத் தரப்படும். சில பயிற்சிகளை தாதாஜி கொண்டதேவும், சில பயிற்சிகளை வேறு நிபுணர்களும் கற்றுத்தந்தார்கள். சிவாஜியின் சில நண்பர்களும் அந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்வார்கள். ஜீஜாபாய் கூர்ந்து மகனுடைய பயிற்சிகளைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள்.

பயிற்சிகளின் போது தன் மகன் மற்றெல்லாரையும் விட மாறுபட்டும் உயர்ந்தும் இருப்பதைக் கவனிக்கையில் அவள் உள்ளம் பெருமிதத்தால் நிறையும். பயிற்சி தரப்படும் போது உன்னிப்பாகக் கூர்ந்து கவனிப்பதில் சிவாஜி மற்றெல்லாரையும் விட பலபடிகள் உயர்ந்திருந்தான். கவனித்ததைப் பின்பற்றுவதிலும் அவனிடம் ஒரு அசாதாரணத் தீவிரமும், கச்சிதமும் இருந்தது. குதிரையும், யானையும் அவனைப் பொருத்த வரை விலங்குகள் அல்ல. நண்பர்கள். பயிற்சி காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் அவன் அவைகளுடன் மிக நெருக்கமாய் இருந்ததால் அவை அவனுக்கு நன்றாகவே இசைந்து கொடுத்தன.

தாதாஜி கொண்டதேவ் தான் எதிர்பார்க்கும் தேர்ச்சி வரும் வரை தன் மாணவர்களை இளைப்பாற விடாதவராக இருந்தார். சிவாஜியோ அவரே திருப்தி அடைந்தாலும் மேலும் ஓரிரு நிலைகள் உயராமல் திருப்தி அடையாதவனாக இருந்தான். அப்படி அவன் மேல்நோக்கிய பயிற்சிகளில் ஈடுபடும் போது ஜீஜாபாயைப் போலவே தாதாஜி கொண்டதேவும் தன் மாணவனுடைய திறமையில் பெருமிதம் கொண்டவராக இருந்தார். மற்ற மாணவர்கள் சிவாஜியைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மதிய உணவுக்குப் பின் சிறு இளைப்பாறல் தொடரும். பின் மாலையில் பிரார்த்தனை, புராணக்கதைகள், பகவத் கீதை, ஞானதேவரின் ஆன்மிகப்பாடல்கள் என்று இரவு வரை பொழுது நகரும். தாதாஜி கொண்டதேவ் இராமாயண, மகாபாரதப் பகுதிகளை இசையோடு பாடிச் சொல்வார். காட்சிகள் அனைவரின் மனக்கண்ணிலும் விரியும். பீமனின் சாகசங்கள், அர்ச்சுனனின் வில்வித்தைகள், பரந்தாமனின் சூட்சுமங்கள் எல்லாம் விவரிக்கப்படுகையில் சிவாஜி அந்தக் காட்சியை மனதில் கண்டு கருத்தை அறிவில் பதித்துக் கொள்வான். அந்தக் காட்சிகள் ஓரளவு ஜீஜாபாய் மூலம் அவன் அறிந்தவை என்றாலும் தாதாஜி கொண்டதேவின் விவரிப்புகள் மேலும் விஸ்தாரமாக இருக்கும். அதையெல்லாம் சற்று தள்ளி அமர்ந்து ஜீஜாபாயும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருப்பாள்.

கதைப்பகுதிகளில் மாணவர்களுக்கு இருந்த ஆர்வம், ஞானதேவரின் ஆன்மிகப் பாடல்களுக்கு வரும் போது குறைந்தே இருக்கும். பகவத் கீதை மற்றும் தத்துவ சிந்தனைகளுக்கு தாதாஜி கொண்டதேவ் வரும் போது முழுவதுமாகப் புரிந்து கொள்வது சிவாஜி ஒருவனாகவே இருக்கும். சிலர் உறங்கி விடுவார்கள். சிலர் நகர்ந்து விடுவார்கள். ஜீஜாபாய் கூட பாதி புரிதலில் தான் காது கொடுத்துக் கேட்பாள். அந்த தத்துவார்த்த நேரங்களில் தாதாஜி கொண்டதேவும் சிவாஜியும் மட்டுமே ஒரே அலைவரிசைகளில் இருப்பார்கள்…..

சில நாட்களில் பிரார்த்தனைக்குப் பின் அரசியல் விளக்கப்படும். அலசப்படும். சிவாஜியுடன் அவன் நண்பர்கள் அனைவரும் மிக ஆர்வமாக அது குறித்த பேச்சுக்களில் கலந்து கொள்வார்கள். பீஜாப்பூர், கோல்கொண்டா, முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் பற்றியெல்லாம் பேசுவார்கள். சிவாஜி இரட்டிப்பு கவனத்துடன் கேட்பான். பேச்சு அரசியலுடன் மக்கள், சமூகம் என்றும் நகரும்…. 

ஒருநாள் சிவாஜி கேட்டான். “நம் மண் வளமுள்ளதாக இருக்கிறது. அருகிலேயே நதியும் இருக்கிறது. ஆனாலும் நாம் ஏன் விவசாயம் செய்வதில்லை?”

தாதாஜி கொண்டதேவ் வருத்தத்துடன் சொன்னார். “இங்கு முன்பெல்லாம் விவசாயம் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அறுவடை சமயத்தில் கொள்ளையர்களும், பக்கத்து நாட்டு வீரர்களும் வந்து விடுகிறார்கள். முழுவதுமாக அதை எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அறுவடையோடு, மக்களையும் கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். உழைத்துப் பலன் அனுபவிப்பதற்குப் பதிலாக கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தால் யார் தான் உழைப்பார்கள்?”

“கொள்ளையர்களையும், வீரர்களையும் தாக்கி விரட்ட முடியாதா?” சிவாஜி ஆதங்கத்துடன் கேட்டான்.

“நம்மிடம் இருக்கிற மிகச்சிறிய படையை வைத்துக் கொண்டு அதைச் செய்ய முடியாது சிவாஜி” தாதாஜி கொண்டதேவ் யதார்த்த நிலையைச் சொன்னார்.

“சகாயாத்ரி மலைத்தொடரில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். வேலை எதுவும் இல்லாமல உண்டு, குடித்து, உறங்கி வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் படை பலத்தைப் பெருக்கினால் என்ன?” சிவாஜி மெல்லக் கேட்டான்.

ஜீஜாபாயும், தாதாஜி கொண்டதேவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். தாதாஜி கொண்டதேவுக்கு அது நல்ல யோசனையாகத் தோன்றியது. சிறிது யோசித்து விட்டுத் தயக்கத்துடன் கேட்டார். “சோம்பல் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்ட அவர்களில் எத்தனை பேர் நாம் அழைத்தால் வருவார்கள்?”

சிவாஜி சொன்னான். “அவர்களுக்கு வேறு மார்க்கம் எதுவும் இல்லாததால் தான் அப்படி வாழ்கிறார்கள். வழி இருக்கிறது என்று காட்டினால் வருவார்கள். பத்தில் இருவர் வராமல் இருக்கலாம். மற்றவர்கள் வருவார்கள் என்றே நினைக்கிறேன்….”

தாதாஜி கொண்டதேவ் யோசித்தார்…. அவர்கள் பேச்சைத் தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த சத்யஜித் சொன்னான். “சிவாஜி சொல்வது சரியே. வலிமையும், திறமையும் கொண்ட எத்தனையோ பேர் வழிகாட்ட ஆள் இல்லாமல் எங்கள் மலைப்பகுதியில் இருக்கிறார்கள். ஒரு நல்ல, கௌரவமான வாழ்க்கைக்கு வழி இருக்கிறது என்றால் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள்”

தாதாஜி அடுத்ததாய் இருக்கும் பாதக நிலைமையைச் சொன்னார். “விவசாயம் செய்ய இப்போது ஆட்களும் இல்லை. நதியோரத்தில் வசிப்பவர்கள் மீனவர்களாகவே இருக்கிறார்கள்…”

சிவாஜி தாதாஜி கொண்டதேவிடம் சொன்னான். “அதற்கும் மலைவாழ் மக்களையே நாம் வரவழைக்கலாம். நானும், மாமாவும், நண்பர்களும் போய் அவர்களிடம் சென்று பேசுகிறோம். ஆனால் அவர்கள் எங்களை மட்டுமே நம்பி வர யோசிப்பார்கள். நீங்களும் எங்களுடன் வந்தால் விளையாட்டாகச் சொல்லவில்லை என்பதை அவர்கள் நம்புவார்கள்”

தாதாஜி கொண்டதேவுக்கு அதுவும் நல்ல யோசனையாகத் தான் தோன்றியது. அவர் ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் தலையசைத்தாள்.

மறுநாளே சிவாஜி தன் நண்பர்களுடனும் சத்யஜித்,, தாதாஜி கொண்டதேவுடனும் சகாயாத்ரி மலைத்தொடருக்குச் சென்றான். சத்யஜித்தையும், சிவாஜியையும் சகாயாத்ரி மலைத்தொடரின் இளைஞர்கள் நன்றாகவே அறிந்திருந்ததால் நட்புணர்வுடன் கூடி அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார்கள்.

“நாங்கள் வாள்பிடித்து போர் புரிய அறியாதவர்கள்… குதிரைகள் எங்களுக்குப் பழக்கமில்லாதவை…..” என்று ஒரு இளைஞன் சொன்னான்.

தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “நாங்கள் அனைத்தையும் கற்றுத் தருகிறோம்”

“உங்கள் பூமியில் விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கும் நீங்கள் எங்களிடம் பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறீர்கள்” ஒருவர் கேட்டார்.

“விளைச்சலில் ஒரு பங்கைக் கொடுங்கள் போதும். உங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் முழு உதவி செய்வோம் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கிறேன்…..” தாதாஜி கொண்டதேவ் உறுதியாகச் சொன்னார்.

சகாயாத்ரி மலைவாழ் மக்களுக்கு எல்லாம் பிரமிப்பாகவே இருந்தது என்பதை அவர்களைப் பார்க்கும் போதே சிவாஜி உணர்ந்தான். பாதி தூரம் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டதாக அவன் உள்ளுணர்வு சொன்னது.

மீதி தூரத்திற்கும் இழுக்க அவன் அமைதியாகவும், ஆத்மார்த்தமாகவும் சொன்னான். “நான் உங்களுடன் மூன்று வருட காலம் வாழ்ந்திருக்கிறேன்….. உங்கள் வாழ்க்கையை அறிவேன். உங்களில் சிலர் வீண் வாழ்க்கை வாழ்கிறீர்கள். சிலர் வழிப்பறிக் கொள்ளையர்களாகக் கூட எத்தனையோ பேரின் சாபங்களைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கேவலமும், பாவமும் தேவையா? உங்களுக்கு என்று ஒரு கௌரவமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இறைவன் எங்கள் மூலம் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று உணருங்கள்…..”

அவன் வார்த்தைகளில் கலந்திருந்த ஏதோ ஒன்று அவர்களை அசைத்தது போல் இருந்தது. அன்று ஒரு பெரிய கூட்டம் புதிய வாழ்க்கைக்காக மலையிலிருந்து கீழிறங்கியது.

(தொடரும்)

என்.கணேசன்

5 comments:

  1. சுஜாதாApril 9, 2018 at 6:24 PM

    கண்முன் காட்சிகள் விரிகின்றன. சிவாஜி எப்படி உயர்கிறான் என்பதைக் காட்டியிருக்கும் விதம் அருமை. அந்த மலைவாழ் மக்களை மாற்றும் விதத்திலேயே அவன் தலைமைப்பண்பு தெரிகிறது.

    ReplyDelete
  2. அந்தகால கல்வி முறையை... இக்கால கல்வி முறையுடன் ஒப்பட்டு பார்க்கும் போது... நாம் முக்கியமான ஒரு பகுதியை இழந்ததாக தோன்றுகிறது....

    சிவாஜியின் யோசனை மற்றும் செயல்படுத்தும் விதம்.... அருமை

    ReplyDelete