சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 23, 2018

சத்ரபதி – 17


றிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்த ஷாஹாஜி அதை அடுத்த இரண்டு நிலப்பகுதிகளையும் பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவிடமிருந்து பெற்று அதையும் தாதாஜி கொண்டதேவிடம் ஒப்படைத்தார்.

அக்காலத்தில் சுல்தான்களும், பேரரசர்களும் இப்படிச் சில நிலப்பகுதிகளைத் தருவது ஜாகிர் முறைகளில் இருந்தது. சில ஜாகிர்களில் முழுமையான நில உரிமையும் சேர்த்தே தரப்பட்டது. சில ஜாகிர்களில் நிர்வாகமும், வரி வசூல் உரிமையும் மட்டுமே தரப்படும். அப்படி வசூலிக்கப்படும் வரி செலவுகள் போக திரும்பவும் அரசர்களுக்கே திரும்பவும் செலுத்த வேண்டும். சில ஜாகிர்களில் வரி வசூலுடன், சிறு படையும் சேர்ந்தே தரப்படும். தரப்படும் நபருக்குத் தகுந்தாற்போல் இந்த ஜாகிர் முறை அமையும். ஷாஹாஜிக்கு ஆதில்ஷாவால் வழங்கப்பட்ட ஜாகிர் முழுமையான நில உரிமையும் சேர்ந்தே தரப்பட்டதாக இருந்ததால் அந்தப் பகுதிகளில் எதைச் செய்யவும் பூரண உரிமை இருந்தது. அதனால் புதிய பகுதிகளிலும் இந்த மக்கள் குடியேறி. இங்கு நடத்தப்படும் முயற்சிகள் அங்கும் நடைபெற ஆரம்பித்தன.

தாதாஜி கொண்டதேவ் சிவாஜி, ஜீஜாபாயிற்காக ஒரு மாளிகையையும் பூனாவில் கட்ட ஆரம்பித்தார். சகாயாத்ரி மலைத்தொடரில் ஒரு பகுதியில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். மாவல் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசம் சிவாஜி அதிக காலத்தைக் கழிக்கும் ஒரு பகுதியாக இருந்தது. நண்பர்களுடன் சில சமயங்களில் அப்பகுதியில் உலாவும் சிவாஜி சில சமயங்களில் தனிமையை விரும்பி தனிமையிலேயே உலாவுவான். அந்தப் பகுதியின் குகைகள், குன்றுகள், பொந்துகள், அருவிகள், மறைவிடங்கள் ஒவ்வொன்றையும் அவன் அறிவான். அங்குள்ள விலங்குகளை அறிவான். அப்பகுதிகளில் வசித்த பழங்குடிகளை அவன் அறிவான். சில வருடங்களுக்கு முன் சத்யஜித்துடன் அவன் வாழ்ந்த  பகுதிகள் அவை. அவனைப் பொருத்த வரை அவை வெறும் கல்லும், மண்ணும், பாறைகளும், அருவிகளும் அல்ல. ஆட்களையும், விலங்குகளையும் போலவே ஆத்மார்த்தமாய் அவனுடன் தொடர்புடையவை…. சில சமயங்களில் சில மைல்கள் தள்ளியுள்ள ஞானதேவரின் ஜீவசமாதிக்குச் சென்று தனியே அங்கு அமர்ந்திருப்பான். 

அந்த நேரங்களில் அவன் என்ன நினைக்கிறான் என்பது ஜீஜாபாய்க்குத் தெரியாது. ஆனால் மகன் அடிக்கடி தனிமையை நாடியது ஒரு விதத்தில் அவளைப் பயமுறுத்தியது. அவன் வயதில் யாருமே அப்படித் தனிமையை நாடியதில்லை. போதையில் வேண்டுமானால் அப்படித் தனிமையில் விழுந்து கிடப்பார்களே ஒழிய முழு உணர்வோடு தனிமையில் உலா போவதில்லை. போதையில் விழுந்து கிடப்பவர்கள் கூட போதை தெளிந்தவுடன் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள வந்து விடுவார்கள். ஆனால் சிவாஜி ஏதோ ஒரு சிந்தனை உலகில் இருந்து விட்டு செயல்பட வேண்டும் என்று தோன்றும் போது தான் மலையை விட்டு இறங்கி வருவான். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தாயுடன் பகிர்ந்து கொள்ளும் அவன் தன் சில சிந்தனைகளை அவளுடனும் பகிர்ந்து கொண்டதில்லை. அவன் பகிர்ந்து கொள்ளாத சிந்தனைகள் யாரோ ஒரு இளம் பெண்ணைப் பற்றியதாக இருந்திருந்தால் கூட அவளால் அவனைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும், கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவன் தனிமை ஒரு துறவியின் தனிமையாய் சில சமயங்களில் தோன்றியது தான் அவளைப் பயமுறுத்தியது. ஒரு பேரரசனாக ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட மகன் துறவியாய் மாறுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில் தன் கணவன் அங்கு இல்லாததன் இழப்பை அவள் அதிகம் உணர்ந்தாள். மகனைப் பற்றி கணவனிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடம் ஒருத்தி பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஆனால் அந்தத் தனிமைகளை சிவாஜி நாடியது சில சமயங்களில் மட்டுமே. மற்ற சமயங்களில், வீரமும், உயிர்ப்பும், துடிப்பும் இருக்கிற அனைவரும் நேசிக்கிற, அனைவருடனும் அன்பாய் நெருங்கிப் பழகுகிற ஒருவனாக இருப்பான். அதைப் பார்க்கும் போது பயந்தது வீண், அவன் சரியாகத் தான் இருக்கிறான் என்று அவளுக்குத் தோன்றும்.

அவன் அப்படித் தனிமையை நாடாத சமயங்களில் ஒரு வீர மகனாய் நடந்து கொள்வான். அவன் உடற்பயிற்சிகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் தாதாஜி கொண்ட தேவின் எதிர்பார்ப்பை விட ஒவ்வொரு கட்டத்திலும் ஒருபடி மேலாக இருந்தான். தன் வீரப்பேச்சால் அனைவரையும் வசீகரிக்கிற ஒரு தலைவனாக இருந்தான். வீரர்கள் அனைவரும் அவன் பேச்சை மிக உன்னிப்பாய் கேட்டார்கள். அவன் சொன்னதைக் கேட்கவும், பின்பற்றவும் தயாராக இருந்தார்கள். நம் மண், நம் கலாச்சாரம், நாம் உயர வேண்டிய உயர்வு என்றெல்லாம் அவன் பேசியது அவர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை ஜீஜாபாயும், தாதாஜி கொண்ட தேவும் பெருமிதத்துடன் கவனித்தார்கள்.

காந்தமாக மக்கள் அவனால் கவரப்பட்டார்கள். அதனால் அவன் வாழ்வில் தந்தையை விடக் கண்டிப்பாக மேலே உயர்வான், தந்தை பெற்றிருக்கும் பகுதிகளை அதிகமாய் பெறுவான் என்று தாதாஜி கொண்டதேவ் கணித்தார். முயன்றால் பீஜாப்பூர் சமஸ்தானத்தில் அவன் முதலிடம் கூடப் பெறுவான் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை அவனிடம் சொன்ன போது அவர் சொன்னதை அவன் உயர்வான நிலையாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதை மரியாதையோடு அவன் வெளிப்படையாக அவரிடம் தெரிவித்தான். “அடுத்தவர் அரசவையில் முதலிடம் பெற்றால் கூட அது பெருமை என்று நான் நினைக்கவில்லை ஆசிரியரே”

தாதாஜி கொண்டதேவ் திகைத்தார் “பின் எதை உயர்ந்த நிலை என்று நினைக்கிறாய் சிவாஜி?”

“யாருக்கும் பணிந்து சேவகம் செய்யாத நிலை, நம் பூமியை நாமே ஆள்கின்ற நிலை - இதையே கௌரவமான நிலை என்று நினைக்கிறேன் ஆசிரியரே”

தாதாஜி கொண்டதேவ் அதிர்ந்தார். தன் மாணவன் தலைசிறந்த வீரனாய் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அரசருக்கு எதிராகப் பேசுவதும், அவருக்குக்கூடப் பணிய மறுப்பதும் ராஜத்துரோகம் என்கிற சிந்தனையை அவரால் தாண்ட முடிந்ததில்லை.

தாதாஜி கொண்டதேவ் பொறுமையாக விளக்க முயன்றார். “சிவாஜி நீ இரண்டு வீர வம்சங்களின் வழித்தோன்றல். உன் வீரம் எனக்குப் பெருமை தருகிறது. ஆனால் உன் தந்தையின் தந்தை அகமதுநகர் சுல்தானிடம் சேவகம் செய்தவர். உன் தாயின் தந்தை சிந்துகேத் அரசராக இருந்த போதிலும் கூட அகமதுநகர் சுல்தானிடம் ஒரு காலத்திலும், முகலாயச் சக்கரவர்த்தியிடம் ஒரு காலத்திலும் சேவகம் புரிந்தவர். இது கௌரவக் குறைவு அல்ல….”

“அவர்களை நான் குறைத்துச் சொல்லவில்லை ஆசிரியரே. அவர்கள் தங்கள்  சூழ்நிலையில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். நாமும் இப்போது நம்மால் முடிந்ததையே செய்கிறோம். நாளையும் அப்படியே நானும் செய்யக்கூடும். ஆனாலும் சமமில்லாத எந்த நிலையும் பெருமைக்குரிய நிலையல்ல என்றே நான் நம்புகிறேன். நம் தனித்தன்மைகளையும், அடையாளங்களையும் தொலைத்துப் பெறக்கூடிய எந்த இலாபமும் பெருமை அல்ல. பிணைக்கப்பட்டிருப்பது தங்கச் சங்கிலியிலேயே ஆனாலும் அது சுதந்திரம் ஆக முடியுமா? நீங்கள் இராமனையும், பீமனையும், அர்ஜுனனையும் சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினீர்களே, அவர்கள் தன்மானத்தை விட்டு எங்காவது சேவகம் செய்தவர்களாக இருந்திருந்தால் அவர்களை வைத்து இதிகாசம் எழுதப்பட்டிருக்குமா? அவர்களை நாம் வீரர்களாக ஏற்றுக் கொண்டிருப்போமா?  நம் மண்ணில் நமதுரிமையை இழந்து விட்டு பிடுங்கிக் கொண்டவனை வணங்கிச் சேவகம் செய்து தங்கமும், வெள்ளியும், வைர வைடூரியங்களும் நிறைந்த மாளிகையில் வாழ்வதை விட ஒரு மலையிலும், காட்டிலும் காய்கனி உண்டு சுதந்திரமாய் வாழ்வது கூட நிச்சயமாய் பெருமையே அல்லவா?”

தாதாஜி கொண்டதேவ் பேச்சிழந்து போனார். அவன் சொன்னதை யாரோ ஒரு ஒற்றன் கேட்டு விட்டு பீஜாப்பூர் சுல்தானிடம் உளவு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவருக்குள் மேலிட்டது. சுற்றிலும் முற்றிலும் பார்த்தார். நல்ல வேளையாக ஜீஜாபாயைத் தவிர அங்கே வேறு யாரும் இருக்கவில்லை. ஜீஜாபாய் மகனைக் கண்டித்து ஏதாவது சொல்வாள் என்று எண்ணி அவர் அவளைப் பார்த்தாள். ஆனால் அவள் பூஜை பீடத்தில் இருந்த ஷிவாய் தேவியைப் பார்த்துக் கொண்டிருந்தாளேயொழிய வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

உண்மையில் ஜீஜாபாய் மகன் கருத்தில் முழு உடன்பாடுள்ளவளாக இருந்தாள். இந்த வார்த்தைகள், இந்த இளம் வயதில் அவன் வாயிலிருந்து வந்ததற்காக அவள் பெருமைப்பட்டாள். அவள் இப்படியொரு மகனைக் கொடு என்றல்லவா ஷிவாய் தேவியிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். உணர்வுகளிலும் வீரத்திலும் அப்படியே ஒரு மகனைக் கொடுத்த ஷிவாய் தேவி அவன் பெருமையென்று நினைக்கும் வாழ்க்கையையும் கூட அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அருள் புரிய வேண்டும் என்று அவள் மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய மௌனமும் தாதாஜி கொண்டதேவுக்கு ஆபத்தாகத் தோன்றியது. சிவாஜி நாளை ஏதாவது புரட்சியில் ஈடுபட்டு அவனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் ஷாஹாஜி அவரைக் குற்றப்படுத்துவாரோ என்ற அச்சம் அவருக்குள் எழுந்தது. ஷாஹாஜியிடம் நிர்வாகக் கணக்கை அவர் காட்டி ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. அதற்காகச் செல்லும் போது சிவாஜியின் இந்தப் புது சிந்தனைகளையும் தந்தையிடம் தெரிவித்து உஷார்ப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. சுஜாதாApril 23, 2018 at 7:19 PM

    சிவாஜியின் சிந்தனைகளும் சொல்கிற விதமும் சூப்பர். நிஜமாகவே சிவாஜி க்ரேட் தான்.

    ReplyDelete
  2. A great man's beginning is superbly expressed by you. All characters are shown in natural and in their own great way without any exaggeration. Great going.

    ReplyDelete
  3. சிவாஜியின் கருத்து உண்மையிலே சூப்பர்....‌ அதை எப்படி நிகழ்த்திக் காட்டுவான் என்பதை அறிய காத்திருக்கிறோம்...

    ReplyDelete