சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 26, 2018

சத்ரபதி – 9

யூப்கான் பீதியின் உச்சத்திற்கே போனான். மொகபத்கான் ஜீஜாபாய் சொன்னதை நம்பி அவனைச் சந்தேகப்படுவான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பயத்தில் அவன் நாக்கு நகர மறுத்தது. கஷ்டப்பட்டு பலவீனமாகச் சொன்னான். “என்னை சந்தேகிக்காதீர்கள் தலைவரே. இந்தப் பெண் ஒரு மாயக்காரி… இவள் தன் குழந்தையை எங்கோ மறைத்து வைத்திருக்கிறாள்…...”

ஜீஜாபாய் முகத்திலும் குரலிலும் இகழ்ச்சியைக் காட்டிச் சொன்னாள். “ரதத்தை சோதனையிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”

அந்தச் சிறிய ரதத்தைச் சோதனையிடத் தேவையே இருக்கவில்லை. திரைச்சீலை விலகி, இருந்த ஒரே இருக்கையில் ஒரு பட்டுத்துணிப்பை மட்டுமே தெரிந்தது. தலையணை கீழே விழுந்திருந்தது. அயூப்கான் பதற்றம் அதிகமாகி அந்தப் பட்டுத்துணிப்பையைத் திறந்து உள்ளே குழந்தை இருக்கிறானா என்று பார்த்தான். அங்கே துணிமணிகள் மட்டுமே இருந்தன. அவன் பரிதாபமாகத் திரும்பிப் பார்க்கையில் இகழ்ச்சியுடன் மொகபத்கான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏளனமாக மொகபத்கான் சொன்னான். “ரதத்தின் கூரையிலும் ஏறிப்பார். அங்கே இவள் குழந்தையை வைத்திருந்தாலும் வைத்திருப்பாள்…..”

பீதியுடன் ரதத்தின் உச்சியைப் பார்த்த அயூப்கான் இனி என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவள் குழந்தையை பைசாப்பூரிலேயே விட்டு வந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் அவனுக்கு வலுத்தது. அப்படி குழந்தையை அங்கேயே விடுமளவு சந்தேகம் உள்ளவள் எப்படி அவனை நம்பி கூட வந்தாள் என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லாததால் பரிதாபமாக அவன் நின்றான்.

மொகபத்கான் தன் படைவீரர்களைப் பார்த்துச் சொன்னான். “இருவரையும் சிறைப்படுத்தி வையுங்கள். உண்மை வெளிவருகிறதா என்று பார்ப்போம்…..”


சிந்துகேத் அரண்மனைக்கு லாக்கோஜி ஜாதவ்ராவின் தம்பியும், தற்போதையத் தலைவருமான போத்தாஜிராவ் திடீரென்று வந்து சேர்ந்ததும் உடனடியாகக் காண விரும்பியதும் ஜீஜாபாயின் தாய் மால்சாபாய்க்கு அவசர முக்கியச் செய்தி இருப்பதை உணர்த்தியது. படித்துக் கொண்டிருந்த இராமாயணத்தை மூடி வைத்து விட்டுத் தன் மைத்துனனை வரச் சொன்னார். தாதி சென்று சொன்னவுடன் போத்தாஜிராவ் கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தார்.  சொல்லப் போகிற செய்தி சுபமானதல்ல என்பதை உடனே உணர்ந்தார் மால்சாபாய்.

காலைத் தொட்டு வணங்கிய மைத்துனனுக்கு தீர்க்காயுள் வாய்க்க ஆசி சொன்ன மால்சாபாய் ”என்ன செய்தி மைத்துனரே?” என்று கேட்டார்.

“ஜீஜாபாய் மொகபத்கானால் கைது செய்யப்பட்டிருக்கிறாள் அண்ணியாரே”

மால்சாபாய் அதிர்ந்து போனார். அவர் பார்வை சற்று முன் மூடிவைத்த  இராமயண புத்தகத்தின் மீது விழுந்தது. அவரது மகளுக்கும்  சீதாபிராட்டி போல கஷ்டங்கள் தீராமல் வந்து கொண்டிருக்கின்றன….. கண்கள் ஈரமாக, போத்தாஜிராவிடம் சொன்னார். “அமருங்கள் மைத்துனரே. என்ன நடந்ததென விரிவாகச் சொல்லுங்கள்….”

போத்தாஜிராவ் விரிவாகச் சொன்னார். முழுவதையும் கேட்டுவிட்டு மால்சாபாய் தாங்க முடியாத வருத்தத்துடன் சொன்னார். “என் மகள் ஷாஹாஜியை என்றைக்குத் திருமணம் செய்து கொண்டாளோ அன்றிலிருந்தே அவளுக்கு கஷ்டங்கள் ஆரம்பமாகி விட்டன மைத்துனரே. அவன் மறுமணமும் செய்து கொண்டு விட்டான். அவன் மூத்த குழந்தையையும் அவளிடம் அனுப்பி வைக்கவில்லை. இப்போது இரண்டாவது குழந்தையும் அவளுடன் இல்லை. புகுந்த வீட்டின் தயவையும் அவள் விரும்பவில்லை. இப்போது சிறைப்படுத்தப்படும் கொடுமையும் நடந்திருக்கிறது. விதி அவள் வாழ்வில் ஏன் இப்படிச் சதி செய்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. பிள்ளளைகளுக்கு நேரும் கஷ்டங்கள் பெற்றவர்களை இரட்டிப்பாய் வேதனைப்படுத்துகிறது. வணங்குபவர்களைச் சோதிப்பதில் இறைவனுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை…..”

போத்தாஜிராவ் வேதனையுடன் மௌனமாக இருந்தார். மால்சாபாய் கண்களைத் துடைத்தபடி கேட்டார். “குழந்தை இப்போது எங்கே இருக்கிறது? அயூப்கான் சொல்வது உண்மையா, ஜீஜாபாய் சொல்வது உண்மையா?”

”அயூப்கான் சிறையில் புலம்பிக் கொண்டே இருக்கிறான். நூறு ஷாஹாஜி ஒரு ஜீஜாபாய்க்கு இணையாக மாட்டார்கள். ஜீஜாபாய் அந்த அளவு அபாயமானவள் என்கிறான்…. ஆனால் மாறாக ஜீஜாபாய் அவளது சிறையில் கவலையுடன் இருந்தாலும் அமைதியாகவே இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.   அயூப்கானின் படைவீரர்கள் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில் அயூப்கான் சொல்வதே உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மொகபத்கானோ அவனுடைய அதிகாரிகளோ விசாரிக்கச் செல்லும் போதெல்லாம் ஜீஜாபாய் அவர்களிடம் என் மகன் எங்கே, அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று உருக்கமாய் கேட்டுக் கொள்கிறாள். அதனால் மொகபத்கான் அவளைத் தான் நம்புகிறான். ஜீஜாபாயின் வாதப்படி ஆரம்பத்திலேயே அயூப்கான் மீது அவளுக்குச் சந்தேகமிருக்குமானால் அவள் அவனுடன் கிளம்பியே இருக்க மாட்டாள் என்பதும், வழியில் குழந்தையை அவள் தப்பிக்க வைத்திருக்க வழியே இல்லை என்பதும் மொகபத்கானுக்கு அவள் சொல்வதை நம்ப வைத்திருக்கிறது போலத் தோன்றுகிறது….”

“உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் மைத்துனரே?” மால்சாபாய் குழப்பத்துடன் கேட்டார்.

“அவள் அயூப்கான் சொல்வதை நம்பிக் கிளம்பியிருக்க வேண்டும். கிளம்பும் போது ஏதாவது சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். முதலில் நாம் போவோம். பாதுகாப்பாய் போய்ச் சேர்ந்து விட்டால் பின் மகனை வரவழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து குழந்தையை அங்கேயே விட்டு வந்திருக்கலாம்….”

“அப்படியானால் குழந்தை தற்போது பைசாப்பூரில் தான் இருக்கிறானா?”

“குழந்தை அங்கேயும் இல்லை என்ற நம்பகமான தகவல் மொகபத்கானுக்குக் கிடைத்திருக்கிறது….. குழந்தை எங்கே என்பது ஜீஜாபாய்க்கு மட்டுமே தெரிந்த தகவலாக இருக்கிறது….. ஆனால் அவள் அடிக்கடி எங்கே என் மகன், அவனைத் தயவுசெய்து என்னுடன் இருக்க விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாளாம். அதனால் மொகபத்கான் குழம்பிப் போயிருக்கிறான்….”

மால்சாபாயின் முகத்தில் பெருமிதப் புன்னகை மலர்ந்தது. “என் மகள் அழுத்தக்காரி மைத்துனரே. அயூப்கான் அவளைக் குறைத்துச் சொல்லி விட்டான். நூறு ஷாஹாஜி அல்ல ஆயிரம் ஷாஹாஜியும் என் மகளுக்கு இணையாகாது. இதை ஆரம்பத்திலேயே நான் உணர்ந்திருந்தேன். உங்கள் அண்ணாவின் நாக்கில் அந்த ஹோலி நாளில் சனி தங்கியிராவிட்டால் அவள் வாழ்க்கை இப்படி மோசமாகப் போயிருந்திருக்காது. என்ன செய்வது!  பார்க்க அழகாய் இருக்கிறானே ஒழிய ஷாஹாஜிக்கு அறிவு போதாது. அறிவிருந்தால் வலிமையில்லாத நிலையில் இருக்கும் அவன் முகலாயர்களைப் பகைத்துக் கொள்வானா?”

“ஷாஹாஜி பீஜாப்பூர் சுல்தான் தன் பக்கம் இருப்பதால் முகலாயர்களுடன் மோதிப் பார்க்கும் தைரியம் பெற்றிருக்கிறான் அண்ணியாரே”

”அவன் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியிருக்கிறான் மைத்துனரே. பீஜாப்பூர் சுல்தான் பலம் என்ன? முகலாயப் பேரரசின் பலம் என்ன? கடைசியில் பிரச்சினை வந்தால் பீஜாப்பூர் சுல்தான் சற்றும் யோசிக்காமல் ஷாஹாஜியை விட்டு விலகி விடுவான். அது தான் நடக்கப் போகிறது பாருங்கள்……”

போத்தோஜிராவ் மால்சாபாயின் கருத்தில் உடன்பட்டார். முகலாயப் பேரரசின் முழுக்கவனம் ஷாஹாஜியின் மீது திரும்பினால் கண்டிப்பாக ஷாஹாஜியால் தாக்குப்பிடிக்கவே முடியாது….

“ஜீஜாபாய் விஷயத்தில் என்ன செய்வது அண்ணியாரே?” அவர் கேட்டார்.

”மொகபத்கானிடம் பேசுங்கள் மைத்துனரே. ஜீஜாபாய் பெயரளவில் தான் ஷாஹாஜியின் மனைவி என்பதையும் ஷாஹாஜியின் வாழ்க்கையில் ஜீஜாபாய்க்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதையும் சொல்லுங்கள். ஜீஜாபாய் சிந்துகேத் அரசவம்சத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துங்கள்….”

போத்தோஜிராவ் எழுந்தார். பின் மெல்லக் கேட்டார். “நான் ஜீஜாவைச் சந்தித்துப் பேசட்டுமா அண்ணியாரே?”

“வேண்டாம் மைத்துனரே! நம்மை மதிக்காதவர்களை நாமும் சென்று பார்க்க வேண்டியதில்லை…. எட்ட இருந்து கொண்டே அவள் வாழ்க்கையைச் சுலபமாக்குவோம். அது போதும்.” மால்சாபாய் உறுதியாகச் சொன்னார்.


கமதுநகரின் மறைவிடம் ஒன்றில் தங்கியிருந்த ஷாஹாஜி அயூப்கானின் வஞ்சகத்தைக் கேட்டதிலிருந்தே மனம் கொதித்துக் கொண்டிருந்தார். ஒரு கோட்டைத் தலைவனாய் இருப்பவன், ஷாஹாஜியுடன் பல காலம் பழகியும் பணிந்தும் இருந்தவன் இத்தனை நீச்சத்தனமாய் இறங்குவான் என்று ஷாஹாஜி எதிர்பார்த்திருக்கவில்லை. எதோ ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும் என்ற நிலை வந்த போது முகலாயர் பக்கம் அவன் சாய நினைத்ததை ஷாஹாஜி தவறாக நினைக்கவில்லை. ஆனால் அதற்கு அயூப்கான் தேர்ந்தெடுத்த வழி ஒரு வீரன் நினைத்துப் பார்க்கவும் கூசுகிற வழி. ஜீஜாபாய் தான் ஏமாந்து போனாலும் அயூப்கானையும் சிக்க வைத்துப் பழி வாங்கிய விதம் மனக்கொதிப்பை ஓரளவு ஆற வைத்தது. மகனைப் பத்திரமாகத் தன்னுடன் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது பீஜாப்பூரில் சாம்பாஜியுடன் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தார். சாம்பாஜி இது வரை தம்பியைப் பார்த்ததும் இல்லை….. ஜீஜாபாயைப் பொறுத்த வரை அவளை முகலாயர்கள் கொடுமைப்படுத்தவோ, கீழ்த்தரமாக நடத்தவோ துணியாதபடி அவளுடைய பிறந்த வீட்டார் பார்த்துக் கொள்வார்கள்…..

பைசாப்பூரில் ரகசியமாக சத்யஜித் சிவாஜியைத் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பதை அவர் ஆட்கள் தெரிவித்தார்கள். சில நாட்களாகவே ஜீஜாபாய் அவனிடம் தான் மகனை அதிக நேரம் விட்டிருந்தாள் என்றார்கள். அவர் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான வீரர்கள் பலர் இருக்கையில் அவர்களை எல்லாம் விட்டு விட்டு அவரே அதிகம் அறியாத சத்யஜித் என்பவனிடம் சிவாஜியை ஜீஜாபாய் ஒப்படைத்ததில் அவருக்குத் திருப்தி இல்லை…. ஜீஜாபாய் முட்டாள் அல்ல. புத்திசாலி. அதனால் அவள் முழு நம்பிக்கை வராமல் ஒருவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டாள் என்றாலும் இது தேவையில்லாத சிக்கலாக அவருக்குத் தோன்றியது. சிவாஜி எதிரிகள் கையில் கிடைப்பதற்கு முன் அவனைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக சத்யஜித்தைத் தேடிக் கண்டுபிடித்து சிவாஜியைத் தருவிக்க தன் நம்பிக்கைக்குரிய சிலரை ஷாஹாஜி அனுப்பி வைத்தார்.

(தொடரும்)    
என்.கணேசன்

6 comments:

  1. என்ன சார் இந்த வரலாற்று நாவலில் கூட இப்படி திக் திக் நிலைமையை உருவாக்கிறீங்க. ஜீஜாபாயின் தாய் மனதை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கீங்க.

    ReplyDelete
  2. jijabai's handling things and her mother's concern as well as her dignity picturized superbly.

    ReplyDelete
  3. excellent writing coated with suspense rolling around....

    ReplyDelete
  4. Wow......mother and daughter ......what a combination.....ஒருவருக்கு ஒருவர்
    சளைத்தவர்கள இல்லை ......மதிக்க வில்லை என்றாலும் எட்ட இருந்து வாழ்வை சுலபமாக்குவோம்........இதுதான் அம்மா.....

    ஷாஹாஜி, சிவாஜியை கண்டு பிடித்து விடிவானா....?

    ReplyDelete
  5. ஜீஜா..வின்... அம்மா... அருமை....
    ஷாஹாஜியின் செயல் சுயலாப நோக்கத்தோடே உள்ளது.

    ReplyDelete
  6. shahaji seems to to be bit intelligent only. but it is not being utilised properly. i became fan of jija. amma mashabai wow .....pennai polave ammavukum konjam pidivatham. sivaji yaar kannilum padavakoodathu adhu avan shahajiyaga irundalum sari ....

    ReplyDelete