சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 19, 2018

சத்ரபதி – 8

வெளியே ஜீஜாபாய் வந்த போது ஷாஹாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அங்கே இருந்த வீரர்களிடம் ஜீஜாபாயிடம் சொன்ன கதையையே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களில் யார் ஜீஜாபாய் கூட வந்தாலும் முகலாயர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதால் தான் ஷாஹாஜியும் ஆள் அனுப்பவில்லை என்றும், இங்கிருக்கும் ஆட்களை உடன் அழைத்து வர வேண்டாம் என்றும் ஷாஹாஜி கூறியதாகச் சொன்னான்.  மிக அதிகமான ஆட்களோடு அயூப்கானே போனாலும் சந்தேகம் வரலாம் என்பதால் குறைவான எண்ணிக்கை ஆட்களோடு பயணிக்க ஷாஹாஜி தன்னைப் பணித்தார் என்றும் சொன்னான். இதற்கு முன் அவன் எந்த தில்லுமுல்லிலும் ஈடுபட்டிருக்காததால் அவன் மேல் அவர்களுக்கும் சந்தேகம் வரவில்லை. அயூப்கான் யோசனையோடு நாளை மொகபத்கான் படை அங்கே வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னான். அவன் பேசிய விதத்தில் நாளை மொகபத்கான் படை அங்கே வருவது உறுதி என்றே அவர்களும் நம்பினார்கள்.

வெளியே வந்த ஜீஜாபாயைப் பார்க்கையில் அவள் தோளில் சிவாஜிக்குப் பதில் தலையணை இடம் மாறியிருப்பது அயூப்கானுக்குத் தெரியவில்லை. தாயின் தோளிலேயே குழந்தை உறங்கி விட்டான் என்று தான் நினைத்தான். ஜீஜாபாய் அங்கிருந்த தன் வீரர்களிடமும், பணியாட்களிடமும் விடை பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் நின்றிருந்த சத்யஜித்தைப் பார்த்தபடியே எல்லோரிடமும் பொதுவாகச்  சொல்வது போல் சொன்னாள். “உங்களை நம்பித் தான் விட்டுப் போகிறேன்.  பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்….”

சத்யஜித் புரிந்து கொண்டான். எல்லோரும் தலையசைக்கையில் அவனும் தலையசைத்தான். அயூப்கான் கொண்டு வந்திருந்த சிறிய ரதத்தில் ஜீஜாபாய்  ஏறிக் கொண்டாள். முன்னால் சில குதிரை வீரர்கள், பின்னால் அயூப்கான், அதன் பின் ரதம், அதற்கும் பின் சில குதிரை வீரர்கள் என வரிசையாக பைசாப்பூரை விட்டுச் சென்றார்கள். ரதத்தின் திரைச்சீலையை விலக்கி தொலைவிற்கு நகரும் கோட்டையையே பார்த்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் தன் மனதில் பெரும் கனத்தை உணர்ந்தாள். அவள் உள்ளம் சிவாஜிக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தது.

அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து சத்யஜித் உள்ளே நுழைந்த போது சிவாஜி தாய் நிற்க வைத்த இடத்திலேயே நின்றிருந்தான். “அம்மா போய் விட்டார்களா மாமா” என்று தாழ்ந்த குரலில் சத்யஜித்திடம் கேட்டான்.  “போய் விட்டார்கள் பிரபு” என்று கூறியபடியே சிவாஜியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சத்யஜித்தும் கிளம்பினான். அவன் முகத்தில் கவலையைக் கவனித்த சிவாஜி சொன்னான். “கவலைப்படாதீர்கள் மாமா. அம்மாவுடனும் கடவுள் இருக்கிறார்…..”

சத்யஜித்துக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது விளங்கவில்லை. அவன் மனம் ஜீஜாபாய் ஏன் சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வியிலேயே நின்றிருந்தது. ஏதேனும் சந்தேகம் வந்திருக்க வேண்டும். அதனால் தான் அப்படிச் செய்திருக்கிறாள். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முதலிலேயே ஜீஜாபாய் அவனிடம் சொல்லி இருந்தாள். அந்த நேரத்தில் எதையும் தெரிவிக்கவும் நேரமிருக்காது என்பதால் அவள் சிவாஜியை மட்டும் எப்படியாவது எடுத்துச் சென்று விட வேண்டும் என்றும் சகாயாத்திரி மலைத்தொடருக்குச் சென்று விடும்படியும் முன்பே கூறியிருந்தாள். நிலைமை சரியாகும் தகவல் தெரிந்த பிறகு அவனைக் கொண்டுவந்து ஒப்படைத்தால் போதும் என்று சொல்லி இருந்தாள். அவனைச் சொந்தக் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கண்கலங்க வேண்டியிருந்தாள்….

இப்போதிருக்கும் நிலைமை ஆபத்தானதா, இல்லை உண்மையிலேயே ஷாஹாஜியின் பாதுகாப்புள்ள இடத்திற்குப் போகும் ஆபத்தில்லாத நிலைமையா என்று தெரியாத இரண்டும் கெட்டான் நிலைமை. அதனால் முதலில் மறைவான ஒரு இடத்தில் போய் இருந்து கொண்டு நிலவரம் என்ன என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்டு சிவாஜியைக் கொண்டு போய் ஜீஜாபாயுடன் சேர்ப்பதா இல்லை சகாயாத்திரி மலைத்தொடருக்குப் போய் விடுவதா என்று தீர்மானிப்போம் என்று நினைத்தவனாக சத்யஜித் பைசாப்பூர் கோட்டையை விட்டு சிவாஜியுடன் வெளியேறினான்.



மொகபத்கான் முன் அயூப்கான் வெற்றிப்புன்னகையுடன் போய் நின்ற போது மொகபத்கான் அலட்சியமாக “மறுபடியும் என்ன?” என்பது போல் பார்த்தான்.

அயூப்கான் சொன்னான். “தலைவரே. ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயும், அவன் குழந்தையும் வெளியே ரதத்தில் இருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்பிடித்து என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.”

மொகபத்கான் திகைத்தான். விளையாட்டாய் இவனிடம் சொன்னால் அதைச் சாதித்து விட்டே வந்திருக்கிறானே! ஆள் திறமையானவனாய் தான் இருக்கிறான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாலும் அதை வெளியே சொல்லாமல் அலட்சிய தொனியிலேயே தொடர்ந்து கேட்டான். “ஆள் மாறிக் கூட்டிக் கொண்டு வந்து விடவில்லையே?”

“தலைவரே. ஜீஜாபாயை நேரில் பார்த்திருக்கும் ஆட்கள் உங்கள் படையிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள். ஆள்மாற்றம் செய்து கூட்டி வந்து தங்கள் பகையைச் சம்பாதிக்கும் அளவு நான் முட்டாள் அல்ல” என்று சொல்லிவிட்டு அயூப்கான் ”வந்து பாருங்கள் தலைவரே” என்றான்.

அயூப்கானுடன் தன்னுடைய கூடாரத்தை விட்டு வெளியே வந்த மொகபத்கான் வேகமாக ரதத்தை நோக்கிச் சென்றான்.

ரதத்தின் திரைச்சீலையை விலக்கி அயூப்கானும், மொகபத்கானும் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் விதியை நொந்து கொண்டிருந்தாள். தான் ஏமாற்றப்பட்டு விட்டதைப் பாதி வழியிலேயே அவள் யூகித்து விட்டிருந்தாள். பைசாப்பூர் கோட்டையை விட்டு வெளியே வந்த பிறகு சிறிது தூரம் வரை அவள் ரதத்துக்கு முன்பே சென்று கொண்டிருந்த அயூப்கான் வழியில் அவர்கள் இரண்டு  இடங்களில் நிறுத்தி இளைப்பாறிய சமயங்களில் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க தொலைவிலேயே இருந்தான். பேச்சை மட்டுமல்லாமல் அவள் பார்வையையும் அவன் தவிர்த்தான். அப்போதே யூகித்தாலும்  வழியில் அவள் அவர்களிடமிருந்து தப்பிக்க வழியில்லை. எப்படியோ கடைசி நேரத்தில் சிவாஜியை உடன் எடுத்து வருவதைத் தவிர்த்து அவனைக் காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டும் அவளுக்கிருந்தது….

அவர்கள் இருவரும் நெருங்கிய போது ரதத்திலிருந்து கீழே இறங்கிய ஜீஜாபாய் கண்களில் தீப்பந்தங்கள் எரிய அயூப்கானிடம் கேட்டாள். “எங்கே என் குழந்தை?”

அயூப்கான் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “நீ தானே குழந்தையை வைத்திருந்தாய்?”

“ஆமாம். பைசாப்பூரை விட்டு வரும்போது நான் தான் வைத்திருந்தேன்…. பாதி வழியில் வரும் போது குடிக்க உன் ஆட்கள் நீரைக் கொடுத்தார்களே. அதைக்குடித்து மயங்கியவள் இப்போது தான் விழித்தேன்….. எழுந்து பார்த்தால் என் மடியில் என் குழந்தைக்குப் பதிலாக ஓரு தலையணை இருக்கிறது. எங்கே என் குழந்தை?”

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அயூப்கான் தன் குதிரை வீரர்களைப் பார்த்தான். அவர்களும் திகைப்புடன் விழித்தார்கள்.

மொகபத்கான் சந்தேகத்துடன் அயூப்கானைக் கேட்டான். “என்ன நடக்கிறது இங்கே?”

ஜீஜாபாய் மொகபத்கானை முதல் முறையாகப் பார்க்கிறாள் என்றாலும் அவன் யாரென்று யூகிக்க அவளுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. அவள் அயூப்கானிடம் அலட்சியமாகக் கேட்டாள். “இந்த ஆள் தான் நீ சொன்ன அற்பப்பதரா?”

மொகபத்கான் சினம் கொண்டு ஜீஜாபாயைக் கேட்டான். “என்ன சொன்னான் இவன்?”

ஜீஜாபாய் சொன்னாள். “உங்களைப் பற்றி நிறைய மோசமான வார்த்தைகளைச் சொன்னான். அதையெல்லாம் ஒரு பெண்ணாகிய நான் என் வாயால் சொல்லக்கூடாது. அவன் சொன்ன வார்த்தைகளிலேயே மிகவும் கண்ணியமாக இருந்தது இந்த அற்பப்பதர் தான்…..”

மொகபத்கான் சினம் அதிகமாகி அயூப்கானைப் பார்க்க அயூப்கான் ஆபத்தை உணர்ந்து அலறினான். “தலைவரே. இவள் பொய் சொல்கிறான்…”

ஜீஜாபாய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள். “நான் வணங்கும் ஷிவாய் தேவி மீது சத்தியமாகச் சொல்கிறேன். இவன் உங்களை அற்பப்பதர் என்று தான் சொன்னான். இவனை அல்லா மீது ஆணையாக இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்….”

அயூப்கான் என்ன சொல்வதென்று அறியாமல் திணறி விட்டு அவசரமாகச் சொன்னான். “இவள் குழந்தையை மறைத்து விட்டு உங்களை திசை திருப்ப இதைச் சொல்கிறாள் தலைவரே”

ஜீஜாபாய் கோபத்தோடு அயூப்கானிடம் சொன்னாள். “நீ வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது என் குழந்தை ஓடி வந்து என் மடியில் அமர்ந்தான். அதை மறுக்கிறாயா?”

“இல்லை…”

“என் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு உடைகளை எடுத்து வந்தேன். அதை மறைக்கிறாயா?”

“இல்லை….. ஆனால் நீ உடைகளை எடுத்துக் கொள்ளப் போன போது குழந்தையை அந்த அறையில் விட்டு வந்திருக்க வேண்டும்…..”

“நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?”

“என் மீது உனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்…. அதனால் தான்.”

“அப்படி உன் மீது சந்தேகம் வந்திருந்தால் நானே ஏன் உன்னுடன் வந்தேன்?”

அயூப்கானுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மொகபத்கான் கோபத்துடன் சந்தேகமும் சேர அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜீஜாபாய் அவன் பேச்சிழந்து நின்ற சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள். ”புரிகிறது. நான் பருகிய நீரில் மயக்க மருந்தைக் கலந்து தந்து நான் மயங்கி இருந்த நேரத்தில் என் குழந்தையை நீ எடுத்து அதற்குப் பதிலாகத் தலையணையை வைத்திருக்கிறாய். அது தான் ஏன் என்று புரியவில்லை…… உண்மையைச் சொல்….. என்னை இங்கே ஒப்படைத்து ஒரு சன்மானமும், என் மகனை என் கணவரிடம் ஒப்படைத்து அதற்கு ஒரு சன்மானமும் வாங்க நினைத்திருக்கிறாயா....”

அயூப்கான் அவளைக் கிலியுடன் பார்த்தான். மொகபத்கான் பயமுறுத்தும் அமைதியுடன் சொன்னான். “அப்படித்தான் இருக்க வேண்டும்…..”

(தொடரும்)
என்.கணேசன்  


14 comments:

  1. ஜீஜா பாயா? கொக்கா? ஏமாத்தினவனை என்னமா திணர வைக்கிறாங்க. சூப்பர் சார்.

    ReplyDelete
  2. The way Jijabai handles the situation shows her sharp intellect. Enjoyed the episode very much. Eagerly waiting for next episode.

    ReplyDelete
  3. Jijabai is great! A big Salute to her!

    ReplyDelete
  4. Shivaji Maharaj's birthday is celebrated as Shiv Jayanthi in Maharashtra. He is almost god to Hindus in Maharashtra. He achieved that status because of his mother Jijabai and her dedication.

    ReplyDelete
  5. Wow.....Jijaa Bai........brilliantly handle the situations........superb narration......
    Hats off to you G.....

    ReplyDelete
  6. Theriiii ippo than kathai sudupidikka aramitthu irukkirathu

    ReplyDelete
  7. Amazing jijaa bai, no doubt that history remembers her along with Shivaji....

    What a turn of events...

    ReplyDelete
  8. ஜீஜாவின்... புத்திசாலிதனம்... ரொம்ப அருமை... இந்த நேரத்தில் கூட பயப்படாமல்... தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்துவது... சூப்பர்

    ReplyDelete
  9. தெலைந்தான் அயூப்கான்

    ReplyDelete