சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 1, 2018

இருவேறு உலகம் – 68



மாஸ்டர் ஹரித்வாரின் கங்கைக் கரையில் நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருந்தார். கங்கை என்றுமே அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியதே இல்லை. என்னேரமும் புதியதாய் தோன்றி, என்னேரமும் புத்துணர்ச்சியுடன் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சதா பாடம் நடத்துவது போல் அவருக்குத் தோன்றியது.  அழைத்துப் பாடம் நடத்தினாலே கவனிக்கத் தவறும் மனிதன் இந்த மௌனப் பாடத்தைக் கவனிப்பானா என்ன என்று நினைத்தபடி மாஸ்டர் புன்னகைத்தார்.

உடனே மின்னலாய் ஒரு உண்மை அவருக்குள் எழுந்து உறுத்தியது. ’அடுத்தவர்களைச் சொல்வானேன் நானே கூட ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தோடு பாடங்களைப் படிக்கிறேனா என்ன?’ என்று ஆத்மார்த்தமாய் அவர் கேட்டுக் கொண்டபோது இல்லையென்றே மனசாட்சி பதில் அளித்தது.  ’எதிர்மறையான ஒரு சக்தி ஊடுருவியிருக்கிறது, குருவைக் கொன்றிருக்கிறது, முழுமூச்சில் தன் வேலையில் இறங்கியிருக்கிறது. இத்தனையும் அறிந்த பின்னும் கூடுதலாக நான் எதுவும் படிக்கவில்லை, என் பழைய அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவில்லை, புதிய நிலைமைக்கு ஏற்றபடி புதியவனாய் களத்தில் இறங்கவில்லை. என் மனதையே ஒரு கணம் ஆக்கிரமிக்கப் பார்க்கும் துணிவு எதிரிக்கு இருந்திருக்கிறது. அந்த அளவு துணிச்சலை எதிரிக்கு என் அலட்சியத்தால் நானாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேனே. இத்தனை ஆன பின்னும் அதற்கு எதிராக எதுவுமே நான் செய்யவில்லையே’ நினைக்க நினைக்க அவருக்குத் தன் மீதே கோபம் வந்தது.

‘எல்லாரும் என் பழைய உயரத்தை வைத்து மதிக்கிறார்கள். அது பொதுவான மனிதர்களின் சுபாவம். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய உயர்ந்த மனிதன் தன் உயரத்தைத் தானே அல்லவா அடிக்கடி அளந்து பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் எல்லாம் தெரிந்தது தானே என்கிற அலட்சிய மனநிலையில் மந்தமாகி நான் என் உயரத்தைச் சிறிது இழந்திருக்கிறேன். இது எனக்குப் பெருமையல்ல. என்  குருவுக்கும் பெருமை அல்ல. நமஸ்காரம் கங்கையே. உன் கரையில் உட்கார்ந்திருந்த எனக்கு மௌனமாய் நீ ஒரு பாடம் நடத்தி என்னை யோசிக்க வைத்திருக்கிறாய். நன்றி… ஆத்மார்த்தமான நன்றி…..”

மாஸ்டர் மானசீகமாக கங்கையிடம் பேசியபடியே அப்படியே கங்கையில் இறங்கி கைகூப்பியபடி கங்கையில் மூழ்கினார். கங்கை அன்னை அவரை ஆரத் தழுவி ஆசிர்வாதம் செய்தது போல் தோன்றியது. பின் கரையேறியவர்  ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். கரையிலிருந்த ஆட்கள் எல்லாம் போன பின்னரும் சிலையாய் கரையில் அவர் அமர்ந்திருந்தார். நடுநிசி இரவில் மற்ற எல்லா சத்தங்களும் ஓய்ந்த பின்னரும் கங்கை ஓட்டத்தின் சலசலப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது….


மாணிக்கம் முதலமைச்சராகப் பதவியேற்ற விழா ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடந்தது. பதவியேற்பு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட சங்கரமணி விரும்பினாலும் ராஜதுரையின் பிரிவால் வாடுவது போலக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த மாணிக்கம் அதைத் தவிர்த்தார். புதிய அமைச்சரவையில் கமலக்கண்ணனுக்குப் பழைய துறையே வழங்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் அனைவரும்  மாணிக்கத்தின் ஆட்களாய் இருந்தார்கள். இந்த ஏற்பாட்டில் கமலக்கண்ணன் பெரிதாகப் பாதிக்கப்படாவிட்டாலும் உதய் தங்களைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியின் முதல்படியாக அடையாளம் கண்டு கொண்டான். அதனால்  பதவியேற்பு விழாவுக்கு வந்த போது அவன் இறுக்கமாகவே இருந்தான். அதை மாணிக்கம் கவனித்தார். அவன் இன்றில்லா விட்டாலும் நாளை கண்டிப்பாக பிரச்னை தருவான் என்பது புரிந்தது. கவனமாக அவனைக் கையாள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். மற்றபடி அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று பெரிதாகப் பாதிக்கப்படாமல் இருந்தார்.

ஆனால் மணீஷும் பெரிய சந்தோஷமில்லாமல் இருந்தது தான் அவரை மிகவும் பாதித்தது. தந்தை முதலமைச்சராகும் போது அவன் சந்தோஷத்தின் உச்சத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும். அவன் மகிழ்ச்சிக் குறைவுக்குக் காரணம் இப்போதும் க்ரிஷ் தான். பதவியேற்பு விழாவுக்கு மணீஷ் ஹரிணியையும் அவள் தாயையும் அழைத்திருந்தான். அவர்களும் வந்திருந்தார்கள். வந்த ஹரிணி  க்ரிஷ் அருகில் உட்கார்ந்ததும், அவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததும் தான் மணீஷை மிகவும் பாதித்திருக்கிறது என்பது மாணிக்கத்திற்குப் புகுந்தது. ‘மகனே இவளை விட எத்தனையோ அழகான, புத்திசாலியான பெண்கள் உனக்குக் கிடைப்பார்கள். இவளை பொருட்படுத்தாதே, மறந்து விடு’ என்றெல்லாம் சொல்லத் தோன்றியது. ஆனால் மணீஷ் அதைக் கேட்பான் என்று தோன்றவில்லை. எல்லாவற்றையும் விட மிக முக்கியம் என்று மனது ஒன்றை நம்பும் போது அதைத் தவறவிட்டு, பின் உலகமே கையில் கிடைத்தாலும் ஒருவனால் சந்தோஷப்பட முடிவதில்லை!

மகன் அப்படி வாட்டத்துடன் இருக்கையில் மாணிக்கத்திற்கும் சந்தோஷமாய் இருக்க முடியவில்லை. அங்கு அனைவரையும் விடச் சந்தோஷமாய் இருந்தது சங்கரமணி தான். அவர் தான் புது உற்சாகத்துடன் பலரையும் அதட்டிக் கொண்டும், வேலை வாங்கிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருந்தார். இனி எல்லாமே இங்கு நான் தான் என்பதை வார்த்தைகள் இல்லாமல் அறிவிக்க அவருக்கு அந்தப் பதவியேற்பு விழா தகுந்த இடமாகத் தெரிந்தது.

ஹரிணியின் தாய் கிரிஜாவுக்கு மணீஷைப் பிடித்த அளவு க்ரிஷைப் பிடித்தது இல்லை. காரணம் தன் மகள் க்ரிஷ் பின்னால் சுற்றும் அளவுக்கு அவன் அவளைக் கண்டு கொள்வது போல் அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. அவன் அவர்கள் வீட்டுக்கு வருவதும் மிகவும் குறைவு. மணீஷ் அளவுக்கு ஹரிணியைப் பார்க்க அவன் வந்ததில்லை. இதெல்லாம் க்ரிஷ் மீது அபிமானக்குறைவை கிரிஜாவிடம் ஏற்படுத்தியிருந்தது. க்ரிஷின் குடும்பத்தினரோடு எந்த நெருங்கிய தொடர்புக்கும் அவளுக்குச் சந்தர்ப்பமும் வாய்த்ததில்லை.

ஆனால் இன்று பத்மாவதி அவளைப் பார்த்தவுடன் தானாக வலிய வந்து பேசினாள். கிரிஜாவுக்கும் எந்தப் பந்தாவும் இல்லாமல் யதார்த்தமாகப் பழகும் பத்மாவதியைப் பிடித்து விட்டது. ஹரிணி பத்மாவதியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததில் தவறில்லை என்று தோன்றியது. அந்த அளவு பத்மாவதி அதிமரியாதை கொடுத்து கிரிஜா மனதில் இடம் பிடித்து விட்டாள்.  சம்பந்தியம்மாள் என்பது முடிவாகி விட்டதால் கிரிஜாவிடம் அப்படி வலியப் போய் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட உதய் தன் மனநிலை மறந்து புன்னகைத்தான். விட்டால் அம்மா ஹரிணிக்கும், க்ரிஷுக்கும் இப்போதே திருமண தேதி முடிவு செய்து விடுவாள் என்று தோன்றியது. பத்மாவதி, கிரிஜா இருவரும்  பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மணீஷுக்கு அவர்கள் எல்லோரும் இப்போதே ஒரே குடும்பமாக ஆகி விட்டது போலத் தோன்றி அந்த எண்ணமே இதயத்தை அனலாகச் சுட்டது….

மாணிக்கம் மகன் பார்வை போன இடத்தையும், முகம் அடைந்த வாட்டத்தையும் கவனித்தார். பின் கஷ்டப்பட்டுத் தன் பார்வையை மகனிடமிருந்து விலக்கி வந்திருக்கிற சிறப்பு விருந்தினர்களைப் பார்க்க ஆரம்பித்தார். எல்லோரும் உயர்ந்த பதவிகளிலும், அதிகாரங்களிலும், செல்வநிலைகளிலும் இருப்பவர்கள். பெரும்பாலானோரை அவருக்குத் தெரியும் என்றாலும் சிலர் அவர் அறியாதவர்கள்…. இந்தக் கூட்டத்தில் மனோகரும் வந்திருக்க வேண்டும். அவன் சிறப்பு விருந்தினர் பாஸ் வாங்கிக் கொண்டு போயிருந்தான். ஏனோ வரவில்லை. ஒருவிதத்தில் அவன் வராததும் நன்றாகப் போயிற்று. அவன் வந்திருந்தால் பார்வைக்கு உறுத்தலாகவே இருந்திருப்பான்….. மாணிக்கம் சின்னதாய் ஒரு நிம்மதியை உணர்ந்தார். ஆனால் சிறப்பு விருந்தினர்களில் அவர் அறியாத ஒருசிலரில் ஒருவனாக மனோகரை இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் வந்திருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை…

மர்ம மனிதன் ஒரு தொழிலதிபர் போல் தோற்றமளித்தான். அவன் தன் அருகில் இருந்தவர்களுடன் பேசவில்லை. அவர்கள் அவனுடன் பேசுவதையும் ஊக்குவிக்கவில்லை. அவன் மற்றவர்களைப் போல மேடையைக் கவனிக்கவில்லை. அவனுடைய முழுப்பார்வையும் க்ரிஷ் மீதும், க்ரிஷ் சம்பந்தப்பட்ட மனிதர்கள் மீதும் தான் இருந்தது. தன் முழு வலிமையையும் பிரயோகிக்காமல் அவர்கள் கவனத்தைக் கவர்ந்து விடாமல் கூர்மையாக ஒவ்வொருவராகக் கவனித்து வந்த அவன் கடைசியில் ஒவ்வொருவரையாக விலக்கிக் கொண்டே வந்து முடிவில் பத்மாவதியையும், ஹரிணியையும்  தேர்ந்தெடுத்து கவனிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 


6 comments:

  1. Very interesting. Master's character is superb.

    ReplyDelete
  2. நாவல் வாங்கி படித்த பின் இரண்டாம் வாசிப்பில் இருக்கிறேன். ஆனாலும் வியாழக்கிழமை உங்கள் ப்ளாக் வராமல் இருக்க முடியவில்லை. அருமையான அப்டேட் (மாஸ்டர் கேரக்டர் கடைசி வரை சூப்பர்)

    ReplyDelete
  3. மாஸ்டரின் சுய அலசல் , அவர் கவனிக்க தவறிய விஷயங்கள் அவர் கருத்தில் படுகின்றது...
    மர்ம மனிதனின், பார்வை வட்டத்தில் க்ரிஷின் அம்மா மற்றும் ஹரிணி.....
    அவனின் அடுத்த நடவடிக்கையால் ,அவன் தான் உண்மையான எதிரி என்று
    க்ரிஷால் அறிய முடியுமா.....?

    ReplyDelete
  4. மாஸ்டர் அடுத்தது என்ன செய்ய போகிறார்.? தன்னை எப்படி பலப்படுத்திக் கொள்வார்..?
    மர்ம மனிதனின் செயல் திட்டம்..அருமை...

    ReplyDelete
  5. How master is going to sharpen himself

    Whether Harini and Padmavathi are marma manithan's next target to know more about Krish :)

    ReplyDelete
  6. மாஸ்டரின் சுயலசல்கள் மிக நேர்த்தியாக இருந்தது மாணிக்கம் த்ன்மகணுக்காக என்ன காரியத்தில் இறங்கி சொதப்ப போகிறாரா???

    ReplyDelete