சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, January 15, 2008

சிறைவாசம்


அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

"கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

"இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

"கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

"அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

"அவர் பேர் என்ன சம்பந்தி"

"மாணிக்கம்"

சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

"எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

மனைவியிடம் போய் சொன்னார்.

"நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

"அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

"அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

"உங்க பெயர்?"

"தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

"சரி லைனிலேயே இருங்கள்"

டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

"எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

"வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

"உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

"இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"

"என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

"நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

"இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

"சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

முதல் முறையாக மாணிக்கம் வாயைத் திறந்தான். "என்னைப் போலீசில் சரணடையச் சொல்றிங்களா?" அந்த ஆள் முன்னால் இருப்பதை விடப் போலீஸ் தேவலை என்று தோன்றியது. அவர் முன்னிலையில் அவனையும் அறியாமல் புதியவனாக மாறிக் கொண்டிருந்தான்.

"அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?"

"என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க"

"இனியாவது பிரயோஜனப்படு"

அந்த வார்த்தையை சொன்னது அவரானாலும், அதை தன் அந்தராத்மாவில் இருந்து கேட்பது போல் மாணிக்கம் உணர்ந்தான். அவர் அவனை யோசிக்க வைத்து விட்டு அடுத்த கணம் அந்த ஜனக்கூட்டத்தில் மறைந்து போனார்.

மாணிக்கம் தீனதயாளனிடம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னான். "அவர் யாரு என்னன்னு எனக்குத் தெரியலை. அப்புறமா நான் அவரைப் பார்க்கவுமில்லை. எங்க ஆளுக சிலரைப் போலீஸ் கைது செஞ்சாங்க. கைதானவங்களே முழுப் பொறுப்பு ஏத்துகிட்டதாலே நான் தப்பிச்சுட்டேன். ஆனா மனசாட்சியிலிருந்து தப்ப முடியலை. அவர் கடைசியா சொன்ன 'இனியாவது பிரயோஜனப்படு'ங்கற வார்த்தை எனக்கு வேத மந்திரமாச்சு..."

அவன் பேசிக்கொண்டே போனான். புதிய வாழ்க்கை ஆரம்பித்த விதத்தைச் சொன்னான். சின்னதாகத் தொடங்கிய வியாபாரம் பெருகிப் பெருகி இன்றைய நிலைக்கு வந்த கதையைச் சொன்னான். இலாபத்தில் இருபது சதம் தொழிலாளிகளுக்கும், மீதி அத்தனையும் தர்ம காரியங்களுக்கும் போகிற விதத்தை விவரித்தான். தீனதயாளன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"நான் நிறையவே தப்பு செஞ்சிருக்கேன். அதுக்கு கடவுளோட கோர்ட்டில் எனக்கு என்ன தண்டனை இருக்கும்னு தெரியலை டி.எஸ்.பி சார். ஆனா ஒவ்வொரு ராத்திரியும் அந்த ரயில் கவிழ்ப்பு கனவில் வருது. அவர் சொன்ன படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் திசை மாறி அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோங்கற வேதனையோட பிறகு நிறைய நேரம் முழிச்சுட்டு இருப்பேன். அந்த உறுத்தல் ஓரு தினசரி தண்டனை சார். என்னைப் பொருத்த வரை இப்போதைய வாழ்க்கை ஒரு சிறை வாசம் தான். எனக்கு நானே விதிச்சுகிட்ட சிறைவாசம். அப்படித்தான் வாழ்றேன்..." என்ற மாணிக்கம் எழுந்து போய் இன்னொரு அறையையும் திறந்து காண்பித்தான்.

உள்ளே ஒரு பழைய பாய், அலுமினிய டம்ளர், அலுமினியத் தட்டு என்று எல்லாமே சிறையில் கைதிகளுக்கு வழங்கும் பொருட்கள் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. அவன் யாரையும் அங்கு அனுமதிக்காத காரணம் மெள்ள தீனதயாளனுக்கு விளங்கியது.

"சார், நீங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் இருந்தவர், நல்லவர்னு நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எனக்கும் தெரியும். அதனால உங்களைக் கேட்கிறேன். எனக்கு இப்ப நீங்க தான் நீதிபதி. எனக்கு இன்னும் செஞ்சதெல்லாம் உறுத்துது. எத்தனை தர்மம் செஞ்சாலும் என்னோட பாவத்தோட கனம் குறையவே மாட்டேங்குது. இன்னும் என்ன செஞ்சு என் பாவத்தைக் கழுவணும். நீங்க சொல்லுங்க. என்ன சொன்னாலும் கேட்கறேன்" கைகளைக் கூப்பி கண்கள் கலங்கக் கேட்டான்.

அவர் கண்களும் கலங்கின. "உன்னால் எட்டாயிரம் தொழிலாளர் குடும்பம் பிழைக்குது. உன் தர்மத்தால் ஆயிரக்கணக்கானவங்க பலன் அடையறாங்க. இன்னும் ஏன் மாணிக்கம் உனக்கு இப்படித் தோணுது. நடந்து முடிந்ததை மாத்தற சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இல்லை. நீ எப்படியிருந்தேங்கிறதை விட நீ இப்ப எப்படியிருக்கிறாய்ங்கிறது தான் முக்கியம். தப்பு எத்தனையோ பேர் செய்யறாங்க. ஆனா உன்னை மாதிரி யாரும் பிராயச்சித்தம் செய்யறதை நான் பார்க்கலை. அந்த விதத்தில் எத்தனையோ பேருக்கு ஒரு பாடம் மாதிரி தான் நீ வாழ்ந்துட்டிருக்கே மாணிக்கம். இனியும் உன்னை அனாவசியமாகத் தண்டிச்சுக்காதே. நேரமாச்சு. நான் வரட்டுமா?"

தீனதயாளன் இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி விட்டு வெளியே வந்தார். அவர் இவ்வளவு மதித்து ஒரு மனிதனுக்குத் தலை வணங்குவது இதுவே முதல் முறை.

- என்.கணேசன்.

6 comments:

  1. Namma old Sivaji film kadhai pa.... ganeshan eppadi kadhai ellam copy pannama own a podunga or padithadhil pidithadhunu podunga..... pls

    ReplyDelete
  2. enakku therindhu idhe pondra sivaji padam vandhadhaai ninaivillai. enna padam endru sonnaal sari paarkka uthaviyai irukkum

    ReplyDelete
  3. nalla kathai ,,i never seen same story in cinema ..but this type concept seen , good thought

    ReplyDelete