சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 24, 2008

ஆகாது-முடியாது-நடக்காதுநீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் ·புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் negative மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.

-என்.கணேசன்

5 comments:

 1. தங்களின் பதிவு மிகவும் அருமை இயலாதவர்கள்தான் அடுத்தவர் செய்யும் காரியங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பர். முடியாது என்று நினைப்பவனால் படுக்கையில் இருந்துகூட எழுந்திருக்க முடியாது முடியும் என்று நினைப்பவனால் உலகத்தையே மாற்றிக்காட்டமுடியும்.
  வாழ்த்துக்கள் கனேசன்

  ReplyDelete
 2. Motivating article. Thank you

  ReplyDelete
 3. நல்லதொரு தன் முனைப்பு பதிவு . நன்றி

  ReplyDelete
 4. SIR PERFECT INFORMATION-SUNDARRAJAN

  ReplyDelete