சமுத்திரம் அலைகளை இடைவிடாது
உருவாக்குவது போல
சமூகம் விமர்சனங்களை
இடைவிடாது உருவாக்கிக்
கொண்டே இருக்கும்.
அதனால் விமர்சனங்களில் இருந்து நாம் தப்பி
விட முடியாது. இந்த விமர்சனங்கள்
இனிமையானதல்ல என்றாலும்
சந்தித்தே அல்லவா
ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை
எதிர்கொள்வது எப்படி? பார்ப்போம்…
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, July 10, 2017
Thursday, July 6, 2017
இருவேறு உலகம் – 37
அந்த மலையின்
பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் மின்னிய போது அவன் மனம் அந்த மலை பற்றிக்
கேள்விப்பட்ட வினோதமான, அமானுஷ்யமான செய்திகளுக்குத் தாவி விட்டு மீண்டது. இந்த
அமானுஷ்ய மனிதன் இதற்கு முன்னும் அந்த மலைக்கு வந்திருக்கலாம்.....
“அந்த மலை பற்றி கேள்விப்பட்ட செய்திகளுக்கெல்லாம் காரணம் நீங்கள்
தானா?” என்று க்ரிஷ் கேள்வி எழுப்பினான்.
“ஒன்றிரண்டை மட்டும் தான் அங்கிருந்தவர்கள்
என்னால் கண்டார்கள். மீதி எல்லாம் மற்றவர்கள் தாங்களாக உருவாக்கியவை. அதில் என்
பங்கு எதுவுமில்லை” என்ற பதில் வந்தது. அப்படியானால் இதற்கு முன் அந்த ஆள்
அங்கு வந்திருப்பது உண்மை....
“அது தான் உங்கள் இருப்பிடமா?”
“நான் சிலகாலமாய் அவ்வப்போது வரும் இடம்.”
“அப்படியானால் உங்கள் நிரந்தர இருப்பிடம் எது?”
“அது தொலைதூரத்தில் இருக்கிறது....”
அது அவர் சொன்ன 16000 கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கலாம். ஆனாலும்
உறுதி செய்து கொள்ள தொலைதூரத்தில் எங்கே என்று அவன் கேட்பதற்குள் அடுத்த வாசகம்
லாப்டாப்பில் மின்னியது. “அடுத்த அமாவாசை அன்று இரவு எட்டு மணிக்கு அந்த மலைக்கு வருகிறாயா? மலை உச்சியில் சந்திப்போம்....”
க்ரிஷுக்கு அந்த மலையில் நடந்த வினோத சம்பவங்கள் எல்லாம் அமாவாசை
இரவில் தான் அரங்கேறியவை என்பது உடனே நினைவுக்கு வந்தது. இப்போதும் அமாவாசை அன்று
தான் அந்த ஆள் வரச் சொல்கிறான்...
“ஏன் அமாவாசை நாளையே நம் சந்திப்புக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கிறதா?”
“அந்த நாள் தான் நான் அங்கே வருவேன். அதனால் தான் அந்த நாள் வரச்
சொல்கிறேன்... வரும் போது
லாப்டாப்பையும் கொண்டு வா”
அவன் படித்து விட்டு நேரில் சந்திக்கையில் லாப்டாப் எதற்கு என்ற
அடுத்த கேள்வி கேட்பதற்கு முன் அந்த வாசகம் மறைந்து போனது. பின் எந்த வாசகமும் வரவில்லை.
க்ரிஷ் ’ஹலோ’ என்று அழைக்க கீ போர்டை அழுத்தினான். அவன் அழுத்தும்
எந்த எழுத்துமே இப்போது லாப்டாப் திரையில் வரவில்லை. அந்த மர்ம மனிதன் தகவல்
ஏதாவது அனுப்பும் போது மட்டுமே அதற்கு அவன் பதில் எழுத முடிகிறது. அதுவும்
ஆச்சரியமாய் இருக்கிறது.
அன்றிரவு அந்த மர்ம மனிதன் குறித்த
சிந்தனைகளால் அவனால் உறங்க முடியவில்லை. யாரவன்? எதற்கு இப்படி தொடர்பு
கொள்கிறான்? எப்படி அவனால் இப்படி தொடர்பு கொள்ள முடிகிறது?.... யாராக இருந்தாலும்
அவன் தன்னை விட அறிவாளி என்பதில் க்ரிஷுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனென்றால்
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனிடம் பதிலும் இல்லை, எப்படி நடக்கிறது என்று அவனால்
யூகிக்கவும் முடியவில்லை.
என்றைக்குமே க்ரிஷ் தன்னை விடச் சில
விஷயங்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் மீது பொறாமை கொண்டதில்லை. அவர்களது மேலான
நிலையை ஒப்புக் கொள்ளவும் தயங்கியதில்லை. ஏனென்றால் புதியதாக அவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ளலாம் என்கிற உற்சாகமே எல்லாவற்றையும் விட பிரதானமாக அவனிடம் மேலோங்கி நிற்கும். இப்போதும் அந்த ஆள் அந்த உற்சாகத்தையே ஏற்படுத்தினான். அந்த ஆளைச்
சந்திக்க அமாவாசை வரை காத்திருப்பது தான் கஷ்டமாய் இருந்தது.
அடுத்த அமாவாசை வரை இணையத்தில் இது போன்ற
அபூர்வ சக்திகள் பற்றிய தகவல்களைத் தேடினான்.
அதில் நிறைய தகவல்கள் இருந்தன. ஆனால் கற்பனைகள், பொய் விளம்பரங்கள், அரைகுறை
அனுமானங்கள் ஆகியவற்றின் மத்தியில் உண்மையைத் தேடுவது சுலபமாய் இருக்கவில்லை. ஆனாலும்
சலிப்பில்லாமல் அதில் ஒவ்வொன்றையும் ஆழமாய் அலசினான். அந்த மலையில் அமாவாசை
நாட்களில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டிப்
படித்தான். நெருப்பு ஜூவாலை, பேய்க்காற்று, மர்ம சக்தி நடமாட்டம் போன்ற அந்தத் தகவல்களிலும் கூட சம்பந்தப்பட்ட
மனிதர்களின் கற்பனை பாதி என்றால் பத்திரிக்கைகள் முதலான ஊடகங்கள் பரபரப்புக்கு
வேண்டி சிருஷ்டி செய்து கொண்ட விஷயங்கள் பாதியாக இருந்தன. ’உண்மை என்றுமே தன்னைப் பிரகடனப்படுத்திக்
கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்வதில்லை’ என்று தோன்றியது.
அடுத்த அமாவாசை நாள் வரை அவனுடன் எந்த விதத்
தொடர்பும் அந்த மர்ம நபர் வைத்துக் கொள்ளவில்லை. க்ரிஷ் அந்த நாட்களில் லாப்டாப்பை அடிக்கடி பார்த்தான். எந்த வாசகமும் மின்னவில்லை. அமாவாசை
மாலை கிளம்பும் முன் சின்னதாய் ஒரு தயக்கமும் அவனுக்கு வந்தது. அவன் போய், அந்த
மர்ம நபர் வராமல் போனால்....? ’அப்படி
ஒருவேளை அந்த ஆள் வராமல் போனால் அந்த இடத்தில் உலாவும் சக்திகள், அமானுஷ்யங்கள்
பற்றி ஆராய்ந்து விட்டு வரலாம்’ என்று எண்ணியவனாய் அமாவாசை அன்று இருட்டுவதற்கு முன்பே
கிளம்பிப் போனான்.
அந்த மலையை அவன் அடைந்த போது ஆட்கள் யாருமேயில்லை. மலை மேல் இருந்த
சிறிய அம்மன் கோயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. கைகூப்பி வணங்கி விட்டு சுற்றும்
முற்றும் பார்த்தான். சில மரம், செடி, கொடி, பாறைகளைத் தவிர வேறு எதுவும்
அங்கில்லை. சூரியன் தூரத்தில் அழகாய் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்தது. அந்த அழகை
நின்று முழுவதுமாய் க்ரிஷ் ரசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தான்.
இருள் சூழ ஆரம்பித்தது. வீசிய காற்று ஒரு புதிய ஒலியைப் பெற
ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்
ஒலியும் கூடுதல் அமானுஷ்ய தொனி பெற ஆரம்பித்தது. பேய்க் காற்று என்று சொல்வது
இதைத் தானோ?....
அமாவாசை இருட்டில் வானத்தில் மின்னிய வைர நட்சத்திரங்களை ரசித்துக்
கொண்டிருக்கும் போது தான் க்ரிஷ் அந்தப் பெரிய கரிய பறவையைக் கவனித்தான். அமாவாசை
இருட்டிலும் அந்தக் கரிய பறவை வித்தியாசமாய் இருந்தது. பறந்து கொண்டிருக்கும்
அசைவினால் அதைப் பார்க்க முடிகிறதே ஒழிய அது அசைவற்று ஆகாயத்தில் இருந்தால் அந்த
அமாவாசை இருட்டில் தெரிய வாய்ப்பில்லை.
கண்டிப்பாக அது காகமல்ல.... காகத்தை விடப் பெரிய பறவை. சுமார் ஐந்து
மடங்காவது பெரிதாக இருக்கலாம்.... இது போன்ற அண்டக்காக்கைகள் வட அமெரிக்கப்
பகுதியில் தான் இருக்கின்றன... அவை கூட இவ்வளவு பெரியவை அல்ல...
அந்தப் பறவை சில முறை அந்த மலையைச் சுற்றி வந்து திடீரென்று மறைந்தது. அவன் தன்
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. ஆகாயத்தில் திடீரென்று ஒரு ஒளி
தெரிந்தது. நெருப்புப் பந்தமாய் மின்னிய ஒளி அந்த மலை உச்சியில் இறங்க
ஆரம்பித்தது. அதைப் பார்க்கவே அவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இதயத்துடிப்பின்
வேகம் கூடியது. பரபரப்பாக இருந்தது. இதைத்தான் உண்மையாகப் பார்த்தவர்கள் சொல்லி
இருக்கிறார்களோ?
அந்த ஒளி மலையுச்சியைத் தொட்டவுடன் மறைந்தது. ஒளி மறைந்து உருவான கூடுதல்
இருட்டில் ஒரு கணம் க்ரிஷால் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று
மூடப்பட்டிருந்த அவன் லேப்டாப்பின் இடுக்கிலிருந்து ஒளி தெரிந்தது. க்ரிஷ்
பரபரப்பாக லாப்டாப்பைத் திறந்தான்.
“நீ வந்ததற்கு நன்றி” என்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிக் கொண்டிருந்தது.
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று நடுங்கும்
கைகளில் கேள்வியை அழுத்தினான்.
“உன் அருகில் தான்” என்ற வாசகம் உடனே
பதிலாய் மின்னியது.
“என்னால் பார்க்க முடியவில்லையே!”
“மனிதக் கண்களால் பார்க்க முடியாதவை ஏராளம்”
“யார் நீங்கள்?”
“நான் வேற்றுக்கிரகவாசி”
க்ரிஷ் ஒரு நிமிடம் பேச்சிழந்தான். ஏலியன்! அந்தப் பெருங்காற்றிலும்
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. கஷ்டப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு தன்
அடுத்த கேள்வியை அழுத்தினான்.
“எந்தக் கிரகம்?”
“இன்னும் மனிதர்கள் கண்டுபிடிக்காத ஒரு தூரத்து கிரகம்”
“ஏன் இங்கு வந்தீர்கள்?”
“எங்கள் ஆராய்ச்சியில், கண்காணிப்பில் இருக்கும் கிரகம் இது. அதனால்
வந்திருக்கிறேன்....”
க்ரிஷுக்குத் தலைசுற்றியது. எல்லாமே மாயா ஜாலம் போலவும், கனவு போலவும்
தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “ஏன் என்னைத் தொடர்பு
கொண்டீர்கள்?”
“பேரறிவும், மிக நல்ல மனமும் சேர்ந்து உன்னிடத்தில் இருப்பதால் தான்
உன்னைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டேன்....”
“அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”
“எல்லாம் அலைகள் மூலமாகத் தான். ஒரு மனிதன் உண்மையில் என்னவாக
இருக்கிறான் என்பதை அடுத்த மனிதர்கள் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். ஏன் அவனே
அவனை அறிவது கூட அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அவன் வெளிப்படுத்தும் அலைகள் அனைத்துத்
தகவல்களையும் சொல்லும். அதன் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இந்த
வித்தையை உங்கள் சித்தர்கள், யோகிகள் அறிந்திருந்தார்கள். இப்போது ஆராய்ச்சிகள்
மூலமாக ஓரளவு உங்கள் விஞ்ஞானிகளும் அறிய ஆரம்பித்திருக்கிறார்கள்....
உதாரணத்திற்கு உனக்குப் பிடித்த நிகோலா டெஸ்லா…
”
“என்னைப் பற்றி என் அலைகள் மூலமாகத் தெரிந்து கொண்டது சரி.
கி.பி.1856ல் பிறந்து 1943ல் இறந்த நிகோலா டெஸ்லா பற்றி உங்களுக்கு எப்படித்
தெரியும். நான் படித்துக் கொண்டிருந்ததை வைத்தா?”
“மனிதர்கள் இறந்தாலும் அவர்கள் எண்ண அலைகள் அவர்களுடன் சேர்ந்து
இறந்து விடுவதில்லை.... அவை சாசுவதமானவை உங்கள் ரிஷிகள் சொல்லும் ஆத்மாவைப் போல...”
இது விஷயமாக விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் க்ரிஷுக்கு நிறைய
இருந்தது. ஆனால் அதற்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியிடம் கேட்க வேண்டிய முக்கியக்
கேள்வி முந்தியது.
“இங்கு வந்த பிறகும் நம்மால் லாப்டாப்பில் தான் பேசிக் கொள்ள முடியும்
என்றால் சொல்ல வேண்டியதை நான் வீட்டில் இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே. என்னை இங்கே ஏன் வரவழைத்தீர்கள்?”
”உண்மையில் நீ என்னை சந்திக்க முடியும். இந்த லாப்டாப் உதவியில்லாமலேயே
என்னிடம் பேச முடியும். அதுவும் இப்போதே முடியும். ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனை”
க்ரிஷ் இதயம் வேகமெடுத்தது....
இந்தக் காட்சியை மனத்திரையில் மறு ஒளிபரப்பாகப் பார்த்துக்
கொண்டிருந்த மாஸ்டர் இங்கு தான் எதிரி க்ரிஷை அவன் அறியாமலேயே மடக்க
ஆரம்பித்திருக்கிறான் என்று எண்ணினார். விதி வலியது!
(தொடரும்)
என்.கணேசன்
Wednesday, July 5, 2017
Monday, July 3, 2017
வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து மீள…
கீதை காட்டும் பாதை 47
பகவானின் விஸ்வரூப தரிசனம் முழுவதுமாகக் கண்ட பின் உடல் நடுங்கி குரல் தழுதழுக்க
அர்ஜுனன் கூறுகிறான்.
“நீ ஸத் அஸத் என்பவைகளைக் காட்டிலும் உயர்ந்ததான அழிவில்லாத பரம்பொருள். அறிந்தவன். அறியத்தகுந்தவன்.
எண்ணிலா வடிவம்
கொண்டவன்.
இந்த உலகெங்கும்
நீ பரவியிருக்கிறாய்.
மறுபடியும் மறுபடியும்
உன்னை
நமஸ்கரிக்கிறேன்.
உன்னை முன்புறம் வணங்குகிறேன். உன்னைப் பின்புறம் வணங்குகிறேன். எல்லாம் ஆனவனே!
உன்னை எல்லாப்
புறமும்
வணங்குகிறேன்.
நீ எல்லாவற்றிலும்
நிறைந்திருக்கிறாய்.
ஆகவே எல்லாமாக
இருக்கிறாய்.
உன்னுடைய மகிமை அறியாமல் தவறாகவோ, அன்பினாலோ நான் உன்னைத் தோழன் என்றெண்ணி அடக்கமில்லாமல் அழைத்திருக்கிறேன். பரிகசித்து அவமதித்திருக்கிறேன்.
அதையெல்லாம் மன்னித்து
விட வேண்டும்.
அளவிடமுடியாதவனான உன்னை
நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
என் உடல் தரை மீது படும்படி நான் சாஷ்டாங்கமாக
உன்னை
வணங்கி, ஈசனும் துதிக்கத்தக்கவனுமான உன்னை அருள்புரிய வேண்டுமெனக் கோருகின்றேன். மகனுக்குத் தந்தை
போலவும்,
நண்பனுக்கு நண்பன்
போலவும்,
காதலனுக்குக் காதலி
போலவும்
இருந்து
பிழையைப்
பொருத்தருள
வேண்டும்.
உன் உருவத்தைக் கண்டு என் மனம் பயத்தால் நடுங்குகிறது. இதற்குமுன் இருந்த அந்த பழைய உருவத்தையே எனக்குக் காட்டியருள வேண்டும்.”
சாதாரண புறக்கண்ணால் நாம் காண்பதே பல்லாயிரம். தூரதிருஷ்டிக் கண்ணாடி கிடைத்து அதன் மூலம் பார்த்தால் பல லட்சம்
பொருள்கள், உயிர்கள் பார்க்கலாம். அவை அனைத்தையும்
பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்குத் தலைசுற்றி விடும். திவ்ய
திருஷ்டியை அர்ஜுனனுக்கு அளித்ததன் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் பலகோடி மடங்கு நுட்பமான மைக்ரோஸ்கோப்
திருஷ்டியை அளித்து விட்டார். எண்ணிலடங்கா கோடி கோடி பொருள்களும்,
உயிர்களும் தெரியும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பார்த்த பார்த்தனுக்கு
உடலும், மனமும் நடுங்கியதில் ஆச்சரியமில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கி இருக்கும்
பகவான், ஆதியந்தமில்லா பரம்பொருள் என்றெல்லாம்
புரிந்த போது பிரம்மாண்டத்தோடு இன்னொரு உண்மையும் அர்ஜுனனுக்கு உறைக்கிறது.
தோழனாய், உறவினனாய் நினைத்து நாம் இவனை எப்படியெல்லாம்
நடத்தி இருக்கிறோம் என்றும் எண்ணிப்பார்க்கிறான். மன்னிப்பு கோரி
வணங்குகிறான். தந்தையைப் போல், நண்பனைப்
போல், காதலியைப் போல் மன்னித்தருள வேண்டுகிறான். பாசத்தாலும், நட்பாலும், காதலாலும்
அல்லவா மன்னித்தல் மனதார முழுமையாக சாத்தியமாகிறது.
மன்னிப்பு கேட்டவன் உடனே இந்த விஸ்வரூப தரிசனம்
போதும், பயமாக இருக்கிறது என்கிறான்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அர்ஜுனன்
ஆரம்பத்திலிருந்தே பயம் பற்றிப் பேசியவனல்ல. உறவுகளின் பாசம்,
குருபக்தி, தவறிழைக்கிறோமோ என்ற நியாய உணர்வு எல்லாம்
உந்த யுத்தம் வேண்டாம் என்றானே ஒழிய பயத்தால் எதுவும் சொல்லவில்லை. உண்மையில் பயம் என்றால் என்ன என்பதே அறிந்திராத வீரனவன். அப்படிப்பட்டவனை நடுங்க வைத்திருக்கிறது விஸ்வரூப தரிசனம். ஏன்?
பனிமலை தூரத்தில் இருந்தோ, அருகில் இருந்தோ பார்ப்பதற்கு மிக ரம்யமாக இருக்கும்.
அதே போல் சமுத்திரமும் கரையிலிருந்து பார்க்க மிக அழகாய் இருக்கும்.
ஆனால் ஒரு கணம் பனிக்குவியலில் சிக்கிக் கொள்வது போலவும், நடுக்கடலில் மாட்டிக் கொள்வது போலவும் நினைத்துப் பாருங்கள். அது மரண அவஸ்தையே அல்லவா? பாதுகாப்பாய் சௌகரியமான இடத்தில்
இருந்து கொண்டு பார்த்து ரசிக்க மிகவும் அழகாய் இருக்கிற இவற்றிற்குள் மிக நெருங்கிப்
போய் சிக்கிக் கொண்ட அவஸ்தையாகவே விஸ்வரூப தரிசனம் கண்ட அர்ஜுனன் உணர்கிறான்.
விஸ்வரூப தரிசனத்தில் அர்ஜுனன் அடைந்த இன்னொரு
பிரச்னை ஏக காலத்தில் உயிர்களின் ஆரம்பத்திலிருந்து அழிவு வரை காண நேர்ந்தது. ஒரு சுட்டிக்குழந்தையின் அழகை ரசிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அழகை ரசிக்கும் போதே அது முதுமை அடைந்து மரணப்படுக்கையில் போராடுவதையும்
பார்க்க நேர்ந்தால் முந்தைய அழகை முழுமையாக ரசிக்க முடியுமா? இப்படி ஒவ்வொன்றையுமே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏக காலத்தில் பார்த்தால்
எப்படி இருக்கும். ஆரம்பம்,
வளர்ச்சி, முடிவு என்பது உயிர்களைப் பொருத்த வரை
தவிர்க்க முடியாத நிஜம். ஆனால் ஒவ்வொரு கட்டத்தின் போதும் மீதமுள்ளதை
மறைத்து மாயை வாழ்க்கையை ஆவலோடும் எதிர்பார்ப்போடும் வாழத்தகுந்ததாய் மாற்றிக் கொடுக்கிறது.
மாயையின் திரை விலகி உண்மை விஸ்வரூபம் எடுத்தாலோ எல்லாமே பயங்கரமாய்
தான் இருக்கிறது. அர்ஜுனன் போன்ற பயமறியாத மாவீரனே பயப்படும்
அளவு யதார்த்தம் இருக்கும் போது நம்மைப் பற்றி என்ன சொல்ல!
அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்று பேரழகானதும், சாந்தமானதும் ஆன தன் பழைய வடிவத்துக்கே மீண்டும் வந்த ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார்.
மானுட உலகில் உன்னைத் தவிர மற்றவர் என்னை இந்த உருவில் என்னைக் கண்டதில்லை. நீ என்னைக் கண்டது போல் வேதம் ஓதியோ, தவத்தாலோ, தானம் செய்தோ
யாரும்
என்னைக்
காண முடியாது.
எல்லாம் சரி, இந்த
கோரமானதும், கசப்பானதுமான நிஜங்கள் கொண்ட வாழ்க்கையை மாயை என்ற
அழகான திரையைப் போட்டு என்ன தான் மறைத்து வாழ்ந்தால் கூட அவ்வப்போது நிஜங்கள் எட்டிப்பார்த்து
நம்மை வதைக்கின்றனவே என்ன செய்வது? இதிலிருந்து தப்பிக்கத் தான்
வழி என்ன?
அதற்கான பதிலை பதினோராவது அத்தியாயத்தின் கடைசி
சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
“பாண்டவனே! எவனொருவன் எனக்காகக் கர்மங்களைச்
செய்து,
என்னையே உயர்நிலையாகக்
கொண்டு,
எனக்கே பக்தனாகி,
பற்றுதலை நீங்கி
எல்லா
உயிர்களிடமும்
விரோதமின்றி
வழிபடுகிறானோ
அந்த பக்தன் என்னை அடைகிறான்.”
ஆதிசங்கரர் தன் பாஷ்யத்தில் இந்த சுலோகத்தை கீதையின்
சர்வார்த்த சாரம் (முழுமையான சாரம்) என்று கூறுகிறார்.
ஒவ்வொரு கர்மத்தையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த
கர்மம் என்ற பாவனையோடு செய்து, இறைவனே நாம் அடையத்தக்க உயர்நிலை
என்று பக்தனாக வாழ்ந்து, பற்றுதலை நீக்கி, யாரிடமும் எந்த விரோதமும் பாராட்டாமல் அன்புமயமாக வாழ்கின்றவன் இறைவனையே அடைகிறான்.
இந்த போதனையில் எங்குமே தனிமனித ’ஈகோ’வுக்கு வேலை இல்லை. தனிமனித விருப்பு வெறுப்புகள் இல்லை.
ஒரு துளி சமுத்திரத்தில் கலக்கும் போது அந்தத் துளியின் தனித்துவ பலவீனங்கள்
இல்லை. வெறும் துளி என்ற நிலை போய் அது சமுத்திரமாகவே மாறி விடுகிறது.
எப்படி ஒரு துளி சமுத்திரமாகும் போது அதன் பழைய தனித்துவ பிரச்சினைகளில்
இருந்தும், குறைபாடுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறதோ மனிதனும்
இறைவனையே அடையும் போது அவனது துன்பங்களும் ஒரேயடியாய் முடிந்து போகிறது.
கீதையின் பதினோறாம் அத்தியாயம் முடிவுற்றது. ஆனால் அதன் பாதை நீளும்….
- என்.கணேசன்
Thursday, June 29, 2017
இருவேறு உலகம் – 36
க்ரிஷ் தன் கம்ப்யூட்டரில் அல்லது அறையில் முக்கியமான
இடத்தில் ரகசிய காமிரா ஏதாவது வைக்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்டான். அப்படியில்லா
விட்டால் அவன் படித்துக் கொண்டிருக்கும் நிகோலா டெஸ்லா பற்றி யாரோ ஒருவன்
அறிந்திருக்க முடியாது. யோசித்துப் பார்த்த போது அறையில் நுழைந்து யாரும் ரகசியக்
காமிரா வைத்து விட்டுப் போயிருக்க முடியாது என்று தோன்றியது. உதயின் அடியாட்கள்
இரண்டு மூன்று பேராவது வீட்டின் வாசலிலேயே எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள்.
அவர்களை மீறி யாரும் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் தன் அறைக்கு
வெளியாட்கள் வருவது அவனுக்குப் பிடிக்காது என்பதால் அந்த
அடியாட்கள் உட்பட அவன் வீட்டார் யாரையுமே அப்படி அனுமதிக்க
மாட்டார்கள்... வேவு பார்க்கும் காமிரா லாப்டாப்பில்
இருக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரியில் அதை அவன் வகுப்பில் வைத்து விட்டு
பேராசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ சென்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பதும்
உண்டு. அந்த சமயத்தில் யாராவது இதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. உடனடியாக
க்ரிஷ் லாப்டாப்பை அணைத்து விட்டான். பின் லாப்டாப்பை அக்கு வேறு ஆணி வேறாகக்
கழற்றிப் பார்த்தான். காமிரா இல்லை. இணையத்தின்
மூலமாக இப்படி வேவு பார்க்க முடியுமா என்று நிறைய விதங்களில் யோசித்து சோதித்தும்
பார்த்தான்... அன்று பிறகு அவன் லாப்டாப்பை ஆன் செய்யவில்லை
மறுநாள் கல்லூரியில் வகுப்பில்
தான் அவன் லாப்டாப்பைத் திறந்தான். திறந்த இரண்டாவது நிமிடம் லாப்டாப் ஸ்கிரீனில்
வாசகம் மிளிர்ந்தது. “நேற்று நீ பயந்து விட்டாயா?”
இதென்ன, காத்துக்
கொண்டே இருந்தது போல் லாப்டாப் திறந்தவுடன் உடனடியாக இப்படி கேட்கிறானே என்று க்ரிஷ்
சிறிது பொறுமை இழந்தான். “யார் நீங்கள்?” என்று அந்த வாசகத்தின் கீழ் மறுபடி கேள்வி
எழுப்பினான்.
“நேற்றே
சொன்னேனே உன் நண்பன் என்று” என பதில் வந்தது.
“எனக்குப் பெயரில்லாத
நண்பர்கள் கிடையாது. ரகசியமாய் இருக்கும் நண்பர்களைப் பிடிக்கவும் பிடிக்காது” என்று அழுத்தினான்.
அந்த
சமயத்தில் வகுப்பில் ஒரு பேராசிரியர் நுழைய “சரி சரி உன் பேராசிரியர் வந்து
விட்டார். மாலை பேசுவோம்” என்று மிளிரிய வாசகங்கள் உடனே மறைந்தும் போயின. பேராசிரியர்
நுழைந்ததையும் உடனடியாகச் சொல்கிறானே... அதன் பின் அவனால் பேராசிரியர்கள் சொன்ன
எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
மாலை
வீட்டுக்கு வந்த பின் நிறைய நேரம் லாப்டாப்பை அவன் திறக்கவில்லை. யோகி ராமசாரகா
என்ற பெயரில் அழைக்கப்பட்ட வில்லியம் வாக்கர் அட்கின்சன் எழுதியிருந்த ராஜயோகா புத்தகத்தில் ஆழ்ந்து போனான்.
அவர் எழுதியிருந்த கருத்துகளும், நிகோலா டெஸ்லா எழுதியிருந்த கருத்துகளும் எவ்வளவு
ஒத்துப் போகின்றன என்று அடிக்கடி வியந்தான். மெய்ஞானமும், விஞ்ஞானமும் சந்திக்கும்
இடங்கள் அவனுள் விவரிக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தின.
காலம்
மறந்து அந்த நூலில் ஆழ்ந்திருந்த அவனை அம்மா வந்து தட்டினாள். ‘என்ன’ என்பது போல் அவன் நிமிர்ந்து பார்க்க பத்மாவதி நாற்காலியை இழுத்துப்
போட்டு அவனருகில் உட்கார்ந்தாள். இனி சிறிது நேரம் அங்கிருக்காமல் அம்மா நகர
மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட க்ரிஷ், காரணத்தை சுற்றும் முற்றும் தேடினான்.
சாயங்காலம் அவள் கொண்டு வந்து வைத்திருந்த காபியும், உப்புமாவும் அப்படியே
இருந்தது தெரியவர அம்மாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். அம்மா எதையும்
பொறுப்பாள், அவன் சாப்பிடாமல் இருந்தால் பொறுக்க மாட்டாள்..
“ஏண்டா
இத்தனை படிக்கிறாய், பல பேருக்கு புத்தி சொல்றாய், நேரா நேரத்துக்குச்
சாப்பிடணும்னு தெரியாதாடா? நீ படிச்ச புஸ்தகம் எதிலயும் அதைச் சொல்லலியா” பத்மாவதி சலிப்பு கலந்த கோபத்துடன் கேட்டாள்.
“சாரிம்மா.
ரொம்ப சுவாரசியமா இருந்தது. நேரம் போனதே தெரியல....”
”இது என்ன நாவலா?” என்று பத்மாவதி கேட்டாள். அவளைப் பொருத்தவரை
கதைப்புத்தகங்கள் மட்டுமே சுவாரசியமானவை. அவள் இப்போதும் தமிழ் நாவல்களை ரசித்துப்
படிப்பாள். இப்போதெல்லாம் நாவல்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்பதில் அவளுக்கு
வருத்தம். பழைய நாவல்களையே மறுபடி மறுபடி படிப்பாள்.
”இல்லை. இது ராஜ யோகா பத்தின புஸ்தகம்...” என்றான் அவன்.
அவளுக்கு
ராஜ யோகா என்றால் என்ன என்று தெரியாது. ஜோதிடர்கள் ராஜ யோகம் பற்றிச் சொல்வதைக்
கேட்டிருக்கிறாள். அதனால் அது ஜோதிட சம்பந்த புத்தகமாக இருக்கலாம் என்று
அனுமானித்தவள் அவனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. அந்த ஆறிய உப்புமாவை
எடுத்து மகனுக்கு ஊட்டி விட ஆயத்தமானாள். அவள் ஊட்டிய ஒருவாய் உப்புமாவை விழுங்கிய
க்ரிஷ் எச்சரிக்கையுடன் பின்னால் திரும்பி உதய் தெரிகிறானா என்று பார்த்தான்.
அம்மாவிடம் வாய்விட்டுச் சொன்னான். “சும்மா இரும்மா. அண்ணன் பார்த்தா சின்ன பாப்பா
அப்படி இப்படின்னு இதை வெச்சே என்னை ஓட்டுவான்....”
அடுத்த கவளத்தை
எடுத்தபடியே பத்மாவதி சொன்னாள். “அவன் கிடக்கிறான் தடியன். அவனுக்கும் எத்தனை தடவை
ஊட்டியிருக்கேன்....”
அண்ணனுக்கும்
அம்மா ஊட்டி விடுவதைக் கற்பனை செய்த போது க்ரிஷுக்கு வேடிக்கையாக இருந்தது. “அவன்
ஒன்னும் சொல்ல மாட்டானா?”
இளைய மகனுக்கு அடுத்த
கவளத்தையும் ஊட்டி விட்ட பத்மாவதி சிரித்தபடியே ஒரு ரகசியத்தைப் போட்டுடைத்தாள்.
“கைகழுவ சோம்பல் பட்டுட்டு அவனே ஊட்டி விடச் சொல்வான்.... ஆனா அதுக்கும் முன்னாடி
நீ எங்கயாவது தெரியறியான்னு பார்த்துக்குவான்.....”
’ஓ
அவனுக்கும் அந்தப் பயம் இருக்கு’ என்று எண்ணித் திருப்தியுடன் அவளது அடுத்த கவள உப்புமாவையும் விழுங்கிய க்ரிஷ்
“போதும்மா.... இனியும் இத சாப்டா ராத்திரி எதையும் சாப்ட முடியாது....” என்று உறுதியாய் சொன்னான்.
அவன்
குரலில் இருந்த உறுதி இனி சாப்பிட மாட்டான் என்பதை உணர்த்தியதால் பத்மாவதி அரை
மனதோடு எழுந்தாள். “இவ்வளவு கம்மியா சாப்பிட்டா எப்டிடா? அதான் நோஞ்சானாவே
இருக்கே. உன் அண்ணன் எப்படி கரெக்டா உடம்ப வச்சிருக்கான் பாரு. அப்படி
இருக்கணும்....”
“அவனைத் தான் நீ
தடியன்னு சொல்றியே” என்றபடி லாப்டாப்பை க்ரிஷ் திறந்தான்.
“அது
சும்மா செல்லமா கூப்பிடறது....” என்ற மென்மையாகச் சொன்ன பத்மாவதி, “கரெக்டா எட்டரை
மணிக்கு டைனிங் டேபிளுக்கு நீ வந்துடணும். இல்லாட்டி இந்த ஜோசிய புஸ்தகத்தை எடுத்துட்டுப்
போயிடுவேன்....” என்று மிரட்டி
விட்டுப் போனாள். அம்மா
இதை ஏன் ஜோசிய புஸ்தகம் என்று சொல்கிறாள் என யோசித்த கிரிஷுக்கு விளங்கிய போது
புன்னகை வந்தது. “ஸோ ஸ்வீட்”
’தாய்ப்பாசத்துக்கு இணையானது எதுவுமேயில்லை, இல்லையா?” என்ற கேள்வி அவன் லாப்டாப்பில் மின்னியது. அப்போது தான் க்ரிஷுக்கு அந்த
வினோத தொடர்பு கொள்ளும் நபர் நினைவு வந்தது. உடனே திகைப்பும் ஏற்பட்டது. இது வரை
இந்த லாப்டாப் மூலம் தான் அந்த நபர் எல்லாவற்றையும் அறிவதாக நினைத்திருந்தான்.
ஆனால் இப்போதைய நிகழ்வை இது வரை அணைக்கப்பட்டிருந்த லாப்டாப்பில் இருந்து அந்த நபர் நடந்ததைப் பார்த்திருக்க வழியே
இல்லை. இப்போது தான் அவன் லாப்டாப்பைத் திறந்திருப்பதால் அம்மா போவதை வேண்டுமானால்
அந்த நபர் பார்த்திருக்கலாம். ஒருவேளை யூகத்தில் அப்படிக் கேட்டிருந்தால்.....?
அந்த யூகத்தையும் தகர்க்கும்படியாக ”யோகி ராமசாரகா, நிகோலா டெஸ்லா ரெண்டு பேர் எண்ண
அலைகளும் ஒத்துப் போகிறது. இல்லையா?” என்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிய போது க்ரிஷ்
அதிர்ந்தான். இன்று அவன் யோகி ராமசாரகாவின் புத்தகம் படித்ததை மட்டுமல்ல, அவன்
மனதில் நினைத்ததையும் எப்படி அந்த ஆள் கண்டுபிடித்தான்.... இங்கு நடப்பதைப்
பார்க்க முடிகிறது போல் மனதையும் படிக்க முடிகிறது….
நடப்பதை
எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு “மேட்ரிக்ஸ்” ஆங்கிலப்படம்
நினைவுக்கு வந்தது. அதிலும் கதாநாயகன் நியோவை இப்படி கம்ப்யூட்டரில் தான் அந்த
ரகசிய இயக்கம் தொடர்பு கொள்ளும். அந்தப் படம் பார்த்த பாதிப்பில் யாரோ அவனுடன்
விளையாடுகிறார்களோ? தொழில் நுட்பம் அவனை வேவு பார்க்க உதவலாம். அவன் மனதையும் வேவு
பார்க்க வைக்க முடியுமா என்ன?
அவன்
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்த வாசகம் லாப்டாப் திரையில் வந்தது. “நான்
எந்த ரகசிய இயக்க ஆளும் அல்ல. நான் நீ நினைக்கும் ’மேட்ரிக்ஸ்’ சினிமாவைப் பார்த்ததும் இல்லை.”
திகைத்த
க்ரிஷ் படபடக்கும் இதயத்துடன், லாப்டாப்பில் கேள்வியை அழுத்தினான். “அப்படியானால் யார்
நீங்கள்?”
“நேற்றே சொன்னேனே, உன்
நண்பன்....”
“எனக்கு இந்த
விளையாட்டு சலிப்பாக இருக்கிறது. சரி, இதையாவது சொல்லுங்கள்- நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை எல்லாம் நீங்கள் எப்படிக்
கண்டுபிடிக்கிறீர்கள்?”
“நிகோலா டெஸ்லா அன்றைக்கே சொல்லி விட்டுப் போன அதே வழியில் தான்....
உன் அலைவரிசையை என்னால் படிக்க முடிகிறது....”
க்ரிஷ் திகைத்தான். நிகோலா டெஸ்லாவின் அந்த வலிமையான வாக்கியம்
நினைவுக்கு வந்தது. ”பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய
வேண்டுமானால் சக்தி, அலைவரிசை, அதிர்வுகள் மூலமாக சிந்தித்துப் பார்.”
“நீங்கள் இப்போது
எங்கே இருக்கிறீர்கள்?”
“உன் வீட்டிலிருந்து 16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன்.....”
க்ரிஷுக்குத்
தலைசுற்றியது நடந்து கொண்டிருப்பதெல்லாம் நிஜம் தானா இல்லை கனவா? 16000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஒருவன் இப்படித் தொடர்பு கொள்ள முடியுமா?
அவனுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. எழுந்து நின்று
சோம்பல் முறித்தான். திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தான். இப்போதும் அவன்
லாப்டாப்பில் அதே பதில் மின்னிக் கொண்டிருந்தது. “16000 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறேன்.....”
நடப்பது கனவோ,
கற்பனையோ அல்ல. நிஜம் தான்....
“சரி சொல்லுங்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும்?”
“உன்னைச் சந்திக்க
வேண்டும்”
“எதற்கு சந்திக்க
விரும்புகிறீர்கள்”
“நேரில் சந்திக்கும்
போது சொல்கிறேனே!”
“சரி வீட்டுக்கு
வாருங்கள்”
“நீயே என்னைச்
சந்திக்க வந்தால் நன்றாயிருக்கும்”
“உங்களைச் சந்திக்க என்னால்
16000 கிலோமீட்டர் எல்லாம் பயணம் செய்ய முடியாது”
“தேவையில்லை. நான் நீ வர முடிந்த அளவு தூரத்திற்கே வருகிறேன். அங்கு வந்து சந்தித்தால் போதும்....”
க்ரிஷ் யோசித்தான்.
அந்த நபரைச் சந்தித்து தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் போனால்
நிம்மதியாக இருக்க முடியாது என்று அவனுக்கும் தோன்றியது. “சரி விலாசம்
சொல்லுங்கள். நானே வருகிறேன்”
அப்போது தான் அந்த
மலையின் பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் வந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)