என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 21, 2025

யோகி 99

 


ன்று யோகாலயத்தில் துறவு மேற்கொள்ள, ஷ்ரவனைத் தவிர, வேறொரு நடுத்தர வயதுப் பெண்மணியும் வந்திருந்தாள்.  ஷ்ரவனும் அவளும் முதலில் தியான வகுப்பறையில் அமர்த்தப்பட்டார்கள். கண்ணன் தான் யோகாலயத்தில் துறவு விதிகளை அவர்களிடம் விளக்குவதற்காக வந்தார். ஷ்ரவனைப் பார்த்து அவர் மெலிதாய் புன்னகைத்து விட்டு முக்கிய விதிகளை இருவருக்கும் சொல்ல ஆரம்பித்தார்.

 

துறவறம் பூண்டவர்கள் பழையபடி தங்களுடைய குடும்பத்துடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. யோகாலயத்தில் தனிப்பட்ட முறையில் கைபேசி, கணினி ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை. காவி உடைகளை மட்டுமே அணிய வேண்டும். மற்ற ஆசிரமங்களைப் போல் அங்கு மொட்டை அடித்துக் கொள்வது கட்டாயமில்லை. விருப்பமிருப்பவர்கள் மொட்டை அடித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தலைமுடியை யோகாலயம் நிர்ணயிக்கும் அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களின் தலை முடி ஒரு செண்டிமீட்டர் அளவுக்கு மேலிருக்கக்கூடாது. பெண்களுக்குக் கூந்தல் ஒரு அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அவர்கள் அதை எப்போதும் கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில் எப்பொழுதும் திருநீறு இருக்க வேண்டும். எப்போதும் எந்த விதமான ஒப்பனைக்கும் அங்கே அனுமதியில்லை.  காவி உடைகளும் மூன்று மட்டுமே துறவிகளுக்குத் தரப்படும். அவரவர் உடைகளை அவரவரே துவைத்துக் கொள்ள வேண்டும்.

 

அறையின் அளவுக்குத் தகுந்தபடி மூன்று முதல் ஐந்து துறவிகள் வரை தங்க வேண்டியிருக்கும். அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுவது முதல் இரவு பத்து மணிக்கு உறங்கும் வரை தியானம், உணவு, வேலைகள் தரப்பட்டிருக்கும் நேரத்தில் ஒழுங்குமுறையுடன் செய்யப்பட வேண்டும். ஆண் துறவிகள், பெண் துறவிகள் தங்குமிடங்கள் தனித் தனி கட்டிடங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்குள்ளவர் அங்கும், அங்குள்ளவர் இங்கும் செல்ல அனுமதியில்லை. இரவு நேரங்களில் 10 மணிக்குப் பின் யாரும் தங்குமிடத்தை விட்டு வெளியே வந்து உலாவ அனுமதியில்லை....

 

அவர் சொல்லி விட்டு விண்ணப்பப் படிவத்தையும் தந்தார். அதிலும் அவர் சொன்ன விதிமுறைகள் இருந்தன. அதனுடன் வேறுசில விதிமுறைகளும் இருந்தன. அதற்குச் சம்மதித்துக் கையெழுத்திட்டுத் தந்த பின்பே இருவரும் முதல் பகுதியைத் தாண்டி இரண்டாம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

அதன் பின் அந்தப் பெண் துறவி வேறு பக்கமும், ஷ்ரவன் வேறு பக்கமும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஷ்ரவன் தலைமுடி வெட்டி குளித்து விட்டு வந்த போது மூன்று காவி ஆடைகள் அவனுக்குத் தரப்பட்டன. பின் அவனுக்குத் துறவற தீட்சை வேறொரு வயதான துறவியால் தரப்பட்டது. இனி அவன் ஷ்ரவனானந்தா என்றழைக்கப்படுவான் என்று சொல்லப்பட்டது. பின் அவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றான். அது மூன்று துறவிகள் தங்கும் சிறிய அறை. அந்த அறையில் ஏற்கெனவே ஒரு நடுத்தர வயதுத் துறவியும், ஒரு வயதான துறவியும் இருந்தார்கள்.

 

நடுத்தர வயதுத் துறவி தன்னை சித்தானந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு,  அந்த முதியவரை முக்தானந்தா என்று  தானே அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

ஷ்ரவன் கைகூப்பினான். சித்தானந்தாவும் கைகூப்பினார். ஆனால் முக்தானந்தா அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாரேயொழிய கைகூப்பவில்லை.

 

பின் வறண்ட குரலில் அவர் சொன்னார். “ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு வந்திருக்கிறாய், அவ்வளவு தான்.”

 

ஷ்ரவன் திகைப்புடன் அவரைப் பார்த்தான். சித்தானந்தா புன்னகையுடன் சொன்னார். “அவர் நிறைய தத்துவம் பேசக்கூடியவர்.”

 

ஷ்ரவனும் புன்னகைத்து விட்டு முக்தானந்தாவைப் பார்த்து சொன்னான். “மரணம் விடுவிக்கும் வரை நாம் செல்லும் இடங்கள் அனைத்துமே சிறைகள் தானே சுவாமிஜி?”

 

உண்மைஎன்றபடி முக்தானந்தா கைகூப்பினார்.

 

ஷ்ரவனுக்கு ஒரு அலமாரியும், ஒரு கட்டிலும் ஒதுக்கப்பட்டிருந்தன.  அந்த அலமாரியில் ஒரு எவர்சில்வர் உணவுத்தட்டு, ஒரு சிறிய சொம்பு தியான விரிப்பு, ஒரு தலையணை, ஒரு போர்வை ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் ஒருவரில் யாராவது ஒருவர் ஒற்றராகவும் இருக்கலாம் என்பதால் யோகி பிரம்மானந்தரால் பெரிதும் கவரப்பட்டு துறவறம் பூண்டு இங்கு வந்திருப்பதாகவும், அவர்         நிழலில் வாழ்ந்து மெய்ஞானம் பெறுவதே தன்னுடைய ஒரே இலக்கு என்றும் ஷ்ரவன் சொன்னான்.  சித்தானந்தா அவனைப் பெருமையுடன் பார்த்தாலும், முக்தானந்தாவின் முகத்தில் சந்தேகம் தான் தெரிந்தது. 

 

ஒரு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. சித்தானந்தா சொன்னார். “இது உணவுக்கான மணி. வாருங்கள் போவோம். உங்கள் தட்டையும், சொம்பையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

 

அவர் சொன்னபடி தட்டையும் சிறிய சொம்பையும் எடுத்துக் கொண்டு ஷ்ரவன் அவருடன் கிளம்பினான். முக்தானந்தாவும் பின்னாலேயே வந்தார். ஆனால் அவர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவில்லை. 

 

சாப்பிடும் அறையில் நிறைய ஆண் துறவிகள் இருந்தார்கள். பெண் துறவிகளுக்கு அதே அறையில் அரை மணி நேரம் கழித்து உணவு வழங்கப்படும் என்று சித்தானந்தா சொன்னார். அதற்குள் ஆண் துறவிகள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து போய் விட வேண்டும் என்றும், அந்த நேரத்தில் வந்து போக முடியா விட்டால் அடுத்த வேளை உணவுக்குத் தான் வர வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.

 

அங்கு எளிமையான உணவு தரப்பட்டது. வரிசையில் நின்று உணவு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். அந்த சாப்பாட்டு அறையில் உணவு பரிமாறிய இரண்டு ஆட்களும் துறவிகளைக் கண்காணிப்பவர்கள் என்பதை முதல் பார்வையிலேயே ஷ்ரவன் யூகித்தான். சாப்பிடும் போதும் முக்தானந்தா அவர்களுடன் சேர்ந்து அமராமல் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டார். அங்கிருந்த மற்ற துறவிகளும் தங்களுக்குள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொள்ளவில்லை. புதியவனான அவனைப் பார்த்து இரண்டு துறவிகள் மட்டும் புன்னகைத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர்களும் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேசிக் கொள்வதை உணவு பரிமாறுபவர்கள் கூர்ந்து கவனிப்பது தெரிந்தது.

 

சாப்பிட்ட பின் தட்டுகளை அவரவரே அலம்பிக் கொண்டு வந்தனர். கடிகாரத்தைப் பார்த்து சிலர் வேகமாகச் சாப்பிட்டார்கள். அடுத்த மணி அடிப்பதற்குள் அவர்கள் அனைவரும் வெளியே வந்தாகி விட்டது. ஷ்ரவன், சித்தானந்தா இருவரும் சாப்பிட்டு வெளியே வருவதற்கு முன்பே முக்தானந்தா அறைக்குப் போய் விட்டார்.

 

திரும்பி வரும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம் கேட்டான். “சுவாமி முக்தானந்தா அதிகம் பேச மாட்டாரோ?”

 

சித்தானந்தா சொன்னார். “அவர் பேசுவது குறைவு. ஆனால் சில சமயங்களில் தனக்குத் தானே பேசிக் கொள்வார்.”

 

இங்கே மற்ற துறவிகளும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதைக் கவனித்தேன்என்றான் ஷ்ரவன்.

 

அதிகம் பேசுவதை இங்கே ஊக்குவிப்பதில்லை. நீங்கள் ஒருவருக்கொருவரே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்குள் இருந்து வரும் குரலை உங்களால் எப்படிக் கேட்க முடியும் என்று யோகிஜி கேட்பார்.”

 

ஷ்ரவன்அதுவும் சரி தான்என்று சொன்னான்.

 

மதிய சாப்பாடு முடிந்து அரை மணி நேரம் இளைப்பாறிய பிறகு சித்தானந்தாவும், முக்தானந்தாவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார்கள். முக்தானந்தாவுக்குக் காய்கறிகள் நறுக்கும் வேலையும், சித்தானந்தாவுக்கு யோகாலயத்தின் ஹால்களைச் சுத்தம் செய்யும் வேலையும் ஒதுக்கப்பட்டு இருந்தன.

 

ஷ்ரவன் சொன்னான். “எனக்கு எந்த வேலையென்று அவர்கள் சொல்லவில்லையே

 

சித்தானந்தா சொன்னார். “நாளை உங்களிடம் பேசிவிட்டு முடிவு செய்து சொல்வார்கள். இன்று உங்களுக்கு ஓய்வு தான்.”

 

அவர்கள் போய் விட்டார்கள். அவர்கள் போய் சிறிது நேரத்தில் கண்ணன் வந்தார். சினேகத்துடன் அவனை நலம் விசாரித்தார். அவரும், நாளை அவனுக்கு வேலை ஒதுக்கப்படும் என்றும், காலை உணவு சாப்பிட்டு முடித்த பிறகு அலுவலக அறைக்கு வரும்படியும் சொன்னார். பின் புன்னகையுடன் கேட்டார். “இங்கிருந்து போன பின்னும் உங்களுக்கு மனக்காட்சியில் ஓநாயும், அந்த இளைஞனும் வந்தார்களா?”

 

இல்லை சுவாமிஜி. அது தான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. சில நாட்கள் நான் வேண்டுமென்றே ஓநாயையும், அந்த இளைஞனையும் நினைத்தபடியே இருந்திருக்கிறேன். அப்படி இருந்தும் காட்சியில் வரவில்லை. யோகிஜியின் அனுக்கிரகம் என்றே நான் அதை நினைக்கிறேன்.”

 

அவர் தலையசைத்தார். பின் சொன்னார். “இங்கே யாரும் அவர்கள் இருக்கும் இடம், வேலை செய்யும் இடம் தவிர மற்ற இடங்களுக்குப் போய் வருவதற்கு அனுமதி கிடையாது. யோகிஜி துறவு என்பதே உடலும் மனதும் அலைவதை நிறுத்துவது தான் என்று சொல்வார்.”

 

ஷ்ரவன் சொன்னான். “அவர் சொல்வது சரிதான் சுவாமிஜி. கண்டிப்பாக நான் இங்குள்ள விதிகளை மீற மாட்டேன்.”

 

கண்ணன் திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தார். சென்று பாண்டியனிடம் அனைத்தையும் சொன்னார். பாண்டியன் கேட்டார். ”அவன் அறையில கூட இருக்கற வேற ரெண்டு பேர் யார் யார்?”

 

முக்தானந்தாவும், சித்தானந்தாவும்

 

முக்தானந்தா அங்கே தான் இருக்காரா?” என்று கேட்ட பாண்டியனுக்கு அந்தத் தகவல் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, April 17, 2025

சாணக்கியன் 157

ர்வதராஜன் தலைமையில் சிறிய படை ஒன்று பாடலிபுத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மலைகேது தங்கள் முன்னால் குதிரை வீரர்களில் ஒருவனாக சாதாரண வீரனைப் போல் சென்று கொண்டிருக்கும் சந்திரகுப்தனை வியப்புடன் பார்த்தான். பின்னால் மூலிகைகள் நிரம்பிய ஒரு வண்டியில் வைத்தியராக சாணக்கியர் வந்து கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் தகுதிக்கும் குறைவான நிலைமையில் பயணம் செய்து கொண்டிருந்ததற்கு எந்த வருத்தமும் படவில்லை என்பது மலைகேதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அவன் தந்தையிடம் கேட்டான். “ரதத்தில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்படி வருவதில் வருத்தமாக இருக்காதா தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “அவர்கள் தாழ்ந்த நிலையில் முன்பு இருந்தவர்கள் தான் மகனே. அதனால் அவர்கள் நம் அளவுக்கு அதை அவமானமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மேல்நிலையை எட்டிய பின் தங்களை மேலானவர்களாகவே பாவித்துக் கொள்ளும் போக்கு மனிதர்களுக்கு உண்டு. இவர்கள் இருவரும் அந்த மனப்போக்கில் சிக்கி விடாத பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள். முக்கியமாக இவர்கள் இருவரிடமிருந்தும் நீ கற்றுக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடமிது மகனே. காரியம் தான் முக்கியமே ஒழிய தோற்றங்களும், மரியாதைகளும் அல்ல....”

 

ஆனாலும் அது மிகவும் கஷ்டம் தான் என்று மலைகேதுவுக்குத் தோன்றியது. அவன் கேட்டான். “இப்போது போகும் வழியிலும் கூட ஒற்றர்கள் அவர்களைக் கண்காணித்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்களா தந்தையே”

 

“ஆம் மகனே... அந்த சாத்தியக்கூறு இருக்கிறது....”

 

“ஆனால் இந்தச் சிறிய படையால் மகதத் தலைநகரை முற்றுகையிட்டு கைப்பற்ற முடிவது சாத்தியம் என்று தோன்றவில்லையே தந்தையே”

 

“எனக்கும் தோன்றவில்லை மகனே. ஆனால் ஆச்சாரியர் எதோ சூழ்ச்சித் திட்டம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் சமயம் வராமல் எதையும் சொல்ல மாட்டேன்கிறார். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் தன் திட்டங்களை சந்திரகுப்தனிடம் கூடச் சொல்லவில்லை என்று சொல்வதை நான் நம்பவில்லை மகனே. அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒளிவுமறைவும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மிடம் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. மகதத்தை வென்று முடிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று நான் கஷ்டப்பட்டு பொறுமையாக இருக்கிறேன். மகதத்தை வென்ற பிறகு தான் நம் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும்.”

 

ற்றன் வந்து சொன்ன தகவல் மடலில் சொன்ன தகவல் உண்மை தான் என்பதை ராக்‌ஷசருக்கு உறுதிப்படுத்தியது. சிறிய படை பர்வதராஜன் தலைமையில் இங்கு வந்து கொண்டிருப்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஹிமவாதகூட அரசன் மகதத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் புதிய கவலை கலிங்கமாக இருந்தது.  மடலில் உள்ளது உண்மை என்றால் திடீரென்று கலிங்கம் படையடுத்து வருவதும் உண்மையாகவே இருக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க கலிங்கப் பகுதியிலான மகத எல்லைக்குப் படைகளை அனுப்ப வேண்டும். கூடுதல் படைகளை வடக்குப் பகுதிக்கும் அனுப்புவது அவசியமாகிறது. அந்தப் படைகளை பத்ரசால் தலைமையில் அனுப்புவது என்று ராக்‌ஷசர் தீர்மானித்தார். சந்திரகுப்தனையும் சேர்த்து எதிர்கொள்ள பத்ரசால் பொருத்தமானவன் என்று அவருக்குத் தோன்றியது. மேலும் இங்கே அவனும் சுதானுவும் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள் என்றும் அவர் கேள்விப்பட்டார். அதனால் கூடுதல் எதிர்காலச் சந்திப்புகளை வெட்டி விட இருவரில் ஒருவரை அப்புறப்படுத்துவது நல்லது என்று நினைத்தார். அதற்கான உத்தரவுகளை அவர் உடனே பிறப்பித்தார்.  

 

அவர் உத்தரவுகளைக் கேட்டவுடனேயே சுதானு அதிருப்தி அடைந்தான். சமீப காலமாக ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவுகளை எடுக்கும் ராக்‌ஷசர் இந்த முறை அந்தச் சிரமத்தை எடுத்துக் கொள்ளாமலேயே அறிவித்தது அவன் போட்டிருந்த திட்டங்களைத் தகர்ப்பதாக இருந்தது. அவன் பத்ரசாலிடம் சொன்னான். “நாம் போட்டிருந்த திட்டங்கள் நாம் இருவரும் பிரிந்தால் நிறைவேறுவது கஷ்டம் சேனாதிபதி. ராக்‌ஷசர் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்திருந்தால் எதாவது சொல்லித் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு அவர் இடம் கொடுக்காமல் உத்தரவு பிறப்பித்து விட்டார். இப்படி அவர் கலந்தாலோசிக்காமல் உத்தரவு போடுவதற்கு நீங்கள் இது வரை ஆட்சேபணை தெரிவித்ததில்லையா?”    

 

பத்ரசால் சொன்னான். “ஆட்சேபணை தெரிவித்து அவர் எதிரியாவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. மேலும் என்ன ஆட்சேபணை தெரிவித்தாலும் உங்கள் தந்தை நிதி செலவாவதைத் தவிர வேறு ராக்‌ஷசர் சொல்லும் எதற்கும் மறுப்பே தெரிவிப்பதில்லை. அதனால் நாங்கள் ஆட்சேபணை தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இப்படி அவசர காலங்களில் உத்தரவு போடும் அதிகாரம் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு இங்கே இருக்கிறது இளவரசே”

 

“உங்களிடம் எப்போது செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்?”

 

“கூடுமான அளவு விரைவில். நான் படைகளை உடனடியாக அனுப்பி  ஏகாதசி அன்று மகாவிஷ்ணு கோவிலில் வெற்றிக்காக வழிபாடு செய்து விட்டுக் கிளம்பி வேகமாகச் சென்று படைகளுடன் இணைந்து கொள்வதாகச் சொல்லி இருக்கிறேன். ஏகாதசி மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பதால் ராக்‌ஷசர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அந்த மகான் சொன்னது அந்த நாளை அல்லவா? அந்த நாளில் முற்றுகை நடந்தால் அதில் ஏதாவது காரணம் காட்டி இங்கேயே அன்று தங்கிவிடப் பார்க்கிறேன்.”

 

சுதானு திருப்தியுடன் தலையசைத்தான்.

 

லிங்க மன்னன் தங்கள் எல்லைப் பகுதியில் மகதப்படைகள் குவிக்கப்படும் செய்தி கிடைத்து அதிர்ந்தான். அறிவிப்பு எதுவுமின்றி திடீரென்று இப்படி நடக்க என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் தன் பிரதம அமைச்சரை அழைத்துக் காரணம் கேட்ட போது அவர் சொன்னார். “தனநந்தனுக்குப் புத்தி பேதலித்து விட்டது என்று சொல்கிறார்கள் அரசே. திடீர் திடீரென்று கத்துகிறான் என்றும் இது போன்ற முடிவுகளை எடுக்கிறான் என்றும் சொல்கிறார்கள்....”

 

கலிங்க மன்னன் கவலையுடன் சொன்னான். ”தனநந்தனுக்குப் புத்தி பேதலித்திருக்கலாம். ஆனால் ராக்‌ஷசர் தெளிவானவராயிற்றே. சில வருடங்களாகவே அவர்களுடன் நாம் சுமுகமாகவல்லவா இருக்கிறோம். அப்படி இருந்தும் ஏனிப்படி?”

 

“அரசே. சில நேரங்களில் மன்னனே பைத்தியம் முற்றி கட்டளையிடுகையில் மறுத்துப் பேசினாலும்  மன்னனுக்குக் கோபம் அதிகம் வரும்.  அதனால் அவர் மறுக்காமல் அனுமதித்து இருக்கலாம். இதுவரை கிடைத்த தகவலின்படி சந்திரகுப்தன் சில மன்னர்களைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு அவர்களை வடக்கிலும் மேற்கிலும் தாக்க வந்து கொண்டிருக்கிறான் என்பது. அந்தச் சமயமாகப் பார்த்து நாமும் தாக்க முற்படுவோம் என்ற சந்தேகத்தினால் கூட அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எல்லையையும் காப்பது நல்லது என்று நினைத்திருக்கலாம். எதற்கும் நாமும் நம் படைகளை எல்லையில் நிறுத்துவோம்.  முதலில் அவர்கள் பக்கத்திலிருந்து தாக்குதல் வருமானால் நாமும் தாக்குவோம். இல்லா விட்டால் நாமும் அமைதியாக இருப்போம். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்…”

 

கத எல்லையை நெருங்க இன்னும் இரண்டு காத தூரமே தான் இருக்கிறது என்ற நிலையில் தான் சந்திரகுப்தன் பர்வதராஜனிடம் பேச வந்தான். “இங்கேயே சற்று காத்திருப்போம். இன்னொரு படை வந்து கொண்டிருக்கிறது. அதுவும் வந்து சேர்ந்த பின் பாடலிபுத்திரத்தை முற்றுகை இடுவோம்”

 

பர்வதராஜன் திகைப்புடன் கேட்டான். “அது யார் படை சந்திரகுப்தா?”

 

 

எங்கள் படை தான் பர்வதராஜனே. அப்படையும் வந்த பின் நாம் சேர்ந்து முன்னேறிச் செல்வோம்.” என்று சொல்லி விட்டு சந்திரகுப்தன் தன் பழைய இடத்திற்குப் போய் விட்டான்.

 

பர்வதராஜனுக்குப் பகீரென்றது. அந்தப் படை எப்போது கிளம்பியது? எங்கிருந்து வருகிறது?  அந்தப் படை வரும் வரை இருப்பு கொள்ளாமல் தவித்தான். இந்தப் புதிய வரவு குறித்த தகவல் அவன் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சாணக்கியரோ, சந்திரகுப்தனோ பேசக் கிடைக்கவில்லை. அவனாக அவர்களிடம் சென்று பேசுவது மகத ஒற்றர்களுக்கு ஆள் மாறாட்டத்தை அறிவிப்பது போலாகி விடும். அது எல்லா முயற்சிகளையும் வீணாக்கி விடும் என்பதால் அவர் அமைதியாக இருந்தார்.

 

மூன்று நாழிகை நேரம் கழித்து பெரும் படை வரும் ஆரவாரம் கேட்டது.  

 

லிங்க மன்னனும் எல்லையில் படைகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டான் என்ற தகவல் மகதத்திற்கு முதலில் வந்து சேர்ந்தது. கணக்குப் போட்டுப் பார்க்கையில் எல்லாம் அந்த மடலில் சொல்லியிருந்தது போலவே நடப்பதாக ராக்‌ஷசரும், மற்றவர்களும் நினைத்தார்கள். ஆனால் சிறிது நேரத்திலேயே பாடலிபுத்திரத்தை நெருங்கிக் கொண்டிருப்பது சிறுபடை அல்ல பெரும்படை என்ற தகவலும் வந்து சேர்ந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

Monday, April 14, 2025

யோகி 98


 

ந்தவொரு ஆபத்தான வேலைக்குச் செல்வதற்கு முன்பும், தப்பித்து வரவும், தற்காத்துக் கொள்ளவும், சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் செல்வது ஷ்ரவனின் வழக்கம். தற்போது யோகாலயத்துக்குச் செல்வதற்கு முன்பும் அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். மாந்திரீக விஷயங்களின் சூட்சுமங்களை அவன் நிறைய படித்துத் தெரிந்து கொண்டான். வழக்கமான துப்பறிதல் வேலை யோகாலயத்தில் சாத்தியப்படா விட்டால் இந்த மாந்திரீக விஷயங்கள் மூலமாகத் தான் அவன் அவர்களுக்குத் தூண்டிலை வீசியாக வேண்டும்.

 

அங்கு போன பிறகு அவனிடம் கைபேசி இருக்காது. சமூக ஊடகம் எதிலும் அவனால் தொடர்பு கொள்ள முடியாது. குமரேசன் அங்கே தோட்டக்காரனாக இருக்கின்ற போதும், அங்கே ஷ்ரவன் சிறைப்படுத்தப்பட்டால் அவன் குமரேசனைப் பார்க்கும் வாய்ப்பும் கூட இருக்காது. அதனால், அவன் யாரென்பது கண்டுபிடிக்கப்பட்டால் பின் அவனுக்கு வெளியுலகைப் பார்க்கும் வாய்ப்பு கூடக் குறைவு தான். சைத்ராவின் தந்தை வழக்கு தொடர்ந்ததால், சைத்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் வரையாவது உயிரோடு வைத்திருந்தார்கள். பின் தான் கொன்றார்கள். ஷ்ரவனுக்கு அப்படித் தாமதமாகச் சாகும் வாய்ப்பும் இருக்காது.

 

அவன் யோகாலயத்தில் கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் துறவிகளுக்கு எதில் திறமையும், ஈடுபாடும் இருக்கின்றதோ அந்த வித வேலை தான் அவர்களுக்கு பொதுவாக தரப்படுகிறது என்று சொல்லியிருந்தார். அப்படி அவனிடம் கேட்கும் போது அவன் கம்ப்யூட்டர், கடிதப் போக்குவரத்து, தோட்ட வேலை ஆகியவற்றைச் சொல்லலாம் என்று எண்ணியிருக்கிறான். முதலிரண்டு வேலைகள் கிடைத்தால் இணையத் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். தோட்ட வேலை தந்தால் குமரேசனுடன் அவன் தொடர்பில் இருக்க முடியும்

 

யோகாலயத்தில் வழக்கமான அவர்களுடைய மின்னஞ்சல்கள் அனுப்பும் வாய்ப்பு கிடைத்தால் மிக நல்லது. ஆசிரம நிகழ்ச்சிகள், வகுப்புகள் சம்பந்தமாக தினமும் நிறைய மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டியிருக்கும். அவற்றுடன் சேர்த்து முக்கியமான தகவல்களை அவன் ராகவனுக்கும் அனுப்ப முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கலாம்.  அதற்காகவே அவன்ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம்என்ற பெயரில் ஒரு கற்பனை அமைப்பின் பெயரில் மின்னஞ்சலை சில நாட்களுக்கு முன்பே யோகாலயத்திற்கு அனுப்பி இருந்தான்.

 

தவத்திரு யோகி பிரம்மானந்தா அவர்களுக்கு,

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்தின் மெய்யன்பர்கள் சார்பில் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் நாட்டில் ஆன்மிகத்தைப் பரப்புவதற்காக திருவண்ணாமலையை அடுத்த போதமங்கலம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது எங்கள் அமைப்பு. பல ஆன்மிகப் பெரியவர்கள் இங்கு வந்து அழிவில்லாத நம் சனாதன தர்மம் குறித்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தாங்களும் தயைகூர்ந்து இவ்வருடத்தில் தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் இங்கு வந்து யோகாவின் மேன்மையை இங்குள்ள பக்தர்களுக்கும் தந்தருள வேண்டும் என்றும் தங்கள் நூல்களையும், உரைகளையும் எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும் என்றும் பாதம் தொழுது நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.   

.   

இப்படிக்கு

கனகசபாபதி

தலைவர், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம்

 

இந்த மின்னஞ்சலுக்குப் பதில் வராது என்பது ஷ்ரவனுக்கு மிக நன்றாகத் தெரியும். யோகாலயத்தில் இந்த அழைப்பையே அவமதிப்பாகத் தான் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஐ நா சபையிலேயே சென்று பேசும் உச்ச நிலையில் உள்ள பிரம்மானந்தாவை ஒரு கிராமத்தின் ஆன்மிக மையத்தில் பேச அழைப்பது கூட அவர்களைப் பொறுத்தவரை அடாவடித்தனம் தான். அதனால்அழைப்பை ஏற்று வர முடியாமைக்கு வருந்துகிறோம்என்ற சம்பிரதாய பதில் கூட வராது என்பதை அவன் அறிவான். அதேபோல் அந்த மின்னஞ்சலுக்கு எந்தப் பதிலும் யோகாலயத்திலிருந்து வரவில்லை.  ஆனாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம் இப்போது அவர்கள் தொடர்புகளில் இருக்கும்.

 

சில நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை ஒரே மின்னஞ்சல் மூலமாக, பல நூறு பேர்களுக்கு அவர்கள் அனுப்புகையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்திற்கும் சேர்த்து அவன் அனுப்புவது அவர்கள் கவனத்திற்குச் செல்ல வாய்ப்புகள் குறைவு.  அவர்கள் அனுப்பிய அறிவிப்புச் செய்தியின் முடிவில் அவனும் ஏதாவது ஒருசில வரிகளை ரகசிய சங்கேத பாஷையில் அவன் எழுதிச் சேர்த்து விடமுடியும்.  பல நூறு மின்னஞ்சல்களுக்கு மத்தியில் ஒரு மின்னஞ்சலில் ஓரிரு வரிகள் கூடுதலாக சேர்த்திருப்பதைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். ஆனால் ராகவனுக்கு அவன் சேர்த்திருக்கிற சங்கேத வரி நிறைய தகவல்களைத் தெரிவித்து விடும்.

 

அதே போல் ஸ்ரேயாவுக்கும் தகவல் அனுப்ப மின்னஞ்சலை லீலாவதி என்ற பெயரில் உருவாக்கி இருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் அந்த மின்னஞ்சலில் யோகாலயத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தான்.

 

பூஜ்யஸ்ரீ யோகி பிரம்மானந்தாஜி அவர்களுக்கு,

 

தங்கள் பக்தை லீலாவதி பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பிறந்த மண்ணில், தாங்கள் வாழும் காலத்தில் வாழ முடிந்ததையே பேரதிர்ஷ்டமாக நான் காண்கிறேன். ஆனால் எளிதில் வந்து தங்களைத் தரிசிக்க முடியாத வயதிலும் (வயது 82), தூரத்திலும் (சண்டிகர்) நான் உள்ளேன். எத்தனையோ முறை தங்கள் தரிசனத்திற்கு ஏங்கிய எனக்கு நேற்று இரவில் வந்து தரிசனம் தந்த தங்கள் கருணையை நான் எப்படிப் பாராட்டுவது? தங்கள் சக்தியின் பெருமையை நான் என்னவென்று சொல்வது? இனி இறந்தாலும் எனக்கு வருத்தமில்லை. நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்.  நான் பிறந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நமஸ்கரிக்க மட்டுமே என்னால் முடிகிறது.

 

இப்படிக்கு

தங்கள் பக்தை

லீலாவதி.

 

இந்த மின்னஞ்சலுக்கு யோகாலயத்திலிருந்துஆசிர்வாதம்என்ற ஒற்றை வார்த்தை பதிலாக வந்தது. இப்போது லீலாவதியும் அவர்கள் தொடர்புகளில் ஒன்றாக இருக்கும்.

 

ஷ்ரவன் ஸ்ரேயாவுக்கு சங்கேத வார்த்தைகளை அறிமுகப்படுத்தினான். அனுப்பும் கடிதம் சாதாரணமாகத் தோன்றினாலும் அதில் உள்ள செய்தியை எப்படி வாசித்துப் புரிந்து கொள்வது என்பதை பொறுமையாகச் சொல்லித் தந்தான்.

 

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்என்பதற்குநான் ஆபத்தில் இருக்கிறேன்என்று அர்த்தம். இதைத் தொடர்ந்து நான் எழுதும் வாக்கியங்களில் இரண்டு வார்த்தைகள் விட்டு மூன்றாவது வார்த்தையை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கணும். இப்ப உதாரணம் சொல்கிறேன்.” என்று சொல்லி ஒரு சில வரிகளை அனுப்பினான்.

 

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். பிரச்சினைகள் வந்தால் உடனடியாக கௌசல்யை மைந்தன் ராகவனிடம் பிரார்த்திக்கவும். எங்கள் யோகாலயத்திற்கு குடும்பத்தினரை நம்பிக்கையுடன் வரச்சொல்லவும்.”

என்ற செய்தியை

நான் ஆபத்தில் இருக்கிறேன். பிரச்சினைகள் வந்தால் உடனடியாக கௌசல்யை மைந்தன் ராகவனிடம் பிரார்த்திக்கவும். எங்கள் யோகாலயத்திற்கு குடும்பத்தினரை நம்பிக்கையுடன் வரச்சொல்லவும். (உடனடியாக ராகவனிடம் யோகாலயத்திற்கு வரச்சொல்லவும்)” என்று படிக்க வேண்டும் எனச் சொன்னான்.

 

அவளுக்கு இதெல்லாம் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. ஆனால் இதில் அந்த அளவு பேராபத்தும் இருக்கிறது என்று புரிந்த போது கலக்கமாகவும் இருந்தது. “ஷ்ரவன் ஜாக்கிரதையாய் இருங்க. பாதுகாப்பாய் திரும்பி வாங்க. நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன். என்னால நீங்கள் வராட்டி அடுத்ததாய் செய்யச் சொன்னதெல்லாம் சாத்தியமில்லைஎன்று கண்கலங்க, நா தழுதழுக்கச் சொன்னாள்.

 

அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டு கைபேசியைக் கீழே வைக்கையில் ஷ்ரவன் மனம் கனத்திருந்தது. சில நாட்களிலேயே காதல் இவ்வளவு வேரூன்ற முடியுமா என்று பிரமிப்பாக இருந்தது. ஒரு மாதம் முன்பு வரை அவள் யாரோ, அவன் யாரோ! இன்றோ பிரிந்திருப்பது இருவருக்கும் பெரும் வேதனையாக இருக்கிறது.   

 

ஆனால் உணர்ச்சிவசப்பட அவனுக்கு நேரமில்லை. மனதை உணர்ச்சிவசப்பட அனுமதித்தால் அது அறிவை மழுங்கடித்து விடுகிறது. அதை அவன் என்றும் அனுமதிக்க முடியாது.  மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றால் மனம் தன் அபிப்பிராயங்களுடன் குறுக்கிடக்கூடாது. மனதுக்குச் சொல்ல பல விஷயங்கள் இருப்பதில்லை. அது சிலதையே பல முறை சொல்லி ஒருவனுடைய கவனத்தை அற்ப விஷயங்களில் திருப்பி விடுகின்றது.

 

அவன் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் வழிகளில் எது, எவ்வளவு தூரம்  அவனுக்குப் பயன்படப் போகிறது என்பது தெரியாது. பயன்படுவதையும் அவன் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடி மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கும். எதற்கும் தயாராக இருக்கும் மனநிலையே எல்லா வெற்றிக்கும் அடிப்படைத் தேவை. அதை ஏற்படுத்திக் கொண்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்த ஷ்ரவன் பரசுராமன் கற்றுத் தந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். நாளை யோகாலயத்துக்கு அவனோடு பயணிக்கப் போவது அந்த சக்தி தான். அது கண்டிப்பாக அவனைக் காக்கும்

 

(தொடரும்)

என்.கணேசன்