என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 19, 2022

சாணக்கியன் 5


சக்ரபாணியின் குரல் அரசவையில் கணீர் என்று ஒலித்தது. “ஒரு ராஜ்ஜியத்தின் உயிராகவே அரசன் கருதப்படுகிறான். தர்மத்தைக் காத்து ரட்சிப்பதே ஒரு அரசனுக்கு முக்கிய கடமையாக இருக்கிறது. அப்படி தர்மத்தைக் காத்து முறையாக ஆட்சி நடத்தும் அரசன் கடவுளின் கௌரவத்தைப் பெற்று சொர்க்கத்திற்கே போக முடிந்தவனாகவும் ஆகிறான். ஒரு அரசன் உரிய கல்வியைக் கண்டிப்பாகக் கற்றுத் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். அதோடு அவன் தன் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்தவனாக இருக்க வேண்டும். அப்படி ஒழுங்கும், ஒழுக்கமும் வாய்ந்த அரசனே மக்களைக் கட்டுப்படுத்தக்கூடியவனாகவும், அவர்களை வழிநடத்தக் கூடியவனாகவும் இருக்க முடியும்.  நற்செயல்களை ஆதரிக்கக்கூடிய இந்திரனாகவும், தவறுகளைத் தண்டிக்கக்கூடிய எமனாகவும் அரசன் செயல்பட வேண்டும். அரசன் என்றுமே ராஜ்ஜிய நன்மைக்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்....”   

தனநந்தன் முற்றிலுமாகப் பொறுமை இழந்தான். சற்று முன் காதில் விழுந்து கொண்டிருந்ததை விட இப்போதைய வார்த்தைகள் அவன் காதுகளில் நாராசமாக ஒலித்தன. ”நிறுத்து அந்தணனே. எல்லாத் தியாகங்களையும் நான் செய்ய வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கின்றபடியெல்லாம் நான் நடந்து கொள்ள வேண்டும். இப்படி எனக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டே போகிற உங்களுக்கு முடிவில் நான் பரிசுகள் அள்ளி வழங்கி என் கஜானாவைக் காலி செய்ய வேண்டும். ஆனால் காலி செய்த கஜானாவை மறுபடி நிரப்ப மக்களிடம் கூடுதலாக வரியும் விதிக்கக்கூடாது. அப்படித்தானே?”


சக்ரபாணி அரசனின் கோபத்தைக் கண்டு பயந்து போனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். ”நான் சொன்ன கருத்துக்களை தாங்கள் உள்ளபடியே புரிந்து கொள்ளவில்லை அரசே.”

 

தனநந்தன் கோபம் அதிகமாகியவனாகச் சொன்னான். “சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன் அந்தணனே. நீ சற்று முன் சொன்னபடி எல்லாவற்றையும் உங்களுக்கே சாதகமாக வகுத்து வைத்திருக்கிற உன் குரு யார்? சபைக்கு முன் வரச் சொல்...”

 

சக்ரபாணி திகைத்தவனாய் திரும்பி விஷ்ணுகுப்தரைப் பார்த்தான். விஷ்ணுகுப்தர் அமைதி மாறாமல் அமர்ந்திருக்க சக்ரபாணிக்கு அரசனிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தனநந்தனும், ராக்‌ஷசரும், வரருசியும் சக்ரபாணியின் பார்வை போன இடத்தையே பார்த்தார்கள். மற்றவர்கள் பார்வையும் அவர் பக்கமே திரும்ப வேறுவழியில்லாமல் விஷ்ணுகுப்தர் அமைதியாக எழுந்து சபைக்கு முன் வந்தார்.

  

தனநந்தனின் கோபப்பார்வையும், மற்றவர்களின்  பார்வையும் அவர் மீதே பதிந்திருந்த போதிலும் விஷ்ணுகுப்தர் சஞ்சலமடையவில்லை. சக்ரபாணியைப் பார்த்து பாராட்டும் பார்வை ஒன்றை சிறு முறுவலுடன் பார்த்து விட்டு அவர் அவன் அருகில் நின்று கொண்டே என்ன என்பது போல் தனநந்தனைப் பார்த்தார்.

 

“அந்தணனே. உன்னுடைய சீடன் சொன்ன கருத்தெல்லாம் உன்னுடையது தானா?” தனநந்தன் அக்னிப்பார்வை பார்த்தபடியே விஷ்ணுகுப்தரிடம் கேட்டான்.

 

“ஆமாம்..“

 

ராக்‌ஷசர் விஷ்ணுகுப்தரின் அமைதியைப் பார்த்து அமைதியிழந்தார். தனநந்தன் ஏடாகூடமாக எதையாவது கேட்டால் ஏடாகூடமாகவே இந்த மனிதரிடமிருந்து பதில் வரும் என்று அவருக்குத் தோன்றியது.  சிறிதும் பயமோ தயக்கமோ இல்லாத இந்த மனிதர் ஆபத்தானவர் என்றும், தனநந்தன் மேலும் கொதித்துப் போகும்படியான கருத்துக்கள் மேலும் சொல்ல நேரிடும் என்று யூகித்து தனநந்தன் பேச வாய் திறப்பதற்குள் அவரே பேசினார். ”ஒரு ராஜ்ஜியத்தின் சிறப்பு எதை வைத்து தீர்மானமாகிறது என்பது தலைப்பு. அதில் அரசனுடைய கடமைகள் பற்றியே உங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. குடிமக்கள் பங்கு பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது ஒருபட்ச நிலையாக இருக்கிறதே என்று அரசர் நினைக்கிறார்”

 

விஷ்ணுகுப்தர் ராக்‌ஷசரின் சாதுரியத்தை மனதில் மெச்சியபடி அவரைப் பார்த்தபடி சொன்னார். “ராஜ்ஜியத்தின் சிறப்பில் அரசனின் பங்கு இருக்குமளவு குடிமக்கள் பங்கு இல்லை. மேலும் அரசன் எப்படியோ அப்படியே அவர்கள் மாறுகிறார்கள் என்பதால் அவர்கள் அரசனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார்கள். அதனால் தான் அரசன் ஒரு உதாரண புருஷனாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்கிறோம். அப்படி இருந்தால் தான் அரசனால் குடிமக்களைக் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும் முடியும். தான் அப்படி இருக்காத போது மக்களை அப்படி இருக்க வற்புறுத்தும் தார்மீக உரிமையும் அரசனுக்கு இல்லாமல் போகிறது”

 

தனநந்தன் ஆத்திரத்துடன் கேட்டான். “அரசனுக்கு அறிவுரை வழங்கும் உரிமை உனக்கு எப்படி வந்தது அந்தணனே?”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “உண்மையைச் சொல்லும் உரிமை மட்டுமல்லாமல் கடமையும் ஒவ்வொரு ஆசிரியனுக்கும் இருக்கிறது அரசனே”

 

“அதை உன் மாணவர்களுக்குச் சொல்லித்தருவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அந்தணனே. அரசர்களுக்குச் சொல்லக் கூடாது”

 

“பதிலை விரும்பா விட்டால் அதை வரவழைக்கும் கேள்வியையும் தவிர்த்திருக்க வேண்டும் அரசனே. கேள்வி கேட்டதால் அல்லவா என் மாணவன் அதைச் சொல்ல நேர்ந்தது?”

 

கேள்வி கேட்ட வேகத்திலேயே பதில்கள் வந்ததும், ஒவ்வொரு பதிலும் எள்ளி நகையாடுவது போல் இருந்ததும் தனநந்தனின் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது. பேச்சில் வெல்ல முடியாத இந்த அந்தணனை, தன்னிடமே சரிக்கு சமமாக எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசும் இந்த அந்தணனின் அமைதியை எப்படியாவது குலைக்க, அவமானப்படுத்துவது ஒன்று தான் வழி என்று முடிவெடுத்த தனநந்தன் “சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணி அகம்பாவமாகப் பேசும் அந்தணனே. உன் பேச்சுக்கு என்னிடமிருந்து பரிசு என்ற பெயரில் என்ன பிச்சை எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “உன் பிச்சை எனக்கு அவசியமில்லை அரசனே”

 

தனநந்தன் இகழ்ச்சியாகக் கேட்டான். ”பின் எதற்காக இங்கே வந்தாய்?”

 

விஷ்ணுகுப்தர் ஏளனப்புன்னகையுடன் சொன்னார். “இங்கே அறிவுக்கும் அறிஞர்களுக்கும் என்ன மதிப்பிருக்கிறது என்று அறிய வந்தேன். தெரிந்து விட்டது. கூடவே உன் மதிப்பையும் அறிவித்து விட்டாய் அரசனே”

 

தனநந்தன் கோபத்தின் உச்சத்தை அடைந்தான். “காவலர்களே. இந்த அகம்பாவ அந்தணனை இங்கிருந்து வெளியேற்றுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் அமைதி மாறாமல் சொன்னார். “அவசியமில்லை அரசனே. இங்கு இனி இருக்க எனக்கும் விருப்பமில்லை...” சொல்லி விட்டு வேகமாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்த விஷ்ணுகுப்தரை நெருங்கிய காவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்புடன் தனநந்தனையும் ராக்‌ஷசரையும் பார்த்தார்கள்.

 

தனநந்தன் ஏதாவது சொல்வதற்கு முன்பு ராக்‌ஷசர் சைகை செய்தார். “போகட்டும். ஒன்றும் செய்ய வேண்டாம்”

 

விஷ்ணுகுப்தர் வெளியேறினார்.

 

சக்ரபாணி என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் நிற்க ராக்‌ஷசர் அவனை அமரும் படி சைகை காட்டி விட்டு வரருசியிடம் அமைதியாகச் சொன்னார். “அடுத்த நிகழ்ச்சியை அறிவியுங்கள் அமைச்சரே”

 

தனநந்தன் கோபம் அடங்காமல் தவித்தான். ஒரு கணம் எழுந்து போய் விடலாமா என்று அவன் நினைத்து எழப்போனான். ராக்‌ஷசர்  எழுந்து வந்து தாழ்ந்த குரலில் சொன்னார். “நீங்கள் எழுந்து போனால் அந்த அந்தணர் உங்களைப் போக வைத்து விட்டதாக ஆகிவிடும். அந்த அளவு பெருமையை நீங்கள் அவருக்குத் தரவேண்டியதில்லை.”

 

“கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்க வேண்டும். நீங்கள் காவலர்களை நிறுத்தி விட்டீர்கள்”

 

“அரசரே. அறிஞர்களை சிறப்புக்கூட்டத்திற்கு வரவழைத்து விட்டு அவமானப்படுத்தியதாய் பலரும் விமர்சனம் செய்ய அது காரணமாகி விடும். அவர் இந்த இடத்திலிருப்பது நமக்குப் பிடிக்கவில்லை. அவரும் போய் விட்டார். அப்படியே விட்டு விடுவது நல்லது. இதற்கு மேல் பெரிதுபடுத்த ஒன்றுமில்லை.” சொல்லி விட்டு அரசன் அடுத்த வார்த்தைகளை யோசிப்பதற்கு முன் போய் தன்னிருக்கையில் ராக்‌ஷசர் அமர்ந்து விட்டார்.  

 

தனநந்தன் பல்லைக்கடித்துக் கொண்டு தன் அரியணையில் சாய்ந்தான். அதற்குப் பின் நடந்த நிகழ்வுகளில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. ராக்‌ஷசருக்கும் அது முடியவில்லை. வரருசி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்க ராக்‌ஷசர் தட்சசீலத்து விஷ்ணுகுப்தரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். அரசனிடம் பேசுகிற போதே ஆரம்ப அமைதியிலிருந்து கடைசி ஏளனம் வரை மனிதர்  தன்னுடைய நிதானத்தை இழக்கவில்லை என்பதை யோசிக்கும் போது விஷ்ணுகுப்தர் அபாயமான ஆளாகத் தான் தெரிந்தார். நல்ல வேளையாக அவர் ஆசிரியராக இருக்கிறார். அரசியலில் இருந்திருந்தால் பலம் வாய்ந்த எதிரியைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும் என்று ராக்‌ஷசர் நினைத்துக் கொண்டார். பலம் வாய்ந்த எதிரியாக அந்த ஆசிரியர் ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் என்பதை ராக்‌ஷசர் அறிந்திருக்கவில்லை.  

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


Wednesday, May 18, 2022

முந்தைய சிந்தனைகள் 80

 என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்!













Monday, May 16, 2022

யாரோ ஒருவன்? 85


தீபக் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் உணர்ந்த அனுபவத்தையும், வழியில் வினோதமான முறையில் மாதவனின் பெற்றோரைச் சந்தித்ததையும் அவளிடம் சொன்னபடி சரத்திடம் சொல்லவில்லை. அவன் எதையும் அவர்கள் இருவரிடமும் மறைப்பவன் அல்ல. அவன் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போய் திரும்பிய அன்று இரவு சரத் “எப்படிடா இருந்துச்சு?” என்று கேட்டான்.

“சூப்பர்ப்பா” என்று சொன்ன தீபக் தொடர்ந்து தன் விசித்திர அனுபவங்களைச் சொல்ல முனைவதற்கு முன்னால் அவனுக்கு ஒரு நண்பனின் போன்கால் வந்தது. அந்த நண்பன் அன்று அவர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு போக முடியாதவன். அவனிடம் விவரமாகப் பேசுவதற்கு தீபக் தனதறைக்குப் புகுந்து கொள்ள அன்று அவன் அதைப் பற்றி சரத்திடம் விரிவாகச் சொல்ல முடியவில்லை. மறுநாளோ அந்த நிகழ்வு பழைய நிகழ்வாகப் போய் விட்டதால், சூப்பர்ப்பா என்று ஒரே வார்த்தையில் தீபக் சொன்னதோடு எல்லாம் சொல்லியாகி விட்டது என்ற உணர்வை சரத்தும் பெற்றிருந்ததால் அவன் மறுபடி தீபக்கிடம் எதுவும் கேட்கவில்லை. ஆக அந்த சம்பவங்கள் சரத்துக்குத் தெரியாமலே போய் விட்டது.

ரஞ்சனி நினைத்திருந்தால் அந்தச் சம்பவங்களை சரத்திடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் சரத் அதை நல்ல விதமாக எடுத்துக் கொள்வான் என்று ரஞ்சனிக்குத் தோன்றவில்லை. அவன் அவளையே கூட மாதவனின் பெற்றோரைச் சந்திக்கச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் தீபக் போனதையும் ரசிப்பான் என்று சொல்ல முடியாது... அதனால் அவளும் சொல்லவில்லை.

நடப்பதெல்லாம் எதை உணர்த்த வருகிறது என்பதை நாகராஜ் என்ற நாகசக்தி மனிதனிடம் கேட்டால் தெரியும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேற்று கூட தீபக்கிடம் அதுபற்றிச் சொன்ன போது அவன் சொன்னான். “நான் அவர் கிட்ட சொல்லியிருக்கேன்ம்மா. அவர் தமாஷா ‘உன்னையே சமாளிக்க முடியலை. உங்கம்மாவுமா”ன்னு சொன்னார். ‘என் மாதிரி எங்கம்மா கிடையாது. பக்கா டீசண்டு’ன்னு சொன்னேன். அப்பறமா அவர் ஒன்னும் சொல்லலை.  பொறும்மா. சீக்கிரமே ஒரு நாள் நீ அவரைச் சந்திக்கற மாதிரி பண்ணிடறேன்....”   

அந்த நாள் எப்போது வருமோ?

கல்யாணிடம் அட்வான்ஸ் தொகை மூன்று லட்சம் வாங்கிய அன்றே மணி தன் வேலையை ஆரம்பித்து விட்டான். அவனும் அவனுடைய பிரதான கூட்டாளியும் நாகராஜின் வீட்டை ஒரு நாள் முழுவதும் கண்காணித்தார்கள். இரவு நேரம் கூட முழுமையாக அப்பகுதியின் சூழ்நிலையையும், அந்த வீட்டின் சூழலையும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.

கல்யாணிடமிருந்து பக்கத்து வீட்டின் உள்ளமைப்பையும் அறிந்து கொண்ட பின் மணிக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அந்த வீட்டுக்குள் பாம்பு இருப்பது உண்மையா? தகவல் போல் கல்யாண் அதை அவனிடம் தெரிவித்திருந்தானேயொழிய அவன் நேரிலேயே பார்த்திருக்கிறான் என்பதைச் சொல்லவில்லை. கல்யாண் பாம்பு சமாச்சாரத்தைச் சொன்னது போலவும் இருக்க வேண்டும், வேவு பார்க்கையில் பாம்பு இருப்பதைப் பார்த்து விட்டேன் என்கிற உண்மையைச் சொல்லவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் பாம்பு சீறல் சத்தம் மட்டும் கேட்கிறது என்று சொல்லி விட்டிருந்தான். ஆனால் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு, அங்கே போகும் முன் அது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமிருந்த மணி வெளியே இருந்து அந்த வீட்டைக் கவனித்ததில் வீட்டுக்கு வெளியே பாம்பு எதுவும் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த வீட்டுக்குப் போகும் சமயத்தில் உள்ளே பாம்பு இருந்தால் என்ன செய்வது என்பதற்கும் சேர்த்து அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

பிறகு அவனும் அவன் கூட்டாளியும் சேர்ந்து திட்டமிட ஆரம்பித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


மறுநாள் காலை கல்யாணுக்கு மணி போன் செய்து சொன்னான். “சார், இன்னைக்கு ராத்திரி உங்க வேலை நடக்கும். உங்க கூர்க்கா ராத்திரி ட்யூட்டியில இல்லாம இருக்கிறது நல்லது. நாளைக்கு எதாவது போலீஸ் விசாரணைன்னா தேவையில்லாம அவன் மேலயும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கு….”

கல்யாண் சொன்னான். “அவன் ஊருக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தான். இன்னைக்கு அனுப்பிச்சிடறேன்…”

மகன் பேசி முடித்த பிறகு வேலாயுதம் கேட்டார். “யாருடா? என்ன விஷயம்?”

கல்யாண் மணி சொன்னதைச் சொன்னான். வேலாயுதத்துக்குப் பரபரப்பாய் இருந்தது. ”ஓ… இன்னைக்கு ராத்திரி வர்றானா? எத்தனை பேரு வருவானுக?”

“தெரியல. நாலஞ்சு பேராவது வருவானுகன்னு நினைக்கிறேன்….”

“அவனுக பாம்பைப் பார்த்து பயந்து ஓடிப் போயிட மாட்டானுகளே. பாம்பு இருக்குங்கறத சொல்லியிருக்கேல்லியா”

“ம் … சூசகமா சொல்லியிருக்கேன். அவனுக எல்லாம் ப்ரொஃபெஷனல்ஸ்ப்பா நாம சொல்ற எந்தத் தகவலையும் அலட்சியப்படுத்திட மாட்டாங்க. அதனால தான் அவ்வளவு பணம் வாங்கறானுக…. பாம்பு விஷயத்தைக் கேட்டு அதுக்காகவே அவன் ஒரு லட்சம் ரூபாய் அதிகமாய் சொல்லியிருக்கவும் வாய்ப்பிருக்கு.. ”

“ஆனாலும் எட்டு லட்சம் அதிகம் தான்.  இத்தனைக்கும் நீ அதோட மதிப்பே ஒரு லட்சத்துக்குள்ளே தான் சொல்லியிருக்கே… அப்படியிருக்கறப்ப அவன் இவ்வளவு வாங்கறான்…;. ஊம்… இருந்துட்டு போகட்டும் அந்த விசேஷ நாகரத்தினம் மட்டும் நம்ம கைல கிடைச்சுடுச்சுன்னா நாம இருக்கப் போற நிலைமையே வேற…. அத யோசிக்கறப்ப இந்த எட்டு லட்சம் எல்லாம் சுண்டைக்காய் தான்… அதுசரி பாம்புகள் இருந்தா அவனுக எப்படி சமாளிப்பாங்க….”

“அது எதோ பண்ணிட்டு போறாங்க….”

வேலாயுதம் இரவு பக்கத்து வீட்டைக் கவனிக்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நேரடியாகவே பார்க்க முடியும் என்று எண்ணிக் கொண்டார். அந்த நினைவே அவருக்கு பரபரப்பாக இருந்தது. பாம்பைப் பார்த்து தலைதெறிக்க ஓடாத ஆட்களாக இருந்தால் போதும்… அவர் அதைப் பார்த்து வயிறெரியத் தேவையில்லாதபடி எல்லாம் நடந்தால் போதும்…

அவர் அந்த மனநிலையில் இருக்கையில் கல்யாண் மெல்லக் கேட்டான். “அவனுக்கு எத்தனையோ சக்திகள் இருக்குன்னு சொல்றாங்களே…. அவனுக்கு அவர்கள் வர்றது தெரிஞ்சு போச்சுன்னா என்ன செய்வான்?”

“அதெல்லாம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லைடா. அப்படித் தெரிஞ்சுக்கிறதுன்னா நாம அவனை வேவு பார்க்கறதையும் கூடத் தெரிஞ்சிருப்பான்.  அப்படி தெரிஞ்சிருந்தா நம்மளப் பார்த்து புன்னகை எல்லாம் ஏன் பண்ணப்போறான்?”

அவர் சொல்வதும் சரியாகத் தான் கல்யாணுக்குத் தோன்றியது. முன்பு இந்தப் பக்கமே பார்க்காதவன் இப்போது புன்னகை செய்து அங்கீகரிக்கிறான் என்றால் அவர்கள் மனஓட்டங்கள் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை… சிறிது யோசனைக்குப் பின் கல்யாண் தந்தையிடம் உறுதியான குரலில் சொன்னான். “ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க. ராத்திரி வெளியே என்ன சத்தம் கேட்டாலும் நீங்க வெளியே போய் பார்க்கற வேலை மட்டும் வேண்டாம். நாம பணம் கொடுத்தாச்சு. இனி அவங்க பாடு, நாகராஜ் பாடு”

வேலாயுதம் தலையசைத்தார்.

அஜீம் அகமதுக்குக் கிடைத்திருந்த டெல்லி வரைபடம் மிக அண்மைக்கால வரைபடமாக இருந்தது. அதில் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு பகுதியும் எந்தக் குறிப்பும் விடுபட்டிராதபடி முழுவிவரங்கள் இருந்தன. ஒரு வீடு அல்லது ஒரு அலுவலகம் கடந்த சில தினங்களாகக் காலியாக இருந்தால் அது பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பச்சை நிற இடங்களுக்குத் தனி எண்கள் தரப்பட்டிருந்தன. அந்த எண்ணை க்ளிக் செய்தால் அந்த இடம் பற்றிய விரிவான கூடுதல் தகவல்கள் தனியொரு பக்கத்தில் விரிந்தன.   இப்படியாக ஒரு நாள் முழுவதும் டெல்லி வரைபடத்தை ஆராய்ந்து அவன் 48 இடங்களை நரேந்திரன் இருவரையும் ஒளித்து வைத்திருக்ககூடிய இடங்களாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான்.

மறுநாள் காலை அவன் ஆட்கள் இருவரும் ஆளுக்கு ஐம்பது இடங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முதலாமவன் தேர்ந்தெடுத்திருந்த 22 இடங்களும், இரண்டாமவன் தேர்ந்தெடுத்திருந்த 19 இடங்களும் அஜீம் அகமது தன் வரைபடத்தில் ஏற்கெனவே தேர்ந்தெடுத்திருந்த இடங்களாக இருந்தன.

மீதமிருந்த அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த இடங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று அஜீம் அகமது அவர்களிடம் விளக்கச் சொன்னான். அவர்கள் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்த அஜீம் அகமது அவர்கள் சொன்னதில் இருந்த பொருந்தாத விஷயங்களைச் சுற்றிக்காட்டி சிலவற்றை அந்தத் தாள்களில் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு பெருக்கல் குறி போட்டான். அவர்கள் சொன்னது ஓரளவாவது சரியாக இருப்பதாகத் தோன்றினால் அந்த இடத்திற்குப் புள்ளி வைத்தான். முடிவில் முதலாமவன் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்பது புள்ளிகள் மிஞ்சின. இரண்டாமவன் தேர்ந்தெடுத்த இடங்களில் ஏழு புள்ளிகள் மிஞ்சின. அவன் தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் 48ம், அவர்கள் இருவர் தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் மொத்தமாக 16ம் சேர்ந்து மொத்தமாக 64 இடங்கள் உள்ள பட்டியலைத் தயாரித்த அஜீம் அகமது தன் இரு ஆட்களிடமும் சொன்னான். “இந்த 64 இடங்களில் ஒன்றில் தான் நரேந்திரன் அவர்களை ஒளித்து வைத்திருக்கிறான்”



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Thursday, May 12, 2022

சாணக்கியன் 4

விஷ்ணுகுப்தர் இந்தக் கூட்டத்திற்காக வந்திருப்பவர்களை கூர்ந்து கவனித்ததில் நான்கு வகை மனிதர்களாக அவர்களைப் பிரிக்கலாம் என்று கணக்கிட்டார். தங்கள் அறிவுத்திறனை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்த வந்திருப்பவர்கள், தங்கள் அறிவுத்திறன் மூலம் பரிசும் செல்வமும் பெற்றுக் கொண்டு போக வந்தவர்கள், மாணவர்கள், அறிவுதாகத்தினால் வந்தவர்கள் மற்றும் வேறெந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்த்து பொழுதைப் போக்க வந்தவர்கள். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சூழ்நிலையை ஆராய்ந்து ஒரு தெளிவான கணக்கை அவரால் எட்டாமல் இருக்க முடிவதில்லை…

 

திடீரென்று எதிர் பக்கத்திலிருந்து ஒரு இளைஞன் எழுந்து “வணக்கம் ஆச்சாரியரே” என்று கைகூப்பி தலைதாழ்த்தி வணங்கினான். தட்சசீலத்தில் அவரிடம் படித்த மாணவன் அவன். விஷ்ணுகுப்தருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தட்சசீலத்தின் பிரதிநிதியாக ஒரு மாணவன் இந்தச் சபையில் இருக்கிறான்…. புன்னகையுடன் அவர் கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

 

தனநந்தன் வருகையை அறிவிக்கும் மணியடிக்கப்பட்டது. தனநந்தனும் அவனைப் பின் தொடர்ந்து ராக்‌ஷசரும் வந்தார்கள். விஷ்ணுகுப்தரையும், வேறு இரண்டு முதியவர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்.  அரசனை வாழ்த்தும் வேதகோஷங்களைப் பண்டிதர்கள் ஒருசேரச் சொன்னார்கள். நின்றிருக்கும் கூட்டத்தின் நடுவே விஷ்ணுகுப்தர் அமர்ந்திருந்ததை அருகிலிருப்பவர்கள் மட்டுமே கவனிக்க நேரிட்டது. அவர்கள் திகைப்புடன் அவரைப் பார்த்ததை விஷ்ணுகுப்தர் லட்சியம் செய்யவில்லை.

தனநந்தன் அமர்ந்து கையமர்த்தினான்.  அனைவரும் அமர்ந்தார்கள். தனநந்தன் முகத்தில் மலர்ச்சியோ உற்சாகமோ இருக்கவில்லை. ராக்‌ஷசர் உள்ளே சென்று அழைத்து வந்திருக்கா விட்டால் இனியும் தாமதமாகத் தான் தனநந்தன் வந்திருப்பான் என்று விஷ்ணுகுப்தர் கணக்குப் போட்டார்.

 

வரருசி ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் பிரார்த்தனையாகச் சொல்லி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  முதலில் விவாத நிகழ்ச்சி. ராக்‌ஷசர் அரசனுக்கு ஆரம்ப விவாதமே எட்டிக்காயாகக் கசக்க வேண்டாம் என்று எண்ணி சாதுரியமாக இராமாயணத்தில் யாருடைய எந்தத் தம்பி உயர்ந்தவன், ஏன் என்ற தலைப்பை வாதத்திற்காக எடுத்துக் கொடுத்தார்.  காரசாரமான விவாதம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் பேச ஆரம்பிப்பதற்கு முன் தங்கள் பெயர், குருவின் பெயர், ஊரின் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டபின் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகச் சொன்னார்கள். சத்ருக்னன், சுக்ரீவன், விபீஷணன் மூவர் பெயரும் ஆரம்ப விவாதங்களிலேயே கழிக்கப்பட்டு இராமனின் பரதன், லட்சுமணன், இராவணனின் கும்பகர்ணன்- இந்த மூவர் குறித்த கருத்துகள் முன்னிலை எடுத்து அறிஞர்களால் கடைசி வரை காரசாரமாக விவாதிக்கப்பட்டன.  தனநந்தனின் முகச்சுளிப்பு குறைந்து அவன் சுவாரசியமாக அந்த வாதங்களை ரசிக்க ஆரம்பித்தான்.  மிக நன்றாகப் பேசி பரிசு பெறத் தகுதிபெற்றவர்களுடைய பெயர்களை ராக்‌ஷசரும், வரருசியும் அருகருகே அமர்ந்தபடி கலந்து பேசி குறித்துக் கொண்டார்கள்.

 

அடுத்தது நிபுணத்துவம் எந்த அளவில் உள்ளது என்பதற்கான போட்டி. போட்டியில் தலைப்பைத் தந்தவுடன் யார் எழுந்து முன்வருகிறார்களோ அவர்கள் அதுகுறித்துப் பேச வேண்டும். பேசுபவரிடம் அது சம்பந்தமான எதிர் கேள்விகளை யாரும் கேட்கலாம். பேச வந்தவர் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். ஆதாரங்கள் தேவைப்பட்டால் அதையும் சொல்ல வேண்டும். அவரால் தொடர்ந்து எதுவும் சொல்ல முடியாத பட்சத்தில் அவர் போய் அமர்ந்து கொள்ள அடுத்து யாராவது தொடர வரலாம். அல்லது வேறு எதாவது பதிலையே சொல்ல ஆரம்பிக்கலாம். இதற்கான தலைப்பை வரருசி தேர்ந்தெடுத்தார்.  “ஒரு ராஜ்ஜியத்தின் சிறப்பு எதை வைத்து தீர்மானமாகிறது?”

 

முதலில் பேச எழுந்தது விஷ்ணுகுப்தரின் மாணவன் தான். இது குறித்து அவர் வேண்டுமளவு சொல்லித் தந்திருக்கிறார். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பதில் சொல்லுமளவு மனதில் நிறைய பதித்திருக்கிறார். அதனால் முதலில் எழுந்த அந்த மாணவன் விஷ்ணுகுப்தரை இருகரம் கைகூப்பி வணங்கி விட்டு சபைக்கு எதிரில் வந்து நின்றான்.

 

மன்னரைத் தலைதாழ்த்தி வணங்கி விட்டு அந்த மாணவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “என் பெயர் சக்ரபாணி. என் குரு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர்....” சொல்லி விட்டு விஷ்ணுகுப்தரை திரும்பிப் பார்த்து தலை தாழ்த்தி வணங்கி விட்டுத் தொடர்ந்தான். “படித்தது தட்சசீலத்து கல்விக்கூடம்....”

 

தட்சசீலத்துக் கல்விக்கூடம் என்று சொன்னவுடன் வரருசி முகம் மலர்ந்தது. ராக்ஷசரிடம் பெருமிதத்துடன் சொன்னார். “நான் படித்த இடம்..” அவர்கள் இருவரும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் குறித்தும் பலர் உயர்வாகச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவர் பார்வையும் மரியாதையுடன் சக்ரபாணி வணங்கிய பக்கம் சென்றது. ஆனால் விஷ்ணுகுப்தர் நிச்சலனமாக நேர் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தார். 

 

சக்ரபாணி தன் பதிலைச் சொல்ல ஆரம்பித்தான். “ராஜ்ஜியத்தின் சிறப்பு மக்களின் சுபிட்சத்தை வைத்தும் அதன் ஆட்சியை வைத்தும் தீர்மானமாகிறது. ஆனால் அந்த இரண்டின் சிறப்புமே அரசனை வைத்துத் தான் தீர்மானமாகிறது...”

 

ராக்‌ஷசர் அரசனை மையப்படுத்தி பேச்சு நகர்வதில் பிரச்னையை உணர்ந்தார். அறிவுரைகள் என்ற தலைப்பை இந்த மாணவன் நெருங்கிவிட வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே எட்டிக்காயாய் கசக்கிறது என்று தனநந்தன் சொல்லியிருப்பதால் ராக்‌ஷசர் இடைமறித்துக் கேட்டார். “அமைச்சர்களின் பங்கை ஏன் சொல்லவில்லை. அரசர் அமைச்சர்கள் மூலமாக அல்லவா ஆட்சியை நடத்துகிறார்”

 

“நிர்வாகத்திற்கு அரசன் அளவுக்கு அமைச்சர்கள் பங்கும் முக்கியம் தான் என்றாலும் அமைச்சர்களை அரசர் எந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறார் என்பது மறுபடியும் அரசரின் குணாதிசயங்களையும், அறிவையும் பொறுத்தே அமைகிறது. மேலும் அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளை அரசருக்கு வழங்க முடியும் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்வதும் ஒதுக்குவதும் அரசரின் இச்சைப்படியே நடக்கிறது.”

 

ராக்‌ஷசருக்கு இதை மறுக்க முடியவில்லை. வேறு எதாவது கேள்வி கேட்டு கூடுமான அளவு பேச்சு அரசர் பற்றிப் போகாமல் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து அவர் கேள்வியை யோசிப்பதற்குள் ஒரு வயதான அறிஞர் கேள்வி கேட்டு விட்டார். ”ராஜ்ஜியத்தின் சிறப்பு அரசனைப் பொறுத்தது என்றால் அரசன் சிறப்பாய் ஆட்சி நடத்தும் முறை என்ன?”

 

கேள்வி கேட்கப்பட்ட பிறகு செய்வதற்கொன்றுமில்லை என்பதால் ராக்‌ஷசர் மௌனமாக இருந்து விட்டார். சக்ரபாணி மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தான். “அரசன் சிறப்பாய் ஆட்சி செய்யும் முறை குறித்து மனுநீதியில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குடிமக்களின் நலன் காப்பதும், நீதியை நாட்டில் நிலைநாட்டுவதும், அரசனின் தலையாய கடமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனு அத்துடன் தண்டநீதி என்னும் தண்டிக்கும் சட்டங்கள், வரிவசூல் முறை, நீதி பரிபாலனம், அயல்நாடுகளுடனான உறவு, அரசனுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள், தர்மசிந்தனை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். தண்டநீதி குறித்துச் சொல்லுகையில் தண்டனைகள் குறித்த பயமே குற்றங்களைக் குறைக்கும் என்பதால் வலிமையானவர்களின் தவறான செயல்களால் பலவீனமான குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்படியாகவும், தர்மத்தை நிலைநாட்டும்படியாகவும் அது இருக்க வேண்டும் என்கிறார். விவசாயி களைகளைப் பிடுங்கி பயிர்களைக் காப்பது போல அரசனும் சமூகவிரோத சக்திகளை அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். மனுவின் காலத்தில்  ஆறில் ஒரு பங்கு விளைச்சலிலும், பத்தில் ஒரு பங்கு வியாபரத்திலும் வரியாக வசூலிக்கப்பட்டது. வரிகள் எப்போதுமே குடிமக்களுக்குச் சுமக்க முடியாத சுமையாக மாறிவிடக்கூடாது என்பது மனுவின் கருத்து. அரசன் குரூரமாகவும், தர்மமில்லாத வழிகளில் செல்லக்கூடாது. தர்மசாஸ்திரங்களை அறிந்தவனாகவும், தர்ம வழிகளை அறிந்தவனாகவும் இருப்பதுடன் தர்மத்தை அனுசரிப்பவனாகவும் இருக்க வேண்டும்.... அய்த்ரேய பிராமணத்தில் அரசன் தர்மநியாய முறைப்படி தான் நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான் ஆட்சிபீடத்தில் அமர வேண்டும் என்று சொல்லப்படுகிறது....”

 

சக்ரபாணி வரிவசூல் பற்றிச் சொல்ல ஆரம்பத்ததிலிருந்தே எரிச்சலடைய ஆரம்பித்திருந்த தனநந்தன் இந்தக் கட்டத்தில் பொறுமையை முழுவதுமாக இழந்து குறுக்கிட்டான். “அந்தணனே, நீ சொல்கின்ற படியெல்லாம் அனுசரித்து நடந்தால் ஒரு மடத்தை வேண்டுமானால் நடத்தலாம். மகதம் போன்றதொரு சாம்ராஜ்ஜியத்தை நடத்த முடியுமா? ஏதோவொரு பழங்காலத்தில் எவனோ சொன்னதை எல்லாம் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கிறாயே, இக்காலத்திற்குப் பொருந்துவது போல் சொல்ல இன்றைய அறிஞர்கள் யாருமில்லையா?”

 

சக்ரபாணி திடுக்கிட, ராக்‌ஷசரும், வரருசியும்  தங்கள் இருக்கைகளில் மெல்ல நெளிந்தார்கள். சக்ரபாணி சுதாரித்துக் கொண்டான். “மேலான ஞானம் காலம் மாறுவதற்கேற்ப மாறுவதில்லை அரசே. மானுட நன்மைக்கும், சுபிட்சத்திற்கும் வேண்டி எக்காலத்திற்கும் பொருந்துவது போலவே அறிஞர்கள் தர்மநீதிகளைச் சொல்லி இருக்கிறார்கள். எனினும் தற்கால அறிஞர்கள் கருத்தை அறிய தாங்கள் ஆசைப்படுவதால், என் குருவான ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கருத்தை அவர் அனுமதியுடன் கூறுகிறேன்...” என்று சொல்லி அவன் திரும்பி விஷ்ணுகுப்தர் இருக்கும் பக்கம் நோக்கிக் கைகூப்பி விட்டுத் தொடர்ந்தான். அவன் அதிலிருக்கும் ஆபத்தை அறிந்திருக்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.