சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 19, 2022

சாணக்கியன் 5


க்ரபாணியின் குரல் அரசவையில் கணீர் என்று ஒலித்தது. “ஒரு ராஜ்ஜியத்தின் உயிராகவே அரசன் கருதப்படுகிறான். தர்மத்தைக் காத்து ரட்சிப்பதே ஒரு அரசனுக்கு முக்கிய கடமையாக இருக்கிறது. அப்படி தர்மத்தைக் காத்து முறையாக ஆட்சி நடத்தும் அரசன் கடவுளின் கௌரவத்தைப் பெற்று சொர்க்கத்திற்கே போக முடிந்தவனாகவும் ஆகிறான். ஒரு அரசன் உரிய கல்வியைக் கண்டிப்பாகக் கற்றுத் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். அதோடு அவன் தன் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்தவனாக இருக்க வேண்டும். அப்படி ஒழுங்கும், ஒழுக்கமும் வாய்ந்த அரசனே மக்களைக் கட்டுப்படுத்தக்கூடியவனாகவும், அவர்களை வழிநடத்தக் கூடியவனாகவும் இருக்க முடியும்நற்செயல்களை ஆதரிக்கக்கூடிய இந்திரனாகவும், தவறுகளைத் தண்டிக்கக்கூடிய எமனாகவும் அரசன் செயல்பட வேண்டும். அரசன் என்றுமே ராஜ்ஜிய நன்மைக்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்....”   

தனநந்தன் முற்றிலுமாகப் பொறுமை இழந்தான். சற்று முன் காதில் விழுந்து கொண்டிருந்ததை விட இப்போதைய வார்த்தைகள் அவன் காதுகளில் நாராசமாக ஒலித்தன. ”நிறுத்து அந்தணனே. எல்லாத் தியாகங்களையும் நான் செய்ய வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கின்றபடியெல்லாம் நான் நடந்து கொள்ள வேண்டும். இப்படி எனக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டே போகிற உங்களுக்கு முடிவில் நான் பரிசுகள் அள்ளி வழங்கி என் கஜானாவைக் காலி செய்ய வேண்டும். ஆனால் காலி செய்த கஜானாவை மறுபடி நிரப்ப மக்களிடம் கூடுதலாக வரியும் விதிக்கக்கூடாது. அப்படித்தானே?”


சக்ரபாணி அரசனின் கோபத்தைக் கண்டு பயந்து போனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். ”நான் சொன்ன கருத்துக்களை தாங்கள் உள்ளபடியே புரிந்து கொள்ளவில்லை அரசே.”

 

தனநந்தன் கோபம் அதிகமாகியவனாகச் சொன்னான். “சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன் அந்தணனே. நீ சற்று முன் சொன்னபடி எல்லாவற்றையும் உங்களுக்கே சாதகமாக வகுத்து வைத்திருக்கிற உன் குரு யார்? சபைக்கு முன் வரச் சொல்...”

 

சக்ரபாணி திகைத்தவனாய் திரும்பி விஷ்ணுகுப்தரைப் பார்த்தான். விஷ்ணுகுப்தர் அமைதி மாறாமல் அமர்ந்திருக்க சக்ரபாணிக்கு அரசனிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தனநந்தனும், ராக்ஷசரும், வரருசியும் சக்ரபாணியின் பார்வை போன இடத்தையே பார்த்தார்கள். மற்றவர்கள் பார்வையும் அவர் பக்கமே திரும்ப வேறுவழியில்லாமல் விஷ்ணுகுப்தர் அமைதியாக எழுந்து சபைக்கு முன் வந்தார்.

  

தனநந்தனின் கோபப்பார்வையும், மற்றவர்களின்  பார்வையும் அவர் மீதே பதிந்திருந்த போதிலும் விஷ்ணுகுப்தர் சஞ்சலமடையவில்லை. சக்ரபாணியைப் பார்த்து பாராட்டும் பார்வை ஒன்றை சிறு முறுவலுடன் பார்த்து விட்டு அவர் அவன் அருகில் நின்று கொண்டே என்ன என்பது போல் தனநந்தனைப் பார்த்தார்.

 

அந்தணனே. உன்னுடைய சீடன் சொன்ன கருத்தெல்லாம் உன்னுடையது தானா?” தனநந்தன் அக்னிப்பார்வை பார்த்தபடியே விஷ்ணுகுப்தரிடம் கேட்டான்.

 

ஆமாம்..“

 

ராக்ஷசர் விஷ்ணுகுப்தரின் அமைதியைப் பார்த்து அமைதியிழந்தார். தனநந்தன் ஏடாகூடமாக எதையாவது கேட்டால் ஏடாகூடமாகவே இந்த மனிதரிடமிருந்து பதில் வரும் என்று அவருக்குத் தோன்றியது.  சிறிதும் பயமோ தயக்கமோ இல்லாத இந்த மனிதர் ஆபத்தானவர் என்றும், தனநந்தன் மேலும் கொதித்துப் போகும்படியான கருத்துக்கள் மேலும் சொல்ல நேரிடும் என்று யூகித்து தனநந்தன் பேச வாய் திறப்பதற்குள் அவரே பேசினார். ”ஒரு ராஜ்ஜியத்தின் சிறப்பு எதை வைத்து தீர்மானமாகிறது என்பது தலைப்பு. அதில் அரசனுடைய கடமைகள் பற்றியே உங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. குடிமக்கள் பங்கு பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது ஒருபட்ச நிலையாக இருக்கிறதே என்று அரசர் நினைக்கிறார்

 

விஷ்ணுகுப்தர் ராக்ஷசரின் சாதுரியத்தை மனதில் மெச்சியபடி அவரைப் பார்த்தபடி சொன்னார். “ராஜ்ஜியத்தின் சிறப்பில் அரசனின் பங்கு இருக்குமளவு குடிமக்கள் பங்கு இல்லை. மேலும் அரசன் எப்படியோ அப்படியே அவர்கள் மாறுகிறார்கள் என்பதால் அவர்கள் அரசனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார்கள். அதனால் தான் அரசன் ஒரு உதாரண புருஷனாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்கிறோம். அப்படி இருந்தால் தான் அரசனால் குடிமக்களைக் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும் முடியும். தான் அப்படி இருக்காத போது மக்களை அப்படி இருக்க வற்புறுத்தும் தார்மீக உரிமையும் அரசனுக்கு இல்லாமல் போகிறது

 

தனநந்தன் ஆத்திரத்துடன் கேட்டான். “அரசனுக்கு அறிவுரை வழங்கும் உரிமை உனக்கு எப்படி வந்தது அந்தணனே?”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “உண்மையைச் சொல்லும் உரிமை மட்டுமல்லாமல் கடமையும் ஒவ்வொரு ஆசிரியனுக்கும் இருக்கிறது அரசனே

 

அதை உன் மாணவர்களுக்குச் சொல்லித்தருவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அந்தணனே. அரசர்களுக்குச் சொல்லக் கூடாது

 

பதிலை விரும்பா விட்டால் அதை வரவழைக்கும் கேள்வியையும் தவிர்த்திருக்க வேண்டும் அரசனே. கேள்வி கேட்டதால் அல்லவா என் மாணவன் அதைச் சொல்ல நேர்ந்தது?”

 

கேள்வி கேட்ட வேகத்திலேயே பதில்கள் வந்ததும், ஒவ்வொரு பதிலும் எள்ளி நகையாடுவது போல் இருந்ததும் தனநந்தனின் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது. பேச்சில் வெல்ல முடியாத இந்த அந்தணனை, தன்னிடமே சரிக்கு சமமாக எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசும் இந்த அந்தணனின் அமைதியை எப்படியாவது குலைக்க, அவமானப்படுத்துவது ஒன்று தான் வழி என்று முடிவெடுத்த தனநந்தன்சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணி அகம்பாவமாகப் பேசும் அந்தணனே. உன் பேச்சுக்கு என்னிடமிருந்து பரிசு என்ற பெயரில் என்ன பிச்சை எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “உன் பிச்சை எனக்கு அவசியமில்லை அரசனே

 

தனநந்தன் இகழ்ச்சியாகக் கேட்டான். ”பின் எதற்காக இங்கே வந்தாய்?”

 

விஷ்ணுகுப்தர் ஏளனப்புன்னகையுடன் சொன்னார். “இங்கே அறிவுக்கும் அறிஞர்களுக்கும் என்ன மதிப்பிருக்கிறது என்று அறிய வந்தேன். தெரிந்து விட்டது. கூடவே உன் மதிப்பையும் அறிவித்து விட்டாய் அரசனே”

 

தனநந்தன் கோபத்தின் உச்சத்தை அடைந்தான். “காவலர்களே. இந்த அகம்பாவ அந்தணனை இங்கிருந்து வெளியேற்றுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் அமைதி மாறாமல் சொன்னார். “அவசியமில்லை அரசனே. இங்கு இனி இருக்க எனக்கும் விருப்பமில்லை...” சொல்லி விட்டு வேகமாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்த விஷ்ணுகுப்தரை நெருங்கிய காவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்புடன் தனநந்தனையும் ராக்‌ஷசரையும் பார்த்தார்கள்.

 

தனநந்தன் ஏதாவது சொல்வதற்கு முன்பு ராக்‌ஷசர் சைகை செய்தார். “போகட்டும். ஒன்றும் செய்ய வேண்டாம்”

 

விஷ்ணுகுப்தர் வெளியேறினார்.

 

சக்ரபாணி என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் நிற்க ராக்‌ஷசர் அவனை அமரும் படி சைகை காட்டி விட்டு வரருசியிடம் அமைதியாகச் சொன்னார். “அடுத்த நிகழ்ச்சியை அறிவியுங்கள் அமைச்சரே”

 

தனநந்தன் கோபம் அடங்காமல் தவித்தான். ஒரு கணம் எழுந்து போய் விடலாமா என்று அவன் நினைத்து எழப்போனான். ராக்‌ஷசர்  எழுந்து வந்து தாழ்ந்த குரலில் சொன்னார். “நீங்கள் எழுந்து போனால் அந்த அந்தணர் உங்களைப் போக வைத்து விட்டதாக ஆகிவிடும். அந்த அளவு பெருமையை நீங்கள் அவருக்குத் தரவேண்டியதில்லை.”

 

“கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்க வேண்டும். நீங்கள் காவலர்களை நிறுத்தி விட்டீர்கள்”

 

“அரசரே. அறிஞர்களை சிறப்புக்கூட்டத்திற்கு வரவழைத்து விட்டு அவமானப்படுத்தியதாய் பலரும் விமர்சனம் செய்ய அது காரணமாகி விடும். அவர் இந்த இடத்திலிருப்பது நமக்குப் பிடிக்கவில்லை. அவரும் போய் விட்டார். அப்படியே விட்டு விடுவது நல்லது. இதற்கு மேல் பெரிதுபடுத்த ஒன்றுமில்லை.” சொல்லி விட்டு அரசன் அடுத்த வார்த்தைகளை யோசிப்பதற்கு முன் போய் தன்னிருக்கையில் ராக்‌ஷசர் அமர்ந்து விட்டார்.  

 

தனநந்தன் பல்லைக்கடித்துக் கொண்டு தன் அரியணையில் சாய்ந்தான். அதற்குப் பின் நடந்த நிகழ்வுகளில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. ராக்‌ஷசருக்கும் அது முடியவில்லை. வரருசி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்க ராக்‌ஷசர் தட்சசீலத்து விஷ்ணுகுப்தரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். அரசனிடம் பேசுகிற போதே ஆரம்ப அமைதியிலிருந்து கடைசி ஏளனம் வரை மனிதர்  தன்னுடைய நிதானத்தை இழக்கவில்லை என்பதை யோசிக்கும் போது விஷ்ணுகுப்தர் அபாயமான ஆளாகத் தான் தெரிந்தார். நல்ல வேளையாக அவர் ஆசிரியராக இருக்கிறார். அரசியலில் இருந்திருந்தால் பலம் வாய்ந்த எதிரியைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கும் என்று ராக்‌ஷசர் நினைத்துக் கொண்டார். பலம் வாய்ந்த எதிரியாக அந்த ஆசிரியர் ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் என்பதை ராக்‌ஷசர் அறிந்திருக்கவில்லை.  

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


3 comments:

  1. Sharp, crisp and meaningful dialogues sir. Super.

    ReplyDelete
  2. Sema nosecut answers... Genius!

    ReplyDelete
  3. அகம்பாவம் கொண்ட அரசனுக்கு தக்க பதிலடி...

    ReplyDelete