என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, March 16, 2022

பணம் வந்ததும், நோய்கள் குணமானதும்!


 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் - 34 


1897 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தியோசபிகல் சொசைட்டியின் 21 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி மாநாடு ஒன்று சென்னையில் விமரிசையாக நடத்தப்பட்டது. உலகநாடுகளில் இருந்து ஆன்மிக அறிஞர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது தியோசபிகல் சொசைட்டியில் அனைவரும் வணங்கும் இடத்தில் பலர் தங்கள் வேண்டுகோள்கள் அல்லது கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து வைத்தார்கள். அவர்களில் ஆறு அல்லது ஏழு பேருக்குப் பதில்கள் வேறொரு காகிதத்தில் பெற்றார்கள். அந்தப் பதில்கள் அவரவர் எழுதிய மொழியிலேயே இருந்தது என்பது தான் ஆச்சரியம். ஆங்கிலம், தமிழ் மற்றும் ஓரிரு இந்திய மொழிகளில் பதில்கள் வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

 

மாநாட்டிற்கு நன்கொடை நிறைய வசூல் ஆனாலும், அதில் ஒரு கணிசமான தொகை கவனக்குறைவால் அனாவசிய செலவுகளில் வீண் ஆனது. கடைசியில் முக்கியமான செலவுகளுக்குப் பணம் இருக்காமல் தனி மனிதர்கள் தங்கள் கையிலிருந்து செலவு செய்யும்படி ஆகி விட்டது. அப்படிச் செலவு செய்தவர்களில் அதிகமாகச் செய்திருந்தவர் நீதிபதி ஸ்ரீனிவாசராவ். அவர் ஐநூறு ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் கர்னல் ஓல்காட்டுக்குக் கிடைத்தது. நூற்றியிருபது வருடங்களுக்கு முன்பு ஐநூறு ரூபாய் என்றால் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம். நீதிபதி ஸ்ரீனிவாசராவுக்கு அது மிகப்பெரிய தொகை என்றும் அவர் செல்வந்தர் அல்ல என்றும் தெரிந்திருந்த கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஒரு காலை நேரத்தில் இந்த விஷயத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

 

அந்தக் காலக்கட்டத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்த எல்லாப் பணத்தையும் கணக்கிட்டாலும் அது நூறு ரூபாயைக் கூடத் தாண்டாத நிலைமை தான் அவருக்கும் இருந்ததுகர்னல் ஓல்காட் சொன்னதைக் கேட்டு சிறிது யோசித்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பின் தாமோதரை அழைத்து, ”வழிபாடு நடத்தும் இடத்தில் ஒரு உறை இருக்கும். அதைக் கொண்டு வாஎன்றார்.

 

மக்கள் தங்கள் கேள்வி வேண்டுகோள்களை வைக்கப் போவது பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் போது தான். அதற்கு இன்னும் நேரம் இருந்தது அதனால் தாமோதர் போன போது பொதுமக்களுக்கான உறைகள், காகித மடிப்புகள் எதுவும் இல்லாமல் ஒரே ஒரு உறை தான் அங்கே இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு வந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் தந்தான். அந்த உறையின் மீதுஸ்ரீனிவாசராவ்என்ற பெயர் எழுதி இருந்தது.

 

அந்த நீதிபதியின் பெயர் அந்த உறையில் இருந்ததால் அவர்கள் நீதிபதியை அழைத்து அவரிடமே அந்த உறையினைத் தந்தார்கள். வியப்புடன் நீதிபதி ஸ்ரீனிவாசராவ் அந்த உறையைப் பிரித்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரையும், கர்னல் ஓல்காட்டையும் ஒருசில முறை சந்தித்து அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்த மகாத்மாவின் கையெழுத்தில் ஒரு கடிதமும் பணமும் இருந்தது. ஸ்ரீனிவாசராவின் ஆன்மிகத் தொண்டைப் பாராட்டி எழுதியிருந்த மகாத்மா இப்போதைய மாநாட்டில் தன் சக்திக்கும் மீறி அவர் செலவு செய்திருப்பதை மெச்சும் விதமாக அத்துடன் சிறிது பணம் வைத்திருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளும்படியும் எழுதியிருந்தார். பணத்தை எண்ணிப் பார்த்த போது சரியாக ஐநூறு ரூபாய் இருந்தது.

 

அங்கிருந்த அனைவருமே நெகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். ஸ்ரீனிவாசராவோ கண்கலங்கி விட்டார். அத்தனை பெரிய தொகை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடமும் இருக்கவில்லை. வேலையாள் தாமோதரிடம் இருக்க வழியே இல்லை. கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொல்லி பத்து நிமிடங்களுக்குள் இத்தனையும் நடந்து விட்டது. அதற்குள் கடிதம் எழுதவோ, பணம் ஏற்பாடு செய்யவோ கண்டிப்பாக அங்கிருந்த மனிதர்கள் யாருக்கும் முடிந்திருக்க வழியே இல்லை. மிகவும் ஆச்சரியப்பட்டுப் போன கர்னல் ஓல்காட் நீதிபதி ஸ்ரீனிவாசராவிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை மட்டும் இந்த சம்பவத்தின் ஞாபகார்த்தமாய் வாங்கித் தன்னிடம் கடைசிவரை வைத்திருந்தார்.

 

சில காலம் கழிந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் சென்னையிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குப் பயணமானார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் இளமைத் தோழிகள் மூவர் அவரைச் சந்திக்க வந்தார்கள். மூவரும் மூன்று விதமான நோய்களில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் தனக்காக அந்த மூவரின் நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்யும்படி வேண்டிக் கொண்டார். மூவரில் ஒருவருக்கு இடது கையும் இடது காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அவரால் தனது இடது கையை அசைக்க முடியவில்லை. சில நிமிடங்களில் கர்னல் ஓல்காட் அவருடைய கையை மிக நன்றாக அசைக்கும்படியும், இடது காலை ஓரளவு நகர்த்த முடியும்படியும் செய்தார். இன்னொரு சினேகிதி சில வருடங்களாகவே டமாரச் செவிடராக இருந்தார். அவரையும் கர்னல் ஓல்காட் பேசுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் அளவு சில நிமிடங்களில் குணப்படுத்தி விட்டார். மூன்றாவது மூதாட்டிக்கு முதுகெலும்பில் பிரச்னை இருந்தது. அதையும் கர்னல் ஓல்காட் குணப்படுத்தி விட்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தோழிகள் எதிர்பாராமல் தங்கள் நோய்கள் குணமானதில் மகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள்.

 

பல்வேறு அற்புத சக்திகள் கொண்டிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு இந்த நோய் தீர்க்கும் சக்தி இல்லாததும், வேறு எந்த அபூர்வசக்திகளும் இல்லாமல் இருந்த கர்னல் ஓல்காட்டுக்கு நோய் தீர்க்கும் சக்தி வந்து சேர்ந்ததும் ஆன்மிகப் பயணத்தில் ஒவ்வொருவர் பெறும் சக்தி ஒவ்வொன்றாக இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.     

 

நோய் தீர்க்கும் சக்தியிலும் பல வகைகள் இருக்கின்றன என்பதையும் அதில் உயர்ந்த ஒரு வகை சக்தி இருப்பதையும் பாரிசில் கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அறிய நேர்ந்தது. சுவாவே ஜேக்கப் என்ற ஒரு சக்தியாளர் ஒரு நாளுக்கு ஐம்பது பேரைக் குணப்படுத்துகிறார் என்றும் கடந்த இருபதாண்டுகளில் அவர் மூன்று லட்சம் பேருக்கும் மேல் குணப்படுத்தி இருப்பார் என்றும் கேள்விப்பட்ட போது இருவருக்கும் வியப்பு தாங்கவில்லை. அது எப்படி முடிகிறது என்று அறிய ஆர்வமாக இருந்த இருவரும் அந்தச் சக்தியாளரை ஒரு நாள் சந்தித்தார்கள்.

 

சுவாவே ஜேக்கப் நடுத்தர உயரமுள்ள மனிதராக இருந்தார், தாடி வைத்திருந்தார். கருப்பாடை அணிந்திருந்தார். அவரைச் சந்திக்கும் போதே அவரிடம் சக்திகள் நிறைந்திருந்ததை கர்னல் ஓல்காட்டால் உணர முடிந்தது. அவர் நோயாளிகளைக் குணப்படுத்தும் முறை வித்தியாசமாக இருந்தது. அவருடைய வீட்டின் தரை தளத்தில் ஒரு நீண்ட ஹால் இருந்தது. அங்கே நிறைய பெஞ்சுகள் இருந்தன. நோயாளிகள் வந்து அந்த பெஞ்சுகளில் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளிக்கதவைச் சாத்தி விடுகிறார்கள். பின்பு யாரும் உள்ளே வருவதற்கில்லை.

 

பின் சுவாவே ஜேக்கப் அந்த ஹாலுக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்கிறார். பின் ஒவ்வொரு நோயாளி எதிரிலும் சென்று நிற்கிறார். அந்த நோயாளியையே கூர்ந்து பார்க்கிறார். சில சமயங்களில் ஆம் அல்லது இல்லை என்று பதில் வரும்படியான கேள்வி ஏதாவது கேட்கிறார். பின் பாதிக்கப்பட்ட உறுப்பைத் தொட்டுக் குணப்படுத்துகிறார். சில நோயாளிகளைக் கூர்ந்து பார்த்து விட்டு உன்னைக் குணப்படுத்த முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார். சிலரைப் பகுதி குணப்படுத்தி மறுநாளும் வரச் சொல்லி அனுப்புகிறார்.

 

சுமார் ஐம்பது பேரையாவது ஒவ்வொரு நாளும் குணப்படுத்தி அனுப்பும் அவர் தன்னால் குணப்படுத்த முடியாதவர்களிடம் முதலிலேயே சொல்லி அனுப்பி விடும் நேர்மை கர்னல் ஓல்காட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது. குணப்படுத்துபவர்களிடமும் அதற்கென்று அவர் பணம் வாங்காதது அவர் மேல் இருந்த மதிப்பை அதிகப்படுத்தியது. அவர் பணம் வாங்காததால் சிலர் அவர் விற்கும் புகைப்படங்கள் அல்லது நூல்களை வாங்கிச் சென்றார்கள். பலர் அதையும் வாங்காமலேயே சென்றார்கள். இரண்டிலுமே பாதிக்கப்படாமல் இலவசமாக இருபது வருடங்களாகத் தன் தினசரி சேவையைத் தொடர்வதென்பது உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் அல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி


ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள் நூலை வாங்கிப் படிக்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். நூலின் விலை ரூ.170/-

Monday, March 14, 2022

யாரோ ஒருவன்? 76

நாகராஜின் வீட்டை நேற்றிரவு வேலாயுதமும், கல்யாணும் கண்காணித்துக் கொண்டிருந்தது தெரிய வந்த போதே ஏதோ ஒன்று நாகராஜ் வீட்டில் நடக்கின்றது என்ற சந்தேகம் நரேந்திரன் மனதில் எழுந்திருந்தது. குறிப்பாக வீட்டின் பின்பகுதியில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று புரிந்தது. அந்த வீட்டின் பின்புறம் வேறொரு பங்களா இருந்ததால் அவனுடைய ஒற்றனுக்குப் பின்னாலிருந்து பார்த்து என்ன நடந்தது என்று சொல்ல வசதிப்படவில்லை. அதற்கு முன்பாகவே ஒரு பாம்பாட்டியும் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதையும் அவன் சொல்லியிருந்தது நரேந்திரனின் ஆவலை அதிகப்படுத்தியது. இன்றும் அதே பாம்பாட்டி அந்த வீட்டைக் கண்காணித்து இருந்து விட்டு நாகராஜ் போகும்போது அவனைத் தொடர்ந்து போய் அவனை வணங்கிப் பேச்சுக் கொடுத்ததை அந்த ஒற்றன் சொன்னவுடன் நரேந்திரன் அவனிடம் சொன்னான். “அந்தப் பாம்பாட்டியை நாளைக்குக் காலையில் பத்து மணிக்குக் கூட்டிகிட்டு வா.”

அவனை விசாரித்து விட்டுப் பின் நாதமுனியைச் சந்தித்துப் பேசினால் சில தெளிவுகள் பிறக்கலாம்...


தீபக் வீடு திரும்பிய போது சரத் இருக்கவில்லை. லீவு போட்டு விட்டு வீட்டில் மாலை வரை இருந்த சரத் பிறகு முக்கியமானதொரு வேலை வந்து விட கம்பெனிக்கு மறுபடி போயிருந்தான்.

ரஞ்சனி மகனைக் கேட்டாள். “எப்படிடா இருந்துச்சு கொடிவேரி ஃபால்ஸ்

தீபக் உற்சாகமாகச் சொன்னான். “சூப்பரா இருந்துச்சும்மா. தண்ணி நிறைய இருந்துச்சு.... கூட்டமும் அதிகமிருக்கலை...” அடுத்து இருபது நிமிடங்கள் அவன் அந்த நீர்வீழ்ச்சியின் அழகை உற்சாகமாக விவரித்தான். மகனின் உற்சாகத்தைப் புன்னகையுடன் ரஞ்சனி ரசித்தாள். எதையும் ஆழ்ந்து ரசித்து மகிழ சிலருக்கு மட்டுமே முடிகிறது. மற்ற மனிதர்கள் மேலோட்டமாய் ரசித்து கடந்து போகிற விஷயங்களை இவர்கள் நுணுக்கமாக ரசித்துச் சொல்லி அடுத்தவர்களுக்கும் அந்த ரசனைகளை அறிமுகப்படுத்துவார்கள்...

செமயா ரசிச்சுகிட்டே குளிச்சிட்டிருக்கறப்ப திடீர்னு எல்லாமே மறைஞ்சு போய் அந்த இடத்துல மூனே பேர் குளிச்சிட்டிருக்கற மாதிரி ஒரு காட்சி அம்மா.  தண்ணீர் விழுந்துகிட்டிருந்ததால அவங்க முகம் எனக்குத் தெளிவா தெரியல. எனக்கு நெஜமாவே குப்னு வியர்த்துடுச்சு. ராஜபார்வைல அந்தி மழை பொழிகிறது பாட்டுல வர்றதண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதுன்னு வரிகள் மாதிரியே ஆயிடுச்சு.... யாரு அந்த மூனு பேரு. எனக்கு எதுக்கு அந்த காட்சி தெரியுதுன்னு ஒன்னுமே புரியலை

ரஞ்சனியின் புன்னகை உறைந்தது. தீபக் ஈரத்துணிகளை வாஷிங் மெஷினில் போடப் போனதால் தாயின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை.

அவங்க மூனு பேரும் கூட எங்கள மாதிரியே சந்தோஷமா கத்தி என்ஜாய் பண்ணிட்டே குளிச்சிட்டிருக்கறத பாத்தா அவங்களும் நண்பர்களா தான் இருப்பாங்கன்னு தோனுச்சு. அந்தக் காட்சி தெரிஞ்சது ஒரு நிமிஷமா, அஞ்சு நிமிஷமான்னு ஒன்னுமே புரியல... நாகராஜ் அங்கிள் கிட்ட கேட்டா அதுக்கும் ஏதாவது காரணம் சொல்வாருன்னு நினைக்கிறேன். திரும்பி வர்றப்ப இன்னொரு வினோதம் நடந்துச்சு....”

தீபக் தாய் எதிரில் வந்தமர்ந்தபடி அவனையுமறியாமல் சத்தியமங்கலத்தில் அவன் காரை ஒரு குறுக்குத் தெருவில் திருப்பி விட்டதையும்., கார் ஒரு வீட்டின் முன் தானாக நின்று விட்டதையும் சொல்லி அவன் சந்தித்த அந்த முதிய தம்பதியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். “அவங்கள எங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சுடுச்சும்மா. சே நமக்கு இப்படி ஒரு பாட்டி தாத்தா இல்லையேன்னு எனக்குத் தோண ஆரம்பிச்சிடுச்சும்மா…. என்ன மாதிரியான அன்பு தெரியுமாம்மாநாங்க யாருஅவங்க யாரு…. என்ன உறவு எங்களுக்குள்ளே…. ஆனாலும் அந்தப் பாட்டி தண்ணி வேணுமான்னு அன்பா கேட்டு வீட்டுக்குள்ளார கூட்டிகிட்டு போய் கடசில டீ சாப்டறீங்களான்னு கேட்கணும்னா என்ன மாதிரியான மனசு அவங்களுக்குன்னு யோசிச்சுப் பாரேன்இத்தனைக்கும் வசதியானவங்க மாதிரி தெரியலம்மா…. பழைய வீடு. சின்ன வீடுவீட்டுக்கு முன்னாடி நிறைய இடம்…. வெளியே ஒரு கயித்துக்கட்டில்…..”

ரஞ்சனி கண்கள் விரிந்தன. அதிர்ச்சியுடன் அவள் மகனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கே மாதவன் நின்று அவர்களைப் பார்ப்பது போல் மறுபடியும் உணர்ந்தாள்

தீபக் தன் செல்போனை எடுத்து அதில் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளைத் தாய்க்குக் காட்டினான். அவனும் நண்பர்களும் பரந்தாமன், அலமேலு தம்பதியருடன் நின்றிருந்தார்கள். அந்தப் பாசமான முதிய தம்பதியரைப் பார்த்தவுடன் ரஞ்சனியின் கண்கள் நிரம்பின.

தாயின் கண்கள் ஈரமானதைக் கண்டு திடுக்கிட்ட தீபக் கவலையுடன் கேட்டான். “என்னாச்சும்மா?”

பழைய யோசனைகள்டாஎன்று ரஞ்சனி மெல்லச் சொன்னாள்.

ஓ நீ உங்கப்பா, அம்மாவை நினைச்சுகிட்டியா? அவங்களும் இப்படித் தான் பிரியமாயிருப்பாங்களாம்மா

அவளுடைய பெற்றோர் நல்லவர்கள் என்றாலும் அவர்கள் அன்பு தங்கள் குடும்பத்துடன் முடிவடைந்து விட்ட அன்பு. அவர்களைப் பற்றி அவள் இப்போது நினைக்கவில்லை, ஏற்பட்ட பழைய நினைவுகளும் அவர்களைப் பற்றியதல்ல, அந்தப் படத்தில் இருக்கும் முதிய தம்பதியரைத் தான் நினைத்துக் கண்கலங்கினாள் என்பதை அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை. மாதவன் இங்கே இருந்து கவனிப்பது போன்ற உணர்வு ஏன் இப்படி இரண்டாவது தடவையாக வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அது மட்டுமல்ல அவள் மகனுக்கும் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் தெரிந்த காட்சி மாதவனுடையதே என்பதும், தீபக் மெயின் ரோட்டிலேயே போயிருப்பானேயானால் கண்டிப்பாக மாதவனுடைய வீட்டிற்குப் போயிருக்கவோ, அவன் பெற்றோரைச் சந்தித்திருக்கவோ முடியாது என்பதும் உறைத்த போது எல்லாமே அவளுக்கு அமானுஷ்யமானதாகத் தோன்றின. ஏன் இத்தனை வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் நடக்கின்றன என்பது அவளுக்குப் புரியவில்லை.

என்னம்மா பதில் சொல்லாமல் யோசிக்கிறே?” தீபக் அவள் சிந்தனைகளைக் கலைத்தான்.

ஏதேதோ பழைய நினைவுகள்... அத விடு. நீ என்ன கேட்டாய்?”

உங்கம்மா அப்பாவும் இப்படிப் பிரியமாயிருப்பாங்களான்னு கேட்டேன்

ரஞ்சனி உண்மையையே சொன்னாள். “அவங்க இந்த மாதிரி வெளியாள்க கிட்ட பிரியமாயிருந்ததா ஞாபகம் இல்லைடா”  

தீபக் விளையாட்டாகக் கேட்டான். “ஒருவேளை நான் செத்துப் போயிட்டா...”

ரஞ்சனி அவனை அந்த வாக்கியத்தை முடிக்க விடவில்லை. எந்தத் தாயும் கற்பனைக்காகக் கூடக் கேட்க விரும்பாத வாசகத்தை அவளும் தன் காதால் கேட்க விரும்பவில்லை. கண்டிப்போடு மகனைப் பார்த்தபடி மகன் வாயை அவள் பொத்தினாள்.

தீபக் கேட்க விரும்பியது இதைத் தான். “ஒருவேளை நான் செத்துப் போயிட்டா அதுக்குப் பின்னாடியும் உனக்கு அவங்க மாதிரி இருக்க முடியுமா அம்மா”. அதை அவள் சொல்ல விடாமல் தடுத்தவுடன் அவன் தாயை பாசத்தோடு அணைத்துக் கொண்டு சொன்னான். “நெருப்புன்னா நாக்கு வெந்துடாதும்மா. அத்தனை கஷ்டமும் தாண்டி இன்னும் மத்தவங்க கிட்டயும் அன்பு குறையாம அவங்க மாதிரி உன்னால இருக்க முடியுமான்னு தான் கேட்க வந்தேன்

கடவுள் சொர்க்கத்துல அவங்க மாதிரி ஆளுகளுக்கு ஒரு தனியிடம் ஒதுக்கி இருப்பான்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு அந்த மாதிரி இடம் கூட வேண்டாம். சும்மா வாயை மூடிகிட்டு இருடாசொல்லும் போது அவளுக்குக் குரலடைத்தது.    

அவனுக்குத் தாயின் வேதனையைப் பார்க்கக் கஷ்டமாயிருக்கவே வேறொன்றும் சொல்லாமல் மவுனமாக இருந்தான்.

சிறிது நேரம் கழித்து ரஞ்சனி மெல்லக் கேட்டாள். ”அந்தத் தாத்தா பாட்டி ஆரோக்கியமாய் இருக்காங்களா?”

அம்மா ஒரு மனுஷன் எப்படி நகர்றான்கிறத வச்சே அவனோட பொதுவான ஆரோக்கியத்த நாம கண்டுபிடிச்சுடலாம்... அத வெச்சுப் பாத்தா அவங்க ரெண்டு பேரும் ஆரோக்கியமா தான் இருக்காங்கன்னு தெரியுது... “ என்று ஆரம்பித்த தீபக் மனிதனின் அசைவுகளுக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை விளக்க ஆரம்பித்தான். அந்த முதியவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற செய்தி ரஞ்சனிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அவள் மருத்துவராகப் போகும் மகனின் அறிவுபூர்வமான பேச்சை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள். மாதவன் அங்கு இருப்பது போன்ற உணர்வு சிறிது நேரத்தில் விலகிய கணம் மட்டும் அதை அவளால் மகனின் பேச்சுக்கிடையேயும் உணர முடிந்தது. நாகராஜை சந்தித்துப் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் கண்டிப்பாக இப்படி உணர நேர்வது ஏன் என்று கேட்க வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.






Thursday, March 10, 2022

சாணக்கியன் நாவல் இன்று வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

சாணக்கியன் வரலாற்று நாவல் இரண்டு பாகங்களில் இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த நாவல் சத்ரபதி நாவலையும் விட அதிகப் பக்கங்களில்  நீண்டதால் (மொத்தம் 880 பக்கங்கள்) வாசகர்களுக்கு மிகத் தடிமனான ஒரே நாவலாகக் கையில் வைத்துப் படிக்க சிரமமாக இருக்கும் என்று எண்ணி இரண்டு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறேன். ஒரே தலைப்பில் இரண்டு பாகங்களாக ஒரே சமயத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நாவல் இது தான்.  

இந்த வரலாற்று நாவல் இன்னொரு புதிய வரலாறையும் உருவாக்கி இருக்கிறது. இந்த நாவல் என்.கணேசன் புக்ஸ் (N.Ganeshan Books) என்ற புதிய பதிப்பகத்தின் மூலமாக வெளியாகியுள்ளது. இனி வரும் புதிய நூல்களும், பழைய நூல்களின் அடுத்த பதிப்புகளும் இந்தப் புதிய பதிப்பகத்தாலேயே வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் புதிய பதிப்பகத்தின் துவக்கத்திற்கு உறுதுணையாக இருந்த என் பழைய பதிப்பாளர் யாணன் (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்) அவர்களுக்கு இந்த நாவலை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.


இந்த வலைப்பூவில் இல்லுமினாட்டி முடிவடைந்த பின் ஏப்ரல் 21 முதல் ஒவ்வொரு வாரமும் சாணக்கியன் நாவலின் அத்தியாயங்கள் அப்டேட் ஆகும். மொத்தம் 195 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை வெளியாகும். 

இப்படி மூன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்து சிறிது சிறிதாகப் படிப்பதற்குப் பதிலாக இந்த சுவாரசியமான, கருத்தாழம் மிக்க  நாவலை நீங்கள் உடனடியாகவும்  வாங்கிப் படிக்கலாம். 

சாணக்கியன் இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ900/-


நாவலின் குறிப்பு: 


தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!


நாவலை  ஆன்லைனில் வாங்கலாம். 

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அன்புடன்
என்.கணேசன்