என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 8, 2021

இல்லுமினாட்டி 97


சாலமன் அழைத்த போது வாங் வே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரிடம் உள்ள அந்த ரகசிய அலைபேசியில் இருந்து ஒரே ஒரு அலைபேசிக்கு மட்டுமே அழைப்பு போகும். அதே போல அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பை மட்டுமே அந்த அலைபேசி ஏற்கவும் செய்யும். அவரிடமிருக்கும் மற்ற அலைபேசிகள் எல்லாம் அவர் உறங்கப் போகும் முன் மௌனமாக்கப்பட்ட பின்னரே அவர் உறங்கப் போவார். அதனால் அலைபேசி அகால நேரத்திலும் அலறுகிறது என்றால் அழைப்பது சாலமனாகத் தான் இருக்க வேண்டும். ஏதோ முக்கியமான விஷயமாக மனிதர் அழைக்கிறார் என்று புரிந்தவராக எழுந்த வாங் வே அலைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ”

“சார் விஸ்வம் எங்கே ஒளிந்திருக்கிறான் என்பது தெரிந்து விட்டது.”

ஒரு கணம் வாங் வே பேச்சிழந்தார். பின் பரபரப்புடன் கேட்டார். “எந்த இடம்? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”

சாலமன் விவரித்துச் சொன்னார். வாங் வே அவரைப் பாராட்டி விட்டுக் கேட்டார். “நீங்கள் அந்த சர்ச்சின் பக்கம் முதலில் போயிருக்கவில்லையா?”

“எங்கள் ஆட்கள் போயிருக்கிறார்கள். அந்த சர்ச்சில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். பாதாள அறை ஒன்று அதில் இருக்கும் என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு வராததால் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்க்கவில்லை...”

“நல்லது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசித்துச் சொல்கிறேன்.  வேறெதாவது தகவல் இருக்கிறதா?”

“க்ரிஷ் மூன்று நாளில் வருகிறான். இம்மானுவலும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு அந்த சமயத்திலேயே வருகிறான். ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகிறார்கள்”

வாங் வேக்குக் கோபம் வந்தது. தலைமைக்குழு என்று ஒன்று இருப்பது கிழவருக்கு மறந்தே போய்விட்டது போலிருக்கிறது. எதையும் தலைமைக்குழுவுடன் கலந்தாலோசிப்பதே இல்லை. அதைத் தட்டிக் கேட்கவும் மற்ற தலைமைக்குழு உறுப்பினர்கள் தயாராக இல்லை. வாங் வேக்கு எர்னெஸ்டோ மீதிருந்த கோபம் க்ரிஷ் மீதும் தாவியது. என்னவோ அறிவுஜீவியாம், இல்லுமினாட்டியைக் காப்பாற்ற வந்தவனாம்... எல்லாரையும் சாமியாராக்கி விடும் தத்துவங்களைக் கொண்டு வந்து இல்லுமினாட்டியில் திணிக்கப் பார்க்கிறான்... அவனுக்கு விஸ்வம் எவ்வளவோ பரவாயில்லை. அனுமதித்தால் அவன் இல்லுமினாட்டியில் புதிய சரித்திரம் எழுதக் கூடியவன் அவன் தான். அவன் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையுடன் அதிரடியாய் மறு உடல் எடுத்து வந்திருக்கிறான். இந்தச் சாதனையை யார் தான் செய்து விட முடியும். அப்படிப்பட்டவனை கிழவர் அழிக்கப் பார்க்கிறார்.

வாங் வே இல்லுமினாட்டி தன் தலைமைக்குக் கீழ் வர வேண்டும் என்று நீண்ட காலமாக ரகசியமாய் ஆசைப்படுபவர். இப்போதும் அதற்காக ஏதாவது சின்ன வழி கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்க மாட்டார். ஆனால் அது முடியாத பட்சத்தில் அவர் இல்லுமினாட்டி தலைமைக்கு விஸ்வத்தைத் தான் ஆதரிப்பார். அவன் தலைமையில் அவருக்கு உபதலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவன் தலைவனாவதற்கு அவர் உதவி செய்தால் அவரை அவன் உபதலைவராக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போதிருப்பது போல் ஒரு வெற்று தலைமைக்குழு உறுப்பினராக நீடிப்பதை விட உபதலைவராவது கூட எத்தனையோ மேல்... அதற்காகத் தான் விஸ்வம் எங்கிருக்கிறான் என்பது இல்லுமினாட்டியின் தலைமைக்குத் தெரிவதற்கு முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார்.

இப்போது விஸ்வம் எங்கிருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. அவன் இருக்குமிடம் வெளியே தெரிந்து விட்டது என்பது அவனுக்குத் தெரிந்தால் அவன் அந்த இடத்தையும் விட்டு வேறிடத்திற்கு விரைவாகத் தப்பி விடும் அபாயம் இருக்கிறது.  அதனால் இனி மிகவும் கவனமாகத் தான் அவனைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவனைப் பொருத்த வரை இல்லுமினாட்டி முழுவதுமே அவன் எதிரி என்றே இப்போது நினைத்திருப்பான். அவனிடம் இல்லுமினாட்டியில் அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டும். அவனிடம் கூட்டு சேர்ந்து பிறகு மற்றவற்றை யோசிக்கலாம்.

ஆழ்ந்து ஆலோசித்து விட்டு வாங் வே ஒரு கடிதம் எழுதினார்.

“அன்பு நண்பனே.    

நீ கடைசியாகச் சேர்ந்த இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் .நீ இருக்கும் இடம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்பதையும், அதை நம் இயக்கத்திற்கு நான் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் போவதில்லை என்று உனக்கு உறுதி அளித்து விட்டு கடிதத்தைத் தொடர்கிறேன்.
உன்னை ஒரு கதாநாயகனாகவும், நம் இயக்கத்தின் தலைமைக்கு மிகப் பொருத்தமானவனாகவும் தான் நான் பார்க்கிறேன். இப்போதைய தலைமை தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளில் உடன்பாடில்லாதவன் நான். என்னைப் போல் பலரும் நம் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவெடுக்க அவர்களின் நம்பிக்கைக்குகந்த உன்னைப் போல் ஒரு தலைவன் வேண்டும்.

மிக நெருக்கடியான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். உன் எதிரி இன்னும் சில நாட்களில் இங்கு வருகிறான். ஏதோ ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. நிலைமை மிகவும் மோசமாவதற்கு முன் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற எதாவது நாம் செய்தாக வேண்டும். என்னால் முடியும் உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன். தலைமை தாங்க நீ வந்தால் போதும்.

என் நோக்கத்திலும், இந்தக் கடிதத்திலும் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. அடுத்தவர் மனதில் உள்ளதை அறிய முடிந்தவன் நீ என்பதால் நான் சொல்வது உண்மை என்று நீ உணர்வாய் என்று நம்புகிறேன். உன் பதிலை நீ யோசித்து, பதில் எழுதி, சரியாக 24 மணி நேரம் கழித்து நீ இந்தக் கடிதம் கண்ட இடத்திலேயே வைத்து விட்டால், சரியாக 15 நிமிடம் கழித்து என் பிரதிநிதி அதை அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பான்.

சாதகமான நம்பிக்கையூட்டும் பதிலை எதிர்பார்க்கிறேன்.

உன் நண்பன்.”

எழுதி முடித்து விட்டு கடிதத்தை இரண்டு முறை வாங் வே படித்துப் பார்த்தார். அவர் பெயரோ, அவன் பெயரோ, அவன் எதிரி பெயரோ, இல்லுமினாட்டி பெயரோ இல்லாத அந்தக் கடிதம், சொல்வதை அவனுக்கு முழுவதும் புரிகிற மாதிரியும், சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எதுவும் புரியாத மாதிரியும், இருந்தது. திருப்தியுடன் அதை சாமுவலின் ரகசிய மெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு வாங் வே அவருக்குப் போன் செய்தார்.



சிந்து எங்கே போவதென்று யோசித்தாள். சுற்றுலாத் தலங்களுக்குப் போகும் மனநிலையில் அவள் இல்லை. போனால் எதையும் ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவளை அனுப்பாமல் வெளிநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவோடு க்ரிஷ் இருந்தான். அவள் மறுத்தால் அவளை அப்புறப்படுத்தவும் அவன் தயங்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாய்ச் சொல்லி இருந்தான். அதை அவள் வெற்றுப் பயமுறுத்தலாக நினைக்கவில்லை. அவன் நல்லவன் என்றாலும் ஏமாளியோ முட்டாளோ அல்ல. அவன் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் அவன் செய்வான்...

எங்கே போவது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் அவளுக்கு க்ரிஷிடம் இருந்து ஒரு வாட்சப் மெசேஜ் வந்து சேர்ந்தது.

மிருதுளா, சமூக சேவகி, அலைபேசி எண்..........., டெல்லியில் விலாசம் ........ கணவர் பெயர் கைலாஷ், சுப்ரீம் கோர்ட் வக்கீல். மகன் பெயர் மிதுன், பொறியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

சிந்துவின் இதயத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் ஆவேசமாக அலைமோதின. மிருதுளா அவளுடைய ஓடிப்போன தாயின் பெயர். அவளுடைய அலைபேசி எண், விலாசம், இப்போதைய கணவர், மகன் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் க்ரிஷ் அனுப்பியிருந்தான்.

பெற்ற குழந்தை நலனை யோசிக்காமல் பழைய காதலனோடு ஓடிப்போனவள் இப்போது சமூக சேவகியாம். எண்ணும் போதே மனம் கொதித்தது. க்ரிஷுக்கு முன்பே இந்தத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருந்தும் அப்போதே வெளிப்படுத்தி விடாமல் இப்போது அனுப்பியிருப்பதன் காரணம் என்ன என்று சிந்து யோசித்தாள்.

மனதில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வை என்று க்ரிஷ் சொல்கிறானோ? மிருதுளாவைப் பார்த்துப் பேச வேண்டியதும், கேட்க வேண்டியதும் நிறைய இருக்கிறது...  க்ரிஷ் அறிவுரை சொன்னது போல் பழைய பாரத்தை இறக்கி வைக்காமல் அவளால் புதிய வாழ்க்கையை வாழ முடியாது. யாருமே சுமக்க முடிந்த கனங்களுக்கு ஒரு எல்லை உண்டு... சிந்து டெல்லிக்குச் செல்வது என்று முடிவு செய்து விட்டாள்.

முக்கிய வேலையாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்றும் உதய்க்குத் தெரிவித்த போது அவன் வருத்தப்பட்டான். ஏதேதோ சொல்லிச் சமாளித்து விட்டு சிந்து டெல்லி கிளம்பினாள்.

(தொடரும்)
என்.கணேசன்  

Monday, April 5, 2021

யாரோ ஒருவன்? 26



”இன்னும் என்ன முக்கியமான உண்மை இருக்கு?” என்று சஞ்சய் ஷர்மா தந்திரமாகக் கேட்டான். சொல்லாமல் விட்டவை நிறைய இருக்கின்றன என்பதால் அவனுக்கு  எந்த உண்மை என்று அறிந்து கொண்டால் அது மட்டும் சொல்ல மறந்து விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லது ”அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். நீங்கள் தான் வரவில்லை’ என்று சொல்லி சமாளிக்கலாம்...

“எதுவுமே சொல்லலைன்னு சார் சொன்னார். எல்லாத்தையும் ஒழுங்கா சொல்லிடு. இல்லாட்டி ஐஸ்கட்டிக் குளியலுக்குத் தயாராயிக்கோ. உன் உடம்பு இருக்கிற நிலைமைல ஐஸ்ல குளிச்சு அப்படியே தூங்கினா நீ ரெண்டு நாள்ல ஜன்னி வந்து சாகறது நிச்சயம். இல்லாட்டி நீ கோமாவுல போனாலும் போயிடலாம். அப்படிப் போனாலும் உன்னை ஆஸ்பத்திரிக்கு எல்லாம் யாரும் எடுத்துகிட்டுப் போக மாட்டோம். சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். சார் உனக்குப் பத்து நிமிஷம் டைம் குடுக்கச் சொல்லியிருக்கார்....” என்று தடியன் சொன்னான்.

சஞ்சய் அவனுடைய வார்த்தைகளிலேயே ஜன்னி வருவது போல உணர்ந்தான். அருகில் வைத்திருக்கும் பக்கெட்டிலிருந்து வரும் ஐஸ்கட்டிக் குளிரே அவனுக்குத் தாங்க முடியாததாய் இருந்தது. கண்டிப்பாய் அந்தத் தண்ணீரை அவன் மீது கொட்டினால் தாங்க மாட்டான். மெல்லச் சொன்னான். “சொல்லிடறேன்”

தடியன் போய் லாப்டாப்பைக் கொண்டு வந்து திறந்து ஸ்கைப் தொடர்பில் நரேந்திரன் தெரிந்தவுடன் சஞ்சய் முன்னால் வைத்தான். “பேசு”
நரேந்திரனை லாப்டாப் திரையில் பார்த்தவுடனே சஞ்சய்க்கு மறுபடியும் அவனுக்குத் தெரிந்திருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளத் தோன்றியது.  “நரேந்திரன் என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்யறாய்? நான் எதைச் சொல்லலைன்னு சொல்கிறாய்?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தந்திரமாகக் கேட்டான்.

நரேந்திரன் சொன்னான். “நீ செய்த சதி முழுவதையும் சொன்னால் போதும்”

சஞ்சய் இந்தப் பொதுவான பதிலை எதிர்பார்க்கவில்லை. பரிதாபமாக அவனையே பார்த்தான். ஐந்து வினாடிகள் காத்திருந்து விட்டு நரேந்திரன் சொன்னான். “நீ சொல்லி எதுவும் எங்களுக்கு ஆகவேண்டியதில்லை. எல்லாத்தையும் நான் தெரிஞ்சுகிட்டேன். சரிதான்னு உறுதிப்படுத்திக்கறதுக்காகத் தான் உன்கிட்டே கேட்டேன். அதனால சொல்லப் பிடிக்காட்டி பரவாயில்லை… இனிமேல் நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். குட்பை”

சென்ற முறை போல திடீரென்று அவன் போய்விடுவான் போலிருந்தது.  சஞ்சய் பதறியபடி சொன்னான். “இல்லையில்லை. நான் சொல்லிடறேன். எதிலிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தான் யோசிச்சேன்…”

“மணாலி போலீஸை விசாரிக்க ரா தலைவர் உன்னை அங்கே அனுப்பினாரில்லையா. அதுல இருந்து ஆரம்பியேன்….”

சஞ்சய் சிறிது யோசித்த போது நரேந்திரன் சொன்னான். “உன் வாய்ல இருந்து ஒரு பொய் வந்ததுன்னா எனக்குத் தெரிஞ்சுடும். அப்புறமா உன் கிட்ட என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். அதுல மட்டும் உனக்குச் சந்தேகமே வேண்டாம்....இதுவே நமக்குள்ள பேசிக்கற கடைசி பேச்சு வார்த்தையாய் போயிடும்...”

அவன் வார்த்தைகளிலும் முகத்திலும் இருந்த உறுதியைப் பார்த்தபின் இனி எதையும் மறைப்பது அவனுக்கு அவனே விதித்துக் கொள்ளும் மரண தண்டனையாகப் போய்விடும் என்பதை உணர்ந்த சஞ்சய் எல்லா உண்மையையும் சொல்லி விட இறுதியாகத் தீர்மானித்தான்.


எல்லாவற்றையும் கேட்டு முடித்த போது நரேந்திரன் ஆற்றாமையுடன் கூடிய ஆத்திரத்தை உணர்ந்தான்.  இந்த நாட்டில் எந்த விதமான பயமும், உறுத்தலும் இல்லாமல் எப்படிப்பட்ட அநியாயத்தை எல்லாம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டணி சேர்ந்து அரங்கேற்றி விடுகிறார்கள். அப்படிச் செய்து தப்பித்தும் விடுவது தான் அடுத்த அராஜகத்துக்கு அவர்களை தயார் செய்து விடுகிறது...

சஞ்சய் அவன் சம்பந்தப்பட்டதில் முழு உண்மையையும் சொல்லி விட்டான் என்பது புரிந்தது. மீதியைத் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வமில்லாததால் அப்படியே விட்டிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு பொருட்டாக மதித்து எதையும் சொல்லியிருக்கவில்லை. இதில் உண்மையான வில்லன் ஜனார்தன் த்ரிவேதி தான். அவர் மருமகன் என்பதற்காக இந்த வழக்கில் இந்த அளவு ஆர்வம் எடுத்துக் கொண்டு சஞ்சய் ஷர்மாவைக் காப்பாற்றவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தான் மனிதர் உண்மையாகக் கஷ்டப்பட்டு இருக்கிறார். அஜீம் அகமதை அவராவது பார்த்திருப்பாரா இல்லையா தெரியவில்லை. ஆனால் சஞ்சய் பார்த்ததில்லை.

அஜீம் அகமது சாதாரணமாய் யார் கண்ணுக்கும் சிக்குவதில்லை என்றும் அவன் வேலை என்று வரும் போது தான் வெளியே வருவான் என்றும் அவன் ஆட்கள் சொன்னதாய் சஞ்சய் சொன்னான். நரேந்திரன் இது வரை விசாரித்த ஆட்கள் யாருமே அஜீம் அகமதை நேரில் பார்த்திருக்கவில்லை. எல்லோரும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததையே சொன்னார்கள்.

மகேந்திரனை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் யார் கொன்றார்கள் என்ற கேள்விகளுக்கு இன்னும் நரேந்திரனுக்குப் பதில் கிடைக்கவில்லை.  சஞ்சய்க்கும் உண்மையாகவே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்தவன் மணாலியின் பழைய சப் இன்ஸ்பெக்டர் மதன்லால் தான் என்று சஞ்சய் சொன்னான். இப்போது சிம்லாவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் மதன்லாலைப் பார்ப்பதற்கு முன் நரேந்திரன் மறுபடி மணாலி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனான். இப்போதைய இன்ஸ்பெக்டரிடம் அவன் தந்தை மணாலி வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் பதிவான வழக்குகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னான்.

இன்ஸ்பெக்டர் சலிப்பில்லாமல் அந்தப் பழைய ரெஜிஸ்டர்களை எல்லாம் எடுத்துக் காண்பித்தார். நரேந்திரன் கவனமாக எல்லாவற்றையும் பார்த்தான். அண்ணன் தம்பி வெட்டுக்குத்து வழக்கு ஒன்று இருந்தது, ஒரு சுற்றுலாப் பயணியின் சூட்கேஸைத் திருடிக் கொண்டு போன பழைய கைதியின் வழக்கும் பதிவாகி இருந்தது. ஒரு காரில் வெடிகுண்டு வெடித்து தென்னிந்திய இளைஞன் ஒருவன் இறந்ததும், டாக்சி டிரைவர் காயமடைந்ததும் கூடப் பதிவாகி இருந்தது. 

அஜீம் அகமது வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணன் என்பதால் நரேந்திரனுக்கு அந்த வழக்கை விரிவாகப் பார்க்கத் தோன்றியது. படித்துப் பார்த்தான். அதிலும் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.  அதில் வெடிகுண்டு வைத்தவன் யார், ஏன் வைத்தான் என்றெல்லாம் தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடியாத வழக்காகவே அதையும் மதன்லால் மூடி விட்டிருந்தான். அந்தத் தென்னிந்திய இளைஞன் எந்த விதத்திலாவது அஜீம் அகமதைப் பகைத்துக் கொண்டிருப்பானோ? அதனால் தான் அவனும் அஜீம் அகமதால் கொல்லப்பட்டிருப்பானோ? மதன்லால் அதற்கும் ஒரு பெரிய தொகை வசூல் செய்து அதைக் கண்டுபிடிக்க முடியாத வழக்காய் மூடிவிட்டிருப்பானோ?

நரேந்திரன் மற்ற வழக்குகளையும் பார்த்தான். அவை எல்லாம் சில்லறை வழக்குகள் தான்.  மகேந்திரன் காணவில்லை என்ற வழக்கு கூட அங்கே பதிவாகி இருக்கவில்லை. அந்தப் புகாரை யாரும் தந்திருக்கவில்லை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் விடை மதன்லாலிடம் இருக்கலாம்… அவனை விசாரிக்க வேண்டும்….

சிறிது யோசித்து விட்டு நரேந்திரன் அந்த வெடிகுண்டு வெடித்து தென்னிந்திய இளைஞன் இறந்த வழக்கை மறுபடியும் படித்தான். அந்த வெடிகுண்டு வெடித்த டாக்சியின் டிரைவர் காயங்களுடன் உயிர்பிழைத்திருக்கும் தகவலைப் பார்த்து விட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கேட்டான். “இந்த டிரைவர் இப்போது உயிரோடு இருக்கிறானா என்று விசாரித்துச் சொல்ல முடியுமா?”

உடனே சிலரிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர், முடிவில் நரேந்திரனிடம் சொன்னார். ”அந்த டிரைவர் இன்னும் உயிரோடு தான் இதே ஊரில் இருக்கிறான். ஆனால் இப்போது டாக்சி ஓட்டுவதில்லையாம். ஏதோ ட்ராவல் ஏஜென்ஸி நடத்துகிறானாம்….”

நரேந்திரன் அந்த டிரைவரையும் பார்த்துப் பேசிவிட நினைத்தான்.

     

(தொடரும்)
என்.கணேசன்



Thursday, April 1, 2021

இல்லுமினாட்டி 96


சாலமன் மறுபடியும் ஒரு முறை பழைய இல்லுமினாட்டி கோயில்களுக்குப் போக ஆரம்பித்தார். இன்று நூலகம், அரங்கு, பழங்காலப் பொருள்களின் நினைவகம் என்று புதுவடிவம் பெற்றிருந்த அந்தக் கோயில்களில் இன்னொரு தளம் இருப்பதற்கு அறிகுறியே தெரியவில்லை. அவர் மேலும் அதிக நாட்கள் ஜெர்மனியில் இருக்க முடியாதபடி இம்மானுவல் மறுபடியும் மூன்று நாட்களில் ஜெர்மனி வருகிறான். க்ரிஷும் அன்று தான் ஜெர்மனி வரப்போகிறான் என்ற செய்தியும் அவருக்குக் கிடைத்தது. ஏதோ முக்கிய ஆலோசனைகள் நடக்கப் போகின்றன என்பது புரிந்தது. அதனால் தான் எல்லோரும் இல்லுமினாட்டியின் தலைவர் இருக்குமிடத்தில் கூடுகிறார்கள்.

அவசியத் தேவை இருந்தால் ஒழிய உளவுத்துறையின் தலைவரும், உபதலைவரும் அதிகம் சேர்ந்து ஒரே இடத்தில் இருப்பதில்லை. அதனால் உளவுத்துறையின் தலைவர் வந்த பிறகு உபதலைவரான சாலமன் வலுவான காரணம் ஏதுமில்லாமல் அங்கே இருக்க முடியாது. மற்ற இடங்களிலும் நிறைய வேலைகள் இருக்கின்றன... அதனால் விஸ்வம் இருக்கக்கூடும் என்று சொல்லப்படும் பழைய இருதள இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி உடனடியாகத் தெரிந்து கொண்டு வாங் வேக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

இந்த நெருக்கடியை உணர்ந்தவராக அடுத்த இல்லுமினாட்டி பழைய கோயிலுக்கு நுழைந்தார். அது இப்போது நூலகமாக மாறியிருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் நூல்கள் அங்கே இருந்தன. அவற்றில் சுமார் ஐநாறு நூல்கள் இல்லுமினாட்டி அறிஞர்கள் எழுதிய நூல்களாக இருந்தன. மற்றவை மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்கள். பல துறைகள் சம்பந்தப்பட்ட அந்த நூல்கள் இல்லுமினாட்டி அறிஞர்கள் பல காலமாக சிபாரிசு செய்த நூல்களாக இருந்தன. இப்போதெல்லாம் அந்த நூல்களைப் படிக்கும் ஆட்கள் மிகவும் குறைவு என்றாலும் ஒரு பாரம்பரியமான அமைப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டுமேயென்பதற்காக அந்த நூலகம் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

சாலமன் நுழைந்த போது நூலகத்தில் ஒருவரும் இருக்கவில்லை. நூலகர் அவரைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் விடுமுறை நாட்களிலாவது ஓரிருவர் அந்த நூலகத்திற்கு வருவார்கள். மற்ற நாட்களில் அவர் நாள் முழுவதும் தனியாகவே அமர்ந்திருப்பார். “வாருங்கள்... வாருங்கள்.... ஏதாவது புத்தகங்கள் வேண்டுமா?”

சாலமன் கேட்டார். “பழங்கால இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தமான நூல்கள் ஏதாவது இருக்கிறதா?”

“இருக்கிறதே. இரண்டு புத்தகங்கள் முழுவதுமாக இல்லுமினாட்டி கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தான். நாலைந்து புத்தகங்களில் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன” என்று சொன்னதுடன் அலமாரிகளில் தேடி அவர் எடுத்தும் கொடுத்தார்.

சாலமன் சொன்னார். “என் நண்பர் ஒருவரின் மகன் இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவிருக்கிறான். அவன் நெட்டில் நிறைய புத்தகங்கள் கட்டுரைகள் எல்லாம் படித்தும் அவனுக்கு வேண்டிய எல்லாத் தகவல்களும் கிடைக்கவில்லையாம். அதனால் என்னைக் கேட்டான்...”

அந்த நூலகர் சொன்னார். “இந்த ஏழு புத்தகங்களில் ஐந்து புத்தகங்கள் மிகப் பழையவை. இதெல்லாம் நெட்டில் கிடைக்காது”

அந்த நூலகருக்கு நன்றி தெரிவித்து விட்டுப் பிறகு பத்து நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு சாலமன் புத்தகங்களோடு கிளம்பினார்.  அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகம் மிகப் பழமையானதாக இருந்தது. அது எழுதப்பட்டிருக்கும் காலத்திற்கேற்ப கடினமான பழங்கால ஆங்கில நடையிலும் எழுதப்பட்டிருந்தது. அதனால் அதை வேகமாகப் படிக்க முடியவில்லை. சாலமன் கடைசியாக அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று எண்ணி எடுத்து வைத்து விட்டார்.

மற்றவற்றில் ஒரு புத்தகம் முழுமையாகவே இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. நிறைய இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி அதில் எழுந்தப்பட்டிருந்தது. அந்தக் கோயில்களில் ஜெர்மனி கோயில்களைத் தேர்ந்தெடுத்து சாலமன் படித்தார். கோயில் கட்டப்பட்ட காலம், எந்த விதமான கட்டிடக்கலை அந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எந்த விதமான வழிபாடுகள் அங்கே நடத்தப்பட்டன, காலப்போக்கில் எப்படி எல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதெல்லாம் விரிவாக எழுதப்பட்டிருந்தன. அதில் இரண்டு தளமுள்ள கோயில்கள் பற்றிய பேச்சே இல்லை.

மற்ற நூல்களில் எல்லாம் சில அத்தியாயங்கள் மட்டும் இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தப்பட்டவை. அந்த அத்தியாயங்களிலும் ஜெர்மனி கோயில்களாகத் தேடிப் பார்த்துப் படித்தார். எந்த உபயோகமான தகவலும் அதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

மிஞ்சியிருப்பது அந்தக் கடினமான புத்தகம் தான். கர்னீலியஸ் மாதிரி ஆட்கள் அருகில் இருந்திருந்தால் அதைப்படிப்பது சுலபமாக இருந்திருக்கும். சாலமன் ஒருவித சலிப்போடு அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அந்தப் புத்தகத்தில் நிறைய சுவாரசியமான தகவல்கள் தரப்பட்டு இருந்தன. ஆனால் பெரிய பிரச்சினை என்னவென்றால் பிரதேச வாரியாகக் கோயில்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்கவில்லை. எல்லாம் கலந்து தான் எழுதப்பட்டிருந்தன.

கால வாரியாகவும் எழுதப்படாமல், பிரதேச வாரியாகவும் எழுதப்படாமல் எல்லாம் கலந்து எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தில் ஜெர்மனி கோயில்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வழியே இல்லை. ஆனால் அந்த எழுத்தாளர் ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாலிருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொன்ன விதம் பார்க்கையில் சாலமன் தேடும் தகவலும் அந்தப் புத்தகத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. அதனால் கஷ்டமானாலும் நிதானமாக அந்தப் புத்தகத்தை சாலமன் படித்தார்.

அவர் சில பக்கங்களைக் கஷ்டப்பட்டுக் கடந்தார். ஜெர்மனியில் உள்ள ஒரு ஃப்ரீமேசன் கோயிலைப் பற்றிய தகவல்கள் வந்த போது கதே என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றிய குறிப்பு வந்தது.

“அந்தக் கோயிலுக்கு அந்த எழுத்தாளர் வந்திருந்த போது தெய்வீகமான அலைகளை அவர் உணர்ந்தார். ஃப்ரீமேசன்களில் ஒருவரான அவர் அறிவுஜீவி மட்டுமல்ல பல துறைகளில் வல்லவர், அந்தக் கோயிலில் ஒருநாள் அவர் நீண்ட நேரம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். பின் கண்களைத் திறந்த அவர் Masonic Lodge என்ற கவிதையை மளமளவென்று எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதை
The Masons's ways are A Type of Existence
And his persistence Is as the days are
Of men in this world.
 என்ற வரிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....”

சாலமன் பரபரப்படைந்தார். ஜெர்மனி, கவிதை எழுதியது எல்லாம் பொருந்தி வருவதால் அந்த இடம் இதுவாகத்தானிருக்க வேண்டும்.

இதயம் படபடக்க அவர் அதைத் தொடர்ந்து படித்தார். ”... அவரைப் போலவே வேறு சிலரும் கூட அந்த இடத்தில் தெய்வீக அலைகளை உணர்ந்ததால் அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்த போது அவர்களுடைய விசேஷ வழிபாடு செய்யும்படியாக ஒரு பாதாள அறையையும் சேர்த்துக் கட்டினார்கள். சாதாரண மக்கள் மேல் தளம் மட்டுமே அறிவார்கள். அவர்கள் வழிபாடு செய்து விட்டு அங்கிருந்தே திரும்பச் செல்வார்கள். ஆனால் சில உயர்நிலை மனிதர்கள் நள்ளிரவில் பாதாள அறையில் சில ரகசிய தீட்சைகள் பெறும் வழிபாடுகளைச் செய்து வந்தார்கள். அந்தப் பாதாள அறையில் கதேயின் Masonic Lodge கவிதை அவர் நினைவாக அங்கே சுவரில் எழுதப்பட்டுமிருக்கிறது…”

பரபரப்பு குறையாமல் சாலமன் அந்தப் புத்தகம் வெளியான  ஆண்டைப் பார்த்தார். 1907ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.  அந்த இடம், குறிப்புகள் எல்லாம் பார்க்கும் போது இப்போது வழிபாடுகள் நடக்காமல் மூடியுள்ள ஒரு சர்ச் என்பது தெரிந்தது.  அதன் பின் உள்ள சரித்திரத்தை சாலமன் வேகமாகத் தேடிக் கண்டுபிடித்தார். அந்த சர்ச் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு நெருக்கமான ஜெர்மன் எவாஞ்சலிகல் சர்ச் ஆதிக்கத்தில் சில காலம், பிறகு ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் சில காலம், பின் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் வசம் சில காலம் இருந்தது. யாரானாலும் சில காலம் மட்டுமே தான் அங்கே வழிபாடு நடத்த முடிந்தது. பிறகு யாரும் தொடர்ந்து இங்கே வழிபாட்டை நடத்த விடாதபடி ஏதாவது பிரச்னைகள், விபத்துகள் எல்லாம் நடந்து கொண்டே இருந்தன. கடைசியில் யேசு கிறிஸ்து சிலையும் உடைந்து போனதால் ஏதோ அபசகுனமாக நினைத்து அப்பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களும் அங்கே போவதை நிறுத்தி விட்டார்கள்.

ரகசிய தீட்சைகள் அங்கே நிறுத்தப்பட்டு இரு தளம் இருப்பதையே கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து விட்ட காலகட்டத்தில் தான் அந்த சர்ச் ஜெர்மன் எவாஞ்சலிகள் சர்ச் ஆதிக்கத்திற்கு வந்துள்ளது. பின் வந்தவர்களும் அதை அறியவில்லை.

விஸ்வத்துக்கு ஒளிந்திருக்க இதை விடப் பொருத்தமான இடம் கிடைத்திருக்க முடியாது என்று எண்ணியவராக சாலமன் வாங் வேக்குப் போன் செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்