என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, June 12, 2019

ஆவி மற்றும் ஏவல் சக்திகளின் சாகசங்கள்!


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!-

நியூயார்க் செல்லாமல் நேரடியாக பிலடெல்பியாவுக்கு வந்த தபால்களோடு கர்னல் ஓல்காட்டின் ஆச்சரியங்கள் முடிந்து விடவில்லை. அவர் பிலடெல்பியாவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் தங்கியிருந்த காலத்தில் அதிசய நிகழ்வுகள் தொடர்ந்தன.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆவிகளைப் பல வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருந்தார். குறிப்பாக ஜான் கிங் என்று அவர் பெயர் வைத்திருந்த ஆவி மூலமாக அவர் நிறைய தகவல்கள் பெற்றார். அந்த சமயங்களில் அவர் சொல்லச் சொல்ல அந்தத் தகவல்களை வேகமாக எழுதிக் கொள்ளும் வேலையை கர்னல் ஓல்காட் செய்தார். ஆரம்பத்தில் அவர் அந்தத் தகவல்களை துண்டுக் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வார். தேவைப்படும் வரை அவற்றைப் பத்திரமாக வைத்திருந்து தேவை முடிந்த பிறகு அந்தத் துண்டுக் காகிதங்களை அவர் வீசி எறிந்து விடுவார். சில சமயங்களில் அடுத்தவர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய காகிதங்களை அவர் நிறைய நாள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது. அப்படித் துண்டுக் காகிதங்களைப் பத்திரப்படுத்தி வைப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கவே அவர் ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி இனி அதில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது என்ற முடிவுக்கு ஒரு நாள் வந்து உடனே ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டும் வந்தார்.

அவர் வீட்டுக்கு வந்த போது அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து அது எதற்கு என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்க ஜான் கிங் ஆவி சொல்லும் குறிப்புகள் எழுதிக் கொள்ள என்று கர்னல் ஓல்காட் விளக்கினார். அந்த நோட்டுப் புத்தகத்தைக் கையில் வாங்காமல், அதைத் தொடவும் முயற்சிக்காமல் தூரத்திலேயே அமர்ந்திருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் அந்த நோட்டுப் புத்தகத்தை நெஞ்சோடு வைத்துக் கொண்டு சிறிது நேரம் நிற்கச் சொன்னார். கர்னல் ஓல்காட்டுக்கு அவர் எதற்கு அப்படிச் செய்யச் சொல்கிறார் என்று புரியவில்லை என்ற போதும் அப்படியே செய்தார். சிறிது நேரம் கழித்து அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்க்கும்படி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார்.

கர்னல் ஓல்காட் அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்த போது அதன் முதல் பக்கத்தில் ஜான் கிங்கின் புத்தகம் என்று பென்சிலில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே அன்றைய நாளான நான்காவது மாதத்தின் நான்காவது நாள், வருடம் 1875 என்று எழுதியிருந்தது.  அதற்குக் கீழே ஆன்மிகச் சின்னங்கள் சில வரையப்பட்டிருந்தன.   அந்தச் சின்னங்கள் எளிமையானவை அல்ல. வரைவதற்குக் கடினமான சின்னங்கள் அவை. வாங்கிய புதிய நோட்டுப் புத்தகத்தில், அவரைத் தவிர வேறு யாருமே தொட்டிராத நோட்டுப் புத்தகத்தில் அன்றைய தேதியுடன் ஜான் கிங்கின் பெயர் எழுதப்பட்டிருந்ததும், பார்த்து வரையவே மிகவும் கடினமான ஆன்மிகச் சின்னங்கள் வரையப்பட்டிருந்ததும் கர்னல் ஓல்காட்டை வியப்பில் ஆழ்த்தின. சில நிமிடங்களில் அதெல்லாம் எப்படிச் சாத்தியமானது என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விளக்கவில்லை. அந்த எழுத்துக்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடையதாக இருக்கவில்லை என்பது உபரிச் செய்தி. பல வருடங்கள் கழிந்த பின் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த போதும் அப்படியே அந்த எழுத்துக்களும் சின்னங்களும் இருந்தன என்று கர்னல் ஓல்காட் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார்.

ஆவிகளைப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகளை நடத்திக் காட்டிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சில ஏவல் சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை கர்னல் ஓல்காட் காலப்போக்கில் அறிந்து கொண்டார். ஒரு முறை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் துவாலைகள் தீர்ந்து விடவே கர்னல் ஓல்காட் ஒரு நீளமான துணியை வாங்கி வந்து அதை இருவருமாகச் சேர்ந்து பத்துப் பன்னிரண்டு துவாலைகளாக வெட்டி வைத்தார்கள். துவாலைகளை நான்கு பக்கங்களிலும் மடித்துத் தைக்கும் முன்பே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒன்றை எடுத்துப் பயன்படுத்த, ”தைத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்கு என்ன சோம்பேறித்தனம் என்று அவரை கர்னல் ஓல்காட் கடிந்து கொண்டார். உடனே ஊசி, நூல் எடுத்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தத் துவாலையைத் தைக்க ஆரம்பித்தார். பல அற்புத சக்திகளைப் பெற்றிருந்த போதும் அடிப்படை வேலைகள் பலவற்றில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பின் தங்கி இருந்தார். கோணல் மாணலாகத் தான் அந்தத் துவாலையை அவர் தைத்தார்.

அப்போது அவர் மேசையின் அடியில் இருந்து விசித்திர சத்தங்கள் கேட்டன. உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார்சும்மா இருக்க மாட்டாயா? அந்தப் பக்கம் போ முட்டாளேஎன்று கீழே பார்த்துச் சொல்ல கர்னல் ஓல்காட் என்ன விஷயம் என்று கேட்டார்.

என் ஏவல்சக்தி ஒன்று என்னைத் தொந்திரவு செய்கிறது. வேறெதோ செய்யச் சொல்கிறதுஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார்.

கர்னல் ஓல்காட்அப்படியானால் அந்தத் துவாலையின் நுனிகளைத் தைக்கும் வேலையை  அந்த ஏவல் சக்தியிடமே தர வேண்டியது தானே. அதற்கும் ஒரு வேலை கொடுத்த மாதிரி இருக்கும். மேலும் அது உங்களை விட நன்றாகத் தைக்கும்என்று வேடிக்கையாகச் சொன்னார்.

வாய் விட்டுச் சிரித்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த ஏவல் சக்தியிடம் அந்த வேலையை ஒப்படைக்கச் சிறிது தயங்கினார். ஆனால் கர்னல் ஓல்காட்டுக்கு இந்த மாதிரி வேலைகளையும் அந்த ஏவல் சக்திகள் செய்ய முடியுமா என்று அறியும் ஆவல் இருந்தது. அதனால் அவர் வற்புறுத்தினார்.

பின் ஒத்துக் கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தத் துவாலைகளையும், ஊசி மற்றும் நூலையும் சேர்த்து அலமாரியில் வைக்கும்படி கர்னல் ஓல்காட்டைக் கேட்டுக் கொண்டார். அவர் சொன்னபடியே கர்னல் ஓல்காட் அறை மூலையில் கண்ணாடிக் கதவிருந்த ஒரு புத்தக அலமாரியில் துவாலைகள், ஊசி, நூல் மூன்றையும் சேர்த்து வைத்து விட்டு வந்து   ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அருகே அமர்ந்தார். இருவரும் ஆன்மிக விஷயங்களையும், தத்துவார்த்த விஷயங்களையும் பற்றி சுவாரசியமாகப் பேச ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரைத் தவிர வீட்டில் மனிதர்கள் வேறு யாரும் இருக்கவுமில்லை.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து மேசையின் அடியிலிருந்து மறுபடியும் விசித்திர சத்தம் கேட்டது. கர்னல் ஓல்காட் என்னவென்று கேட்க ப்ளாவட்ஸ்கீ அம்மையார்அது தைக்கும் வேலையை முடித்து விட்டதாம்என்று சொல்லியிருக்கிறார்.  கர்னல் ஓல்காட்டுக்கு உண்மையில் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. எழுந்து போய் அலமாரியின் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்த போது உண்மையாகவே அனைத்துத் துவாலைகளும் தைக்கப்பட்டிருந்தன. அதுவும் கோணல் மாணலாகத் தான் இருந்தது என்றாலும் அந்த வேலை அந்த ஏவல் சக்தியால் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதே கர்னல் ஓல்காட்டுக்குப் பிரமிப்பாக இருந்தது. 

உண்மையான ஆன்மிகத்தில் இது போன்ற ஆவி, ஏவல் சக்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அவர்கள் உருவாக்கிய தியோசபிகல் சொசைட்டியின் நோக்கமும் இது போன்ற சக்திகளை ஊக்குவிப்பதோ, பிரயோகிப்பதோ இல்லை. பூகோள எல்லைகளைக் கடந்து மொழி, இனம், மதம் ஆகியவற்றையும் கடந்த ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போன்றவர்கள் இந்த சில்லறை சக்திகள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி அவற்றையும் பயன்படுத்திக் கொண்டே ஆன்மிகம் மற்றும் உலக சகோதரத்துவத்தை வளர்த்த முற்பட்டார்கள்.

இந்தச் சக்திகளைப் பயன்படுத்தியது போலவே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆன்மிக உயர்சக்தி மனிதர்களான மகாத்மாக்களையும் அவ்வப்போது தொடர்பு கொண்டு வந்தார். சில நேரங்களில் ஓய்வுக்குத் தனதறைக்குப் போகும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார், பின் சென்று பார்க்கும் போது அந்த அறையிலும் இல்லாமல் போவதையும் கர்னல் ஓல்காட் கவனித்திருக்கிறார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதையும் பார்த்திருக்காததால், வீட்டுக்குள்ளேயும் அவர் இல்லாமல் போவது கர்னல் ஓல்காட்டைத் திகைப்பில் ஆழ்த்தும். வீடு முழுவதும் தேடி அவரைக் காணாமல் கர்னல் ஓல்காட் குழம்பி இருக்கையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமைதியாகத் தன் அறையில் இருந்தே வெளியே வருவதுண்டு. ”எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று கர்னல் ஓல்காட் கேட்டால்முக்கிய வேலை இருந்தால் அதைச் செய்து விட்டு வர மறைந்து விட்டேன்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிரித்தபடியே சொல்வதுண்டு. அதற்கு மேலான விளக்கங்கள் அவரிடமிருந்து வந்ததில்லை.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 23.04.2019

Monday, June 10, 2019

சத்ரபதி 76


ப்சல்கானின் மரணம் குறித்தும், பீஜாப்பூர் பெரும்படையின் தோல்வியைக் குறித்தும் தகவல் அறிந்த பின் ஜீஜாபாயை விட அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டவராக ஷாஹாஜி இருந்தார். மகன் சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் அவர் அடைந்த துக்கம் அளவிட முடியாதது. மூன்று மகன்கள் அவருக்கிருந்த போதும் மூத்த மகனை அவர் நேசித்தது போல மற்ற மகன்களை அவர் நேசித்ததில்லை. சிவாஜி எல்லா விதங்களிலும் சாம்பாஜியை விடச் சிறந்தவனாக இருந்த போதும், வெங்கோஜி அவருடைய செல்ல இளைய மகனாக இருந்த போதும் கூட சாம்பாஜியின் இடத்தை அவர் மனதில் பிடித்ததில்லை. எல்லா நேரங்களிலும் அவருடனே இருக்க ஆசைப்பட்டு அவருடனேயே இருந்த அந்த மூத்த அன்பு மகன் சூழ்ச்சியால் மரணம் அடைந்த போது அவரின் இதயத்தின் ஒரு பகுதியும் அவனுடனே சேர்ந்து மரித்தது போல் உணர்ந்தவர் அவர். மனைவியிடம் கூட விட்டுக் கொடுக்காமல் தன்னுடனே அழைத்து வந்த அந்த அன்பு மகனை மரணத்திடம் விட்டுக் கொடுக்க நேர்ந்ததை அவரால் சகிக்க முடிந்திருக்கவில்லை. நாள் பல கழிந்த போதிலும் ஒவ்வொரு நாளும் அவன் நினைவும், அவன் மரணமடைந்த விதமும் ஆறாத ரணமாய் அவர் இதயத்தை வேதனைப்படுத்தி வந்தது.

அந்த ஆழமான வேதனைக்கு மாமருந்தாய் இருந்தது அப்சல்கானின் மரணச் செய்தி. அந்தச் செய்தியை விரிவாகவும், சம்பவங்களின் போக்கை மிக நுணுக்கமாகவும் கேட்டறிந்த ஷாஹாஜி பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சாம்பாஜி வாழ்ந்த நாள் வரையில் ஒருநாளும் தம்பி தன்னை விட உயர்வாக இருப்பதற்குப் பொறாமை பட்டதில்லை. அதில் ஆனந்தமே அவன் அடைந்திருக்கிறான். இப்போது அவன் மரணத்திற்குக் காரணமானவனை அவன் தம்பி பழிவாங்கியதில் அவன் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்று உறுதியாக அந்தத் தந்தை நம்பினார். நிறைந்த மனத்துடன் அவர், செய்தி கொண்டு வந்த வீரனிடம் சொன்னார். “இதை விட மிகநல்ல செய்தியை சமீப காலங்களில் நான் கேட்க நேர்ந்ததில்லை. இந்தத் தந்தையின் மனம் நீண்ட காலத்திற்குப் பின் நிறைந்திருக்கிறது என்று என் மகனிடம் சொல் வீரனே. அவனுடைய அண்ணனும் ஆத்ம சாந்தி அடைந்து மேலுலகில் இருந்தே அவனை ஆசிர்வதிப்பான் என்று நான் நம்புவதாகவும் தெரிவி. அவனுடைய மூதாதையர்களின் ஆசியும், எங்களுடைய ஆசிகளுடன் அவனுக்கு என்றென்றைக்கும் துணையிருக்கும் என்று சொல்”


ப்சல்கானின் மரணச் செய்தியில் ஜீஜாபாயும் ஷாஹாஜியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் என்றால் ஆதில்ஷாவும், அவன் தாயும் பெருந்துக்கம் அடைந்தனர். கேள்விப்பட்டதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மூன்று நாட்கள் தர்பார் கூட்டப்படவில்லை. அந்த நாட்களில் ராஜமாதா உணவு உட்கொள்ளவில்லை. சுல்தான் அலிஆதில்ஷாவும் மனமுடைந்து போயிருந்தான். அப்சல்கானை ராஜ உபசாரத்துடன் வழியனுப்பி வைத்த பீஜாப்பூர் பெரும் சோகத்தில் மூழ்கியது. மக்கள் என்னேரமும் சிவாஜி பீஜாப்பூர் மீது படையெடுத்து வரக்கூடும் என்று பேசிக் கொண்டது சுல்தான் காதிலும் விழுந்து அவனை அது நிறையவே அவமானப்படுத்தியது. முகலாயப் பேரரசு படையெடுத்து வரக்கூடும் என்று பயப்பட்டால் அது இயல்பு. முன்னமொரு முறை அப்படி அவன் தந்தை காலத்தில் முகலாயப்படை பீஜாப்பூரில் நுழைந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஔரங்கசீப் தலைமையில் முகலாயப்படை எல்லை வரை வந்து பயமுறுத்தி இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வலியவனிடம் மெலிந்தவன் அச்சப்படுவது போல இயல்பானதே. ஆனால் சிவாஜி படையெடுத்து வருவான் என்று மக்கள் பயப்பட ஆரம்பிப்பது சுல்தானுக்கு மிகவும் கேவலமான பின்னடைவு என்றே தோன்றியது. பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்த ஒருவன் பீஜாப்பூர் ராஜ்ஜியத்தையே பயமுறுத்துமளவு விஸ்வரூபம் எடுத்திருப்பதை சகிக்க முடியாத அவன் சிவாஜியை அழிக்க அடுத்து என்ன வழி என்று சிந்திக்க ஆரம்பித்தான்.


ந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படா விட்டாலும் கூட ஔரங்கசீப்பும் நடந்து முடிந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்தான். பீஜாப்பூர் சுல்தான், சிவாஜி இருவரில் எவர் வென்றாலும் அது ஒருவிதத்தில் தனக்கு லாபமே என்றும், மிஞ்சியவரை எதிர்காலத்தில் சமாளித்தால் போதும் என்றும் கணக்குப் போட்டிருந்த ஔரங்கசீப் தன் கணக்கில் பிழையை மெல்ல உணர்ந்தான்.

ஔரங்கசீப்பிடம் பல குறைகள் இருந்தாலும் அந்தக் குறைகளில் அறிவின் குறைவு ஒன்றாக இருக்கவில்லை. மனிதர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் எடை போடுவதில் மகா சமர்த்தன் அவன். இந்த முகலாயச் சாம்ராஜ்ஜியம் அவன் வசப்பட்டதே அந்தத் திறனாலும், விரைவாகவும், சரியாகவும் செயல்படத்தயங்காத தன்மையாலும் தான். நடந்ததை எல்லாம் கூர்ந்து பார்க்கும் போது சிவாஜி என்கிற தனிமனிதன் பீஜாப்பூர் என்ற ராஜ்ஜியத்தை விட அபாயகரமானவன் என்று ஔரங்கசீப்பின் பேரறிவு எச்சரித்தது.

சிவாஜி அரசனின் மகன் அல்ல. ராஜ்ஜிய அதிகாரத்துடன் பிறந்தவனும் அல்ல. கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக ஆரம்பித்தவன் அவன். இன்று மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறான். அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் அல்ல என்பதையும், சூழ்நிலைகளும் அவனுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பதையும்  ஔரங்கசீப் உணர்ந்தே இருந்தான். சிவாஜிக்கு அசாதாரண அறிவும், தைரியமும் மட்டுமல்லாமல் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் தனித்திறமையும் இருந்ததே அவன் அடைந்து வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்பதை ஔரங்கசீப் உணர்ந்தான்.

சிவாஜியை அறிந்த மனிதர்களிடம் ஔரங்கசீப் பேசிப் பார்த்தான். எல்லோரும் சிவாஜியை உயர்வாகவே பேசினார்கள். நடந்து முடிந்த பிரதாப்கட் போரில் சிவாஜி நடந்து கொண்டதை எல்லாம் துல்லியமாகக் கேட்டறிந்து கொண்ட போது ஔரங்கசீப்பால் சிவாஜியின் அதிபுத்திசாலித்தனத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சரணடைந்தவர்களைத் துன்புறுத்தாமல், அடிமைகளாக்கிக் கொள்ளாமல்  மரியாதையுடன் வழியனுப்பியதில் நல்லெண்ணத்தை விட புத்திசாலித்தனத்தையே ஔரங்கசீப் பிரதானமாகப் பார்த்தான். உணவு அளித்து, காயங்களுக்குச் சிகிச்சையும் அளித்து, அவமானப்படுத்தாமல் வழி அனுப்பி வைத்தவர்களில் நிறைய பேர் பிறகு சிவாஜியின் படையிலேயே சேர்ந்து கொண்டதை அதற்கு உதாரணமாக ஔரங்கசீப் பார்த்தான். அப்படி சிவாஜியுடன் இணையாமல் பீஜாப்பூர் போன வீரர்களும், சுந்தர்ராவ் காட்கே போன்ற படைத்தலைவர்களும் இனியொரு முறை சிவாஜியுடன் போர் புரிய நேர்ந்தால் எந்த அளவு மூர்க்கமாக சிவாஜியை எதிர்த்துப் போரிட முடியும் என்று யோசித்த போது ஔரங்கசீப்பின் கணக்கில் சிவாஜியின் நல்ல மனதை விடச் சாணக்கியத் தனமே மேலோங்கித் தெரிந்தது.

அப்சல்கானிடம் வீரமும், சூழ்ச்சியும் இருந்த அளவுக்கு அறிவில்லை என்பது ஔரங்கசீப்பின் கணிப்பாக இருந்தது. அறிவு சரியாக இருந்திருந்தால் பிரதாப்கட் கோட்டை வரை பீஜாப்பூர் படையை நகர்த்திக் கொண்டு போயிருக்க மாட்டான். எதிரியை எடைபோடுவதில் அப்சல்கான் பெரும்பிழை செய்தது தான் அவன் உயிரையும் பறித்து, பீஜாப்பூருக்கு  தோல்வியையும் அளித்திருக்கிறது என்று ஔரங்கசீப் நினைத்தான். யோசித்துப் பார்த்ததில் முகலாயர்களிடமே கூட சிவாஜி தந்திரமாகத் தான் நடந்து கொண்டிருப்பது புரிந்தது. ஷாஜஹானிடம் தந்தைக்கு உயிர்ப்பிச்சை வாங்கிய சிவாஜி காரியம் முடிந்ததும் முன்பு வாக்களித்தபடி அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளவில்லையே. அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் நல்ல உறவில் இருக்கும் போதே ஜுன்னார் அகமதுநகரைக் கொள்ளை அடித்துக் கொண்டும் போயிருக்கிறானே…..

படைவலிமை குறைவாக இருந்தாலும் சிவாஜியே பீஜாப்பூர் சுல்தானை விட ஆபத்தானவன், உண்மையான தலைவலியாக மாற முடிந்தவன் என்பதை ஔரங்கசீப் மெல்ல உணர்ந்தான். அவனிடம் சிவாஜியைப் பற்றிப் பேசியவர்கள் சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும், வீரர்களும் அவனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்ததைச் சொன்னார்கள். அவர்களில் பலரும் சிவாஜிக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் என்று கேள்விப்பட்ட போது ஔரங்கசீப் ஒரு கணம் பொறாமைப்பட்டான்.

மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியாக இருந்த போதும் ஔரங்கசீப் அப்படி அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாரக இருப்பவர்கள் என்று யாரையும் உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியாத நிலைமையில் இருப்பதை யோசித்துப் பார்த்தான். நிறைய பயம், வெறுப்பு இரண்டையும் மட்டுமே அவன் மனிதர்களிடம் இதுவரை சம்பாதித்திருக்கிறான். அவன் தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் யாருமே அவனை நேசிப்பவர்கள் அல்ல. சில காலம் முன்பு தான் ஔரங்கசீப் மூத்த சகோதரன் தாரா ஷுகோவை சிரத்சேதம் செய்து சகோதரி ரோஷனாரா கேட்டுக்கொண்டபடி அண்ணனின் தலையை சிறையிலிருந்த தந்தைக்கு அனுப்பி வைத்தான். மூத்த மகன் தலையைப் பார்த்து மூர்ச்சையான ஷாஜஹான் சில நாட்கள் சாப்பிடவில்லை.

அப்சல்கானின் தலையைத் தாயிற்கு அனுப்பி வைத்த சிவாஜி குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் ஒரு மாவீரனாய் காட்சி அளிக்கையில் ஔரங்கசீப் கொடூரனாகவே இன்று பார்க்கப்படுகிறான். ஏன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே ஔரங்கசீப் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. இன்று சகோதரி ரோஷனாரா மட்டும் அவனை மிக நேசிக்கிறாள் என்ற போதும் அவள் அன்பு, வெல்லக்கூடியவன் எவன் என்று அறிந்து அவனை நேசித்து, அவன் பின் நிற்கும் புத்திசாலித்தனமாகவே அவனுக்குத் தோன்றியது. அவன் அடிக்கடி உணரும் தனிமையை அந்தச் சமயத்தில் உணர்ந்த ஔரங்கசீப் மனதைக் கஷ்டப்பட்டு திசை திருப்பினான்.

அலி ஆதில்ஷா இனி சும்மா இருக்க மாட்டான், அப்படிச் சும்மா இருக்க முடியாது என்று ஔரங்கசீப் அறிவான். எதாவது செய்து அலி ஆதில்ஷா சிவாஜியை ஒடுக்கினால் நல்லது என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். ஒருவேளை அது நடக்கா விட்டால் சிவாஜியைக் கட்டுப்படுத்தி வைப்பது தான் தனக்கு நல்லது என்று தீர்மானித்த அவனது கவனம் சிவாஜிக்கும் அலி ஆதில்ஷாவுக்கும் இடையே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றறியும் ஆவலில் தங்க ஆரம்பித்தது.


(தொடரும்)
என்.கணேசன்

Thursday, June 6, 2019

இருவேறு உலகம் – 139


விஸ்வம் குவித்து வீசிய சக்திகளை அந்தச் சின்னம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டதைப் போல விஸ்வம் உணர்ந்தான். ஏனோ அந்தக் குகையில் அகஸ்டின் அவனது இடுப்புக் கம்பளியைப் பிடித்துக் கொண்ட போது உணர்ந்ததை இப்போதும் உணர்ந்தான். கூடவே அவனுடைய சக்திகளை அவனிடமிருந்து உருவுவது போலவும் உணர ஆரம்பித்தான். அன்று அவன் அணிந்திருந்த கம்பளித் துணி மூலம், இன்று அவன் வீசியிருந்த சக்திகள் மூலம்….. தன் சக்திகள் இழுக்கப்படுவதை விஸ்வம் தடை செய்ய முயன்றான். அதற்கு அவன் நிறையவே போராட வேண்டி இருந்தது….. அவன் அனுப்பிய சக்திகள் அந்த சின்னத்தை மேலும் ஒளிர வைத்ததோடு பேசிக் கொண்டிருந்த க்ரிஷையும் சேர்ந்து பிரகாசிக்க வைத்தது. க்ரிஷ் ஒரு கணம் தேவதூதன் போலவும், கண்களைக் கட்டியிருந்த நீதி தேவதை போலவும் தெரிந்தான். அப்படித்தானே அவன் மற்றவர்களுக்கும் தெரிவான்!.. தன்னுடைய போராட்டத்தோடு விஸ்வம் இதையும் பார்த்துச் சகிக்க வேண்டியிருந்தது. ’க்ரிஷுடன் சேர்ந்து சதி செய்யாமல். சனியனே மங்கித் தான் தொலையேன்’ என்று அந்தச் சின்னத்தைப் பார்த்து மனதினுள் கூக்குரலிட்டான். அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்தை அருகில் இருப்பவர்கள் உணர்ந்தது போலத் தெரியவில்லை. அவர்கள் க்ரிஷை பிரமிப்புடன் பார்த்தபடி அவன் பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள்.

க்ரிஷுடைய குரல் மிகவும் மென்மையாகியது. “நம் குறைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒழிய நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம் பிரச்னை நாம் ஆராய்வதில்லை என்பது தான். ஆராய்ந்து அடுத்தவர் சொல்லி விட்டால் அவர்களை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். பல சமயங்களில் நம்மை விட்டு விலகி நிற்கவும், உயர்ந்து நிற்கவும் முடிந்தவர்களுக்கு நாமிருக்கும் நிலையைத் தெளிவாகப் பார்த்துத் தெரிவிக்க முடியும். அப்படித்தான் இந்த உலக நிலைமையை  என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். அவன் சொன்னது எல்லோருக்கும் பொதுவானது. என் மூலம் உங்களுக்கும், உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் சேர வேண்டியதாக அந்த சத்தியங்கள் இருக்கலாம். நாம் நல்ல முறையில் மாற வேண்டும், உயர வேண்டும், அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் அவன் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் சொன்னான்:…”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான்.

தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

அந்தச் சின்னம் இப்போது வைரம் போல் ஜொலிக்க ஆரம்பித்தது. இருட்டில் இருந்த அரங்கம் அந்த ஜொலிப்பில் பௌர்ணமி நிலவொளியில் வெட்டவெளியில் இருப்பது போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரிய ஆரம்பித்தது. விஸ்வத்திற்கு வெளியே இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உள்ளேயோ சக்திகள் உருவப்படாமல் தடை செய்யும் முயற்சி தோல்வியடைந்து அவன் படிப்படியாக பலம் இழந்து கொண்டிருந்தான். அவனை ஏதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது. அவனால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. எத்தனையோ பேரை இப்படிக் கட்டுப்போட்டிருக்கிறான். அந்த அனுபவம் அவனுக்கே வந்து சேரும் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அந்தச் சின்னத்தின் ஜொலிப்பில் க்ரிஷும் தேஜஸுடன் தெரிந்தான். ஒவ்வொருவரின் அந்தராத்மாவுடனும் பேசுவது போல் க்ரிஷ் மேலும் சொன்னான். என் வேற்றுக்கிரகவாசி நண்பன் அழிவின் போக்கைக் கணக்கு போல படிப்படியாக விளக்கியது  மகத்தான உண்மை. தனிமனிதர்களாக நீங்கள் உங்கள் பொறுப்பை உணர்வதோடு தலைவர்கள் என்ற நிலையில் தனிமனிதர்களை மாற்ற முடிந்த சாத்தியத்தை உணர வேண்டும்…..உலகத்தில் மிக உயர்ந்த உத்தமனும் சரி, மகா மோசமானவனும் சரி எக்காலத்திலும் பெரும்பாலும் மாறாதவர்களாகவே இருப்பார்கள். எந்த மோசமான சூழ்நிலையிலும் மிக மிக நல்லவன் கெட்டது செய்யத் துணிய மாட்டான். எத்தனை தான் நல்ல சூழல் இருந்தாலும் மகா மோசமானவன் நன்மைக்கு மாற மாட்டான். இந்த இரண்டு உச்சங்களும் தங்கள் நிலை மாறாதவை. இவர்கள் விஷயத்தில் யாரும் எதுவும் செய்யவும் முடியாது. ஆனால் இவர்களின் அளவு மிகக்குறைவு. ஓரிரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். மற்ற எல்லாரும் இடைப்பட்டவர்களே. உங்களால் மாற்ற முடிந்தவர்களும், பெரும்பான்மை மனிதர்களும் இவர்களே….”

“இந்த இடைப்பட்டவர்கள் இரண்டு நிலைகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் ஒட்டு மொத்தமாய் தீய நிலைக்கு சரிவார்களேயானால் அந்த சமூகம் அழிவது நிச்சயம். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இடைப்பட்டவர்களை நல்ல தன்மைக்கு மாற்றும்படியான சூழல் இல்லை. அந்த நன்மை அலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அந்த அலைகளை அதிகப்படுத்தவே இந்தியாவின் அந்த ஆன்மிக இயக்கமும், தன்னலமில்லா தவசிகளும், உங்கள் அகஸ்டினும் கூடத் தவமிருந்தார். நுண்ணுணர்வு கொண்டவர்கள் அந்த நல்ல அலைவரிசைகளை வாங்கி மாறுவார்கள், தங்கள் உதாரணங்களால் மற்றவர்களையும் மாற்றுவார்கள் என்பது தான் அவர்கள் நோக்கமாய் இருந்தது. இது முட்டாள்தனம் அல்ல. தொலைநோக்கு….”

“ஒருவன் தன் மன உலகில் உருவாக்குவதையே வெளியுலகில் காண்கிறான். உள் உலகில் உருவாக்குபவை மேற்போக்காகவும், வீரியம் இல்லாமலும் இருக்கும் போது வெளியுலகிலும் குழப்பமாகவே எல்லாம் உருவாகிறது. உள் உலகில் தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்ந்து நினைப்பதும் மதிப்பதும் உயர்வாகவே இருக்கையில் அதன்படியே அவனுக்கு வெளியுலக வாழ்க்கை அமைகின்றது. இந்த இருவேறு உலகங்களில் ஒன்று அவன் உருவாக்குவது. இன்னொன்று அவன் காண்பது. அந்த வகையில் இருவேறு உலகமும் ஒன்றே. வெளியே காண்பது பிடிக்காத போது அவன் உள்ளுக்குள் உருவாக்குவதை மாற்றிக் கொள்வது ஒன்றே வழி”

“இன்னொரு விதமாகச் சொன்னால் எதை மனிதன் அதிகமாகவும் அழுத்தமாகவும் நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பது பிரபஞ்ச விதி. அதுவே அவனைத் தேடி வருகிறது. அதற்குரிய சூழல்களையே உருவாக்கியும் தருகிறது. ஆகவே எண்ணங்களிலும் நோக்கங்களிலும் இருக்கிறது எல்லாச் சூட்சுமமும். யோகிகள் தங்கள் ஞான அலைகளை பரவச் செய்து பலன் பெறத் தகுதியான அலைவரிசைகளில் இருப்பவர்களை உயர வைப்பது போல, ஆளுமை உள்ள மனிதர்களும் தங்கள் எண்ணங்களாலும், செய்கைகளாலும் எத்தனையோ நுட்பமான மாற்றங்களை உருவாக்கி விட முடியும். அந்த வகையில் தலைவர்கள் முடிந்த வரை உதாரண புருஷர்களாய் இருக்க வேண்டும். நன்மைக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். நன்மை போற்றப்படுகிறது, அதுவே கௌரவம், அதற்கே மதிப்பு என்ற நம்பிக்கையான சூழலை நாம் உருவாக்கினால் ஒழிய இந்த இடைப்பட்ட பெரும்பான்மையான மனிதர்களை நாம் நன்மையின் போக்கிற்கு மாற்றி விட முடியாது.”

“அப்படி மனிதர்களை மாற்றி அவர்களை மேலுக்கு உயர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்குவது  தான் உண்மையில் தலைமைக்குப் பெருமை. முட்டாள்களையும், தற்குறிகளையும், கேடிகளையும், போக்கிரிகளையும், கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் சமாளித்து அதிலும் சுய சம்பாத்தியம் பார்ப்பதைத் தலைமை என்று பெருமையாகச் சொல்ல முடியுமா? இல்லுமினாட்டி எந்த மாதிரியான மனிதர்களுக்குத் தலைமை தாங்க நினைக்கிறது? எந்த விதமான தலைமையை அது பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்…. அறிவும் ஞானமும் படைத்த நீங்கள் யோசித்துப் பாருங்கள்.  நல்ல மனிதர்களைப் போற்றுங்கள். திறமைக்கு ஆதரவு கொடுங்கள். எது எல்லாம் உயர உதவுமோ அதை எல்லாம் சிலாகியுங்கள். உண்மைக்கு உரிய கவுரவம் கொடுங்கள். இந்த இடைப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக நன்மையின் பக்கம் திரும்புவார்கள். உயர ஆரம்பிப்பார்கள்…. இதுவே உலகம் காப்பாற்றப்படும் வழி. அதைவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று இன்றைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்வதைப் போல எல்லா இடங்களில் இருந்தும் சுருட்டிக் கொண்டே போனால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இப்படி ஒருவன் சேர்த்ததை அவனுக்கு மேல் வலிமையானவன் பிடுங்கி, அவன் பிடுங்கியதை அதற்கு மேல் வலிமையானவன் பிடுங்கி வலிமை என்றாலே ஏமாற்றிப் பிடுங்குவது என்றாகி கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தான் சாக வேண்டும்…. அழிப்பதற்கு எந்தத் தனித்திறமையும் தேவையில்லை. பலவீனமானவர்களை ஏமாற்றியும், பயமுறுத்தியும் கொள்ளையடிப்பது பெருமையும் அல்ல.”

அசைய முடியாமல் கட்டப்பட்டவன் போல் இருந்த விஸ்வம் சக்திகள் இழந்ததாலோ என்னவோ அந்தச் சின்னத்தில் இருந்து வெளிப்பட்ட பேரொளி நெருப்பாய் சுடுவது போல் உணர்ந்தான்.   அவனுக்கு முன்னால் விரிந்த குகைக்காட்சியில் மாஸ்டர் விஸ்வத்தை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய இரக்கம் அவனுக்கு நெருப்பை விட அதிகமாகச் சுட்டது. அவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் தான் குகையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அவனுடைய கம்பளித்துணியின் நுனி மெல்ல எரிய ஆரம்பித்திருந்ததை விஸ்வம் கவனித்தான். விஸ்வம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனான். அந்த எரியும் கம்பளி அவனையும் எரிப்பது போல் உணர ஆரம்பித்தான்.  சதாசிவ நம்பூதிரி சொன்ன விதை விருட்சமாகி காடாகி பெருக ஆரம்பிக்கையில் பிரம்மாண்ட விருட்சமாக இருந்த அவன் நெருப்பினால் எரிக்கப்பட்டு சாம்பலாகிக் கொண்டிருக்கிறான்…. உலகத்தின் விதி எழுதி அனைவரும் பார்க்க உச்சியில் நிற்க ஆசைப்பட்டவன் அருகிலிருந்த மனிதர்கள் கூட அறியாமல் செத்துக் கொண்டிருக்கிறான். கடைசியாக அவன் பார்வையில் பட்டது க்ரிஷ் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னம். கண்களை மூடிக் கொண்டான். அவனவனுக்குச் சேர வேண்டியதை அடுத்தவன் இடையே பிடுங்கிக் கொண்டாலும் கூட விதி பிடுங்கியவன் மூலமாகவே கூட சேர வேண்டியதைச் சேர வேண்டியவனிடம் சேர்த்தும் விடுகிறது என்பது அவன் கடைசி சிந்தனையாக இருந்தது.

க்ரிஷ் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே விஸ்வம் இறந்து போனான். “எல்லா மாற்றங்களும் உடனடியாக சாத்தியமாகி விடாது என்பது உண்மையே. ஆனால் அழிவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் சின்னச் சின்ன மாற்றங்களை உடனே நாம் ஏற்படுத்த வேண்டும். நம் நண்பர் சொன்ன அக்னி நமக்குள் இருக்குமானால், அது தணியாமல் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் பெரிய பெரிய மாற்றங்களும் சாத்தியமாகும். அவர் சொன்னது போலவே இலக்கு நோக்கித் தளர்வில்லாமல் போய்க் கொண்டிருந்தோமானால் எல்லா உயரங்களும் நமக்குச் சாத்தியமே”

விஸ்வம் முகத்தில் சோகம் கலந்த புன்னகை தங்கிப் போனது….

(அடுத்த வாரம் முடியும்)

என்.கணேசன்



Wednesday, June 5, 2019

Monday, June 3, 2019

சத்ரபதி 75


திப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களை எதிர்க்க நேர்வது மிகவும் தர்மசங்கடமானது. அதையே ஷாஹாஜியின் நெருங்கிய நண்பரும் மராட்டிய வீரருமான சுந்தர்ராவ் காட்கே விஷயத்திலும் சிவாஜியும் உணர்ந்தான். அவரை அவன் பீஜாப்பூரில் சந்தித்திருக்கிறான். அவருடன் பழகியிருக்கிறான். பீஜாப்பூர் சுல்தானுக்காகத் தீவிரமாகப் போராடித் தோற்ற அவரை அவன் படை கைது செய்த தகவல் கிடைத்ததும் சிறிதும் தாமதிக்காமல் சிவாஜி விரைந்து அங்கு சென்றான். கைதியாக நின்றிருந்த அவரது காலில் அவன் விழுந்து வணங்கிய போது பீஜாப்பூர் வீரர்கள் திகைத்து நின்றார்கள். தோற்றவர் காலில் வென்றவர் விழுந்து வணங்கி அவர்கள் இதுவரை கண்டதில்லை.

சுந்தர்ராவ் காட்கேயும் அவன் வணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. மனம் நெகிழ்ந்தவராக அவனை அவர் ஆசிர்வதித்தார். சிவாஜி உணர்வுபூர்வமாகச் சொன்னான். “ஐயா, தங்களது ஆசியை என் தந்தையே நேரில் வந்து வழங்கிய ஆசியாக உணர்கிறேன்”

சுந்தர்ராவ் காட்கே அவனைச் சிறுவனாக முதன் முதலில் பீஜாப்பூரில் பார்த்த நாட்களை நினைவுகூர்ந்தார். அவன் பீஜாப்பூர் அரண்மனையில் பேசிய அறிவார்ந்த பேச்சுக்கள் அவருக்கு இப்போதும் பசுமையாக நினைவு இருந்தன. தோற்றத்தில் சிவாஜி நிறையவே மாறிவிட்டான். கம்பீரமான இளைஞனாகவும், மாவீரனாகவும் உருவாகியிருக்கிறான்…. வெற்றியிலும் கர்வம் இல்லை. பணிவிருக்கிறது…. கண்டிப்பாக இவன் இன்னும் நிறைய உயர்வான் என்று அவருடைய அனுபவம் சொன்னது.

சுந்தர்ராவ் காட்கே சொன்னார். “வணங்கியவர்களை வெறும் கையில் ஆசி வழங்கும் வழக்கம் நம்மிடம் இல்லை என்றாலும் என் நிலைமை தற்போது அந்த வகையிலேயே இருக்கிறது சிவாஜி. உனக்குத் தர என்னிடம் ஆசியைத் தவிர வேறெதுவும் இல்லை”

“ஐயா. தாங்கள் நினைத்தால் இப்போதும் எனக்குப் பரிசு வழங்க முடியும்” என்று சிவாஜி புன்னகையுடன் சொன்னான்.

சுந்தர்ராவ் காட்கே குழப்பத்துடன் அவனைப் பார்த்த போது சிவாஜி சொன்னான். “என் பக்கம் நீங்கள் சேர்ந்தால் அதையே நான் பெரும்பரிசாக எண்ணுவேன் ஐயா….”

சுந்தர்ராவ் காட்கே சோகமாகப் புன்னகைத்தார். “வெற்றி தோல்விகள் வீரனுக்கு என்றும் சகஜம் தான். இரண்டில் எது வந்தாலும் தரம் தாழ்ந்து விடாமல் இருப்பதே ஒரு வீரனுக்குப் பெருமை சிவாஜி. நான் பீஜாப்பூர் சுல்தானிடம் பல காலமாகச் சேவகம் செய்தவன். அந்த அரசின் சுபிட்சமான காலங்களில் பல நன்மைகளை அங்கு அனுபவித்தவன். கஷ்ட காலத்தில் நான் அணி மாறினால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது. நீ வணங்கியதிலும், உன் அணிக்கு அழைத்ததிலும் மிக மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.”

“சரியான இடத்திற்குக் காலம் கடந்தாவது சென்று சேர்வது நல்லதல்லவா ஐயா”

“சரியும், தவறும், இருந்து பார்க்கும் இடங்களுக்கேற்ப வித்தியாசப்படும் சிவாஜி. என்னைப் பொருத்த வரை நான் இருக்கும் இடமே எனக்குச் சரி. நீ இப்போது என்னைச் சிறைப்படுத்தினாலும் அதில் நான் தவறு காண மாட்டேன். ஒரு வீரனாக என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும்…. உன் வேண்டுகோளை ஏற்க முடியாததற்கு என்னை மன்னித்து விடு சிவாஜி….”

அவரிடம் அதற்கு மேல் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த சிவாஜி அவருக்குப் பொற்காசுகளும், பரிசுகளும் தந்து கௌரவித்து, அவரை பீஜாப்பூர் எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அங்கு விட்டு வர ஆணையிட்டான்.

திகைத்து நின்ற சுந்தர்ராவ் காட்கேயை மீண்டும் வணங்கி விட்டு சிவாஜி அங்கிருந்து நகர்ந்தான். அங்கிருந்து வந்த சிவாஜி தன் படைத்தளபதிகளுக்குத் தெளிவாக ஆணையிட்டான். “சரணாகதி அடைபவர்கள் யாரையும் துன்புறுத்த வேண்டாம். அவர்களது ஆயுதங்களையும், குதிரைகள், யானைகளையும் பறித்துக் கொண்டு இங்கிருந்து செல்ல அவர்களை அனுமதியுங்கள். வரும் போது அளித்த உணவு உபசரிப்பே இங்கிருந்து செல்லும் வழியிலும் அவர்களுக்கு செய்து தாருங்கள். நம்முடன் இணைய விரும்புபவர்களை தரமறிந்து இணைத்துக் கொள்ளுங்கள். காயப்பட்ட நம்மவர்களுக்குச் செய்து தரப்படும் சிகிச்சை சரணடைந்தவர்களுக்கும் செய்து தர வேண்டும். நடக்க முடியாதவர்கள், காயப்பட்டவர்களுக்கு மட்டும் பயணிக்க அவர்களது குதிரைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்…..”

அப்சல்கானுடன் அங்கு வந்த அவனுடைய மூன்று மகன்களில் இருவர் சிறைப்படுத்தப்படுத்தனர். ஆனால் மூத்த மகன் ஃபசல்கான் காயப்பட்டும் சிக்காமல் தன் சில வீர்ர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிய செய்தி சிவாஜியை வந்து சேர்ந்தது.

சிவாஜி யோசனையுடன் கேட்டான். “அவனால் எப்படித் தப்பிக்க முடிந்தது? அது அவ்வளவு சுலபமில்லையே. அவர்களுக்கு இந்த மலைக்காடுகள் புதிது. வழியும் சரியாகத் தெரியாது. நம் ஆட்கள் அறியாமல் அவன் தப்பிக்க முடிந்திருக்காதே…”

செய்தியைக் கொண்டு வந்த வீரன் தயக்கத்துடன் சொன்னான். “ஃபசல் கான் நம் ஆள் கண்டோஜி கோபடேக்கு பொற்காசுகளும், நகைகளும் தந்து அவன் உதவியோடு தான் தப்பி ஓடியிருக்கிறான் என்ற தகவல் வந்திருக்கிறது மன்னா. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் அவன் கண்டோஜி கோபடேயின் கிராமம் தாண்டித் தான் போயிருக்கிறான் என்பது தெரிய வந்திருக்கிறது…”

கண்டோஜி கோபடே அந்த மலைக்காட்டுப் பகுதிக் கிராமம் ஒன்றின் தலைவன். சிவாஜி சொன்னான். “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை வீரனே.   கண்டோஜி கோபடேயைத் தாண்டி அப்சல்கான் மகன் போயிருக்கிறான் என்றால் அது அவன் அனுமதியுடனேயே நடந்திருக்க வேண்டும்.”

சிவாஜி உடனடியாக கண்டோஜி கோபடேக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டான். எதிரி எதிரியைப் போல நடந்து கொள்வது வெறுக்கத் தக்கதல்ல. எதிர்ப்பதும், போராடுவதும், சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும் எதிரி அவனுடைய தரத்திற்குத் தகுந்தாற்போல் செய்யும் காரியங்களே. அது எதுவும் நடக்கா விட்டால் அவன் எதிரியே அல்ல. ஆனால் உண்ட வீட்டில் இரண்டகம் நினைப்பதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதும், காட்டிக் கொடுப்பதும், பகைவனுக்கு உதவுவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். அதைக் கடும் தண்டனையுடன் ஒரு அரசன் தடை செய்ய வேண்டும். அலட்சியப்படுத்தினால் பலரும் அதைச் செய்யத் தைரியம் பெறுவார்கள். அதை அனுமதிக்க முடியாது.

சிவாஜி இந்த முறை பீஜாப்பூர் படையிலிருந்து பெற்றவை ஏராளம். நூறு யானைகள், ஏழாயிரம் குதிரைகள், ஆயிரம் ஒட்டகங்கள், ஏராளமான பணம், நகைகள், தங்கக்காசுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆகியவற்றுடன் பீஜாப்பூர் படைவீரர்களும் கும்பல் கும்பலாக சிவாஜி படையில் இணைந்து கொண்டார்கள். காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தந்தது, தங்கள் நாட்டுக்குத் திரும்ப வசதிகள் செய்து தந்தது, மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது எல்லாமாகச் சேர்ந்து புதியதொரு தரமான தலைவனை அவர்களுக்கு அடையாளம் காட்டியது. அதனால் பலர் மனம் மாறி சிவாஜி படையில் இணைந்தார்கள்.

எதிரணியில் இருந்து போராடித் தோற்ற பின்பும் அணிமாற விருப்பமில்லாத சுந்தர்ராவ் காட்கே சகல மரியாதைகளுடன் பீஜாப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டது, சொந்த அணியில் இருந்த போதும் துரோகம் இழைத்த கண்டோஜி கோபடேக்கு மரண தண்டனை விதித்தது, மஹாபலேஸ்வரில் அப்சல்கான் வீரனுக்குரிய கௌரவத்துடன், அவன் மத வழக்கப்படியே புதைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் சிவாஜியை பல வித்தியாச கோணங்களில் அவனைச் சுற்றி உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியது….


சிவாஜியிடமிருந்து ஒரு வீரன் வந்திருப்பதாக தாதிப் பெண் வந்து சொன்ன போது ஜீஜாபாய் பிரார்த்தனையில் இருந்தாள். சிவாஜியிடமிருந்து என்ன செய்தி வந்திருக்கும் என்ற கவலையில் அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. இறைவனைக் கைகூப்பி எழுந்தவள் வேகமாக வெளியே வந்தாள். சிவாஜியிடம் இருந்து வந்த வீரன் அவளுக்குப் பரிசுப் பொருள் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அந்தப் பரிசுப் பொருளை அவள் கையில் தராமல் அவளுடைய காலடியில் அவன் வைத்த போது ஜீஜாபாய் அந்த வீரனைக் கேள்விக்குறியோடு பார்த்தாள்.

அவளை வணங்கி விட்டு அந்த வீரன் பட்டுத் துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பரிசுப் பொருளை அவள் காலடியிலேயே பிரித்தான். அது அப்சல்கானின் தலையாக இருந்தது. அந்தத் தலையைப் பார்த்ததும் அவள் பின்னாலேயே ஆவலுடன் இருபக்கமும் வந்து நின்றிருந்த சாய்பாயும், சொர்யாபாயும் இரண்டு அடிகள் பின் வாங்கினார்கள். ஆனால் ஜீஜாபாய் பின் வாங்கவில்லை. அவளுடைய ஒரு மகனைக் கொன்று, இன்னொரு மகனைக் கொல்ல முயற்சித்தவனின் தலையை அவளுடைய காலடியில் பார்க்க முடிந்ததற்கு அவளும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தினாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்தது.


உணர்ச்சிப் பெருக்குடன் அந்த வீரனிடம் சொன்னாள். “சிவாஜியிடம் சென்று ’அவனைப் பெற்றதற்கு அவன் தாய் பெருமைப் படுகிறாள்’ என்று சொல் வீர்னே!”

 (தொடரும்)

என்.கணேசன்  

Sunday, June 2, 2019

நாம் ஏன் மாறுவதில்லை?

நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ மாற்றங்களை நம் வாழ்க்கையில் கொண்டுவர விரும்பியிருப்போம். அதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்துமிருப்போம். அவற்றில் எத்தனை மாற்றங்கள் நம் வாழ்க்கையில் தொடர்ந்து சாத்தியப்பட்டிருக்கிறது? நாம் விரும்பியும் நம்மை மாற விடாமல் தடுப்பது எவை? என்ன காரணங்களால் நாம் மாற முடியாமல் தோல்வி அடைகிறோம்? காரணங்களையும், அதை மீறிச் சாதித்து வெற்றி கொள்ளும் விதங்களையும் பார்ப்போம்...



என்.கணேசன்