என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 2, 2017

இருவேறு உலகம் – 19


மணீஷிடம் ஹரிணி போன் செய்து பேசினாள். “என்னடா இது, க்ரிஷ் காணாம போயிட்டானாம். ஒரு போலீஸ் ஆபிசர் வந்து இப்ப தான் பேசிட்டு போறார். என்னடா ஆயிருக்கும்?”

அவள் கவலை அவனுக்கு வலித்தது. “தெரியல ஹரிணி. அந்தப் போலீஸ் ஆபிசர் இங்கயும் வந்துட்டுப் போனார். கேள்விப்பட்டவுடன நானும் அதிர்ச்சி ஆயிட்டேன்.... என்ன நடந்துருக்கும்னு ஒன்னுமே புரியல. அந்தப் போலீஸ் ஆபிசர் இந்த விஷயத்த வெளிய சொல்ல வேண்டாம். மீடியாக்குத் தெரிஞ்சா அது துப்பறிய இடைஞ்சலா இருக்கும்னு வேற சொல்லிட்டுப் போனார்”

“என் கிட்டயும் சொன்னார்..... கேள்விப்பட்டதுல இருந்து மனசே சரியில்ல....” அவள் தன்னால் எந்த வேலையிலும் முழுமனதோடு ஈடுபட முடியவில்லை என்கிற வகையில் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள். ஆனால் அவன் காதில் எதுவும் விழவில்லை. அவள் க்ரிஷுக்காகக் கவலைப்பட்டுத் துடிக்கிற விதம், சொல்கிற வார்த்தைகள் எல்லாம் அமிலமாக அவன் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவள் தன் மன வேதனைகளை எல்லாம் ஒரு நல்ல நெருங்கிய நண்பனிடம் கொட்டி விட்ட திருப்தியில் பேச்சை முடித்தாள். ஆனால் அவன் மனதில் அதிருப்தி மலையாக உயர்ந்து அழுத்தியது....

செல்வச்செழிப்பில் பிறந்து வளர்ந்த அவனுக்குச் சின்ன வயதிலிருந்தே எந்தக் குறையும் தெரியாமல் அவன் தந்தை மாணிக்கம் வளர்த்தார். ஒரே மகன் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அவனை ஊட்டி கான்வெண்டில் படிக்க வைத்தார். அவனும் பள்ளியில் ஒவ்வொரு தேர்விலும் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்று  வந்தான். பள்ளியில் அவன் நண்பர்களுக்கு இடையே இரண்டாம் இடத்துக்குத் தான் போட்டியே இருந்தது. முதலிடத்திற்கு வருவது மணீஷ் இருக்கும் வரை சாத்தியம் இல்லை என்ற சக மாணவர்கள் நம்பினார்கள். ஆசிரியர்கள் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். வீட்டில் அவன் பெற்றோர் பெருமிதம் கொண்டார்கள். மொத்தத்தில் வெற்றியின் உருவமாகவே அவன் வாழ்ந்தான். பழகும் போது தராதரம் பார்த்து மட்டுமே பழகுவான். தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்குபவர்கள், பணத்திலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்கள் மட்டுமே அவன் நட்பு வட்டத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் பல தரங்கள் வைத்திருந்தான். சிலருக்கு புன்னகை மட்டுமே, சிலரிடம் சிறு பேச்சுகள் மட்டுமே, சிலரிடம் மட்டுமே அதிக நெருக்கம் போன்ற பலநிலைகள் இருந்தன.

அரசியலில் தன் தந்தைக்கு இணையான நிலையில் இருந்த கமலக்கண்ணன் குடும்பத்தைக் கூட அவன் தங்களுக்குச் சரிசமமாக நினைக்கவில்லை. அவன் பெற்றோர் இருவரும் பட்டதாரிகள். கமலக்கண்ணனும், பத்மாவதியும் பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள். அரசியலுக்கு வரும் முன் கமலக்கண்ணன் சரியான வேலை எதுவும் இல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தவர் என்று கேள்விப் பட்டிருந்தான். அந்த மனிதர் அதை வெளிப்படையாகவே வெட்கம் இல்லாமல் சொல்வதையும் கேட்டிருக்கிறான்.

ஆனால் அவனைப் போலவே க்ரிஷும் எப்போதும் முதல் மாணவனாகவே ஒவ்வொரு தேர்விலும் வருவது தெரிந்ததால் க்ரிஷ் அறிவு தனக்கு இணையாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியிருக்கிறது. மேலும் க்ரிஷிடம் எதைப் பற்றியும் பேச முடியும். எதையும் சீக்கிரமாகப் புரிந்தும் கொள்வான். ஆகவே ஓரளவாவது அவனுக்கு உண்மையான சரிசமமான நண்பன் க்ரிஷ் தான் என்பதை சிறுவயதிலேயே தீர்மானித்திருந்தான். ஆகவே விடுமுறை நாட்களில் சென்னை வரும் போதெல்லாம் அவன் க்ரிஷ் வீட்டுக்குப் போவான். அவனுடன் விளையாடுவான்.

ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ‘என்ன இருந்தாலும் க்ரிஷ் உள்ளூர் பள்ளியில் படிப்பவன். நான் ஊட்டி கான்வெண்டில் படிப்பவன்” என்ற கர்வம் இருந்தது. க்ரிஷும் ஊட்டி கான்வெண்டில் படிக்க வந்தால் இரண்டாம் இடத்தைத் தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நினைத்தான். மாணிக்கம் தன் நண்பர் கமலக்கண்ணனிடம் க்ரிஷையும் ஊட்டி கான்வெண்டிலேயே சேர்த்து விடும்படி சில முறை வற்புறுத்தி இருக்கிறார். பள்ளியிலும் நண்பர்கள் சேர்ந்திருந்தால் வீட்டில் இல்லாத குறை ஓரளவு மகனுக்குக் குறையும் என்பது அவர் அபிப்பிராயமாக இருந்தது.  ஆனால் பத்மாவதி “நானெல்லாம் என் பிள்ளையை விட்டு இருக்க மாட்டேன்..” என்று உறுதியாகச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

க்ரிஷின் அறிவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என்பது மணீஷுக்குப் புரிந்தது கல்லூரியில் சேர்ந்த பின் தான். க்ரிஷிடம் ஒரு பழக்கம் உண்டு. தன் நண்பர்கள் எந்த அறிவுநிலையில் இருக்கிறார்களோ அதே அறிவுநிலையில் இருந்து தான் எதைப் பற்றியும் பேசுவான். யாருக்குமே அவன் அவர்களை விட உயர்ந்தவன் என்கிற உணர்வு தன் பேச்சால் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைப்பாடு அவனிடம் உறுதியாக இருந்தது.   அதனால் மணீஷிடமும் அவன் அப்படியே பழகி வந்திருக்கிறான்.

கல்லூரியில் அவனுடன் சேர்ந்து படிக்கும் போது தான் மணீஷுக்கு இந்த உண்மை புரிந்தது. முதல் நிலையிலேயே இருந்து பழக்கப்பட்ட அவன் ஐ ஐ டியில் வந்த பிறகு எப்போதுமே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனும் மிகச்சிறந்த மாணவன், அறிவாளி என்றாலும் கூட க்ரிஷ் முன்னால் அவன் மங்கிப் போனான். க்ரிஷை ஆஹா ஓஹோ என்று கொண்டாடிய சில பேராசிரியர்களும், சக மாணவர்களும் மணீஷ் அறிவைக் கவனிக்க மறந்து போனார்கள். சில இடங்களில் க்ரிஷின் நண்பன் என்ற வகையிலேயே மணீஷை பலரும் அறிந்திருந்தார்கள். மணீஷுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் சகிக்க வேண்டியதாக இருந்தது.

கிட்டத்தட்ட அவன் மனநிலையிலேயே இருந்த அவன் தந்தையும் மகன் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டதை சகிக்க முடியாதவராக இருந்தார். அவர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அவர் திகைப்பை அவன் கல்லூரி சேர்ந்த சில மாதங்களிலேயே அவனால் உணர முடிந்தது. கல்லூரிக் காலத்தில் தான் அவன் தாயும் இறந்து போனாள். ஒன்றின் பின் ஒன்றாக வந்த சோதனைகள் எல்லாவற்றிலும் பேரிடியாக அவன் உணர்ந்தது ஹரிணி விஷயத்தில் தான்.

அழகான பெண், அறிவாளியான பெண், தைரியமான பெண், சுறுசுறுப்பும், துடிப்பும் நிறைந்த பெண், தானிருக்கும் இடத்தை கலகலப்பாக்கவும், சந்தோஷமானதாகவும் ஆக்க முடிந்த பெண் என பன்முகச் சிறப்பு கொண்ட ஹரிணி பழக ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே அவன் மனதில் இடம் பிடித்து விட்டாள். இத்தனைக்கும் அவள் அந்தஸ்தில் அவனுக்கு இணையானவள் அல்ல. கண்ணாடி அணிந்திருந்தாள். அதுவும் அவனுக்குப் பிடித்தமானதல்ல. ஆனால் அதையெல்லாம் அவன் மனம் பொருட்படுத்தவில்லை.

ஆரம்பத்தில் அவள் அவனிடம் தான் நட்பானாள். க்ரிஷ் பின்னர் தான் நட்பு வட்டத்திற்குள் வந்தான். ஆனால் க்ரிஷ் வந்த பிறகு அவள் அவனிடம் கூடுதல் நெருக்கமாக ஆரம்பித்தாள். க்ரிஷ் எல்லோரிடமும் நன்றாகப் பழகுபவனாக இருந்த போதும் மிக நெருக்கமாவதைத் தவிர்ப்பவன். அவனும் தன் வழக்கத்தை மீறி ஹரிணியிடம் நெருக்கமாக ஆரம்பித்தான். தன் கண் முன்னே இந்த நெருக்கம் வளர்ந்தது மணீஷ் இதயத்தில் ஈட்டியைச் சொருகுவது போல் இருந்தது.

ஹரிணியைப் பொருத்த வரை மணீஷ் நல்ல நண்பன். அவனை அந்த ஸ்தானத்திலேயே வைத்திருந்தாள். அவனிடம் பேசுவதையும் பழகுவதையும் எந்த விதத்திலும் அவள் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் க்ரிஷ் அவள் மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டது தெளிவாகவே மணீஷுக்குத் தெரிந்தது. அதற்கு காதல் என்று பெயரிட அவன் அவசரம் காட்டவில்லை. ஆனால் க்ரிஷுடன் ஹரிணி இருந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்குள் வார்த்தைகள் இல்லாமல் பார்வைப் பரிமாற்றங்களிலேயே இழையோடிய நெருக்கம் காதல் தான் என்று அடித்துச் சொன்னது. மற்ற எல்லாவற்றிலும் இரண்டாம் இடம் பிடிக்க ஆரம்பித்தது கூட அவனுக்கு வலிக்கவில்லை. உண்மையாகவே க்ரிஷ் ஜீனியஸ் , அதை மற்றவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்ற புரிதலை கஷ்டப்பட்டு அடைந்திருந்தான். ஆனால் காதல் விஷயத்திலும் தோற்றுப் போக மனம் சம்மதிக்கவில்லை.

அவன் இதயத்தின் ரணத்தை ஆற்றுவது போல் திடீரென்று க்ரிஷ், ஹரிணி இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் திடீரென்று அறுந்தது. என்ன காரணம் என்று இருவரும் சொல்லவில்லை. ஆனால் பார்வைகள் பேசிக் கொண்டது நின்று போய் விட்டது. மறுபடி சாதாரண நண்பர்கள் ஆக இருவரும் நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த முறை தான் அதிசயமாக க்ரிஷ் மணீஷிற்கும் பின்னால் தள்ளப்பட்டான். ஹரிணியும் க்ரிஷும் பேசிக் கொள்வது குறைந்து போனது. விதி தனக்கு சாதகமாக இயங்க ஆரம்பித்திருப்பது மணீஷுக்குப் பேரானந்தத்தைத் தந்தது.

க்ரிஷின் பழைய இடத்தை ஹரிணி மணீஷுக்குத் தந்து விடவில்லை. என்றாலும் பழகியவர்களில் முன்னிடத்தில் மணீஷ் இருந்தான். ஒருநாள் அவள் அவனைக் காதலிக்கவும் செய்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு உறுதியாக இருந்தது. அந்த ஒரு பொன்னாள் வருவதற்காக அவன் காத்திருந்தான்.

இப்போது க்ரிஷ் காணாமல் போனது கேட்டு ஹரிணி பதறிய பதற்றமும், துக்கமும் பார்க்கையில் மறுபடி அவன் காதல் கேள்விக்குறியாகியது. கண்களை மூடி நீண்ட நேரம் மணீஷ் யோசித்துக் கொண்டிருந்தான். எல்லாமே குழப்பமாக இருந்தது.....


ISTRAC  ஆராய்ச்சியாளன் வினோத்தும், பெண் விஞ்ஞானி உமா நாயக்கும் அனுப்பி இருந்த தகவலை வெறித்துப் பார்த்தபடி டைரக்டர் தன் புனே ஆபிசில் அமர்ந்திருந்தார்.  பாம்பு கடித்து செத்த அந்த வாடகைக் கொலையாளி குறித்து அவர்கள் சொன்ன தகவலுக்கு அவர் முக்கியத்துவம் தராதபடி காட்டிக் கொண்டாலும் இப்போது ஆராய்ச்சிக்களம், கொலை வழக்கின் களமாகவும் மாறி விட்டிருப்பதன் ஆபத்தை அவர் உணராமல் இல்லை. அதிகார வர்க்கம் ஆபத்தானது. சில விஷயங்கள் பிரச்னையாகும் போது பரிகாரத்திற்குப் பதிலாக அவர்கள் பலிக்கடாவைத் தான் தேடுவார்கள். அந்தப் பலிக்கடாவாக அவர் விரும்பவில்லை. அதனால் புதுடெல்லிக்கு நிலவரத்தைச் சொல்லி விடுவது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து உடனே போன் செய்தார்.  


செந்தில்நாதன் இருட்டுவதற்கு முன்பே அந்த மலைக்குப் போய்விட்டார். இருட்டும் வரை அந்த மலையை ஆராய்ந்தார். மலை உச்சியில் சின்னதாய் ஒரு கோயில், பெரிதாய் சில பாறைகள், வறண்ட தட்பவெப்பத்திலும் வளரும் மரங்கள், செடிகொடிகள்....  க்ரிஷ் சம்பந்தப்பட்ட ஏதாவது தடயம் அங்கு கிடைக்கிறதா என்று பார்த்தார். அப்படி எதுவும் கிடைக்கவில்லை....

இருட்டிய பின்னும் அங்கேயே அவர் தங்கினார். காரிருள் என்பதற்கு அர்த்தமாக இருந்தது அந்த இரவு. இந்த இரவிலாவது ஏதாவது செய்தியைச் சொல்லுமா இந்த மலை? இரவு நேரத்தில் காற்று அதிகமாகியது. அந்தப் பெருங்காற்று  அமானுஷ்யமான ஒலியோடு வந்தது. சாதாரண மனிதர்களை இந்த அமானுஷ்ய ஒலியே பயமுறுத்தலாம் என்று தோன்றியது. இந்த மலையைச் சுற்றிப் பேசப்பட்ட பழைய பேய்க்கதைகள் இந்த ஒலியை மையப்படுத்திப் புனையப்பட்டவை என்று தோன்றியது.

மலையுச்சியிலிருந்து கொண்டு அவர் அமைதியாக ஆகாய நட்சத்திரங்களை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கீழே பார்க்க ஆரம்பித்தார். தூரத்தில் நகர விளக்குகள் வைரத்துகள்களாக மின்னிக் கொண்டிருந்தன. நகரத்திலிருந்து இந்த மலைக்கு வரும் சாலையில் அதிக விளக்குகள் இல்லை. இருந்த சில விளக்குகளும் ஒன்றிரண்டு தவிர எரியவில்லை.....

திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு கார் அந்தச் சாலையில் மலையை நோக்கி வந்து கொண்டிருப்பது அவர் கவனத்தை ஈர்த்தது.  அவர் உஷாரானார்.

(தொடரும்)
என்.கணேசன்



Monday, February 27, 2017

இறைவனைக் காணும் திவ்யதிருஷ்டி!



கீதை காட்டும் பாதை 45

கீதையின் பதினோராம் அத்தியாயமான விஸ்வரூப சந்தர்சன யோகத்தின் துவக்கத்திலேயே அர்ஜுனன் தன் பேராவலை வெளிப்படுத்துகிறான்.

”தாமரைக்கண்ணா! சகல பூதங்களின் தோற்றம், மறைவு இவைகளைப் பற்றியும் அழிவில்லாத உன் மகிமைகளைப் பற்றியும் விரிவாக நீ உரைக்க நான் கேட்டேன்.

பரமேஸ்வரா! உன்னைப் பற்றி நீ என்ன சொன்னாயோ அது அப்படித்தான்; வேறுவிதமாக இல்லை. ஆயினும் புருஷோத்தமா! உன்னுடைய ஈஸ்வர ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.

ப்ரபோ யோகேஸ்வரா! அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ எண்ணுவாயானால் அழிவில்லாத உன் வடிவத்தை எனக்குக் காட்டியருள வேண்டும்.”

உடனிருப்பவன் இறைவன், அவனுடைய உண்மையான திருவுருவும் இந்த மனித உருவமல்ல என்பது உணர்ந்த பின் அர்ஜுனனுடைய இந்த ஆவல் எழுகிறது. அர்ஜுனன் யோகியல்ல. தலைசிறந்த பக்தன் என்றும் அவனைச் சொல்ல முடியாது. இந்த இரண்டுமே இறைவனைத் தரிசிக்க உதவுபவை. இந்த இரண்டுமே இல்லாத நிலையில் அந்த பரம்பொருளின் ஈஸ்வர ரூபத்தைக் காணும் தகுதி தனக்கு இல்லை என்கிற உணர்வு அவனிடம் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ‘அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ நினைத்தால் உன் ஈஸ்வர ரூபத்தைக் காட்டியருள வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கிறான்.

கருணை மயமான ஸ்ரீகிருஷ்ணர் அவன் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அவர் கூறுகிறார்.

”அர்ஜுனா! நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உள்ள என் உருவங்களைப் பார். அவை பற்பல விதமாகவும், தெய்வீகமாகவும், பற்பல வர்ணனைகளைக் கொண்டதாகவும் இருப்பதைப் பார்.

என்னுடைய இந்த தேகத்திலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதையும் இன்னும் நீ எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது பார்.

ஆனால் உன்னுடைய இந்தக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது. தெய்வீகமான பார்வையை உனக்குத் தருகிறேன். அதனால் என்னுடைய ஈசுவர சம்பந்தமான யோக மகிமையைப் பார்.”

மனிதக் கண்களின் சக்திகளுக்கு எல்லைகள் உண்டு, வரம்புகள் உண்டு. கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க முடியாது. காற்றும் மின்சாரமும் அவன் கண்ணால் பார்த்து இருக்கிறது என்று முடிவு செய்வதில்லை. அவற்றின் செயல்திறன்களை வைத்தும், விளைவுகளை வைத்துமே அவன் அவை இருப்பதாக நம்புகிறான். இப்படி இயற்கையின் சக்திகளையே கூட அவனால் நேரடியாகக் காண முடியாத போது இறைவன் விஸ்வரூபத்தை அவனால் புறக்கண்களால் எப்படிப் பார்த்து விட முடியும்? எனவே அதைக் காணும் விசேஷ சக்தியை, திவ்ய திருஷ்டியை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளிக்கிறார்.  

(இந்த திவ்ய திருஷ்டி மட்டுமல்ல எந்தப் பேருண்மையைக் காணவும், உணரவும் முடியும் பெரும் சக்தியையும் இறைவன் அளித்தால் ஒழிய ஒருவருக்குக் காணவோ, உணரவோ முடிவதில்லை. யாரெல்லாம் பேருண்மைகளை உணர்கிறார்களோ அவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கவும், அனுக்கிரக்கவும் பட்டவர்கள் என்பது பொருள்.)

வயலுக்குப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல அர்ஜுனனுக்கு கிடைத்த அந்த மகத்தான வாய்ப்பு, திருதராஷ்டிரனுக்கு குருக்‌ஷேத்திரத்தில் நடப்பதை எல்லாம் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த சஞ்சயனுக்கும் கிடைக்கிறது. தர்மாத்மாவும், புண்ணியாத்மாவுமான சஞ்சயன் திருதராஷ்டிர மன்னனிடம் மெய்சிலிர்த்து இப்படி வர்ணிக்கிறான்.

”திருதராஷ்டிர மகாராஜனே! யோகங்களுக்கெல்லாம் பெருந்தலைவனான ஹரி இப்படிச் சொல்லி அர்ஜுனனுக்குத் தன்னுடைய ஜகதீஸ்வர ரூபத்தைக் காண்பித்தான்.

பல முகங்கள், பல கண்கள், பல அற்புதக் காட்சிகள், பல திவ்யாபரணங்கள், பல திவ்யாயுதங்கள், இவைகளைக் கொண்டதும், திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்ததும், திவ்யமான சந்தனத்தைப் பூசியதும், எல்லா ஆச்சரியங்களுக்கும் இருப்பிடமும், ஒளிவீசுவதும், காலத்தைக் கடந்ததும், எல்லாத் திக்குகளிலும் முகங்களையுடையதுமான தன் ரூபத்தைக் காட்டினார்.

ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் கிளம்பினால் அது அந்த மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும்.

பலவிதமாகப் பிரிந்துள்ள உலகம் யாவும் அந்த தேவதேவனின் சரீரம் ஒன்றிலேயே இருப்பதை அர்ஜுனன் கண்டான்.”

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். வார்த்தைகளுக்கு அடங்காத அற்புதங்களே ஆனாலும் அந்த பேரானந்த அனுபவத்தைப் பெற்றவனால், அறிந்த வார்த்தைகளால், முடிந்த வரை விவரிக்காமல் இருக்க முடிவதில்லை. கடலை, துளிகளின் உவமையினால் விளக்கி விளங்க வைக்க முடியுமா? ஆனாலும் முயற்சி செய்து வர்ணிக்கிறது மனித மனம்.

எத்தனை முகங்கள், எத்தனை உருவங்கள், எத்தனையெத்தனை காட்சிகள், எல்லைகள் இல்லாத பேராச்சரியங்கள் என்று இறைவனின் விஸ்வரூபம் விரிந்து கொண்டே போக மெய் மறந்து தரிசிக்கிறார்கள் அர்ஜுனனும், சஞ்சயனும். ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தோன்றினால் அந்த ஒளி மகாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரின் ஒளிக்குச் சமமாக இருக்கும் என்று தனக்குத் தெரிந்த மட்டில் வர்ணிக்கிறான் சஞ்சயன்.  

பல கோடி கோடிகளாய் பிரிந்து வியாபித்திருக்கும் உலகங்கள் யாவும் தேவர்களுக்கெல்லாம் தேவனான ஸ்ரீகிருஷ்ணர் சரீரத்திலேயே இருப்பதை அர்ஜுனன் காண்கிறான். அனைத்துக்கும் மூலமான இறைவனிடத்தில் அனைத்தையுமே ஒரே சமயத்தில் காண முடிந்தால் பின் இந்த உலகத்தில் காண வேண்டியது என்ன இருக்க முடியும்?

வேறுபாடுகள் மாயையினால் உருவாக்கப்படுகின்றன. இறைவனை உணர்ந்தவர்கள் வேறுபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இறைவனே மூலம் என்றால் பயப்படவோ, கவலைப்படவோ என்ன இருக்கிறது?

பாதை நீளும்....


என்.கணேசன்

Thursday, February 23, 2017

இருவேறு உலகம் – 18


செந்தில்நாதன் ஹரிணியைப் போனில் தொடர்பு கொண்டு க்ரிஷ் குறித்து நேரில் பேச வேண்டும் என்று சொன்ன போது, உடனடியாக வார்த்தைகள் சற்றுக் கடுமையான தொனியிலேயே வந்தன. ’அவனப் பத்தி என் கிட்ட ஏன் பேச வர்றீங்க, அவனோட வீட்டாளுங்க கிட்ட பேசுங்க”

செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார். “அவரோட வீட்டாள்க கிட்ட பேசிட்டேன். அவர் நண்பர் மணீஷ் கிட்டயும் பேசிட்டேன். உங்க கிட்டயும் பேச வேண்டியிருக்கு.....”

அப்போது தான் அவள் விபரீதமாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தது போல் தோன்றியது. கடுமை காற்றில் பறக்க அவள் திகிலோடும் பதற்றத்தோடும் மெல்லக் கேட்டாள். “என்னாச்சு அவனுக்கு...?”

அவர் சுருக்கமாகச் சொன்னார். சொன்னவுடன் இப்போதே வரலாம் என்றவள் தன் விலாசத்தையும் தெரிவித்தாள். அவள் குரல் மிகவும் தாழ்ந்து போயிருந்தது.

க்ரிஷ் கம்ப்யூட்டரில் தெரிந்த ஹரிணியின் முகத்திற்கும் இப்போது நேரில் தெரியும் முகத்துக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை செந்தில்நாதனால் பார்க்க முடிந்தது. க்ரிஷ் கம்ப்யூட்டரில் மகிழ்ச்சியும் துடிப்புமாய் தெரிந்த ஹரிணி இப்போது கவலையும் வாட்டமுமாய்த் தெரிந்தாள். க்ரிஷ் காணாமல் போனது குறித்து அவர் போனில் சுருக்கமாகச் சொன்னதை மீண்டும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த நேரத்தில் அவள் முகத்தில் தெரிந்த வலிமிகுந்த உணர்வுகள் அவள் க்ரிஷைக் காதலிக்கிறாள் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் அவருக்குத் தெரிவித்தன....

செந்தில்நாதன் அங்கு வருவதற்கு முன்பே அவளைப் பற்றியும் தகவல்கள் சேகரித்து விட்டே வந்திருந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள், தாய் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கிறார், பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்தவள், கல்லூரிப் படிப்பின் போது தான் சென்னை வந்தவள், கல்வியில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும், பெண்ணுரிமையிலும் முன்னணியில் இருப்பவள்...

செந்தில்நாதன் அவளிடமும் மணீஷிடம் க்ரிஷ் பற்றி கேட்ட ஆரம்பக் கேள்விகளைக் கேட்டார். அவள் பதில்களும் அவன் பதில்களை ஒட்டியே இருந்தன. ஆராய்ச்சிகள் பற்றி அவை முடியும் முன் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான், கேட்டாலும் சொல்ல மாட்டான், அவனுக்கு யாரும் எதிரிகள் இல்லை, சமீபத்திய ஆராய்ச்சி பற்றித் தெரியாது....

கடைசி ஆராய்ச்சி மாயமாக மறையும் தன்மை குறித்ததாக இருக்குமா, அவன் கடைசியாக நிறைய தேடிப்படித்த விஷயம் அது என்று அவர் கேட்ட போது அவள் மணீஷ் காட்டிய எதிர்விளைவைக் காட்டவில்லை. மாறாக அவள் முகத்தில் பெருமிதம் ஒரு கணம் எட்டிப் பார்த்தது. “இருக்கலாம் சார். அவன் மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்துடுச்சுன்னா விடை கிடைக்கற வரைக்கும் ஓய மாட்டான்.... நான் யார் கிட்டயும் இது வரைக்கும் பார்த்திருக்காத ஒரு தன்மை அது....”

சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு திடீரென்று அவளையே கூர்ந்து பார்த்தபடி செந்தில்நாதன் கேட்டார். ”முதல்ல எல்லாம் அவர் வீட்டுக்கு நீங்க அடிக்கடி போவீங்க, ஆனா சில மாதங்களா போறதில்லைன்னு கேள்விப்பட்டேன்.... என்ன காரணம்?”

ஒரு கணம் சிலையாகச் சமைந்த அவள் பின் மெல்ல சுதாரித்துக் கொண்டாள். பின் உண்மையை விவரித்துச் சொல்லி விடாமல், அதே நேரம் பொய்யும் சொல்லிவிடாதபடி யோசனையோடு சரியாக வார்த்தைப்படுத்தி உண்மையைச் சொன்னாள். ”அவன் வீட்டுக்குப் போனா எப்பவுமே அவன் படிச்சுட்டோ, எழுதிட்டோ, ஆராய்ச்சி பண்ணிட்டோ இருப்பான். சில நேரங்கள்ல நாம போயிருக்கறதைக் கூட மறந்துடுவான். போய் அவனை ஏன் தொந்தரவு செய்யணும்னு கடைசி தடவ தோணிடுச்சு. அதனால அதுக்கப்பறம் போகல....”

அவள் ஒரு சாதாரண விஷயம் போலவே அதைச் சொன்னாலும் அவன் வீட்டிற்குக் கடைசியாகப் போன அந்த நாளில் நடந்ததை அவளால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது....

காதலிப்பதாக அவனும் அவளிடம் இதுவரை தெரிவித்ததில்லை. அவளும் அவனிடம் தெரிவித்ததில்லை. காதலை வார்த்தைகளால் சொல்லித் தெரியப்படுத்த வேண்டிய நிலையை எப்போதோ தாங்களிருவரும் தாண்டி விட்டதாக அவள் நினைத்திருந்தாள்... அவனுடன் இருக்கும் கணங்கள் மிகவும் உயிர்ப்புள்ள கணங்கள்... எத்தனையோ நாட்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். அதே போல எத்தனையோ நாட்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கையில் ஒவ்வொரு புத்தகத்துடன் சேர்ந்து உட்கார்ந்து படித்திருந்திருக்கிறார்கள். பேச்சு கூட அவசியம் இல்லை என்கிற நிலையைத் தாங்கள் எட்டி விட்டிருந்ததாக அவள் பெருமையுடன் நினைத்திருக்கிறாள்.

அவன் அவள் வீட்டுக்கு வருவது மிக அபூர்வம். ஆனால் அவள் அடிக்கடி அவன் வீட்டுக்குப் போவாள். அவளுடைய தாய் “நீ தான் நாய் மாதிரி அவன் பின்னாடியே போயிட்டிருக்காய். அவன் அப்படி வர்றானா பார்” என்று அடிக்கடிக் குத்திக் காண்பித்தாலும் அவள் அதை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. இந்தக் கணக்கெல்லாம் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குப் பட்டது. அந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளும் தன்மை அவளிடம் இருந்ததால் தங்களுக்குள் விரிசல் வரும் என்று அவள் என்றுமே நினைத்ததில்லை. ஆனால் அப்படி ஒரு நாளும் வந்தது....

எப்போதுமே அவள் அவனுடைய வீட்டுக்குப் போகும் போது அவன் ஏதாவது படித்துக் கொண்டோ, ஆராய்ந்து கொண்டோ இருந்தால் முதலில் பார்த்துப் புன்னகைத்து விட்டு மறுபடித் தன் வேலையில் சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஈடுபட்டு விட்டு ஒரு சரியான கட்டத்தில் அதை  நிறுத்தி விட்டுத் தான் அவள் பக்கமே திரும்புவான். அவளுக்கு அதில் வருத்தமே இருந்ததில்லை. அது உச்சக்கட்ட செயல்திறத்தின் நல்லதொரு பழக்கம் என்று கூட அங்கீகரித்தாள்.  அன்றும் அவளைப் பார்த்தவுடனேயே புன்னகைத்து விட்டு எதையோ குறிப்பிடெடுத்துக் கொண்டிருந்த வேலைக்குக் கவனத்தைத் திருப்பிக் கொண்டான். பத்து நிமிடம் பதினைந்தாகியது.... பதினைந்து நிமிடம் அரை மணியாக நகர்ந்தது. அரை மணி ஒரு மணியாகியது. ஒரு மணியாகிய போது பொறுமை இழந்தாள். ஒன்றரை மணியாக ஆரம்பித்த போது அவளுக்கே அது அநியாய அலட்சியமாகத் தோன்ற ஆரம்பித்தது. இரண்டு மணியான பிறகு அவமானமாகவே தோன்றவே அங்கிருந்து எழுந்து வந்து விட்டாள். மனம் கொதிக்க ஆரம்பித்து விட்டது.

கண்டிப்பாக நினைவு திரும்பியவுடன் போன் செய்வான் அப்போது கடுமையாகப் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அவன் பேசவேயில்லை. அது அவள் ஆத்திரத்தைப் பலமடங்காகப் பெருக்கியது. இரண்டு நாட்கள் கழித்து கல்லூரியில் சந்திக்கையிலாவது அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்தாள். அவன் அப்போதும் அதுபற்றி எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை. பொதுவாக எப்போதும் போலப் பேசினான். அவன் கேட்ட கேள்விகளுக்கு இறுக்கமான முகத்துடன் அவனுக்குப் பதிலளித்துப் பார்த்தாள். அதுவும் அவனுக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.     

வேறு யாராவதாக இருந்திருந்தால் சரிதான் போடா என்று உதறிவிட்டுப் போயிருப்பாள். அவனிடம் அப்படி விலக அவள் மனம் அனுமதிக்கவில்லை. பொக்கிஷமாக நினைத்துப் பார்க்க எத்தனையோ தருணங்கள் தந்திருக்கிறான். நட்பு என்கிற எல்லையை மீறி காதலின் நெருக்கமான தருணங்களில் இருவரும் திளைத்திருக்கிறார்கள்.

அவன் மிக நல்லவன். அனாவசியமாக யார் மனதையும் புண்படுத்தாதவன். நியாயம் தவறாதவன். சின்ன முகபாவனை மாற்றத்தைக் கூட கவனிக்க முடிந்தவன், அதற்கான காரணத்தை ஆழமாக உணர முடிந்தவன். அடுத்தவர் உணர்வுகளில் இருந்து பார்க்க முடிந்தவன்.... அப்படிப்பட்டவன் அவளிடம் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் அவளுக்குப் புரியவே இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது.  காதல் வட்டத்தில் இருந்து வெளியே வந்து நட்பு வட்டத்திலேயே தங்கி விட அவன் முடிவெடுத்திருப்பது புரிந்தது. அவன் அலைவரிசையில் அவளும் அடிக்கடி இணைய முடிந்தவள். அதனால் அது அவளுக்குப் புரிந்தது. காதலையே தெரிவிக்காதவன் விலகுவதற்காகக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே....

ஆனால் அவளுக்கு வலித்தது. நிறையவே வலித்தது. பல நாட்கள் யாருக்கும் தெரியாமல் தனியாக அழுதிருக்கிறாள். அதை வெளிக்காட்டாமல் அவனுடன் அதற்குப் பின் சின்ன இடைவெளியுடனேயே பழக ஆரம்பித்தாள். ஏன் என்ற காரணத்தை ஏதாவது ஒரு தருணத்திலாவது அவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவள் ஏதாவது தவறு செய்திருந்து அவன் தெரிவித்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கக் கூட அவள் தயாராக இருந்தாள். ஆனால் முன்பு அப்படி நெருங்கி இருந்ததற்கான எந்த அடையாளமும் அவனிடம் பின் தென்படவில்லை.  பல சமயங்களில் காரணத்தை அவனிடம் வாய்விட்டே கேட்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்திருக்கிறாள். அவனாகச் சொல்லப் பிரியப்படாத ஒன்றை வலுக்கட்டாயமாகக் கேட்பதும் தனக்குக் கேவலம் என்றும் கூடவே தோன்றியதால் அதைத் தவிர்த்திருக்கிறாள்.....

செந்தில்நாதன் அதற்குப் பிறகும் நிறைய கேள்விகள் கேட்டார். அவளும் பதில் சொன்னாள். அவர் போன பிறகுத் தனதறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள். “ஒன்னும் சொல்லாட்டிக் கூடப் பரவாயில்லை.... எங்கயாவது தூரத்துல இருந்தே உன்னைப் பார்த்துட்டு வாழ்ந்துட்டுப் போயிடலாம்னு நினைச்சேன்.... இப்ப காணாமக் கூடப் போயிட்டியேடா.... டேய் பாவி நமக்குள்ள இருந்த பந்தத்துக்கு என்னடா அர்த்தம்.. கடைசி வரைக்கும் அதையும் சொல்லாமயே போயிட்டியேடா... எங்கடா போனே? உன் மனசுல என்னப் பத்தி என்னடா நினைச்சுட்டிருந்தே?...”


மாஸ்டர் என்றழைக்கப்பட்ட மனிதர் கையில் க்ரிஷுக்கு நெருக்கமானவர்கள் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏராளமாக இருந்தன. ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு புத்தகமே எழுதி விடும் அளவு தகவல்கள் இருந்தன. எதையும் விட்டு விடாமல் பொறுமையாக எல்லாவற்றையும் படித்தார்.  பல வருடங்கள் பழகியவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ புரிதல்கள் இப்போது  அவர்களைப் பற்றி அவருக்கு ஏற்பட்டிருந்தன. எல்லோரையும் ஆழமாகவே தெரிந்து கொண்ட பின் முடிவாக அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த நபர் மூலம் களத்தில் இறங்கத் தீர்மானித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, February 16, 2017

இருவேறு உலகம் - 17


க்ரிஷ் மாயமாக மறையும் தன்மை குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டவுடன் மணீஷிடம் தெரிந்த திடீர் மாற்றத்தை செந்தில்நாதன் திகைப்புடன் பார்த்தார். ‘என்ன ஆயிற்று இவனுக்கு?’

உடனடியாக மணீஷ் சமாளித்தான். “வாயுத் தொந்தரவு பல நேரங்கள்ல ஹார்ட் அட்டேக் மாதிரியே வந்து பயமுறுத்திடுது” என்று சொல்லிக் கொண்டே கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ”எனக்கு இந்தப் பிரச்னை அடிக்கடி வரும்..... என்ன கேட்டீங்க?...”

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டார். முழுமையாக சுதாரித்திருந்த அவன் வாய்விட்டுச் சிரித்தான்.... “காமிக்ஸ்ல வர்ற மேட்டரை எல்லாம் க்ரிஷ் ஆராய்ச்சிக்கு எடுத்துகிட்டிருப்பான்னு எப்படி சார் நினைக்கிறீங்க”

செந்தில்நாதன் அவன் மீது வைத்த பார்வையை விலக்காமல் சொன்னார். “க்ரிஷ் கடைசியா கூகுள்ல தேடிப்படிச்ச விஷயங்கள்ல இதுவும் ஒன்னு. அதான்.....”

மணீஷ் மனதில் மறுபடி கலவரம் தலையெடுத்தாலும் வேகமாக யோசித்ததில் க்ரிஷின் ஆராய்ச்சி அவர் சொல்வது போல இருக்க வழியில்லை என்று தோன்றியது. அதற்கான காரணங்களை அவரிடம் வெளிப்படையாகவே சொன்னான். “அவன் ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் அமாவாசைக்கும் இடையே ஏதோ சம்பந்தம் இருக்கு சார். அதனால தான் அவன் அங்கே போயிருக்கிறான்.  மாயமா மறைகிற ஆராய்ச்சிக்கும் அந்த மலைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”
அவருக்கு அவன் சொல்வது சரியாகவே தோன்றியது. தலையசைத்து விட்டு அடுத்த கேள்வியை அவனிடம் கேட்டார். “க்ரிஷ் யாரையாவது காதலிக்கிறாரா?”

சாதாரணமாக ஆமாம் அல்லது இல்லை என்று உடனே  சொல்லக்கூடிய பதிலைச் சொல்ல அவன் சில வினாடிகள் எடுத்துக் கொண்டு எச்சிலை விழுங்கி விட்டு “எனக்குத் தெரிஞ்சு இல்லை.....”என்றான்.

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டே அவர் கேட்டார். “அவருக்கு நீங்களும், ஹரிணியும் தான் நெருங்கிய நண்பர்கள்னு கேள்விப்பட்டேன்.... ஹரிணி அவருக்கு நண்பர் மட்டும் தானா இல்லை அவங்களுக்கிடையே காதலும் இருக்கா?”

அவன் முகம் இறுகியது. “எனக்குத் தெரிஞ்சு நட்பு மட்டும் தான்” என்று சற்று வேகமாகவே சொன்னான்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவன் ‘எனக்குத் தெரிஞ்சு’ என்று சொன்னதை அவர் மனதில் அடிக்கோடிட்டார். பிறகு அவனிடம் வேறு சில கேள்விகள் கேட்டு விட்டு அவர் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் “எனக்கு உங்கள் உதவி இனியும் தேவைப்படலாம். அப்படி தேவைப்பட்டால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்....” என்றார்.

’மறுபடியுமா?’ என்று மனதில் வெடித்தாலும் ”ஓ கே சார். ஆனா அதுக்கு முன்னாடியே க்ரிஷ் கிடைச்சுடுவான்னு நம்பறேன்...” என்று புன்னகையுடன் அவன் கூறினான்.

அவனுக்குப் பேசும் போது கூர்மையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆளைப் பிடிக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் வேறு.... அவர் போன பிறகு பஞ்சுத்தலையருக்குப் போன் செய்தான். “அந்த ஆளு இப்ப தான் போறார். எனக்கு சுத்தமா அந்த ஆள பிடிக்கல. கூர்மையா சந்தேகப்படற மாதிரியே பாக்கறார்”

பஞ்சுத்தலையர் அவனிடம் சொன்னார். “அப்படிப் பார்க்கறது போலீஸ்காரன் புத்தி. அதை பெரிசா எடுத்துக்காதே. நீ மட்டும் அமைச்சர் மகனா இல்லாம இருந்தா இந்த மரியாதையும் இருந்திருக்காது. உன் மேலயே முழுசந்தேகம் இருக்கற மாதிரி தான் கேள்விகளும், தோரணையும் இருந்திருக்கும். அதை விடு. அவன் என்னவெல்லாம் கேட்டான். நீ என்னவெல்லாம் சொன்னேன்னு சொல்லு”

அவன் எல்லாவற்றையும் சொன்னான். எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்னார். “உன் ஃப்ரண்ட் நெஜமாவே மாயமா மறையற ஆராய்ச்சில ஜெயிச்சு மாயமா மறஞ்சிருக்க மாட்டானே... அந்த மலை, அமாவாசை, அந்த மாயமா மறையற ஆராய்ச்சி மூணுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருந்து அது உனக்கும் எனக்கும் தெரியாம இருந்தா?”

“அட நீங்க வேற ஏன் சும்மா பீதியை கிளப்பறீங்க?”


வாரணாசியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்வதற்கு முன்பே அந்த மனிதர் பாம்பு கடித்து இறந்தவனுடைய முழுத்தகவல்களையும் பெற்று விட்டிருந்தார். இறந்தவன் வாடகைக் கொலையாளி என்றும் அவன் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கொலை செய்வதில் வல்லவன் என்றும் மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டது  என்று எல்லோரையும் நம்ப வைத்து விடுவான் என்றும் தகவல் கிடைத்தது. இது போல் பல கொலைகள் செய்திருக்கிறானாம்.... அந்தப் பாம்புக்கடியாலேயே அந்த வாடகைக் கொலையாளியும் செத்திருப்பது இயற்கையின் தீர்ப்பாகி விட்டது என்று எண்ணியவனாக அந்த மனிதர் மெலிதாய் புன்னகைத்தார்....

விமான நிலையத்தில் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் வெளியே வந்தார். வெளியே வந்தவர் தன் பார்வையைச் சுற்றிலும் ஒரேயொரு முறை சுழற்றினார். பெயரே இல்லாமல் ஒரு வெள்ளை அட்டையைத் தூக்கிப் பிடித்தபடி வெள்ளைச் சீருடையில் ஒரு ஆள் ஓரமாக நின்றிருந்ததைக் கவனித்து நேராக அவனருகே சென்றார்.  அந்த ஆள் அவர் அருகே சென்றதும் தலை குனிந்து வணங்கினார். அந்த மனிதன் லேசாகத் தலையசைத்தான். பின் இருவரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதி நோக்கி நடந்தார்கள். ஒரு வெள்ளைக் கார் அருகே வந்ததும் அந்த வெள்ளைச் சீருடை ஆள் நின்று கார் சாவியை அந்த மனிதரிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டு லேசாக அந்த மனிதன் தலையசைத்தார். அந்தச் சீருடை ஆள் போய் விட்டான். அந்த மனிதர் அந்த வெள்ளைக்காரில் ஏறி ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் பார்வை அந்த இடத்தின் சூழலை வேகமாக அலசியது. பின் காரை நிதானமாகக் கிளப்பினார்.

கார் பல சாலைகளைக் கடந்து பின் ஓ எம் ஆர் சாலையில் நிதானமாகச் செல்ல ஆரம்பித்தது. அவர் கண்கள் யாராவது பின் தொடர்கிறார்களா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டன. இல்லை..... சில மைல்கள் பயணத்திற்குப் பின் கார் ஒரு பெரிய பழைய பங்களாவை அடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கிய போது பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த, தாடி வளர்த்திருந்த இளைஞன்  இரு கைகளையும் கூப்பிக் கொண்டே அந்த மனிதரை வரவேற்றான்.

அவனைப் பார்த்து அந்த மனிதர் மெலிதாகப் புன்னகைத்தார். அவன் அவரைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றமர்ந்ததும் அந்த மனிதர் சொன்னார். “நான் இனி சில காலம் இங்கேயே தங்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்....”

பயபக்தியுடன் அவன் சொன்னான். “சந்தோஷம் மாஸ்டர். அதை நான் யூகிச்சு எல்லா ஏற்பாடும் செய்தாச்சு...”  பின் ஒரு அச்சிட்ட வெள்ளைத்தாளை அவரிடம் நீட்டினான். அதில் முப்பது பெயர்களும் அவர்கள் செல்போன் நம்பர்களும் இருந்தன. பெரிய பதவிகளிலும், அந்தஸ்திலும் இருந்த மனிதர்கள் அவர்கள். மேலோட்டமாய் அந்தத் தாளைப் பார்வையிட்ட அவர் அதை மடித்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். பின் கேட்டார். “அந்த வாடகைக் கொலையாளியை அனுப்பினது யார்னு தெரிஞ்சுதா?”

“கடைசியா அவன் அதிகம் பேசினது ஒருத்தர் கிட்ட தான். மந்திரி மாணிக்கத்தோட தாய் மாமன் அவர். பேர் சங்கரமணி. ஆனா எல்லாரும் கூப்பிடறது சகுனின்னு. ஆள் கேரக்டரும் அப்படி தான். வாடகைக் கொலையாளி வீட்டாளுகளுக்கு அவனோட மொபைல் போன் கிடைக்கல. ஆச்சரியம் என்னன்னா அந்தக் கொலையாளி செத்த பிறகும் அந்த மொபைல்ல இருந்து சகுனி செல்லுக்கு மூணு கால்ஸ் போனது தான்..... சகுனி அரண்டு போய் கால்ஸ ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கார். அந்தக் கால்ஸ் அவரோட ஏரியாவுல இருந்தே தான் போயிருக்குன்னு பதில் வந்திருக்கு. இப்ப வீட்ட சுத்தி செக்யூரிட்டி போட்டிருக்கார் மனுஷன்.... ”

மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த மனிதர் மிகவும் கவனமாக அந்தத் தகவலைக் கேட்டார். ஒரு பெரிய நிகழ்ச்சி ரகசியமாய் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் திடீர் என்று உபகதையாய் இடையே புகுந்து என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் திரும்பி வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்த போது வேடிக்கையாக இருந்தது.

”அவங்க எதுக்கு அந்தப் பையன் க்ரிஷ்ஷ கொல்ல முயற்சி பண்ணினாங்கன்னு தெரிஞ்சுதா?”

“இல்லை.... இத்தனைக்கும் ரெண்டு மந்திரி குடும்பங்களும் பல வருஷங்களா  நெருக்கமாத் தான் இருக்காங்க. மாணிக்கத்தோட பையன் மணீஷ் க்ரிஷோட நெருங்கின நண்பன்....”

மாஸ்டர் சொன்னார். “அரசியல்வாதிகள் நெருக்கம் தண்ணில பாசி மாதிரி. எத்தனை வருஷமா பழகினாலும் வேர் பிடிக்காது.....”

அவனும் சில காலமாகப் பல அரசியல்வாதிகள் கூடப்பழகி வருபவன். அவர் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “மந்திரி மாணிக்கம் சிங்கப்பூர் போயிட்டு இன்னைக்குத் தான் திரும்பி வர்றார்....”

“அந்த ஆள் எப்படி?”

“அமுக்கமான ஆள்”

“க்ரிஷோட அப்பா”

“அவர் நல்ல மனுஷன்...”

“அவங்களுக்கு க்ரிஷ் கிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்திருக்கா?”

“இல்லை.... சி.எம். இதை ரகசியமா விசாரிக்க செந்தில்நாதன்கிற போலீஸ் அதிகாரிய நியமிச்சிருக்கார். அவர் திறமையானவர்....”


இத்தனை பேரில் யார் மூலமாக களத்தில் இறங்குவது என்று மாஸ்டர் யோசிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, February 13, 2017