என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 11, 2013

பரம(ன்) ரகசியம் – 52


சாதாரண காலங்களில் சாமர்த்தியமாக இருக்கும் பலர் ஆபத்துக் காலங்களில் ஸ்தம்பித்துப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் விஸ்வநாதன், ஆனந்தவல்லி, மீனாட்சி மூவரும் பரமேஸ்வரனின் மாரடைப்பின் போது அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் சில நிமிடங்கள் செயலற்றுப் போய் இருந்தார்கள். ஆனால் ஈஸ்வர் மின்னல் வேகத்தில் இயங்கினான்.  அவனும் அதிர்ச்சியிலும், குற்ற உணர்விலும் பாதிக்கப்பட்டுத் தான் இருந்தான் என்றாலும் அது அவன் வேகமாக முடிவெடுக்கும் திறனையோ, அதனை செயல் படுத்தும் விதத்தையோ பாதித்து விடவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் தாத்தாவை அவன் டாக்டர்களிடம் சேர்த்திருந்தான்.

ஐ.சி.யூ வின் வெளியே அமர்ந்திருந்த ஈஸ்வர், விஸ்வநாதன், மீனாட்சி  மூவரின் மனநிலைகளும் வேறு வேறு விதமாக இருந்தன.

ஈஸ்வர் பரமேஸ்வரனுக்கு உறைக்க வேண்டும், அவர் ஏதாவது பேசினால் நாக்கைப் பிடுங்குகிற படி கேள்வி கேட்க வேண்டும் என்று தான் நினைத்து இருந்தான். அவரை அவ்வளவு தூரம் நேசித்த அவன் தந்தையை என்றோ இறந்து விட்டதாக அவர் சொன்னதை அவனால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் மகன் மரணத்தைத் தெரிவித்த மருமகளிடம் அவர் அப்படிச் சொல்ல முடிந்தது கல்நெஞ்சம் என்றே அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் சங்கர் கடைசி வரை தந்தையை கல் நெஞ்சனாக ஒப்புக் கொண்டதில்லை. அவனுடைய தந்தை சாந்தமானவரே ஒழிய இல்லாத ஒன்றை நம்பும் அளவு முட்டாள் அல்ல. அவன் தந்தை நினைத்ததும், அவர் தந்தை நடந்து கொண்டதும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக இருந்தன. ஒரு மனோ தத்துவ நிபுணரான அவனுக்கு இந்த முரண்பாடுகளைப் புரிந்து கொண்டால் ஒழிய மண்டை வெடித்து விடும் போல இருந்தது. அதனால் தான் பரமேஸ்வரனின் உள் மனதில் உள்ளதை அறிய நினைத்து அவரிடம் அப்படி நடந்து கொண்டான். ஆனால் அவருக்கு மாரடைப்பு வந்தது அவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் மேல் இருந்த அத்தனை பகைமையும் காணாமல் போனது.

ஒரு மனிதன் பெரிதாக நோய்வாய்ப் படும் தருணத்தில் ஆரம்பத்தில் உள்ள அவன் மன உறுதியோ, அல்லது தைரியக்குறைவோ அவன் சீக்கிரம் குணமடைவானா மாட்டானா என்பதை முக்கியமாய் நிர்ணயிப்பதாக இருக்கிறது என்று அவன் மிகவும் மதிக்கும் ஒரு வயதான மருத்துவர் அடிக்கடி சொல்வார். நோய் குணமாகி நலமடைய ஒருவனுடைய ஆழ்மனதில் ஒரு உறுதி இருக்குமானால் அவன் உடல் அந்தக் கட்டளைக்கு ஏற்ப குணமாக வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்யும் என்பார்.

எனவே பரமேஸ்வரனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகையில் அவருக்கு நினைவு கொஞ்சமாவது இருக்கிறதோ இல்லையோ மீனாட்சியிடம் சத்தமாக அவன் சொல்லிக் கொண்டு வந்தான். “பயப்படாதீங்க அத்தை. தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. குணமாயிடுவார்.” வழியில் அரைகுறையாய் அவர் கண்களைத் திறந்து பார்த்த போது “நீங்கள் குணமாயிடுவீங்க தாத்தா. நீங்கள் குணமாகணும்..... உங்களால தாக்குப் பிடிக்க முடியும்” என்று சொன்னான்.

பின் குரல் உடைந்தவனாக ஈஸ்வர் அவரிடம் சொன்னான். “நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா. ப்ளீஸ் எனக்காக குணமாயிடுங்க தாத்தா”

கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஈஸ்வர் கண்களும் ஈரமாய் இருந்தாலும் அத்தையிடம், அவருக்குத் தெரிகிற மாதிரி அழ வேண்டாம் என்று சைகையால் தெரிவித்தான். பரமேஸ்வரன் காதில் அவன் சொன்னது விழுந்த்தா இல்லையா என்று தெரியவில்லை. அவர் கண்கள் மறுபடி மூடிக் கொண்டன. ஆஸ்பத்திரியில் தாத்தாவைச் சேர்த்த பின் அவர் கண்டிப்பாக நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் மனமுருக பிரார்த்தனை செய்தான். அவருக்கு ஏதாவது ஆனால் மீனாட்சியையும், ஆனந்தவல்லியையும் நேருக்கு நேர் பார்க்க அவனால் முடியாது என்று தோன்றியது. இப்போதும் ஆனந்தவல்லியின் வெளிறிய முகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் தான் அவள் மூத்த மகனை இழந்திருக்கிறாள், இப்போது இளைய மகனுக்கு ஏதாவது ஆனால் அவள் அவனை மன்னிக்க மாட்டாள் என்று தோன்றியது. மீனாட்சியும் அவன் தந்தையைப் போலவே பரமேஸ்வரன் மீது பாசம் வைத்திருப்பவள். அவளும் அவனை வாய் விட்டு எதுவும் சொல்லா விட்டாலும் கூட அவள் துக்கமும் சாதாரணமாக இருக்காது....

மீனாட்சி சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். அவள் தாயைப் பார்த்ததில்லை. தாயாய், தந்தையாய், நண்பனாய், எல்லாமாய் ஆரம்பத்தில் இருந்து அவளுக்கு தந்தை தான் இருந்தார். அவள் வேண்டும் என்று  எதையாவது நினைத்து முடிக்கும் போது அவளிடம் அவர் கொண்டு வந்து சேர்த்திருந்தார். அவளுடைய அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டு போன பின்னோ அவர் உலகம் முழுவதுமாக அவளாகத் தான் இருந்தது. அதனால் அவள் துக்கம் இயல்பாகவே அதிகமாக இருந்தது.

ஈஸ்வர் பேசிய பேச்சு அவரை அப்படி பாதித்தது அவளுக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் தந்தது என்றால், ஈஸ்வர் ’நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா’ என்று சொன்னது அவள் இதயத்தை உருக்கியே விட்டது. ‘கடவுளே எனக்காக இல்லாட்டியும் ஈஸ்வருக்காகவாவது எங்கப்பாவைக் காப்பாற்றி விடு. பாவம் குழந்தை தன் மேல தான் தப்புன்னு வாழ்நாள் பூரா நினைக்கிற மாதிரி வச்சிடாதே” என்று அவள் மனதில் பிரார்த்தித்துக் கொண்டாள்.
அவள் மகன் மகேஷ் இல்லாததும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. “மகேஷ் எங்கே தான் போயிட்டான்?” என்று கணவனைக் கேட்டாள்.

”தெரியலை. ரெண்டு தடவை ரிங் செய்தேன். ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான் வருது. இரு.. இன்னொரு தடவை செஞ்சு பார்க்கிறேன்” என்ற விஸ்வநாதன் அந்த வராந்தாவின் மறுகோடிக்குச் சென்று மறுபடி மகனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

மகேஷ் போய் இரண்டு நாளாகிறது. அவன் அவ்வப்போது ஓரிரு நாட்கள் தன் நண்பர்களுடன் தங்கிக் கொள்வது சகஜம். இந்த முக்கியமான தருணத்தில் அவன் இல்லாமல் இருப்பது அவருக்குப் பெரிய குறையாகத் தெரிந்தது. இந்த வீட்டில் ஈஸ்வர் கையோங்கிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி மகேஷ் காணாமல் போவது ஈஸ்வருக்கு அனுகூலமாகப் போகும் என்று அவர் நம்பினார். கிழவர் கண் முன்னால் மகேஷ் அனுசரணையாக இருப்பது முக்கியம் என்று அவர் நினைத்தார். ஈஸ்வர் தேளாக தாத்தாவைக் கொட்டுகையில் மகேஷ் அவர் மீது அன்பு மழை பொழிந்தால் சொத்தை தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடும் என்று விஸ்வநாதன் நினைத்தார்.

மகேஷ் சில சமயங்களில் இதெல்லாம் புரிவது போல நடந்து கொண்டாலும் சில சமயங்களில் பொறுப்பில்லாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. இதை எல்லாம் அவரால் மனைவியிடம் கூடச் சொல்ல முடியவில்லை....

இந்த முறை போன் மணி அடித்தது.   மகேஷ் பேசினான். “ஹலோ”

“எங்கேடா இருக்கே?”

“ஏம்ப்பா? என்ன விஷயம்”

நடந்ததைத் தெரிவித்த விஸ்வநாதன் “சீக்கிரம் வாடா. உன் தாத்தா பிழைச்சுட்டா ரொம்ப சுலபமாய் ஈஸ்வர் உன் இடத்தைப் பிடிச்சுக்குவான். இப்பவே அவன் அவரைத் தாத்தான்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார்னு எல்லாம் சொல்லியாச்சு. இதெல்லாம் நடக்கறப்ப நீ எங்கேயோ இருக்கே. இப்படியே போச்சுன்னா நீ விலகியே இருக்க வேண்டியது தான்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.

“நான் உடனே வர்றேன்ப்பா” மகேஷ் பரபரப்போடு சொன்னான்.

திரும்ப மனைவி அருகே வந்தமர்ந்த விஸ்வநாதன் சொன்னார். “மகேஷ் கிடைச்சான். விஷயத்தை சொன்னேன். கேட்டு துடிச்சுப் போயிட்டான். உடனே வர்றதா சொன்னான்.”

மீனாட்சி குரலடைக்கச் சொன்னாள். “அவனுக்கு தாத்தான்னா உயிரு”

டாக்டர் அவர்களிடம் வந்தார். பரமேஸ்வரன் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன என்றும், அவருடைய சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இரண்டும் சரியான அளவிற்குக் கொண்டு வந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொன்னார். ஆனால் அப்போதும் அவர் பரமேஸ்வரன் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது என்பது போலச் சொன்னார். பரமேஸ்வரன் வயது, மற்ற விதங்களில் உடல்நிலையில் இருக்கும் கோளாறுகள் எல்லாம் சேர்ந்து உத்திரவாதம் தர முடியாத நிலையை உருவாக்கி இருப்பதாய் சொன்னார். ஈஸ்வர் ’என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்ய ஆரம்பியுங்கள்’ என்று அவரிடம் சொன்னான்.

எல்லாவற்றையும் அவனே தீர்மானித்துப் பேசுவது விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை. மகேஷ் இருந்திருந்தால் இங்கே அவன் முக்கியத்துவம் பெற்றிருக்க முடியும் என்று தோன்றியது.

சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இரண்டையும் சரியான அளவுக்குக் கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்ய எப்படியும் நாளை ஆகிவிடும் என்பதால் ஈஸ்வர் மீனாட்சியை வீட்டுக்குப் போகச் சொன்னான். “பாட்டியும் வீட்டுல தனியாக இருக்காங்க அத்தை. நீங்க போயிட்டு நாளைக்கே வாங்க....”

டாக்டர் சொன்னதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்த மீனாட்சி அரை மனதோடு எழுந்தாள். பாட்டியின் தனிமை இப்படிப்பட்ட நேரத்தில் மிக வேதனையானது என்பதை அவளால் உணர முடிந்தது. ஈஸ்வர் சொன்னவுடன் மனைவி கிளம்பியதையும் விஸ்வநாதனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘இவனிடம் இயல்பாகவே தலைமைப்பண்பு உள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் தானே கையில் எடுத்துக் கொள்கிறான். இவனை சங்கர் போல அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று அவருக்குத் தோன்றியது.

ஈஸ்வர் சொன்னான். “மாமா நீங்களும் போகிறதானால் போகலாம். எல்லாரும் இங்கே இருந்து எதுவும் செய்யப் போகிறதில்லை”

“நான் மகேஷ் வருகிற வரைக்கும் இருக்கேன்” என்று விஸ்வநாதன் உறுதியாகச் சொன்னார்.

மீனாட்சி வீட்டுக்கு வந்த போது ஆனந்தவல்லி ஹாலில் வாசலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். பேத்தியைப் பார்த்தவுடன் கேட்டாள். “உங்கப்பா எப்படிடி இருக்கான்? டாக்டர் என்ன சொல்றார்?”

டாக்டர் சொன்னதை வருத்தத்தோடு பாட்டியிடம் மீனாட்சி தெரிவித்தாள். சொல்லச் சொல்ல மீனாட்சி அழுதாள். ஆனந்தவல்லி உள்ளே மிக தளர்ந்து போய் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பேத்திக்கு தைரியம் சொன்னாள். “எல்லாம் சரியாயிடும்டி. கவலைப்படாதே”

போகும் போது ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் குரலுடைந்து சொன்னதையும் மீனாட்சி பாட்டியிடம் சொன்னாள். கேட்ட ஆனந்தவல்லி முகம் மென்மையாகியது. அவள் மெல்ல தனதறைக்குக் கிளம்பினாள். அவள் நடை மிகவும் தளர்ந்திருந்ததைக் கவனித்த மீனாட்சி பாட்டியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்தாள்.

அறைக்குள் வந்தவுடன் ஆனந்தவல்லி பேத்தியிடம் சொன்னாள். “நீ போய் மத்த வேலையைக் கவனி மீனாட்சி”

மீனாட்சி பாட்டியைத் தனியாக விட்டுப் போக தயக்கம் காட்டினாள்.

தன் நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஆனந்தவல்லி சொன்னாள். “எனக்கு தனியா இருக்கணும் போல இருக்கு...”

அதற்கு மேல் அங்கே தங்கினால் பாட்டி எரிந்து விழுவாள் என்று புரிந்து கொண்ட மீனாட்சி கிளம்பினாள்.

ஆனந்தவல்லி பேத்தி போனவுடன் தன் மூத்த மகனின் புகைப்படத்தையே சிறிது நேரம் உற்று பார்த்தாள். அது பசுபதியின் கடைசிப் புகைப்படம். இரண்டு நாளைக்கு முன்பு தான் பிரேம் போட்டு பரமேஸ்வரன் கொண்டு வந்து தாயிடம் தந்திருந்தார்.

ஆனந்தவல்லி மூத்த மகனிடம் உணர்ச்சிப் பிரவாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

“எங்கேடா இருக்கே? கைலாசத்துலயா? இல்லை வேற எதாவது உலகத்திலேயா? இங்கே என் நிலைமையை நீ பார்த்தியா? வெளியே பட்டுப் புடவை, நிறைய நகைகள்னு நல்லாத் தான் தெரியறேன். உள்ளே ரணகளமாய் இருக்கு. எல்லாம் தெரிஞ்ச ஞானின்னு உங்கப்பா பெருமையா உன்னைப் பத்திச் சொல்வாரு. உனக்கு என்னோட துக்கம் தெரியுதாடா?”

“தெரிஞ்சா தான் உனக்கென்ன? நீ உயிரோடு இருக்கறப்பவே பெத்தவளைக் கண்டுகிட்டது இல்லை. உலகத்தை விட்டுப் போனதுக்கப்பறமா நீ கண்டுக்கப் போற? என்னை விட்டுத் தள்ளு. உன் தம்பி உயிரைக் காப்பத்தறது கஷ்டம் தான்னு டாக்டர் சொல்றாராம். அவன் உன் மேல் உயிரையே வச்சிருந்தாண்டா. அப்படிப்பட்ட அவனுக்கு நீ தான் எமனாய் வந்து வாய்ச்சிருக்கேன்னு நான் சொல்றேண்டா.”

“உன்னோட பாழா போன சிவலிங்கத்தை நீ ஏண்டா அவன் பேரன் கிட்ட சேர்த்திடச் சொன்னே. அவனே மகனை மறந்துட்டு அப்படியொரு பேரன் இருக்கறதையும் மறந்துட்டு இருந்தான். நீ சொன்னாய்னு சொல்லி தாண்டா அந்தப் பேரன் அவன் முகத்தில் அடிக்கற மாதிரி பேசினாலும் திரும்பவும் பேசினான். அவன் தன் வாழ்க்கைல முதல் தடவையா கவுரவம் பார்க்காமல் இவ்வளவு தூரம் இறங்கிப் போனது உனக்காகத் தாண்டா! நான் கூட வேண்டாம்னு சொன்னேன். அண்ணன் என் கிட்ட இது வரைக்கும் எதுவுமே கேட்டதில்லைம்மா. முதல் தடவையாய் கேட்டிருக்கான். அதை எப்படிமா நான் செய்யாமல் விடறதுன்னு சொன்னான்டா. நீ சொன்ன அவனோட பேரன் இங்கே வந்ததுக்கப்பறம் நடந்துகிட்டதையும் பேசினதையும் தாங்காமல் தான் அவனுக்கு மாரடைப்பு வந்துருக்குடா. கூப்பிடாம அந்தப் பையனும் வந்திருக்க மாட்டான். வராமல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்தும் இருக்காது. இப்படி இத்தனைக்கும் மூல காரணம் நீ தானேடா”

”நீ அவனுக்காக இது வரைக்கும் என்னடா பெரிசா செய்திருக்கே. சொத்தைக் கொடுத்தேன்னு சொல்லாதேடா. என்னடா பெரிய சொத்து. உனக்கு வேண்டாத ஒன்னை, பெரிசுன்னு நீ நினைக்காத ஒன்னை, அவனுக்குத் தந்ததுல பெருமை என்னடா இருக்கு? அந்த சிவலிங்கத்தை தூக்கிக் கொடுத்திருப்பியாடா நீ?”

“நீ அவனுக்காக இது வரைக்கும் என்னடா செஞ்சிருக்கே? அவனுக்கு கல்யாணம் ஆனப்ப அப்பா ஸ்தானத்துல நின்னு வாழ்த்தியாவது இருக்கியாடா? கல்யாணம் முடிஞ்ச கையோட அவனா மனைவியோட, நீ இருக்கிற இடத்துக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவனுக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்துச்சு. ஒரு தடவை நீ வந்து பார்த்திருப்பியாடா? அவனாய் குழந்தைகளை உன் கிட்ட கொண்டு வந்து காண்பிச்சான். அவன் பொண்டாட்டி செத்துப் போனா. அதுக்கு நீ வரலை. அவன் பொண்ணுக்குக் கல்யாணம் செய்தான். அதுக்கு நீ வரலை. இப்படி அவன் சம்பந்தப்பட்ட எதுக்குமே நீ வரலை. ஆனால் கூட அண்ணனைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது அவன் வராமல் இருந்ததில்லையேடா? உன்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த நான் கூட உன் அலட்சியத்தை சகிச்சுக்க முடியாம உன்னைப் பார்க்க வர மாட்டேன்னு வீம்பா இருந்தேன். என்னை மாதிரியே அவனுக்கும் தன்மானம் கவுரவம் நிறைய இருந்தாலும் அதை உன் ஒருத்தன் கிட்ட மட்டும் காட்டாமல் அண்ணா அண்ணான்னு உன்னைப் பார்க்க வந்துகிட்டிருந்தானேடா அவன்.”

“உன்னைக் கொல்றப்ப கூட உன் பத்மாசனம் கலையலை. உடம்பில் அவ்வளவு வலு இருக்கிற நீ நினைச்சிருந்தா அந்தக் கொலைகாரனை சுலபமா சமாளிச்சிருக்கலான்னு அந்தப் போலீஸ்காரன் சொன்னாண்டா. அந்த ஆள் நீ செய்துகிட்டது கிட்டத்தட்ட தற்கொலை மாதிரின்னு சொல்லாமல் சொன்னான்டா. இதை எல்லாம் செய்யறப்ப பெத்தவ ஒருத்தி இன்னும் உசிரோட இருக்கா, அவளால இதெல்லாம் தாங்க முடியுமான்னு நீ யோசிச்சியாடா?  நீ போனதுக்கப்புறம் சிவலிங்கம் ஈஸ்வர் கிட்ட சேரணும் சொன்னியே, சிவலிங்கத்துக்கு மேல் இருந்த அக்கறை உனக்கு உன் பெத்தவ மேல இல்லையேடா? நான் உனக்கு என்னடா அப்படி துரோகம் செய்துட்டேன். சாகறதுக்கு முன்னாடி ஒரு தடவை கூப்பிட்டு பேசிட்டா பெத்த கடன் முடிஞ்சுடும்னு நினைச்சிட்டியாடா? முடியாதுடா”

”இத்தனையும் சகிச்சுகிட்டேன். எனக்கு கொள்ளி போட இன்னொரு மகன் இருக்கான்கிற ஒரு ஆறுதல் எனக்கு இருந்துச்சு. இப்ப அதுக்கும் ஆபத்து வந்திருக்குடா? நான் இனி பிழைச்சு என்ன பிரயோஜனம் சொல்லு.”

ஆனந்தவல்லி வாய் விட்டு அழுதாள். தாங்க முடியாத துக்கத்தை சிறிது நேரம் அழுது ஓரளவு இறக்கிக் கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மூத்த மகன் புகைப்படத்தைப் பார்த்துப் பேசின போது அவள் குரலில் கடுமையும், ஆணித்தரமான உறுதியும் இருந்தது.

“இதையெல்லாம் உன் கிட்ட இப்ப ஏன் சொல்றேன்னு பார்க்கிறியா? நீ எனக்கு இது வரைக்கும் எதுவும் செய்ததில்லை, உன் தம்பிக்கு சுத்தமாவே எதுவும் செய்ததில்லைன்னு சொல்றேன். மனுசன் முதல்ல மனுசனா இருக்கணும்டா. பக்தி, சக்தி, கடவுள், மண்ணாங்கட்டி அதெல்லாம் அப்புறம். நீ கும்பிட்ட சிவனே குடும்பஸ்தன் தானடா. அப்படி இருக்கறப்ப நீ உன் குடும்பத்தை அலட்சியப்படுத்தினது என்னடா நியாயம். எனக்கில்லாட்டியும் உன் தம்பிக்கு நீ நிறையவே கடன்பட்டிருக்கேடா. அவன் உயிரைக் காப்பாத்தற பொறுப்பு உனக்கு இருக்குடா. நான் மத்தவங்களைப் போல கடவுள் கிட்ட எதுவும் வேண்டிக்க மாட்டேன். கடவுளுக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனா உன் கிட்ட இருக்கு. பெத்தவ கேட்கறேன். உன் தம்பியை நீ பிழைக்க வைக்கணும். வாழ்நாள் பூரா நீ உன் சிவலிங்கம்னு சுயநலமாவே இருந்துட்டே. நீ இப்ப எந்த உலகத்துலே இருந்தாலும் சரி உன் குடும்பத்துக்காக இந்த ஒரு நல்ல காரியத்தையாவது செய்யுடா. நான் இது வரைக்கும் யார் கிட்டயும் எதுக்கும் கை ஏந்தினதில்லைடா. இப்ப உன் கிட்ட பிச்சை கேட்கறேண்டா. அவனைக் காப்பாத்துடா...!” சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்து போனது.

பசுபதி சாந்தம் மாறாமல் தாயைப் பார்த்துக் கொண்டிருக்க ஆனந்தவல்லி விடாமல் பேசிய களைப்பில் கண்களை மூடிக் கொண்டாள். இறந்து போன மகனிடம் பேசியதெல்லாம் பைத்தியக்காரத்தனமா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுளிடம் இல்லாத நம்பிக்கை அவளுக்கு ஏனோ அவள் மூத்த மகனிடம் இருந்தது. அவள் கணவர் அவளுடைய மூத்த மகனை சக்தி வாய்ந்த மகான் என்று சொல்லி இருந்தார். மகான்கள் சக்தி அவர்கள் மரணத்துடன் முடிந்து விடுவதில்லை...!

(தொடரும்)

-          என்.கணேசன்

  

Monday, July 8, 2013

தியானம் ஏன் அவசியம்?



அறிவார்ந்த ஆன்மிகம்-10


தற்கால மனிதன் சௌகரியங்களில் நிறையவே மேம்பட்டிருக்கிறான். விஞ்ஞான முன்னேற்றம் அவனுக்கு எத்தனையோ விஷயங்களைச் சுலபமாக்கித் தந்திருக்கிறது.  ஆனால் அவன் வாழ்க்கையோ அவன் முன்னோர்களின் வாழ்க்கையை விட அதிக சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. ஏனென்றால் முன்னோர்களை விட தேவைகள் அவனுக்கு அதிகமாக இருக்கின்றன. அதனால் அவன் அதிக விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கின்றது. அதிகம் ஓடி உழைக்க வேண்டி இருக்கிறது. இந்த ஓட்டத்தில் அவன் இழக்கும் முதல் முக்கிய விஷயம் நிம்மதி.

நிறுத்த முடியாத ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல அவன் கஷ்டப்படுகிறான். சிறிது தளர்ந்தாலும் பின்னுக்குத் தள்ளப்படுவோம், பரிகசிக்கப்படுவோம், தோற்றுப் போவோம் என்றெல்லாம் சிந்தனைகள் எப்போதும் அவன் மனதில் இருக்கின்றன.  நிம்மதி கிடைக்கும் என்று எதை எதையோ தேடி அலைகிறான். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல அலைகிறான். தேடலில் மகிழ்ச்சியே கிடைக்கவில்லை என்றால் அது பொய்யாகி விடும். மகிழ்ச்சி கிடைக்கிறது தான். ஆனால் எந்த மகிழ்ச்சியும் அற்ப சமயம் தான் நீடிக்கிறது. அதிகம் இருப்பதோ அமைதியின்மை தான்.

இந்தப் பரிதாப நிலைக்கு அடிப்படைக் காரணம் அவன் மனம் தானே ஒழிய அவனுடைய சூழ்நிலைகள் அல்ல. ஏனென்றால் அவன் அந்த சூழ்நிலைகளைத் தேடிக் கொண்டதும்,  வந்து சிக்கிக் கொண்டதும் அந்த மனத்தால் தான். பிரச்சினை எங்கோ தீர்வையும் அங்கே தானே செய்ய வேண்டும்? அதனால் தீர்வையும் அவன் மனதிலேயே தான் தேட வேண்டி இருக்கிறது.  அந்தத் தீர்வு தியானம் தான் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

ஞானிகள் சொல்வதை நம்புவதில் தற்கால மனிதனுக்கு நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அவன் விஞ்ஞான காலத்தவன். ஆராய்ச்சிகளில் ஆராய்ந்து ஆதாரபூர்வமாகத் தெரிவிப்பதை நம்புகிற அளவுக்கு அவனுக்கு மற்ற கருத்துகளை நம்ப முடிவதில்லை என்பதால் அவனுக்கு தியானம் குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள், குறிப்பாக அவன் பிரமிக்கிற மேலை நாட்டு அறிஞர்கள், ஆராச்சி மூலம் சொல்லும் ஆதாரபூர்வச் செய்திகளைத் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

மேலை நாடுகளில் தியானம் ஆரம்பத்தில் ஆன்மிகப் பயிற்சியாகவே கருதப்பட்டது. ஆனால் தியானம் செய்பவர்கள் மன அமைதி பெறுவது மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் கூட சிறந்த பலன்கள் அடைகிறார்கள் என்ற கருத்து வேகமாகப் பரவ ஆரம்பிக்கவே அறிவியல் அறிஞர்கள் தியானத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முற்பட்டனர்.  பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன என்ற போதும் சமீபத்திய ஆராய்ச்சிகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன் மசாச்சூட் மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் கபாட் ஜின்ன் (Jon Kabat-Zinn, Ph.D. University of Massachusetts Medical School) என்பவர், தியானம் பயிலுவதற்கு முன், தியானம் பயின்ற பின் நிலைகள் குறித்து ஆராய மன உளைச்சலால் அவதிப்படும் சில தொழிலாளர்களை எடுத்துக் கொண்டார். தியானம் பயிலும் முன் உள்ள அவர்களுடைய மூளை அலைகளையும், சுமார் எட்டு வாரங்கள் தியானப் பயிற்சி கழிந்து ஏற்படும் மூளை அலைகளையும், மேலும் நான்கு மாதங்கள் அவர்கள் தியானம் தொடர்ந்து செய்த பிறகு ஏற்படும் மூளை அலைகளையும் ஆராய்ந்தார்.   தியானம் அவர்களை அமைதிப்படுத்துகிறது என்பதையும் அவர்கள் முன்பை விட அதிக மகிழ்ச்சி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் தன் ஆராய்ச்சியில் அவர் கண்டு பிடித்து இருக்கிறார்.

வேக் ஃபாரெஸ்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஃபாடெல் செய்டான் (Fadel Zeidan, a researcher at Wake Forest University School of Medicine) என்பவர் 2010ல் செய்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன. அவற்றில் அவர் தியானம் மனதை எளிதாக மாற்ற வல்லது என்பதையும், தொடர்ந்து தியானம் செய்பவர்கள் மன அமைதி அதிகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தெளிவாக இருத்தல், புரிந்து கொள்ளல், கவனமாகவும் விழிப்புணர்வோடு இருத்தல் போன்றவற்றிலும் தியானம் செய்யாதவர்களைக் காட்டிலும் முன்னணி வகித்ததாகச் சொல்கிறார். குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் தரப்பட்ட போது தியானம் செய்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாகவும், சிறப்பாகவும் அலட்டிக் கொள்ளாமலும் செய்து முடித்ததைப் பதிவிட்டிருக்கிறார்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிஃபோர்டு சாரோன் (Clifford Saron) என்ற நரம்பியல் விஞ்ஞானி பல மில்லியன் டாலர்கள் செலவில் ஷாமந்தா ப்ராஜெக்ட் (The Shamatha Project) என்ற மிகப் பெரிய ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மனம், உடல், நடவடிக்கைகள் இவற்றில் தியானம் ஏற்படுத்த முடிந்த மாற்றங்களை விரிவாக ஆராயும்  ஆராய்ச்சியாக இருக்கிறது, இந்த ஆராய்ச்சி இன்னும் முழுமடையவில்லை என்றாலும் ஆரம்ப முடிவுகள் தியானம் கவனக் குவிப்பைக் கூர்மையாக்குகிறது என்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும் மற்றவர்களைப் புரிந்து கொள்வதிலும், சமூக அக்கறையுடன் நடந்து கொள்வதிலும் வல்லவர்களாக மாற்றுகிறது என்றும் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் முடிவடையும் போது மேலும் கூடுதல் விவரங்கள் நமக்குத் தெரியவரும்.

தியானங்களில் பல வகைகள் உண்டு.  அவற்றில்  பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர் போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது காலத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள். புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.

ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா, திச் நாட் ஹான் (Thich Nhat Hanh), வேதாத்திரி மகரிஷி போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. அவரவர் தன்மைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற தியான முறையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

அப்படித் தேர்ந்தெடுத்த பின் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த தியானம் செய்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். குறைந்த பட்சம் இருபது நிமிடங்களாகவாவது அந்த தியானத்தைச் செய்ய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை அல்லது இரவு நேரங்கள் தியானத்திற்கு உகந்தது. ஏதாவது ஓரிரு நாட்கள் தியானம் செய்வது, பின் பல காலம் தியானத்தையே மறந்திருப்பது, மறுபடியும் ஓரிரு நாட்கள் செய்வது என்பது தான் அநேகம் பேரின் அனுபவமாக இருக்கிறது. இது எந்த விதப் பெரிய பலனையும் தராது.

தொடர்ந்து தியானம் செய்பவர்களுடைய மன அமைதி அதிகரிக்கும்,  தேவையற்ற தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும், கவனத்தையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதெல்லாம் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நன்மைகள் என்பதால் அனைவரும் தியானம் செய்வது அவசியம்.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 14-05-2013

Thursday, July 4, 2013

பரம(ன்) ரகசியம் – 51



ஜான்சன் குருஜியைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி ஈஸ்வரைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பற்றியது தான். “குருஜி ஈஸ்வரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

”அழகாயிருக்கிறான். அறிவாளியாயிருக்கிறான். அடக்கமாயிருக்கிறான்....”. குருஜி புன்னகையுடன் சொன்னார்.

“அவனைச் சுற்றியும் ஏதாவது சக்தி வட்டம் பார்த்தீர்களா குருஜி”

”என்னால் பார்க்க முடியவில்லை. மூன்று நாள் தியானத்தில் சேர்த்திருந்த என்னுடைய சென்சிடிவிட்டி அவனை சந்திக்கும் போது போய் விட்டிருந்தது....”

ஈஸ்வர் வந்ததில் இருந்து போகிற வரை நடந்ததை எல்லாம் அறிந்து கொள்ள ஜான்சன் துடித்தார். குருஜி ஒன்று விடாமல் சொன்னார். சொல்லி விட்டுக் கேட்டார். ”நீ என்ன நினைக்கிறாய் ஜான்சன்”

ஜான்சன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னார். “வேதபாடசாலை மண்ணைத் தொட்டுக் கும்பிடுகிற அளவுக்கு அவன் ஆன்மிகப் பேர்வழி அல்ல. வேறு எதாவது காரணம் இருக்கும் குருஜி. நானே உங்களைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தரை நீங்கள் இந்த சிவலிங்க சமாச்சாரத்திற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா குருஜி”

குருஜி கண்ணிமைக்காமல் சொன்னார். “என் நண்பன் ஒருவன் அவரிடம் சில மாதம் சிஷ்யனாய் இருந்திருக்கிறான்”

“நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா குருஜி?”

“இல்லை. அவன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவருடைய பெயர் என்ன என்று கூட யாருக்கும் தெரியாது என்று அவன் சொல்லி இருக்கிறான். அவர் கண்கள் ஜொலிப்பதை வைத்து இமயமலைப் பகுதியில் அவருக்கு அக்னி நேத்திர சித்தர் என்று வைத்திருக்கிறார்களாம்....” குருஜிக்கு தன் குருவாக அந்த சித்தர் இருந்திருக்கிறார் என்பதை ஜான்சனிடம் தெரிவிக்க அவசியம் இல்லை என்று தோன்றியது.

ஜான்சனுக்கு குருஜி மேல் சின்னதாய் கோபம் வந்தது. அந்த சித்தர் தன் நண்பனின் குருவாக இருந்தவர் என்பதைக் கூட இப்போது தான் குருஜி சொல்கிறார். அதுவும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்ட பிறகு. ஈஸ்வர் அதுபற்றிக் கேட்டான், அதற்கு இன்ன மாதிரி பதில் சொன்னேன் என்று சொல்லும் போது கூட அவர் சொல்லவில்லை. தன் மனத்தாங்கலை மறைத்துக் கொண்டு ஜான்சன் பரபரப்புடன் சொன்னார். “அப்படியானால் உங்கள் நண்பரைக் கேட்டால் அவரைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ளலாமே”

”பெயரைக் கூட யாரிடமும் சொல்லாதவர் அவரைப் பற்றிய விவரங்கள் தன் சீடர்களுக்குத் தெரிய விடுவாரா என்ன?”

ஜான்சன் பரபரப்பு அப்படியே அமுங்கியது. ”அந்த சிவலிங்கம் பற்றிய வேறு ஏதாவது விசேஷ விவரம் உங்கள் நண்பருக்குத் தெரிந்திருக்கலாம் இல்லையா?”

”கேட்டேன். அவனுக்கும் தெரியவில்லை....”

ஜான்சன் யோசனையோடு சொன்னார். “சிவலிங்கம் சக்தியை நாம் பரிசோதித்து தெரிந்து கொள்ளத் தான் போகிறோம். ஆனால் அந்த சித்தர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர், நம் பரிசோதனைகளுக்கு அவர் இடைஞ்சல் செய்ய முடியுமா என்பதெல்லாம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.”

குருஜி சொன்னார். “நான் நேற்று இமயமலை போனதே அந்த நண்பனைப் பார்க்கத் தான். அந்த சித்தர் ரொம்பவே சக்தி வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் நம் பரிசோதனைகயைத் தடுக்கவோ, அதற்கு இடைஞ்சல் செய்யவோ வாய்ப்பில்லை. அதை என் நண்பன் பார்த்துக் கொள்வான். அந்த சிவலிங்கத்தை அங்கே வைப்பதற்கு முன் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நாலா பக்கத்தில் இருந்தும் சிறிது சிறிது மண்ணை எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறான். 21 நாட்களுக்கு அந்த சித்தரோ அவர் சக்தியோ அந்த எல்லையைத் தாண்டி உள்ளே போய் விடாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்...”

ஜான்சன் சந்தேகத்தோடு கேட்டார். “உங்கள் நண்பருக்கு அந்த அளவு சக்தி இருக்கிறதா?”

”இன்றைக்கு இந்தியாவில் மாந்திரிகத்தில் அவனை மிஞ்சிய ஆள் இல்லை ஜான்சன்”

”உங்கள் நண்பர் பெயர் உதயன் சுவாமியா?” ஜான்சன் நம்பிக்கை துளிரக் கேட்டார். அந்தப் பெயரை அவர் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறார். மாந்திரிகத்தில் மிகச் சிறந்தவர் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். அவர் அந்த சுவாமி பற்றி வித விதமான கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறார்.

“ஆமாம். என் நண்பன் பெயர் உதயன் தான் ...” குருஜிக்குத் தன் நண்பனைப் பற்றிச் சொல்ல பெருமையாக இருந்தது.

ஜான்சன் பெரும் நிம்மதியை உணர்ந்தார். அந்த சித்தர் ஈஸ்வர் மூலமாகவோ, கணபதி மூலமாகவோ தன் சக்தியைப் புதிய இடத்தில் பிரயோகிக்க முடியாது. ஆராய்ச்சிக்கு 21 நாட்கள் தாராளமாகப் போதும்.

ஜான்சன் குருஜியைக் கேட்டார். “அப்படியானால் கணபதியையும் நாம் இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை எதுவும் இல்லையே? எப்படியும் அந்த சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு அங்கே போய் சேரும் வரை அவன் உதவி நமக்கு கண்டிப்பாக வேண்டும்...”

குருஜி சொன்னார். “அவனை நாம் தாராளமாய் இந்த ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்ளலாம்...”

“நீங்கள் அவனிடம் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”

“இனிமேல் தான் சொல்ல வேண்டும். உன் முன்னாலேயே சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். அவனை உனக்கு முதலிலேயே அறிமுகம் செய்து வைப்பதும் நல்லது என்று நினைக்கிறேன்...” என்ற குருஜி உடனடியாக ஒரு ஆளை அழைத்து கணபதியை அழைத்து வரச் சொன்னார்.

கணபதி அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கிருந்தான்.

“வா கணபதி. எப்படி இருக்கிறாய்?” என்று குருஜி விசாரித்தார்.

“உங்கள் தயவில் எனக்கு ஒரு குறையும் இல்லை குருஜி”

“கணபதி. இவர் என் நண்பர் ஜான்சன். பெரிய ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். ஜான்சன், இது தான் நான் சொன்ன கணபதி...”

ஜான்சன் எழுந்து நின்று கைகளை நீட்ட கணபதி தன் கைகளைக் கொடுத்தான். ஜான்சன் கைகுலுக்கியது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெரிய ஆராய்ச்சியாளர் அவனையும் மதித்து எழுந்து நின்று கை குலுக்குகிறார் என்ற சந்தோஷத்தில் அவனுக்கு அவரிடம் முறையாக வாய்விட்டு வணக்கம் தெரிவிக்கத் தோன்றியது. அதை ஆங்கிலத்தில் எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து விட்டு அவன் “குட் மார்னிங்” என்றான்.

குருஜி சிரிப்பை புன்னகையாக கஷ்டப்பட்டு மாற்றிக் கொண்டார். ஜான்சனும் புன்னகைத்து விட்டு “குட்மார்னிங்” என்றார். மறுபடி அமர்ந்த ஜான்சன் எதிரில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டி கணபதியை உட்கார சைகை செய்தார்.

”பரவாயில்லை சார்” என்ற கணபதி கைகட்டிக் கொண்டு நின்று குருஜியைப் பார்த்தான்.

”பரவாயில்லை கணபதி உட்கார்” என்று கனிவாக குருஜியும் கட்டாயப்படுத்தவே அந்த நாற்காலியில் கணபதி அமர்ந்தான்.

குருஜி ஆரம்பித்தார். ”கணபதி, இவர் நம் நாட்டு தெய்வச் சிலைகளில் சக்தி இருப்பது உண்மையா என்று ஆராய்ச்சி செய்ய இந்தியாவுக்கு வந்திருக்கிறார். வடநாட்டில் ஒரு சிலையை ஆராய்ச்சி செய்து விட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவுக்குப் போகப் போகிற நம்ம சிவலிங்கத்தையும் ஆராய்ச்சி செய்யணும்னு ஆசைப்படறார்...”

சொல்லி விட்டு குருஜி அவனையே பார்க்க கணபதி தலையசைத்தான்.

“நம் நாட்டு கடவுள் சிலைகளில் தெய்வீக சக்திகள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா கணபதி. அதை நாம் உணர்கிறோமோ இல்லையோ இவரை மாதிரி வெளிநாட்டு அறிஞர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து இந்த உலகத்திற்கு ஆதார பூர்வமாய் தெரிவிக்க நினைக்கிறார். அப்படி நடக்கிறது நமக்கும் பெருமை தானே கணபதி. அதனால் நான் அதற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டேன்... நீ என்ன சொல்கிறாய் கணபதி”

கணபதிக்குத் தான் பூஜை செய்யும் சிவலிங்கம் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் புகழ் உலகமெல்லாம் பரவப் போகிறது என்று நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது. சிவலிங்கத்தை நினைத்துக் கொண்டு மனதில் அதனிடம் கேட்டான். ’உன் புகழ் உலகமெல்லாம் பரவினால் என்னை மறந்துட மாட்டியே?’

குருஜி அவனையே பார்க்க அப்போது தான் அவர் கேட்டது நினைவுக்கு வர அவன் திருப்தியுடன் சொன்னான். “நல்லது தான் குருஜி. கேட்கவே சந்தோஷமாக இருக்கு.”

சொல்லச் சொல்ல அவனுக்குத் தன் பிள்ளையார் நினைவு வந்தது. அவர் சக்தியையும் இந்த அமெரிக்காக்காரர் ஆராய்ச்சி செய்து வெளியிட்டால் அவன் பிள்ளையார் புகழும் உலகமெல்லாம் பரவும். இவரிடம் சொல்லலாமா?  சொன்னால் அது அதிகப்பிரசங்கித் தனமாகி விடுமோ? அப்படி நினைத்த அடுத்த கணம் ஒரு பயமும் வந்தது. அப்படி ஆராய்ச்சி செய்து சிவலிங்கத்தை அமெரிக்காவிற்குக் கொண்டு போவது போல அவனுடைய பிள்ளையாரையும் இவர்கள் அமெரிக்கா கொண்டு போய் விட்டால் என்ன செய்வது? ஐயோ வேண்டாம். சிவலிங்கத்தையே பிரியும் போது அவனுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு அவன் சிவனையும் நேசிக்க ஆரம்பித்திருந்தான். அப்படி இருக்கையில் அவன் பிள்ளையாரையும் பிரிவது என்றால் அவன் உயிரையே எடுத்து விடுவது மாதிரி தான். இந்த ஆராய்ச்சி எல்லாம் அவனுடைய பிள்ளையாருக்கு வேண்டாம்....

குருஜி சொன்னார். “இவர் ஆராய்ச்சி செய்கிற இடம் வேறு இடம். அங்கே சிவலிங்கத்தைத் தற்காலிகமாய் பிரதிஷ்டை செய்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும். அப்படி அங்கே போகிறப்ப நீயும் கூட வரணும் கணபதி. சொல்லப் போனால் நீ தான் அந்த சிவலிங்கத்தை உன் கையால் எடுத்துகிட்டு அங்கே வரணும். உன்னைத் தவிர யாரும் அதைத் தொடறது கூட எனக்குப் பிடிக்கலை கணபதி. என்ன சொல்கிறாய்?”

குருஜி அவன் மேல் வைத்திருக்கிற அன்பு அவனை திக்குமுக்காட வைத்தது. “அங்கே எப்ப போகணும் குருஜி?”

”மூன்று நாள்ல போகணும் கணபதி. அங்கே போகிற நாள்ல இருந்து உனக்கு தினம் ஆயிரம் ரூபாய் தரணும்னு சொல்லி இருக்கேன். ஜான்சனும் ஒத்துகிட்டு இருக்கார்”

’ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாயா?’ கணபதி திகைத்தான். சிவலிங்கத்திற்குப் பூஜை செய்ய தினம் ஐநூறு ரூபாய் வாங்குவதே தவறு என்று சில நாட்களாக அவனுக்கு அதிகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ’பணம் வாங்கிக் கொண்டு தானே நீ  எனக்கு பூஜை செய்கிறாய்?’ என்று சிவன் கேட்பது போல ஒரு பிரமை அவனுக்கு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் அதிக பணம் வாங்குவது அதிகத் தவறாய் தோன்ற கணபதி சொன்னான். ”அதெல்லாம் எனக்கு வேண்டாம் குருஜி.”

குருஜி சொன்னார். “நீ இப்படி சொல்கிறாய். சிவன் நேத்து என் கனவில் வந்து ’கணபதி குடும்பத்தில் ஆக வேண்டியது நிறைய இருக்கிறது. பணம் அதிகமாய் வாங்கிக் கொடு’ன்னு சொல்லிட்டார். உனக்காக அவரே சொல்லிட்ட பிறகு நான் வாங்கித் தரா விட்டால் அவர் கோபத்திற்கு நான் ஆளாக வேண்டும் கணபதி”

கணபதி கண்களில் பெருகும் நீரை அடக்கக் கஷ்டப்பட்டான். ’சிவனே, நான் என் சொந்தக் கஷ்டங்களை உன்னிடம் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு இவ்வளவு பெரிய மனசு செய்து குருஜி கனவில் போய் சிபாரிசு செய்திருக்கிறாயே! நான் உன் முன்னால் உட்கார்ந்து வெட்டிப் பேச்சு பேசினதையும் சீடை சாப்பிட்டதையும் கூட நீ பெரிசா எடுத்துக்கலையே, உன் அருளுக்கு எல்லையே இல்லையா?’

ஈஸ்வரின் மனநிலை அன்று சரியில்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று விஷாலி அவனிடம் பேசியது, இரண்டாவது அன்று அவன் தந்தையின் பிறந்த நாள்.

விஷாலி பேசிய போது அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொண்டாலும் அவள் குரலைக் கேட்டதுமே அவன் ஈகோவைப் பற்றிக் கவலைப்படாமல் மனம் வெட்கமில்லாமல் சிலிர்த்து பரவசமானதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த மனதிற்கு சூடு, சொரணை, வெட்கம், மானம் எதுவும் கிடையாதா என்று கோபித்துக் கொண்டு மனதை அடக்க வேண்டி வந்தது. அவளாகவே சாரி என்று விட்டாளே, இனி என்ன என்று மனம் சொன்ன போது, ‘அவள் வேண்டும் என்று நினைத்தால் வலிய வந்து பேசுவாள், வேண்டாம் என்று தோன்றினால் வெட்டி எறிந்து விடுவாள். அவள் இழுத்த இழுப்பிற்குப் போக வேண்டுமா’ என்று கேள்வி கேட்டு மறுக்க வேண்டி வந்தது. பதிலேதும் சொல்ல முடியா விட்டாலும் மனம் ஏனோ அவளை அலட்சியப்படுத்தியதில் வலித்தது.  

அடுத்த காரணம் தந்தையின் பிறந்த நாள். தந்தை இருந்த வரை இந்த நாளில் அவன், அம்மா, அப்பா மூவரும் தனியாக எங்காவது போய் கொண்டாடுவார்கள். இன்று அவர் இல்லை. அவன் இங்கு தனியாக, அம்மா அமெரிக்காவில் தனியாக....! அப்பா நினைவு இன்று அதிகமாக வந்தது. அவருடைய சாந்தமான முகம், அவர் காட்டிய அபரிமிதமான பாசம்..... இதை எல்லாம் யோசித்துப் பார்க்கும் போது மனம் வலித்தது. 

அம்மாவிற்குப் போன் செய்து பேசினான். அம்மா குரலில் இருந்து அவளும் அவர் நினைவின் துக்கத்தில் இருப்பது புரிந்தது.

“என்னம்மா செய்துகிட்டு இருக்கே?”  

”அப்பா படிச்சிகிட்டிருந்த புஸ்தகம் எல்லாம் எடுத்து தூசி தட்டி வச்சுகிட்டிருக்கேன்”

அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார்... அதிகமாய் படிப்பது அறிவியல் புத்தகங்களை... இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட ஐன்ஸ்டீனின் க்வாண்டம் தியரி சம்பந்தமாக தற்கால விஞ்ஞானிகள் கூடுதலான ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகத்தை அவர் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார்....

”ஈஸ்வர்...”

“சொல்லும்மா”

“அப்பா கடைசியா படிச்சுகிட்டிருந்த க்வாண்டம் தியரி புஸ்தகத்துக்குள்ளே...” அம்மா அந்த வாக்கியத்தை நிரப்ப முடியாமல் தடுமாறினாள்.

“சொல்லும்மா... அதுக்குள்ளே என்ன?”

”உன் தாத்தா ஃபோட்டோ இருந்ததுடா....” சொல்லச் சொல்ல அம்மா அழுது விட்டாள்.

“அதுக்கு ஏம்மா நீ அழறே?”

“அவர் அவ்வளவு நேசிச்ச அவரோட அப்பா கிட்ட இருந்து நான் அவரைப் பிரிச்சுட்டேனேங்கிறதை நினைக்கிறப்ப மனசு தாங்கலைடா....” அம்மா குமுறிக் குமுறி அழுதாள். தொடர்ந்து பேச முடியாமல் போனை அவள் வைத்து விட்டாள்.

ஈஸ்வருக்கு அம்மாவின் துக்கம் தாங்க முடியாததாக இருந்தது. பரமேஸ்வரன் மீது கோபம் கோபமாய் வந்தது. அத்தனை நேசித்த மகனை அந்த ஆளால் எப்படி வெறுக்கவும், அலட்சியப்படுத்தவும் முடிந்தது? அவன் மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கையில் மீனாட்சி வந்து சாப்பிட அழைத்து விட்டுப் போனாள்.  

ஈஸ்வர் போன போது டைனிங் ஹாலில் பரமேஸ்வரன், ஆனந்தவல்லி, விஸ்வநாதன் மூவரும் இருந்தார்கள். மகேஷை ஏனோ இரண்டு நாட்களாய் பார்க்க முடியவில்லை. மீனாட்சி அண்ணனின் பிறந்த நாளை நினைவு வைத்து அண்ணனிற்குப் பிடித்த சமையல் வகைகளை எல்லாம் செய்திருந்தாள். 

ஆனந்தவல்லி கொள்ளுப் பேரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததைப் பார்த்து கேட்டாள். “ஏண்டா என்னவோ மாதிரி இருக்கே?”

ஈஸ்வர் சொன்னான். “இன்னைக்கு எங்கப்பா பிறந்த நாள்.... அவர் ஞாபகம் வந்தது...”

ஆனந்தவல்லி தன் மகனை ஓரக்கண்ணால் பார்த்தாள். இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று அவளுக்குத் தோன்றியது. பரமேஸ்வரன் இறுகிய முகத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.

ஈஸ்வர் பரமேஸ்வரனைப் பார்த்தபடியே மீனாட்சியிடம் சொன்னான். “அம்மா போன் பண்ணி இருந்தாங்க அத்தை...”

மீனாட்சி கேட்டாள். “அண்ணி எப்படி இருக்காங்க?”

”அவங்களுக்கும் அப்பா ஞாபகம் தான்.... அவர் உயிரோட இருக்கறப்ப நாங்க மூணு பேரும் எங்கேயாவது ஒரு பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போவோம்”

மீனாட்சி தந்தையைப் பார்த்தாள். அண்ணன் சங்கரின் பிறந்த நாளுக்கு இங்கும் அவளும், அண்ணனும், அப்பாவுமாக எங்காவது போவார்கள்....

பரமேஸ்வரன் எழுந்து போய் விடலாமா என்று யோசித்தார்.

ஈஸ்வர் சொன்னான். “அப்பா கடைசியாய் படிச்சுகிட்டிருந்த புஸ்தகத்தை அம்மா எடுத்துப் பார்த்தாங்களாம்.... அதுக்குள்ளே அவரோட அப்பாவோட ஃபோட்டோ இருந்துச்சாம்.....”

பரமேஸ்வரன் சாப்பிடுவதை நிறுத்தி தட்டில் கை கழுவி விட்டார். மீனாட்சி தர்மசங்கடத்துடன் தந்தையையும் மருமகனையும் பார்த்தாள்.

ஈஸ்வர் விடுவதாக இல்லை. ”அவருக்கு அவங்கப்பான்னா உயிர்.... அவரை அவங்கப்பா நேசிச்ச மாதிரி உலகத்துல எந்த அப்பாவும் எந்த மகனையும் நேசிச்சு இருக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்வார்.....”

பரமேஸ்வரன் இதயத்தில் இமயம் ஏறியது. எழுந்து அங்கிருந்து போய் விட நினைத்து எழுந்தார். ஆனால் மூச்சு விட முடியவில்லை.... நெஞ்சுக்குள் ஏதோ இறுக்கிப் பிடித்தது. அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவரை அறியாமல் சாய்ந்தார்.

ஈஸ்வர் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.... தன் வார்த்தைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவரைப் பாதிக்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. குற்ற உணர்ச்சியுடன் அவன் அதிர்ந்து போனான். ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். “தாத்தா என்ன ஆச்சு....”  அவனை அறியாமல் வார்த்தைகள் வெளி வந்தன.

பரமேஸ்வரன் நினைவை இழக்கும் முன் கேட்ட கடைசி வார்த்தைகள் அவை. அவரை அவர் பேரன் முதல் முறையாக தாத்தா என்று அழைத்திருக்கிறான். அவரை முதல் முறையாகத் தொட்டிருக்கிறான்.....

பரமேஸ்வரன் நினைவிழந்தார்.

(தொடரும்)

-          என்.கணேசன்
  

Monday, July 1, 2013

யோகியின் பார்வை


கீதை காட்டும் பாதை 26


துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகத்தை விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக பேரின்பத்திற்கு வழியைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சங்கல்பத்தால் உண்டாகும் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனத்தினாலேயே எல்லா இடங்களில் இருந்தும் இழுத்துக் கட்டுப்படுத்தி,
தைரியத்துடன் கூடிய புத்தியினால் மெள்ள மெள்ள அடக்க வேண்டும். மனத்தை ஆத்மாவிலேயே நிலை நிறுத்தி வேறெதையும் நினைக்காமல் இருக்க வேண்டும்.

நிலையாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனதானது எந்தெந்த விஷயங்களைத் தேடிச் செல்கிறதோ, அந்தந்த விஷயங்களில் அதைச் செல்லாமல் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

மனம் சாந்தமாகி, ரஜோ குணம் நீக்கப்பட்டு, மாசு நீங்கி, பிரம்மமாக ஆன இந்த யோகியை மிக உயர்ந்த இன்பமானது வந்தடைகிறது.

இப்படி ஆத்மாவை எப்போதும் யோகத்தில் இருத்திய யோகியானவன் பிரம்மத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பேரின்பத்தை எந்த விதமான சிரமமும் இன்றி எளிதில் அனுபவிக்கிறான்.

எது நமக்குப் பிரதானமோ அதையே நாம் என்றும் பெறுகிறோம். ஆனால் பிரதானமாக நாம் நினைக்கும் விஷயங்கள் நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவை தானா என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயல்படுவது அவரவர் கையில் இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்றைப் பிரதானமாக நினைத்து ஆசைப்படுகிறோம். அதை அடைய முடிந்தால் அது வெற்றிகரமான வாழ்க்கை என்று நம்புகிறோம். ஆனால் அடைந்த பின்னும் ஏதோ குறைகிறதே, அடைந்த பின்னும் நிம்மதி இல்லையே, சில சமயம் வெறுமையும் சில சமயம் துக்கமும் நம்மை வாட்டுகிறதே என்று எண்ணாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. இதற்கு என்ன தீர்வு? பிரச்சினை மனதில் உள்ளதால் தீர்வையும் நாம் அங்கேயே தேட வேண்டும்.

முதலில் புலன்கள் பின்னால் போய் அலைந்து அலைக்கழிக்கப்பட்டு ஏமாறும் மனதை அங்கிருந்து புத்தியால் இழுக்க வேண்டும். மனம் தானாக அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. எண்ணற்ற முறை ஏமாந்திருந்தாலும், துக்கத்தினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை அப்படி நேர்ந்து விடாது என்று மனம் மறுபடி ஆசைப்பட்டு முயலக்கூடியது. ஆசைகளின் பின் ஓடும் ஓட்டத்தின் விளைவுகள் என்றுமே ஒன்று தான் என்று இடித்துச் சொல்லி இழுத்து நிறுத்த புத்தியால் மட்டுமே முடியும். அதையும் ‘மெள்ள மெள்ள’ தான் சாதிக்க முடியும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். மனதால் எதையுமே நினைக்காமல் இருக்க முடிவதும் கஷ்டம் என்பதால் தான் அடுத்த அறிவுரையையும் தருகிறார் - மனதை ஆத்மாவில் நிலை நிறுத்தச் சொல்லி. மனதிற்குப் பற்றிக் கொள்ள ஆத்மஞானம் இருந்தால் வீணாக வேண்டாததன் பின் செல்ல வேண்டி இராது அல்லவா?

ஆத்மாவில் நிலை நிறுத்தப்பட்ட மனம் சாந்தி அடைகிறது. உண்மையாக மனம் சாந்தி அடையும் போது மூன்று குணங்களில் ஆசைக்கும், அதனால்  நடவடிக்கைகளுக்கும் மனிதனை உந்தும் ரஜோ குணம் நீக்கப்படுகிறது. மனதின் மாசு நீக்கப்படுகிறது. அதன் பின் அந்த மனிதன் இன்பத்தை நோக்கி ஓட வேண்டியதில்லை. யோகியாக மாறும் அந்த மனிதனை, சாதாரண இன்பம் அல்ல, பேரின்பமே தேடி வரும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

புலன்களுடன் சிற்றின்பம் இணைந்திருப்பது போல பிரம்மத்துடன் பேரின்பம் இணைந்திருக்கிறது. ஆத்மஞானம் பெற்று அமைதியடைந்தவன் அந்தப் பேரின்பத்தை இடைவிடாமல் சிறிதும் சிரமம் இல்லாமல் பெறுகிறான். இப்படி இந்த தியான யோகத்தில் கணிதக் கோட்பாடு சொல்வது போல ஸ்ரீகிருஷ்ணர் பேரின்பத்திற்குப் படிப்படியாக வழி சொல்கிறார்.   

சரி, இப்படி யோகியாக மாறியவன் பார்வை எப்படி இருக்கும்? அவன் உலகை எப்படிப் பார்ப்பான்? அவனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகப் பதில் சொல்கிறார்.

யோகத்தில் நிலைத்தவன் எங்கும் சம நோக்குடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவன் என் பார்வையில் இருந்து மறைவதில்லை. நானும் அவன் பார்வையில் இருந்து மறைவதில்லை.

எல்லா உயிர்களிலும் ஒரே நிலையைக் காண்கின்றவனாய், எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழும் யோகி எந்த நிலையிலும், எந்த விதத்திலும் என்னிடமே இருப்பான்.

அர்ஜுனா, இன்பமாயினும், துன்பமாயினும் தன்னைப் போல் எல்லோரையும் சமமாகக் காண்பவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

சமநோக்கைப் பற்றிச் சொன்ன அளவுக்கு ஸ்ரீகிருஷ்ணருக்குச் சலிப்பு தட்டவில்லை. இங்கு மீண்டும் அதைப் பற்றி அவர் சொல்கிறார்.
அடுத்தவனை நேசி என்று என்று சொல்கிறார்கள். அவனை நேசிக்க முடியாமல் இருக்கக் காரணமே அவன் அடுத்தவன் என்பது தானே? இன்றைய பெரும் பிரச்சினைகளுக்கும், சீரழிவுகளுக்கும் முக்கியக் காரணமே எல்லை இல்லாத சுயநலம் தானே? அடுத்தவர் நலத்தை அழித்தாவது நம்மை வளர்த்திக் கொள்ள வேண்டும், நாம் சுகம் அனுபவிக்க வேண்டும் என்பது தானே?

எல்லா உயிர்களிடத்தும் தன்னையும், தன்னுள் எல்லா உயிர்களையும் காண முடியும் போது மட்டுமே உண்மையாக அடுத்தவனை நேசிக்க முடியும். யோகியானவன் அப்படிக் காண்கிறான் என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறார். அந்த யோகி எங்கும் எதிலும் இறைவனைக் காண்கிறான் என்கிறார். இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பதை அந்த யோகியினால் பார்க்க முடிகிறது என்கிறார்.

எங்கும் எதிலும் இறைவனைக் காண முடிந்தால் உலகமே பவித்திரமாக அல்லவா மாறி விடுகிறது? சித்தாந்தங்கள் வைத்து அந்த யோகி அப்படிச் சொல்வதில்லை. அனுபவத்தில், உணர்வு பூர்வமாக அதை உணர்கிறான். அந்த நிலையை அடையும் போது அவன் நடிக்க வேண்டி இருப்பதில்லை. இருவேறு நிலைகள் இருந்தால் அல்லவா நடிக்கும் அவசியம்? இறைவனைக் காண முடியாமல் மறைக்கும் அறியாமை கூடிய மனநிலைகள் இல்லாததால் அந்த யோகிக்கு இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க முடிகிறது. அதே போல் இறைவன் பார்வையில் இருந்தும் அவன் எப்போதும் மறைவதில்லை.

இதற்கு அடுத்த மேல் நிலை ஒன்று உண்டு. இறைவன் பார்வையில் இருப்பதை விடவும் உயர்ந்த அந்த சிறப்பு நிலை என்னவென்றால் அது இறைவனிடத்திலேயே இருக்கும் நிலை. பார்வையில் இருப்பது என்றால் கூட இறைவனுக்கும் இவனுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது என்றாகிறது. இறைவனிடத்திலேயே இருப்பது என்றால் அந்த இடைவெளியும் அற்றுப் போகிறது. அந்த நிலை எப்போது வரும் என்றால் ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருப்பதை அறிந்திருப்பதோடு நின்று விடாமல் அந்த உயிரில் இருக்கும் இறைவனைத் தொழ முடியும் பக்குவம் வரும் போது வருகிறது. அப்படித் தொழ முடிந்த யோகி எந்த நிலையிலும் எந்த விதத்திலும் என்னிடத்திலே இருப்பான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இங்கு அவர் தேவகி புத்திரனும், அர்ஜுனன் நண்பனுமாகிய கண்ணனைச் சொல்லவில்லை, இறைவனையே குறிப்பிடுகிறார்.

இன்ப காலத்தில் மனிதன் நடந்து கொள்ளும் விதமே வேறு, துன்ப காலத்தில் நடந்து கொள்ளும் விதமே வேறு. இன்ப காலத்தில் கனிவாக நடந்து கொள்ளும் எத்தனையோ பேர் துன்ப காலத்தில் எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். கோபம், ஆற்றாமை, எல்லாம் அவர்களை மற்றவர்களிடம் வேறு மாதிரி நடந்து கொள்ள வைத்து விடும். இதற்கு நேர்மாறான ஆட்களும் இருக்கிறார்கள். கஷ்டகாலத்தில் அடக்கமாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால் கஷ்டம் எல்லாம் நீங்கி சுகங்கள் வர ஆரம்பித்தாலோ அவர்கள் தோரணையே மாறி விடும். அடக்கம், அனுசரணை எல்லாம் போய் கர்வம், அலட்சியம் ஆகியவை அவர்களை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடும்.

இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே போலவும் சரியாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் மிக மிக அபூர்வம். அந்த இரண்டு நிலைகளிலும் தன்னைப் போலவே அடுத்தவர்களைக் காண்பதும், அதற்கேற்ப நடந்து கொள்வதும் முடிவதும் அதையும் விட மிக அரிதானது. அது மிக உயர்ந்த யோக நிலையை அடைந்தவன் யோகிகளிலேயே சிறந்த பரமயோகி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாதை நீளும்.....

என்.கணேசன்