என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 6, 2013

பரம(ன்) ரகசியம் – 47



ஸ்வர் காரில் இருந்து இறங்கியவுடன் சுற்றிலும் பார்த்தான். மிக விஸ்தாரமான இடம். சில வகுப்பறைகளில் இருந்து வேதகோஷம் கேட்டது.

சற்று முன் கேட்டைத் திறந்த வாட்ச்மேன் “அது தான் சார் ஆபிஸ் ரூம்என்று கை காட்டி விட்டுப் போனான். ஈஸ்வர் அங்கு உள்ளே போய்  வேதபாடசாலை நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் பெயரைக் கேட்டவுடன் அவர் எழுந்து நின்று அவனை வரவேற்றார். அவருக்குக் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டை இருந்தது. குடுமி வைத்திருந்தார். முடியெல்லாம் பாதி நரைத்திருந்தது. தன்னை சிவராம ஐயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் குரலில் ஏனோ படபடப்பு தெரிந்தது.

அவரே அவனை அழைத்துக் கொண்டு வேதபாடசாலையைச் சுற்றிக் காட்டினார். வகுப்பறைகள் மிக சுத்தமாக இருந்தன. வகுப்பறைகளை அவர்கள் கடந்த போது மாணவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.  மாணவர்கள் தங்கும் இடங்கள், ஆசிரியர் தங்கும் இடங்கள் எல்லாம் தனித்தனியாக வசதியாக இருந்தன. பெரிய நூலகம் இருந்தது. பத்தாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் இருப்பதாக அவர் பெருமையுடன் சொன்னார்.

சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து குருஜி வருடம் ஒரு முறை வந்து அங்கு தான் தங்குவார் என்று சொன்னார். இப்போதும் குருஜி அங்கு தான் இருக்கிறார் என்று சொன்னார். ஈஸ்வர் தலையாட்டினான். நூலகத்தைத்  தாண்டி நிறைய துளசிச்செடிகள், பூச்செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி ஒதுக்குப் புறமாக ஒரு பெரிய வீடு இருப்பதைக் காட்டி ஈஸ்வர் கேட்டான். அது என்ன?

சிவராம ஐயர் அவசர அவசரமாகச் சொன்னார். “அங்கு தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறோம். அங்கே யாரும் இல்லை....

ஈஸ்வர் தலையாட்டினான். அந்த கட்டிடத்திற்கு வெளியே இரண்டு பேர் மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான். ஈஸ்வர் ஒரு நிமிடம் நின்று அந்த ஒதுக்குப் புறக் கட்டிடத்தையே பார்க்க சிவராம ஐயருக்கு வயிற்றைக் கலக்கியது. நல்ல வேளையாக ஈஸ்வர் அவர் பக்கம் திரும்பிப் பார்க்காததால் அதைக் கவனிக்கவில்லை.

ஒரு ஆள் குருஜி தங்கியிருந்த வீட்டின் வாசலில் இருந்து சிவராம ஐயருக்கு சைகை காண்பித்தான். சிவராம ஐயர் ஈஸ்வரிடம் சொன்னார். “உங்களுக்கு குருஜியைப் பார்க்க விருப்பம் இருந்தால் இப்போது அவரைப் பார்த்துப் பேசலாம்....     

ஈஸ்வர் ஆவலுடன் குருஜியைச் சந்திக்கச் சென்றான். வாசல் வரை அவனை அழைத்துச் சென்ற சிவராம ஐயர் நிம்மதியாக அவனிடம் இருந்து விடை பெற்றார்.

குருஜி ஈஸ்வர் வந்திறங்கிய கணத்தில் இருந்து பார்வை எட்டிய தூரத்தில் அவன் இருக்கும் போதெல்லாம் அவனையே தான் ரகசியமாய் கண்காணித்து வந்தார். அவன் இறங்கியவுடன் செய்த முதல் காரியமே அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அவன் இறங்கக் காரணம் அவருக்குப் புரியவில்லை. அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த அவன் கோயில் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டாலே அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். அப்படி இருக்கையில் அவன் இங்கு வந்தவுடன் தொட்டுக் கும்பிடக் காரணம் வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்பதாலா இல்லை.... அதற்கு மேற்பட்ட காரணத்தை அவரால் நினைக்க முடியவில்லை. முக்கியமாய் சிவலிங்கம் இங்கு இருப்பதை அவன் உணர்ந்து செய்திருக்கக் காரணமே இல்லை.. அவருடைய குருநாதரான சித்தர் சித்து விளையாட்டு ஏதேனும் செய்திருந்தால் ஒழிய.....

ஈஸ்வரைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தெரிகிறதா என்று குருஜி பார்த்தார். எதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தாலும் அவருக்குத் தற்போது தெரிய வாய்ப்பில்லை. கணபதியைச் சுற்றி பார்க்க முடிந்தவரை தாக்குப் பிடித்த அந்த சக்தி அப்படியே வடிந்து விட்டது. மூன்று நாட்கள் தவமிருப்பது போல் இருந்து பெற்ற அந்த கூர்சக்தி யதார்த்த வாழ்க்கைக்கு வந்தவுடன் காணாமல் போய் விட்டது.... அதை அவர் பெரியதாக நினைக்கவில்லை. நினைக்க இப்போது எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன!

சிவலிங்கம் இருக்கும் கட்டிடத்தை ஈஸ்வர் ஒரு நிமிடம் பார்த்து நின்றது வேறு அவருக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கணபதி எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே வந்து விடாமல் இருக்க அவர் ஆட்களை ஏற்பாடு செய்திருந்தாலும் கூட ஈஸ்வர் அவரைச் சந்திக்க வரும் வரை பதட்டம் அவரை விட்டு விலகவில்லை.

வணக்கம் குருஜிஎன்று கைகூப்பி வணங்கிய ஈஸ்வர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  “நான் ஈஸ்வர். அமெரிக்காவில் விர்ஜினியா யூனிவர்சிட்டியில் சைக்காலஜி டிபார்ட்மெண்டில் இருக்கிறேன். இங்கே அப்பாவின் பூர்விக வீடு இருக்கிறது. ஒரு மாச லீவில் வந்திருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் என் நண்பன் ஒருத்தன் உங்கள் வேத பாடசாலைக்கு அடிக்கடி பணம் அனுப்புகிறவன். முடிந்தால் ஒரு தடவை பார்த்து விட்டு வரச் சொன்னான். அதனால் தான் வந்தேன். போனஸாக உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில் சந்தோஷம்....

குருஜி புன்னகையுடன் அவனை உட்காரச் சொன்னார். “உங்களைப் பார்த்ததில் எனக்கும் சந்தோஷம். வெளிநாட்டுக்குப் போனவுடனேயே தாய்நாட்டு சம்பந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அறுந்து போகிறது. ஆனால் அப்படி இல்லாமல் இன்னும் தாய்நாட்டு மண் மேல் அக்கறை இருந்து அதிலும் இது மாதிரி வேதம், ஆன்மிகம் மேல் ஆர்வம் இருந்து, முடிந்த பண உதவி செய்யும் உங்கள் நண்பர் மாதிரி ஆட்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இங்கே உங்கள் பூர்விக வீடு எங்கே இருக்கிறது? இங்கே யார் இருக்கிறார்கள்அவர் அறியாதது போலக் கேட்டார்.
ஈஸ்வருக்கு பரமேஸ்வரனைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தது.

குருஜி ஆச்சரியம் காட்டினார். “ஓ அவர் பேரனா நீங்கள்? சமீபத்தில் கூட அவர் அண்ணா கொலை செய்யப்பட்டு சிவலிங்கம் ஒன்று திருட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன்....

ஈஸ்வர் ஆமென்று தலையசைத்தானே ஒழிய அதைப் பற்றி எதுவும் சொல்லப் போகவில்லை. அவனாக அதைப் பற்றி ஏதாவது பேசுவான் என்று குருஜி எதிர்பார்த்தது நடக்கவில்லை.

தயவு செய்து பன்மையில் அழைக்காதீர்கள், ஒருமையிலேயே அழையுங்கள் என்று சொன்ன ஈஸ்வர்  பிறகு அவர் எழுத்துக்களை புத்தகங்களில் படித்திருப்பதைச் சொன்னான். அவர் பேச்சுக்களை யூட்யூபில் கேட்டிருப்பதைச் சொன்னான். பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் பற்றி அவர் பேசிய தொடர் உரைகள் தன்னை நிறைய சிந்திக்க வைத்தது என்று சொன்னான்.

அவன் பேச்சில் ஒன்றை குருஜி கவனித்தார். அவன் புகழ்ச்சியாகப் பேசிய போதும் தேவை இல்லாமல் அபரிமிதமாகப் புகழ்ந்து விடவில்லை. பலரும் அவரைக் கண்டு பேசச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள். புளங்காகிதம் அடைந்து பேசுவார்கள். உங்களைப் பார்த்தது நான் செய்த பெரும் பேறு என்பது போலப் பேசுவார்கள். ஈஸ்வர் வித்தியாசப்பட்டான்.

அவர்கள் பேச்சு ஆன்மிகம் பக்கம் நகர்ந்தது. குருஜி மிக அருமையாகத் தன் கருத்துக்களைச் சொன்னார். நிறைய புனித நூல்களில் இருந்து உவமைகளை சிறிய சொல் கூட மாறாமல் சொன்னார். வரலாற்று உதாரணங்களைச் சொன்னார். ஈஸ்வரால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மனிதரா இவர் இல்லை என்சைக்ளோபீடியாவா?.....

குருஜி விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவன் உளவியல் துறையில் என்னவாக இருக்கிறான் என்று விசாரித்தார். ஈஸ்வர் உதவிப் பேராசிரியராக இருப்பதாக மட்டும் ஈஸ்வர் சொன்னானே ஒழிய உலகப் புகழ்பெற்ற மனோத்த்துவக் கட்டுரைகளைத் தந்திருப்பதாகவோ, தன் துறையில் தான் பெரியவன் என்றோ சுற்றி வளைத்துக் கூடச் சொல்லவில்லை.  தன்னைப் பற்றியும் அவன் அதிகமாகப் புகழ்ந்து விடவில்லை. சிலர் அடுத்தவரைப் புகழ்வது என்றால் கஞ்சத்தனமாக இருப்பார்கள். ஆனால் தங்களை வியந்து கொள்வதில் அவர்களுக்குச் சலிப்பிருக்காது. ஈஸ்வர் இதிலும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டான்.

இந்த வயதில் இந்த மன முதிர்ச்சி அபூர்வம் என்று குருஜி நினைத்தார்.

ஈஸ்வர் அடுத்ததாக ஆர்வத்துடன் அவர் இளமைக்காலத்தின் இமயமலை அனுபவங்களைப் பற்றிக் கேட்டான். குறிப்பாக சித்தர்களுடனான அவர் அனுபவங்களைக் கேட்டான்.

குருஜிக்கு பேச்சு தர்மசங்கடமான விஷயங்களை நோக்கித் திரும்புவது போலத் தோன்றியது. ஆனால் வேறு வழியில்லாமல் அவர் குருநாதர் தவிர மற்ற சித்தர்களைப் பற்றிப் பேசினார்.

“அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள் ஈஸ்வர். ஒரு சித்தருடன் நான் ஆறேழு மாதம் கூட இருந்திருப்பேன். அவர் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசினதில்லை. அவர் ஊமையோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் ஊமையல்ல. அவசியம் இல்லாமல் பேசுவது வீண் என்று நினைக்கிற ரகம் அவர். அவ்வளவு தான். இன்னொரு சித்தர் இமயமலையில் மார்கழியில் கூட வெறும் கோவணத்தோடு தான் சுற்றிக் கொண்டிருப்பார். நமக்கெல்லாம் எத்தனை துணிகள் உடம்பில் சுற்றிக் கொண்டாலும் உடம்பு வெட வெடவென்று நடுங்கும். அவருக்கு அந்தப் பிரச்சினையே இல்லை..... பொதுவாக அவர்கள் மக்களோட கவனத்தைக் கவர விரும்புவதில்லை... மக்கள் கவனம் ஒரு தொந்திரவாகக் கூட அவர்கள் நினைக்கிறதுண்டு.... அதனாலேயே நகரங்களுக்கு அபூர்வமாய் போனாலும் ஏதோ ஒரு பாமரன் மாதிரி தான் தென்படுவார்கள். சில நேரங்கள்ல பொது இடங்களில் இருந்தால் கூட மற்றவர்கள் கண்ணுக்குத் தென்படாமலேயே இருந்துடறதும் உண்டு...

கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது நீங்கள் இதுவரைக்கும் பார்த்திருக்கிறீர்களா குருஜி

குருஜி ஒரு கணம் அப்படியே உறைந்து போனார். இந்த நேரடிக் கேள்வியை அவனிடமிருந்து அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் தன்னை சமாளிக்க அரை நிமிடம் தேவைப்பட்டது.

தன் கேள்வி அவரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. ஒரு கேள்விக்கு நேரம் கழித்து வரும் பதில் கூட பல உண்மைகள் சொல்லும் என்பதை உளவியலில் கரை கண்ட அவன் அறிவான். பல நேரங்களில் அப்புறமாக வரும் பதிலை விட அதற்கு முன் வரும் மௌனம் நிறைய விஷயங்களை உணர்த்தி விடும்... தெரியும் அல்லது தெரியாது என்று சொல்வதற்கு ஏன் இந்த அதிர்ச்சி?

யோசிப்பது போல பாவனை செய்த குருஜி சாதுர்யமாகப் பதில் சொன்னார். “அப்படி ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நீ ஏன் ஈஸ்வர் கேட்கிறாய்?

எங்கள் பெரிய தாத்தாவிடம் அந்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்த சித்தர் கண்கள் அப்படி அடிக்கடி ஜொலிக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் பல சித்தர்களோடு பழகியவர் அல்லவா அதனால் தான் கேட்டேன்...

பேச்சு சிவலிங்கம் பற்றி வந்தவுடன் குருஜி அதைப் பிடித்துக் கொண்டார். இவன் வாயில் இருந்து அந்த சிவலிங்கம் பற்றி என்னவெல்லாம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.  ஈஸ்வர் அந்தக் கொலைகாரனை அனுப்பினதும், சிவலிங்கத்தைத் திருடிகிட்டு போனதும் யார் என்று தெரிந்ததா?..

“இன்னும் தெரியலை குருஜி

அந்த சிவலிங்கத்தைத் திருடிகிட்டுப் போகற அளவுக்கு அதில் என்ன இருக்கிறது ஈஸ்வர்? அது ஸ்படிக லிங்கம் மரகத லிங்கம் மாதிரியான ரகமா என்ன?

“இல்லை குருஜி. அதை சக்தி வாய்ந்த சிவலிங்கமாக சிலர் நம்பற மாதிரி தெரியுது

குருஜி ஆச்சரியப்படுவது போல நடித்தார். சக்தி வாய்ந்த சிவலிங்கமாக இருந்தால் கும்பிட்டு விட்டுப் போகலாமே, ஏன் திருடிக் கொண்டு போக வேண்டும்?

தங்களிடம் அந்த சிவலிங்கம் இருந்தால் அந்த சக்தியைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம்...

“ஆராய்ச்சியாளனாகிய நீ என்ன சொல்கிறாய் ஈஸ்வர் அது சாத்தியமா?

ஈஸ்வர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவிப் பேராசிரியர் என்று சொல்லி இருந்தானே ஒழிய ஆராய்ச்சியாளன் என்று குருஜியிடம் சொல்லவே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அதைச் சொன்னார் என்ற ஆச்சரியம் ஈஸ்வருக்கு எழுந்தாலும் அவன் காண்பித்துக் கொள்ளாமல், என்ன சொல்வது என்று யோசிப்பது போல் நடித்தான். ஆனால் அவன் மூளை வேகமாய் மற்ற சில விஷயங்களையும் கவனிக்கச் சொன்னது. அவர் பொதுவாக ஆன்மிகம், வரலாறு போன்றவை பற்றிப் பேசும் போது மிக இயல்பாகவே இருந்தாலும் சிவலிங்கம் பற்றிப் பேசும் போது மட்டும் அவர் குரலிலும் கண்களிலும் ஒரு கூடுதல் ஆர்வம் இருந்தது.

அதில் தவறு ஒன்றையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. சிலருக்கு சில விஷயங்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்.... ஈஸ்வருக்கு அந்த ஆர்வத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்கத் தோன்றியது. அதனால் சொன்னான். எனக்கென்னவோ சிவலிங்கத்தின் சக்தியை அப்படி யாரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது

ஏன் ஈஸ்வர்? இறைவனின் சக்தியோ இயற்கையின் சக்தியோ என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி அது விருப்பு வெறுப்பு இல்லாதது, அதை யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளேன். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த ஆள் ஸ்விட்ச் போட்டால் தான் எரிவேன் என்று அது பாரபட்சம் காட்டுமா என்ன?

ஈஸ்வர் சொன்னான். அது இறைவன் சக்தியாக மட்டும் இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அது சித்தர்கள் தங்கள் சக்தியை எல்லாம் ஆவாகனம் செய்து வணங்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். அந்த சித்தர்கள் எந்த மாதிரி சக்திகளை எல்லாம் எந்த நோக்கத்திற்காகவெல்லாம் ஆவாகனம் செய்து வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும். சித்தர்கள் கூட ஒன்றிரண்டு பேர் அல்ல. பல நூறு வருஷங்களாய் பல விதமான சித்தர்கள் அப்படிச் செய்து வணங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மாதிரி. சித்தர்கள் எந்த ப்ரோகிராம் போட்டு வைத்திருக்கிறார்களோ அப்படித் தான் அந்த சிவலிங்கம் இயங்கும் என்று நினைக்கிறேன்...

குருஜி ஒரு கணம் பேச்சிழந்து போனார். ஆழமாய் யோசித்தால் அவன் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை என்று தோன்றியது. அவன் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பாதித்தது போல ஈஸ்வருக்குத் தோன்றியது.

குருஜி சில நொடிகளில் இயல்பு நிலைக்கு மாறினார். “நீ சொல்வதும் சரி தான் ஈஸ்வர். ஆனால் ஒரு கம்ப்யூட்டரை ஒரு ப்ரோகிராம் போட்டு ஒரு விதமாக இயக்க முடியும் என்றால் இன்னொரு ப்ரோகிராம் போட்டு வேறு விதமாகவும் இயக்க முடியும் இல்லையா?

“முடியும். ஆனால் அந்த சித்தர்கள் போட்ட ப்ரோகிராமைப் புரிந்து கொண்டால் தான் வேறு ப்ரோகிராம் எப்படிப் போடுவது என்று சிந்திக்கக் கூட முடியும். அந்த அளவுக்கு திறமை இருக்கிறவர்கள் கைகளுக்கு அந்த சிவலிங்கம் போயிருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும்....

இது பற்றி அதிகமாகப் பேசி விட்டோமோ என்ற சந்தேகம் குருஜிக்கு வந்தது. அவன் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைப்பதற்குப் பதிலாக, தானும் பேசிக் கொண்டிருப்பது அபாயம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க குருஜி மெல்ல பேச்சை மாற்றினார்.

“நீ சித்தர்கள் யாரையாவது பார்த்திருக்கிறாயா ஈஸ்வர்?

“இல்லை குருஜி. நிறைய சக்தி வாய்ந்த ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் அது போல ஆட்கள் உண்டு. ஆனால் சித்தர்கள் அந்த சக்திகளையும் கடந்து போகக் கூடியவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஆட்கள் பார்க்கக் கிடைக்கவில்லை.

ஜவுளிக்கடையில் பார்த்தது சித்தர் என்று அவனுக்கு விளங்கவில்லையா என்று குருஜிக்கு சந்தேகம் வந்தது. கணபதி சொல்வதை வைத்துப் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் சித்தர் கண் மறைந்து போயிருக்க வேண்டும். ஈஸ்வர் அவரைச் சரியாகப் பார்க்கக் கூட நேரம் இருந்திருக்காது. கணபதியைப் பற்றிப் பேச்சு எடுக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் குருஜிக்கு அவன் பேச்சை எடுக்க முடியவில்லை. முடிந்திருந்தால் கணபதி பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார்.

குருஜி தன் மற்ற முக்கிய சந்தேகத்தைக் கேட்டார். ஈஸ்வர் தற்செயலாய் நான் நீ வேதபாடசாலைக்குள் நுழைந்த போது இந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டதைக் கவனித்தேன். என்ன காரணம்?

ஈஸ்வர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமாளித்தான். “வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்கிறதால் அப்படிக் கும்பிடத் தோன்றியது...

குருஜிக்கு நம்ப முடியவில்லை. இவன் ஆள் செண்டிமெண்ட் ரகமோ, வேதங்கள் மீது ஈடுபாடு உள்ள ரகமோ அல்ல. எதையோ மறைக்கிறான்.... என்னவாக இருக்கும்?

கடிகார முள் ஒன்றரை மணியைக் காட்டியது. குருஜி அவனைச் சீக்கிரம் அனுப்பி விட நினைத்தார். “சரி... ஈஸ்வர்.. உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்.... உன் நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன்...

ஈஸ்வர் எழுந்தான். “நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள் குருஜி.....

“இன்னும் எத்தனை நாள் இந்தியாவில் இருப்பாய் ஈஸ்வர்?

இனி மூன்று வாரம் வரை இருப்பேன் குருஜி. நீங்கள் இந்த வேதபாடசாலையில் எத்தனை நாள் இருப்பீர்கள் குருஜி?

“நான்.... நான்... நாளைக்குப் போய் விடுவேன்

“இந்த வேதபாடசாலையில் தங்குகிற சமயம் ஒரு சிறப்புச் சொற்பொழிவு தருவீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த முறை இல்லையா குருஜி

இந்த தடவை இல்லை ஈஸ்வர்.

ஈஸ்வர் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினான். போகும் போது திடீரென்று ஒரு உண்மை உறைத்தது. அந்த சிவலிங்கம் ஒரு சித்தர் தந்தது  என்று மட்டும் தான் ஆரம்பத்தில் அவன் குருஜியிடம் சொன்னான். பல நூறு வருடங்களாக சித்தர்கள் பூஜித்தது போன்ற தகவல்களை அவன் சொல்லி இருக்கவில்லை. ஆனாலும் கூடக் கடைசியில் அதைச் சொல்லி சித்தர்கள் சக்திகளை எந்த நோக்கத்திற்காக அந்த சிவலிங்கத்தில் ஆவாகனம் செய்திருக்கிறார்களோ என்று அவன் வாய் தவறிச் சொன்ன போது கூட அவர் ஆச்சரியப்பட்டு விடவில்லை. முதல் முறை அறிவதாக இருந்தால் கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் எதையும் குருஜி கேட்கவில்லை.....

ஈஸ்வர் காரை நெருங்கும் வரை குருஜியின் பார்வை தன் மேல் இருப்பது போலவே அவனுக்கு உள்ளுணர்வு சொல்லியது. காரை நெருங்கியவுடன் திடீர் என்று திரும்பிப் பார்த்தான். ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருஜி சடாரென்று ஜன்னலில் இருந்து விலகினார்.

வேதபாடசாலையை விட்டுக் காரில் கிளம்பும் போது ஈஸ்வருக்கு மனதில் மேலும் நிறைய கேள்விகள் இருந்தன.


(தொடரும்)


-          என்.கணேசன்

Tuesday, June 4, 2013

எதையும் புரிந்து செய்யுங்கள்!



அறிவார்ந்த ஆன்மிகம் - 7

த்தனை சுலோகங்கள் சொல்கிறோம், எத்தனை நேரம் பிரார்த்தனை செய்கிறோம், எத்தனை கோயில்களுக்கு எத்தனை தடவை போய் வருகிறோம் என்பதை வைத்தே ஆன்மிகத்தை அடையாளம் காணும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது.  ஆனால் அப்படி அடையாளப் படுத்துவது சரியா என்பதை விளக்க சுவாமி கமலாத்மானந்தர் ஒரு குட்டிக் கதை சொல்வதுண்டு.

ஒரு காட்டில் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்தில் வந்த வேடன் ஒருவன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தபடியே கிளிகள் பறந்து வந்து வலியில் சிக்கிக் கொண்டன. சிக்கிய பறவைகளைப் பிடிக்க வேடன் சென்றான்.

அப்போது அந்தப் பக்கம் ஒரு முனிவர் வந்தார். வலையில் சிக்கி இருந்த கிளிகளைப் பார்த்ததும் இரக்கப்பட்ட அவர் வேடனிடம் வேண்டிக் கொண்டார். வேடனே இந்தக் கிளிகளைக் கொல்லாதே

வேடன் சொன்னான். “சுவாமி எனக்கு இன்று இந்தக் கிளிகளே உணவு. இவற்றிற்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால் நான் இவற்றை விட்டு விடுகிறேன்.

முனிவர் தன்னிடம் இருந்த உணவை அந்த வேடனுக்குத் தந்து அவனிடம் அந்தக் கிளிகளை விடுவிக்கச் சொன்னார். உணவைப் பெற்றுக் கொண்ட அந்த வேடனும் அந்தக் கிளிகளை விடுவித்து விட்டுச் சென்றான்.

அவன் சென்ற பின் முனிவர் “கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று அந்த கிளிகளுக்குப் புத்திமதி சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழித்து வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்க அந்தக் காட்டுக்குள் வலையுடன் வந்தான். அவனைப் பார்த்ததும் கிளிகள் ஒன்று சேர்ந்து கூறின. கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

வேடனுக்கு அந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் நினைவு வைத்திருப்பது ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருந்தது. “இனி இங்கு நான் வலை விரித்தாலும் இவை என் வலையில் சிக்காது. எனவே இங்கு என் வலையை விரித்துப் பயனில்லைஎன்று எண்ணி வேறு இடம் தேடிப் போனான்.

சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் அந்த வேடன் அங்கு வந்தான். அவனைப் பார்த்தவுடனேயே கிளிகள் கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று கூறின.

வேடன் “முன்பு நடந்ததை இன்னுமா இந்தக் கிளிகள் நினைவு வைத்திருக்கின்றனஎன்று வியந்து கொண்டே வேறு இடம் சென்றான்.

மேலும் சில நாட்கள் கழிந்து மீண்டும் வேடன் அதே இடத்திற்கு வலை விரிக்க வந்த போதும் அவை முன்பு கூறியதையே கூறவே வேடன் திகைத்துப் போனான். என்றாலும் அவன் “இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு வேறெந்த மிருகமும், பறவையும் கிடைக்கவில்லை. அதனால் இந்தக் கிளிகள் சிக்கா விட்டாலும் சரி வேறு ஏதாவது பறவைகள் என் வலையில் வந்து சிக்குகிறதா எனப் பார்க்கலாம்என்று நினைத்தவனாய் அங்கேயே வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.

வேடன் வலை விரிப்பதையும் தானியங்கள் தூவுவதையுமே பார்த்துக் கொண்டிருந்த கிளிகள் கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று சொல்லிக் கொண்டே பறந்து வந்து வலையில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் அந்த வேடனுக்கு அவை சொன்னதையே சொல்லும் கிளிகள் என்றும் முனிவர் கூறியதையே சொல்ல முடிந்த அவைகளுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை என்று புரிந்தது.

சுவாமி கமலாத்மானந்தர் சொன்ன இந்தக் குட்டிக் கதை இன்றைய ஆன்மிக சூழலை அழகாகப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. அந்த முனிவர் கிளிகள் மேல் உள்ள இரக்கத்தில் சொல்லி விட்டுப் போன புத்திமதி போல மனித குலத்தைக் காப்பாற்றவும் வழிநடத்தவும் கூடிய எத்தனையோ உயர்வான விஷயங்களை பெரியோர் பலர் நமக்காகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். அந்த வகையில் தான் நமக்கு எத்தனையோ ஞானப் பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றன. வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை, திருக்கிறள், குரான், பைபிள் எல்லாம் நாம் இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளித்து விடாமல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடந்து செல்லத் தான் பெரும் கருணையுடன் நமக்கு கொடுக்கப் பட்டிருக்கின்றன.  

அவற்றைப் படிப்பது சுலபம். கேட்பது சுலபம். மேற்போக்காகப் புரிந்து கொள்வதும் கூட சுலபம் தான். ஆனால் அவற்றிலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி விடுவது முட்டாள்தனம். அவற்றில் சில கோட்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்தக் காலத்தில் எந்த நோக்கத்தில் எந்த உள்நோக்கத்தில் சொல்லப்பட்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாய் பின்பற்றுவது மடமை. அப்படிச் செய்பவர்களுக்கும் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கிளிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நமக்கு சொல்லப்பட்டிருக்கும் ஆன்மிக மார்க்கத்தில் கண்மூடித்தனமாகச் செல்லும் போது வெளித் தோற்றத்திற்கு அது ஞானமாகவே தோன்றலாம். வேடன் அந்தக் கிளிகள் ஒப்பித்ததைப் பார்த்து கிளிகள் முன்பு நடந்ததை நினைவு வைத்துக் கொண்டிருக்கின்றன, எச்சரிக்கையாக இருக்கின்றன என்று எண்ணியது போலத் தான் அதுவும்.

உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்.

நமக்குள்ளே சக்கையை சேகரித்துக் வைத்துக் கொண்டிருக்கிறோமா, ஆன்மிக சாரத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறோமா என்பது, எதையும் புரிந்து கொண்டு செய்கிறோமா, புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாகச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் வெளிப்படும்.  

படிப்பது புனித நூல்களே என்றாலும், சொல்வது உயர்வான சுலோகங்களே என்றாலும், அதில் மனம் தங்கவில்லையானால் அது எந்தப் பயனையும் தராது. அதன் உண்மையான பொருள் புரிய வேண்டும், புரிந்ததில் மனம் தங்க வேண்டும். அது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது தான் சாரத்தைப் பெறுகிறோம் என்று பொருள். அது தான் நம் மனத்தைப் பண்படுத்தும்.

கோயில்களுக்குச் செல்லும் போதும் மனதில் இறை சிந்தனை இல்லாவிட்டால் அதுவும் கடைவீதிக்குச் செல்வது போன்ற மற்ற செயல்களின் கணக்கிலேயே சேரும். மனதில் பக்தியும், சிரத்தையும் இருந்தால் மட்டுமே இறையருள் பெற முடியும்.

அதே போல் மற்ற ஆன்மிகச் செயல்களையும் புரிந்து கொண்டு முழு மனதோடு லயித்துச் செய்யுங்கள். அப்போது தான் அவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கின்றனவோ அதன் பலன்களை அடைய முடியும். அப்படிப் புரிந்து கொள்ளாமல் எந்திரத் தனமாக  பெயரளவில் செய்யப்படும் செயல்கள் வெளிப்பார்வைக்கு ஆன்மிகமாகத் தெரிந்தாலும் அவை நாம் போகும் வழியில் துணைக்கு வாரா!

-          என்.கணேசன்   
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 23-04-2013

Thursday, May 30, 2013

பரம(ன்) ரகசியம் – 46




து பழைய காலத்து நூலகம். உள்பரப்பே சுமார் 4700 சதுர அடிகள் இருந்தது. அடுத்த வருடம் 85ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அங்கு மிகப் பழைய அபூர்வ புத்தகங்களும் கிடைக்கும்,  இரண்டு நாள் முன்பு வெளியான பிரபல புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் வயதானவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், பொழுது போக்கு புத்தகங்கள் படிப்பவர்கள் என்று எல்லா தரப்பு உறுப்பினர்களையும் கொண்டது. பார்த்தசாரதி நூலகம் திறக்கப்படுவதற்காக வெளியே காத்திருந்தார். அவரை இந்த நூலகம் வரை வர வைத்தது ஒரு மனக்கணக்கு தான்.

விசேஷ மானஸ லிங்கம் பற்றிய தகவல்கள் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பே எழுதப்பட்ட புத்தகத்தில் இருந்திருக்கிறது. அது அடிக்கடி திடீர் என்று ஒளிரும் தன்மை கொண்டிருக்கிறது என்ற தகவலும் அதில் இருக்கிறது. ஆனால் பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ லிங்கம் என்பது வெளியுலகம் இத்தனை காலமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கமும் அடிக்கடி ஒளிர்வதை ஒருசிலர் பார்த்து இருக்கிறார்கள். அந்தத் தகவலும் இந்தத் தகவலும் யாரோ சிலருக்கு சமீபத்தில் தெரியவர, பசுபதி பூஜை செய்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ லிங்கமாக இருக்க வேண்டும் என்று அனுமானித்திருக்கலாம் என்ற சந்தேகம் பார்த்தசாரதிக்கு வந்தது. 

அதனால் சமீப காலமாக யார் எல்லாம் அந்தப் புத்தகம் படித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தால் ஏதாவது துப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று எண்ணினார். அதைப் படித்த ஆட்கள், பசுபதியின் சிவலிங்கம் பற்றியும் தெரிந்த ஆட்களாய் இருந்தால் அதை வைத்து ஏதாவது துப்பு துலக்கலாம் என்று தோன்றியது. இதில் ஒரு துப்பும் கிடைக்காமலும் போகலாம், இந்தக் கணக்கே தப்பாக இருக்கலாம் என்றாலும் இப்படிப்பட்ட கணக்குகளில் தான் அவர் பல வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்திருக்கிறார். நீலகண்ட சாஸ்திரியின் மகன் தன்னிடமுள்ள புத்தகத்தை பத்து வருடங்களுக்கு மேலாக யாரிடமும் தரவில்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைப் பற்றி யாரிடமாவது பேசி அதற்கும் அதிக காலமாகி விட்டது என்று சொன்னார். அதனால் அவர் மூலமாக இந்தச் செய்தி பரவி இருக்க வாய்ப்பில்லை...

நேற்று காலையில் நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஆன்மிக பாரதம்என்ற பழைய காலத்துப் புத்தகம் நகரத்தில் எந்தெந்த நூலகங்களில் இருக்கின்றன என்பதை விசாரிக்க ஆரம்பித்தார். மாலையில் தான் இரண்டு நூலகங்களில் அந்தப் புத்தகம் ஒவ்வொரு பிரதி இருப்பது தெரிய வந்தது. மாவட்ட மைய நூலகத்திலும், இந்த நூலகத்திலும் இருப்பது தெரிந்ததும் முதலில் மாவட்ட மைய நூலகத்திற்குச் சென்றார்.

நீலகண்ட சாஸ்திரியின் ஆன்மிக பாரதம்தூசி, சிலந்தி வலையுடன் ஆன்மிகப் பிரிவு அலமாரி ஒன்றில் இருந்தது. வருடக்கணக்கில் அந்த நூல் படிக்கப்படவில்லை என்பது அதைப் பிரிக்கும் போதே தெரிந்தது. பிரித்து 178வது பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டு வைத்தார். நூலக கம்ப்யூட்டரில் அந்தப் புத்தகத்தை கடைசியாகப் படிக்க எடுத்துச் சென்றது ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்கு முன்பு என்று குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இந்த நூலகத்திற்கு நேற்று மாலையே வருவதாக இருந்தார். ஆனால் நூலகம் மூடப்படும் நேரமாகி விட்டிருந்தபடியால் காலையில் வந்திருக்கிறார்.

நூலகம் திறக்கப்பட்டவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பார்த்தசாரதி நூலக அதிகாரி உதவியுடன் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துப் பார்த்தார். புத்தகத்தில் தூசி, சிலந்தி வலை இல்லை. தனியார் நூலகம் என்பதால் அடிக்கடி தூசி தட்டி துடைத்து வைக்கும் பழக்கம் இருக்கிறதோ என்று எண்ணியவராக புத்தகத்தைத் திறந்து பார்த்தார். புத்தகத்தின் உள்ளே முதல் பக்கத்தில் ஒட்டி இருக்கும் நூலகக் குறிப்புக் காகிதம் இல்லை. நூலக உறுப்பினர் எண், புத்தகம் திருப்பித் தர வேண்டிய தேதி ஆகியவை எழுதி வைக்கப்படும் தாள் கிழிக்கப்பட்டிருந்தது. பார்த்தசாரதி அதைக் காண்பித்து விட்டுச் சொன்னார். “இந்தப் புத்தகத்தை இந்த ஒரு வருஷ காலத்தில் யாரெல்லாம் படிச்சிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டி இருந்தது. அந்தப் பக்கத்தையே கிழிச்சிட்டாங்களே

ஆச்சரியப்பட்ட நூலக அதிகாரி சொன்னார். “கொண்டு போகிற புத்தகத்தைப் பத்திரமாய் வைக்கிற பழக்கம் பல பேர் கிட்ட கிடையாது. குழந்தைகள் கைல கிடைக்கிற மாதிரி புத்தகத்தை வச்சிடறாங்க. குழந்தைகள் கிழிச்சிடறாங்க... பரவாயில்லை. இந்தத் தகவல் எங்க கம்ப்யூட்டர்ல இருக்கும். வாங்க பார்த்துச் சொல்றேன்.

அவர் பார்த்தசாரதியைத் தனதறைக்கு அழைத்துச் சென்றார். கம்ப்யூட்டரில் தேடிய அதிகாரி முகத்தில் திகைப்பு பெரிய அளவில் தெரிந்தது.

பார்த்தசாரதி கேட்டார். “என்ன ஆச்சு?

“ஏதோ வைரஸ் அட்டேக் போல இருக்கு. எந்தப் புத்தகம் எடுத்ததற்கும் ரிகார்டு இங்கே இல்லை. எல்லாம் அழிஞ்சு போயிருக்கு... நேற்றைக்கு வரைக்கும் சரியாய் தானே இருந்துச்சு...

பார்த்தசாரதியின் சந்தேகம் உறுதிப்பட்டது. புத்தகத்தில் ஒட்டி இருக்கும் தாளும் கிழிந்து போய் கம்ப்யூட்டரில் உள்ள ரிகார்டுகளும் அழிந்து போய் இருப்பது இயல்பாக இல்லை. அவர் நேற்று போட்ட மனக்கணக்கை யாரோ தெரிந்து கொண்டு வேகமாக இயங்கி இருக்கிறார்கள்.....

“இப்படி ஆகிறது உண்டா?பார்த்தசாரதி கேட்டார்.

“என் சர்வீஸ்ல இப்படி ஆனதில்லை சார்

“நான் இந்தப் புத்தகம் பற்றிக் கேட்டதை நீங்கள் யார் கிட்டயாவது சொன்னீங்களா?

“இல்லையே சார். நானே தான் கம்ப்யூட்டரில் தேடிப்பார்த்து இருக்கிறதைக் கண்டு பிடிச்சு சொன்னேன்....

பார்த்தசாரதிக்கு அவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது. அப்படியானால் அவருடைய ஆபிசில் இருந்து தான் தகவல் கசிந்திருக்க வேண்டும். சென்ற முறை சீர்காழியில் அந்த இளைஞனைத் தேடிப் போன போதும் இதே தான் நிகழ்ந்திருக்கிறது....

பார்த்தசாரதி கேட்டார். “புத்தகங்களை எடுத்துப் படிச்சவங்க பத்தின தகவல்கள் மட்டும் அழிஞ்சிருக்கா? இல்லை உங்க உறுப்பினர்கள் பத்தின தகவல்கள் எல்லாம் சேர்ந்து அழிஞ்சு போயிருக்கா?

“புத்தகங்களை எடுத்துப் போனதும், திருப்பித் தந்ததுமான தகவல்கள் மட்டும் அழிஞ்சு போயிருக்கு சார்.  உறுப்பினர் பத்தின தகவல்கள் எல்லாம் அப்படியே இருக்கு

“எத்தனை உறுப்பினர்கள் இருக்காங்க?

“இன்றைய தேதியில் 18365 பேர் இருக்காங்க சார். இதில் 12000 பேர் ரெகுலரா வந்து போறவங்க

பரமேஸ்வரன் வீட்டு விலாசத்தைத் தந்த பார்த்தசாரதி இந்த விலாசத்துல ஏதாவது உறுப்பினர் இருக்காங்களான்னு பாருங்கள்”.

அந்த நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார். மீனாட்சிங்கறவங்க பேர் இருக்கு. இது தொழிலதிபர் பரமேஸ்வரன் ஐயா பொண்ணு. அவங்க அடிக்கடி இங்கே வர்றவங்க. அவங்க நல்ல மாதிரி ...

பார்த்தசாரதி தலையாட்டினார். அவங்க இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிப்பாங்களா?

அவங்க அதிகம் நாவல்கள் தான் படிப்பாங்க. எப்பவாவது பக்திக் கதைகளும் படிப்பாங்க. இந்த மாதிரி சீரியஸான புத்தகங்கள் எல்லாம் எடுத்துகிட்டு போனதாய் எனக்கு நினைவில்லை....

வேறு யாரெல்லாம் இதைப் படித்திருக்கலாம் என்று தெரியவில்லையே என்று பார்த்தசாரதி யோசித்தார். புத்தகத்தை எடுத்துப் போய் தான் படித்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இங்கேயே படிக்கிற ஆள்களும் உண்டு. அப்படி யாராவது படித்திருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.

பார்த்தசாரதி எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். தென்னரசுவைப் பார்க்கப் போக வேண்டும்.... திடீர் என்று நூலக அதிகாரியிடம் கேட்டார். “உங்க உறுப்பினர்கள்ல தென்னரசுங்கற பேர் இருக்கான்னு பாருங்கள்

நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார். “இருக்கு சார். அந்தம்மா அளவுக்கு இல்லைன்னாலும் இவரும் அடிக்கடி வர்றவர் தான்

“இவர் எந்த மாதிரியான புத்தகங்கள் படிப்பார்?

நூலகர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “இவர் கொஞ்சம் சீரியஸ்  ரீடிங் தான். அதிலும் இலக்கியம் அதிகம் படிப்பார்.

“இவர் இந்த ஆன்மிக பாரதம் புத்தகத்தைப் படித்திருக்கலாமா?

நூலகருக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

பார்த்தசாரதி அவருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார். ஈஸ்வரின் தந்தையுடன் சேர்ந்து சிறிய வயதிலேயே சிவலிங்கம் ஒளிர்வதைப் பார்த்த நபர் தென்னரசு...... பரமேஸ்வரன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்....

ணபதி அதிகாலையில் இருந்தே நிறைய யோசித்தான். அரக்கு வைத்து மூடிய உறையில் வந்த அந்த பத்தாயிரம் ரூபாயை பிள்ளையாருக்கு எப்படி செலவழிப்பது என்கிற யோசனை தான் அது. பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருந்தாலும் இந்த பத்தாயிரம் ரூபாயில் அதிகபட்சமாய் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். பிள்ளையாருக்குச் செலவு செய்யப் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்தான்.

நேற்று மீதி வைத்திருந்த அம்மாவின் சீடைகளைச் சாப்பிட்டுக் கொண்டே பிள்ளையாரிடம் பேசினான்.  “பிள்ளையாரே, நான் இங்கே உங்கப்பாவுக்குப் பூஜை செய்ய வந்த பிறகு நம் ரெண்டு பேருக்குமே யோகம் அடிக்க ஆரம்பிச்சிருக்குன்னு தான் சொல்லணும். எனக்கும் உனக்கும் பட்டுவேஷ்டி கிடைச்சுது. எனக்கு நாள் ஒண்ணுக்கு ஐநூறு ரூபாய் குருஜி தர்றதா சொல்லி இருக்காரு. எனக்கு கிடைக்கிற மாதிரி உனக்கும் மொத்தமா பணம் கிடைச்சிருக்கு பாரேன்...

மணியைப் பார்த்தான். மணி 8.55. ஐந்து நிமிடங்களில் ருத்ர ஜபம் செய்ய ஐந்து நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்று நினைத்தவன் கை கால் கழுவிக் கொண்டு வந்து அந்த செக்கை எடுத்து இன்னொரு தடவை மகிழ்ச்சியாகப் பார்த்து விட்டு அந்த செக்கை சிவலிங்கத்தின் அடியில் வைத்து எல்லாம் உன் கிட்ட வந்த ராசிஎன்று சொல்லி சாஷ்டாங்கமாக வணங்கினான்.

கண்களை மூடி வணங்கி எழுந்தவன் கண்களைத் திறந்த போது சிவலிங்கம் திடீர் என்று ஒரு கணம் ஜோதியாய் ஒளிர்ந்தது. மறு கணம் பழைய நிலையிலேயே சிவலிங்கம் இருக்க கணபதிக்கு தான் கண்டது பிரமையா உண்மையா என்கிற சந்தேகம் வந்தது. அவன் உடலில் இன்னும் மயிர்கூச்செறிந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது பார்த்த காட்சி உண்மை போல இருந்தது. கணபதி திகைப்போடு சிவலிங்கத்தைப் பார்த்தான். குருஜி இதைச் சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

அவன் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் நான்கு வேதபாடசாலை மாணவர்கள் ருத்ர ஜபம் செய்ய வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் முதலில் கதவை மூடிப் பிறகு ஜன்னல்களை எல்லாம் மூடினார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கணபதி ஜன்னல் வழியாகக் கூட ஈஸ்வரைப் பார்த்து விடக்கூடாது, வெளியேயும் வந்து விடக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தது.

“ஏன் கதவையும் ஜன்னல்களையும் மூடறீங்க?கணபதி குழப்பத்துடன் கேட்டான்.

ருத்ர ஜபம் பண்றப்ப வேற எந்த சத்தமோ தொந்திரவோ வந்துடக் கூடாதுன்னு குருஜி சொல்லி இருக்கார். 

கணபதி தலையாட்டினான். அவர்கள் பூஜை அறையில் இருந்தே பத்தடி தள்ளி உட்கார மறுபடி குழப்பம் அடைந்த கணபதி சொன்னான். “இது ஏன் இவ்வளவு தள்ளி உட்கார்ந்து ஜபம் செய்யறீங்க. பக்கத்துல வாங்களேன்

இதற்குப் பதில் உடனடியாக வரவில்லை. சிறிது கழித்து பலவீனமாய் அவர்களில் ஒருவன் சொன்னான். “பரவாயில்லை...

அவர்கள் ருத்ரஜபம் ஆரம்பிக்க கணபதி சிவலிங்கத்திற்கு அருகில் ஒரு ஸ்தோத்திர புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். ஆனால் மனம் ஸ்தோத்திரத்தில் இசையவில்லை. சற்று முன் ஒளிர்ந்த சிவலிங்கம் பற்றியும், இப்போது தள்ளி உட்கார்ந்திருந்து ருத்ர ஜபம் செய்யும் வேதபாடசாலை மாணவர்கள் பற்றியும் மனம் யோசித்தது.

‘இந்த சிவலிங்கத்தின் சக்தி தெரிந்து தான் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் தள்ளி பயபக்தியுடன் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது. இதன் சக்தி தெரியாமல் நான் தான் கொஞ்சம் கூட பயபக்தி இல்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறேனோ

அம்மா தந்தனுப்பிய சீடையை நேற்றும் இன்றும் இறைவன் முன்னாலேயே கொறித்தது நினைவுக்கு வர அவனுக்கு அவமானமாக இருந்தது. மேலும் ஏதோ கிழவி கதைப்பது போல தினமும் இந்த சிவலிங்கம் முன்னால் உட்கார்ந்து கதைக்கிறோமே இது நியாயமா என்று மனசாட்சி கேட்க அவனுக்குப் பெரியதாக குற்ற உணர்ச்சி பிறந்தது.

சிவனிடம் மனதாரச் சொன்னான். சிவனே என்னை மன்னிச்சுடு. எனக்கு படிப்பு மட்டுமல்ல, அறிவும் கிடையாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் எங்கம்மா, அக்காங்க, பிள்ளையார் இவங்க நாலு பேர் தான். சின்ன வட்டத்துலயே இருந்துட்டேன். இந்த மரியாதை, சுலோகம், ஜபம் இதெல்லாம் எனக்கு பிடிபட மாட்டேன்குது. இத்தனையும் மீறி நீ எனக்கு இது வரைக்கும் நல்லதே செய்திருக்கிறாய். பெருந்தன்மையாய் இருந்திருக்கிறாய். இனி மேல் நான் உன் கிட்ட ஒழுங்கா நடந்துக்கறேன். இது வரை நடந்துகிட்டதைப் பொறுத்துக்கோ. முக்கியமாய் சீடையை உலகத்தில் முதல் தடவை பார்க்கிற மாதிரி உன் முன்னாலேயே வாயில் போட்டுகிட்ட்து மகா தப்பு தான். ...பக்தியை விட நாக்கு முந்திகிட்டது தப்பு தான் மன்னிச்சுக்கோ. அம்மா சீடையை நல்லா செய்வா. அதான் அப்படி...

சிவலிங்கத்திடம் கணபதி பேசிக் கொண்டிருக்கையில் ஈஸ்வரின் கார் வேதபாடசாலைக்குள் நுழைந்தது. அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த குருஜி ஜன்னல்  வழியாக மறைவில் நின்று ரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈஸ்வர் காரை விட்டு இறங்கப் போன போது காலடியில் சிவலிங்கம் தெரிய பதறி போய் காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அந்தரத்தில் தெரிந்த சிவலிங்கம் இன்று வேதபாடசாலை மண்ணில் அவன் இறங்கப் போகும் இடத்தில் தெரிந்தது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. அவன் மறுபடி கீழே பார்த்தான். இப்போது சிவலிங்கம் காட்சி அளிக்கவில்லை.

ஆனாலும் சிவலிங்கம் பார்த்த இடத்தில் காலை வைக்க ஈஸ்வருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு கணம் யோசித்தவன் குனிந்து அந்த மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு இறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்  


Monday, May 27, 2013

உபவாசம் எதற்காக?




அறிவார்ந்த ஆன்மிகம் - 6


ல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.  கிறிஸ்துவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள். எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பிடத்தைப் பெற்று இருப்பது தெளிவாகிறது.

சமஸ்கிருதத்தில் உபஎன்றால் அருகில் என்று பொருள். வாசம்வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். ஆகவே உபவாசம் என்பதற்கு இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள் சொல்லப்படுகின்றது. சிலர் இறையருளைப் பெறவும் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கிறார்கள். சிலர் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள்.

உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கிடத்தல் என்றாலும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருப்பதிலிருந்து குறிப்பிட்ட உணவை மட்டும் உண்டு அல்லது குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தவிர்த்து உபவாசம் இருப்பது வரை பல வித உபவாசங்களும் உபவாசமாகவே கருதப்படுகின்றன.

நமது நேரமும், சக்தியும் உணவைத் தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம். இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்படுகின்றன. புத்தி கூர்மையாகிறது. மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது.

எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங்களுக்கு அடிமையாகி செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் வேட்கையும் தூண்டுதலும் அதிகரிக்கும். உண்ணா நோன்பு இருக்கையில் புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. அதனால் ஆசைகளும், விருப்பங்களும் கீழ்நிலையிருந்து விலகி உன்னதமானவையாக மாறுகின்றன. இறைவனை நினைக்கவும் சிந்திக்கவும் இதை விடச் சிறந்த சூழல் வேறென்ன இருக்க முடியும்?

ஆனால் உபவாசம் இருப்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல என்பதில் எல்லா மதங்களும் உறுதியாக இருக்கின்றன. உபவாச காலத்தில் மனதைக் கட்டுப்படுத்தி காம குரோதங்களை விட்டொழித்து முழு மனதையும் இறைவனிடத்திலும் உயர்ந்த விஷயங்களிலும் இருத்த வேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்துவதாக இஸ்லாம் கூறுகிறது. “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒருபடி போய் நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கிறார். ரம்ஜானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரம்ஜானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் அதன் பொருள். எனவே அத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. விரதம் முடிந்த பின் நாக்கின் தீவிர வேட்கைக்கு ஆளாகி விடக்கூடாதென்றும், உண்ணா நோன்பின் நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும் இஸ்லாம் கூறுகிறது.

உணவின்றி உபவாசம் இருத்தல் அதிக நேரம் ஜெபத்தில் இருக்கவும், சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் உதவும் ஆன்மிக வழிமுறையாக கிறிஸ்துவம் கருதுகிறது. ஆனால் அது சம்பிரதாயமாகவும், போலித்தனமாகவும் மாறி விடக் கூடாதென்று இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார். “உபவசிக்கும் போது மனுஷருக்குக் காணப்படாமல் அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவுக்கு மட்டும் காணும்படியாகஇருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் மெய்ஞானத்தை அடைய வேண்டுமென்றால் சில உடல், மனக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன் ஒரு பகுதி தான் உபவாசம். எந்த ஒரு எந்திரமும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்க நேரிடும் சீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க நேரிட வேண்டியுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்குகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம்.

அப்படிப்பட்ட ஓய்வு உடலுக்கு உபவாச காலத்தில் கிடைப்பதால் உண்ணா விரதம் இருப்பது ஆரோக்கிய ரீதியாகவும் பயனளிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  தொடர்ச்சியாக விரதங்களைக் கடைப்பிடிப்பவர்களின் இதயத்துக்கு உபவாசம் நன்மை செய்கின்றதாக அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. உதா (Utah) மாநிலத்தில் மருத்துவர்கள் 200 நோயாளிகளிடம் நடத்திய அந்த ஆய்வில் விரதம் கடைப்பிடித்த நோயாளிகள் விரைவில் இருதய நோய்களில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனை ஆஞ்சியோகிராம், இரத்த நாளங்களின் எக்ஸ்-ரே போன்றவற்றின் ஊடாக உறுதியும் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மோர்மோன் என்னும் மதப்பிரிவினர் மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உபவாசம் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். இப்படியாக அந்த நோன்பு இருப்பவர்களுக்கு பிற நோயாளிகளைக் காட்டிலும் 58 சதவீதம் இதய நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பதும கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக இன்னொரு ஆய்வு மூலமாக அமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கார்டியோலஜி  தகவல் வெளியிட்டள்ளது. இருப்பினும் இந்த ஆய்வில் எவ்வளவு கால நோன்பு எப்படியான இதய ஆரோக்கியத்துக்கு வழி செய்கின்றது என்பதை உறுதியாக இன்னும் ஆராய்ந்து அறிய முடியவில்லை என மருத்துவர் பெஞ்சமின் டி. ஹோர்ன் தெரிவித்திருக்கிறார்.

"நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே"

என்று பாடுகிறான் பாரதி.  அதாவது நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன என்று வியக்கிறான் பாரதி. உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மையடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதியும் சுட்டிக் காட்டுகிறான். ‘லங்கணம் பரம் ஔஷதம்என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து என்பது தான்.

இப்படி ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பயனளிக்கும் உபவாச விரதத்தை நாமும் இருந்து இரு வகையிலும் பயனடையலாமே!

-          என்.கணேசன்
-          நன்றி:  தினத்தந்தி – ஆன்மிகம் - 16-04-2013



Thursday, May 23, 2013

பரம(ன்) ரகசியம் – 45




குருஜி அனுப்பிய ஆள் காமாட்சியிடம் இருந்து அரக்கு வைத்து மூடிய அந்த உறையை வாங்கிக் கொண்டு வந்தான். அவன் வரும் வரை பொறுமை இல்லாமல் காத்திருந்த குருஜி அவனிடம் கேட்டார். “அந்தம்மா எதாவது சொன்னாங்களா?

“இல்லை குருஜி. கணபதிக்கு கொஞ்சம் சீடையும் கொடுத்து அனுப்பி இருக்காங்க. கணபதிக்கு சீடைன்னா இஷ்டமாம்

அவன் அந்த உறையோடு சீடையையும் தர குருஜி பொறுமை இழந்தவராக முகம் சுளித்தார். ‘சீடையை அவன் கிட்டயே அப்புறமா குடு.

உறையை வாங்கிக் கொண்டு அவர் அவனைக் கால் மணி நேரம் கழித்து வரச் சொன்னார். அவன் போன பின் அந்த உறையை அவசரமாகப் பிரித்தார்.

அதன் உள்ளே பழுப்பேறிய வெள்ளைத் தாளில் எழுதி இருந்த கடிதத்தைப் படித்தார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,

அநேக ஆசிர்வாதம்.

இந்தக் கடிதம் உனக்கு விந்தையாக இருக்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் இந்த விவரங்கள் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனாலும் இதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பதை நீ தினமும் பக்தியுடன் வணங்கும் பிள்ளையார் மீது ஆணையாக நான் கூறுகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் இதில் சொல்லப்பட்டுள்ள இரகசியத் தகவல்களை உன் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் நீ சொல்லக் கூடாது என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்களால் ஒரு சிவலிங்கம் உருவாக்கப்பட்டது.  தங்கள் ஞானதிருஷ்டியால் எதிர்காலத்தில் கலி முற்றிப் போய் ஏற்பட இருக்கும் சீரழிவுகளை அறிந்த அந்த  சித்தர்கள் அக்காலத்தில் மனித குலத்தைப் பேரழிவில் இருந்து காக்கும் எண்ணத்தில் தங்களிடம் இருக்கும் அபூர்வ சக்திகளை எல்லாம் அந்த சிவலிங்கத்தில் ஆவாஹனம் செய்து அதை வணங்கினார்கள். விசேஷ மானஸ லிங்கம் என்று நாமகரணம் சூட்டிய அந்த சிவலிங்கத்தை  இரகசியமாய் மிகுந்த பக்தியுடன் பூஜித்து வந்தார்கள்.

அவர்கள் காலத்திற்குப் பின் தகுதி வாய்ந்த அடுத்த மூவர் குழுவிற்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கத் தந்து விட்டுச் சென்ற அந்த சித்தர்கள் பிற்காலங்களிலும் அதே போல் தூய்மையான பக்தி, கூர்மையான அறிவு, ஞானசித்தி பெற்றிருந்தவர்களுக்கே அந்த விசேஷ மானஸ லிங்கம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விதியை விதித்து விட்டுச் சென்றனர். ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே அந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்து வந்தது. தொடர்ந்து பூஜை செய்த சித்தர்களும் அந்த லிங்கத்திற்கு சக்தி சேர்த்து வந்தார்கள்.

ஒரு கால கட்டத்தில் தற்செயலாக அந்த விசேஷ மானஸ லிங்கம் பூஜிக்கப்படுவதைக் காண நேர்ந்த சோழ மன்னன் முதலாம் இராஜாதி இராஜ சோழன் அதனால் ஈர்க்கப்பட்டு அதற்கு தன் பாட்டனார் இராஜ இராஜ சோழனை விடப் பெரிய கோயில் ஒன்றை கட்ட ஆசைப்பட்டு விசேஷ மானஸ லிங்கத்தை சித்தர்களிடம் கேட்டான்.

எதிர்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வியாபாரத் தலங்களாக மாறி விடும் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்திருந்த சித்தர்கள் அதை மன்னனுக்குக் கூடத் தர சம்மதிக்கவில்லை. உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்ட அவர்களும், அந்த சிவலிங்கத்தை வழிவழியாக பூஜித்து வந்தவர்களும் பொது மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாய் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வந்தார்கள்.

ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே இருந்த விசேஷ மானஸ லிங்கம் பின்பு தகுதி வாய்ந்த மற்றவர்களிடமும் கூடச் சென்றது. ஆனால் அதை ரகசியமாகவும், தூய பக்தி குறையாமலும் பூஜிக்கும் தன்மை உள்ளதா என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டே அவர்களுக்குத் தரப்பட்டது. அதில் இக்காலம் வரை எந்தச் சிறு விலகலும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

இதை எல்லாம் உன்னிடம் நான் தெரிவிக்கக் காரணம் என்ன என்று நீ வியக்கலாம். அதன் காரணம் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் பெரும் பாக்கியம் உனக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது தான். இந்தக் கடிதம் உன்னை வந்தடையும் காலத்திற்கு சற்று முன்னதாகவோ, சற்றுப் பிந்தியோ வர இருக்கும் இந்த வாய்ப்பை நீ ஏற்றுக் கொண்டு முறையாகவும், ரகசியமாகவும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வருவாயாக!

சாதாரணமானவனாகவே உன்னை நீ நினைத்துக் கொண்டு இருப்பதால் இதற்குப் பொருத்தமானவன் தானா என்று உன்னையே நீ சந்தேகிக்கலாம். சுபாவத்தில் எளிமையானவனும், தூய்மையானவனுமான உனக்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் முழுத்தகுதியும் உண்டு. அதனால் தான் நீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள். விசேஷ மானஸ லிங்கத்தின் மற்ற இரண்டு பாதுகாவலர்களை இன்னேரம் நீ சந்தித்திருக்கலாம், அல்லது விரைவில் சந்திக்கலாம்.

உன்னிடம் விசேஷ மானஸ லிங்கம் வந்து சேரும் போது அது முழுமையான சக்திகளைப் பரிபூரணமாய் பெற்று இருக்கும். இனி அதற்குத் தேவை சக்தி வாய்ந்த, சக்தி சேர்க்கும் சித்தர்களோ, பூஜிப்பவர்களோ அல்ல. அதற்குத் தேவை அதை நன்மை நிறைந்த மனதுடன் தூய்மையாய் பூஜிப்பவர்களே.

விசேஷ மானஸ லிங்கம் தன் சரித்திரத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் உன்னிடம் வந்துள்ளது. பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அப்படி நேராமல் காக்கின்ற பொறுப்பு உங்கள் மூவருக்கு உண்டு. அந்த சிவலிங்கத்தின் அருகிலேயே எப்போதும் இருக்க முடிந்த உனக்கு பொறுப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

உன்னால் முடியுமா என்று நீ சந்தேகிக்க வேண்டியதில்லை. முடியாத பொறுப்புகள் அறிஞர்களால் தரப்படுவதில்லை. உனக்கு விசேஷ மானஸ லிங்கம் நிறைய கற்றுத் தரும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்....

குருஜி படித்துக் கொண்டிருக்கையில் ஜன்னல் வழியே திடீரென பெரும் காற்று வீசியது. அவர் சுதாரிக்கும் முன் அவர் கையில் இருந்த அந்தக் கடிதம் நழுவி காற்றில் பறந்தது. ஜன்னல் வழியே ஒரு பெரும்சக்தி அந்தக் கடிதத்தை வெளியே இழுத்தது போல் இருந்தது. குருஜி வேகமாய் அந்தக் கடிதத்தைக் கைப்பற்றும் முன் கடிதம் ஜன்னல் வழியே காற்றில் பறக்க ஆரம்பித்தது.

திகைத்துப் போன குருஜி அதி வேகமாக வெளியே ஓடினார். ஆனால் அந்தக் கடிதம் காற்றில் பறந்து சென்று தூரத்தில் சருகுகளை எல்லாம் சேர்த்து இரண்டு மாணவர்கள்  எரித்துக் கொண்டு இருந்த தீயில் விழுந்தது. அந்தக் காகிதம் எரிந்து கருகுவதையே பார்த்துக் கொண்டு குருஜி நின்றார்.  

குருஜியைக் கண்டதும் சருகுகளை எரித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் பயபக்தியுடன் எழுந்து நின்றனர். தீயில் விழுந்த அந்தக் காகிதம் அவருக்குத் தேவைப்பட்ட முக்கியக் காகிதமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. “குருஜி இந்தக் காகிதம்.....என்று ஒருவன் இழுத்தான்.

தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு குருஜி புன்னகைத்தார். “வேண்டாத காகிதம் தான்.

சொல்லி விட்டுத் திரும்பினவருக்கு அந்தக் கடிதம் மேற்கொண்டு சொல்ல வந்தது என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது. எத்தனை சிந்தித்தும் அவரால் கணபதிக்குச் சொல்லப்பட்ட அறிவுரை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.

அரக்கு வைத்து மூடிய உறையையும், முன்பு எப்போதோ எழுதியது போல் தெரிந்த பழுப்புக் காகிதத்தையும், அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது என்று அவர் காமாட்சியிடம் சொன்னதையும் வைத்துப் பார்த்தால் யாரோ முன்பே அவருக்குக் கொடுத்து வைத்த உறையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மேலும் மூளை வேலை செய்த போது ஜோதிடரின் குருநாதர் சிதம்பரநாத யோகி சாவதற்கு முன் கொடுத்து விட்டுப் போன உறையாகத் தான் இருக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

கணபதியை அவர்கள் முன்பே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நினைக்கையில் குருஜிக்கு சுருக்கென்றது. அவர் தானாகக் கணபதியைத் தேர்ந்தெடுத்தது போல நினைத்திருக்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஆளை அவர் தேர்ந்தெடுத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தது அவரால் சகிக்க முடியாததாக இருந்தது.

விசேஷ மானஸ லிங்கத்திடம் அவர் கேட்ட கேள்விகள் இப்போது அவர் செவிகளை அறைந்தன. “என் குருநாதர் போன்ற பெரிய சித்தர்கள் பூஜை செய்த உன்னை இப்போது கணபதி என்கிற ஒன்றும் தெரியாத ஒரு பையன் பூஜை செய்வது உனக்கு எப்படி இருக்கிறது. மௌனமும் அமைதியுமாக உன்னைப் பூஜித்து வந்தவர்களுக்குப் பிறகு இப்போது சலிக்காமல் எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பையன் கிடைத்திருப்பது எப்படி இருக்கிறது. உனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாததால் நீ ஒரு சலனமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணபதியைத் தேர்ந்தெடுத்து நான் உன்னைப் பூஜை செய்ய வைத்திருப்பதற்கு என் குருநாதர் என்ன நினைப்பார்? இது வரை பூஜை செய்வது யார் என்பதை தீர்மானம் செய்தது அவர்கள் கூட்டமாகத் தான் இருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை நான் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன?....

இந்தக் கடிதம் இன்னொரு முக்கியக் கேள்வியை அவர் மனதில் எழுப்பியது. இரண்டு முறை கணபதியைச் சந்தித்த அவருடைய குருநாதரான சித்தர் ஏன் நேரடியாகச் சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லவில்லை. தக்க சமயத்திற்காகக் காத்திருந்தாரா? இல்லை வேறெதாவது காரணமா?

தனதறைக்குள் திரும்ப வந்து அமர்ந்த குருஜி ஜன்னல் வழியாகப் பார்த்தார். சற்று முன் அத்தனை பலமாகக் காற்றடித்ததின் அறிகுறியே காணோம். காற்று தற்செயலானது என்றோ, சரியாக முக்கியக் கட்டம் படிக்கும் முன் அந்தக் காற்றில் கடிதம் பறந்ததும், தீயில் விழுந்து எரிந்ததும் இயல்பானது என்றோ அவர் நினைக்கவில்லை. அவருடைய குருநாதர் சித்தர் தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அவர் அறிவார். நேரில் தரிசனம் தரா விட்டாலும் குருநாதரின் இருப்பை இந்த நிகழ்ச்சியில் அவர் உணரவே செய்தார்.

ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் முன் குருநாதரைக் கட்டுப்படுத்தி வைக்கா விட்டால் எதுவும் நினைத்தபடி நடக்காது என்பதை அவர் அறிவார்.  கண்களை மூடிக் கொண்டு அவர் யோசிக்க ஆரம்பித்தார்.... தடைகள் என்றுமே அவரைத் தடுத்து நிறுத்தியதில்லை. இனியும் அப்படித் தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்க மாட்டார்.  எல்லா மோசமான சூழ்நிலைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கவே செய்கிறது. தீர்வு இல்லாத பிரச்சினை இல்லை. சொல்லப் போனால் பிரச்சினையும் தீர்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்கவே செய்யும்....

குருஜி கண்களைத் திறந்த போது என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசித்து முடித்திருந்தார். கணபதி வீட்டுக்குப் போய் அந்தக் கடிதம் வாங்கி வந்தவனை உடனே வரவழைத்தார். கணபதிக்குத் தர ஒரு புதிய கடிதம் உடனே தயார் செய்யச் சொன்னார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,
நாங்கள் ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தர்ம ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் வரசித்தி விநாயகர் கோயிலிற்கு இத்துடன் ரூ.10000/- நன்கொடையாக அடுத்த மாதம் முதல் தேதியிட்ட காசோலை மூலம் அனுப்பி உள்ளோம். இப்பணத்தை கோயில் திருப்பணிகளுக்கு உபயோகித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
பாரதீய ஆன்மிகப் பேரவை

பாரதீய ஆன்மிகப் பேரவை அவர் ஆதரவில் நடக்கும் பல டிரஸ்டுகளில் ஒன்று. அந்தப் பேரவையின் செக் ஒன்றை ரூ.10000/-க்கு எழுதி அக்கடிதத்துடன் இணைத்து அதை ஒரு உறையில் வைத்து உண்மையான உறையில் இருந்தபடியே விலாசம் எழுதி அரக்கு வைத்து மூடி விட்டு கணபதியை அழைத்து வரச் சொன்னார்.

கணபதி வந்தான்.

புன்னகையுடன் அவனை வரவேற்ற குருஜி சொன்னார். “...இந்தா கணபதி. உனக்கு வந்த லெட்டர்... கூடவே உன் அம்மா சீடையும் தந்து அனுப்பிச்சு இருக்காங்க... உனக்கு சீடை ரொம்பப் பிடிக்குமோ...

கணபதி வெட்கப்பட்டான். ‘..இந்த அம்மாவுக்கு நான் இன்னும் சின்னப் பையன்னே நினைப்பு.. லெட்டர் கூட சீடையை யாராவது அனுப்புவாங்களா... ஆனா அம்மா செய்யற சீடையே தனி ருசி தான்...’ நினைக்கும் போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. கடிதத்தையும், சீடையையும் வாங்கிக் கொண்டான்.

குருஜி சொன்னார். “கணபதி, நாளைக்கு சிவனுக்கு விசேஷமான நாள். தொடர்ச்சியாக சில மணி நேரம் சிவலிங்கம் முன்னாடி இருந்து ருத்ர ஜபம் செய்ய இந்த வேதபாடசாலை மாணவர்கள் சிலர் கிட்ட சொல்லி இருக்கேன். நீயும் அந்த நேரத்துல சிவனுக்கு பூஜை செய்துகிட்டு இரு. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே...

கணபதிக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சீடையோடும், கடிதத்தோடும் அவன் போன பிறகு தன் ஆளை அழைத்துச் சொன்னார். “உண்மையான பக்தி இருக்கிற நாலு பசங்களை ருத்ர ஜபம் செய்ய நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு அனுப்பு. அவர்களை பூஜை அறையில் இருந்து பத்தடி தள்ளி உட்கார்ந்து மௌனமாய் ருத்ர ஜபம் செய்யச் சொல்லு. எந்தக் காரணத்தை வைத்தும் மதியம் ரெண்டு மணி வரை கணபதி வெளியே வராத மாதிரி பார்த்துக்கோ. காலைல ஒன்பதரை மணிக்கு ஈஸ்வரை வேதபாடசாலைக்கு வரச் சொல்லி இருக்கேன். அவனை ஒன்றரை மணிக்குள் வெளியே அனுப்பிடறேன்....

அவர் ஆள் போனபின் தன் உதவியாளனுக்குப் போன் செய்து நாளை மறுநாள் அதிகாலையில் ரிஷிகேசம் செல்ல தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யச் சொன்னார். ரிஷிகேசத்தில் மலைக்காட்டுப் பகுதியில் பயணம் செய்யத் தகுந்த ஜீப் ஒன்றையும் தயார் செய்யச் சொன்னார்.

போன் பேசி முடித்த போது அவருக்குப் பழைய தன்னம்பிக்கை திரும்ப வந்திருந்தது. மறுபடியும் அந்தக் கடித வரிகளை ஆரம்பத்தில் இருந்து மனதிற்குள் படித்துப் பார்த்தார். ஆர்வத்தோடு படிக்கும் விஷயங்களை அவர் ஒரு முறை படித்தாலே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் தனித்தன்மை பெற்றிருந்தார் என்பதால் மறுபடி நினைவுபடுத்திக் கொள்வதில் அவருக்குச் சிரம்ம் இருககவில்லை. அதில் சில வரிகள் அவரைப் புன்னகை பூக்க வைத்தன.


”...பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை....

அப்படி நடக்கும் சாத்தியம் உண்டு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பயம் இருக்கிறது.... சிவலிங்கம் இன்னும் அவர் வசம் தான் இருக்கிறது.... கூடவே கணபதியும் தான்.....

நினைக்க நினைக்க குருஜிக்கு தன்னம்பிக்கை மேலும் வளர்ந்தது. அவர் புன்னகை பூத்தார். குருவிடம் அவர் மானசீகமாகப் பேசினார். “....கணபதிக்கு என்ன அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியா விட்டாலும் பரவாயில்லை குருவே. அதை இனி அவனும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவனுக்கு நேரடியாகவே சொல்ல முடிந்த இரண்டு சந்தர்ப்பங்களை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் குருவே. இனி நீங்கள் எப்போதும் தனியாக அவனை சந்திக்கப் போவதில்லை. அவனிடம் அதைச் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் இனி எப்போதும் என் ஆட்கள் பார்வையிலேயே அவன் இருப்பான்...

குருஜி திருப்தியுடன் எழுந்தார். ரிஷிகேசம் போய் வந்த பின் எல்லாம் இனி அவர் கட்டுப்பாட்டில் வரப் போகிறது. அவர் விதியின் கைப்பாவை அல்ல. அவர் ஒரு விதி செய்வார்....

(தொடரும்)

-என்.கணேசன்



Monday, May 20, 2013

அட ஆமாயில்ல! – 9




உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் தேவை இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சுடுகாடு தான். அந்த இடத்தில் தான் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது.
                   -மேக்ஸ்வெல் மால்ட்ஸ்


நேரம் என்பது திரும்பி வராத அம்பு.
                    -ஜோஷுவா லோத் லிப்மென்


அனைவரிடமும் கர்வம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பிச்சைக்காரன் கூட திருடுவதில்லை என்று கர்வம் கொள்கிறான்.
                     -ஜப்பான் நாட்டுப் பழமொழி


செய்து வரும் வேலையை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.
                     -ஹெர்பெர்ட் கேஸன்


மக்களுடைய பிரதிநிதிகளுடன் பழகியதிலிருந்து நான் நாய்களை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
                      -கேம்ரடீன்


கோபத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அருமையான பிரசங்கம் ஒன்றை உங்களால் செய்ய முடியும். ஆனால் நீங்கள் செய்த அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்.
                      -ஸ்டேன்லி ஜோன்ஸ்


தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
                    -லில்லியன் வைட்டிங்


இந்த உலகில் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு சிறுபகுதி நிச்சயம் இருக்கிறது. அந்த சிறுபகுதி நீங்கள் தான்.
                     -ஹக்ஸ்லீ

பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான்.
                   -பெர்னார்டு ஷா


நீங்கள் நினைத்தபடி மற்றவர்களை மாற்ற முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். ஏன் என்றால் நினைத்தபடி நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
                    -தாமஸ் கெம்பிஸ்



தொகுப்பு – என்.கணேசன்