அர்ஜுன் அப்பாவிடம் கேட்க நினைத்த கேள்விகளை யோசித்து தன் மடிக்கணினியில் குறித்துக் கொண்டிருந்த போது நித்யா அவன் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தாள். தங்கையைக் கவனித்த அர்ஜுன் கேட்டான். “என்ன வாலு?”
“எங்கே டெய்ரி மில்க் சாக்லேட்?”
அர்ஜுன் புன்னகையுடன் தங்கையிடம் இரண்டு டெய்ரி மில்க் சாக்கலேட்களை
நீட்டினான்.
அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்” சொன்ன நித்யா உடனடியாக அண்ணனிடம் கேட்டாள். ”மிஸ்டர்
ஸ்மார்ட். நீங்க ஏன் சில விஷயங்கள்ல மட்டும் தத்தியா இருக்கீங்க?”
“என்னடி புகழ்ந்துகிட்டே திட்டறே?”
“நான் சொன்னதை அப்படியே போய் அண்ணி கிட்ட சொல்லுற ஆளைத் திட்டாம என்ன செய்யறது?”
தங்கை கீதாவை அண்ணி என்றழைக்க ஆரம்பித்ததை உள்ளூர ரசித்த அர்ஜுன்
ஆச்சரியத்துடன் தங்கையிடம் கேட்டான்.
“நான் அப்படியே அவ கிட்ட சொன்னேன்னு உன் கிட்ட யார் சொன்னா?”
”நீ சொல்லியிருக்காட்டி அண்ணி ஏன் எனக்கு தேங்க்ஸ் மெசேஜ் அனுப்பறாங்க?”
அர்ஜுன் அசடு வழியச் சொன்னான். “இதுக்கு தான் நான் உன்
போன் நம்பரை அவ கேட்டப்ப அவளுக்குத் தரத் தயங்கினேன்…. சரி சொன்னதுல
என்னடி தப்பு?”
“அடிப்படையான விஷயங்களைக் கூட தங்கை சொல்லி தான் தெரியுதுன்னு அவங்க உன்னை மட்டமா
நினைக்க மாட்டாங்களா?”
“அறிவுக்கொழுந்து தங்கையே. நடிக்கறதும், மறைக்கறதும் காதல்ல மட்டுமல்ல எந்த உண்மையான உறவு, நட்புலயும்
இருக்கக்கூடாது. உண்மையை மறைக்கற எதுவும் எப்படி உண்மையான காதலாவோ,
நெருக்கமான உறவாவோ, மேலான நட்பாவோ இருக்க முடியும்?
நீ சொல்ற மாதிரி மிஸ்டர் ஸ்மார்ட் சில விஷயங்கள்ல தத்திங்கறதையும் அவளுக்குத்
தெரிவிக்கறது தான் நியாயம்.”
“ஆஹா நீதிமான் ஞானமூர்த்தியின் நேர்மையான மகனே. உம் சத்தியத்தை
நாம் மெச்சுகிறோம். அதை விட அதிகமாக, தத்தி
என்பதையும் பொருட்படுத்தாது உம்மைத் தொடர்ந்து காதலிக்கும் அண்ணியாரின் பெருந்தன்மையைக்
கூடுதலாக மெச்சுகிறோம். வாழ்க நீவீர் இருவரும் பல்லாண்டு.”
“ஏய் வாலு. நான் இன்னும் கேள்விகளையே சரியாய் தயார் செய்யலை.
6.40 ஆயிடுச்சு. இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு.
லேட்டாய் போனா நீதிமான் பேட்டியைத் தள்ளுபடி பண்ணிடுவாரு. அப்புறமா வந்து வசனம் பேசிகிட்டு இரு. இப்ப இடத்தைக்
காலி பண்ணு”
“சொன்னபடி இரண்டு டெய்ரி மில்க் சாக்லேட் கொண்டு வந்து கொடுத்ததால் உம் வேண்டுகோளை
ஏற்றுக் கொள்கிறோம். ஏழு மணிக்கு பேட்டியின் பார்வையாளராக வந்து
தங்கள் பேட்டியை மதிப்பிடுவோம். வாழ்த்துக்கள்” என்று சொல்லி ஆர்வமாக டெய்ரி மில்க் சாக்லேட்டின் மேற்காகிதத்தைப் பிரித்தபடி
செல்லும் தங்கையைப் பேரன்புடன் பார்த்து விட்டு அர்ஜுன் தன் வேலையைத் தொடர்ந்தான்.
6.55க்கு அவன் கேள்விகளை எழுதி முடித்திருந்தாலும் அவனுக்கு அவற்றில் முழுத்திருப்தி
ஏற்பட்டிருக்கவில்லை. வெளியாட்களைப் பேட்டி எடுப்பதாக இருந்தால்
அவை கச்சிதமானவை தான். ஆனால் தாத்தாவைப் பற்றி அப்பாவிடம் அவன்
கேட்கும் கேள்விகளாக அவற்றைப் பார்க்கையில் ஒரு அன்னியத்தன்மை அவற்றில் இருப்பதாக அவனுக்குத்
தோன்றியது. லேப்டாப்போடு அவன் ஹாலுக்கு வந்த போது அவன் தங்கை
ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்தாள். அவள் இதழோரத்தில் டெய்ரி மில்க் சாக்லேட் துகள் ஒட்டி இருந்தது.
“பேச்சு தான் பெரிய மனுஷி மாதிரி. ஒழுங்கா ஒரு டெய்ரி மில்க் சாப்பிடத் தெரிய மாட்டேங்குது. குழந்தை மாதிரி உதட்டுல எல்லாம் சாக்லேட் ஒட்டிகிட்டு இருக்கு” என்று தங்கையை அர்ஜுன் கிண்டல் செய்தான்.
எங்கே என்று அவள் அவனிடம் சைகையால் கேட்க தன் உதட்டில் அந்த
இடத்தைத் தொட்டு அர்ஜுன் காட்டினான்.
உடனடியாக அந்த சாக்லேட் துகளை விரலால் எடுத்து வாய்க்குள் தள்ளி விட்டு
அண்ணனைப் பார்த்து நித்யா புன்னகைத்தாள்.
தங்கையின் குழந்தைத்தனத்தை ரசித்தபடியே அர்ஜுன் சோபாவில் அமர்ந்து
மணியைப் பார்த்தான். மணி 6.58. ஞானமூர்த்தி அடுத்த வினாடி அவருடைய அறையிலிருந்து
வெளிப்பட்டார்.
“என்னடா உன் தங்கச்சி எதையோ சாப்பிட்டுட்டு இருக்கற மாதிரி தெரியுது”
“குழந்தை டெய்ரி மில்க் சாக்லேட் சாப்பிடுதுப்பா” என்று
சொன்ன அண்ணனை நித்யா முறைத்தாள்.
“என்னடா நீ வாங்கிக் கொடுத்தாயா? என்ன ஸ்பெஷல்?”
அர்ஜுன் தடுமாற,
அவன் தடுமாற்றத்தை ரசித்தபடியே நித்யா சொன்னாள். “தங்களுக்கு தக்க சமயத்தில் தெரிவிக்கப்படும் மை லார்ட்”
அர்ஜுன் தன்னைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிய தங்கையை
நன்றியுடன் பார்க்க, ஞானமூர்த்தி புன்னகையுடன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி
7.00. “சரி ஆரம்பிக்கலாமாடா?” ஏழு மணியான பிறகு
பேட்டியைத் தான் ஆரம்பிக்க வேண்டும், மற்ற கேள்விகளுக்கு அந்த
நேரத்தில் இடமில்லை.
அர்ஜுன் சொன்னான்.
“அப்பா, நான் கேள்விகளை தயார் செய்துட்டு வந்திருக்கேன்.
ஆனா எல்லாமே வெளியாட்கள் கேட்கற மாதிரி இருக்கு. என் தாத்தாவைப் பற்றி நான் எழுதற சிறப்புக்கட்டுரையோட ஒரு நெருக்கம் இதுல விடுபடற
மாதிரி இருக்கு. அதனால ஒருசில கேள்விகளை மட்டும் நான் கேட்கறேன்.
மற்றபடி நீங்க தாத்தாவைப் பற்றிய சுவாரசியமான, முக்கியமான தகவல்களைச் சொல்லுங்க. அதை வெச்சு நான் எழுதிக்கறேன்…”
ஞானமூர்த்தி தலையசைத்தார். அர்ஜுன்
கேட்டான். “தாத்தாவை பெரிய தலைவராய் இந்த உலகத்திற்குத் தெரியும்.
ஆனால் குடும்பத்தார் பார்வைல அவர் எப்படி இருந்தார்னு நான் எழுதறது பொருத்தமாய்
இருக்கும்னு தோணுது. உங்க அப்பாவைப் பற்றி சொல்லுங்கப்பா.
ஒரு தலைவராய் நீங்க அவரை எப்படிப் பார்க்கறீங்கன்னும் சொல்லுங்க.”
பானுமதி சமையலறையிலிருந்து வெளிப்பட்டு சுவரில் சாய்ந்து நிற்பதைக் கவனித்த நித்யா தாயிடம் அங்கு வந்து அமருமாறு சைகை செய்தாள். பானுமதி ‘உள்ளே வேலையிருக்கிறது’ என்று பதிலுக்கு சைகை செய்தாள்.
ஞானமூர்த்தி சொன்னார்.
“எங்கப்பா மாதிரி ஒரு நல்ல உயர்ந்த மனிதரைப் பார்க்கறது ரொம்ப கஷ்டம்
அர்ஜுன். பொதுவாய் அரசியல் தலைவர்களோட நல்ல குணங்களை எல்லாம்
அவங்க கட்சிக் காரங்க பல மடங்காய் உயர்த்திச் சொல்வாங்க. எதிர்க்கட்சிக்காரங்க
அவர்களோட கெட்ட குணங்களை எல்லாம் தவறாமல் சுட்டிக்காட்டுவாங்க. ஆனால் எங்கப்பாவோட நல்ல குணங்கள் முழுசும்
அவங்க கட்சிக்காரங்களுக்குக் கூடத் தெரியாது. அதே மாதிரி எதிர்க்கட்சிக்காரங்களும்
அவரோட அரசியல் கொள்கைகள்ல சில குறைபாடுகளைக் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சாங்களே ஒழிய தனி
மனுஷரா அவர் கிட்ட யாரும் எந்தக் கெட்டதையும் கண்டுபிடிச்சு சொல்ல முடிஞ்சதில்லை.
இப்படி இந்தியால ஒரு அரசியல் தலைவர் இது வரைக்கும் இருந்ததில்லை அர்ஜுன்.
இந்த அளவு ஒரு நல்ல மனுஷரை இனியும் யாரும் பார்க்க முடியும்னு தோணலை.”
“பொதுவாய் பெரிய அரசியல் தலைவராய் இருக்கறவர்கள் சரியான குடும்பத் தலைவராகவும்
இருக்கிறது அபூர்வம். பொது வாழ்க்கைக்கு அவர்கள் தரும் கவனம்,
நேரம் எல்லாம் குடும்பத்திற்குத் தர முடியாமல் போகுதுன்னு ஒரு குற்றச்சாட்டு
எப்பவும் இருந்து வருது. உங்க அப்பா, குடும்பத்தலைவராய்
எப்படி இருந்தார்?”
“கட்சிக்கும் நாட்டுக்கும் ஒதுக்கின நேரத்தையும், கவனத்தையும்
அவரால் எங்களுக்குத் தர முடியலைங்கறது உண்மை தான். எங்க கிட்டே
வெட்டிக்கதை பேச அவருக்கு நேரம் இருக்கலை. ஆனால் நாங்களாய் அவரை
ஏதாவது ஒரு விஷயமாய் நெருங்கறப்ப, அவர் அதைக் கேட்க முடியாத அளவுக்கு
பிஸியான ஆளாய் அவர் தன்னைக் காட்டிக்கலை. எல்லா வேலைகளையும் ஒதுக்கிட்டு
நாங்க சொல்றதைக் காது கொடுத்து கேட்கற ஆளாய் தான் எப்பவுமே இருந்தார். அம்மா, நான், ராஜாராம் மூனு பேரும்
அந்த விஷயத்துல அவரைக் குறை சொல்ல முடியாது. நாங்க சொல்றதை பொறுமையாய்
கேட்பார், என்ன செய்யணுமோ செய்வார்…. சொல்லப்
போனால் அவர் கடைசி காலத்தில் அதிகமாய் நேரம் ஒதுக்கினது உனக்குத் தான். பேரன் பிறந்ததுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். வீட்டுல இருக்கற
நேரங்கள்ல எப்பவுமே உன்னைத் தூக்கிகிட்டு தான் இருப்பார்.”
அர்ஜுனுக்கு அந்தத் தகவல் பெருத்த சந்தோஷத்தைத் தந்தது. அம்மா பட்டென்று சமையலறைக்குச்
சென்றது யதேச்சையாகவா, இல்லை அப்பா சொன்ன தகவலைக் கேட்டா என்று
அவனுக்குத் தெரியவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்


Many thanks
ReplyDelete