என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 6, 2026

யோகி 150

 

பாண்டியன் இறுகிய முகத்தோடு கல் போல் அமர்ந்திருந்தாலும், உள்ளுக்குள் அவருக்குக் குழப்பமாக இருந்தது. அவன் சொன்னது எதுவும் பொய் அல்ல. அவன் அறையில் ஓநாய் தாக்கி அவன் மயங்கிக் கிடந்த போது அவனுக்கே என்ன நடந்தது என்ற தெரியாத நிலை இருக்கையிலும் காமிரா மூலம் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தது அவர் ஆட்கள் தான். அவனுக்கே தெரியாத அந்தப் பதிவை பின் அவரும் பார்த்திருக்கிறார். அவன் சொன்னது போல அவனாக அந்தச் சக்திகளை விளம்பரம் செய்யவோ, அவர்களிடம் சொல்லி பலன் தேடவோ முயன்றதில்லை...

 

சிறிது நேரத்துக்கு முன் தேவானந்தகிரியின் ஆள் சொன்ன போது ஷ்ரவன் மீது வந்திருந்த சந்தேகம் இப்போது அவ்வளவு வலுவாக இல்லை. ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

ஷ்ரவன் சொன்னான். “ஜீ அதெல்லாம் போகட்டும். நான் உங்களை ஏமாற்றி என்ன லாபம் அடைந்தேன் என்பதை மட்டுமாவது தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். எதையாவது உங்களிடமிருந்து அபகரித்து விட்டேனா? என் மீது இருக்கும் குற்றச்சாட்டு தான் என்ன?”

 

பாண்டியன் சொன்னார். “நீ சொன்ன அந்த எதிரி இளைஞன் நீயே என்பது தான் எங்கள் சந்தேகம்

 

ஷ்ரவன் பூமி முக்கோண வடிவமானது என்று அவர் சொன்னது போல அவரை ஒரு மாதிரி பார்த்தான்.

 

ஜீ நான் இருந்தது ஹைத்ராபாத்தில். நீங்கள் இருப்பது சென்னையில். நான் இங்கே வரும் வரை உங்களைப் பார்த்தது கிடையாது. நான் தியான வகுப்புகளுக்கு வந்த போது கூட உங்களைப் பார்த்தது கிடையாது. உங்களை மட்டுமல்ல யோகிஜியையும் பார்த்தது கிடையாது. அப்படி இருக்கையில் எனக்கு உங்கள் மீது என்ன பகை இருக்க முடியும்? தயவு செய்து நீங்கள் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.”

 

பாண்டியன் சொன்னார். “அதை நீ தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும். நீ எங்களிடமிருந்து நிறைய மறைக்கிறாய்.”

 

நான் உங்களிடமிருந்து மறைத்த ஒரே விஷயம் அந்த ஹைத்ராபாத் கேஸ் விஷயம் மட்டும் தான். பொய்யான அந்த கேஸ் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது என்று நினைத்து தான் அதையும் உங்களிடம் சொல்லவில்லை. மற்ற எதையும் நான் உங்களிடம் மறைக்கவில்லை. உங்கள் எதிரியாக நீங்கள் என்னைச் சொல்வதைக் கேட்டால் எனக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது. உங்கள் எதிரி என்று நீங்கள் சொல்வது, உங்களை மட்டுமா, இல்லை யோகிஜியையா, இல்லை இரண்டு பேரையும் சேர்த்தா, இல்லை யோகாலயத்தின் எதிரி என்று மொத்தமாகச் சொல்கிறீர்களா?”

 

அவன் பேசுவதை எல்லாம் கேட்கையில் இப்போது அவன் மீது சந்தேகம் கொள்வதற்கு முகாந்திரம் இல்லை என்ற எண்ணம் அவர் மனதில் மெல்லத் தலையெடுத்தது. சைத்ராவைப் பற்றிச் சொல்லாமல், அவள் ஆவி தெரிந்ததைச் சொல்லாமல் இவனிடம் எதையும் அவர் விளக்க முடியாது என்பதால் பாண்டியன் மௌனமாகவே இருந்தார். ஒருவேளை அதுபற்றி எதுவும் தெரியாதவனாக அவன் இருந்தால் அதை இவர் விவரித்துச் சொல்வது முட்டாள்தனம்.

 

பாண்டியன் எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஷ்ரவன் அழாத குறையாகச் சொன்னான். “சரி என் மீது சந்தேகம் வரக் காரணம் என்ன என்றாவது சொல்லுங்கள் ஜீ. இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல், எந்தக் காரணமும் சொல்லாமல் என்னைக் குற்றம் சாட்டுவது நியாயமா?”

 

நாங்கள் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுத் தான் உன்னிடம் அந்த முகூர்த்த காலங்களைச் சொன்னோம் என்று சொன்னேனில்லையா, அவர் உன்னை எங்கள் எதிரி என்று கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார். அவர் இதுவரை சொன்னது எதுவும் எங்களுக்குப் பொய்க்கவில்லை.”

 

அப்படியானால் இது அவருடைய முதலில் பொய்க்கும் கண்டுபிடிப்பாக இருக்கும். அவர் கணிப்பில் எதோ தவறு செய்து விட்டார். தயவு செய்து அவரை இங்கே உடனே வரவழையுங்கள். இல்லா விட்டால் என்னை அவரிடம் அழைத்துப் போங்கள். நானே அவரிடம் கேட்கிறேன்.”

 

பாண்டியன் சொன்னார். “அவர் நேற்றே வருவதாக இருந்தது. அவர் காலில் அடிபட்டு விட்டதால் அவரால் வர முடியவில்லை.  அவர் வர முடியாமல் இருப்பதற்கும் அவர் உன்னையே சந்தேகப்படுகிறார்.”

 

ஷ்ரவன் வாய்விட்டுச் சிரித்தான்.  விட்டால் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும், விபத்துகளுக்கும், அடிதடிகளுக்கும் என்னையே காரணம் சொல்வீர்கள் போல் இருக்கிறதே ஜீ. யார் என்ன சொன்னாலும் சிந்திக்காமல் நீங்கள் அப்படியே நம்பி விடுவீர்களா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா?”

 

பாண்டியனுக்கு அவன் சொல்வதில் குறை காண முடியவில்லை. ஆனால் அவனை நம்பி திருப்பியனுப்பவும் அவருக்கு மனம் இல்லை. அவர் அமைதியாய் இருந்தார்.

 

ஷ்ரவன் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராதது பார்த்து விரக்தி அடைவது போல் காட்டிக் கொண்டு சொன்னான். “சரி உங்கள் முடிவு தான் என்ன? என்னைக் குற்றவாளி என்று சொல்லி இங்கிருந்து அனுப்பி விடப் போகிறீர்களா?”

 

எங்கள் எதிரி நீ இல்லை என்றால், எங்களுடைய எதிரி எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அது வரை உன்னை எங்கேயும் அனுப்புவதாய் இல்லை.” அவர் தீர்மானமாகச் சொன்னார்.

 

இப்படியும் ஒரு அநியாயம் உண்டா என்பது போல் ஷ்ரவன் பார்த்து விட்டு மெல்லச் சொன்னான். “இப்போது எனக்கு எல்லாம் புரிந்து விட்டது ஜி

 

பாண்டியன் கேட்டார். “என்ன புரிந்து விட்டது?”

 

அந்த துஷ்ட சக்தி ஓநாய் தான் இதையெல்லாம் உங்களைச் செய்ய வைக்கிறது. அதன் நடவடிக்கைகள் பற்றி, நேற்று உங்கள் பீரோவுக்குள் அது போனது உட்பட, நான் உங்களிடம் தெரிவித்துக் கொண்டே வருவது அதற்குப் பிடிக்கவில்லை. அப்படி நான் தெரிவிப்பது தொடரக்கூடாது என்று அது நினைக்கிறது. அதை நிறுத்த ஒரே வழி உங்களிடமிருந்து என்னைப் பிரிப்பது தான். அதை அது வெற்றிகரமாகச் செய்து விட்டது. எல்லாம் என் தவறு. நான் அதன் வழியில் குறுக்கிடாமல் இருந்திருக்க வேண்டும். நான் உங்களுக்காக அதன் வழியில் குறுக்கிட்டது என் முட்டாள்த்தனம். மிகவும் தாமதமாக இந்த ஞானோதயம் எனக்கு வந்திருக்கிறது. இது முன்பே வந்திருந்தால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று ஒரே வாக்கியத்தில் முடித்திருப்பேன். என்னிடம் விசேஷ சக்திகள் இல்லை என்று நினைத்திருப்பீர்களே ஒழிய என்னை எதிரி என்று சந்தேகப்படுவதாவது நடந்திருக்காது. சரிஜி முடிவாக என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். ஆனால் இப்போதும் உங்கள் மீது இருக்கும் அக்கறையாலும், யோகிஜி மேல் இருக்கும் பக்தியாலும் நான் சொல்கிறேன். நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். அந்த துஷ்ட ஓநாய் இதுவரையில் வெளியில் தான் உலாவிக் கொண்டிருந்தது. இப்போது உங்கள் உள் அறைக்கும் வந்து பீரோவுக்குள்ளும் புகுந்திருக்கிறது. அதன் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. என் தலையெழுத்து என்னை இப்படிக் கஷ்டப்படுத்துகிறது. பாவி போகும் இடம் பாதாளம். என்ன செய்வது? உங்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”

 

பாண்டியனுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. ஷ்ரவன் சொல்வதையும் அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அந்த ஏவல் சக்தி ஓநாயின் நடமாட்டத்தையும், செய்கைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டு இருந்தவன் ஷ்ரவன் ஒருவன் தான்.   அவன் வாயையும் அடைத்து விட்டால் அந்த ஏவல் சக்தியின் நடமாட்டம் குறித்து எதுவும் தெரியாமல் போய்விடும்.      

 

ஷ்ரவன் விதிவிட்ட வழி என்று விரக்தியடைந்தவன் போல் காட்டிக் கொண்டு மௌனமாக நின்றான். அவன் முகத்தில் சிறிதும் பயம் தெரியாததையும், அவன் பேச்சு குழப்பாமல் தெளிவாக இருந்ததையும் அவர் கவனித்தார். ஆனால் தேவானந்தகிரி சொல்வது ஒருவேளை அவன் எதிரியாகவே இருந்து, வெளியில் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆட்களும், அவனுடையதாகவே இருந்தால் இவன் பேராபத்தானவன் தான்...

 

அவர் மனம் மாறி மாறி யோசித்தது. முடிவில் சொன்னார். “நீ சொன்னபடி நல்லவனாகவே இருந்தால் நீ பயப்பட வேண்டியதில்லை. உன்னை  நாங்கள் விட்டு விடுவோம். ஆனால் நீ எங்களுடைய தந்திரக்கார எதிரியாக இருந்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவாய். உண்மை எங்களுக்குத் தெளிவாய்த் தெரிகிற வரை நீ எங்கள் கைதியாகத் தானிருக்க வேண்டும்.”

 

ஷ்ரவன் அதிர்ச்சியைக் காட்டினான். “ஜீ இது அநியாயம். செய்யாத குற்றத்துக்கு என்னைத் தண்டிக்கிறீர்களே?”

 

பாண்டியன் சொன்னார். “நீ ஹைத்ராபாத் கேஸ் பற்றிச் சொன்னாயே. அதில் கைதாகி சிறையில் இருப்பதாய் நினைத்துக் கொள்.”

 

பாண்டியன் அவன் பின்பக்கத்தைப் பார்த்துத் தலையசைக்க திடீரென்று அறைக்குள் நுழைந்த இரண்டு தடியர்கள் ஷ்ரவனை இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். கண்ணன் ஷ்ரவனின் கண்களைக் கருப்புத் துணியால் இறுக்கமாகக் கட்டினார். 


(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. Hope Shravan may devise a nice plan to convey his arrest to the people outside.Thanks.

    ReplyDelete