கல்பனானந்தா ஷ்ரவன் மாலை வேலை நேரம் முடியும் வரை திரும்பி வராததைக் கவனித்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஷ்ரவன் பாண்டியனுக்கு இப்போது மிக நெருக்கமாக இருப்பதால் அவருடனே பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். ஷ்ரவன் அறைக்குத் திரும்பி வராததை சித்தானந்தாவும் அப்படியே எடுத்துக் கொண்டார்.
முக்தானந்தாவும் ஆரம்பத்தில் அப்படியே நினைத்தாலும் நேரம் செல்லச்
செல்ல ஷ்ரவனுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற பயம் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சத்சங்கம், தியான நேரம் முடிந்து இரவு உணவு நேரத்திலும் அவன் வராமல் போனது அவருடைய பயத்தை
அதிகரித்தது.
இரவு உணவு உண்டு விட்டு வந்தவர் இருப்பு கொள்ளாமல் வெளியே நடக்க
ஆரம்பித்தார். சில துறவிகள் இரவு நடைப்பயிற்சி செய்வதுண்டு. அதனால்
அவர் நடப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. பெண் துறவிகள்
இரவு உணவுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களோடு கல்பனானந்தாவும்
வருவது தெரிந்தது. அவளிடம் அவர் பேசி பல வருடங்களாகிறது.
இதுவரை அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு
அவருக்கு அடுத்தபடியாக அவனுக்கு ஆதரவாக இருப்பவள் அவள் தான். அதனால் அவளுக்குத் தெரிவிக்கத் தோன்றியது…
கல்பனானந்தா தன்னை நோக்கி முக்தானந்தா வருவதைப் பார்த்து ஆச்சரியப்
பட்டாள். மற்ற
பெண் துறவிகளை முன்னால் போக விட்டு அவள் மெல்ல பின் தங்கினாள். முக்தானந்தா யாரிடமும் பேசாதவர் என்பதால் அவர் யாரிடம் பேசினாலும் அந்தத் தகவல்
பாண்டியனை எட்டாமல் இருக்காது. அவர் இப்போது ஷ்ரவனின் அறையிலிருப்பவர்
என்பதால் அவர் யாரிடமாவது பேசுவது இப்போது சந்தேகக்கண்ணோடு தான் பார்க்கப்படும் என்பதை
அவர் அறிவார்.
கல்பனானந்தா அருகில் வருகையில் கைக்குட்டையைக் கீழே நழுவ விட்ட
அவர் அதைக் குனிந்து எடுக்கும் போது சொன்னார். “ஷ்ரவன் மதியம் போனவன் இன்னும் வரலை.
பயமாய் இருக்கு.”
கல்பனானந்தா அவரைக் கடந்து போனாள். அவளுக்கு அவர் சொன்னது கேட்டிருக்கும் என்று அவர் நம்பினார். அவளால் எதாவது செய்ய முடியும் என்று நம்பினார். பலவீனமான நேரங்களில் நம்பிக்கையே பெரும் ஆசுவாசமாய் இருக்கிறது.
அறைக்கு அவர் வந்த போது சித்தானந்தா சொன்னார். “ஷ்ரவனானந்தாவை இன்னும்
காணோம். இன்று அவர் மேனேஜருடனேயே தங்கி விட்டார் போல் இருக்கிறது.”
“இருக்கலாம்” என்று சொன்ன அவர் ஷ்ரவனுக்காகப் பிரார்த்திக்க
ஆரம்பித்தார்.
கல்பனானந்தாவுக்கு முக்தானந்தா சொன்னது காதில் விழுந்தது. இப்போதெல்லாம் ஷ்ரவன் கூடுதலாக
பாண்டியனிடம் நெருக்கமாக இருப்பதால் அவன் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று மீண்டும்
எண்ணினாள். வேறு விதமாக எண்ணக் காரணம் இருக்கவில்லை. ஷ்ரவன் மீது அவர்கள் சந்தேகப்படும் விதமாக யோகாலயத்தில் எதுவும் நடக்கவில்லை.
ஆனால் முக்தானந்தாவிடம் அவளால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை.
அவருக்கு அவன் மீது இருந்த அன்பையும்,
அக்கறையையும் எண்ணி அவள் புன்னகைத்தாள்.
ஷ்ரவன் பாதாள சிறையில் அன்றிரவைக்
கழித்தான். அவனுக்கு
இரண்டு தடியர்கள் இரவு உணவையும் ஒரு தடிமனான புத்தகத்தையும் தந்து விட்டுப் போனார்கள்.
உணவு தர ஒருவன் போதும். ஆனாலும் இருவரை அவர்கள்
அனுப்புவது அவர்களுடைய எச்சரிக்கை உணர்வை அவனுக்குத் தெரிவித்தது. ஒருவன் மட்டும் வந்தால் அவனை ஷ்ரவன் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்
என்பது புரிந்தது. அப்படி அவன் தாக்கினாலும் கூட அங்கிருந்து
அவனால் தப்பிக்க முடியாது. பாண்டியனின் கட்டிடத்தைத் தாண்டும்
முன் அவன் பிடிபட்டு விடுவது நிச்சயம். ஆனாலும், என்ன தான் அவன் பிரச்சினை இல்லாதவன் போல் தோன்றினாலும் கூட, அவர்கள் எச்சரிக்கையாய் தான் இருக்கிறார்கள். அவன் கேட்டபடி
புத்தகத்தை அனுப்பியிருப்பது அவனுக்கான சிறப்பு அனுமதியாய் தான் தோன்றியது.
என்ன புத்தகம் அது என்று பார்த்தான். ‘யோகி பிரம்மானந்தாவின்
சொற்பொழிவுகள்’.
அவனை அவர்கள் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள் என்ற நினைவு வர அவன் அந்தப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து பிரார்த்திப்பது போல் காட்டிக் கொண்டான். இங்கிருந்து தப்பிக்கும் வரை அவர்களுக்கு அவன் மீது சிறிய சந்தேகமும் வந்துவிடக் கூடாது. தப்பிக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டுமே! அமைதியாக அந்த உணவைச் சாப்பிட்டு அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் பத்து நிமிடம் நடந்தான். பின் அமர்ந்து அந்தப் புத்தகத்தில் இரண்டு பக்கங்களைப் படித்து விட்டு அதைப் பற்றிச் சிந்திப்பது போல் அவன் கட்டிலில் கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.
ஆனால் அவன் மனம் உண்மையில் அவர்கள் உணவு கொண்டு வரும் வரை செய்து
கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தது.
அவன் மந்திர ஜபம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆபத்து
காலத்தில் இது உன்னைக் காக்கும் என்று பரசுராமன் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில்
ரீங்காரம் இட்டன. அதை
அவன் ஆழ்மனம் நம்பவும் செய்தது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த ஓநாயை அவன் மனக்காட்சியில் எதிர்பார்ப்பது
வழக்கமாகி விட்டது. ஆனால்
அன்றும் அவன் எதிர்பார்த்தாலும் அந்த ஓநாய் அவன் மனக்காட்சியில் வரவில்லை. கஷ்ட காலத்தில் நீயும் வருவதில்லை பார்த்தாயா என்று புன்னகைத்துக் கொண்டே அவன்
குற்றம் சாட்டினான். அப்போதும் ஓநாய் காட்சியளிக்கவில்லை.
அவனைக் கண்காணிப்பு காமிரா மூலமாகப் பார்த்துக் கொண்டேயிருந்த
பாண்டியனுக்கு அவனுடைய புன்னகை ஆச்சரியப்படுத்தியது. இவன் பைத்தியமா? மாட்டிக்
கொண்டு இப்படி பாதாள சிறையில் இருக்கும் போது யாருக்காவது புன்னகை வருமா? இத்தனை வருடங்களில் எத்தனையோ பேரை
அந்தப் பாதாள சிறையில் அடைத்து வைத்து அவர் கவனித்திருக்கிறார். அழுகை, வேதனை, கவலை, கதறல், புலம்பல், சோகம் என்ற வகை
உணர்ச்சிகள் தான் வெளிப்படுமே ஒழிய இவனைப் போல் யாரும் புன்னகைத்தது கிடையாது.
ஓநாய் காட்சியளிக்காததை ஒரு குறையாக எண்ணி புகார் சொல்வது தவறு
என்று ஷ்ரவனுக்குத் திடீரென்று புலப்பட்டது.
நமக்கும் மேலான சக்தி நம்மைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அவ்வப்போது அது காட்சியளிக்க வேண்டும் என்றும், அடிக்கடி,
நானிருக்கிறேன், கவலைப்படாதே என்று தைரியப்படுத்த
வேண்டுமென்றும் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா என்று தோன்றியது. அது காட்சியளித்தால் தான் அது உடன் இருக்கிறது என்று அர்த்தமா? அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானது என்றால், காட்சியளிக்கிறதோ, இல்லையோ அது உடனிருந்து காப்பாற்றிக்
கொண்டு இருக்கிறது என்ற புரிதல், சிறிது கால அனுபவத்திலேயே ஒருவனுக்கு
வந்து விட வேண்டாமா?
அந்த யோகி சொன்ன வார்த்தைகள் அவனுக்கு
நினைவுக்கு வந்தன. “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம்
மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். ....
ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு
ஏற்படுத்திக் கொடுப்பான்…. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி
ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம்
அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு
மனிதன் அமைதியாய் இருக்க முடியும்…..”
அந்த யோகி சொன்னது போல் யோசித்தால், இந்த வேலையில்
அவனை ஈடுபடுத்தியவனும் அந்த இறைவன், இப்போது இந்த ஆபத்தான
நிலையில் சிக்க வைத்து இருப்பதும் இறைவன். யோகி சொன்னது
போல், எல்லாம் அறிந்த இறைவனின் தீர்மானத்தில் குற்றம் காண அவன்
யார்? இறைவன் தந்த அந்த வேலையை அவன் ஆத்மார்த்தமாய் சிறப்பாய் கவனமாய்
செய்வதோடு அவன் பொறுப்பு முடிந்தது. இத்தனை தூரம் அழைத்து
வந்த சக்தி இனியும் அவனை அழைத்துப் போகும். நடக்க வேண்டியதை
அது பார்த்துக் கொள்ளூம்.
அவன் மனம் அமைதியடைந்து, மெள்ள மெள்ள அந்த மந்திர ஜபத்தில் லயிக்க ஆரம்பித்தது.
சிறிது சிறிதாக மந்திரம் மட்டுமே அந்த இடமெல்லாம் வியாபிக்க ஆரம்பித்தது.
அவன் மறைந்து போனான். இதற்கு முன்னும் கிட்டத்தட்ட
இந்த லயிப்புக்கு அவன் வந்திருந்தாலும் அவனுடைய ‘நான்’
முற்றிலும் மறைந்து போனது இதுவே முதல் முறை. அப்படியே
கட்டிலில் சாய்ந்தவனை ஆழமான நிம்மதியான உறக்கம் தழுவிக் கொண்டது.
அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்த பாண்டியன் திகைத்தார். இத்தனை வருட அனுபவத்தில்,
அந்தப் பாதாள அறையில், தலையணை, படுக்கை இல்லாமல் இப்படி ஆழ்ந்த உறக்கம் உறங்க முடிந்தவனை அவர் பார்த்ததில்லை.
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்
அவன் கைதியா? உறங்க முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் அவர்
கைதியா?
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment