என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 8, 2025

யோகி 133


 பிரம்மானந்தா அன்று மிக மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். அவரை ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகம் அங்கே பேச அழைத்திருக்கிறது. இந்தியாவில் மிகச்சிலருக்கே இதுவரை அங்கே பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் இங்கே வந்திருந்த ஒரு நண்பரின் செல்வாக்கினால் கிடைத்த வாய்ப்பு அது. அதற்காக அந்த நண்பருக்கு அவர் விலையுயர்ந்த பரிசுகளும் அளித்திருக்கிறார். ஆனால் இந்தத் தகவல்கள் எதுவும் வெளியே தெரியப்போவதில்லை. அந்தப் பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகம் கூட அவரைப் பேச அழைத்திருக்கிறது என்ற பெருமையைத் தான் அனைவரும் பேசப் போகிறார்கள். அது தான் வரலாறாக நிற்கப் போகிறது.

அவருடைய வளர்ச்சியை நினைக்கையில் அவருக்கே பிரமிப்பாக இருந்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பட்ட கஷ்டங்கள் தான் எத்தனை? ராஜபாளையத்தின் தொழிற்சாலையிலும், மதுரையில் தனியார் கம்பெனியிலும் அவர் ஒரு மாட்டைப் போல் உழைத்திருக்கிறார். பின் செய்த மூலிகை வியாபாரத்திலும் அவர் அலைந்த அலைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. சாதாரண காரில் போவதே அன்று அவருக்கு எட்டாத நிலை. சொகுசுக் காரில் போகிறவர்களை அவர் ஒரு காலத்தில் பொறாமையோடு பார்த்திருக்கிறார். தெருவில் நடக்கையில், ஆகாயத்தில் விமானம் போகும் சத்தம் கேட்டால் அண்ணாந்து பிரமிப்போடு பார்த்திருக்கிறார். சாவதற்குள் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து விட முடியுமா என்று யோசித்திருக்கிறார். சைக்கிள், பழைய ஸ்கூட்டர், பழைய பைக் என்று தான் அவர் முன்னேற்றம் ஆரம்பத்தில் நத்தை வேகத்தில் நகர்ந்திருக்கிறது. ஆனால் அதெல்லாம் இப்போது அவரே நினைக்க விரும்பாத பழைய சரித்திரம்.

அவர் இப்போது புதிய சரித்திரம் படைத்து விட்டார். சரியாகக் கணக்கிட்டால் இன்று அவருடைய சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும். அவருக்கே அது எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியாது. பாண்டியனைக் கேட்டால் தான் சரியாகத் தெரியும். இன்று அவரைப் பார்த்துப் பேசுவது கூடச் சாமானியனுக்கு எளிதல்ல. விலையுயர்ந்த எல்லாக் கார்களிலும் அவர் பயணிக்கிறார். தனி விமானத்தில் பயணம் செய்வது கூட அவருக்கு இன்று சர்வசாதாரணமாகப் போய் விட்டது. இன்று அவரைக் கடவுளாகப் பூஜிப்பவர்கள் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் போகாத நாடில்லை. அவருடைய அபிமானிகள் இல்லாத தேசமில்லை. அவர் இன்று சாதாரண விலை கொண்ட எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தையைக் கட்டளையாக எடுத்துக் கொண்டு செயல்படப் பெரிய சேனையே இருக்கிறது.  பிரதமர், ஜனாதிபதி, கவர்னர், முதல்வர்கள் போன்ற அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவருக்கு மிக வேண்டப்பட்டவர்கள்.   இன்று அவருக்குக் குறையொன்றுமில்லை

பாண்டியன் கனைத்து அவருடைய எண்ண ஓட்டத்தை நிறுத்தினார். பாண்டியனைப் பார்த்ததும் அவர் புன்னகைத்தார். “வா பாண்டியன் உட்கார்என்றார்.

அவருடைய இந்த உயர்வுக்கு பாண்டியன் முக்கிய காரணம் என்பதை அவரால் மறுக்க முடியாது. ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படிச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர் பாண்டியன் தான். பாண்டியன் மட்டும் அவர் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் இன்று யோகாலயம் இருபது செண்ட் நிலத்திற்குள் அடங்கி இருந்திருக்கும். இன்றும் யோகா தியான வகுப்பு எடுக்க அவரே போக வேண்டியிருந்திருக்கும். அவர் பெயர் சென்னையைத் தாண்டி சென்றிருக்காது.  இன்று அவரிடம் கூழைக்கும்பிடு போடும் பல பேரிடம் அவர் கூழைக்கும்பிடு போட்டு வாழ வேண்டி இருந்திருக்கும். யோகிஜி என்ற பெயரோடு உலகம் அவரை அறிந்திருக்காது!

பாண்டியனிடம் அந்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேச அழைப்பு வந்திருப்பதை பிரம்மானந்தா பெருமையுடன் தெரிவித்தார். சற்று யோசித்த பாண்டியன் பின் சரியாக நினைவு கூர்ந்தார். “வாஷிங்டன் ஆள் டேனியலை நாம நல்லா கவனிச்சுகிட்டது வீண் போகலை, இல்லையா? நல்லது.”

கொடுத்த பணத்துக்கான சேவையைப் பெற்று விட்டோம் என்ற வகையில் பேச்சு எழுந்ததை பிரம்மானந்தா ரசிக்கவில்லை. அது உண்மை தான் என்றாலும் அதெல்லாம் பேசப்பட வேண்டியவை அல்ல என்பது அவருடைய அபிப்பிராயம். இந்த அங்கீகாரத்தை ஒரு பெருமையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, அது கிடைத்த கதையைப் பேசாமல் இருப்பது தான் இங்கிதம். ஆனால் பாண்டியன் எப்போதும் உள்ளதை உள்ளது போல் பார்த்தும், சொல்லியும் பழகியவர். அதை மாற்றிக் கொள்ள அவர் என்றும் முயற்சி செய்ததில்லை...

பாண்டியன் அவரிடம் அந்த யோகியைக் கண்டுபிடிக்க ஆட்களிடம் சொல்லி இருப்பதைத் தெரிவித்தார்.

பிரம்மானந்தா திகைப்புடன் கேட்டார். “எந்த யோகியை?”

உங்க கிட்ட ஒரு பேராசிரியர் ஒரு தோட்டக்காரனைக் காட்டி யோகின்னு  சொன்னார்னு சொன்னீங்க இல்லையா யோகிஜி அந்த ஆளைத் தான்…”

திகைப்பு மாறாமல் பிரம்மானந்தா சொன்னார். “நான் தான் சொன்னேனே அந்த ஆள் யோகி இல்லைன்னு

இல்லாட்டியும் பரவாயில்லை. அந்த ஆளைக் கண்டுபிடிச்சு சோதிச்சுப் பார்க்கறதுல நமக்கு நஷ்டம் இல்லையே. நான் பார்த்த வரைக்கும் ஆன்மீகத்துல நாம நினைக்கிறதெல்லாம் நிஜமாய் இருக்கறதில்லை. உண்மை என்னங்கறது குழப்பமாய் தான் இருக்கு. ஷ்ரவன் அவன் சக்தியை வெச்சு கண்டுபிடிச்சு சொன்ன யோகி ஏதோ தோட்டத்துல இருக்கார். உங்க சிவசங்கரன் சொன்ன ஆளும் தோட்டக்காரராய் தான் இருக்கார். ரெண்டும் ஒத்துப் போகிறதால அப்படியே தேடிப்பார்ப்போம். அந்த ஆள் கிடைச்சா, அவரோட காலடி மண்ணை வெச்சு நம்ம பிரச்சினை தீருதான்னு பார்ப்போம். தீரலைன்னாலும் நாம இழக்கறது ஒன்னுமில்லையே.

பிரம்மானந்தாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சற்று முன் வரை உணர்ந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் காற்றில் கரைவது போல் அவர்  உணர்ந்தார். அவர் அந்தத் தோட்டக்காரக் கிழவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் ஏதோ நெருடல் ஏற்படுவதால், சமீப காலங்களில் அந்தக் கிழவரைத் துச்சமாகத் தான் நினைக்கிறார். பிழைக்கத் தெரியாத, சொந்தப் பரிதாப நிலை கூடப் புரியாத முட்டாள் என்று தான் அவரை எண்ணுகிறார். இன்னமும் அனாமதேயமாகவே இருக்கும் அந்தக் கிழவர் எப்போதாவது நல்ல உடை உடுத்தியிருப்பாரா? எப்போதாவது நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டோ, தங்கியோ இருப்பாரா? என்றைக்காவது அந்த ஆளிடம் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாயாவது இருக்குமா? என்றெல்லாம் இகழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டும், தானிருக்கும் உயரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் இருக்கிறார். அப்படியிருக்கையில் அவருடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அதிபுத்திசாலியுமான பாண்டியனே நிஜ யோகி என்று அந்தக் கிழவரை நம்பி, தேட ஒரு கூட்டத்தையே முடுக்கியிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அந்த யோகியின் காலடி மண் கூட, அவருடைய ஆட்களுக்கே மிக முக்கியமானமாய் போனது அவர்கள் இருவருடைய நிலைகளைத் தலைகீழாய் திருப்பிப் போட்டது போல் அவருக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது.

பிரம்மானந்தாவின் மன அமைதி விடைபெற்றுக் கொண்டது.


(தொடரும்)

என்.கணேசன்





3 comments:

  1. இத்தனை நாட்களாக பிரம்மானந்தாவின் பேச்சு திறமையை பார்த்து தான் பெரிய இடங்களில் 'பேச அழைக்கிறார்கள் ' என்று நினைத்தேன்....
    ஆனால் இப்போது தான் உண்மை புரிகிறது.

    ReplyDelete
  2. ராகுராம் "தான் உண்டு தன் தோட்ட வேலை உண்டு" என்று உள்ளார்... ஆனால் பிரம்மானாந்தாவுக்கு ஏன் கொதிக்கிறது...என்று தெரியவில்லை.

    ReplyDelete