ராகவன் ஒரு ஓட்டலில் காபி குடித்துக்
கொண்டே ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. அவள் புத்திசாலியாகவும், யதார்த்தமானவளாகவும்,
துடிப்பானவளாகவும் தெரிந்தாள். ஷ்ரவனுக்கு அவள்
மிகப் பொருத்தமான ஜோடி என்று அவருக்குத் தோன்றியது.
அவளிடம் அந்த ’பென் ட்ரைவை’த் தந்து விட்டு, தாழ்ந்த குரலில் சொன்னார். ”இது பத்திரம். இது வேறொரு கைக்குப் போகக்கூடாதுங்கறது ரொம்ப முக்கியம். இந்த வழக்குல ஷ்ரவனுக்கு நாங்க முழு சுதந்திரம் தந்திருக்கோம். வெளியே இருந்து சின்னச் சின்ன உதவிகள் நாங்கள் செய்யறோமேயொழிய மற்றபடி நாங்க ஒதுங்கி தான் நிற்கறோம். அவன் வேலை செய்யற பாணியும் எப்பவுமே சுதந்திரமாய் தான் இருந்திருக்கு. அவன் கிட்ட ஒவ்வொரு வேலைக்கும் முழுநம்பிக்கையான ஒவ்வொரு ஆள் இருக்கு. இந்த வேலைக்கும் அவன் ஒரு ஆளை முதல்லயே தேர்ந்தெடுத்து, அவர் கிட்ட சொல்லி வெச்சுட்டு தான் போயிருக்கான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அந்த ஆள் ஒரு விபத்துல சிக்கி இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கார். ஷ்ரவன் வெளியே இருந்திருந்தா வேற யாரையாவது யோசிச்சு, அவங்க கிட்ட பேசி இந்த வேலையை ஒப்படைச்சிருப்பானோ என்னவோ தெரியலை. யோகாலயத்துக்குள்ளே இருக்கற அவனுக்கு உன் மேல தான் பரிபூரண நம்பிக்கை தோணியிருக்கு. இந்த வழக்கு பத்தின விவரங்களையும் உன் கிட்ட சொல்லியிருக்கான்னு நினைக்கிறேன்….”
அவள் தலையசைத்தாள். அவர் தொடர்ந்து சொன்னார். “எங்க கிட்டயும் நிறைய திறமையானவங்க இருக்காங்க. அதுல நம்பிக்கையானவங்களும் உண்டு. ஆனால் யோகாலயத்துக்கு எதிரான ஏதாவது தகவல் அவர்களுக்கு கிடைச்சா அவங்கள்ல எத்தனை பேர் பண சபலத்துக்கு ஆளாகாமல் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம கிட்ட அந்த தகவல்களைக் கொடுத்தால் கொஞ்சம் பணமும் பாராட்டும் கிடைக்கும். ஆனால் யோகாலயத்துல பேரம் பேசினால் அவங்க வாழ்நாள் கடைசி வரைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்கிற அளவு ஒரே நாள்ல சம்பாதிச்சுட முடியும். இப்படி இருக்கிற சூழ்நிலைல ஷ்ரவன் உன்னை முழுசும் நம்பறான்…”
அவளுக்கு கம்ப்யூட்டர் துறையில் விஷய ஞானம் நிறைய இருந்தாலும், துப்பறியும் கோணத்தில் அனுபவம் அதிகமில்லை என்பதால் ராகவன் அது குறித்த அடிப்படை விஷயங்களையும், அணுகுமுறைகளையும் எளிமையாக அவர் விளக்கினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஸ்ரேயாவிடம் மிகுந்த ஆர்வமும், பரபரப்பும் பார்த்த அவர் புன்னகையோடு சொன்னார். “கதைகளில் படிக்கிற மாதிரியோ, சினிமாக்களில் பார்க்கிற மாதிரியோ இந்த வேலை ரொம்ப சுவாரசியமாய் இருக்கும்னு நினைச்சுடாதேம்மா. உண்மையைச் சொல்லணும்னா இது பல சமயங்கள்ல அலுப்பும், சலிப்பும் தட்டற வேலை தான். கண்ணைக் கட்டி காட்டுக்குள்ளே விட்ட மாதிரியிருக்கும். பல ஆயிரக்கணக்கான தகவல்கள்ல எது உபயோகப்படற தகவல்னு தேடிக் கண்டுபிடிக்கறதே கஷ்டம். சில சமயங்கள்ல ஒரு உருப்படியான தகவல் கூடக் கிடைக்காது…”
அவர் அவளை எச்சரித்த விதம் அவளைப் பின்வாங்கவோ, உற்சாகத்தை இழக்கவோ வைக்கவில்லை. அவள் புன்னகையுடனும், துடிப்புடனும் சொன்னாள். “எனக்கு அலுப்பும் சலிப்பும் வராது சார். ஏன்னா என் கிட்ட ஷ்ரவன் நம்பிக்கையோடு ஒப்படைச்சிருக்கற முதல் வேலையை நல்லபடியாய் முடிச்சுக் குடுத்து என்னை நிரூபிக்க எனக்குக் கிடைச்சிருக்கற சந்தர்ப்பமாய் தான் இதைப் பார்க்கிறேன். காதல், காதலன், சம்பந்தப்படற எந்த வேலையிலயும் சுவாரசியம் குறைஞ்சுட முடியும்னு நினைக்கிறீங்களா சார்.”
ராகவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னார். “எனக்குத் தெரியாதும்மா. துரதிர்ஷ்டவசமாய் எனக்கு காதல் அனுபவமெல்லாம் இல்லை.”
ஸ்ரேயா ஐயோ பாவம் என்பது போல் அவரைப் பார்க்க, அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
மாலை சத்சங்கத்திற்கு ஷ்ரவன் சென்று கொண்டிருந்த போது கண்ணன்
எதிரில் வந்தார். “நாளை இரவு ஏழரைக்கு மேனேஜர் வரச் சொன்னார். இரவு உணவு
அவருடனேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்.”
ஷ்ரவன் தலையசைத்தான். உடனிருந்த சித்தானந்தாவும், பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று துறவிகளும் ஷ்ரவனை பிரமிப்புடன் பார்த்தார்கள். உடன் சாப்பிடும் அளவு அவன் பாண்டியனுடன் மிகவும் நெருக்கமாகி விட்டது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. துறவிகள் பிரம்மானந்தாவைச் சந்திப்பதை எப்படி ஒரு பாக்கியமாக நினைத்தார்களோ, அப்படியே பாண்டியனைச் சந்திக்க வேண்டியிருப்பதை துர்ப்பாக்கியமாக நினைத்தார்கள். பெரும்பாலும் துறவிகளைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் தான் பாண்டியன் அழைப்பது வழக்கம். மற்றபடி துறவிகளுடன் கலந்து பேச அவருக்கு எதுவும் இருப்பதில்லை. அதனால் முதல் முறையாக ஒரு துறவி பாண்டியனின் நட்பு வட்டத்தில் நுழைந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போதெல்லாம் ஷ்ரவனை பலரும் மரியாதையுடன் பார்க்கிறார்கள். அங்கு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் போலீஸ்கார்ரகள் போல் தான் நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களும் இப்போதெல்லாம் ஷ்ரவனை மரியாதையாக நடத்துகிறார்கள். பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் கண்ணன் கூட ஷ்ரவனை மரியாதையுடன் பார்ப்பது யோகாலயத்தில் ஷ்ரவனின் அந்தஸ்து உயர ஆரம்பித்திருப்பதைக் காட்டியது.
முக்தானந்தா மட்டும் இந்த முன்னேற்றத்தில் ஆபத்தைப் பார்த்தார். ஷ்ரவன் தனியாகக் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அவர் ஷ்ரவனை எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்கச் சொன்னார்.
ஷ்ரவன் தியான நேரங்களில் மந்திர ஜபத்தை மிகவும் சிரத்தையுடன் செய்தான். வழக்கமான துப்பறியும் யுக்திகள் பெரிய பலன் தராத நிலையில், இது வரை அது தான் அவனுக்கு வழிகாட்டியிருக்கிறது. அன்றிரவும், மறுநாள் காலையும் அவன் மந்திர ஜபம் செய்து, மேலும் தொடர்ந்து வழிகாட்டும்படி ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தான். அந்த சமயங்களில் அவனுக்கு ஓநாய் தெரியவில்லை என்றாலும் அந்த மந்திரம் அவனைப் பலப்படுத்துவதாகவும், தெளிவை ஏற்படுத்துவதாகவும் அவன் தொடர்ந்து உணர்ந்தான்.
மறுநாள் இரவு ஏழரை மணிக்கு ஷ்ரவன் சென்ற போது பாண்டியனுடன் சுகுமாரனும் இருந்தார். இருவரும் நட்புடன் அவனை வரவேற்றார்கள். பாண்டியன் அடிக்கடி தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கச் சொன்னார். “இன்று இரவு 7.49க்கு முகூர்த்த காலம் நன்றாக இருக்கிறதாம். அதனால் அந்த நேரத்தில் மறுபடி முயற்சி செய்து பார்க்கிறீர்களா ஷ்ரவனானந்தா.”
“கண்டிப்பாக” என்ற ஷ்ரவன் தயக்கத்துடன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கே என் மீது உங்கள் அளவு நம்பிக்கை இல்லை. ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் மன்னிக்க வேண்டும்.”
சுகுமாரன் சொன்னார். “விஞ்ஞானிகளே கூட எல்லா சமயங்களிலும் சரியாகவே சொல்லிடறதில்லை. அதனால தப்பானாலும் ஒன்னும் குடி முழுகிடப் போகிறதில்லை.”
தேவானந்தகிரி குறித்துக் கொடுத்த மூன்று முகூர்த்த நேரங்களில் ஒன்று முடிந்து விட்டது. இன்று இரவு 7.49ம், ஐந்து நாட்கள் கழித்து நள்ளிரவு 1.01ம் அடுத்த முகூர்த்த நேரங்கள். அதைப் பாண்டியன் தன் டைரியில் குறித்துக் கொள்ள, சுகுமாரன் தன் அலைபேசியில் சேமித்துக் கொண்டிருந்தார். எதிரியைக் கண்டுபிடித்து அழித்து, அவரும் அவருடைய டாமியும் கட்டிக் கொண்டிருக்கும் தாயத்துகளிலிருந்து விடுதலையாகும் வரைக்கும் இயல்பாய் வாழ முடியாது என்ற நிலையை அவர் எட்டியிருந்தார். அவருடைய வீட்டில் இருக்கும் நிலைமை அந்த அளவு மோசமாய் இருந்தது. அவரது மனைவியின் சினேகிதியான சதிகாரி திரும்பத் திரும்ப அந்த தாயத்துகளில் தான் அவர்களுக்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அவளுக்கு வேண்டப்பட்ட மந்திரவாதி திட்டவட்டமாய் சொல்வதாய்ச் சொல்லியிருந்தாள். அவருடைய மனைவி அவர் சொல்வதை நம்புவதா, இல்லை சினேகிதியின் மந்திரவாதி சொல்வதை நம்புவதா என்று ஒரு முடிவுக்கு வராமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.
“உன் கணவன் உயிரோடு இருக்கணும்னு ஆசைப்பட்டால் தயவு செஞ்சு தாயத்தோட விளையாடாதே.” என்று சுகுமாரன் உருக்கமாகப் பயமுறுத்தி வைத்திருக்கிறார். அதனால் இதற்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு கிடைத்தால் நல்லது என்று ஆசைப்படும் அவருக்கு ஷ்ரவனானந்தா என்னும் அந்த இளம் துறவி தான் இப்போதைக்கு ஆபத் பாந்தவனாகத் தெரிகிறான். எப்போதுமே எதிலும் குறை கண்டுபிடிக்கும் பாண்டியனுக்குக் கூட ஷ்ரவனானந்தா சொல்வதில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, சுகுமாரனுக்கு அந்த இளம் துறவி மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரித்திருந்தது. அதனால் அவர் அந்த முகூர்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டார்.
பாண்டியனுக்கும் ஒரு மாதத்திற்கு முன் வரை சிறிது கூட நம்பிக்கை இல்லாமலிருந்த இந்த ஏவல், செய்வினை போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மீது நேரடி அனுபவத்திற்குப் பின் நம்பிக்கை வந்திருந்தது. தேவானந்தகிரியின் வரவும், பூஜைகளும், தாயத்தும் பலன் அளித்த பின் நம்பிக்கை கூடியது. அவர்களுக்கு மட்டுமே தெரிந்தவற்றையும், அவர்களுக்கு தேவானந்தகிரி சொன்னவற்றையும் அனாயாசமாக ஷ்ரவன் சொல்ல முடிந்திருந்தது அவன் மீதும் அதீத நம்பிக்கையை உருவாக்கி இருந்தது.
ஷ்ரவன் கேட்டான். “நான் இப்போது எதில் கவனம் செலுத்த வேண்டும்?”
“அந்த இளைஞன் மீதே கவனம் வையுங்கள் ஷ்ரவனானந்தா. அவனைப் பற்றிக் கூடுதலாக நமக்குத் தெரிய வேண்டும்” என்றார் பாண்டியன்.
ஷ்ரவன் சரியெனத் தலையசைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment