என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 18, 2025

சாணக்கியன் 192

 

ராக்ஷசருக்கு இப்போதும் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவர் சாணக்கியரின் முகத்தில் நையாண்டி, கேலிக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா என்று மறுபடியும் கூர்ந்து பார்த்தார். அப்படித் தெரியவில்லை. அதனால் சந்திரகுப்தனைப் பார்த்தார். ஆச்சாரியர் அளவுக்கு அவன் தன் உணர்ச்சிகளை மறைக்கத் தெரிந்தவனாக இருக்க வழியில்லை. ஆனால் அவனிடமும் மரியாதை மட்டுமே தெரிந்தது. அவர் தன் குழப்பத்தை வெளிப்படையாகவே சொன்னார். “ஆச்சாரியரே. தங்கள் அறிவுக்கும், திறமைக்கும்சாமர்த்தியத்திற்கும்  மகதத்தின் பிரதம அமைச்சர் பதவி மட்டுமல்ல, இது போன்ற பல மடங்கு பெரிதான சாம்ராஜ்ஜியத்திற்கும் தலைமை வகிக்க தங்களால் முடியும். அப்படியிருக்கையில், தங்கள் கணிப்பின் படியே கடமையைச் சரியாகச் செய்திருக்காத எனக்கு எதற்கு மீண்டும் பதவியை அளித்து அழைக்கிறீர்கள் என்று சத்தியமாகத் தெரியவில்லை.”

 

இதே கேள்வியைத் தான் சந்திரகுப்தனும் சாணக்கியரிடம் முன்பே கேட்டிருந்தான். என்ன தான் அறிவிலும், திறமையிலும் ராக்‌ஷசர் சிறப்பாக இருந்தாலும் கூட ஆச்சாரியரின் உயரத்தை அவர் எட்ட முடியும் என்று அவன் நம்பவில்லை. மேலும் பண்பிலும் கூட ஆச்சாரியர் அளவுக்கு ராக்‌ஷசர் தன்னலம் இல்லாதவராய் இருக்க முடியாது என்று அவன் நம்பினான். அதனால் அவனுடைய ஆச்சாரியரே மிகப் பொருத்தமாக இருக்கும் பதவிக்கு ராக்‌ஷசரை அழைப்பதில் அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை.

 

ஆனால் சாணக்கியர் அவனிடம் சொல்லியிருந்தார். “சந்திரகுப்தா. மகத வெற்றி நமது இலக்கின் முடிவல்ல. இலக்கின் ஆரம்பம். இனி செய்ய வேண்டிய காரியங்கள், நமக்குச் சவாலாக அமைந்திருக்கும் வேலைகள் எல்லாம் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக செல்யூகஸ் இருக்கிறான். அவனிருக்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். அங்குள்ள பிரச்சினைகளத் தீர்த்து தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் அவன் எந்த நேரத்திலும் விரைவாக பாரதம் நோக்கி வரலாம். முதலில் அவனைச் சமாளிக்க வேண்டும். இங்கே  தனநந்தனுக்கு முதல் முக்கியத்துவம் தந்த ஒரு குறையைத் தவிர ராக்‌ஷசர் வேறெந்த விதத்திலும் நாம் குறை சொல்ல முடியாதவர்.  அவர் நிர்வாக விஷயங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் நான் சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.”

 

ஆனால் ராக்‌ஷசர் கேட்ட கேள்விக்கு அவரிடம் சாணக்கியர் வேறு மாதிரியான பதில் அளித்தார். ““ராக்ஷசரே. மக்கள் நலத்தை விட மன்னன் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒரு தவறைத் தவிர பிரதம அமைச்சராக நீங்கள் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை. அந்தத் தவறையும் சந்திரகுப்தனைப் போன்ற ஒரு அரசன் இருந்தால் நீங்கள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அப்பதவிக்கு உங்களை மீண்டும் அழைக்கிறேன். உங்கள் அறிவும், அனுபவமும் சந்திரகுப்தனுக்கு நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன். எனக்கு வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேறு பல இலக்குகளையும் என் மனதில் வைத்திருக்கிறேன். பிரதம அமைச்சர் என்ற பதவியோடு அதெல்லாம் செய்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் தயவு செய்து பழைய மனத்தாங்கல்கள் எல்லாம் மறந்து நீங்கள் மீண்டும் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு சந்திரகுப்தன் நல்லாட்சி புரிய உதவ வேண்டும் என்று கோருகின்றேன்

 

இந்தப் பதிலிலும் இருந்த சூட்சுமத்தை சந்திரகுப்தன் கவனித்தான். ராக்‌ஷசரிடம் செல்யூகஸ் பற்றியோ மற்ற முக்கிய வேலைகள் பற்றியோ ஆச்சாரியர் வாய் திறக்கவில்லை.  அர்த்த சாஸ்திரம் பற்றியும், பொதுவாக ’பல இலக்குகள்’ என்றும் சொல்லி சாணக்கியர் நிறுத்திக் கொண்டது ராக்‌ஷசர் அவர்கள் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு முன் முக்கியமான எதையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அவர் கவனமாக இருந்ததைச் சுட்டிக்காட்டியது. எல்லா சமயங்களிலும் அவர் கைவிடாத முன்னெச்சரிக்கையை அவன் கவனித்து மனதில் சிலாகித்தான்.

 

ஆனால் ராக்‌ஷசர் வேறொரு விஷயத்திற்காக சாணக்கியரை எண்ணி பிரமித்தார். ஒரு இலக்கை அடைய சாணக்கியர் எதிரி உதவியை வேண்டவும் கூடப் பின்வாங்கியதேயில்லை என்பதை அவர் கவனித்தார். வெறுத்தாலும், அவமானப்படுத்தினாலும் கூட தனநந்தனிடமே அலெக்ஸாண்டருக்கு எதிராக படையெடுத்துச் சென்று பாரதத்தை அன்னியர் பிடியில் சிக்க வைக்காமல் காப்பாற்றும்படி எந்த கௌரவமும் பார்க்காமல் சாணக்கியர் கெஞ்சிய காட்சி இப்போதும் அவர் மனதில் நிழலாடியது. இப்போதும் கூட பழைய பகை எதையும் நினைக்காமல் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளிலும்  அவர் பெறப்போகும் தனிப்பட்ட லாபம் என்று எதுவுமில்லை. சுயநலம் சிறிதும் இல்லாமல், சுய கௌரவம் சிறிதும் பார்க்காமல் மேலான விஷயங்களுக்காகப் பாடுபடும் இந்த மனிதர் அவரை வியக்க வைத்தார். சாணக்கியர் செய்திருக்கும் எத்தனையோ செயல்கள் நேரானவை என்றும் நேர்மையானவை என்றும் சொல்ல முடியா விட்டாலும் அவர் எதையும் தனக்காகச் செய்து கொண்டதில்லை…

 

இப்போதே கூட சிறைப்படுத்தவும், குற்றம் சாட்டி தண்டிக்கவும் சாணக்கியருக்கு வேண்டுமளவு காரணங்கள் இருந்தும் அவர் அதைப் பயன்படுத்த எண்ணாமல் இப்படி வேண்டுகோள் விடுத்துப் பேசிக் கொண்டிருப்பதும் ராக்‌ஷசரி மிகவும் யோசிக்க வைத்தது.

 

அவர் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “ஆச்சாரியரே உண்மையில் நீங்கள் என்ன உத்தேசத்துடன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இதற்கு நான் அருகதை உள்ளவன் தானா என்றும் எனக்குத் தெரியாது. காரணம் எதுவாக இருந்தாலும் இந்த மரியாதைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி. நீங்கள் அதிகாரமில்லாமல் இருந்த காலத்திலும் உங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதிகாரத்தின் உச்சத்திலும் நான் உங்களைப் பார்க்கிறேன். இந்த இரண்டுமே பாதித்து விடாத ஒரு உன்னத மேன்மையை இருவித காலங்களிலும் நீங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகத் தங்களிடம் தலைவணங்குகிறேன். யுகங்களில் ஒரு மனிதனை இப்படி இறைவன் சிருஷ்டி செய்து திருப்தியடையக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் நானிருக்கிறேன். தாங்களே சொன்னது போல் அரசர் தனநந்தர் மீது நான் வைத்திருக்கும் அதீத அன்பு காரணம் என்றே சொல்லலாம். என்னை பிரதம அமைச்சராக்கி நாடாண்ட மன்னன்  இன்று காட்டிற்குச் சென்று கஷ்டப்படுகையில் இன்னொரு மன்னன் உதவியால் பதவியைத் தக்க வைத்துக் கொள்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்.”

 

சாணக்கியர் ராக்ஷசரின் ராஜ பக்தியை எண்ணி வியந்தார். சந்திரகுப்தனுக்கு இப்படியொரு விசுவாசமான பிரதம அமைச்சர் கிடைப்பது அதிர்ஷ்டம் தான் என்ற எண்ணம் அவருக்கு மேலும் வலுப்பெற்றது. அவர் அமைதியாகச் சொன்னார். “ராக்‌ஷசரே.  வயோதிக காலத்தில் மன்னர்கள் வனப்பிரஸ்தம் போவது மரபு சார்ந்ததே. ஒருவிதத்தில் ராஜ்ஜிய பாரத்தை அவர்கள் இறக்கி வைத்து ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபடச் செல்வது கஷ்டப்படுவதல்ல. அது கஷ்டத்திலிருந்து விடுபடும் சுதந்திரமே. மேலும் தனநந்தனுக்கு மகன்கள் இப்போது உயிரோடில்லை. வாரிசாக இருப்பது மகள் துர்தரா மட்டுமே. அதனால் அவளைத் திருமணம் செய்து கொள்பவனே உங்கள் நந்த வம்சப்படியும் அடுத்த அரசனாகும் தகுதி பெறுபவன். அந்த விதத்திலும் சந்திரகுப்தனே தனநந்தனுக்கு அடுத்த அரசனாகும் தகுதி பெறுகிறான்.  தனநந்தனின் கோரிக்கையின்படியும், சம்மதத்தின்படியும் தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்று நான் கூறுவதை உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்அதனால் என்னிடம் இறுதியாக மறுப்பதற்கு முன் நீங்கள் கானகம் சென்று ஒரே ஒரு முறை தனநந்தனை சந்தித்துப் பேசி சந்தேகம் தெளிந்து கொள்ள அனுமதிக்கிறேன். திரும்பி வந்த பின் நீங்கள் எனக்கு பதில் அளியுங்கள் போதும். அது என்ன பதிலாக இருந்தாலும் அதற்கு மேல் நான் தங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.”

 

ராக்‌ஷசர் என்ன சொல்வதென்று யோசித்தார். தனநந்தனை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச அவருக்குக் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட விரும்பவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்




No comments:

Post a Comment