என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 18, 2025

சாணக்கியன் 192

 

ராக்ஷசருக்கு இப்போதும் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவர் சாணக்கியரின் முகத்தில் நையாண்டி, கேலிக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா என்று மறுபடியும் கூர்ந்து பார்த்தார். அப்படித் தெரியவில்லை. அதனால் சந்திரகுப்தனைப் பார்த்தார். ஆச்சாரியர் அளவுக்கு அவன் தன் உணர்ச்சிகளை மறைக்கத் தெரிந்தவனாக இருக்க வழியில்லை. ஆனால் அவனிடமும் மரியாதை மட்டுமே தெரிந்தது. அவர் தன் குழப்பத்தை வெளிப்படையாகவே சொன்னார். “ஆச்சாரியரே. தங்கள் அறிவுக்கும், திறமைக்கும்சாமர்த்தியத்திற்கும்  மகதத்தின் பிரதம அமைச்சர் பதவி மட்டுமல்ல, இது போன்ற பல மடங்கு பெரிதான சாம்ராஜ்ஜியத்திற்கும் தலைமை வகிக்க தங்களால் முடியும். அப்படியிருக்கையில், தங்கள் கணிப்பின் படியே கடமையைச் சரியாகச் செய்திருக்காத எனக்கு எதற்கு மீண்டும் பதவியை அளித்து அழைக்கிறீர்கள் என்று சத்தியமாகத் தெரியவில்லை.”

 

இதே கேள்வியைத் தான் சந்திரகுப்தனும் சாணக்கியரிடம் முன்பே கேட்டிருந்தான். என்ன தான் அறிவிலும், திறமையிலும் ராக்‌ஷசர் சிறப்பாக இருந்தாலும் கூட ஆச்சாரியரின் உயரத்தை அவர் எட்ட முடியும் என்று அவன் நம்பவில்லை. மேலும் பண்பிலும் கூட ஆச்சாரியர் அளவுக்கு ராக்‌ஷசர் தன்னலம் இல்லாதவராய் இருக்க முடியாது என்று அவன் நம்பினான். அதனால் அவனுடைய ஆச்சாரியரே மிகப் பொருத்தமாக இருக்கும் பதவிக்கு ராக்‌ஷசரை அழைப்பதில் அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை.

 

ஆனால் சாணக்கியர் அவனிடம் சொல்லியிருந்தார். “சந்திரகுப்தா. மகத வெற்றி நமது இலக்கின் முடிவல்ல. இலக்கின் ஆரம்பம். இனி செய்ய வேண்டிய காரியங்கள், நமக்குச் சவாலாக அமைந்திருக்கும் வேலைகள் எல்லாம் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக செல்யூகஸ் இருக்கிறான். அவனிருக்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். அங்குள்ள பிரச்சினைகளத் தீர்த்து தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் அவன் எந்த நேரத்திலும் விரைவாக பாரதம் நோக்கி வரலாம். முதலில் அவனைச் சமாளிக்க வேண்டும். இங்கே  தனநந்தனுக்கு முதல் முக்கியத்துவம் தந்த ஒரு குறையைத் தவிர ராக்‌ஷசர் வேறெந்த விதத்திலும் நாம் குறை சொல்ல முடியாதவர்.  அவர் நிர்வாக விஷயங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் நான் சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.”

 

ஆனால் ராக்‌ஷசர் கேட்ட கேள்விக்கு அவரிடம் சாணக்கியர் வேறு மாதிரியான பதில் அளித்தார். ““ராக்ஷசரே. மக்கள் நலத்தை விட மன்னன் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒரு தவறைத் தவிர பிரதம அமைச்சராக நீங்கள் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை. அந்தத் தவறையும் சந்திரகுப்தனைப் போன்ற ஒரு அரசன் இருந்தால் நீங்கள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அப்பதவிக்கு உங்களை மீண்டும் அழைக்கிறேன். உங்கள் அறிவும், அனுபவமும் சந்திரகுப்தனுக்கு நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன். எனக்கு வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேறு பல இலக்குகளையும் என் மனதில் வைத்திருக்கிறேன். பிரதம அமைச்சர் என்ற பதவியோடு அதெல்லாம் செய்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் தயவு செய்து பழைய மனத்தாங்கல்கள் எல்லாம் மறந்து நீங்கள் மீண்டும் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு சந்திரகுப்தன் நல்லாட்சி புரிய உதவ வேண்டும் என்று கோருகின்றேன்

 

இந்தப் பதிலிலும் இருந்த சூட்சுமத்தை சந்திரகுப்தன் கவனித்தான். ராக்‌ஷசரிடம் செல்யூகஸ் பற்றியோ மற்ற முக்கிய வேலைகள் பற்றியோ ஆச்சாரியர் வாய் திறக்கவில்லை.  அர்த்த சாஸ்திரம் பற்றியும், பொதுவாக ’பல இலக்குகள்’ என்றும் சொல்லி சாணக்கியர் நிறுத்திக் கொண்டது ராக்‌ஷசர் அவர்கள் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு முன் முக்கியமான எதையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அவர் கவனமாக இருந்ததைச் சுட்டிக்காட்டியது. எல்லா சமயங்களிலும் அவர் கைவிடாத முன்னெச்சரிக்கையை அவன் கவனித்து மனதில் சிலாகித்தான்.

 

ஆனால் ராக்‌ஷசர் வேறொரு விஷயத்திற்காக சாணக்கியரை எண்ணி பிரமித்தார். ஒரு இலக்கை அடைய சாணக்கியர் எதிரி உதவியை வேண்டவும் கூடப் பின்வாங்கியதேயில்லை என்பதை அவர் கவனித்தார். வெறுத்தாலும், அவமானப்படுத்தினாலும் கூட தனநந்தனிடமே அலெக்ஸாண்டருக்கு எதிராக படையெடுத்துச் சென்று பாரதத்தை அன்னியர் பிடியில் சிக்க வைக்காமல் காப்பாற்றும்படி எந்த கௌரவமும் பார்க்காமல் சாணக்கியர் கெஞ்சிய காட்சி இப்போதும் அவர் மனதில் நிழலாடியது. இப்போதும் கூட பழைய பகை எதையும் நினைக்காமல் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளிலும்  அவர் பெறப்போகும் தனிப்பட்ட லாபம் என்று எதுவுமில்லை. சுயநலம் சிறிதும் இல்லாமல், சுய கௌரவம் சிறிதும் பார்க்காமல் மேலான விஷயங்களுக்காகப் பாடுபடும் இந்த மனிதர் அவரை வியக்க வைத்தார். சாணக்கியர் செய்திருக்கும் எத்தனையோ செயல்கள் நேரானவை என்றும் நேர்மையானவை என்றும் சொல்ல முடியா விட்டாலும் அவர் எதையும் தனக்காகச் செய்து கொண்டதில்லை…

 

இப்போதே கூட சிறைப்படுத்தவும், குற்றம் சாட்டி தண்டிக்கவும் சாணக்கியருக்கு வேண்டுமளவு காரணங்கள் இருந்தும் அவர் அதைப் பயன்படுத்த எண்ணாமல் இப்படி வேண்டுகோள் விடுத்துப் பேசிக் கொண்டிருப்பதும் ராக்‌ஷசரி மிகவும் யோசிக்க வைத்தது.

 

அவர் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “ஆச்சாரியரே உண்மையில் நீங்கள் என்ன உத்தேசத்துடன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இதற்கு நான் அருகதை உள்ளவன் தானா என்றும் எனக்குத் தெரியாது. காரணம் எதுவாக இருந்தாலும் இந்த மரியாதைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி. நீங்கள் அதிகாரமில்லாமல் இருந்த காலத்திலும் உங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதிகாரத்தின் உச்சத்திலும் நான் உங்களைப் பார்க்கிறேன். இந்த இரண்டுமே பாதித்து விடாத ஒரு உன்னத மேன்மையை இருவித காலங்களிலும் நீங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகத் தங்களிடம் தலைவணங்குகிறேன். யுகங்களில் ஒரு மனிதனை இப்படி இறைவன் சிருஷ்டி செய்து திருப்தியடையக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் நானிருக்கிறேன். தாங்களே சொன்னது போல் அரசர் தனநந்தர் மீது நான் வைத்திருக்கும் அதீத அன்பு காரணம் என்றே சொல்லலாம். என்னை பிரதம அமைச்சராக்கி நாடாண்ட மன்னன்  இன்று காட்டிற்குச் சென்று கஷ்டப்படுகையில் இன்னொரு மன்னன் உதவியால் பதவியைத் தக்க வைத்துக் கொள்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்.”

 

சாணக்கியர் ராக்ஷசரின் ராஜ பக்தியை எண்ணி வியந்தார். சந்திரகுப்தனுக்கு இப்படியொரு விசுவாசமான பிரதம அமைச்சர் கிடைப்பது அதிர்ஷ்டம் தான் என்ற எண்ணம் அவருக்கு மேலும் வலுப்பெற்றது. அவர் அமைதியாகச் சொன்னார். “ராக்‌ஷசரே.  வயோதிக காலத்தில் மன்னர்கள் வனப்பிரஸ்தம் போவது மரபு சார்ந்ததே. ஒருவிதத்தில் ராஜ்ஜிய பாரத்தை அவர்கள் இறக்கி வைத்து ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபடச் செல்வது கஷ்டப்படுவதல்ல. அது கஷ்டத்திலிருந்து விடுபடும் சுதந்திரமே. மேலும் தனநந்தனுக்கு மகன்கள் இப்போது உயிரோடில்லை. வாரிசாக இருப்பது மகள் துர்தரா மட்டுமே. அதனால் அவளைத் திருமணம் செய்து கொள்பவனே உங்கள் நந்த வம்சப்படியும் அடுத்த அரசனாகும் தகுதி பெறுபவன். அந்த விதத்திலும் சந்திரகுப்தனே தனநந்தனுக்கு அடுத்த அரசனாகும் தகுதி பெறுகிறான்.  தனநந்தனின் கோரிக்கையின்படியும், சம்மதத்தின்படியும் தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்று நான் கூறுவதை உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்அதனால் என்னிடம் இறுதியாக மறுப்பதற்கு முன் நீங்கள் கானகம் சென்று ஒரே ஒரு முறை தனநந்தனை சந்தித்துப் பேசி சந்தேகம் தெளிந்து கொள்ள அனுமதிக்கிறேன். திரும்பி வந்த பின் நீங்கள் எனக்கு பதில் அளியுங்கள் போதும். அது என்ன பதிலாக இருந்தாலும் அதற்கு மேல் நான் தங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.”

 

ராக்‌ஷசர் என்ன சொல்வதென்று யோசித்தார். தனநந்தனை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச அவருக்குக் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட விரும்பவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 15, 2025

யோகி 134

 

ராகவன் ஒரு ஓட்டலில் காபி குடித்துக் கொண்டே ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. அவள் புத்திசாலியாகவும், யதார்த்தமானவளாகவும், துடிப்பானவளாகவும் தெரிந்தாள். ஷ்ரவனுக்கு அவள் மிகப் பொருத்தமான ஜோடி என்று அவருக்குத் தோன்றியது.  

அவளிடம் அந்தபென் ட்ரைவைத் தந்து விட்டு, தாழ்ந்த குரலில் சொன்னார். ”இது பத்திரம். இது வேறொரு கைக்குப் போகக்கூடாதுங்கறது ரொம்ப முக்கியம். இந்த வழக்குல ஷ்ரவனுக்கு நாங்க முழு சுதந்திரம் தந்திருக்கோம். வெளியே இருந்து சின்னச் சின்ன உதவிகள் நாங்கள் செய்யறோமேயொழிய மற்றபடி நாங்க ஒதுங்கி தான் நிற்கறோம். அவன் வேலை செய்யற பாணியும் எப்பவுமே சுதந்திரமாய் தான் இருந்திருக்கு. அவன் கிட்ட ஒவ்வொரு வேலைக்கும் முழுநம்பிக்கையான ஒவ்வொரு ஆள் இருக்கு. இந்த வேலைக்கும் அவன் ஒரு ஆளை முதல்லயே தேர்ந்தெடுத்து, அவர் கிட்ட சொல்லி வெச்சுட்டு தான் போயிருக்கான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அந்த ஆள் ஒரு விபத்துல சிக்கி இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கார். ஷ்ரவன் வெளியே இருந்திருந்தா வேற யாரையாவது யோசிச்சு, அவங்க கிட்ட பேசி இந்த வேலையை ஒப்படைச்சிருப்பானோ என்னவோ தெரியலை.  யோகாலயத்துக்குள்ளே இருக்கற அவனுக்கு உன் மேல தான் பரிபூரண நம்பிக்கை தோணியிருக்கு. இந்த வழக்கு பத்தின விவரங்களையும்   உன் கிட்ட சொல்லியிருக்கான்னு நினைக்கிறேன்….”

அவள் தலையசைத்தாள். அவர் தொடர்ந்து சொன்னார். “எங்க கிட்டயும் நிறைய திறமையானவங்க இருக்காங்க. அதுல நம்பிக்கையானவங்களும் உண்டு. ஆனால் யோகாலயத்துக்கு எதிரான ஏதாவது தகவல் அவர்களுக்கு கிடைச்சா அவங்கள்ல எத்தனை பேர் பண சபலத்துக்கு ஆளாகாமல் இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுநம்ம கிட்ட அந்த தகவல்களைக் கொடுத்தால் கொஞ்சம் பணமும் பாராட்டும் கிடைக்கும். ஆனால் யோகாலயத்துல பேரம் பேசினால் அவங்க வாழ்நாள் கடைசி வரைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்கிற அளவு ஒரே நாள்ல சம்பாதிச்சுட முடியும். இப்படி இருக்கிற சூழ்நிலைல ஷ்ரவன் உன்னை முழுசும் நம்பறான்…”

அவளுக்கு கம்ப்யூட்டர் துறையில் விஷய ஞானம் நிறைய இருந்தாலும், துப்பறியும் கோணத்தில் அனுபவம் அதிகமில்லை என்பதால் ராகவன் அது குறித்த அடிப்படை விஷயங்களையும், அணுகுமுறைகளையும் எளிமையாக அவர் விளக்கினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஸ்ரேயாவிடம் மிகுந்த ஆர்வமும், பரபரப்பும் பார்த்த அவர் புன்னகையோடு சொன்னார். “கதைகளில் படிக்கிற மாதிரியோ, சினிமாக்களில் பார்க்கிற மாதிரியோ இந்த வேலை ரொம்ப சுவாரசியமாய் இருக்கும்னு நினைச்சுடாதேம்மா. உண்மையைச் சொல்லணும்னா இது பல சமயங்கள்ல அலுப்பும், சலிப்பும் தட்டற வேலை தான். கண்ணைக் கட்டி காட்டுக்குள்ளே விட்ட மாதிரியிருக்கும். பல ஆயிரக்கணக்கான தகவல்கள்ல எது உபயோகப்படற தகவல்னு தேடிக் கண்டுபிடிக்கறதே கஷ்டம். சில சமயங்கள்ல ஒரு உருப்படியான தகவல் கூடக் கிடைக்காது…”

அவர் அவளை எச்சரித்த விதம் அவளைப் பின்வாங்கவோ, உற்சாகத்தை இழக்கவோ வைக்கவில்லை. அவள் புன்னகையுடனும், துடிப்புடனும்  சொன்னாள். “எனக்கு அலுப்பும் சலிப்பும் வராது சார். ஏன்னா என் கிட்ட ஷ்ரவன் நம்பிக்கையோடு ஒப்படைச்சிருக்கற முதல் வேலையை நல்லபடியாய் முடிச்சுக் குடுத்து என்னை நிரூபிக்க எனக்குக் கிடைச்சிருக்கற சந்தர்ப்பமாய் தான் இதைப் பார்க்கிறேன். காதல், காதலன், சம்பந்தப்படற எந்த வேலையிலயும் சுவாரசியம் குறைஞ்சுட முடியும்னு நினைக்கிறீங்களா சார்.”

ராகவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னார். “எனக்குத் தெரியாதும்மா. துரதிர்ஷ்டவசமாய் எனக்கு காதல் அனுபவமெல்லாம் இல்லை.”

ஸ்ரேயா ஐயோ பாவம் என்பது போல் அவரைப் பார்க்க, அவர் வாய்விட்டுச் சிரித்தார்.

 

மாலை சத்சங்கத்திற்கு ஷ்ரவன் சென்று கொண்டிருந்த போது கண்ணன் எதிரில் வந்தார். “நாளை இரவு ஏழரைக்கு மேனேஜர் வரச் சொன்னார். இரவு உணவு அவருடனேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்.”

ஷ்ரவன் தலையசைத்தான். உடனிருந்த சித்தானந்தாவும், பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று துறவிகளும் ஷ்ரவனை பிரமிப்புடன் பார்த்தார்கள். உடன் சாப்பிடும் அளவு அவன் பாண்டியனுடன் மிகவும் நெருக்கமாகி விட்டது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. துறவிகள் பிரம்மானந்தாவைச் சந்திப்பதை எப்படி ஒரு பாக்கியமாக நினைத்தார்களோ, அப்படியே பாண்டியனைச் சந்திக்க வேண்டியிருப்பதை துர்ப்பாக்கியமாக நினைத்தார்கள். பெரும்பாலும் துறவிகளைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் தான் பாண்டியன் அழைப்பது வழக்கம். மற்றபடி துறவிகளுடன் கலந்து பேச அவருக்கு எதுவும் இருப்பதில்லை. அதனால் முதல் முறையாக ஒரு துறவி பாண்டியனின் நட்பு வட்டத்தில் நுழைந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போதெல்லாம் ஷ்ரவனை பலரும் மரியாதையுடன்  பார்க்கிறார்கள். அங்கு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் போலீஸ்கார்ரகள் போல்  தான் நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களும் இப்போதெல்லாம் ஷ்ரவனை மரியாதையாக நடத்துகிறார்கள்.  பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் கண்ணன் கூட ஷ்ரவனை மரியாதையுடன் பார்ப்பது யோகாலயத்தில் ஷ்ரவனின் அந்தஸ்து உயர ஆரம்பித்திருப்பதைக் காட்டியது.

முக்தானந்தா மட்டும் இந்த முன்னேற்றத்தில் ஆபத்தைப் பார்த்தார். ஷ்ரவன் தனியாகக் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அவர் ஷ்ரவனை எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்கச் சொன்னார்.

ஷ்ரவன் தியான நேரங்களில் மந்திர ஜபத்தை மிகவும் சிரத்தையுடன் செய்தான். வழக்கமான துப்பறியும் யுக்திகள் பெரிய பலன் தராத நிலையில், இது வரை அது தான் அவனுக்கு வழிகாட்டியிருக்கிறது.  அன்றிரவும், மறுநாள் காலையும் அவன் மந்திர ஜபம் செய்து, மேலும் தொடர்ந்து வழிகாட்டும்படி  ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தான்.  அந்த சமயங்களில் அவனுக்கு ஓநாய் தெரியவில்லை என்றாலும் அந்த மந்திரம் அவனைப் பலப்படுத்துவதாகவும், தெளிவை ஏற்படுத்துவதாகவும் அவன் தொடர்ந்து உணர்ந்தான்.  

மறுநாள் இரவு ஏழரை மணிக்கு ஷ்ரவன் சென்ற போது பாண்டியனுடன் சுகுமாரனும் இருந்தார்.  இருவரும் நட்புடன் அவனை வரவேற்றார்கள். பாண்டியன் அடிக்கடி தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கச் சொன்னார். “இன்று இரவு 7.49க்கு முகூர்த்த காலம் நன்றாக இருக்கிறதாம். அதனால் அந்த நேரத்தில் மறுபடி முயற்சி செய்து பார்க்கிறீர்களா ஷ்ரவனானந்தா.”

கண்டிப்பாகஎன்ற ஷ்ரவன் தயக்கத்துடன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கே என் மீது உங்கள் அளவு நம்பிக்கை இல்லை. ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் மன்னிக்க வேண்டும்.”

சுகுமாரன் சொன்னார். “விஞ்ஞானிகளே கூட எல்லா சமயங்களிலும் சரியாகவே சொல்லிடறதில்லை. அதனால தப்பானாலும் ஒன்னும் குடி முழுகிடப் போகிறதில்லை.”

தேவானந்தகிரி குறித்துக் கொடுத்த மூன்று முகூர்த்த நேரங்களில் ஒன்று முடிந்து விட்டது. இன்று இரவு 7.49ம், ஐந்து நாட்கள் கழித்து நள்ளிரவு 1.01ம் அடுத்த முகூர்த்த நேரங்கள். அதைப் பாண்டியன் தன் டைரியில் குறித்துக் கொள்ள, சுகுமாரன் தன் அலைபேசியில் சேமித்துக் கொண்டிருந்தார். எதிரியைக் கண்டுபிடித்து அழித்து, அவரும் அவருடைய டாமியும் கட்டிக் கொண்டிருக்கும் தாயத்துகளிலிருந்து விடுதலையாகும் வரைக்கும் இயல்பாய் வாழ முடியாது என்ற நிலையை அவர் எட்டியிருந்தார். அவருடைய வீட்டில் இருக்கும் நிலைமை அந்த அளவு மோசமாய் இருந்தது. அவரது மனைவியின் சினேகிதியான சதிகாரி திரும்பத் திரும்ப அந்த தாயத்துகளில் தான் அவர்களுக்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அவளுக்கு வேண்டப்பட்ட மந்திரவாதி திட்டவட்டமாய் சொல்வதாய்ச் சொல்லியிருந்தாள். அவருடைய மனைவி அவர் சொல்வதை நம்புவதா, இல்லை சினேகிதியின் மந்திரவாதி சொல்வதை நம்புவதா என்று ஒரு முடிவுக்கு வராமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

உன் கணவன் உயிரோடு இருக்கணும்னு ஆசைப்பட்டால் தயவு செஞ்சு தாயத்தோட விளையாடாதே.” என்று சுகுமாரன் உருக்கமாகப் பயமுறுத்தி வைத்திருக்கிறார். அதனால் இதற்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு கிடைத்தால் நல்லது என்று ஆசைப்படும் அவருக்கு ஷ்ரவனானந்தா என்னும் அந்த இளம் துறவி தான் இப்போதைக்கு ஆபத் பாந்தவனாகத் தெரிகிறான். எப்போதுமே எதிலும் குறை கண்டுபிடிக்கும் பாண்டியனுக்குக் கூட ஷ்ரவனானந்தா சொல்வதில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, சுகுமாரனுக்கு அந்த இளம் துறவி மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரித்திருந்தது. அதனால் அவர் அந்த முகூர்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டார்.

பாண்டியனுக்கும் ஒரு மாதத்திற்கு முன் வரை சிறிது கூட நம்பிக்கை இல்லாமலிருந்த இந்த ஏவல், செய்வினை போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மீது நேரடி அனுபவத்திற்குப் பின் நம்பிக்கை வந்திருந்தது. தேவானந்தகிரியின் வரவும், பூஜைகளும், தாயத்தும் பலன் அளித்த பின் நம்பிக்கை கூடியது. அவர்களுக்கு மட்டுமே தெரிந்தவற்றையும், அவர்களுக்கு தேவானந்தகிரி சொன்னவற்றையும் அனாயாசமாக ஷ்ரவன் சொல்ல முடிந்திருந்தது அவன் மீதும் அதீத நம்பிக்கையை உருவாக்கி இருந்தது.

ஷ்ரவன் கேட்டான். “நான் இப்போது எதில் கவனம் செலுத்த வேண்டும்?”

அந்த இளைஞன் மீதே கவனம் வையுங்கள் ஷ்ரவனானந்தா. அவனைப் பற்றிக் கூடுதலாக நமக்குத் தெரிய வேண்டும்என்றார் பாண்டியன்.

ஷ்ரவன் சரியெனத் தலையசைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, December 11, 2025

சாணக்கியன் 191

 

சாணக்கியரின் குரல் கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளான ராக்ஷசர் ஸ்தம்பித்து சிலையாகச் சமைந்து ஒரு கணம் நின்றாலும் மறு கணமே சுதாரித்துக் கொண்டு கூர்ந்து பார்த்த போது அகல் விளக்கொளியில் சாணக்கியர் மட்டுமல்லாமல் சந்திரகுப்தனும் தெரிந்தான். அவனும் சாணக்கியரைப் போலவே கைகூப்பி வணங்கி நின்றான்.

 

ராக்ஷசர் இதயம் வேகமாக படபடத்தாலும், சூழ்நிலை அவரை செயலற்றவராக ஆக்கி விடவில்லை. மௌனமாக பெரிய விளக்கொன்றை ஏற்றியபடியே அவர் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டார். சற்று முன் ஒற்றர் தலைவன் சொன்னபடி எல்லாம் கைமீறிப் போய் விட்ட நிலையில் இனி பதறுவதற்கும், அதிர்வதற்கும் எதுவுமில்லை என்று தோன்றியது. முடிவு எதுவாக இருந்தாலும் அவர் சந்தித்தே ஆக வேண்டும். அவர் சந்திப்பார்

 

ராக்ஷசர் விரக்தியால் அமைதி அடைந்தவராகச் சொன்னார். “வணக்கம் சாணக்கியரே. தாங்கள் என்னுடைய பழைய பதவியை நினைவு வைத்துக் கொண்டு இப்போதும் அப்படியே அழைப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது. அதுவும் தற்போது அந்தப் பதவியில் இருக்கும் தாங்கள் அப்படி அழைப்பது என்னை நையாண்டி செய்வது போல் இருக்கிறது.”

 

அந்தப் பழைய பதவியிலிருந்து தங்களை யாரும் விலக்காததால் தான் அப்படியே அழைத்தேன் ராக்ஷசரே. தங்கள் பொறுப்புகளை நிர்வகிக்க நீங்கள் இருக்காததால் நான் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதனால் இதில் நையாண்டி எதுவுமில்லைசாணக்கியர் இப்போதும் பணிவாகவே பேசினார்.

 

இது என்ன நாடகம் என்று ராக்ஷசருக்குத் தோன்றினாலும் அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. பெரிய விளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்தார். சாணக்கியரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. முன்பிரு முறை சாதாரணமான மனிதராக அவரைப் பார்த்த போது அவர் எந்த மாதிரியான எளிய உடையில் பார்த்தாரோ, அதே எளிமையான உடையில் தான் இப்போதும் இருந்தார். அவர் அடைந்த வெற்றிகள் எதுவும் தோற்றத்தில் அவரைப் பெரிதாக மாற்றி விடவில்லை. அந்த அமைதியும் மாறவில்லை. மகத அரசவையில் அவமதிக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட போது இருந்த அதே அமைதி தான், வெற்றி வாகை சூடி அனைத்தையும் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் அவரிடம் தெரிகிறது. இப்படி இருக்க முடிவது எத்தனை பேருக்குச் சாத்தியம் என்ற வியப்பும் ராக்ஷசர் மனதில் எழுந்தது. அதுவும் சாணக்கியர் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.  தனியொரு மனிதனாய் எதிர்க்க ஆரம்பித்து இன்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வெற்றி கொண்டிருக்கிறார்.

 

ராக்ஷசர் பார்வை சந்திரகுப்தனையும் அளந்தது. பட்டு பீதாம்பரமும், ஆபரணங்களும் அணிந்து ஆணழகனாய் ராஜ கம்பீரத்துடன் இருந்த அவனைப் பார்க்கையில் அவராலும் துர்தராவைக் குற்றப்படுத்த முடியவில்லை. 

 

ராக்ஷசர் சொன்னார். “முன்பெல்லாம் கைது செய்யக் காவலர்கள் தான் வருவார்கள். ஆனால் புதிய ஆட்சி மாற்றத்தில் மன்னரும், பிரதம அமைச்சருமே அந்தப் பணியைச் செய்ய வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

 

சாணக்கியர் சொன்னார். “கைது செய்வதென்றால் காவலர்களைத் தான் அனுப்பி இருப்போம். ஆனால் திருமணத்திற்கும், பட்டாபிஷேக விழாவுக்கும் அழைக்க சம்பந்தப்பட்டவர்களே வர வேண்டியிருப்பதால் தான் வந்தோம். ராக்ஷசரே.  வரும் சப்தமியன்று சந்திரகுப்தனுக்கும், இளவரசி துர்தராவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. வரும் தசமியன்று சந்திரகுப்தனின் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. இரண்டுக்கும் வந்து ஆசிகள் வழங்கி சுபநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தங்களை வேண்டிக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொல்லி விட்டு சந்திரகுப்தனைப் பார்க்க சந்திரகுப்தன் தலைவணங்கி ஒரு கணம் நின்று விட்டு பின் ராக்ஷசரின் பாதம் தொட்டு வணங்க ராக்ஷசர் திகைத்தார். அவர் இதைச் சிறிதும்  எதிர்பார்த்திருக்கவில்லை.  பொதுவாக வென்றவர்கள் தோற்றவர்களை நடத்தும் விதம் இதுவல்ல. அதுவும் அவரைப் போல் மறைவாக ஒளிந்திருந்து கொலைத்திட்டம் கூடத் தீட்டிய ஒரு மனிதனை மகத மன்னனாகப் போகிறவன் வணங்குவது இயல்பாயில்லை. ஆனால் இந்த மனிதரின் நாடகங்களில் மயங்கி விடக்கூடாது என்று தனக்குத் தானே ராக்‌ஷசர் சொல்லிக் கொண்டார். இது வரை இவரது எல்லா சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர் பார்த்து வந்திருக்கிறார். அவற்றில் நிறைய பாதிக்கவும் பட்டிருக்கிறார். அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ராக்‌ஷசர் இறுகிய முகத்துடன் சொன்னார்.

 

“ஆச்சாரியரே. தயவு செய்து இந்த நாடகங்களையும், நடிப்பையும் நிறுத்துங்கள். என்னை உங்களுக்குத் தெரியும். உங்களை எனக்கும் தெரியும். நான் உங்கள் நண்பனோ நலம் விரும்பியோ அல்ல. இப்போது வரை நாம் எதிரிகள் தான். அதனால் பாசாங்கு எதுவும் இல்லாமல் நீங்கள் வந்த காரணம் என்ன என்று சொன்னால் இருபக்கமும் காலம் விரயம் ஆவதைத் தவிர்க்க முடியும்”

 

சாணக்கியர் அந்த நேரடியான பேச்சில் எந்தப் பாதிப்பும் அடையாமல் அமைதியாகச் சொன்னார். ”ராக்‌ஷசரே. நீங்கள் எங்களை எதிரிகளாக நினைத்திருப்பதற்கு நான் வருந்துகிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக நிறைய செயல்கள் செய்திருக்கலாம். அவை எல்லாம் எங்கள் இலக்கை நாங்கள் அடைய, செய்தே ஆக வேண்டியிருந்த செயல்கள். ஆனாலும் உண்மையில் உங்களை எதிரியாக ஒரு போதும் நினைத்தது கிடையாது.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “வாக்கு வாதத்தில் தங்களை ஜெயிக்க முடியாது என்பதை நான் நம் முதல் சந்திப்பிலேயே அறிந்திருக்கிறேன் ஆச்சாரியரே. நான் பேசியது உண்மையை.”

 

“நானும் உண்மையையே பேசுகிறேன் ராக்‌ஷசரே. நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இது எங்கள் தாய் மண். இந்த தாய் மண்ணுக்கு எதிரானவர்களையே நாங்கள் எதிரிகளாகக் கருதுகிறோம். நானறிந்த வரை நீங்களும் இந்த மண்ணுக்கு விசுவாசமானவர் தான்.  அப்படி இருக்கையில் நாம் எதிரிகளாவதெப்படி?”

 

“இந்த மண் மீது படையெடுத்து வந்தவர்கள் எதிரிகளாகாமல் இருப்பதெப்படி?”

 

“இந்த மண்ணின் மைந்தர்கள் மக்கள் நலனில் அக்கறையில்லாத ஒருவனால் ஆளப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்களை அந்தக் கஷ்டத்தில் இருந்து மீட்கும் நியாயமான நோக்கத்தில் படையெடுத்து வருபவர்கள் எதிரிகளாவதெப்படி?”


”வாதத்திறமையால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் ஆச்சாரியரே”

 

”தனநந்தன் மீதிருக்கும் கண்மூடித்தனமான பிரியத்தினால் நீங்கள் உண்மையை மறுக்கிறீர்கள் ராக்‌ஷசரே. மன்னனின் நலத்திற்கும், மக்கள் நலத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அறியாதவரல்ல நீங்கள். ஆனாலும் மன்னன், மக்கள் என்று இரு பக்கமும் தங்கள் சேவையை எதிர்பார்த்த போது நீங்கள் மன்னன் பக்கமே நின்றீர்கள். நீங்கள் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. முடிந்த வரை செய்தீர்கள். ஆனால் தனநந்தன் அனுமதித்த வரை, அனுமதித்த அளவு வரை மட்டுமே செய்தீர்கள்.  ஆனால் தனநந்தனின் மனதின் அகலம் என்னவென்று நாமனைவரும் அறிவோம்.  அந்த மனதில் அவனைத் தவிர எத்தனை பேருக்கு இடம் இருந்தது? அவன் எத்தனை நன்மைகள் மக்களுக்குச் செய்ய உங்களை அனுமதித்தான்? யோசித்துப் பாருங்கள் ராக்‌ஷசரே. அவன் பக்கம் இந்தக் கணம் வரை இருந்த நீங்கள் மகதத்தின் பக்கம் இருப்பதாகவும், அதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் எண்ணிக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கூறுவதை இல்லை என்று உங்களால் நேர்மையாக மறுக்க முடியுமா ராக்‌ஷசரே?”

 

சாணக்கியரின் கேள்வி ராக்‌ஷசரின் மனசாட்சியின் அடி ஆழம் வரை சென்று தைத்ததால் அவர்  பேச்சிழந்து நின்றார். சரியாக இருக்கிறோம், சரியாக வாழ்கிறோம் என்று இக்கணம் வரை இறுமாந்திருந்த ராக்‌ஷசர் சாணக்கியர் சுட்டிக் காட்டிய நிதர்சன உண்மையில் இப்போது கூனிக் குறுகினார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நேர்பார்வை பார்த்தபடியே அவர் சாணக்கியரிடம் ஆத்மார்த்தமாகச் சொன்னார். “குற்றம் சாட்டிய நீங்களே தண்டனையையும் சொல்லுங்கள் ஆச்சாரியரே. தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “மகதத்தின் பிரதம அமைச்சராக இத்தனை காலம் செய்யத் தவறிய கடமையை அதே பொறுப்பேற்று இனி செய்து தீர்க்க வேண்டும் என்று மன்னராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரகுப்தன் உங்களைக் கேட்டுக் கொள்கிறான் ராக்‌ஷசரே”  

 

(தொடரும்)

என்.கணேசன்        




Wednesday, December 10, 2025

முந்தைய சிந்தனைகள் - 129

 என்னுடைய ’வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, December 8, 2025

யோகி 133


 பிரம்மானந்தா அன்று மிக மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். அவரை ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகம் அங்கே பேச அழைத்திருக்கிறது. இந்தியாவில் மிகச்சிலருக்கே இதுவரை அங்கே பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் இங்கே வந்திருந்த ஒரு நண்பரின் செல்வாக்கினால் கிடைத்த வாய்ப்பு அது. அதற்காக அந்த நண்பருக்கு அவர் விலையுயர்ந்த பரிசுகளும் அளித்திருக்கிறார். ஆனால் இந்தத் தகவல்கள் எதுவும் வெளியே தெரியப்போவதில்லை. அந்தப் பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகம் கூட அவரைப் பேச அழைத்திருக்கிறது என்ற பெருமையைத் தான் அனைவரும் பேசப் போகிறார்கள். அது தான் வரலாறாக நிற்கப் போகிறது.

அவருடைய வளர்ச்சியை நினைக்கையில் அவருக்கே பிரமிப்பாக இருந்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பட்ட கஷ்டங்கள் தான் எத்தனை? ராஜபாளையத்தின் தொழிற்சாலையிலும், மதுரையில் தனியார் கம்பெனியிலும் அவர் ஒரு மாட்டைப் போல் உழைத்திருக்கிறார். பின் செய்த மூலிகை வியாபாரத்திலும் அவர் அலைந்த அலைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. சாதாரண காரில் போவதே அன்று அவருக்கு எட்டாத நிலை. சொகுசுக் காரில் போகிறவர்களை அவர் ஒரு காலத்தில் பொறாமையோடு பார்த்திருக்கிறார். தெருவில் நடக்கையில், ஆகாயத்தில் விமானம் போகும் சத்தம் கேட்டால் அண்ணாந்து பிரமிப்போடு பார்த்திருக்கிறார். சாவதற்குள் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து விட முடியுமா என்று யோசித்திருக்கிறார். சைக்கிள், பழைய ஸ்கூட்டர், பழைய பைக் என்று தான் அவர் முன்னேற்றம் ஆரம்பத்தில் நத்தை வேகத்தில் நகர்ந்திருக்கிறது. ஆனால் அதெல்லாம் இப்போது அவரே நினைக்க விரும்பாத பழைய சரித்திரம்.

அவர் இப்போது புதிய சரித்திரம் படைத்து விட்டார். சரியாகக் கணக்கிட்டால் இன்று அவருடைய சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும். அவருக்கே அது எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியாது. பாண்டியனைக் கேட்டால் தான் சரியாகத் தெரியும். இன்று அவரைப் பார்த்துப் பேசுவது கூடச் சாமானியனுக்கு எளிதல்ல. விலையுயர்ந்த எல்லாக் கார்களிலும் அவர் பயணிக்கிறார். தனி விமானத்தில் பயணம் செய்வது கூட அவருக்கு இன்று சர்வசாதாரணமாகப் போய் விட்டது. இன்று அவரைக் கடவுளாகப் பூஜிப்பவர்கள் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் போகாத நாடில்லை. அவருடைய அபிமானிகள் இல்லாத தேசமில்லை. அவர் இன்று சாதாரண விலை கொண்ட எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தையைக் கட்டளையாக எடுத்துக் கொண்டு செயல்படப் பெரிய சேனையே இருக்கிறது.  பிரதமர், ஜனாதிபதி, கவர்னர், முதல்வர்கள் போன்ற அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவருக்கு மிக வேண்டப்பட்டவர்கள்.   இன்று அவருக்குக் குறையொன்றுமில்லை

பாண்டியன் கனைத்து அவருடைய எண்ண ஓட்டத்தை நிறுத்தினார். பாண்டியனைப் பார்த்ததும் அவர் புன்னகைத்தார். “வா பாண்டியன் உட்கார்என்றார்.

அவருடைய இந்த உயர்வுக்கு பாண்டியன் முக்கிய காரணம் என்பதை அவரால் மறுக்க முடியாது. ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படிச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர் பாண்டியன் தான். பாண்டியன் மட்டும் அவர் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் இன்று யோகாலயம் இருபது செண்ட் நிலத்திற்குள் அடங்கி இருந்திருக்கும். இன்றும் யோகா தியான வகுப்பு எடுக்க அவரே போக வேண்டியிருந்திருக்கும். அவர் பெயர் சென்னையைத் தாண்டி சென்றிருக்காது.  இன்று அவரிடம் கூழைக்கும்பிடு போடும் பல பேரிடம் அவர் கூழைக்கும்பிடு போட்டு வாழ வேண்டி இருந்திருக்கும். யோகிஜி என்ற பெயரோடு உலகம் அவரை அறிந்திருக்காது!

பாண்டியனிடம் அந்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேச அழைப்பு வந்திருப்பதை பிரம்மானந்தா பெருமையுடன் தெரிவித்தார். சற்று யோசித்த பாண்டியன் பின் சரியாக நினைவு கூர்ந்தார். “வாஷிங்டன் ஆள் டேனியலை நாம நல்லா கவனிச்சுகிட்டது வீண் போகலை, இல்லையா? நல்லது.”

கொடுத்த பணத்துக்கான சேவையைப் பெற்று விட்டோம் என்ற வகையில் பேச்சு எழுந்ததை பிரம்மானந்தா ரசிக்கவில்லை. அது உண்மை தான் என்றாலும் அதெல்லாம் பேசப்பட வேண்டியவை அல்ல என்பது அவருடைய அபிப்பிராயம். இந்த அங்கீகாரத்தை ஒரு பெருமையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, அது கிடைத்த கதையைப் பேசாமல் இருப்பது தான் இங்கிதம். ஆனால் பாண்டியன் எப்போதும் உள்ளதை உள்ளது போல் பார்த்தும், சொல்லியும் பழகியவர். அதை மாற்றிக் கொள்ள அவர் என்றும் முயற்சி செய்ததில்லை...

பாண்டியன் அவரிடம் அந்த யோகியைக் கண்டுபிடிக்க ஆட்களிடம் சொல்லி இருப்பதைத் தெரிவித்தார்.

பிரம்மானந்தா திகைப்புடன் கேட்டார். “எந்த யோகியை?”

உங்க கிட்ட ஒரு பேராசிரியர் ஒரு தோட்டக்காரனைக் காட்டி யோகின்னு  சொன்னார்னு சொன்னீங்க இல்லையா யோகிஜி அந்த ஆளைத் தான்…”

திகைப்பு மாறாமல் பிரம்மானந்தா சொன்னார். “நான் தான் சொன்னேனே அந்த ஆள் யோகி இல்லைன்னு

இல்லாட்டியும் பரவாயில்லை. அந்த ஆளைக் கண்டுபிடிச்சு சோதிச்சுப் பார்க்கறதுல நமக்கு நஷ்டம் இல்லையே. நான் பார்த்த வரைக்கும் ஆன்மீகத்துல நாம நினைக்கிறதெல்லாம் நிஜமாய் இருக்கறதில்லை. உண்மை என்னங்கறது குழப்பமாய் தான் இருக்கு. ஷ்ரவன் அவன் சக்தியை வெச்சு கண்டுபிடிச்சு சொன்ன யோகி ஏதோ தோட்டத்துல இருக்கார். உங்க சிவசங்கரன் சொன்ன ஆளும் தோட்டக்காரராய் தான் இருக்கார். ரெண்டும் ஒத்துப் போகிறதால அப்படியே தேடிப்பார்ப்போம். அந்த ஆள் கிடைச்சா, அவரோட காலடி மண்ணை வெச்சு நம்ம பிரச்சினை தீருதான்னு பார்ப்போம். தீரலைன்னாலும் நாம இழக்கறது ஒன்னுமில்லையே.

பிரம்மானந்தாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சற்று முன் வரை உணர்ந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் காற்றில் கரைவது போல் அவர்  உணர்ந்தார். அவர் அந்தத் தோட்டக்காரக் கிழவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் ஏதோ நெருடல் ஏற்படுவதால், சமீப காலங்களில் அந்தக் கிழவரைத் துச்சமாகத் தான் நினைக்கிறார். பிழைக்கத் தெரியாத, சொந்தப் பரிதாப நிலை கூடப் புரியாத முட்டாள் என்று தான் அவரை எண்ணுகிறார். இன்னமும் அனாமதேயமாகவே இருக்கும் அந்தக் கிழவர் எப்போதாவது நல்ல உடை உடுத்தியிருப்பாரா? எப்போதாவது நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டோ, தங்கியோ இருப்பாரா? என்றைக்காவது அந்த ஆளிடம் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாயாவது இருக்குமா? என்றெல்லாம் இகழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டும், தானிருக்கும் உயரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் இருக்கிறார். அப்படியிருக்கையில் அவருடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அதிபுத்திசாலியுமான பாண்டியனே நிஜ யோகி என்று அந்தக் கிழவரை நம்பி, தேட ஒரு கூட்டத்தையே முடுக்கியிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அந்த யோகியின் காலடி மண் கூட, அவருடைய ஆட்களுக்கே மிக முக்கியமானமாய் போனது அவர்கள் இருவருடைய நிலைகளைத் தலைகீழாய் திருப்பிப் போட்டது போல் அவருக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது.

பிரம்மானந்தாவின் மன அமைதி விடைபெற்றுக் கொண்டது.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, December 4, 2025

சாணக்கியன் 190

 

முதல் கேள்வியாக மகத நலனையே ராக்ஷசர் விசாரித்ததில் மனம் நெகிழ்ந்த ஒற்றர் தலைவன் அவருக்குத் தரவிருக்கும் பதிலுக்காக வருத்தப்பட்டான். ஆனாலும் அவர் எக்காலத்திலும் உண்மை நிலையையே அறிய ஆசைப்படுபவர் என்பதால் உண்மையையே அவரிடம் சொன்னான். ”மகதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது பிரபு. ஆட்சி மாற்றத்தால் மக்கள் கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்கிறார்கள்.”


உண்மை அவரைச் சுட்டது. இன்றைய கஷ்டமும், நஷ்டமும் தனிமனிதர்களின் கஷ்ட நஷ்டங்களாகவே இருக்கின்றன என்பது புரிந்தது. அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய தனிமனிதர்களின் கஷ்ட நஷ்டங்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்ட மனநிலையிலும் இருப்பது தனநந்தனுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியின் அளவை அவருக்குச் சுட்டிக் காட்டியது. அரசன் என்ன செய்தாலும் என்றும் அரசனாகவே இருப்பான் என்ற தப்புக் கணக்கை தனநந்தன் போட்டதை அவரைப் போன்ற அமைச்சர்களும் கூடத் திருத்த முற்படவில்லை…


ராக்ஷசர் மன உறுத்தலைத் தள்ளி வைத்துக் கேட்டார். “இளவரசி எப்படி இருக்கிறார்?”


“அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார் பிரபு”


ராக்ஷசர் திகைத்தார். அவர் இந்த பதிலைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் திகைப்பைப் பார்த்தவுடனேயே அவர் எண்ண ஓட்டத்தை யூகித்த ஒற்றர் தலைவன் சொன்னான். “இளவரசியின் விருப்பத்துடன் தான் இத்திருமணம் நடக்கின்றது பிரபு”


ராக்ஷசருக்கு ஒற்றர் தலைவன் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. மற்றவர்கள் சொல்லியிருந்தால் பரப்பப்பட்ட பொய்யைத் திரும்பச் சொல்கிறார்கள் என்று எண்ணியிருப்பார். ஒற்றர் தலைவன் அப்படிச் சொல்பவன் அல்ல. 


அவர் கேட்டார். “எதிரியை இளவரசி எப்படி விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. அதுவும் சாதாரண எதிரியல்ல. அரசரைத் தோற்கடித்து கானகத்துக்கு விரட்டியடித்த எதிரி என்கிற போது வெறுப்பைத் தவிர வேறு எதுவும் இளவரசியின் மனதில் எழுந்திருக்கக் கூடாதே”


ஒற்றர் தலைவன் சொன்னான். “மனித மனம் யார் எதிர்பார்ப்பின்படியும் எண்ணிப் பார்ப்பதில்லை பிரபு. இளவரசிக்குத் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்ற ஆசுவாசம் இருக்கலாம். எதிரி கானகத்துக்கு விரட்டியடித்ததை வனப்பிரஸ்தம் அனுப்பி வைத்ததாக இளவரசி எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது. ஓரளவு பட்டத்தரசியும் அந்த மனநிலையிலேயே  இருக்கிறார் என்பதே உண்மை பிரபு”


ராக்ஷசருக்குத் திகைப்பு பன்மடங்காக உயர்ந்தது. மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த அவருக்கு, அரசரின் மனைவி, மகள் மனநிலையை ஜீரணிக்க முடியவில்லை. நாட்டை வெற்றி கொண்டு, மக்கள் மனதை வெற்றி கொண்டு கடைசியில் மன்னர் குடும்பத்தினர் மனதையும் வெற்றி கொண்ட சாணக்கியரின் வெற்றி பரிபூரண வெற்றியாக இப்போது அவருக்குத் தோன்றியது. 


கசந்த மனதுடன் தன் அடுத்த கேள்வியை ராக்ஷசர் கேட்டார். “மலைகேது இங்கு போர் தொடுத்து வருவதை உறுதி செய்ய என்னிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தான். ஆனால் பின் அவனிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இன்று காலை தான் அவன் ஹிமவாதகூடம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், மற்ற மன்னர்கள் இங்கு வந்து கொண்டு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். திடீரென்று இந்த மாற்றம் எப்படி நடந்தது?”


“மலைகேது பர்வதராஜன் அளவுக்கு புத்திசாலியோ, உறுதியானவனோ அல்ல பிரபு. அவன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கத் துடித்தாலும் மற்ற மன்னர்கள் ஆரம்பத்திலிருந்தே அதில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. அவனாலும் அவர்கள் மனதை மாற்ற முடியவில்லை. சாணக்கியர் மீது அவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்து கொண்டே இருந்தது. பலம் குறைவாக இருந்த காலத்திலேயே யவன சத்ரப்களை அவரால் ஒதுக்கவும், கொல்லவும் முடிந்ததே அவருக்கு எதிராக இயங்க அவர்களைத் தயங்க வைத்தது. அப்போதே அப்படி சாகசம் புரிந்தவரை, இப்போது அவர் அசுரபலம் பெற்ற பின் எதிர்ப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று கணக்குப் போட்டார்கள். அப்படித் தயங்கிய அவர்களுக்கு சாணக்கியர் சந்திரகுப்தன் திருமணத்திற்கும், பட்டாபிஷேகத்திற்கும் அழைப்பு விடுத்தவுடன் அவர்கள் அவரது நட்பு வட்டத்திலேயே இருப்பது இலாபகரமானது என்று முடிவெடுத்தது போல் தெரிகிறது.  மேலும் பர்வதராஜனைக் கொன்றது நீங்கள் தானென்று சாணக்கியர் வதந்தியைப் பரப்பியிருக்கிறார். அவர்களையும் கொல்வதற்காகத் தான் நீங்கள் வஞ்சகமாக அழைக்கிறீர்கள் என்ற சந்தேகத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.”


ராக்ஷசர் அதிர்ச்சியுடன் சொன்னார். “என்ன அபத்தம் இது?”


“இந்த அபத்தத்தை மலைகேதுக்கும் மறுக்க முடியவில்லை பிரபு. காரணம் ரகசியமாக நீங்கள் ஏற்பாடு செய்த கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பர்வதராஜன் இறந்தார் என்பது உங்களுக்கெதிராக இருக்கிறது”


ராக்ஷசர் கண்களை மூடிக் கொண்டார். அவர் நகர்த்திய காயையே அவருக்கு எதிராக நகர்த்தி சாணக்கியர் அலட்டிக் கொள்ளாமல் சாதித்து விட்டார். அவர் வறண்ட குரலில் சொன்னார். “விஷாகா இப்படித் துரோகம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”


ஒற்றர் தலைவன் சொன்னான். “இளவரசி மேல் மிகுந்த அன்பு கொண்ட அவள் அவரது துக்கத்துக்குக் காரணமாக இருக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கலாம் பிரபு”


ராக்ஷசருக்குப் புரிந்தது. அவள் இந்தத் திட்டத்திற்குச் சம்மதித்ததே இளவரசியின் நலனுக்காகத் தான். இந்தத் திட்டம் நிறைவேறினால் இளவரசி துக்கப்படுவாள் என்று அவள் பின்வாங்கியிருக்க வேண்டும். பின் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் உடனடியாக யூகிக்க முடிந்தது. எல்லோரும் அவரவர் மனம் சொல்வதற்கு ஏற்ப முடிவெடுக்கிறார்கள். அதன்படி நடந்து கொள்கிறார்கள். மகதம் தோற்றதும், மன்னன் காட்டுக்கு அனுப்பப்பட்டதும் யாருமே கவலைப்படுகிற விஷயமாக இல்லை.  விரக்தியுடன் பெருமூச்சு விட்ட ராக்ஷசர் கேட்டார்.  “வேறென்ன செய்தி?”


ஒற்றர் தலைவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “தாங்கள் இப்போது ஒளிந்திருக்கும் இடத்தை சாணக்கியரின் ஒற்றர்கள் யூகித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன் பிரபு. சாணக்கியர் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கண்டும் காணாமலும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் நீங்கள் அங்கிருந்து சீக்கிரமே இடம் பெயர்வது நல்லது.”


அவன் சந்தேகம் அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. சில நாட்களாக அவரும் அதை உள்ளுணர்வில் உணர்ந்து வருகிறார். அவர் கேட்டார். “ஒருவேளை பர்வதராஜனைக் கொன்ற குற்றத்தை அல்லது சந்திரகுப்தனைக் கொல்லத் திட்டமிட்ட குற்றத்தை என் மீது சுமத்தி தண்டிக்க சாணக்கியர் திட்டமிட்டு இருக்கிறாரோ?”


ஒற்றர் தலைவன் சொன்னான். “தெரியவில்லை பிரபு.”


ராக்ஷசர் சற்று நெருங்கி ஒற்றர் தலைவனின் கண்களை நேராகப் பார்த்தபடி கேட்டார். ”இத்தனை காலம் எனக்கு விசுவாசமாக இருந்தவர்களிடம் மட்டுமே கேட்க முடிந்த கேள்வியை நான் கேட்கிறேன். எதிரிகளை அழிக்கவோ, துரத்தவோ கடைசியாக என்னால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்கிறதா? அது எத்தனை ஆபத்தான வழியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் என் உயிரையே இழந்தாலும் பரவாயில்லை. என்னால் முடிந்ததை எல்லாம் முயற்சி செய்திருக்கிறேன் என்ற திருப்தியுடன் நான் சாக விரும்புகிறேன்.”


ஒற்றர் தலைவன் அந்தக் கேள்வியில் மனமுருகினான். அவன் பார்வை தானாகத் தாழ்ந்தது. அவன் பலவீனமான குரலில் சொன்னான். “இனி எதுவும் செய்வதற்கில்லை பிரபு. எதுவும் செய்ய முடிந்த காலம் கடந்து விட்டது”  


தூக்கு தண்டனையென தீர்ப்பு வாசிக்கப்பட்டதைக் கேட்ட கைதி போல் ராக்ஷசர் உணர்ந்தார்.  பின் மெல்லச் சொன்னார். “நானும் அப்படியே தான் எண்ணினேன். ஆனால் என் அறிவுக்கு எட்டாத ஏதாவது ஒரு வழி உன் அறிவுக்கு எட்டியிருக்குமோ என்ற நைப்பாசையில் தான் கேட்டேன்.”


ஒற்றர் தலைவன் அவருக்காக வருந்தினான். இத்தனை நல்ல மனிதர் இப்படி ஒரு நிலையை அடைந்திருக்க வேண்டியதில்லை…. 


அவர் மௌனமாக சைகை மூலம் அவனுக்கு விடைகொடுத்தார். வெளியே வரும் போது அவன் மனம் கனத்திருந்தது.


அவன் சென்று சிறிது நேரம் கழித்து ராக்ஷசரும் கிளம்பினார். போர்வையை முக்காடு போட்டுக் கொண்டு பாடலிபுத்திர தெருக்களில் நடக்கையில் அவர் மனம் வெறுமையை உணர்ந்தது. இனியும் நண்பர் சந்தன் தாஸின் வீட்டில் தங்கியிருப்பது நண்பருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்றியது. நேற்று தான் சந்தன் தாஸும் அவர் குடும்பத்தினரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கலிங்க தேசம் சென்றார்கள். தற்போது வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் திரும்பி வந்தவுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட வேண்டும் என்று உறுதியாகத் தோன்றினாலும் எங்கே செல்வது என்ற கேள்விக்கு அவரிடம் விடை இருக்கவில்லை. ஆனால் சீக்கிரமே முடிவெடுக்க வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார். 


சந்தன் தாஸின் வீட்டில் சத்தமில்லாமல் நுழைந்து, அவர் தங்கியிருந்த அறையிலும் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு திரும்பிய போது சாணக்கியரின் குரல் கேட்டது. “மகத தேசத்தின் பிரதம அமைச்சருக்கு சாணக்கியனின் பணிவான வணக்கங்கள்”


(தொடரும்)

என்.கணேசன்