என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 17, 2025

சாணக்கியன் 157

ர்வதராஜன் தலைமையில் சிறிய படை ஒன்று பாடலிபுத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மலைகேது தங்கள் முன்னால் குதிரை வீரர்களில் ஒருவனாக சாதாரண வீரனைப் போல் சென்று கொண்டிருக்கும் சந்திரகுப்தனை வியப்புடன் பார்த்தான். பின்னால் மூலிகைகள் நிரம்பிய ஒரு வண்டியில் வைத்தியராக சாணக்கியர் வந்து கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் தகுதிக்கும் குறைவான நிலைமையில் பயணம் செய்து கொண்டிருந்ததற்கு எந்த வருத்தமும் படவில்லை என்பது மலைகேதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அவன் தந்தையிடம் கேட்டான். “ரதத்தில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்படி வருவதில் வருத்தமாக இருக்காதா தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “அவர்கள் தாழ்ந்த நிலையில் முன்பு இருந்தவர்கள் தான் மகனே. அதனால் அவர்கள் நம் அளவுக்கு அதை அவமானமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மேல்நிலையை எட்டிய பின் தங்களை மேலானவர்களாகவே பாவித்துக் கொள்ளும் போக்கு மனிதர்களுக்கு உண்டு. இவர்கள் இருவரும் அந்த மனப்போக்கில் சிக்கி விடாத பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள். முக்கியமாக இவர்கள் இருவரிடமிருந்தும் நீ கற்றுக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடமிது மகனே. காரியம் தான் முக்கியமே ஒழிய தோற்றங்களும், மரியாதைகளும் அல்ல....”

 

ஆனாலும் அது மிகவும் கஷ்டம் தான் என்று மலைகேதுவுக்குத் தோன்றியது. அவன் கேட்டான். “இப்போது போகும் வழியிலும் கூட ஒற்றர்கள் அவர்களைக் கண்காணித்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்களா தந்தையே”

 

“ஆம் மகனே... அந்த சாத்தியக்கூறு இருக்கிறது....”

 

“ஆனால் இந்தச் சிறிய படையால் மகதத் தலைநகரை முற்றுகையிட்டு கைப்பற்ற முடிவது சாத்தியம் என்று தோன்றவில்லையே தந்தையே”

 

“எனக்கும் தோன்றவில்லை மகனே. ஆனால் ஆச்சாரியர் எதோ சூழ்ச்சித் திட்டம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் சமயம் வராமல் எதையும் சொல்ல மாட்டேன்கிறார். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் தன் திட்டங்களை சந்திரகுப்தனிடம் கூடச் சொல்லவில்லை என்று சொல்வதை நான் நம்பவில்லை மகனே. அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒளிவுமறைவும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மிடம் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. மகதத்தை வென்று முடிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று நான் கஷ்டப்பட்டு பொறுமையாக இருக்கிறேன். மகதத்தை வென்ற பிறகு தான் நம் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும்.”

 

ற்றன் வந்து சொன்ன தகவல் மடலில் சொன்ன தகவல் உண்மை தான் என்பதை ராக்‌ஷசருக்கு உறுதிப்படுத்தியது. சிறிய படை பர்வதராஜன் தலைமையில் இங்கு வந்து கொண்டிருப்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஹிமவாதகூட அரசன் மகதத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் புதிய கவலை கலிங்கமாக இருந்தது.  மடலில் உள்ளது உண்மை என்றால் திடீரென்று கலிங்கம் படையடுத்து வருவதும் உண்மையாகவே இருக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க கலிங்கப் பகுதியிலான மகத எல்லைக்குப் படைகளை அனுப்ப வேண்டும். கூடுதல் படைகளை வடக்குப் பகுதிக்கும் அனுப்புவது அவசியமாகிறது. அந்தப் படைகளை பத்ரசால் தலைமையில் அனுப்புவது என்று ராக்‌ஷசர் தீர்மானித்தார். சந்திரகுப்தனையும் சேர்த்து எதிர்கொள்ள பத்ரசால் பொருத்தமானவன் என்று அவருக்குத் தோன்றியது. மேலும் இங்கே அவனும் சுதானுவும் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள் என்றும் அவர் கேள்விப்பட்டார். அதனால் கூடுதல் எதிர்காலச் சந்திப்புகளை வெட்டி விட இருவரில் ஒருவரை அப்புறப்படுத்துவது நல்லது என்று நினைத்தார். அதற்கான உத்தரவுகளை அவர் உடனே பிறப்பித்தார்.  

 

அவர் உத்தரவுகளைக் கேட்டவுடனேயே சுதானு அதிருப்தி அடைந்தான். சமீப காலமாக ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவுகளை எடுக்கும் ராக்‌ஷசர் இந்த முறை அந்தச் சிரமத்தை எடுத்துக் கொள்ளாமலேயே அறிவித்தது அவன் போட்டிருந்த திட்டங்களைத் தகர்ப்பதாக இருந்தது. அவன் பத்ரசாலிடம் சொன்னான். “நாம் போட்டிருந்த திட்டங்கள் நாம் இருவரும் பிரிந்தால் நிறைவேறுவது கஷ்டம் சேனாதிபதி. ராக்‌ஷசர் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்திருந்தால் எதாவது சொல்லித் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு அவர் இடம் கொடுக்காமல் உத்தரவு பிறப்பித்து விட்டார். இப்படி அவர் கலந்தாலோசிக்காமல் உத்தரவு போடுவதற்கு நீங்கள் இது வரை ஆட்சேபணை தெரிவித்ததில்லையா?”    

 

பத்ரசால் சொன்னான். “ஆட்சேபணை தெரிவித்து அவர் எதிரியாவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. மேலும் என்ன ஆட்சேபணை தெரிவித்தாலும் உங்கள் தந்தை நிதி செலவாவதைத் தவிர வேறு ராக்‌ஷசர் சொல்லும் எதற்கும் மறுப்பே தெரிவிப்பதில்லை. அதனால் நாங்கள் ஆட்சேபணை தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இப்படி அவசர காலங்களில் உத்தரவு போடும் அதிகாரம் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு இங்கே இருக்கிறது இளவரசே”

 

“உங்களிடம் எப்போது செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்?”

 

“கூடுமான அளவு விரைவில். நான் படைகளை உடனடியாக அனுப்பி  ஏகாதசி அன்று மகாவிஷ்ணு கோவிலில் வெற்றிக்காக வழிபாடு செய்து விட்டுக் கிளம்பி வேகமாகச் சென்று படைகளுடன் இணைந்து கொள்வதாகச் சொல்லி இருக்கிறேன். ஏகாதசி மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பதால் ராக்‌ஷசர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அந்த மகான் சொன்னது அந்த நாளை அல்லவா? அந்த நாளில் முற்றுகை நடந்தால் அதில் ஏதாவது காரணம் காட்டி இங்கேயே அன்று தங்கிவிடப் பார்க்கிறேன்.”

 

சுதானு திருப்தியுடன் தலையசைத்தான்.

 

லிங்க மன்னன் தங்கள் எல்லைப் பகுதியில் மகதப்படைகள் குவிக்கப்படும் செய்தி கிடைத்து அதிர்ந்தான். அறிவிப்பு எதுவுமின்றி திடீரென்று இப்படி நடக்க என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் தன் பிரதம அமைச்சரை அழைத்துக் காரணம் கேட்ட போது அவர் சொன்னார். “தனநந்தனுக்குப் புத்தி பேதலித்து விட்டது என்று சொல்கிறார்கள் அரசே. திடீர் திடீரென்று கத்துகிறான் என்றும் இது போன்ற முடிவுகளை எடுக்கிறான் என்றும் சொல்கிறார்கள்....”

 

கலிங்க மன்னன் கவலையுடன் சொன்னான். ”தனநந்தனுக்குப் புத்தி பேதலித்திருக்கலாம். ஆனால் ராக்‌ஷசர் தெளிவானவராயிற்றே. சில வருடங்களாகவே அவர்களுடன் நாம் சுமுகமாகவல்லவா இருக்கிறோம். அப்படி இருந்தும் ஏனிப்படி?”

 

“அரசே. சில நேரங்களில் மன்னனே பைத்தியம் முற்றி கட்டளையிடுகையில் மறுத்துப் பேசினாலும்  மன்னனுக்குக் கோபம் அதிகம் வரும்.  அதனால் அவர் மறுக்காமல் அனுமதித்து இருக்கலாம். இதுவரை கிடைத்த தகவலின்படி சந்திரகுப்தன் சில மன்னர்களைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு அவர்களை வடக்கிலும் மேற்கிலும் தாக்க வந்து கொண்டிருக்கிறான் என்பது. அந்தச் சமயமாகப் பார்த்து நாமும் தாக்க முற்படுவோம் என்ற சந்தேகத்தினால் கூட அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எல்லையையும் காப்பது நல்லது என்று நினைத்திருக்கலாம். எதற்கும் நாமும் நம் படைகளை எல்லையில் நிறுத்துவோம்.  முதலில் அவர்கள் பக்கத்திலிருந்து தாக்குதல் வருமானால் நாமும் தாக்குவோம். இல்லா விட்டால் நாமும் அமைதியாக இருப்போம். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்…”

 

கத எல்லையை நெருங்க இன்னும் இரண்டு காத தூரமே தான் இருக்கிறது என்ற நிலையில் தான் சந்திரகுப்தன் பர்வதராஜனிடம் பேச வந்தான். “இங்கேயே சற்று காத்திருப்போம். இன்னொரு படை வந்து கொண்டிருக்கிறது. அதுவும் வந்து சேர்ந்த பின் பாடலிபுத்திரத்தை முற்றுகை இடுவோம்”

 

பர்வதராஜன் திகைப்புடன் கேட்டான். “அது யார் படை சந்திரகுப்தா?”

 

 

எங்கள் படை தான் பர்வதராஜனே. அப்படையும் வந்த பின் நாம் சேர்ந்து முன்னேறிச் செல்வோம்.” என்று சொல்லி விட்டு சந்திரகுப்தன் தன் பழைய இடத்திற்குப் போய் விட்டான்.

 

பர்வதராஜனுக்குப் பகீரென்றது. அந்தப் படை எப்போது கிளம்பியது? எங்கிருந்து வருகிறது?  அந்தப் படை வரும் வரை இருப்பு கொள்ளாமல் தவித்தான். இந்தப் புதிய வரவு குறித்த தகவல் அவன் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சாணக்கியரோ, சந்திரகுப்தனோ பேசக் கிடைக்கவில்லை. அவனாக அவர்களிடம் சென்று பேசுவது மகத ஒற்றர்களுக்கு ஆள் மாறாட்டத்தை அறிவிப்பது போலாகி விடும். அது எல்லா முயற்சிகளையும் வீணாக்கி விடும் என்பதால் அவர் அமைதியாக இருந்தார்.

 

மூன்று நாழிகை நேரம் கழித்து பெரும் படை வரும் ஆரவாரம் கேட்டது.  

 

லிங்க மன்னனும் எல்லையில் படைகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டான் என்ற தகவல் மகதத்திற்கு முதலில் வந்து சேர்ந்தது. கணக்குப் போட்டுப் பார்க்கையில் எல்லாம் அந்த மடலில் சொல்லியிருந்தது போலவே நடப்பதாக ராக்‌ஷசரும், மற்றவர்களும் நினைத்தார்கள். ஆனால் சிறிது நேரத்திலேயே பாடலிபுத்திரத்தை நெருங்கிக் கொண்டிருப்பது சிறுபடை அல்ல பெரும்படை என்ற தகவலும் வந்து சேர்ந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

1 comment:

  1. சாணக்கியர் சரியான இடத்தில் 'செக்' வைத்து விட்டார்...

    இவ்வளவு கணக்கச்சிதமான திட்டத்தை சாணக்கியர் போட்டுக் கொடுத்தது..ஒரு அற்புதம்....என்றாலும்,
    அவர் சொன்னபடியே,

    சின்ஹரன்,வந்து சேர்ந்த பெரிய படை,மடலை பரிகொடுத்த வீரன்,ஆயுத எரிப்பு, புதையல் திருட்டு வீரர்கள்,ஜீவசித்தி,மற்ற வீரர்கள்...என அனைவருமே மிகவும் நேர்த்தியாக தன் வேலைகளை செய்தது...பெரிய அற்புதம்....

    ReplyDelete