அன்றிரவு சேனாதிபதி பத்ரசால் சுதானுவைச் சந்தித்தான். “என்ன விஷயம் இளவரசே?”
பத்ரசாலின் கேள்விக்கு உடனடியாகப் பதில்
எதுவும் சொல்லாமல் சுதானு முதலில் தனதறைக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்த பின்
தாழ்ந்த குரலில் சொன்னான். “சேனாதிபதி மகான் நமக்குச் சொன்ன காலம் நெருங்கி விட்டது. இந்தச்
சமயத்தை நாம் நழுவ விட்டால் பின் எப்போதும் நமக்குச் சாதகமான சமயம் வரப் போவதில்லை”
பத்ரசால் முதலில் விழித்தான். பின்பு
தான் அவனுக்கு சுதானு மகான் சொன்னதாகச் சொன்ன நாள் வளர்பிறை ஏகாதசி என்பது நினைவுக்கு
வந்தது. சேனாதிபதி சந்தேகத்துடன் சொன்னான். “ஆனால் அந்த
நாளோடு எதிரிகள் முற்றுகையிடுவதையும் சேர்த்து தான் மகான் சொன்னதாகச் சொன்னீர்கள். ஆனால் அந்த
மடலில் திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு நாள் மாற்றப்பட்டதாக உள்ளது. இரண்டும்
ஒத்துப் போகவில்லையே.”
சுதானு உறுதியாகச் சொன்னான். “மனிதர்கள்
போடும் திட்டங்கள் அப்படியே நடந்து விடுவதில்லை சேனாதிபதி. இறைவன்
போட்டிருக்கும் கணக்கே வேறாக இருக்கும். அதன்படியே தான்
நடக்கப் போகிறது. இறைவனின் சித்தத்தை மகான்கள் அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள்
என்பதால் நான் மகான் சொன்னதையே நம்புகிறேன். வளர்பிறை
ஏகாதசி நாள் தான் நாம் செயல்பட வேண்டிய நாள்.”
பத்ரசால் மெல்லக் கேட்டான். “எப்படிச்
செயல்படுவது என்பதை நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா இளவரசே?”
சுதானு சொன்னான். ”மூன்று திட்டங்களை யோசித்து வைத்திருக்கிறேன். ஒன்று சரிப்பட்டு
வராவிட்டால் இன்னொன்று, அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் அடுத்தது. திட்டம்
எதுவாக இருந்தாலும் செயல்படுத்தப் போவது அன்று தான்”
பத்ரசால் மனதில் ஒரு நெருடலை உணர்ந்தான். சிறு தவறு
நடந்து விட்டாலும் விளைவுகள் சிறிதாக இருந்துவிடப் போவதில்லை. எல்லாம்
ஆபத்திலேயே முடியக்கூடியவை. சுதானுவின் தவறுகள் சுதானுவுக்கு மட்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை
அல்ல. கூட்டு சேரும் சேனாதிபதிக்குமே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை....
அவன் முகபாவனையிலிருந்து அவன் எச்சரிக்கையுணர்வை
உணர்ந்த சுதானு சொன்னான். ”முடிவு நமக்குச் சாதகமாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பது
மகான் வாக்கிலிருந்து உறுதியாகி விட்டது. பின் நாம் தயங்கவோ, பயப்படவோ
என்ன இருக்கிறது சேனாதிபதி?”
பத்ரசாலுக்கு அவன் கேட்டதும் சரியாகத்
தோன்றியது. சுதானுவை அந்த மகான் முதல் முதலாகச் சந்தித்துப் பேசிய போது
போர்ச் சூழல் எதுவும் உருவாகியிருக்கவில்லை. ஆனாலும்
கூட அவர் முற்றுகை பற்றி அன்றே சொல்லியிருக்கிறார். நாள் ஏகாதசியா, திரையோதசியா, பௌர்ணமியா
என்பது இப்போது தெளிவில்லாமல் இருந்தாலும் முற்றுகைக்கான சூழல் உருவாகி விட்டிருப்பதென்னவோ
நிஜம். இதே போல் அவர் சொன்ன மற்றவையும் நடக்கும் என எண்ணி பத்ரசால்
அமைதியடைந்தான்.
சுதானுவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் தாரிணி மெல்ல கணவனிடம்
மகனுக்கு முடிசூடும் பேச்செடுத்தாள். எடுத்த எடுப்பில்
அதைச் சொல்லப் போனால் தனநந்தன் கோபமடைவான் என்று தனநந்தனின் ஆரோக்கியம் குறித்து கவலை
தெரிவித்தபடி பேச்சை ஆரம்பித்தாள்.
“இராஜ்ஜிய
பாரம் வெளிப்பார்வைக்கு பொறாமைக்குரியது என்றாலும் சுமப்பவர்களுக்குத் தான் அது முள்கிரீடம்
என்று தெரியும். நீங்கள் வர வர அதிகமாக அமைதியிழப்பதைப் பார்க்கையில் எனக்கு
வருத்தமாக இருக்கிறது. இனியாவது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். வனப்பிரஸ்தம்
போகும் காலம் நமக்கு நெருங்கி விட்டது என்றே நான் நினைக்கிறேன்.”
தனநந்தன் சொன்னான். “ராஜ்ஜியத்தில்
இருக்கும் குழப்பங்கள் எல்லாம் குறையட்டும் நானும் அதைத் தான் சிறிது காலமாக நினைக்க
ஆரம்பித்திருக்கிறேன்.”
“அலைகள்
ஓய்வதெப்போது?”
தனநந்தன் ஒன்றும் சொல்லவில்லை. மெல்ல அவள்
சொன்னாள். “மூன்று மாதங்களுக்கு முன் சுதானுவுடன் மகாவிஷ்ணு கோயிலுக்குப்
போயிருந்தேன். அங்கே வந்திருந்த ஒரு மகான் சுதானுவுக்கு முடிசூடும் யோகம்
இருப்பதாகச் சொன்னார்”
தனநந்தன் ஏளனமாகச் சிரித்தான். “அரசனின்
மகனுக்கு முடிசூடும் யோகம் இருப்பதாகச் சொல்ல ஒரு மகான் வேண்டுமா? என்ன பைத்தியக்காரத்தனம்?”
“அவர் அது
சமீபத்திலேயே இருப்பதாகச் சொன்னார். அந்த சமயத்தில்
தான் உங்களுக்கும் ராஜ்ஜியப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு தேவை என்பதும் எனக்கும் தோன்றியது”
தனநந்தன் சொன்னான். “அப்படியே
ராஜ்ஜிய பாரத்தை பிள்ளை தலையில் இறக்கி வைப்பதாக இருந்தாலும் மூத்தவன் சுகேஷ் இருக்கையில்
இளையவனுக்கு இப்போதே எப்படி அந்தப் பொறுப்பைத் தரமுடியும்?”
தாரிணி சொன்னாள். “மரபு என்று
பார்த்தால் நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் தகுதி என்று
பார்த்தால் சுதானு மேலானவன் அல்லவா?”
தனநந்தன் எரிச்சலுடன் சொன்னான். “போர் புரிய
படைகளும், படைத்தலைவர்களும் இருக்கிறார்கள். நிர்வாகம்
செய்ய ராக்ஷசரும், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகளும்
இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தகுதி பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது? இப்போது
நானே அரசனாக எதில் சிரமப்படுகிறேன்? அதனால் பைத்தியக்காரத்தனமான
இந்தப் பேச்சை விடு. காலப்போக்கில் சுதானுவுக்கும் ஒரு பகுதியைத் தந்து முடிசூடுவோம். பொறு.”
அதற்கு மேல் பேசினால் கோபத்தில் தனநந்தன்
கத்த ஆரம்பித்து விடுவான் என்று புரிந்து கொண்ட தாரிணி மௌனமானாள். பக்கத்து
அறையிலிருந்து இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு இருந்த சுதானு கோபத்தைக் கட்டுப்படுத்த
சிரமப்பட்டான். தனநந்தன் சொல்லும் காலப்போக்கில் சுதானு கிழவனான பின் தான்
முடிசூட முடியும். நேர்வழி உதவாது என்று சுதானுவுக்குப் புரிந்து விட்டது.
பர்வதராஜனுக்கும் மலைகேதுவுக்கும் தொடர்ந்து சில காலம் சந்திரகுப்தனுடனும், சாணக்கியருடனும்
இருந்தும் கூட அவர்களைச் சில சமயங்களில் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. திடீர்
திடீரென்று புதிராக அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களது
அந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணத்தை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதில்லை
என்பது அவர்களுக்குக் கூடுதல் வியப்பு. ஆனாலும் அவர்கள்
பேசிக் கொண்டு தெரிந்து கொள்வதில்லை. சில சமயங்களில்
முன்பே பேசிக் கொண்டிருந்திருக்கலாம் என்றாலும் பல சமயங்களில் ஒருவர் செயலை வைத்து
மற்றவர் உள்ளர்த்தத்தை யூகித்துக் கொள்ளுமளவு அவர்களுக்குள் புரிதல் இருந்தது இவர்களை
ஆச்சரியப்படுத்தியது. அதே போல் தான் பேசிக் கொள்வதிலும் சுருக்கமாக ஏதாவது ஓரிரு
வார்த்தைகளைச் சொல்லி மற்றவர் முழுவதுமாகப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பதும்
அதிகம்.
ஒரு நாள் சாணக்கியர் “எதிரிக்குத்
தகவல் அனுப்ப ஏற்பாடு செய் சந்திரகுப்தா” என்று சொல்ல உடனே சந்திரகுப்தன்
எழுந்து வெளியே சென்று படைத்தலைவர்களிடம் ஏதோ கட்டளையிட்டு விட்டு உள்ளே வந்து அவனுடைய
தனிக்காவலனிடம் ஏதோ உத்தரவு பிறப்பித்து விட்டு வருகிறான்.
பர்வதராஜனுக்குத் தலைகால் புரியவில்லை. “எதிரிக்கு
என்ன தகவல் அனுப்புகிறீர்கள்? யார் மூலம்? புதிய திட்டம் ஏதாவது
இருக்கிறதா ஆச்சாரியரே?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டான்.
சாணக்கியர் விளக்கமாகவே சொன்னார். “நாம் முகாமிட்டிருக்கும்
இடத்திற்கு சிறிது தூரத்தில் எதிரியின் ஒற்றர்கள் இருவர் மிக ரகசியமாய் பதுங்கி அடிக்கடி
வந்து நம்மைக் கவனித்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்....”
பர்வதராஜன் சொன்னான். “உடனே அவர்களைப்
பிடித்துக் கொன்று விட வேண்டியது தானே.”
சந்திரகுப்தன் சொன்னான். “அவர்களைக்
கொன்று விட்டால் அவர்களுக்குப் பதிலாக வேறிருவர் வருவார்கள். ராக்ஷசர் நம்மை
வேவு பார்க்க ஏராளமான ஒற்றர்களை அனுப்பி வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும்
மரங்களின் பின்னாலும், பாறைகளிலும் பின்னாலும், வணிகர்கள், யாத்திரீகர்கள்
வேடத்திலும் அவர்களை நம்மால் பார்க்க முடிகிறது”
“அப்படியாக
என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவர்கள்
காணும்படியாக சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது” என்று சந்திரகுப்தன்
சொன்னான். பர்வதராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது
நேரத்தில் இரண்டு ஆட்கள் வந்தார்கள். ஒருவன் இளைஞன். அவன் திடகாத்திரமாக இருந்தான். இன்னொருவர்
நடுத்தர வயதைத் தாண்டியவர். ஒல்லியாக இருந்தார். குடுமி
வைத்திருந்தார்.
சந்திரகுப்தன் தன்னுடைய ஆபரணங்களையும், உடைகளையும்
அந்த இளைஞனுக்குத் தர, அந்த முதியவருக்கு சாணக்கியர் தன் உடைகளைத் தந்தார். இருவரும்
மறைவிடம் போய் சிறிது நேரத்தில் அவற்றை அணிந்து வந்தார்கள். திடீரென்று பார்க்கையில் இளைஞன் சந்திரகுப்தனாகவே தெரிந்தான். முதியவர்
சாணக்கியராகவே தெரிந்தார். அருகில் வந்து உற்றுப் பார்த்தால்
ஒழிய வித்தியாசம் எதுவும் தெரியாது.
அவர்கள் இருவரும் வெளியேறி விட்டார்கள்.
சந்திரகுப்தனும் சாணக்கியரும் உள்ளே சென்று உடைகள் மாற்றிக்
கொண்டு உருமாறி வந்தார்கள். சந்திரகுப்தன்
ஒரு சாதாரண வீரனாகவும், சாணக்கியர் வைத்தியராகவும் தெரிந்தார்கள்.
பர்வதராஜன் கேட்டான்.
“இது என்ன கோலம்?”
சாணக்கியர் சொன்னார்.
“இப்போது நம் படைகள் பெரிய படை ஒன்றும், சிறிய
படை ஒன்றுமாக இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விட்டன பர்வதராஜனே. அவர்களைப்
பொருத்த வரை பெரிய படை சந்திரகுப்தன் தலைமையில் சிராவஸ்தியை நோக்கிச்
செல்லப் போகிறது. சிறிய படை உன் தலைமையில் பாடலிபுத்திரத்தை நோக்கிச்
செல்லப் போகிறது.”
உற்சாக முழக்கம் வெளியே கேட்டது. பர்வதராஜன் திகைத்தவனாக
வெளியே சென்று பார்த்தான். போலி சந்திரகுப்தன் படையினரைப் பார்த்து
கையாட்டிய படியே ரதத்தில் ஏறினான்.
அவனைத் தொடர்ந்து போலி சாணக்கியரும் அதில் ஏறினார். பெரிய படை கிளம்பி விட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.
பெரிய படை மடலில் உள்ளபடியே செயல்படும்...
ReplyDeleteபர்வதராஜன் படை மகான் சொன்னபடியே செயல்படும்....
சாணக்கியர்...மகத அரசவையில் அவமானப் படுத்தப்பட்ட பின் அவிழ்ந்த குடுமியுடன் இருந்தார் ...என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
ReplyDeleteதற்போது நடந்த இந்த ஆள் மாறாட்ட வேலையில் அதைப்பற்றி குறிப்பு இல்லை...