ராக்ஷசருக்கு எதிரிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் விரைவாகவே ஒற்றர்கள் மூலம் வந்து சேர்ந்தன. அவருடைய ஒற்றன் தலைவன் சொன்னான். “காஷ்மீர மன்னன் தன் படைகளுடன் நம் மேற்கு எல்லையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறான் பிரபு. நம் ஒற்றர்கள் கண்ட நேரம், அவன் வந்து கொண்டிருக்கும் வேகம் இரண்டையும் கணக்கெடுத்துப் பார்த்தால் தற்போது அவன் மதுராவிலிருந்து இரண்டு யோஜனை* தூரத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் மதுரா அருகிலேயே இருப்பானா இல்லை மேலும் முன்னேறி வருவானா என்பது தெரியவில்லை. அதே போல் குலு மன்னனும், நேபாள மன்னனும், நம் வட எல்லைகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நேபாள மன்னன் தன் படைகளுடன் நிதானமாகவும் குலு மன்னன் தன் படைகளுடன் சற்று வேகமாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கையில் நேபாள மன்னன் நம் வட மேற்கு எல்லைப் பகுதியில் எங்காவது நின்று விட, குலு மன்னன் மேலும் முன்னேறி வருவான் என்று தெரிகிறது.”
ராக்ஷசர் யோசனையுடன்
கேட்டார். “குலு மன்னன் தற்போது எங்கிருக்கிறான்?”
“அவன் தன் படையுடன்
சிராவஸ்திக்கு இரண்டு காத@ தூரத்தில் இருக்கிறான்...“
“சந்திரகுப்தனும்,
பர்வத ராஜனும்?”
“அவர்கள் வடக்கு
எல்லையிலிருந்து சுமார் ஒரு யோஜனை தூரத்திலேயே நேர் பாதையில் நகர்ந்தபடி முன்னேறி வந்து
கொண்டிருக்கிறார்கள். ஏன் நம் எல்லையிலிருந்து அத்தனை தொலைவிலேயே நேர்கோட்டில் வந்து
கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும்
திடீரென்று தெற்கில் திரும்பி நம் எல்லைப் பகுதியை அவர்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது”
ராக்ஷசர் சாணக்கியரின்
சூழ்ச்சித் திட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார். பெரும்பாலும் முடிவில் பாடலிபுத்திரத்தின்
வாயிலில் வந்து நிற்கும் வாய்ப்பு அதிகம். இந்த சந்தேகம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே
இருந்து வந்ததால் தான் சேனாதிபதியையும், இளவரசர்களையும் கூட மற்ற படைகளை வலுப்படுத்த
அனுப்பாமல் அவர் தலைநகரிலேயே அவர்களை இருத்தி வைத்திருக்கிறார். தலைநகரைக் காக்க வலுவான
படையும் இங்கேயே இருக்கிறது....
ராக்ஷசர் சொன்னார்.
“நம் ஒற்றர்கள் முழுவீச்சில் இயங்க வேண்டிய நேரமிது. எந்தத் தகவலும் உடனுக்குடன் கிடைத்துக்
கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் சரியான முடிவுகளை எட்டி, செயல்படுத்த முடியும். அதனால்
கூடுதல் ஒற்றர்களை நீங்கள் எல்லைப் பிராந்தியங்களுக்கும் அதற்கு அப்பாலும் அனுப்புவது
நல்லது.”
ஒற்றர் தலைவன் தலையசைத்து
விட்டு விடைபெற்றான்.
சிராவஸ்தியிலிருந்து வடக்கில் ஒரு யோஜனை தூரத்திலிருந்து ஒரு
வீரன் குதிரையில் வந்து கொண்டிருப்பதை மகத ஒற்றன் ஒருவன் மரத்தின் பின்னால் மறைந்திருந்தபடி
பார்த்தான். அந்த வீரன் சற்று இளைப்பாற இடம் தேடுவது போல இரு புறமும் பார்த்தபடி வந்து
கொண்டிருந்தான். அவன் சற்று நெருங்கிய பின் தான் அவன் காலில் இருந்து இரத்தம் வழிந்து
கொண்டு இருப்பது தெரிந்தது. ஒற்றன் அந்த வீரனைக் கூர்ந்து பார்த்தான். அவன் எந்த நாட்டின்
வீரன் என்பதை உடையை வைத்தோ தோற்றத்தை வைத்தோ சரியாக யூகிக்க முடியவில்லை என்றாலும்
எதிரிகளின் வீரனாக இருக்கலாம் என்று ஒற்றன் சந்தேகப்பட்டான்.
அந்த வீரன் சிறிது
தொலைவில் இருந்த மூலிகைப் பச்சிலைச் செடியருகே குதிரையை நிறுத்தி சுற்றும் முற்றும்
பார்த்தான். ஒற்றன் மறைவில் இருந்ததால் அவனை அந்த வீரன் பார்க்க வழியில்லை. யாருமில்லை
என்று நினைத்துக் கொண்டவன் போல அந்த வீரன் இறங்கி குதிரையை மூலிகைச் செடி அருகிலிருந்த
மரத்துடன் கட்டி விட்டு மூலிகைப் பச்சிலைகளைப் பறிக்க ஆரம்பித்தான். பின் காலில் இருந்த
காயத்திற்கு அந்த இலைகளைக் கசக்கி சாறைப் பிழிந்தான். ஸ்ஸ்ஸ்ஸ் என்றபடி அவன் பற்களைக் கடித்துக்
கொண்டு கண்களை மூடிக் கொண்டான். பின் அந்தப் பச்சிலைகளை அவன் அந்தக் காயத்தின் மீது
வைத்து அந்தப் பச்சிலைகளை வைத்து ஒரு துணியை எடுத்துக் கட்டினான். மறுபடியும் சுற்றும்
முற்றும் எச்சரிக்கையோடு அவன் பார்ப்பது தெரிந்தது. பின் அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த
எதையோ தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
ஒற்றன்
கூர்ந்து கவனித்தான். அந்த வீரன் இடுப்பில் சொருகி வைத்திருந்தது ஏதோ ஒரு மடல் போலத்
தோன்றியது. அந்த வீரனின் எச்சரிக்கை உணர்வைப் பார்த்தால் அது ரகசிய மடலாக இருக்கலாம்
என்று ஒற்றனுக்குத் தோன்றியது. வலி சற்று குறைந்ததாலும் பிரயாணத்தின் களைப்பினாலும்
அந்த வீரனின் கண்கள் தானாக மூடின. அவன் உறக்கத்தில் ஆழ்ந்தது போல் தோன்றியது.
ஒற்றன் சத்தமில்லாமல்
மெல்ல பின் வாங்கினான். மிக அருகில் தான் மகதப்படை வீர்ர்கள் இருக்கிறார்கள். அவர்களை
அழைத்து வந்தால் அந்த வீரனைச் சிறைப்படுத்தி அந்த ரகசிய மடலைக் கைப்பற்றலாம்.... இந்த
யோசனை எழுந்தவுடன் சத்தமில்லாமல் வீரர்கள் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்ற ஒற்றன்
அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நான்கு வீர்ர்களை அழைத்துக் கொண்டு வந்தான். சிறிது சத்தம்
வந்தாலும் அந்த வீரன் எச்சரிக்கையடைந்து தப்பி விடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களும்
சத்தம் செய்யாமல் தான் வந்தார்கள். ஆனால் ஒற்றன் மறைந்திருந்த மரத்தருகே வரும் போது
ஒரு வீரன் சருகுகளில் கால் வைத்துவிட அந்த ஓசை கேட்டது.
உடனே கண்விழித்த
அந்த காயமடைந்த வீரன் எழுந்து மின்னல் வேகத்தில் குதிரையைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். அவனது இடது கை
இடுப்பில் சொருகியிருந்த மடலையும், வலது கை அவன் வாளையும் இறுகப் பிடித்தன. ஆனால் அவன்
அடுத்தபடியாக எதையும் யோசிப்பதற்குள் நான்கு வீரர்களும் அவன் மீது பாய்ந்து இறுக்கமாகப்
பிடித்துக் கொண்டார்கள். அவன் திமிறத் திமிற ஒரு வீரன் அவன் இடுப்பில் சொருகியிருந்த
மடலை எடுத்துக் கொண்டான். இன்னொரு வீரன் அவன் வாளை எடுத்துக் கொண்டான். அவை இரண்டையும்
பறிகொடுத்த அவன் முகத்தில் பதற்றமும், கவலையும் தெரிந்தன. ஆனால் எதுவும் பேசாமல் அவன்
மௌனமாக இருந்தான். இரு வீரர்களும் மடலையும், வாளையும் ஒற்றனிடம் தர நகர்ந்து வர அவர்கள்
பிடி தளர்ந்ததால் அந்த வீரன் அசுர பலத்துடன் திமிறி தன்னை மீதமிருந்த இரு வீரர்களின்
பிடியிலிருந்து விலகிக் கொண்டு மின்னல் வேகத்துடன் குதிரை மீதேறினான். அவர்கள் கண்மூடித்
திறப்பதற்குள் அங்கிருந்து குதிரையை வேகமாக
முடுக்கினான். அவர்கள் சுதாரித்துக் கொண்டு அவனைப் பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர்கள்
பார்வையிலிருந்து மறைந்தும் விட்டான்.
அவர்கள்
ஏமாற்றத்துடன் ஒற்றனைப் பார்க்க ஒற்றன் சொன்னான். “பரவாயில்லை. நமக்குத் தேவையான இந்த
மடல் கிடைத்து விட்டதல்லவா? அவன் கிடைத்திருந்தால் அவனை அனுப்பியவர்கள் யார் என்பதையும்,
இது யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இந்த மடலை
வைத்தும் அதை யூகித்துக் கொள்ள முடியும்….”
அவன் அந்த மடலை
எடுத்துப் பார்த்தான். மடலில் முத்திரை ஏதுமில்லை. மிக ரகசியமான கடிதங்களை முத்திரை
ஏதுமில்லாமல், கடிதத்தின் உள்ளேயும் பெயர்கள் எதையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல்
தான், சாணக்கியர் எழுதுவது வழக்கம். படிக்கிறவருக்கு மட்டுமே புரிகிறாற்போல் தான் உள்ளே
வார்த்தைகளும் இருக்கும்.... ஒற்றன் திருப்தியுடன் புன்னகைத்தவனாகச் சொன்னான். “நன்றி
வீரர்களே. நீங்கள் போர் முடிந்து வருகையில் தகுந்த சன்மானம் தர பிரதம அமைச்சரிடம் நான்
பரிந்துரை செய்கிறேன்.”
உடனே அவனும் அங்கிருந்து
வேகமாக ராக்ஷசரைக் காண பாடலிபுத்திரம் நோக்கி விரைந்தான்.
ராக்ஷசர் அந்த மடலைப் படித்தார்.
“ஆசிர்வாதம். எதிரியின்
தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்தது. அவன் நம்
கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். எதிரிகள் வடக்கிலும்
மேற்கிலும் தான் தாக்குதல்களுக்குத் தயாராகியிருக்கிறார்களே ஒழிய தெற்கிலிருந்து வரும்
தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்பதால் அவன் தெற்கு எல்லைப் பகுதிகளில் செய்யும் தாக்குதல்
எதிரிக்குக் கூடுதல் சிக்கல்களைத் தரும். தாங்களும், தங்கள்
நண்பர்களும் நம் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்ய
வேண்டிய நாளை வளர்பிறை திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு சில முக்கிய காரணங்களால் மாற்றியிருக்கிறோம். எதிரியின்
தென்கிழக்கு தேச மன்னனும் அந்த நாளிலேயே திடீர்த் தாக்குதலை நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறான். குறிப்பிட்ட
நாளில் தாக்குதலின் போது நாங்கள் உங்களுடன் வந்து இணைந்து கொள்கிறோம். எதிரியின்
தலைநகரை நாங்கள் தாக்க வருவதாகச் செய்தி எதிரிக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். சிறுபடையை
அங்கு அனுப்பவும் செய்கிறோம். அதனால் அவர்கள் தலைநகரைக் காக்க கண்டிப்பாக
ஒரு பெரும்படையை அங்கேயே தக்க வைத்துக் கொள்வார்கள். நம் மூன்று
திசைத் தாக்குதலை எதிர்க்க மற்ற இடங்களில் அத்தனை படை குறைவது நமக்கு அனுகூலமாக
இருக்கும். அதனால் வெற்றி உறுதி. மாற்றப்பட்ட
நாளை நினைவில் கொள்ளுங்கள். இந்த மடலைப் படித்த பின் எரித்து விடுதல் நலம்.”
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனுடைய நூல்களை வாங்க பதிப்பாளரின் வாட்சப் எண் 94863 09351 ஐ தொடர்பு கொள்ளவும்.
Excellent sir, How many episodes are pending
ReplyDeleteTotal chapters 195
Deleteகுதிரைகள் மாற்றப்பட்டது, புதையல் திருட்டு, ஆயுதக் கிடங்கு எரிப்பு.... போன்றவற்றை சரியாக திட்டமிட்டு நடத்திய சாணக்கியர்.... தற்போது இந்த மடலை கிடைக்கும் படி அலட்சியமாக அனுப்பியிருப்பாரா?....என்பதை ராகசஷர் யோசிக்க வேண்டும்.
ReplyDelete