சென்ற முறை போலவே பாண்டியன் பாண்டியன் 7.49க்கு அலைபேசியில் அலாரம் வைக்க ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். பாண்டியன் விரித்து வைத்திருந்த டைரியில் அடுத்த முகூர்த்தம் ஐந்து நாட்கள் கழித்து நள்ளிரவில் என்பதையும் அவன் கவனித்திருந்தான். அவனுக்கு வேண்டிய விதத்தில் அவர்களைத் திசை திருப்ப இப்போதைக்கு அவனிடம் எந்தத் திட்டமும் இல்லை. அந்த யோகியைப் பற்றித் தெரிந்தாலோ, ஸ்ரேயா எதையாவது கண்டுபிடித்தாலோ தான் அவன் அர்த்தபூர்வமாக எதாவது திட்டம் தீட்ட முடியும். அது வரை அவர்களுக்கு அவன் மீது இருக்கும் அபார நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அவன் நடந்த உண்மைகளையே சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்.
7.49 க்கு அலாரம் அடித்தது. ஷ்ரவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மெல்லச் சொல்ல ஆரம்பித்தான். “அந்த இளைஞன் கையில் ஏதோ ஃபோட்டோ இருக்கிறது…. ஒரு பெண்ணுடைய ஃபோட்டோ… வெள்ளை நிற ஆடையில் ஒரு பெண் இருக்கிறாள்… போட்டோவில் அந்தப் பெண் சிரித்துக் கொண்டிருக்கிறாள்… ஒரு தோட்டம் தெரிகிறது….”
பாண்டியனும், சுகுமாரனும் பரபரப்பானார்கள். சென்ற முறை அந்த யோகி எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதும் அவன் தோட்டம் தெரிவதாகத் தான் சொன்னான்….
“அந்த இளைஞன் பைக்கில் வந்து கொண்டிருக்கிறான். அவன் கையில் ஒரு துணி….. காவித் துணி…. காவித்துணி நனைந்திருக்கிறது….. பெட்ரோல் வாசம்….. அந்த இளைஞன் அந்த தோட்டம் இருக்கும் வீட்டின் முன் பைக்கை நிறுத்துகிறான்…. சிகரெட் லைட்டரால் அந்தக் காவித்துணியைப் பற்ற வைக்கிறான்…. பற்றி எரியும் அந்தத் துணியை அந்த தோட்டத்தில் தூக்கியெறிகிறான்….. அந்த வீட்டின் நாய் குரைக்கிறது…. அகோரமாய் குறைக்கிறது……”
ஷ்ரவன் தன் இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டான்.
”அந்த இளைஞன் வேகமாய் போய் விட்டான்… “
சுகுமாரனும் பாண்டியனும் திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த தகவல் வரா விட்டாலும், அன்றைக்கு சுகுமாரன் தோட்டத்தில் எரியும் காவித்துணி எப்படி வந்தது என்பதைத் தெளிவாக ஷ்ரவன் சொல்லி விட்டான். என்னவொரு திவ்யசக்தி!
பாண்டியன் மெல்லக் கேட்டார். “அந்த இளைஞன் இப்போது எங்கே இருக்கிறான்?”
ஷ்ரவன் கவனத்தைக் குவித்துப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. பாண்டியன் சிறிது பொறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டார். “இங்கே வெளி கேட் பக்கம் தெரிகிறானா?”
”இல்லை. தூரத்தில் இருக்கிறான்…. அவனுடைய ஆள் ஒருவன் தான் இந்தத் தெருக்கோடியில் இருக்கிறான். அந்த இளைஞன் அந்த ஆளுடன் செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறான்…”
“என்ன பேசுகிறார்கள்?”
“வண்டிகளின் போக்குவரத்து சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை….. எல்லாம் மறைந்து விட்டது….”
ஷ்ரவன் கண்விழித்தான்… அவர்கள் முகத்தில் பிரமிப்பும் ஏமாற்றமும் சேர்ந்து தெரிந்தன. அவன் மெல்லக் கேட்டான். “எதாவது உபயோகமாய் இருந்ததா?”
“ஆமாம். உபயோகமாய் இருந்தது. இன்னும் நிறைய தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அடுத்த முகூர்த்தத்தில் முயற்சி செய்தால் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.” என்றார் பாண்டியன். சுகுமாரனும் தலையசைத்தார். சென்ற தடவையை விட அவன் இன்று அதிக விஷயங்களைச் சொல்லி இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக என்றாலும் அவன் முன்னேறி தான் வருகிறான். சுகுமாரனின் தோட்டத்தில் காவித்துணி எரிந்தது பல நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது இவன் சென்னையில் கூட இல்லை. ஹைத்ராபாதில் இருந்திருக்கிறான். ஆனால் நேரில் இப்போது பார்த்துச் சொல்வது போல் எவ்வளவு துல்லியமாய்ச் சொல்லி விட்டான். எதிரி இளைஞன் தற்போது இங்கு இல்லை, வேறெங்கோ இருக்கிறான் என்பதைக் கூட கச்சிதமாக கண்டுபிடித்து விட்டான். அடுத்த முறை முழுவதுமாகவே கூட அவர்களுக்குத் தெரிந்து விடலாம். நிஜமாகவே இவன் அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான்.
அன்றிரவு உணவை ஷ்ரவன் அவர்களுடனேயே சாப்பிட்டான். பாண்டியனும், சுகுமாரனும் இட்லியை, சிறிதும் காரமில்லாத தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டார்கள். ஷ்ரவனை என்ன வேண்டுமோ அதைச் சாப்பிட்டுக் கொள்ளச் சொன்னார்கள். அவனும் அவர்கள் சாப்பிட்டதையே சாப்பிட்டான். அவர்களைப் பொறுத்த வரையில் இப்படிச் சாப்பிடுவது சித்திரவதையாகத் தான் இருக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
சாப்பிடும் போது பாண்டியன் சோமையாஜுலு பற்றிய பேச்செடுத்தார். ஷ்ரவன் சோமையாஜுலு பற்றிய நிஜத்தோடு கற்பனையைச் சேர்த்து சுவாரசியக் கதைகள் பல சொன்னான். இருவரும் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டனர். ஷ்ரவன் ஏற்கெனவே அவன் கல்பனானந்தாவிடம் சொன்ன தன் சொந்தக் கதையையும் சொன்னான். சுகுமாரன் அதை அப்போது தான் முதல் முறையாகக் கேட்பதால் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டார்.
கடைசியில் சுகுமாரன் பிரமிப்போடு சொன்னார். “அவர் சொன்னபடி நீங்கள் அவரிடம் கற்றுக் கொண்டிருந்தால் இன்னேரம் எங்கேயோ போயிருப்பீர்கள்.”
ஷ்ரவன் சிரித்துக் கொண்டே சொன்னேன். “ஆமாம். அவரோடு நானும் அப்போதே மேல் உலகம் போய்ச் சேர்ந்திருப்பேன்.”
அவர்களும் சிரித்தார்கள். அவர்களுடன் பேசும் போது ஷ்ரவன் சொன்னான். “நம் யோகிஜியை நேரில் சந்திப்பது மிகவும் கஷ்டம் என்பதால் அந்த இளைஞன் வேறு ஒரு யோகியைத் தேடுகிறான் போல இருக்கிறது…”
இருவரும் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்கள். ஷ்ரவனுக்கு கவனம் குவிக்கும் விஷயங்களில் இருக்கும் திவ்யசக்தி, மற்ற விஷயங்களில் இல்லை என்று பாண்டியனுக்குத் தோன்றியது. பிரம்மானந்தாவைப் பற்றி அவருடைய விளம்பர இலாக்கா சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி இருப்பதால், அவர் விஷயத்தில் சிந்திக்காமல் முட்டாளாக இருக்கிறான். ஒருவிதத்தில் அதுவும் நல்லது தான். எல்லா விஷயங்களிலும் சரியாகச் சிந்திக்க முடிந்தவன் இங்கே வந்து சிக்க மாட்டான். இவன் இங்கே வந்திருக்கா விட்டால் இவன் மூலம் இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்காது…
மறுநாள் காலையில் ஷ்ரவன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது
கல்பனானந்தா தூரத்தில் வருவது தெரிந்தது. அவள் ஒவ்வொருவரிடமும்
நின்று சுமார் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வந்து கொண்டிருந்தாள். அவனிடமும்
அவ்வளவு நேரம் தான் நிற்கப்போகிறாள். அவளிடம் அந்தக்
குறுகிய சமயத்தில், இன்று முக்கியத் தகவல்கள் சிலதையாவது பெற்று விட வேண்டும்
என்று எண்ணி ஷ்ரவன் காத்திருந்தான்.
கல்பனானந்தா அவனருகே வந்த போது செடிகளைக் காட்டி ஷ்ரவன் சொன்னான். “சுவாமினி. அந்த மொட்டைக் கடிதம் எழுதினது நீங்கள் தானே?”
அவனும் அவளைக் கண்டுபிடித்திருந்தது அவளை ஆச்சரியப்படுத்தவில்லை. “ஆமாம்” என்றாள்.
”என்ன நடந்தது என்பதை நீங்கள் சொன்னால் என் வேலை கொஞ்சம் சுலபமாகும்.”
கல்பனானந்தா அந்தச் செடிகளையே ஆராய்வது போல் நின்று விட்டுச் சொன்னாள். “அவள் இங்கே ஒரு கொலையைப் பார்த்து விட்டாள். அதுவே அவளுக்கு எமனானது.”
ஷ்ரவன் திடுக்கிட்டான். “கொலை செய்யப்பட்டது யார்? ஏன்?”
“யார் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை ஷ்ரவன்.”
ஷ்ரவன் சொன்னான். “கண்காணிப்பவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்…”
கல்பனானந்தா ஒரு செடியிலிருந்து வெள்ளைப் பூச்சிகள் இருந்த கிளையைப் பிடுங்கியபடியே சொன்னாள். “இந்தப் பூச்சிகள் ஒரு கிளையில் வந்து விட்டால் மற்ற கிளைகளுக்குச் சீக்கிரம் பரவி விடும். அதனால் முக்கியமாய் இதைக் கவனிக்க வேண்டும்.”
ஷ்ரவன் அவள் கையிலிருந்து அந்தக் கிளையை வாங்கி ஆராய்ந்து பார்த்தான். கல்பனானந்தா சொன்னாள். “நாளை மருந்தடிக்கும் ஆட்கள் வருவார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நம் கண்ணில் படுவதை நாமே அப்புறப்படுத்துவது நல்லது.”
சொல்லி விட்டு கல்பனானந்தா நகர்ந்தாள். அவள் கடைசியாகச் சொன்னது கண்காணிப்பாளனுக்குக் கேட்டது. ஷ்ரவன் தூக்கிப் போட்ட அந்தக் கிளையை அவனும் பார்த்து விட்டு நகர்ந்தான். என்ன தான் முழு நம்பிக்கை வந்திருந்தாலும் கண்காணிப்பை அவர்கள் தளர்த்தவில்லை என்பதை ஷ்ரவன் கவனித்தான். கல்பனானந்தா போன பின் அவன் வெளிப்பார்வைக்கு அமைதியாக வேலையைத் தொடர்ந்தாலும், அவன் மனம் அவள் சொன்னதைத் தீவிரமாக அசை போட்டது. அவளிடம் கொலை செய்தது யார் என்ற முக்கியக் கேள்வியை அவன் கேட்பதற்குள் கண்காணிப்பாளன் நெருங்கி விட்டான்… ’என்ன நடந்திருக்கும்?’
(தொடரும்)
என்.கணேசன்



.jpg)














